தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014

2014ஆம் ஆடுக்கான தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது ஆனந்த் பட்வர்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. சுமார் 385க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், மணிமாறன் இசைக்குழுவினரின் பறை இசைக்கப்பட்டது. மேற்கு வங்க திரைப்பட இயக்குனர் புத்ததேப் தாஸ்குப்தா இவ்விருதை ஆனந்த் பட்வர்தனுக்கு வழங்கினார். நிகழ்வில், ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் சேர்மன் சஷி குமார், எழுத்தாளர் இமயம், திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் எழுத்து வடிவத்தை பேசாமொழி வாசகர்களுக்காக இங்கே கொடுக்கிறோம்.
எழுத்தாளர் இமையம்:

கற்பனையைச் சொல்பனையே உலகம் ஏற்றுக்கொள்கிறது - எழுத்தாளர் இமயம்

இவ்விருது வழங்கும் விழாவில் பங்கேற்றதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் அவையில் இருக்கின்ற புத்ததேவ் தாஸ் குப்தா அவர்களுக்கும், சஷிகுமார் மற்றும் அம்ஷன் குமார் அவர்களுக்கும், விருது பெற்றிருக்கின்ற மதிப்புமிகு ஆனந்த் பட்வர்தன் அவர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெய் ராம் Vs ஜெய் பீம்:

தமிழ் ஸ்டுடியோ ஏன் என்னை இந்நிகழ்விற்கு அழைத்தது என்று தெரியவில்லை. காரணம், ’எனக்கும் இத்துறைக்கும் சம்பந்தமில்லை. ஆனந்த் பட்வர்தனின் படங்களையும் இதுவரை பார்த்தது இல்லை’, என்ற காரணத்தை அருண் அவர்களிடமும் சொன்னேன். பதிலாக அருண் , ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படங்களை எனக்கு அனுப்பி வைத்தார். முதலில் நான் பார்த்தது ”ஜெய் பீம் காம்ரேட்”. அதன் அட்டை வடிவமைப்பில், இருக்கின்ற படத்தைப் பார்த்தவுடன் ஆனந்த் பட்வர்தன் ஒருவேளை நக்சலைட்டாக இருப்பாரோ என்றுதான் தோன்றியது. அல்லது ”ஜெய் பீம் காம்ரேட்”, நக்சலைட் சம்பந்தமான ஏதோ ஒரு படம் போல இருக்கின்றது என்றும் நினைத்தேன். உண்மையிலேயே அப்படி நினைத்துதான் ”ஜெய் பீம் காம்ரேட்”, பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், முழுப்படத்தையும் பார்த்த பின்புதான், ஆனந்த் பட்வர்தன் நக்சலைட்டுக்கெல்லாம், நக்சலைட்டாக இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன் . அப்படியான தீவிரத்துடன் இருந்தது “ஜெய்பீம் காம்ரேட்”.

அந்தப் படம் முடிகின்றபொழுது ”ஜெய்பீம் காம்ரேட்”, என்பதற்குப் பதிலாக ’ஜெய் ராம்’ என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். காரணம் என்னவெனில், கடைசியாக ’நரேந்திர மோடி’, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கின்றார். அதனால் தான் ஜெய்பீம் காம்ரேட்டிற்குப் பதிலாக ஜெய் ராம் காம்ரேட் என்பதே சரியாக இருக்கும் என்று சொன்னேன்.

எனக்கு இன்னொரு விஷயமும் தோன்றுகிறது, ஆனந்த் பட்வர்தன் ஒரு வேளை பிராமிணாக இருப்பாரோ? என்று. காரணம், ’ஜெய் பீம் காம்ரேட்’, ’இன் தி நேம் ஆஃப் காட்’, மாதிரியான படங்களை எடுத்துவிட்டு ஒரு ஆளை உயிரோடு விட்டுவிடுவார்களா?. அப்படியும் உயிரோடு இருக்கின்றார் என்றால் அவர் நிச்சயமாக பிராமிணாகத்தான் இருக்க முடியும்.

