தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழா. ”நாடு கடந்த கலை” நூல் வெளியீட்டு விழா: சென்ற இதழின் தொடர்ச்சி;

சென்ற இதழின் தொடர்ச்சி;

ஓவியர் மருது:

நான் பிற்காலத்தில் என் வாழ்வை ஆர்டிஸ்ட்டாக அமைத்துக்கொள்ள எனக்கான உந்துதலாக இருந்தது கூட அனிமேஷன் படங்களும், ஓவியங்களும் தான், இவையெல்லாவற்றையும் தாண்டியதாக சினிமா இருக்கிறது. மிக இள வயதிலேயே குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், பத்தாம் வகுப்பு படிக்கின்ற காலகட்டத்திலேயே 2001 ஸ்பேஸ் ஒடிசி (ஸ்டான்லி குப்ரிக்கின் படம் - 1968) போன்ற படங்களையெல்லாம் பார்க்கின்ற வாய்ப்புகிடைத்திருக்கின்றது. ஆனால், நீங்கள் என்னதான் அதிகமான இலக்கியம் படித்திருந்தாலும், ஓவியங்களின் மீதான பரிச்சயங்கள் இருந்தாலும் திரையரங்கினுள் இருக்கைகளுக்குள் அமர்கிறபொழுது உங்களை குழந்தை மனோபாவத்துடன் வைத்துக்கொண்டால்தான் திரையில் சொல்லப்படுகின்ற விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள இயலும்.
இங்கு சிறந்த இலக்கியத்தை எடுத்து படமெடுத்துவிட்டாலே சிறந்த படமாகி விடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இது ஒரு மாயை. இந்தப் புத்தகத்தினைக் (நாடு கடந்த கலை) குறித்து தியடோர் பாஸ்கரன் சொல்கிற பொழுது, ”ஒரு இயக்குனர் எதைச் சொல்கிறார், அதை எப்படிச் சொல்கிறார் என்ற இந்த இரண்டிற்குமான இடைவெளியில்தான் சினிமாவைப் பார்க்க வேண்டும்” என்கிறார். காட்சிரூபமாக எதைக்காட்டுகிறோம் என்பதில் தான் ஒரு சினிமா நிற்கிறது. அது ஆவணப்படமாக இருக்கலாம், குறும்படமாக இருக்கலாம், அனிமேஷன் படமாகவும் இருக்கலாம், அல்லது பிறஎன்ன படமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால், அது பார்வையாளர்களிடம் விஷீவலாக பேசுவதென்பது முக்கியம். அதைத்தான் ”நாடு கடந்த கலை” புத்தகம் பேசுகிறது. இந்த ஐம்பதுவருடங்களில் வெளிநாடுகளிலிருந்து வருகின்ற புத்தகங்களெல்லாமே, மொழிமாற்றம் செய்து வருகின்ற புத்தகங்களில் கூட தொழில்நுட்ப விஷயங்களைப்பற்றிச் சொல்லிக்கொடுக்கின்ற புத்தகங்கள்வந்துவிட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் இந்திய சினிமாவாகட்டும், தமிழ் சினிமாவைப் பற்றி பேசுவதிலாகட்டும் எல்லோருமே திரும்பத் திரும்ப கதையைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்.அதைத்தாண்டி பேச்சு நகரவில்லை. எனக்குத் தெரிந்து சமீபத்தில் எழுத்தாளர்களெல்லாம் சினிமாவிற்கு வந்த பின்னாலும் கூட சினிமாவைப் பற்றி எழுதச் சொன்னால் திரும்பவும் ஒரு திரைப்படத்தின் கதைச்சுருக்கத்தையே எழுதுகிறார்கள். நான் அடிக்கடி சொல்வதுண்டு, எப்படி ஒரு படத்தைப் படிப்பது (how to read a film) என்ற பயிற்சி இல்லாததன் காரணமாகத்தான், நாம் எப்போதுமே, ஒரு படத்தின் கதையைப் பற்றி மட்டுமே பேசுகிறோம், மேலும், கதை புரிந்தால் மட்டுமே போதும் என்ற மனநிலைக்கும் வந்துசேர்கிறோம்.

