தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது வழங்கும் விழா - 2013

புகழின் வெளிச்சம் படாமலிருந்தாலும், பாராட்டும் நண்பர்கள் தொடராமலிருந்தாலும், நேர்மையான படைப்பின் அதிர்வுகளை தாங்க வலுவில்லாமல் அவதூறுகளை எய்து விடும் ஆணாதிக்கங்கள் ஒரு புறமிருந்தாலும், தன் மொன்னைத்தனத்தினை மறைத்துக்கொண்டு பல்லிளிக்கும் சமூகத்திற்கு மத்தியிலும், தன் படைப்பினை படைக்கும் பொழுதும், அதனை திரையிடும்பொழுதும் ஏற்படுகின்ற இன்னல்கள் பலவற்றையும் பொருட்படுத்தாமல் உழைக்கின்ற மாற்று சினிமாக் கலைஞர்களுக்கு என்றும் உறுதுணையாக நெஞ்சுரத்தோடு நிற்பது தமிழ் ஸ்டுடியோ.

எவர் தூற்றலுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து சமூகத்திற்கான தன் பங்களிப்பை ஊடகம் வழியாக சாத்தியப்படுத்துங்கள், உங்களுடன் தமிழ் ஸ்டுடியோ பயணிக்கின்றது, உங்களது படைப்புகளை நாங்கள் மதிக்கின்றோம் என்று உறுதிப்படுத்துவதாகத்தான் படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவர்களின் பெயரால் லெனின் விருது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் நாள் வழங்கப்படுகின்றது.
இவ்விருதுக்கு தகுதியானவராக இவ்வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லீனா மணிமேகலை. படைப்பைப் பார்க்காமல், படைத்தவரின் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டே சக ஊடகக் கலைஞர்களாலேயே அதிகமாக விமர்சிக்கப்பட்டவர், லீனா. எனினும் “குட்டி நாய்களின் குரைப்புக்கு நான் அஞ்சேன்”, என்று தொடர்ந்து உழைத்ததன் பயனாக பார் போற்றும் பத்து ஆவணப்படங்களையும், “செங்கடல்”, என்னும் திரைப்படத்தையும் பல தடைகளுக்கு மத்தியில் வெளிக்கொணர்ந்து பார்வையாளர்களின் பசிக்கும், அதிகார வர்க்கத்தின் பார்வையின் மத்தியிலும் வைத்தார். துணிச்சலை தன் ஒரு கையிலும், கேமிராவை மற்றொரு கையிலும் வைத்துக்கொண்டு தன் கண்ணில் படுகின்ற அவலங்களை ஒட்டு மொத்த சமூகத்தின் கண்களுக்கும் கடத்துகின்ற லீனா மணிமேகலை இந்தச் சமுதாயத்தின் பார்வையிலிருந்தே புறக்கணிக்கப்பட்டவராகயிருந்தாலும், இவரை கொண்டாடியே தீர வேண்டும் என்ற நோக்கில் விடுதலை நாளினது மாலைவேளையில் பல்துறை ஆளுமைக்கு மத்தியில் லெனின் விருது அரங்கேறியது.

இனி அவ்விழாவில் நடந்தேறிய கலகலப்பான சார்லியின் பேச்சு, சிவகாமி ஐ.ஏ.எஸின் லீனாவின் படங்கள் மீதான ஐயம், மகள் மீது தந்தைக்கிருக்கும் பெருமிதமாக இயக்குனர் பாலு மகேந்திராவின் பூரிப்பு, விருதுக்கு தகுதியானவர் லீனாதான் என்ற இயக்குனர் பாலாஜி சக்திவேலின் உரை, மற்றும் இறுதியாக பேசிய லெனின் அவர்களின் தற்கால சினிமா மீதான பார்வை என அனைத்து விருந்தினர்களின் பேச்சிலும் சிறந்தவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுக்காமல், முழு நிகழ்வினையும் அப்படியே கொடுத்திருப்பதால், சிறந்தவைகளை தேர்ந்தெடுக்கும் உரிமை இனி வாசகர் கவனத்துக்கு.
தமிழ் ஸ்டுடியோவினால் லீனா மணிமேகலைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் விழா தொடங்கும்முன் திரையிடப்பட்டது. படம் முடிவதற்குள் அரங்கு விருந்தினர்களாலும், சினிமா ஆர்வலர்களாலும் நிரம்பியிருந்தது. இந்திய சுதந்திர தினமும், பீ.லெனின் அவர்களின் பிறந்த நாளும் ஒரே தினமாகயிருக்கின்ற காரணத்தினால், அன்றைய தினம், தேசப்பற்று பாடலுக்கு நண்பர் கார்த்திக்கின் நடனத்துடன் துவங்கியது. இந்நடனத்திற்கான கரகோஷம் முடிவடைவதற்குள் அடுத்ததாக கொட்டாங்குச்சி இசைக்கலைஞர் ராம் அவர்களின் இசைக்கச்சேரி ஆரம்பமானது.

அகப்பையில் வாய்த்திருக்கின்றது இவருக்கான ஞானம். தேவையற்றதென இத்தனை காலமாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை துணையாக வைத்துக்கொண்டு விடுதலைப் பண் பாடல்கள், சினிமாப் பாடல்கள் என அனைத்தையுமே அதே லயத்துடன் வார்த்தை தொனிப்பது போல தெரிக்கிறது இவரது கைவண்ணத்தில். இத்தனைக்கும் மேடையில் வாத்தியத்திற்கேற்ற ஒலிப்பெருக்கி இல்லாமலேயே அரங்கெங்கிலும் இசையை நிரப்பியது அவரது வாத்தியம். ஒவ்வொரு நபரும் மேடையில் வந்து பேசும்பொழுதும் இந்த இசைக்கலைஞரைப் பற்றி பேசாமல் உரையை நிறைவு செய்யவில்லை, இதிலிருந்து ராம் நிகழ்த்திய கச்சேரியின் செறிவைக் காணலாம்.

கச்சேரிக்குப்பின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜ சேகர், நிகழ்வினை தன் கையில் எடுத்துக்கொண்டார். அவரது அழைப்பிற்கேற்ப திரு. தயாளன் அவர்கள் வந்திருக்கின்ற விருந்தினர்களையும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களையும், பார்வையாளர்களையும் வரவேற்று பேசி இனியதொரு துவக்கத்தை முறையாக ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்ச்சின் முதல் நிகழ்வாகவே லீனா மணிமேகலைக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டு அவருக்கான கேடயத்தை பாலுமகேந்திரா முன்னிலையில் மேடையில் அமர்ந்திருக்கின்ற ஆளுமைகள் ஒன்றிணைந்து தங்கள் கரங்களால் ஒப்படைத்தனர். லெனின் விருதின் ரொக்கப்பரிசான ரூபாய். பத்தாயிரத்தை எழுத்தாளர். அழகிய பெரியவன் வழங்கினார். லீனா மணிமேகலைக்கான பாராட்டுப் பத்திரத்தை சிவகாமி.ஐ.ஏ.எஸ் வழங்கினார்.
விருதுகள் ஏற்படுத்திய மகிழ்ச்சியும், சலசலப்பும் கொஞ்சம் தணிந்தவுடன் எல்.வி.பிரசாத் டி.வி. அகாதமியில் இயக்குனராக பணிபுரிந்து வருகின்ற திரு.ஹரிஹரன் அவர்களின் பேச்சு ஆரம்பமானது.