கம்பி வேலிகளுக்குள் அம்பேத்கர்:

ஆனந்த் பட்வர்தனின் படங்களை நானும் என் குடும்பமும் ஒன்றாக அமர்ந்து பார்த்தோம். ”ஜெய் பீம் காம்ரேட்”, “இன் தி நேம் ஆஃப் காட்”, ”ஃபாதர் சன் அண்ட் த கோலி வார்”, மூன்று படங்களையும் பார்த்து முடித்த பின்பு அன்று இரவு என் பையனை அழைத்து நான் சொன்னது, “நீங்கள் யாருக்காவது வாழ்க்கையில் நன்றியுடைவர்களாக இருப்பீர்களேயானால், முதலில் தந்தை பெரியாருக்கு நன்றியுடையவராக இருங்கள், அடுத்ததாக அம்பேத்கருக்கு நன்றியுடையவராக இருங்கள்.

காரணம்:

நீங்கள் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கின்ற ஏ.சி.அறை அந்த இரண்டு பேரின் உழைப்பினால் வந்தது. நாம் தங்கியிருக்கின்ற வீடு அவர்கள் இரண்டு பேரின் தியாகத்தால் வந்தது.

ஏனெனில், நான் படிக்க வேண்டுமென என் அப்பா விருப்பப்படவில்லை, நான் படிக்க வேண்டும் என்று அம்மா விரும்பவில்லை, நான் படிக்கவேண்டுமென ஊரும் உறவினரும் நினைக்கவில்லை, பதிலாக பெரியாரும், அம்பேத்கரும் என்னைப் போன்றோர் படிக்கவேண்டுமென ஆசைப்பட்டனர். அதனால்தான் நீங்கள் அந்த இருவருக்கும் நன்றியுடையவராக இருங்கள் என்று சொன்னேன்.

இந்த மூன்று படங்களுமே ஏதோவொரு விஷயத்திற்காக தொடர்ந்து பார்க்க வேண்டிய படங்களாக இருக்கின்றது. ஒவ்வொரு படங்களின் பின்புலங்களிலும் தீவிரமான அரசியல் பிரச்சனையையும் பேசுகின்றது. ஆனால் எனக்கு, இந்தப் படங்கள் நன்றிகெட்டவர்களை அடையாளப்படுத்தியது.

எழுதப்படிக்கத் தெரியாத காலத்தில் தன் மகனுக்கு ”அம்பேத்கர்”, என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது நடந்தது நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு. அன்று அம்பேத்கர் பெயர் வைத்த மனித சமூகம் இன்று, தன் குழந்தைக்கு ’அர்ஷியா’, ’மோக்‌ஷிதா’, இப்படி பெயர் வைக்கின்றார்கள். இது நன்றிகெட்டத்தனம்.

மராத்தியில் பேபி காம்ப்ளியின் சுயசரிதையை படித்தபோது அதில் கீழ்க்கண்ட வரிகள் வருகின்றது.
’இந்தப் புல்லுருவிகளையா எங்கள் வயிற்றில் சுமந்திருந்தோம்’.

’தீண்டாமை என்கிற சவுக்கால் தானே எங்களை அடித்துக்கொண்டிருக்கின்றீர்கள், இந்த தீண்டாமை என்கிற சவுக்கை உங்கள் கைகளில் கொடுத்திருப்பது இந்த கடவுள்கள் அல்லவா? இந்த மதங்களும், ஜாதிகளும் தானே!” அப்படியாக தன் குழந்தைக்கு அம்பேத்கர் என்ற பெயர் வைத்தவர்கள் வாழ்ந்த நாட்டில், அவர்களே தங்கள் குழந்தைகளுக்கு ஜாதிகளையும், மத நிறுவனங்களையும் போதித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று பேபி காம்ளி சொல்கின்றார். யார் என்ன சொன்னாலும், நம் சமூகம் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.