இங்கு குறிக்கின்ற ”உலக சினிமா”, என்பது வெறும் கதையை மட்டுமே வைத்து ஏற்றுக்கொள்ளப்படுபவை அல்ல. உலக மக்கள் காட்சியல் ரீதியாகவே அவர்கள் உலகின் எந்த மூலையில்இருந்தாலும், ஒலியும் இல்லாமல் புரிந்துகொள்ளப்படக்கூடிய நிலையில் இருக்க வேண்டும். காட்சியின் தீவிரத்தில் பற்றாக்குறை இருக்கின்ற பொழுது இந்த ஒலி, இசை எல்லாமே ஆதரவாக இருக்க வேண்டும். காட்சிப் படிமங்கள் மூலமாக பார்வையாளர்களோடு தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிந்தவைகள் தான் உலக சினிமாக்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அங்கீகரிக்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்து இதைப் பற்றி தமிழில் ஏதும் புத்தகங்கள் இதுவரையிலும் வந்திருக்கவில்லை. அப்படியான பகுதியை, இந்தப்புத்தகம் செய்திருக்கிறது, தொடர்ந்து தமிழ்ஸ்டுடியோவின் நிகழ்ச்சிகளும் அதை நோக்கியே இருக்கின்றன.

இன்றைக்கிருக்கின்ற சூழலில் வெகுஜன சினிமா, சீரிய சினிமா, கலை சினிமா போன்ற பிரிவினைகளையெல்லாம் நான் பார்ப்பதில்லை. இன்றைக்கு டிஜிட்டல் சூழலில் தியேட்டரை நம்பாமல் ஒருபடைப்பாளி இயங்க முடிகின்ற சூழல் சாத்தியப்பட்டுக்கொண்டிருக்கிறது. சினிமாக்கள் திரையரங்குகளில்தான் வெளியாகவேண்டும் போன்ற தடைகள் இல்லை. அதனை வலைத்தளங்கள் செய்துவருகின்றன. Facebook குழுமமே இன்னும் பத்துவருடங்களில் தகவல்கள் அனைத்துமே வீடியோக்களாகவே பதிவேற்றப்படும் என்கிறார்கள். ஓவியங்கள் அசைவதில்லை, அசைகின்ற ஓவிங்களே சினிமாக்களாகின்றன, இந்தச் சினிமாவில் நிதர்சனத்தைச் சொல்லமுடியும், நடந்துகொண்டிருக்கின்ற பிரச்சனைகளைச் சொல்ல முடிகின்ற ஒரு ஊடகத்தை வடிவ ரீதியில் கையாளத்தெரிந்திருக்க வேண்டும். நான் ஏன் இதைச்சொல்கின்றேனென்றால், தமிழ்நாட்டில் இருக்கின்ற படங்களில் காண்பியல் ரீதியாக அல்லாமல் வெறுமனே பேசிக்கொண்டேயிருப்பார்கள், இதனை பல படங்களில் பார்ப்பதுண்டு. இன்றைக்கு பிரசித்தி பெற்ற பதினைந்து மொழிகளை மொழிபெயர்ப்பு செய்ய மென்பொருள் விற்பனையாகிக்கொண்டிருக்கின்ற காலம். உங்கள் மொழி அறிவைக் காட்ட சினிமா உகந்த இடமல்ல.

