தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது

தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது கடந்த ஞாயிறு (15.08.2014) மாலை, வெகு விமரிசையாக பறை இசையுடன் துவங்கியது. இவ்வருடத்திற்கான லெனின் விருதினை ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தன் பெற்றுக்கொண்டார்.

ஆனந்த் பட்வர்தன் காட்சிகளின் வழியாகப் புதிய சிந்தனையை அளிப்பதில் வல்லவர். எதையும் வலிந்து சொல்லாமல் இயல்பான, உயிரோட்டமான மொழியிலும் நீதியின் குரலிலும் வழங்கக்கூடிய அவரின் ஆவணப்படங்கள் தற்காலச் சமூகத்தின் முத்திரைகளாகின்றன. அதன் பொருட்டு, சமூகத்தின் எல்லா அன்றாடச் சிரமங்களை எதிர்கொண்டுவரும் ஆனந்த் பட்வர்தன் தற்கால இளைஞர்களுக்கு பெரிய உந்து சக்தியுடையவர்.

தற்காலச் சூழலில், ‘லெனின் விருதுக்கான’ முழுமையான தகுதியையும் பெருமையையும் உடையவராக ஆனந்த் பட்வர்தனை அடையாளம் காண்பதிலும் இவ்விருதினை அவருக்கு வழங்குவதிலும் தமிழ் ஸ்டுடியோ பெருமைப்படுகிறது.

எனினும், லெனின் பெயரால் எதற்காக விருது என்றும், இவ்வருடம் ஆனந்த் பட்வர்தனுக்கு கொடுக்க காரணம் யாது? இதன் பின்னணியில் உள்ள அதிகார போதை எது? என்றெல்லாம், போதிய தெளிவின்றி விமர்சிப்பவர்களுக்கு, இந்தப் பதிவு உபயோகமாகயிருக்கும்.

படத்தொகுப்பாளர் ’பீ. லெனின்’ பெயரில் விருது ஏன்?
படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவர்கள் தமிழில் யதார்த்த சினிமாக்களின் வருகைக்கும், சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடி. வணிக நோக்கத்தை பிரதானமாகக் கொண்ட வெகுஜனப் படங்களில் ஆரம்பகாலத்தில் வேலை செய்திருக்கிறார். மறுப்பதற்கில்லை. ஆனால், இதே காலக்கட்டத்தில் மலையாளத்தில் பரதன் உள்ளிட்ட முக்கியமான இயக்குனர்களுடன் வேலை செய்கிறார். இந்தியாவின் முக்கியமான திரைப்படங்களை தன்னுடைய படத்தொகுப்பு பாணியால் செரிவூட்டுகிறார். படத்தொகுப்பின் மூலம் கதையை சொல்லும் புதிய உத்தியை அறிமுகம் செய்கிறார். மேலும், வெகுஜன சினிமாக்களின் எண்ணிக்கை அதிக அளவில் வரத்துவங்கியபொழுது, தேவையில்லாத பாட்டுகள், வன்முறை, ஆபாசங்கள் என சினிமாவின் கமர்ஷியல் தனங்கள் எல்லையைத் தாண்டுகிறது. அச்சமயத்தில் இனிமேலும் இதுபோன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்யமாட்டேன் என்று, அவராகவே தமிழ்ச்சினிமா சிக்கிக்கொண்டிருக்கின்ற சூழலிருந்து படிப்படியாக வெளியே வந்தவர்.

அப்பொழுது, லெனின் படத்தொகுப்பு செய்தாராயின் படம் தேறிவிடும், என அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரையே நாடி வந்துகொண்டிருந்த காலம். லெனின் சினிமாவில் அனைவருக்கும் தேவையானவராக இருந்தார், அவரின் படத்தொகுப்பிற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடவும் தயாரிப்பாளர்கள் தயாராகவே இருந்தனர். லெனின் பணத்தின்மீது நாட்டம் கொள்ளவில்லை, நல்ல சினிமாக்களின் மீது காதல் கொண்டிருந்தார்.