இயக்குனர் ஹரிஹரன்:
லீனாவின் படங்களைப் பார்க்கும்பொழுது நாமும் அந்தச் சம்பவங்கள் நடக்கின்ற இடங்களைச் சென்று அங்குள்ள மக்களை சந்திக்க வேண்டும்போல உள்ளது. லீனா மணிமேகலை எடுத்த படங்கள் முப்பது நிமிடங்களுக்குள் முடிந்துவிடுவதாகயில்லை. அதனை நாம் மூன்று மணிநேரமாகவும் பார்க்கலாம், அல்லது மூன்று நாட்களுக்கும் பார்க்கலாம். ஏனென்றால் சினிமாவிற்கு எல்லையேயில்லை. அவர் சுருக்கமாகத்தான் முப்பது நிமிடங்களுக்கு படங்களை சுருக்கித் தந்திருக்கின்றார். ஆனால் படம் முடிவற்ற எல்லையில் இன்னும் தொடர்ந்து பயணித்து வருகின்றது.
நீங்கள் திரையரங்கத்திற்கு படம் பார்க்கச் செல்கின்றீர்களெனில் படம் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக முடிக்க வேண்டும். அதற்கு நடுவில் ஒரு இடைவேளை வேண்டும் போன்ற தொழிற்சாலைக்குரிய கட்டுப்பாடுகள் எல்லாம் சினிமாவின் மீது விதிக்கப்படுகின்றது. தியேட்டர்காரர்களுக்கு முறுக்கும்,, பாப் கார்னும் விற்பதற்காக இடைவேளை விடவேண்டியதாக உள்ளது.

லூமியர் பிரதர்ஸ் முதன் முதலாக தனது கேமராவின் வாயிலாக 50நொடிகளுக்கு ஒரு படம் எடுத்து காண்பித்தார். ஆனால் இப்பொழுது அண்மையில் பார்த்தீர்களேயானால், “அவதார்”, என்ற திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது வழங்கப்பட்டது. அது எப்படி சிறந்த ஒளிப்பதிவு என்று சொல்லமுடியும். அந்தக் கேமிரா எந்தவிதமான வெளியுலகத்தையும் பார்க்கவில்லை, முழுப்படமுமே ஒரு அரங்கை நிர்மாணித்து அதற்குள் முழுவதுமாக காட்சிப்படுத்தப்பட்ட படம் தான் ”அவதார்”. ஆனால் பாலுமகேந்திராவோ வெளியுலகம் முழுவதையும் தன் கையாலேயே ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்.

தற்போது படத்தின் காட்சியில் ஒரு புகைப்படம் சிறப்பாக வரவேண்டுமானால் கூட 500 பேர் வேலைசெய்கின்றார்கள். இந்த நிலைமை நீடித்தால் இனி ஒவ்வொரு காட்சி எடுக்கவும் 500 பேர் சினிமாவில் வேலை செய்ய வேண்டிய நிலைமை வரக்கூடும். இதைத்தான் டிஜிட்டல் சினிமா புரட்சி என்றெல்லாம் மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இதுவல்ல டிஜிட்டல் சினிமா.

சினிமாவில் இருப்பவர்களை நீங்கள் கேட்டீர்களேயானால் அவர்கள் சொல்வார்கள், கண்டவனெல்லாம் சினிமா எடுத்துக்கிட்டு இருக்கான். இதுல அவர்கள் சொல்ல வர்ற விஷயம் என்னவெனில் இந்நவ நாகரிக உலகில் எவர் வேண்டுமானாலும் சினிமா எடுக்கலாம். சினிமாவை சாத்தியப்படுத்த ஒரு சின்ன கேமரவோ, அல்லது செல்போனோ கூட போதும்.

அதற்கான அச்சாரமாகத்தான் இளைஞர்கள் பலரும் தான் எடுத்த குறும்படத்தையோ, ஆவணப்படத்தையோ இணையத்தில் பதிவேற்றி பலரது கவனத்திற்கும் கொண்டுசெல்கின்றனர். எவரும் திரையரங்கை எதிர்பார்ப்பதில்லை. திரையரங்கில் கிடைக்கின்ற வரவேற்பு இணையத்திலும் கிடைக்கின்றது. இனி வரும் காலங்களில் லீனா மணிமேகலை எடுத்த படங்கள் போலத்தான் பலவும் வரப்போகின்றன. என்பதோடு விருதுபெற்றுள்ள லீனாவிற்கு வாழ்த்துக்கள் கூறி எனது உரையை முடித்துக்கொள்கின்றேன்.
அடுத்ததாக தன் கருத்தினை பதிவு செய்ய வந்தவர் எழுத்தாளர், சமூக ஆர்வலர் சிவகாமி ஐ.ஏ.எஸ் அவர்கள்.

சிவகாமி ஐ.ஏ.எஸ்: விருது பெற்றிருக்கும் சகோதரி லீனா மணிமேகலை, மேடையில் வீற்றிருக்கும் சான்றோர் அனைவருக்கும் என் வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.
லீனாவிற்கு பல முகங்கள் உண்டு. அவர் ஒரு கழக எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், கவிஞர். அவரது கவிதைகள் ஒன்றிரண்டு நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்கும் போதெல்லாம் வாசித்திருக்கின்றேன். ஆனால் நேற்றுதான் (14.05.13) அவருடைய கவிதைத் தொகுப்பை முழுவதுமாக வாசிக்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அதிர்ச்சியடைந்தேன். உண்மையிலேயே ஆழ்ந்த வாசிப்புத் தளத்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டிருக்குமேயானால் சமூக மாற்றத்திற்கான வேரைப் பாய்ச்சியிருக்கும். நிச்சயம் லீனாவின் கவிதையைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனாலும் நாம் எதற்காக இங்கு கூடியிருக்கின்றோமேயானால் சிறந்த ஆவணப்படத்தை லீனா மணிமேகலை தொடர்ந்து எடுத்து வந்தார் என்பதற்காக. இதில் சிறந்த என்கின்ற அடைப்பிற்குள் ”சமூக மாற்றத்திற்கான படங்கள்”, என்பதனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இங்கு லீனா யார் பெயரால் விருது பெற்றாரோ அவரைப் பற்றியும் நான் கூற கடமைப்பட்டிருக்கின்றேன். லெனின் அவர்களைப் பற்றி அறியாதவர், தெரியாதவர் இருக்க முடியாது. அவர் பெயரால் ஒரு விருதே இயங்கி வருகின்றது என்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று. இளைய தலைமுறையினர் பலரும் புதிது புதிதாக குறும்படங்களும், ஆவணப்படங்களும் தொடர்ந்து எடுத்துவருவதற்கு உந்து சக்தியாக இருப்பவர். எனக்குத் தெரிந்து அவரது முதல் குறும்படம் தமிழ் நாட்டிலேயே மிகவும் பரவலாக பேசப்பட்ட குறும்படமாக இருந்தது. மற்ற சிலர் எடுத்த குறும்படங்கள் எல்லாமே கல்லூரியில் ஒப்படைப்பதற்காக செய்யப்பட்ட குறும்படங்கள்தான். கடந்த பத்து வருடங்களாகத்தான் குறும்படங்கள் அதிக அளவில் வெளிவரத்துவங்கியுள்ளன. எனக்கு முன்பு பேசிய ஹரிஹரன் சொன்னது போல தொழில் நுட்ப வசதியின் காரணமாக அதிக அளவில் குறும்படங்கள் எடுத்து வருகின்றனர். இதற்கான தளத்தை அமைத்துக்கொடுத்தவர் சகோதரர் பீ.லெனின் அவர்கள்.

இனி லீனா எடுத்த ஒரு படத்தைப் பற்றி பேச ஆசைப்படுகின்றேன். அந்தப்படம் ”தேவதைகள்”, பெரும்பாலானோர் பார்த்திருக்கக் கூடும். ஆவணப்படங்களிலேயே ஒரு வசதி இருக்கின்றது. நீங்கள் எதனையும் தனியாக முனைந்து செய்ய வேண்டாம். அந்த நூதனமான மனிதர்களை அவர்கள் போக்கிலேயே பேச வைத்து விட்டால் போதும். வேண்டுமளவிற்கு அவர்களை பேச வைத்துவிட்டு பிறகு நமக்கு எப்படி வேண்டுமோ அப்படி நாம் தேர்ந்தெடுத்துக் கொள்வதே பெரும்பாலான ஆவணப்படங்களின் செயல்பாடாக இருந்து வருகின்றது. முன்கூட்டியே இதற்கு ஒரு திட்டமிடல் இருந்திருக்கின்றது. இதில் முக்கியமானது எந்த கருவினை மையமாக வைத்து படம் இயங்க வேண்டும்.