எங்கோ ஒரு மூலையில் இருப்பவர், சினிமாவில் சொல்பவற்றை நாம் புரிந்துகொள்கிறோம், காட்சியல் ரீதியாக இங்கு ஒருவர் சொல்பவற்றை உலகின் எந்த மூலையில் இருப்பவரும் புரிந்துகொள்ள முடியும். அனிமேஷன் படங்களை எடுத்துக்கொண்டால் கூட டிஜிட்டல் யுகத்தில் தனியொரு ஆளாகவே ஒரு அனிமேஷன் படம் எடுத்துவிடக் கூடிய சூழல் இருக்கிறது, சுயாதீனக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற அளவிற்கு டெக்னாலஜி வந்திருக்கின்றது. அவர்களே ஒன்றிற்கு மேற்பட்ட காமிராக்களைக் கொண்டு படம் பண்ண முடிந்த சூழலை நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பெரிய காமிராக்கள் செய்துகொண்டிருந்த துல்லியமான வேலையை இன்றைக்கு கையடக்க காமிராக்கள் செய்துகொண்டிருக்கின்றன. சினிமா மொழியானது இன்றைக்குஉலக மொழியாகவும் இருந்து வருகின்றது. அப்படியான வேளையில் மீண்டும் மீண்டும் கதையைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிராமல், வெளிவந்திருக்கின்ற ”நாடு கடந்த கலை”, புத்தகம் பாராட்டப்படவேண்டியது.

இந்தப்புத்தகத்தில் இடையிடையே அருணுக்கேயுரிய பாணியில் விமர்சனம் செய்திருக்கிறார், இருப்பினும் இது போன்ற செயல்களைச் செய்துகொண்டிருப்பவர் விமர்சனமும் செய்யலாம்.

நடிகர் சார்லி:

எனக்கு தமிழ்ஸ்டுடியோவை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது நான் மதிக்கும் என்னை நேசிக்கும் திரைப்படைப்பாளி எடிட்டர் பீ.லெனின்.
குழந்தைகளுக்காக திரைப்பட விழா ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம், என்று என்னை ஒருமுறை தமிழ்ஸ்டுடியோவிலிருந்து அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைத்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.பெரியவர்களைக் கூட்டி வந்து சினிமா காண்பித்து தானே பழகியிருக்கிறோம், ஆனால், அன்றைக்கு குழந்தைகளை அழைத்துவந்து அவர்களுக்கு சினிமா காட்டினார்கள். குழந்தைகளுக்கு எதுதேவையானது என்றெல்லாம் பார்த்து தேர்ந்தெடுத்த படங்களை அங்கு ஒளிபரப்பினார்கள். பார்த்து முடித்தபின்னர் நான் அவர்களோடு உரையாட வேண்டும். மறக்க முடியாத அனுபவமாகஇருந்தது. அங்கு ஒளிபரப்பிய சார்லி சாப்ளினின் ”கிட்” என்கிற படத்தில் சார்லி சாப்ளின் ரோட்டில் நடந்து வந்துகொண்டிருப்பார், ஒரே ஒரு ஷாட் தான். மேலேயிருந்து அவர் மீது குப்பைவிழும். யாரோ மாடியிலிருந்து குப்பை போடுகிறார்கள் என்று தன் தோளை தட்டிவிட்டுக்கொண்டு மீண்டும் சாலையில் நடந்து செல்வார். அப்பொழுது குழந்தை அழுகிற சப்தம் கேட்கிறது.குப்பைத்தொட்டியில் குனிந்து பார்ப்பார்.

அங்கு குழந்தை இருக்கிறது. திரும்பிப் பார்த்து “”குப்பையோடு சேர்த்து குழந்தையையும் போட்டுட்டாங்களா?” என்று கேட்பார். பெரியவர்களைக் காட்டிலும் அந்த காட்சியில் குழந்தைகள்அதனை பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு கைதட்டினார்கள்.

கதைசொல்வதற்கும், கதை வாசிப்பதற்கும், என்றெல்லாம் இயங்குபவர்கள் நாடகம் மட்டும்தான் இதுவரையிலும் நடத்தவில்லை. நானும் ஒரு நாடக கலைஞன் என்ற முறையில் இந்த தமிழ்ஸ்டுடியோவிற்கு நான் ஒரு நாடகம் செய்துகொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது அநேகமாக வீதி நாடகமாக இருக்கும். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய நாடகமாக இருக்கும்.