தமிழ்ச்சினிமாவின் குறுகிய எல்லையிலிருந்து வெளியே வந்தவுடன், குறும்படங்களிலும், சமரசமற்ற யதார்த்த திரைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்புடன் ஈடுபட்டார். தனக்கான பார்வையை உறுதிசெய்து ஸ்திரப்படுத்திக்கொண்டார். தான் நினைத்தபடியே சுதந்திரமாக படங்களும் எடுக்க ஆரம்பித்தார். லெனின், 1992ல் இயக்கிய ‘நாக் அவுட்’ என்ற குறும்படம்தான், முதன்முதலில் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர் அல்லாத ஒருவர், தமிழகத்தில் எடுத்த குறும்படம், என்ற சிறப்பு பெறுகிறது. அதுவரை பிலிம் இன்ஸ்டியூட் படிப்பவர்கள், திரைப்படத்திற்கான பரிசோதனை முயற்சியாக மட்டுமே சில குறும்படங்கள் எடுத்து வந்தனர். அவைகள் வெளியுலக பார்வைக்கும் அதிகமாக காண்பிக்கப்பட மாட்டாது. அதனையல்லாமல், ‘நாக் அவுட்’ பரவலான கவன ஈர்ப்பையும் பெற்று அதைப்போன்று பல குறும்படங்கள் வருவதற்கும், குறும்படங்கள் பற்றிய புரிதல் அனைவருக்கும் தெரிவதற்கும் காரணமாக அமைந்தது. தமிழ் குறும்படங்களுக்கு படத்தொகுப்பாளர் லெனின் தான் முன்னோடி.

இதுமட்டுமின்றி, “நாக் – அவுட்’டிற்கு முன்பு வரையிலும், தேசிய விருதானது குறும்படங்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால், லெனினின் ‘நாக் அவுட்’ முதன்முதலாக தேசிய விருது பெற்ற குறும்படம். முழுநீளப் படங்கள் மட்டுமே தேர்வுப்பட்டியலில் இருந்ததை போராடி மாற்றி, குறும்படங்களுக்கும் தேசிய விருதிற்கான அங்கீகாரம் கிடைக்கச்செய்வதில் லெனின் தீவிரம் காட்டினார். குறும்படங்களும் மதிக்கப்பட்டு, விருது வழங்கப்பட வேண்டும் என்ற தன் நியாயத்தை முன்னிலைப்படுத்தினார். அவர் மூலமாகவே தேசிய விருதில் குறும்படங்களுக்கும் தனியான கெளரவம் கிடைக்கின்றது. அன்றிலிருந்து இன்றுவரை குறும்படங்களுக்கு தனித்த அங்கீகாரமும், அவர்களுக்கென்று தேசிய விருதில் ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இன்று வரையிலும் அது தொடர்கின்றது. இதற்குக்காரணமும் லெனின் அவர்களே.

பின்னர் ’ஊருக்கு நூறு பேர்’, ’செடியும் சிறுமியும்’, ’எத்தனை கோணம் எத்தனை பார்வை’, போன்ற பல படங்கள் எடுத்திருக்கிறார். இவை எவையுமே திரையரங்க வெளியீட்டிற்காக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்ல. திரையரங்க வெளியீடு இல்லாமலேயே தான் இயக்கிய படங்களை ஊரெங்கும் கொண்டு செல்ல முடியும் என்பதற்கும், திரையரங்குகள் மறுத்தாலும் அப்படத்திற்கு விருதுகள் கிடைக்கப்பெறும், என பரவலான சமூகத்திற்கு உணர்த்த தானே முன்னோடியாக விளங்கினார்.

கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவெனில், இது வரையிலும் எடுக்கப்பட்ட படங்கள் திரையரங்க வெளியீட்டினை மட்டுமே சிரமேற்கொண்டு எடுக்கப்பட்ட படங்களாக இருக்கின்றன. திரையரங்கத்தில் வெளியாகவில்லையெனில் அதனை ஒரு படமாக கூட யாரும் பொருட்படுத்துவதில்லை. இத்தகைய கட்டுப்பாடுகளையெல்லாம் லெனின் அவர்களே முதலாவதாக கலைகிறார். அண்டை மாநிலமான கேரளாவில் தொலைக்காட்சி உரிமைக்காக மட்டுமே படம் எடுக்கின்றனர். அந்த உரிமையின் மூலம் கிடைக்கின்ற பணத்தில் அவர்கள் பொருளாதாரத்தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

மேலும், தமிழ்நாட்டு மக்கள் திரையரங்குகளில் படம் பார்த்தே பழக்கப்பட்டவர்கள். ஆனால், லெனினின் ’நாக் அவுட்’, த.மு.எ.க.ச மூலமாக ஊர், ஊராக திரையிடப்படுகிறது. திரையரங்கத்தின் வாயிலாக மட்டுமில்லாமல், திரையிடலின் வாயிலாகவும், தன் படத்தினை எந்த ஊர் மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிரூபித்தவர் படத்தொகுப்பாளர் லெனின். இவ்வாறான சூழ்நிலையில் சுயாதீனத்திரைப்படங்கள் எடுத்திருக்கின்றவர்களுக்கு விருது கொடுக்கின்றோம் என்றால், படத்தொகுப்பாளர் பீ. லெனினைத் தவிர இவ்விருதின் பெயருக்கு பொருத்தமானவர்கள் வேறுயாரும் கிடையாது. தமிழகத்தில் திரைப்படங்களை இயக்கமாக மாற்றி மக்களிடம் கொண்டுசேர்த்ததும் லெனின்தான். படம் எடுப்பதோடு நின்றுவிடாமல், அதனை மக்களிடம் கொண்டுசேர்ப்பிப்பதும் உண்மையான கலைஞன் என்பனின் கடமை என்பதை நன்கு உணர்ந்து செயலாற்றுபவர்.

எனவேதான் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயராலேயே, அவரின் பிறந்த தினமான ஆகஸ்டு 15ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படுகின்றது.

எதற்காக லெனின் விருது? ஏன் ஆனந்த் பட்வர்தனுக்கு?
ஊடகக்கலை வடிவத்தை முற்றிலும் சமூக மாற்றத்திற்குப் பயன்படுத்துபவர்களுக்கான விருது, ‘லெனின் விருது’ திரையரங்க வெளியீட்டை மட்டுமே நம்பி படம் எடுக்காமல், மக்களிடம் படத்தை உண்மையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்களுக்காகவும், தன்னிச்சையாக களத்தில் செயல்படும் சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே வழங்கப்படுகிறது லெனின் விருது. 2012ம் ஆண்டு ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அவர் முழுநீளப்படம் ஏதும் எடுக்காமல் ஆவணப்படங்கள் மட்டுமே எடுத்திருக்கின்றார். அடுத்த வருடம் அம்ஷன் குமாருக்கு தரப்பட்டது. அவர் ‘ஒருத்தி’ என்ற முழுநீளப்படமும் எடுத்திருக்கின்றார். அது திரையரங்கிலும் வெளியாகியுள்ளது. ஆனாலும், அவர் பெரும்பாலாக ஆவணப்படங்களிலேயே கவனம் செலுத்துகின்றார். 2013ஆம் வருடம் லீனா மணிமேகலைக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அவரும் ’செங்கடல்’, என்ற திரைப்படம் எடுத்துள்ளார். ஆனாலும், அவரின் முழுக்கவனமும் ஆவணப்படங்கள் மீதுதான் உள்ளது.