இன்றைக்கு எல்லோருக்கும் பொருளாதார மேம்பாடு, வசதிகளும், வாய்ப்புகளும் ஏராளமாக அமைந்துவிட்டது. ஆனாலும் சங்கடமான விஷயம். இவர்களெல்லாம் எவ்வித பாகுபாடுமின்றி தெருவில் நடக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவருடைய சிலை இன்று கம்பி வேலிகளுக்குள் தமிழ்நாட்டிலும் இருக்கின்றது. கம்பி வேலிகளுக்குள் யாருடைய சிலை இருக்கிறதென்று உங்களுக்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை, அம்பேத்கரின் சிலை தான் அது. அச்சிலையைப் பார்த்துக்கொண்டு போகிற யாருக்கும் எந்த மன உறுத்தலும் ஏற்படுவதில்லை. இது பெரிய ஆச்சரியம்தான். அந்த ஆச்சரியத்தைத்தான் இந்த “ஜெய் பீம் காம்ரேட்”, தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே வருகின்றது.

புத்திஸ்ட்:

குஜராத் கலவரத்தை யார் நடத்தினார்கள் பிராமணர்களா? இடைநிலைச் சாதியினர் தான் அந்தக் கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள். இடைநிலைச்சாதியினரே இன்று ஆர். எஸ்.எஸ்ஸின் சக்தியாக இருக்கின்றான். பி.ஜே.பியுடைதும், பஜ்ரங்கத்தாளினது சக்தியும் அதே இடைநிலைச் சாதிதான். ஆனால் இந்தச் சாதிகள், இந்த மதம் எப்படி மனிதர்களை கட்டமைத்துக் கொண்டேயிருக்கின்றது என்பதை ”ஜெய் பீம் காம்ரேட்” காட்சிப்படுத்தியிருக்கின்றது. இத்தனை விஷயங்களையும் உள்ளடக்கியிருப்பதால்தான், இந்தப் படம் மூன்று மணிநேரம் கால அளவுடன் இருக்கின்றது. அநேகமாக என் கல்யாணத்திற்கு முன்பாக, 1997ல் காதலியாகிய என் மனைவியும், நானும் சினிமாவிற்குச் செல்வோம். கல்யாணம் ஆன பின்பு சினிமாவிற்குச் செல்வதையே விட்டுவிட்டோம். 97லிலிருந்து இன்றுவரை சினிமா தியேட்டருக்கே செல்லவில்லை. ஆரம்ப கால சினிமாக்களில் ”கம்பராமாயணம்”, போன்ற படங்களெல்லாம் மூன்று மணிநேரத்திற்கு மேல் ஓடக்கூடியது. அதன் பிறகு 3 மணி நேரம் பார்த்தது இந்தப்படம் தான். அதற்காக ’கம்பராமாயணத்தையும்’, ’ஜெய் பீம் காம்ரேட்’டையும் இணைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

'ஜெய்பீம் காம்ரேட்'டில் ஒரு காட்சி வருகின்றது. சாக்கடைகளை சுத்தப்படுத்துகின்றவர்களை காட்டுகின்ற பொழுது, அவனிடம் ஓர் கேள்வி கேட்கப்படுகின்றது. ”நீ என்ன சமூகம்?” என்பது அந்தக் கேள்வி. அதற்கு அவன் ”புத்திஸ்ட்”, என்று சொல்கின்றான். அவன் சொல்கின்ற வேகத்திலேயே என் உடம்பில் ஒரு துணிச்சல் சக்தி உருவாகிறது. சில பிள்ளைகள் இப்போதும் பெருமையாக சொல்கின்றன, ”நான் ஒரு புத்திஸ்ட்”, என்று. பின்னர் கேமரா பயணிக்கின்ற ஒவ்வொரு வீடுகளிலும் அம்பேத்கரின் படங்கள் மாட்டப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அம்பேத்கரின் பெயரால், அல்லது அம்பேத்கரின் உழைப்பால் பலன் பெற்றவர்களின் வீட்டிற்குச் சென்றால், அவர்களின் சுவற்றில் சினிமா நடிகர் அல்லது சினிமா நடிகையரின் படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. தான் நன்றிகெட்டவன் என்பதை நினைவுபடுத்துவது இந்தப்படங்கள்தான்.
தான் யார்? தனக்கு இந்த வாழ்வு எப்படி வந்தது?, யாரால் வந்தது?, என்பதைத் தன் குழந்தைகளுக்குக் கூடவா சொல்லத்தெரியாது?, எல்லோரும் ஏதேனும் ஒரு வேஷத்துடன் திரிகின்றார்கள். எல்லோரும் கவர்மெண்ட் பிராமணனாக நடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