ஏன் நான் நாடகம் குறித்துப் பேசுகிறேன் என்றால், ஒரு முறை எனக்கு தொலைபேசியில் அழைத்து மாணவர்களுக்கு நடிப்பைப் பற்றி கற்றுத்தர வேண்டும், நடிப்பினை எப்படி அணுகவேண்டும் போன்றனவற்றையெல்லாம் சொல்லித்தரச் சொன்னார் அருண். உலகத்திலேயே முதல் முறையாக ஸ்டானிஸ்லாவ்ஸ்கி எல்லாம் செய்வதற்கு முன்பாக, விஞ்ஞானப்பூர்வமாக, Action is the movement of Psychic towards the goal of super objective என்ற வரையறையை கண்டுபிடித்தது ஒரு நாடக கலைஞன் அவர் பெயர், இந்திய அரசு செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின், இசை நாடகப் பிரிவு தென் பிராந்திய இணை இயக்குனர் திரு. பி.எஸ்.ராமாராவ். அதேப் பிரிவில் இந்திய அரசுக் கலைஞனாக நான் பணியாற்றியபோது இதை அவரிடமிருந்து தெரிந்துக் கொண்டேன். இதைக்குறித்தெல்லாம் அந்தக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தேன். கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்தார், “”சார் அப்படீன்னா! நடிப்பது இவ்வளவு கஷ்டமா, நீங்கள் சொல்றதப் பார்த்தா நாங்களெல்லாம் நடிக்கவே முடியாதுபோலயிருக்கே!” என்றார். நான் சொன்னேன், “அப்படியெல்லாம் தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள், என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், நான் இதுவரை நடித்த சினிமாக்களில் எண்பதுசதவிதங்களில், நான் வருகின்ற பகுதியை எடுத்துவிட்டால் கூட படத்திற்கு எந்த கஷ்டமும் வராது. எனக்குத்தான் நஷ்டம் வரும் ஆனால், இங்கு பி.எஸ்.ராமைய்யாவைப் பற்றியும், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி பற்றியும் கூறுவதற்கு காரணம், இதனையெல்லாம் கற்றுக் கொண்டீர்களேயானால் நடிப்பில் எந்தச்சூழலையும் சமாளிக்கின்ற திறன் உங்களுக்கு வரும்”, என்றென். ஆக நடிப்பு என்பது குறித்தும் தமிழ்ஸ்டுடியோ வகுப்புகள் எடுக்க உதவிபுரிந்து வருகின்றது.

இன்னொரு சம்பவம் சொல்கிறேன்:

”ஒரு கார், பின் இருக்கையில் பிணம் இருக்கிறது, ஆனால் யாருமே கவனிக்கவில்லை”, என்று இயக்குனர் சொல்கையில், அதற்கு எதிராக சிலர் தங்கள் கருத்துக்களை சொல்கிறார்கள். ’பின்இருக்கையில் பிணம் இருந்தால் எப்படியும் அந்த வண்டியை ஓட்டுபவர் பார்த்தே தீருவார்’, என்றும், ’இப்படியெல்லாம் கதை எழுதினால் கார் தான் ஓடும் வண்டி ஓடாது’ என்றும், ’அறிவியல் படி பார்த்தால் பிணத்தை வைத்துக்கொண்டு வண்டி ஓட்டுவது நம்ப முடியாதது’ என்றெல்லாம் ஆளாளுக்கு ஒவ்வொரு காரணமாகச் சொல்லி வருகின்றார்கள். ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர்ஒரு வாக்கியம் சொல்கிறார் அது “”நாம் நட்சத்திரங்களை வைத்து படம் எடுக்கவில்லை, நடிகர்களை வைத்துத்தான் படம் எடுக்கிறோம், ஏன் அவர்கள் பின் இருக்கையில் இருக்கின்ற பிணத்தைப் பார்க்கவில்லை என்பதற்கு காட்சி எழுதுங்கள் அதுதான் படம்” என்றார். அது தான் இயக்குனர் பிதாமகர் பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் வெளியான “சாது மிரண்டால்” என்ற படம். அந்தக்காலகட்டத்தில் அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம். ஆக, How to make a cinema என்பது ஒன்று, இரண்டாவது என்னுடைய அடையாளத்தை தொலைக்காமல் படம் எடுப்பது எப்படி என்பதும் முக்கியம்.