இதில் ஏன் லட்சுமி, சேதுராக்கு, கிருஷ்ணவேணி என்ற மூன்று பெண்களையும் சுற்றி ஆவணப்படம் அமைக்க வேண்டும். அவர்கள் வித்தியாசமானவர்களா? அப்படி வித்தியாசமானவர்கள் என்றால், எந்த அளவிற்கு வித்தியாசமானவர்கள், எப்படி சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள், அல்லது இந்த சமூகத்திலிருந்து விலகி தங்களுக்கு தாங்களாகவே ஒரு உலகத்தை சமைத்துக்கொண்டார்களா?.எதனடிப்படையில் இந்த தேர்வு நடந்தது. அல்லது லீனா மணிமேகலை அவர்கள் தற்செயலாக இந்தப்பெண்களைச் சந்திக்க அதன் பின்பு அவர்களைச் சந்தித்து அவரவர்களின் பிரச்சனையை அறிந்து ஆவணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா?

என்னைப் பொறுத்தவரை இந்த பாத்திரப்படைப்புகளை பொறுத்தவரை எப்போதும் நாம் அன்றாட வாழ்வில் பார்க்கின்ற பாத்திரப்படைப்புகளாக அவர்கள் இல்லை. ஆனால் அவர்களைப் போல உலகத்தில் இல்லாமலுமில்லை. மிகவும் சொற்பமாக இருக்க கூடிய பாத்திரப்படைப்புகள்தான்.
”மாத்தம்மா”, என்ற படத்தை ஆரம்பத்திலேயே அவர் எடுத்த பொழுது அங்கு வாழ்ந்த அருந்ததிய சமூகத்தினர் கோபக் குரல் எழுப்பினார்கள். மாத்தம்மா என்ற அமைப்பே கிடையாது, படத்திற்காக வேண்டுமென்றே மாத்தம்மா உருவாக்கப்பட்டார் என்றவொரு குற்றச்சாட்டை எழுப்பினார்கள். ஆந்திராவில் வேண்டுமானால் ”மாத்தம்மா”க்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் மாத்தம்மாக்கள் கிடையாது, இது அருந்ததிய இன சமூகத்தையே கேவலப்படுத்தும் விஷயமென என்னிடமே வந்த குற்றம் சாட்டினார்கள்.

நான் உடனேயே எனது கேமராவை எடுத்துக்கொண்டு அந்தக் கிராமத்திற்கு சென்றேன். அதற்குள் இந்தப் படம் எடுத்து சர்ச்சைக்குள்ளாகி மக்கள் பேச மறுக்கும் ஒரு சூழல் உருவாகியிருந்தது. அங்கே ஒரு மாத்தம்மாவை நான் பார்த்தேன். சிறுவயது மாத்தம்மாவை நான் பார்த்தேன். அங்கே நான் கேள்விப்பட்டது குழந்தைக்கு உடம்பு சரியில்லையாதலால் மாத்தம்மா என்ற தெய்வத்திற்கு நேந்துவிடப்பட்ட செய்தி. பின்னர் எவருக்கும் அந்த குலதெய்வப் பாட்டு தெரியாதென்றார்கள். இந்த இடத்தில் நாம் ஒரு கேள்விக்குறியாகிவிடுகின்றோம்.

நாம் நம்புவதோ, மக்கள் நம்புவதோ, மாத்தம்மா என்றவொரு கேவலமான வழக்கம் நம்மிடையே இருப்பதை உணர்ந்து அதை நிறுத்துவதாகவும் நாம் பலவிதமாக பார்க்கலாம். ஆனால் எது எப்படியோ அந்தக் கிராமத்தில் இந்த ஆவணப்படம் வாயிலாக ஒரு மாற்றத்தை நாம் காணலாம்.

அடுத்ததாக தேவதைகள் படத்தில் சவங்களை புதைக்கின்ற பெண்ணைப் பற்றிய காட்சியை படம்பிடித்திருந்தார். அப்பொழுது கேமிராவின் பின்னாலிலிருந்து ஒரு குரல் சொல்லப்பட்டது. இரண்டு ஆண்கள் சவத்தைப் பிடித்து குழியை நோக்கி இழுக்கும் பொழுது பின்னாலிருந்து ஒரு பெண் குரல் கேட்கின்றது, “நீயும் போய் பிடி”, என்று அதற்கு அந்தப்பெண்ணும் ”நானும் போய் பிடிக்கணுமா?”, என்று சொல்லியபடியே போய் சவத்தைப் பிடிக்கின்றாள். அப்பொழுது வசனம் வருகின்றது, “என்னுடைய மகன் எனக்கு உதவி செய்யாவிட்டால் எப்படி?” என்று. ஆனால் பெண் தான் இவ்வேலையை செய்து வருகின்றாள் என்று சொல்ல வருகின்றார் இயக்குனர். அதற்குள் இந்த ஆண்கள் வேலை செய்துகொண்டிருக்கின்றார்கள். அதற்கு சமாதானம் சொல்லப்படுவதாக நான் பார்க்கின்றேன்.

இது திணிக்கப்படுவதாக இல்லை. ஏனென்றால் நான் மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கும்பொழுது கிராமங்களிலே ஆய்வு செய்ய குழுவினரோடு செல்வேன். பின்னொரு சமயம் சாண எரிவாயு திட்டத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக நான் சென்றிருந்த சமயத்தில் கலெக்கடருக்கான வாகனத்தைப் பார்த்தவுடன் வீட்டிலிருந்த ஆண்களெல்லாம் வேலை செய்வதுபோல வந்துவிடுவார்கள். வந்தபின்னர் முதல் ஆளாக கலெக்டர் பக்கத்தில் நிற்க போட்டி போடுவார்கள்.

நான் கேட்டேன்

இந்த சாண எரிவாயு திட்டம் எப்படி செயல்படுகின்றது?, யார் வந்து வேலை செய்வார்கள்? என்று கேட்ட பொழுதுதான் ஒருவர் சொன்னார், என் அண்ணிதான் இப்பணியை செய்து வருகின்றாரென்று. உடனே நான் சொன்னேன், ”அப்பொழுது நீ இங்கிருந்து கிளம்பு, உன் அண்ணியை இங்கு வரச்சொல்”, என்றேன்.

இதேபோன்றதொரு சூழல் தான் தேவதைகள் ஆவணப்படத்திலும் நடந்திருக்கும், கேமராவைப் பார்த்த வேகத்தில் அந்த இரண்டு ஆண்களும் அந்தச் சவத்தை இறக்கியிருக்கலாம். அப்பொழுது “நீங்கள்தானே வழக்கமாக பிணத்தைப் பிதைக்கின்றீர்கள், போய் நீங்கள் பிடியுங்கள்”, என்று கூட லீனா மணிமேகலை சொல்லியிருக்கலாம். அந்த ஆண்களுக்கிருக்கும் கேமிரா மீதான மோகத்தை இது காட்டிக்கொடுத்து விடுகின்றது.