இதனைத்தொடர்ந்து இவ்வருடம் ஆனந்த் பட்வர்தன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கின்றது. இவரது எல்லாப்படங்களும் ஆவணப்படங்கள் தான். எதுவுமே திரையரங்கத்தில் வெளியாகவில்லை. ஆனால், அவைகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. தன் படங்களை ஒளிபரப்ப மறுக்கின்ற பொழுது, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காடி ஒவ்வொரு முறையும் தன் படங்களை ஒளிபரப்புகிறார். இந்தத் துணிச்சல் போற்றத்தக்கது.

இவர்கள் நால்வருக்கும் இருக்கின்ற ஒற்றுமை என்னவெனில் சமூகத்தைப் பிரதிபலிப்பது, சமூகப் பிரச்சனைகளை தன் ஆவணப்படங்களில் பேசுவது. மக்கள் பிரச்சனை, அரசியல், சுற்றுச்சூழல் என எவ்விதமான பிரச்சனைகளையும் அவர்களது படங்கள் மையமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக ஆர்.ஆர்.சீனிவாசனின் ‘என் பெயர் பாலாறு’ என்ற ஆவணப்படம், பாலாறு எவ்வாறு கெடுக்கப்படுகிறது என்பதை ஆவணப்படுத்துகின்றது. லீனாவின் ’மாத்தம்மா’, ’தேவதைகள்’, பெண்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கின்றது. அம்ஷன் குமாரின் ’ஒருத்தி’, திரைப்படம், இலக்கிய வடிவிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும், இடைநிலைச்சாதியினுள் இருக்கின்ற பிரச்சனைகளை கையாண்டிருக்கின்ற படம்.

ஆனந்த் பட்வர்தன் பாதிக்கப்பட்ட மக்களின் தீர்விற்காக தன்படங்களைக் கொடுக்கின்றார். ’ஜெய்பீம் காம்ரேட்’, ஆரம்பிக்கின்ற பொழுது விலாஷ் கோக்ரேவின் மரணத்திலிருந்து தொடங்குகின்றது. தொடர்ந்து தலித் மக்களின் பல பிரச்சினைகளைப் பேசுகின்ற படம், விலாஸ் கோக்ரேவின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுகின்ற சூழல் உருவாகின்ற சமயத்தில்தான் முடிகின்றது. இதற்கு 14 வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றது. கால தாமதத்திற்காக தன்படத்தை விரைந்து முடித்துவிடவேண்டும் என்று பட்வர்தன் நினைக்கவில்லை. இவரின் படங்கள் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமாக நின்று நீதியைக் கேட்பதற்கு ஆவணமாக இருக்கின்றன. ’நர்மதா டைரி’, என்பது அணைக்கட்டிற்குப் பின்பாக நிகழக்கூடிய அரசியலைப் பேசுகின்றது.

‘Waves of Revolution’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர் ஆனந்த் பட்வர்தன். காட்சி ஊடகத்தை, தன் தொடர்ச் செயல்பாடுகளின் வழியாக, ‘சமூக ஊடகம்‘ என்ற களப்பணிக்கான ஊடகமாக மாற்றியதில் முதன்மையானவர்.

மேலும், தன்படங்களில் காந்தியத்தையும், பெரியாரிஸ்ட்டையும், அம்பேத்கரியத்தையும், கம்யூனிஸ்டின் தத்துவத்தையும் முன்வைக்கின்றார். இதன் மூலம் படம் பற்றிய பிரச்சனைகளை அலசுவதை மக்களின் பொறுப்பில் விடுகின்றார். மக்களுக்கு அந்தக்கொள்கைகளின் வலிமைகளை நினைவுபடுத்துகின்றார்.

லெனின் விருது கொடுப்பதன் பின்புலமாக எவ்வித அதிகாரப்போதையும் இல்லை. இதன்முக்கிய நோக்கம், இதன்மூலமாக அதிக அளவில் சுயாதீனத் திரைக்கலைஞர்கள் வெளிவர வேண்டும் என்பதுதான். மேலும் மாற்றுப்படம் எடுப்பவர்களுக்கான அங்கீகரிப்பும் முக்கியம். அவர்கள் தொடர்ந்து மக்களிடம் தன்படங்களைக் கொண்டு சேர்க்கவும் அவர்களுக்கு உத்வேகம் வேண்டும்.