இந்தக் கூட்டத்தில் எழுத்தாளர் பவா சொன்னது போல, களப்பணியையும் ஆற்றிக்கொண்டு, புத்தகத்தையும் வெளியிடுகின்ற நிகழ்வு இப்பொழுதுதான் நடக்கின்றது.


முன்னொரு முறை எங்கள் ஊரில் ஃபிலிம் சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டது. நல்ல படங்கள் போடுவதற்கும், தீவிர சினிமாக்கள் திரையிடவும் இந்த ஃபிலிம் சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். சரிதான் என்று நாங்களும் அங்கு படம் பார்க்கச் சென்றோம், முதல் நாளில் கே.பாலச்சந்தரின் “புன்னகை” படம் திரையிட்டார்கள். எங்கள் ஊரில் அதுதான்அதிகபட்ச தீவிர சினிமா போலும். நல்லாத்தானே இருக்கிறது என்று எங்களுக்குள் சொல்லிக்கொண்டோம். அடுத்த வாரம் வேறொரு மொழிப்படம் திரையிடப்போவதாகச் சொன்னார்கள். அதற்குள் ஒருவர் அது செக்ஸ் படம் என்ற பீதியைக் கொளுத்திவிட்டார்.

காலை பத்தரை மணி காட்சிக்கு கூட்டம் அலைமோதுகிறது. கொடார்ட்(Godard) படம் போல அந்தச்சினிமாவில் மாறி மாறி பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். கடைசியில படம் முடிவதற்கு மூணுநிமிடங்களுக்கு முன்பு ஹீரோ பனியனை கழட்டினார், வந்ததற்கு இதுதாண்டா மிச்சம் என்று நாங்களெல்லாம் கிளம்பினோம். சினிமாவைப் பொறுத்தவரை நம்முடைய தேவை நம்முடையவேட்கை வேறுமாதிரியாக இருக்கிறது. இதுபோல் அல்லாமல், தியோடர் பாஸ்கரன் இந்த புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார், ”ரசனை மாற்றப்பட வேண்டும்”, என்று. அந்த ரசனையை மாற்ற தமிழ்ஸ்டுடியோ முயற்சித்துக்கொண்டிருக்கிறது.

முதலில் நமது அடையாளம் இழக்காமல் இருப்பது, நம்முடைய ரசனையை மாற்றச்செய்வது, நம்முடைய தரத்தை நாம் உணர்வது இதெல்லாம் முக்கியம்.

நான் சொல்வது பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம். ஒரு நாடக கம்பெனியில் ஒரு பையன் ”உங்கள் கம்பெனியில் சேர வேண்டும் என்பது என் ஆசை”, என்று அந்த முதலாளியைப் பார்த்துச் சொல்கிறான். நாடகத்தினுள்ளும் சேர்ந்துவிட்டான். அவன் சேர்ந்த உடனேயே அவனுக்கு ஒரு வேசமும் போட்டுக் கொடுக்கிறார்கள். எப்போதுமே நாடக கம்பெனியில், முதலில் சேர்பவரை காவலாளியாக நிறுத்திவிடுவார்கள். இதுதான் அவர்களுக்கு முக்கியமான வேஷம். மூன்று மணிநேரத்திற்கு மேலேயும் கையில் கம்போடு நின்றுகொண்டேயிருக்க வேண்டும். நாடகம் ஒரு பக்கம்நடந்துகொண்டிருக்கும், பார்வையாளர்களும் ரசித்து கைதட்டிப் பார்ப்பார்கள், காவலாளி வேஷம் போட்டவன் நின்று பார்த்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். ஒரு நாள், இரண்டு வாரம்,மூன்று மாதங்கள் என 107 காட்சிகளுக்குமென அந்தப்பையன் காவலாளியாகவே அந்த நாடகக் கம்பெனியில் நின்றுகொண்டேயிருந்தான். அவனால் பொறுக்கமுடியவில்லை.