மீண்டும் அந்த பாத்திரப்படைப்பை நோக்கிச்செல்லலாம். இவர்கள் சற்றே அதீதமானவர்கள். அந்த ஒப்பாரி வைக்கின்ற பெண்ணைப்போலவே எங்களுடைய விழாக்களுக்கு கூட ஒரு பெண்ணை அழைத்திருந்தோம். அவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்தான். தருமபுரியிலே இருநூறுக்கும் அதிகமான வீடுகள் கொழுத்தப்பட்டபோது அதனை போராட்ட வழியில் நடத்த சைதாப்பேட்டையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கு அந்தப்பெண்ணை அழைத்திருந்த காரணத்தினால் எரிந்த வீடுகளுக்கெல்லாம் சேர்த்து அந்தப்பெண் ஒப்பாரி வைத்து அழுதார். இதனை போராட்ட வடிவில் நாங்கள் பார்க்கின்றோம். இப்பொழுது லட்சுமி என்ற பெண்ணைப் பாருங்கள். இவள் போராட்டக் காரியா? என்ன அவள் வேட்கை?. இயக்குனர் கவர்ந்ததை விடுத்து நம்மை எது கவர்ந்தது?. அவள் வைக்கின்ற ஒப்பாரிகளா? அல்லது அவள் முன்வைக்கின்ற கெட்ட வார்த்தைகளா? அல்லது யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று சொல்வதா? இல்லையென்றால் ஆண்கள் என்னை அடித்தாலும் அவர்களை திருப்பி அடித்துவிட்டுத்தான் மறுவேலையைப் பார்ப்பேன் என்று சொல்கின்ற துணிச்சலா.? அல்லது தான் ஒருநாளைக்கு 550 ரூபாய் சம்பாதித்து 5 குழந்தைகளை காப்பாற்றினால் கூட பண் (bread) பாக்கெட் வாங்கி வந்து ராமா, ராமா என்று சத்தம் போடுகின்றாள். அவள் அவ்வாறு சத்தம் கொடுத்தவுடன் நான் ஏதோ நாய்தான் வரப்போகின்றது என நினைத்தேன். ஏனென்றால் வீட்டில் நாம் வளர்க்கின்ற நாய்களுக்கு இம்மாதிரியான பழக்கத்தை கொண்டிருப்பது வழக்கம். ஆனால் குரங்குகள் ஓடிவந்தன, இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நாயிடம் கொடுப்பதை விட குரங்கிடம் கொடுப்பதில் ஒரு தன்னிறைவு தெரிகின்றது. காரணம் நாய்க்கு கொடுக்கும் பிஸ்கட்டுடன் வீட்டிற்கு காவலாக இருக்க வேண்டும் என்பதனையும் வாங்கிக்கொள்கின்றோம். ஆனால் குரங்கிடம் அப்படி ஏதும் பிரதிபலன் நாம் எதிர்பார்க்க முடியாது, அதில் நியாமுமில்லை. இந்தக்குணம்தான் லட்சுமிக்கு வித்தியாசமானதா? அல்லது பெண்களுக்கு தானகவே தன் கைகால்களை அசைத்து விருப்பத்தை ஏற்படுத்துகின்ற வழக்கத்தை தமிழ் கலாச்சாரம் கற்றுக்கொடுக்கவில்லை. கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது, நிமிர்ந்து பார்க்க கூடாது இப்படி நூதனமான உடற்கட்டுப்பாடுகள் பெண்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில் கை கால்களை பரத்திக்கொண்டு அவர் ஆடுவதா.? ஆளறவமற்ற சூழலில் தன் விருப்பம் போல கை கால்களை அசைக்கின்ற சுதந்திரத்தையா.? எது நம்மை கவர்ந்தது?. இதனையெல்லாம் பார்க்கின்றபொழுது கண்ணீரை வரவழைக்கின்றது. ஆவணப்படத்தினுடைய நேரடித் தாக்கம் இதுதான். இங்கே கதை சொல்லல் இல்லை. தத்துவார்த்துவமான இணைப்புகள் இல்லை. எதுவுமே இல்லை. நாமும் அந்த பாத்திரமும் நேருக்கு நேராக நிற்கின்றோம். அவர்கள் நம்முடன் பேசுகின்றார்கள், அங்கே இயக்குனர்கள் கூட காணவில்லை. இதுவே அவ்வியக்குனரின் வெற்றி. கதாபாத்திரத்தை நம்மிடம் நேரடியாக பேசவிட்டு, எந்த நுணுக்கமும், கலை என்கின்ற பெயரிலே நடிப்பும் இல்லாத நேரடியான எனினும் நம் மனதில் எதோ ஒரு வழியில் பாதிக்கின்ற அளவிற்கு ஒரு நுட்பம் நிறைந்த சமாச்சாரத்துக்கு லீனா மணிமேகலை கொண்டு செல்கின்றார். இப்படி பல சிறப்புகள் கொண்ட ஒரு படைப்பு வெளிக்கொணர்ந்த லீனா மணிமேகலையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆனாலும் எனக்கு கேள்விகள் இல்லாமலில்லை. ஏனென்றால் நான் அப்படி பழக்கப்பட்டிருக்கின்றேன். அந்தப்பெண் அப்படியிருக்கின்றாள். சரி. லீனா மணிமேகலை எப்படியிருக்கின்றாள்?. ஒரு இயக்குனருக்கும் பாத்திரப்படைப்பிற்குமான உறவு எப்படியிருக்கின்றது?. ஏன் லீனா மணிமேகலை அந்தப் பாத்திரத்தைப் போல ஆகிவிட வேண்டும் என விருப்பமடையவில்லை?. அவர் விருப்பட்டாரோ இல்லையோ ஒரு வாசகராகவும் நான் இருந்து பார்க்கின்றேன். வாசகருக்கும் அந்தப்பெண்ணிற்கும் உள்ள உறவு என்ன? தனித்தனியான எல்லைக்கோடுகளில் நின்று, அவர்கள் வித்தியாசமாக இருக்கட்டும். நாம் ஏன் வித்தியாசமாக இருக்கின்றோம்.? அந்தப்பெண்ணைப் போல ஏன் சுதந்திரமாக இருக்க முடியவில்லை.? பொருளாதார ரீதியிலேயே மிகவும் துன்பப் படுகின்ற குடும்பங்கள்தான். அதற்கான பரிதாபமா? கிடையவே கிடையாது. அந்தப் படத்தில் எங்கேனும் பரிதாபத்தை பார்க்கவில்லை. அவர்கள் கஷ்டப்படுகின்றார்கள், ஆனால் போராடுகின்றார்கள். ஏதோ ஒரு வகையிலே இந்த சமூகத்தோடு மோதிக்கொண்டிருக்கின்றார்கள். ஏதோ ஒரு வகையிலே இந்த சமூகத்தை மாற்ற வேண்டுமென்று ஆசைப்படுகின்றார்கள். தன்னுடைய வாழ்வின் பூரணமாக அவர்கள் அதனையே உணருகின்றார்கள். அவர்கள் பேசுகின்ற பேச்சிலே அது தெரிகின்றது. அதேபோல நாம் அன்றாடம் பழகுகின்ற சக மனிதர்கள், தங்களை உணர்ந்திருக்கின்றார்களா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் நாம் பிறருக்காக வாழ ஆசைப்படுகின்றோம். பிறர் மதிக்க வேண்டும். என்ன உடை உடுத்தி, எங்கு செல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றோம். அது நமது சுதந்திரம் என்று கூட சொல்லிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எந்த அசைவுகளும், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் ஆடுகின்றார். ஒருவேளை நம்முடைய அம்மாவோ, சகோதரியோ இப்படியான ஆட்டம் ஆடினால் முழுமையான அதிர்ச்சிக்குள்ளாகி “போதும் ஆடாத நிறுத்து, எல்லாம் பார்க்குறாங்க” என்று சொல்லியிருப்போம்.

ஆனால் அந்தப்பெண்ணினுடைய ஆட்டத்தை இன்னொருவர்களாக இருந்து பார்க்கும்பொழுது நாம் சுதந்திரமடைந்தவர்களாக நினைக்கின்றோம். அப்படியெனில் நமக்கு உண்மையிலேயே சுதந்திரம் இருக்கின்றதா? அவர்களை விட நம்மை உணர்ந்து கொண்டோமா?

நாம் எல்லாவற்றைப்பற்றியும் கவலைப்படுபவர்களாக இருக்கின்றோம். நாம் என்ன நினைக்கின்றோமென்றால், நாம் என்ன பேச வேண்டும்? எப்படிப் பழக வேண்டும் என்றெல்லாம் ஒரு வரையறையை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள் வாழ்பவர்களாக இருக்கின்றோம். ஆனால் அந்தப்பெண்கள் அப்படியில்லை. அதனால்தான் லீனா மணிமேகலை அவர்களுக்கு ”தேவதைகள்”, என்று பெயரிட்டார்.