என்னிடம் ஒரு பையன் மேல்படிப்பு விஷயமாக பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவனிடத்தில் ”நீ என்ன சாதி”, என்று கேட்டேன். “கிறிஸ்டின்”, என்று சொன்னான். “சரி என்ன மதம்”, என்று அடுத்த கேள்வி கேட்டேன். அதற்கும் ”கிறிஸ்டின்”, என்று சொல்கின்றான். எம்.பி.பி.எஸ் படிக்கவேண்டுமென வருபவனுக்கு சாதிக்கும் மதத்திற்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா? ஒருவன் தன் சாதியைச் சொல்வதில் என்ன பிரச்சனை. உனக்கு எஸ்.சி (SC) என்பதால் கிடைக்கின்ற சலுகைகள் வேண்டும், அதற்கான இடம் வேண்டும் . ஆனால் நீ யாரிடமும் உன் சாதியைச் சொல்ல மாட்டாய். என்ன வேடிக்கை?. இங்கு பிராமணர்களைக் காட்டிலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறவர்கள் இந்த இடைநிலைச்சாதியும் , கிறிஸ்தவ மனிதர்களுமாக இருக்கின்றார்கள். இத்தனை விஷயங்களும் ஆனந்த் படவர்தன் படங்களைப் பார்க்கின்ற பொழுது ஞாபகத்தில் வருகின்றது.

எனக்கு ஒரு ஆச்சரியமும் இருக்கின்றது. மோடி இந்தியாவின் பிரதமராகயிருக்கின்ற பொழுது சென்னையில் ஆனந்த் பட்வர்தனுக்கு பாராட்டுவிழா.

ஆனந்த் பட்வர்தன் இந்தியாவின் கடவுள்களுக்கு எதிரானவராக இருக்கின்றார், மதத்திற்கு எதிரானவராகயிருக்கின்றார், கலாட்டாவிற்குப் பெயர் பெற்ற சிவசேனாவிற்கு எதிராளியாக இருக்கின்றார். அவருக்கு இங்கு பாராட்டுவிழா.

கடவுள்கள் என்பவர்கள் கதையின் கதாபாத்திரங்கள்:

எல்லோரும் பயன்படுத்துகின்ற மின்சாரத்தைக் கண்டுபிடித்தவனை தெரிகின்ற மனிதருக்கும், இரயில்வண்டிகளைக் கண்டுபிடித்தவனைத் தெரிந்து வைத்திருக்கின்ற மனிதர்களுக்கெல்லாம் கடவுளை யார்தான் கண்டுபிடித்தார்கள் என்பது தெரியவில்லை. உண்மை என்னவெனில் ”கற்பனையைச் சொல்பவனை உலகம் எப்போதும் அங்கீகரித்திருக்கிறது, உண்மையைச் சொல்பவனை சமூகம் புறக்கணித்திருக்கின்றது”.

நம்முடைய எல்லா மதங்களும் கற்பனையை உருவாக்கி வைத்திருப்பவைகள்தான். அடிப்படையைச் சொல்லப்போனால் ஒரு எழுத்தாளர் எழுதிய கதைதான் ”ராமாயணமும்”, ”மகாபாரதமும்”. நான் ”கோவேறு கழுதைகள்”, என்று கதை எழுதியிருக்கின்றேன். அதுவும் ஒரு கதை தானே, அந்தக் கதையின் கதைமாந்தர்களைப் போன்றுதானே, ’ராமாயணம்’ மற்றும் ’மகாபாரதத்தின்’, கதை மாந்தர்களும். ஆனால், அவர்களை மட்டும் கடவுளாக கொண்டாடுகிறார்கள். என் கதையின் கதை மாந்தர்களை யாரும் கொண்டாடவில்லையே!. இதற்குக் காரணம், ஒரு இடத்தில் நீங்கள் சாப்பிட அமர்கின்றீர்கள் அங்கு சாப்பாடு பரிமாறுகிறவர் நம்மளைப் போன்ற சாமானியனாக இருந்தால் அவரை ”யோவ்”, என்று அழைக்கின்ற இந்தச் சமூகமே, அவர் ஐயர் ஆக இருந்தால் அவரைச் சாமி என்று அழைக்கின்றது. இதுதான் வித்தியாசம்.