இத்தகைய திரைக்கலைஞர்களை கொண்டாட வேண்டுமே அன்றி, வெறுமனே விருதும் பாராட்டுப் பத்திரங்களும் கொடுப்பது நோக்கமல்ல.

மேலும் , யாருக்கு விருது கொடுக்கின்றோமோ அவரது படங்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கப்படுகின்றது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் திரையிடல் நடக்கின்ற பொழுது அம்மக்களுக்கும் ஆவணப்படங்கள் பற்றியும், அது பேசுகின்ற அரசியல் பற்றியும், அதன் தீவிரமும் தெரியவரும். விழிப்புணர்ச்சி கிடைக்கக்கூடும். பலவாறான பார்வையாளர்கள் கிடைப்பார்கள். வித்தியாசமான சூழலில் திரையிடல் நடைபெறும்.

இவ்வருடமும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் திரையிடல் நடைபெற்றது. குறிப்பாக, சென்னையில் உமாபதி கலையரங்கத்தில் ஞாயிறு காலை 10:30 மணிக்கு ஆனந்த் பட்வர்தன் இயக்கிய இரண்டு ஆவணப்படங்களும், ஆனந்த் பட்வர்தனைப் பற்றி ஆர்.வி.ரமணி இயக்கிய ஆவணப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. ஞாயிறு என்பதையும் தாண்டி 70 முதல் 80 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். திரையிடலுக்கு பின்பாக ஆர்.வி.ரமணியுடன் படம் குறித்த விவாதங்களும் நடைபெற்றன. பார்வையாளர்களிடமிருந்து, ரசனை முன்னேற்றமிகு கேள்விகளும், அதற்கு ரமணியின் பதிலும் திரையிடலை அர்த்தமுள்ளதாகவே மாற்றியிருந்தது. இதுபோல, பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், நாகர்கோவில் போன்று இன்னபிற இடங்களிலும் தமிழ்ஸ்டுடியோ ஆர்வலர்களின் தயவால் ஆனந்த் படவர்தனின் திரையிடல்கள் நடத்தப்பட்டது.
இதன் மூலமாகவும் பலர் இந்த சுயாதீனத் திரைப்படங்கள் பக்கமாக திரும்புவார்கள். திரையரங்கத்தில் வெளியாவது மட்டுமே படங்கள் அல்ல, அவை தாண்டியும் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டே தனக்கான பொருளாதாரத் தேவையை நிறைவு செய்துகொண்ட படங்களும் உண்டு. ஓரளவு மக்களும் இதனைத் தெரிந்து வைத்துள்ளார்கள். இதுவரை திரயரங்கத்தில் வெளியாகாத ‘காக்கா முட்டை’ என்ற திரைப்படம் கனடாவின், டொரோண்டோ பிலிம் ஃபெஸ்டிவலில் விருது பெற்றுள்ளது. சமூகத்தின் பால் அக்கறைகொண்டு உழைக்கின்றவர்களுக்கு, பொருளாதாரத்தேவை தடையல்ல. பணத்தேவையை ஈடு செய்ய, இதுபோன்ற வெளிகளும் நிறைய இருக்கின்றன. எனவே படம் எடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கு திரையங்க வெளியீடுகள் தடையாக இருக்கக்கூடாது அதைத்தாண்டிய வெளியை அறிமுகப்படுத்துவதை தமிழ்ஸ்டுடியோ செய்துவருகின்றது.