இன்றைக்கு லீனா சக காலத்திலே மிகவும் துணிச்சலான சமூக மாற்றத்தை நோக்கி நடைபோடுகின்ற நல்லதொரு பெண்மணி. அவரது கவிதையைப் பற்றி சொல்லவேண்டுமென்ற ஆவலில் உள்ளேன்.
கவிதைகள் நம்முடைய அனுபவங்களிலிருந்து வரும்பொழுது, நாம் வேறு பெயர்களை போட்டு மறைந்து போகின்றோம். சில சமயங்களில் நாமாகவே வெளிப்படுகின்றோம். எப்படிப் பார்த்தாலும் அது நமது அனுபவம் தான். நமது அனுபவத்தின் எல்லை, நமது உடலுக்குள்ளேயே சுருங்கி விடுகின்றதா? அல்லது நம் உடல் கடல் போல் விரிகின்ற ஆற்றல் உள்ளதா?
லீனா சிறந்த கவிஞர் என்பதில் துளியும் சந்தேகமில்லை, சிறந்த கழக எழுத்தாளர் என்பதிலேயே எந்த மதிப்பீட்டுக் குறைவும் இல்லை. சிறந்த சமூக சிந்தனையாளரான லீனாவுக்கு எனது பாராட்டுக்களை உரித்தாக்கிக்கொண்டு விடைபெறுகின்றேன். ”

தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் அருண்
முதலில் இவ்விழா இனிதே நடந்தேறிய நண்பர்களுக்கும், ஊடகத்துறைக்கும் நன்றிகள் தெரிவித்தார். விழா நடைபெறத்தேவையான பண உதவிகள் அளித்த அனைவருக்கும் மேடையிலேயே ஆளுமைகள் கைகளால் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

லெனின் விருது நேற்றைக்கு முடிவு செய்து இன்றைக்கு நடத்தி முடிக்கப்படுவது அல்ல, இதற்கு ஒரு மாத காலமாகவே தமிழ் நாடு முழுவதும் ஏறத்தாழ 28 இடங்களில் விருது பெறும் லீனா மணிமேகலையின் ஆவணப்படங்களை திரையிட்டு, கலந்துரையாடி, விவாவதித்து, பின்னரே இம்மேடையில் விருது நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இத்தகைய நிகழ்ச்சியை சாத்தியப்படுத்த உதவியாகவும், திரையிட அந்தந்த ஊர் நண்பர்கள் ஏற்பாடு செய்த காரணத்திற்காகவும் அவர்களுக்கும் மேடையிலேயே விருந்தினர்களின் கரங்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

லெனின் விருது எதற்காக என்பதனையும், ஏன் இவ்வருடம் லீனா மணிமேகலைக்கு இவ்விருது அளிக்கப்பட்டிருக்கின்றது என்பதனையும் அருண் அவர்களே மேடையில் எடுத்துரைத்தார்.
தமிழ்ஸ்டுடியோ அருண்: லெனின் விருது என்றதும் நிறைய நண்பர்கள் எண்ணிக்கொள்கின்றார்கள், அவர் எங்களுக்கு பணம் கொடுத்து நாங்கள் அவர் பெயரால் விருது வழங்குகின்றோம் என்று. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், லெனின் சாரிடம் ஆரம்பத்திலிருந்து நான் ஒரு புரொஜக்டர் வாங்கித் தருமாறு கேட்டிருக்கின்றேன். ஆனால் அவர் இதுவரை எங்களுக்கு வாங்கித்தரவில்லை. இது முழுக்க முழுக்க பொது மக்கள் உதவியினால் நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிதான்.

இந்தச் சமுதாயத்தின் மீது லெனின் கொண்ட அக்கறையின் காரணமாக நிறைய நல்ல காரியங்களைச் செய்து வருகின்றார், மாற்றத்தை நோக்கிய சினிமாவை எடுப்பதில் ஆவலாக உள்ளார். இத்தகைய காரணங்களினால் லெனின் மீது கொண்ட அன்பினால் நாங்கள் லெனின் பெயரில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றோம்.

சினிமாவின் உச்சத்தில் இருந்த லெனின் படத்தொகுப்பில் நிறைய வன்முறைக் காட்சிகளும், ஆபாசங்களும் இருப்பதைக் கவனித்து இனிமேல் இதுபோன்ற படங்களுக்கு எடிட் செய்ய மாட்டேன் என்று அவ்வுலகில் இருந்து விலகியவர். இவருக்கான இவர் விரும்பிய சினிமாக்களாக நாக் அவுட், ஊருக்கு நூறு பேர் போன்ற சினிமாக்களை எடுத்தார், அதற்காக தேசிய விருதும் பெற்றார். இவ்விரு படங்களையுமே தமிழ் நாடு முழுவதும் திரையிட்டு விவாதித்திருக்கின்றோம். சமூகத்தின் மீதான சாட்டையடிகளாகத்தான் லெனின் அவர்களது படங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. எங்களுக்கான அதிர்ஷ்டம் என்னவென்றால் இந்த நான்காவது முறையில்தான் லெனின் அவர்கள் இம்மேடையில் அமர்ந்திருக்கின்றார்.

இதில் லீனாவிற்கு ஏன் விருது வழங்குகின்றோமெனில், முதன் முதலாக இவ்விருதை லீனாவிற்கு நான் அறிவித்தபொழுது எண்ணற்ற மிரட்டல் தொலைபேசி அலைப்புகள் வந்தன. லீனா மணிமேகலயின் மீது இவ்வளவு பேர் கோபமாக உள்ளார்கள் என்பது எனக்கு அப்பொழுதுதான் தெரிந்தது. இது லீனாவிற்கே தெரியுமா? என்பது தெரியவில்லை. இவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு நிலவியது. இது ஒரு படைப்பாளியின் மேல் ஒரு படைப்பாளிக்கு இருந்த வெறுப்பில்லை. ஒரு பெண்ணிற்கெதிரான ஆணாதிக்க சமூகத்தின் வெறியாகத்தான் நான் இதனை பார்க்கின்றேன்.

தினந்தோறும் காலையில் அலுவலகத்திற்கு சென்று வேலை பார்ப்பது, வீட்டிற்கு வந்தவுடன் முகநூலில் என்ன பிரச்சனை என்பதனை ஆராய்ந்து தனது கருத்தைப் பதிவு செய்வது, பின்பு இன்னொரு பிரச்சனை வந்தவுடன் தன் பங்கிற்கு மீண்டும் செய்தி பகிருவது, இப்படியே போய்க்கொண்டிருக்கின்ற உருப்படாத சமுகத்திற்கு லீனா தொடர்ந்து உழைத்து வருகின்றார். இவரது படைப்புகள் சிறந்தவைகளா? இல்லையா? என்பது அடுத்த கட்டம். ஆனால் எதிர்வினைகளுக்கு மத்தியில் சோர்ந்து உட்கார்ந்துவிடாமல் தொடர்ந்து உழைக்கின்றாரென்பது மிக முக்கியம்.
ஒரு ஆவணப்படம் எடுத்துப் பார்த்தோமேயானால் அதனதன் வலி தெரியும்., லீனா பத்து ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இப்பொழுதெல்லாம் தன் படத்திற்கு தணிக்கைத் துறையோ, அரசாங்கமோ தடை விதித்தால் அதனை எதிர்க்க கூட எவரும் துணிவதில்லை. ஆனால் லீனா இந்த தடைகளை எத்தனை முறை சந்தித்தாலும் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து படத்தை வெற்றிகரமாக மக்கள் முன்னிலைக்கு கொண்டு செல்வார். தொடர்ச்செயல்பாடுகள் நடுவே எடுத்த ”தேவதைகள்” தான் எனக்கு மிக பிடித்த படம், பின்னர் ”பலிபீடம்”, படம் பற்றியும் நிறைய பேசலாம். அதாவது இந்த சமூகமே நாகரீகம் என்ற பெயரில் வைத்திருப்பதனை கேள்விக்குறிக்குள்ளாக்கிய படம், பலிபீடம். இந்தமாதிரி லீனாவின் பத்து படங்களையுமே சென்னையில் திரையிட்டோம். அதில் நீங்கள் எத்தனை படங்களை பார்த்திருப்பீர்கள் என்பது தெரியாது. ஆனால் கண்டிப்பாக லீனாவின் படங்கள் தவறவிட்டுவிடாமல் பார்க்க வேண்டிய படம்.