நான் தி.மு.வைச் சார்ந்தவன். ஆனால், உண்மையில் கலைஞர் பா.ஜா.கவுடன் கூட்டணி வைத்த அன்று நான் சாப்பிடவில்லை. ஆனால் மாறன் ”இது பி.ஜே.பிக்கான ஆதரவு இல்லை, வாஜ்பாய்க்கான ஆதரவு”, என்று சொன்ன அன்றைக்கு உண்மையிலேயே வெட்கப்பட்டேன். அதுபோலத்தான், ஆர்.பி.ஐ எப்படி இந்த பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்தது என்பதுடன் தான் ”ஜெய்பீம் காம்ரேட்” முடிகிறது. ஒரு ஐம்பதாண்டுகளுக்குள்ளாகவே கொள்கைகளைவிட வேகமாக, நன்றிகளை மறந்தவர்களாக மாறியிருக்கின்றோம். யாருக்கு எதிராக ’சிவசேனா’ செயல்படுகிறதோ, யாருக்கு எதிராக ’பி.ஜே.பி’, செயல்படுகிறதோ, யாருக்கு எதிராக ’பஜ்ரங்க்தாள்’, செயல்படுகிறதோ அவர்களுடனேயே எப்படி கூட்டணி வைத்துக்கொள்ள முடியும் என்பது தெரியவில்லை. குறிப்பாக இதையெல்லாம் நான் சொல்லவில்லை, ஆனந்த் பட்வர்தன் அவர் படத்தில் சொல்லியிருக்கின்றார்.
இந்தப் படத்தில் கலையிலக்கிய குழு ஒன்று (கே.கே.எம்) பல்வேறு இடங்களில் அம்பேத்கரைப்பற்றியும், அவரின் கொள்கைகளைப் பற்றியும் பாடிச் செல்கின்றது. அதையும் ஆனந்த் பட்வர்தன் காட்சிப்படுத்தியிருக்கின்றார். ராமர் பிறந்த இடத்தை நேரில் பார்த்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களெல்லாம், நெற்றியில் குங்குமத்தோடு ஒரு படையாக புறப்பட்டுச் செல்கின்றனர். இன்னொரு காட்சியில், ’எல்.கே. அத்வானி’, ரத யாத்திரை போகிறார். இந்தப் படத்தை சமூக அக்கறையில்லாத ஒரு பொதுமனிதனிடம் நீங்கள் கொடுத்தீர்களேயானால், அவன் சொல்கின்ற வார்த்தைகள் இவ்விதமாகத்தான் அமையும், ’ஆனந்த் பட்வர்தன்’, ஒரு மத விரோதி.

ஆனால், ஆனந்த்பட்வர்தனின் உடல் முழுக்கவும் அரசியல் பாயப்பட்ட உடலாக இருக்கின்றது. அவரின் சிந்தனை முழுவதும் அரசியல் மையப்பட்ட சிந்தனையாக இருக்கின்றது. இன்னும் சொல்வதானால் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கடைநிலையில் வாழக்கூடிய இழிவுநிலை மனிதர்களின் மீது பெரும் கருணை கொண்ட மனமாக இருக்கின்றது. இந்தப் பெரும் கருணை மட்டும் இல்லையானால் இப்படியான ஒரு படத்தை இந்தியாவில் எடுக்கமுடியாது.

நம்முடையது என்று சொல்லிக்கொள்கின்ற இந்தியாவானது, சாதியால் உருவாக்கப்பட்ட இந்தியா, மதத்தால் கட்டமைக்கப்பட்ட இந்தியா. சாதி வெறிகளாலும், மத வெறிகளாலும் அந்த நெருப்பு எப்போதும் அணையாமல் தூண்டிவிட்டுக்கொண்டேயிருக்கின்ற நாட்டில் இப்படியான ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை. மூன்று படங்களை பார்த்த அளவில், மூன்று படங்களிலுமே ஓயாமல் சமூகத்திற்கு, சமூக சீரழிவை உணர்த்தக்கூடிய கருத்துகள் இருக்கின்றது.