நேராகச் சென்று அந்த கம்பெனி முதலாளியைப் பார்த்து அந்தச் சிறுவன், ”எனக்கு வேற வேஷம் கொடுங்க” என்கிறான். முதலாளி ஆச்சரியமாக “டேய் நீ இப்பத்தானகம்பெனிக்கே வந்து சேர்ந்திருக்க, சேர்ந்து மூணு மாசம் தானே ஆகுது, இப்பத்தான் மதுரையில நாடகம் முடிஞ்சு பொள்ளாச்சிக்கு வந்திருக்கோம், அதுக்குள்ள வேற வேஷம் கேட்குற பழக்கமா?” எனமுதலாளி கோபமாகப் பேசுகிறார். முதலாளி கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் ஆமாம், என்றே தலையாட்டி வந்த அந்தச் சிறுவன், ”இந்த பத்து வருடங்களாக வேலை செய்து வருபவர்களுமேகூட காவலாளியாக இருந்து வருகின்றார்கள் என்பதும் எனக்கு தெரியும் முதலாளி, ஆனாலும் என்னை இப்படி காவலாளியாகவே நிற்க விடாமல் வேறொரு வேஷம் கொடுத்தால் நன்றாகயிருக்கும், ” என்று பதிலுரைத்தான் அந்தப்பையன்.

எப்பொழுதுமே எந்தக் கலைஞனாக இருந்தாலும், படைப்பாளியாக இருந்தாலும் ”நான்”, என்ற அகந்தை அழிந்தால் தான் வாழ்வில் சிறக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்தச்சம்பவம்.

“நல்ல வேஷம் னா எந்த வேஷம் வேணும்” என்று முதலாளி கேட்க, அந்தப்பையனோ “உங்க வேஷம் கொடுங்க” என்று சொல்கிறான். ’சிவலீலா’ நாடகத்தில் ஹீரோ ’சுந்தரபாண்டியன்’கதாபாத்திரம் டாஇது கதாநாயக வேஷம் டா இதையா கேட்கிறாய்” என்கிறார் முதலாளி,

மேலும் ‘அப்படியா மத்தியானம் நடிச்சுக்காட்டு பார்ப்போம்’ என்று சம்மதம் அளிக்கிறார் முதலாளி, ’தாராளமாகச் செய்கிறேன்’ என்று மேடையெறிய அந்தப்பையன், சிறப்பாகவே நடித்து நாடகத்தைவெற்றிபெறச்செய்கிறான். அந்த முதலாளி வேறுயாருமல்ல, அவ்வை டி.கே.சண்முகம், கேட்ட மாணவன் பெயர், லட்சிய நடிகர்எஸ்.எஸ்.ராஜேந்திரன். இங்கு அனுமதித்தலும் ஏற்பதும் தான் படைப்பு விரிவாக்கம் அடைவதற்கும், நமது அடையாளத்தை நாம் தொலைக்காமல் இருப்பதற்கும் காரணம். அன்று லட்சியநடிகர் தனக்கான கதாநாயக கதாபாத்திரத்தை தானே கேட்டு தனக்கான நிலையை தக்கவைத்துக்கொண்டார். அவருடைய உறவுக்காரர் சகோதரர் தான் ட்ராஸ்ட்கி மருது.