இதனைத் தவிர்த்து எனக்கும் சொல்ல வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. ஒரு திரைப்படத்திற்கு முக்கியமானது வடிவமைப்பும், உள்ளடக்கமும் (farm & content). இந்தக் காலத்தில் வெளிவருகின்ற படங்களுக்கு இம்மாதிரியான அம்ஷங்கள் இருக்கின்றனவா என்பதனை தேடிப்பார்த்தால் கூட ஒன்றிரண்டு கூட கிடைப்பதிரிது. பாலு மகேந்திராவின், ”வீடு” திரைப்படம் இந்த வடிவமைப்பிற்கும், உள்ளடக்கத்திற்கும் மிகச்சிறந்த உதாரணம். அந்தப் படத்தை நிறைய முறை திரையிட்டு பேசியிருக்கின்றோம். அந்தமாதிரியான படம் இதுவரையிலும் ஒருவரும் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட 25 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அதற்கு மிக நெருக்கமான படைப்பை கொண்டுவந்த இயக்குனர்களில் பாலாஜி சக்திவேல் மிக முக்கிய இடத்தில் இருக்கின்றார். அவருடைய படமான ”காதல்”, ஜாதியைப் பத்தி மிக நுட்பமான, துல்லியமாக ஆழமாக இதுவரை எந்த படங்களிலும் சொல்லி நான் பார்த்ததில்லை. இறுதியில் படம் முடியும்பொழுது கூட அவரால் மூன்று நாட்களுக்கு ரசிகர்களை அழ வைத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படியாக செய்யவில்லை, முடியும் தருவாயில் அழகாக தன்னம்பிக்கை தரக்கூடியதாக முடித்து வைத்திருக்கின்றார். இதுதான் சினிமாவின் சரியான வடிவமைப்பிற்கு உதாரணம்.

ஆனால் நம் ஆட்கள் இதனை மிக தவறாக புரிந்து வைத்திருக்கின்றார்கள், இவர்களைப் பொறுத்தவரை வடிவமைப்பு என்பது நான்கு சண்டைக்காட்சிகளும், குத்துப்பாட்டும்தான். இது யாருக்கு பிடிக்குமென்று வைத்திருக்கின்றார்களென்பது தெரியவில்லை. ஆனால் இதுதான் காலங்காலமாக தொடர்ந்து வருகின்றது.

பாலாஜி சக்திவேல்:
விருது பெறுகின்ற லீனா மணிமேகலைக்கு வாழ்த்துக்கள். நான் இதற்கு முன் லீனாவினைப் பற்றி தவறான எண்ணங்களை வைத்திருந்தேன். அதற்காக லீனாவை நான் திட்டுவதாக தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பின்னர் அருண் என்னைத் தொடர்பு கொண்டு இவ்வருடம் லீனா மணிமேகலைக்கு விருது வழங்குகின்றோம், நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னபொழுது கூட லீனாவின் எந்த ஆவணப்படத்தையும் நான் பார்க்கவில்லை.
அருண் ஏன் இவ்வளவு சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற லீனாவிற்கு விருது வழங்குகின்றார், என்ற சந்தேகம் வந்தது. காரணம் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. காரணம் ஆனந்த் பட்வர்தனின் “ஜெய் பீம் காம்ரேட்”, என்கின்ற ஆவணப்படத்தினை அவர் திரையிட்டார். மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிய படமாக ஜெய் பீம் காம்ரேட் இருந்தது. அப்படிப்பட்ட அருண் ஏன் இம்முறை லீனாவிற்கு தருகின்றார். லீனா நன்றாக கவிதை எழுதுவார், நிறைய ஆவணப்படங்கள் எடுத்துள்ளார் என்பது தெரியும். பின்னர் மாத்தம்மா, தேவதைகள் என்ற இரு ஆவணப்படத்தையும் எனக்கு அருண் அனுப்பி வைத்தார்.

அவ்விரு படங்களைப் பார்த்தவுடனேயே, உண்மையாகச் சொல்கின்றேன், நீங்கள் குறிப்பிடுகின்றீர்களே அந்த வடிவம் , உள்ளடக்கம் இவையெல்லாம் செறிவாக, ஆழமாக, நுட்பமாக, மிகவும் அநாசியமாக தெளித்திருக்கின்ற ”தேவதைகள்”, படம் மிக அற்புதமான ஒரு படைப்பு. அப்படத்தை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

அதுவும் ”கிருஷ்ணவேனி”, அந்தப் பிணத்தை தூக்கிக்கொண்டு செல்லும்பொழுது அவள் சொல்வாள், ”இந்தப் பிணம் இன்னும் சிதைந்து நிறைய ரத்தமாக வரும், அப்பொழுதும் போலீஸ்காரர்கள் எங்களிடம் ஒப்படைக்க மாட்டார்கள், இந்தப் பிணங்களை போலீஸ்காரர்களிடமிருந்து வாங்குவதற்குள் பெரும்பாடு ஆகிவிடும், ஏதோ கேமராயெல்லாம் வைத்திருப்பதால் இன்றைக்கு சீக்கிரம் தந்துவிட்டார்கள்”, என்பாள். இது மிக முக்கியமான காட்சி. நாமெல்லாம் ஒரு கதை சொல்லி, கறபனையாக பயிற்சி செய்து வைத்திருப்பதை அப்படியே திரையில் உருமாற்றுவதையும், ஆவணப்படம் என்று வருகின்ற பொழுது நிஜத்தை அப்படியே பதிவு செய்கின்றார்களென்பதில் இதுதான் நிஜம். இதுதான் சத்தியம்.
பயிற்சி செய்தெல்லாம் அந்த முக பாவனைகளை இனிமேல் வாங்குவது இயலாது. நீங்கள் டிஸ்கவரி சேனலில் பார்த்தீர்களேயானால் ஒரு சிங்கம் கொட்டாவி விடுவதை காத்திருந்து படம் எடுப்பதைப்போல, இனிமேல் யதார்த்த வாழ்வினை அப்படியே பதிவு செய்து பின்னர் அதனை எடிட் செய்து வருவதே சினிமாவாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதற்கு இந்த ”தேவதைகள்”, ஆவணப்படம் சாட்சியாக உள்ளது.

இப்படியான கனமான ஒரு படத்தை பதிவு செய்துள்ள லீனாவிற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன்.

இப்படியாக லீனாவின் படங்கள் தீவிர சினிமாவில் இருப்பவரையும் பாதித்திருப்பதை இயக்குனர் பாலாஜி சக்திவேலின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது.

இதற்கு பின் பேச வந்தவர் நடிகர் சார்லி, இவர் நடிப்பிற்கேற்ப, மேடையில் பேசும்பொழுதும் சாதாரணமாக நகைச்சுவைப் பாணியில்தான் பேசினார். எதனையும் வலிந்து திணித்துக்கொள்ளாமல் இயல்பாக தன் கருத்துக்களை மக்களிடையே பதிவு செய்த சார்லியின் வார்த்தைகள் வந்திருந்த பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை விதைத்திருந்தது. சார்லியின் குரலையும், உருவ அமைப்பையும், முக மாற்றத்தையும், ஒலியின் ஏற்ற இறக்கத்தையும் மனதில் வைத்துக்கொண்டு இந்தக் கட்டுரையை படித்தீர்களேயானால் உங்களாலும் நேரில் கண்ட பேச்சின் இன்பத்தை எய்துவிட முடியும்.

நடிகர் சார்லி

அவையோருக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Main stream cinema, மாற்று சினிமா, parallel cinema இது ஒரு டைப்பான சினிமா,
இப்படியான எந்த சினிமா பற்றியும் எனக்குத் தெரியாது. ”மாற்று சினிமா”, பற்றி தெரியாமல் வெறும் ”சோற்று சினிமா”, மட்டுமே எனக்குத் தெரியும். சார்லி நிறைய படித்தவர்னு நிறைய பேர் சொன்னார்கள். அதற்கும் ஒரு காரணம் இருக்கு, இப்பொழுது வேலை இல்லையென்பதால் தான் அருண் முழு ஈடுபாட்டோடு இந்த வேலை பார்க்கின்றார். எனக்கு வேலை இல்லைங்கிறதாலதான் நானே படிச்சேன்.

நான் அடிப்படையிலே சினிமாக்காரன் கிடையாது, பரிபூரணமான அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட நாடக நடிகன். அப்படியெனில் நாடகத்திற்கும் சினிமாவிற்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா?