இவர் உச்சநீதிமன்றத்திற்கு சென்றாரேயானால், பட்வர்தனுக்கு எளிதாக சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர் என்று தீர்ப்பு கூறிவிடுவார்கள். அவர் பிராமணராக இருந்தால் ’இனத்துரோகி’, என்ற பட்டமும் கொடுக்கப்படும். விளையாட்டாகச் சொல்லவில்லை, இவர் எடுக்கின்ற படமும், இவர் தேர்ந்தெடுக்கின்ற பேட்டிகளும் அப்படித்தான் இருக்கின்றது.

’ஆனந்த் பட்வர்தன்’, படம் எடுக்கின்ற பொழுது, இவரை படம் எடுக்க விடாமல் தடுக்கக் கூடிய மக்களின் ஒத்துழையாமையும் படத்திலேயே காட்டப்படுகிறது. பாபர் மசூதி இடிப்புக்கு உண்டான பெரும்பாலான காட்சிகளும், சாட்சிகளும் இந்தப் படத்தில் வருகின்றது.

ஏன் இன்னும் பி.ஜே.பி தமிழ்நாட்டிற்குள் வரவில்லையானால், இங்கு ’பெரியார்’, என்ற கருப்பு சட்டைக்காரர் இருந்ததன் காரணமாகத்தான். அதனால்தான் ஒரேயொரு தொகுதியுடன் பி.ஜே.பி தமிழ்நாட்டில் இருக்கின்றது. ’பெரியார்’, மட்டும் இல்லையானால் பி.ஜே.பி என்றைக்கோ தமிழ்நாட்டை காவி மயமாக மாற்றியிருக்கும்.

எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது, வட இந்தியாவில் தென்படுகின்ற மக்களின் நெற்றியில் நீட்டமாக பொட்டு வைத்திருக்கின்றார்கள். எல்லோரும் காவி உடையில்தான் இருக்கின்றார்கள். உண்மையிலேயே கடவுள் பக்தி இந்த அளவிற்கு பைத்தியமாக இருக்குமா? என்று கேட்கிறேன். இந்த மதங்கள் பேசுகின்ற புரட்சியும், என்.ஜி.ஓ.க்கள் பேசுகின்ற புரட்சியும் ஒன்றே என்பது என் அபிப்ராயம். ஏனெனில் என்.ஜி.ஓக்களும், மதங்களும் ஒருபோதும் உண்மையான விடுதலையை விரும்புவதில்லை.

இந்தியாவில் காணப்படும் அத்தியாவசிய பிரச்சனை மதம். அதுதானே சாதியைக் காப்பாற்றி வைத்திருக்கின்றது. அந்த மதத்தில் உண்மையிலேயே ஒதுக்கப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்ற பிரிவினைகளுடன் இருக்கமுடியுமா?. இதுவே கேள்வி. இதையேத்தான் ஆனந்த் பட்வர்தனும் அவர் படத்தில் காட்சிகளின் மூலம் கேட்கிறார். இந்த மதம் தானே உனக்கான சாதியை இழிவு படுத்துகிறது, இந்த மதம் தானே உன்னை தெருவில் நடக்க அனுமதிப்பதில்லை. இந்த மதம் தானே உன்னை, ’சக்கிலியன்’ என்றும் ’பறையன்’ என்றும் ’தோட்டி’ என்றும் ’தொம்பன்’ என்றும் சொல்லியிருக்கின்றது. நீ எப்படி இதைக் கொண்டாடமுடியும்?, நிச்சயமாக முடியாது.

ஆனால், கொண்டாடுகிறவர்கள் யாரென்றால் தோட்டிக்கு ஒரு ரிஸர்வேஷன் கொடு, என்று ரிஸர்வேஷன் கேட்டு வாங்கி தன் நிலையை உயர்த்திக்கொண்டவர்கள்தான், இந்த மேட்டுக்குடிகளை விட அதிகமாக வேஷம் போட்டு ஆடுகின்றார்கள். இந்த வேதனைதான் இந்தப் படத்தின் வாயிலாக நான் கண்டது.