இங்கு தமிழ்ஸ்டுடியோ என்பது வெறுமனே வாசிப்பதும் அதைப்பற்றி பேசுவதும், ரசனை மாற்றமடைவது மட்டுமல்ல நம்மை நாம் உணர்ந்து, தொடர்ந்து நல்ல நல்ல படைப்புகளை நாமும் படைக்க வேண்டும், நான் எப்படி நாடகம் பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டு சொன்னேனோ, அதேபோல, இந்த விழா முடிவதற்கு முன்பாக தமிழ்ஸ்டுடியோவிலிருந்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாக வேண்டும் என்ற ஆசையை உங்கள் சார்பாக அவர்கள் முன் வைக்கிறேன்.

”நாடு கடந்த கலை”, புத்தகத்தில் நிறைய உலக குறும்படங்களைத் தொகுத்து புத்தகமாக போட்டிருக்கிறார்கள். நான் ஒரு பதிப்பகத்திற்குச் சென்று கேட்டேன். ”உலக நாடக இலக்கியம்”, எழுதியது ’எம்.கே. மணிசாஸ்திரி’ என்ற புத்தகத்தை முப்பத்தொன்பது வருடத்திற்கு முந்தி நான் படித்திருக்கிறேன். அந்தப் புத்தகம் இருக்கிறதா என்று அந்தப் பதிப்பகத்தாரிடம் கேட்டேன். அந்தப் பதிப்பகம் தொன்று தொட்டு வரக்கூடிய பழமையான பதிப்பகம். அவர் சிரித்துக்கொண்டே ”அந்தப் புத்தகம் மறுபதிப்பு வரவில்லை”, என்று சொல்கிறார். நான் அதைவிடுத்து ”புதுமைப்பித்தனின் ”பலிபீடம்” சோவியத் ரஷ்யாவில் எப்படி விபச்சாரம் ஒழிக்கப்பட்டது, என்பது குறித்த புத்தகம் இருக்கிறதா?”, என்றும் கேட்டுப் பார்த்தேன். அதற்கும் அவர் இல்லை, என்றும் ’கடந்த முப்பது வருடங்களாக அந்தப்புத்தகத்தை மறுபதிப்பு செய்யவே இல்லை’, என்றார். ”இரண்டுமே நல்ல புத்தகங்கள் தானே”, என்றேன். அவர் ’அதற்காகத்தான் மறுபதிப்பு செய்யவில்லை’, என்று சொன்னார்.

ஆக, நாம் நம்முடைய விஷயத்தை நமக்கு நாமே குழிதோண்டி மறந்தும், மறைத்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியில்லாமல் ஆவணங்களை மீட்டுக்கொண்டுவருகின்ற என்ணத்தில் நடிகர் சந்திரபாபுவின் கட்டுரை ஒன்றை ரோஜா முத்தையா நூலகத்திலிருந்து எடுத்து வந்து அதனை பேசாமொழியில் வெளியிட்டார்கள். தமிழ்ஸ்டுடியோவின் செயல்பாடுகளில் எனக்கு ஈடுபாடு வந்ததன் காரணமே அவர்களிடமிருக்கின்ற அர்ப்பணிப்பு உணர்வுதான். எதை அர்ப்பணிப்போடு செய்கிறோமோ அது யாகம், எது காலத்தையும் தாண்டி நிலைத்து நிற்கிற தன்மையைக் குறிக்கிறதோ அது வேதம்.

ஆக எங்கெல்லாம் உண்மை இருக்கிறதோ அங்கெல்லாம் வேதம் ஒலிக்கிறது. எங்கெல்லாம் முழு அர்ப்பணிப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் யாகம் செயல்புரிகிறது இந்த வேலையை இந்தப் பணியை தமிழ்ஸ்டுடியோ பரிபூரணமாகச் செய்து வருகிறது. பாரதி சொன்ன, ”அக்கினி குஞ்சொன்று கண்டேன்”, என்ற வார்த்தையை மெய்ப்பித்துக்கொண்டிருக்க கூடிய, துவக்க விழாவாக இந்த தமிழ்ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழாவைக் கருதுகிறேன். நன்றி!!!

தொடர்ச்சி அடுத்த இதழில்…