சினிமா என்பது பதிவு செய்தல், நாடகம் என்பது பயின்று கொள்ளுதல். சினிமாவை ஒரு முறை முடிவு செய்துவிட்டால் அக்காட்சி அப்படியேதான் இருக்கும், அதில் நடிகனுக்கு வேலை கிடையாது. சினிமா என்பது இயக்குனருக்குண்டான மீடியா. நாடகம் என்பது நடிகன் சுயமரியாதை, சிந்தனையுணர்வோடு இருக்க கூடிய களம்.

அப்படியெனில் நாடகக் காரர்களுக்கு மிக முக்கியமான ஒரு தளம் அவனது உடல். அந்த உடல் எப்பொழுது தெளிவாக இருக்குமெனில் சிந்தனை, உணர்வு எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் தான் உடல் சரியாக இருக்கும். இதில் எந்த இடத்தில் தடுமாறினாலும் உடல் சீரழிந்துவிடும்.
இரண்டு பாதங்கள் நிற்கின்ற நிலையை வைத்துக்கொண்டே அவரவர்களின் வயதை சொல்ல முடியும். ஒருவர் பேனாவின் எந்த முனையில் கை வைத்திருக்கின்றார் என்பதனை வைத்து அவர் எதனை மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றாரென்பதனை சொல்ல முடியும்.

1995ல் ஓய்வு பெற்ற யூஜின் ஜென்லின் என்ற பேராசிரியர்., இப்பொழுது தனியாக ஒரு இன்ஸ்டிட்யூட் வைத்து நடத்தி வருகின்றார். அவர் ஏதோ நமக்குத் தெரியாத முக்கியமான விஷயத்தை சொல்லியிருப்பாரென்று இணையத்தின் உள்ளே சென்று பார்த்தால், எல்லாம் நம்ம ஊரில் பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி , மச்சான் சொல்லிக்கொடுத்தவைகளையே அவரும் சொல்லியிருக்கின்றார்.

நாம் அடிக்கடி சொல்வோமே, “உங்கள நெனச்சப்ப சார்., அப்படியே வயித்துல பால் வார்த்த மாதிரி இருந்துச்சு சார்”, என்று , இது உடல் சம்பந்தப்பட்ட ஒன்று. ”சார், அந்தக் கவிதை படிச்சேன், படித்தவுடனேயே அப்படியே கப, கப, கபனு உடலெல்லாம் எரிய ஆரம்பிச்சுடுச்சு சார்”, இதுவும் உடல் சம்பந்தப்பட்ட ஒன்று.

எப்பொழுதுமே, மனிதன் பொய் சொல்லலாம், அவனுடைய சிந்தனை பொய் சொல்லலாம், உணர்வுகள் பொய் சொல்லலாம், ஆனால் நண்பர்களே பொய்யே சொல்லாதது ஒன்று இருக்குமேயானால் உற்று கவனித்துப் பாருங்கள் உடல் என்றுமே பொய் சொல்லாது.

லீனா மணிமேகலை என்ற படைப்பாளி, ஒரு சிறந்த கவிஞர். அவரது படைப்புகளை நடிகன் என்ற பார்வையில் நான் எப்படி பார்க்கின்றேனென்றால் முழுக்க முழுக்க உண்மை சம்பந்தப்பட்டவைகளாகவே பார்க்கின்றேன்.

நான் ”ஒற்றையிலையென”, சில வருடங்களுக்கு முன் படித்திருக்கின்றேன். சமீபத்தில் ”பறத்தையருள் ராணி”, படித்தேன். அந்தக் கவிதைகளிலெல்லாம் வார்த்தைகளுக்கு வலிமை பெற்று அதிருகின்றது. எனக்கு உள்ளுக்குள் சின்ன சங்கடம் ஒன்று இருந்தது.

நமக்கு இலக்கியமே தெரியலையா?
அல்லது
இந்த எழுத்துகள் எனக்கு புடிக்கலையா?
இந்த கவிதைகள் என்ன செய்கின்றது எனக்கு, என்பது புரியவில்லை.
நான் லீனாவின் ஆவணப்படங்கள் நிறைய பார்த்திருக்கின்றேன். ”மாத்தம்மா”, பார்த்திருக்கின்றேன். நேற்று கூட ”பெண்ணாடி”, பார்த்தேன். ”தேவதைகள்”, பார்த்து மிரண்டு போய்விட்டேன். அவ்வளவு தூரம் மிரட்சியை உண்டு பண்ணியது தேவதைகள் ஆவணப்படம்.

அப்படியெனில் ஒர் திரைப்படமோ, கவிதையோ, படைப்போ வாசகர் வட்ட அமைப்பில் இப்படியெல்லாம் தூண்டிவிடுமானால், அந்த படைப்பாளி, முழுக்க முழுக்க உண்மையாக இருந்தால் மட்டும்தான் முடியும்.

ஒரு சின்ன போலித்தனம் தன்னையறியாமல் கலந்தாலும் இந்த வலிமை வேறு எதற்குமே வாய்க்காது.
லீனாவின் படைப்புகளுக்கு நிறைய எதிர்ப்பு வருகின்றது, என்று நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கின்றேன். கண்டிப்பாக எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். லீனாவின் படைப்பின்மேல் எதிர்ப்புகள் வந்தால் லீனா மணிமேகலை வலிமையான எழுத்துக்களையும், படைப்புகளையும் தந்துகொண்டிருக்கின்றார் என்று பொருள்.

”நான் ரெம்ப அமைதியானவர் சார். எனக்கு எந்த பிரச்சனையும் வராது”, என்பவர்களெல்லாம் சமுதாயத்தை எந்தவிதமான தொந்தரவுகளுக்கும் ஆட்படுத்தவில்லை என்று தான் அர்த்தம். இவர்கள் ஏதாவது நியாயத்தோடு இயங்கினால்தானே பக்கத்தில் இருப்பவர் கலக்கமடைவார்.

வாழ்வின் வரலாறே இப்படித்தான். பகவான் ஸ்ரீ அரவிந்தரிடம் சென்று பாரதியார், “நீங்க தீவிர வாத இயக்கத்திலிருந்து ஆன்மீக வழிக்கு மாறி, நிறைய ஆன்மீகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகின்றீர்கள் , நீங்கள் சொல்லுங்கள், இந்தியாவிற்கு எப்பொழுது சுதந்திரம் கிடைக்கும்”, என்று கேட்பார் பாரதி.

அதற்கு அரவிந்தரோ, “சூட்சும உலகத்தில் நான் பார்த்துவிட்டேன், என்னுடைய பிறந்த நாளில் சுதந்திரம் கிடைக்கும்”, என்றவுடன், பாரதியார் மகிழ்ச்சியில்”ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே”, என்று எதிர்காலத்தை கண்டுணர்ந்தது போல பாட்டு எழுதிவிட்டார்.
ஆனால் சுதந்திரம் வர்ல!.

உடனே பாரதியார் அரவிந்தரிடம் சென்று “நீங்கள் இப்படியெல்லாம் சொல்லலாமா, உங்கள் பேச்சைக் கேட்டு நான் இப்படி பதிவு செய்துவிட்டேன், இப்பொழுது சுதந்திரம் கிடைக்கவில்லையே”, என்றிருக்கின்றார்.

அதற்கு பகவான் அரவிந்தர், “ நான் எனது பிறந்த நாளில் சுதந்திரம் கிடைக்குமென்று சொன்னேன், ஆனால் எத்தனையாவது பிறந்த நாளின் பொழுது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்குமென்று நான் சொல்லவில்லை,” என்றார்.

ஆனால் பகவான் சொன்னதுபோலவே ஆகஸ்ட் 15, 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அன்றைய தினம் பகவான் அரவிந்தரின் பிறந்தநாள்.