ஆனந்த் பட்வர்தனின் எந்தப் படங்களும் திரையரங்கத்தில் வெளியாகவில்லை. அதேநேரம் அவரின் எந்தப் படங்களும் அவருக்கு பொருளாதார ரீதியான தொய்வையும் கொடுத்ததில்லை. இது அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கின்றது. காரணம் ஒரு படத்தை 14 வருடங்கள் எடுக்கும் ஆனந்த் பட்வர்தன் அதனை மக்களிடம்கொண்டு செல்ல மூன்று வருடங்கள் எடுத்துக்கொள்கின்றார். மேலும், அவரது படங்களின் குறுந்தகடுகளோடுதான் அவர் பயணம் தொடங்குகிறது . அந்த குறுந்தகடுகளின் விற்பனைகளின் மூலமாகவும் தனக்கான பொருளாதார தேவையை உறுதிசெய்துகொள்கின்றார். இதனை தமிழ்ஸ்டுடியோ லெனின் விருது வழங்கும் விழா நடைபெற்ற ஆர்.கே.வி. வளாகத்திலும் காணலாம். அங்கு வைக்கப்பட்ட குறுந்தகடுகள் கணிசமான விற்பனையை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதுவே இனி எதிர்காலமாகவும் இருக்கப்போகின்றது. இதனை தமிழகத்தில் கற்றுக்கொள்வதற்கும் ஆனந்த் பட்வர்தனுக்கு விருது கொடுத்ததில் முக்கிய காரணமாக இருக்கின்றது. அரசியலைப் பிண்ணனியாகக் கொண்டு சமூகக் குரலை முன்வைத்து இயங்குகின்றன அவரது ஆவணப்படங்கள். தொடர்ந்து மார்க்சியம், காந்தியம், அம்பேத்கரியம் சார்ந்த சிந்தனை சுழற்சி என்பது அவரது எல்லா ஆவணப்பட ஆக்கங்களிலும் மையமான சிந்தனையாக இருக்கிறது. சமூக, அதிகாரச் சமரசங்களுக்கு ஆளாகாமல் அடுத்தடுத்த சிந்தனைக்கட்டத்தை நோக்கித் தன்னையும் தன் ஆவணப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களையும் அழைத்துச் செல்லும் ஆற்றல் உடைய காட்சிகளைக் கொண்டவை.
லெனின் விருதில், லெனினின் பெயரை மட்டும் கவனிக்கின்ற பலரும் அந்த விருதிற்கான நோக்கத்தையும் கவனிக்க வேண்டும். லெனினும், ஆனந்த் பட்வர்தனும் ஒரே வயதுடையவர்கள், லெனின் வணிகப்படத்தில் வேலை செய்துள்ளார், ஆனந்த் பட்வர்தனின் களம் வேறு என்பது போன்ற வாதங்கள் தேவையில்லாதது. தமிழ்நாட்டில் இது போன்ற சுயாதீனத் திரைப்படங்களை உருவாக்கும் இயக்கங்களுக்கு வாசலாக இருந்தது ’லெனின்’, என்பதால்தான் அவர் பெயரில் விருது. அப்படியெனில் ’டப்ளின்’, நகரில் கொடுக்கக்கூடிய இலக்கியத்திற்கான விருதுதான், நோபல் பரிசைவிட பெரியது. டப்ளின் என்பது சிறிய நகரம் மட்டுமே. அதற்காக அங்கு கொடுக்கப்படுகின்ற விருதும், பரிசும் மதிப்பில்லாதது என்று ஆகிவிடாது.

மேலும் ஆனந்த் பட்வர்தனுக்கு, தமிழ் ஸ்டுடியோ போன்ற இயக்கத்திலிருந்து கொடுக்கப்படக் கூடிய விருது, அவரின் சோர்வுகளைக் களையக் கூடிய காரணியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் அவர் அடுத்தடுத்து சீரிய படங்களைக் கொண்டுவருவார், அம்மாதிரியான படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனை முன்மாதிரியாக கொண்டு மேலும் பல படைப்பாளிகள் வெளிவருவார்கள். தானாகவே அதற்கான பார்வையாளர்களும் அதிகரிப்பார்கள். இவைகளுக்கு தமிழ்ஸ்டுடியோ லெனின் விருது ஒரு பாதையாக விளங்குகின்றது.