நீ என்ன நினைத்து அதனை நோக்கி உழைக்கின்றாயோ அதுவாகத்தான் வரமுடியும். லீனா மணிமேகலையின் படைப்புகள் முழுவதையும் படித்திருக்கின்றேன் என்பதிலிருந்து ஒன்று சொல்கின்றேன், ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கின்றாள். அதே போல ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் இருக்கின்றான். இதனைப் புரிந்து கொண்டு வாழ்வின் தருணங்களை அழகாக பதிவு செய்திருக்கின்ற படைப்பாளி எனக்குத் தெரிந்து லீனா மணிமேகலை மட்டும்தான்.

இதற்காக நீங்கள் மற்ற எந்த பெண் கவிஞர்களுடைய கவிதைகளைப் படித்திருக்கின்றீர்கள் என்று கேட்பீர்களல்லவா? நான் நிறைய பெண் கவிஞர்களின் கவிதைகளைப் படித்தபின்புதான் இந்த விஷயத்தைச் சொல்கின்றேன்.

ஒரு இயக்குனரிடம் சென்று கேட்டார்கள், ”காரில் பின்புறத்தில் பிணம் உள்ளது. யாருமே பார்க்காம எப்படி வண்டிக்குள் பயணிகள் இருப்பார்கள். அதுவும் டாக்ஸினும் சொல்றீங்க. அதெப்படி பயணிகள் பின்பக்க இருக்கைகளை பார்க்காமல் வருவார்கள்”, என்றனர்.

இயக்குனர் தமிழ்ச்சினிமாவின் பீஷ்மர், இதனை எல்லாம் பொறுமையாக அமைதியாக கேட்டுக்கொண்டேயிருந்தார். பின்னர் உதவியாளர்களை அழைத்து “எதற்காக கார் பின்னால் உள்ள பிணத்தை பயணிகள் பார்க்கவில்லை என்பதற்கான காட்சியை உள்ளுக்குள் வையுங்கள், அதுதான் சினிமா”, என்றார்.

அந்தப் படம்தான் “சாது மிரண்டால்”,மிகப்பெரிய திரைக்கதை பேரரசர் பீம்சிங்கின் இயக்கத்தில் அப்படம் வெளியானது. நட்சத்திரங்களுக்கு நடுவில் நடிகர்களை வைத்தே வெற்றி பெற்ற படம் அந்தப் படம். அவர் இந்த நாட்டை நேசித்தால் அவருடைய பிள்ளை ஆகஸ்ட் பதினைந்தில்தான் பிறக்கும். இதிலென்ன சந்தேகம்!.

ஒரு தமிழ் ஸ்டூடியோ என்கின்ற அமைப்பு இல்லையானால் நம் அனைவரும் இப்படி ஒன்றாக சேர்ந்திருக்க முடியுமா. அப்படியெனில் அருணுனுடைய விருப்பமும், விழைவும், நேர்மையும் அத்தனை பேரையுமே கட்டிப்போட்டு வைத்துவிடும்.

ஆக நல்ல சினிமா நிச்சயமாக அமையும், லீனா மணிமேகலையின் படங்கள் நிச்சயமாக காலத்தையெல்லாம் தாண்டிச்செல்லும்.

லீனா மணிமேகலையின் வார்த்தைகளைப் பாருங்கள், வேறு யாருமே தன்னை இப்படியாக பிரகடனப் படுத்திக்கொண்டதில்லை.
” என்னிடம் சில வார்த்தைகள்,
பல நாக்குகள்,
மொழி ஒன்றுதான்.
ஆனால்,
எனது எதிரி, உங்கள் பாதுகாப்பைக் கருதி,
எனக்கு அக்கறையுண்டு.

எனினும்
சினத்தைக் கீறி, அவ்வப்போது கவிதைகள் செய்வேன்.
வரலாறு ஒரு நீலப்படம்
நான் அதன் நட்சத்திரம்”
இதனைச் சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும். அது லீனாவிடம் மட்டுமே உள்ளது.

லீனா பொதுவுடமை இயக்கத்திலுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்படி சொன்னார்கள், என்பதெல்லாம் கிடையாது. எது படைப்பாளியினுடைய வலிமையோ, எதுஅவருடைய நேர்மையோ அது வெல்லுகின்றது.

பைபிளில் புதிய ஏற்பாடு , பழைய ஏற்பாடு உள்ளது. அதில் பழைய ஏற்பாட்டைப் பற்றி ஒரு படம் பார்த்தேன். அதில் நோவா ஆர்க் செய்வதை மையப்படுத்திய காட்சியிருக்கும்.

கடவுள் சொன்னார், “நான் உலகத்தை அழிக்கப்போறேன், ஒட்டகத்தில் ஒரு சோடி, யானையில் ஒரு சோடி, .. .. ..... யாரெல்லாம் கடவுளுக்கு பயந்து உண்மையாக இருக்கின்றார்களோ அவர்களை கப்பலுக்கு வரச்சொல்”, என்றதும் அனைவரும் கப்பலில் ஏறிக்கொண்டனர், கப்பல் புறப்பட்டது.
அதன் பின்னர் சில நாட்களில் மழையெல்லாம் நின்றுவிட்டது. கப்பலை திறந்துவிட்டார்கள், மக்களெல்லாம் இறங்கிச்சென்றார்கள். இப்படியாக பயணித்து வேறு வேறு மொழி பேசிய மக்கள் உருவானார்கள் என்று அந்தக் கதை முடியும். இது அனைவருக்குமே தெரிந்த கதை.
இதில் ”நோவா”, கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு 147 வயதிற்குண்டான மேக்கப் போடப்பட்டுள்ளது. குடிகாரராக காணப்படுகின்றார், சுற்றிலும் நண்பர்கள் சூழ்ந்திருக்க கச்சேரி நடந்து வருகின்றது. அப்பொழுது நோவாவின் பெயர் ஒலிக்கின்றது, அதனைக் கேட்டவுடன் நோவா சுற்றிலும் திரும்பி பார்க்கின்றார்.

நண்பர்களே அந்தக் காலத்தில் அவர்கள் என்ன வைத்திருந்தார்களென்றால், பைபிளில், “தாவீது உன் கால் செருப்பை கழற்றிவிட்டு வா, இது புனிதமான இடம்”, என்று ஆண்டவர் நேரடியாக மனிதர்களிடம் சொல்வார். போன் லைன் போட்டு கடவுளிடமே பேசுவது மாதிரியான இது.

அப்படிப்பட்ட காலத்தில் உள்ள ஒரு கதைதான் இது.

கடவுள் கூப்பிடுகின்றார், நோவாவைப் பார்த்து,
”nova..... nova........”
குரல் கேட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, நோவா சுதாரித்துக்கொண்டு
”whose this,……. Oh! ….. god……. Ha ha…”
என்றவாறு சகஜமாக பேசுகின்றார் நோவா.

பின்பு கடவுள் சொல்கின்றார்,
”I’m going to destroy the whole world, there is no justice, you go to follow the truth of god..........” என்கின்ற மாதிரியாக கடவுள் சொல்லிக்கொண்டே வருவார்.
பின்பு இறுதியாக,”any doubt nova?” என்று கடவுள் நோவாவிடம் கேட்பார். அதற்கு நோவா,
“god I have one doubt” என்பார்.

“what nova?”

“god why you are speaking in my voice?”

கடவுளான நீ ஏன் என் குரலில் பேசுகின்றாய், என நோவா கடவுளைப் பார்த்து கேட்டதும்
இங்கு இறைவன் கூறும் பதில் தான் முக்கியமானது.

“don’t you know nova, god can speak to everyone in their own voice”.

”கடவுள் ஒவ்வொருவரிடமும் அவரவர் குரலில்தான் பேசுவார்”, என்றார்.

தன் அகத்தின் குரலை உண்மையென்று நம்பி அவ்வுண்மையை வாழ்வின் தருணங்களிலே பதித்துக்கொண்டிருக்கும் லீனா மணிமேகலை என்ற மாபெரும் படைப்பாளி தமிழச்சியாக பிறந்த காரணத்தினால், அவர் வாழ்வின் மிகப்பெரிய வெற்றியையும், பாராட்டையும் அடைவது உறுதி, என்று அவரை வாழ்த்துகின்றேன்.

என்று சார்லியின் நகைச்சுவையோடிணைந்த கருத்தான பேச்சினை முடித்துக்கொண்டார்.

இனி அடுத்த இதழில்...