ஒரு சமூகத்தில் எதற்கெடுத்தாலும் ’ராமர்’, ’ராமர்’ என்று கூப்பாடு போடுகின்றனர். உண்மையிலேயே ராமரால் ஏதேனும் செய்ய முடியுமா? என்றால் கலவரத்தைத்தான் உண்டாக்கியிருக்கின்றார். ஒரு மனிதர் இன்னொரு மனிதனுடன் சேர்ந்து இசைவாக வாழ முடியாத நிலையை இந்த ராமர் உருவாக்கியிருக்கின்றார். இந்து மதம் உருவாக்கியிருக்கின்றது. உண்மையிலேயே இந்திய இறையாண்மைக்கு எதிரானதென்றால் அது இந்துமதம் தான்.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி:

ஒடுக்கப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இந்த படங்களை பார்க்கின்றார்களா என்றால், அது இல்லை. உண்மையிலேயே ஆனந்த் பட்வர்தன் இந்தியா முழுவதிலும் உள்ள தலித் மக்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு தனி மனிதனாக செய்திருக்கிறார்.

தலித் மக்களை ஆதாரமாய்க்கொண்ட பெரிய இயக்கங்களெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கின்றது. தெருவெங்கும் பார்த்தால் அவர்களின் கட்- அவுட் கள் தான் இருக்கின்றன. ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் இணையான அதிக அளவிலான விளம்பரங்களைக் கொண்டுள்ளது தலித் இயக்கங்களின் விளம்பரங்கள்தான். அதை நான் குற்றமாகச் சொல்லவில்லை. ”நீ எதை உன் இனத்திற்கு சொல்லித்தரவேண்டுமோ, நீ எந்த வரலாற்றை உன் இனத்திற்காக ஆவணப்படுத்த வேண்டுமோ, அதை நீ செய்யவில்லை. அதை வேறொரு நபர் செய்திருக்கின்றார். அவர்தான் ஆனந்த் பட்வர்தன்”. நீங்கள் தெரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு நன்றிக்கடனையாவது உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தாருங்கள். சுய கெளரவமுள்ள, அறிவுடைய மனிதனாக இருப்பதற்கு இந்த மூட நம்பிக்கைகளை, சமூக ஒருங்கிணைவிற்கு எதிராக இருக்கக்கூடிய மதத்தினை , ஒருங்கிணைவை குழைக்கக்கூடிய தெய்வங்களை புறக்கணியுங்கள். புறக்கணிப்பதன் வாயிலாகத்தான் நீ ஒரு மனிதனாக மாற முடியும். இதையேத்தான் அம்பேத்கரும், பெரியாரும் பல வழிகளில் சொன்னார்கள்.

இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், நீ கோயிலுக்கு உள்ளே போகவேண்டுமென்று பெரியாரும், அம்பேத்கரும் சண்டை போட்டனர். நீ தெருவில் சரிசமமாக நடந்து போக வேண்டும் என்பதற்காக பெரியாரும், அம்பேத்கரும் சண்டை போட்டனர். நீ நல்ல சட்டை போடவேண்டும், செருப்பு போடவேண்டும் என்று அவர்கள் இருவரும் சண்டை போட்டனர். இப்பொழுது நீ சட்டை போட்டு, செருப்பு மிதித்து, கல்வியும் கற்று, கோயிலுக்கும் போய் வருகின்றாய், நல்ல வேலையும், சம்பாத்யமும் உள்ளது, ஆனால் உனக்காக பாடுபட்ட அவர்கள் இருவரையும் கொண்டுபோய் கம்பி வேலிக்குள் அடைத்துவிட்டாய்.

இது உண்மை. இது உண்மையிலேயே படித்த சமூகமா?, நாமெல்லாம் படித்தவர்கள் தானா? படித்திருந்தால் அது தெரியும். கடவுள் என்பது கதை, அது ஒரு கட்டுக்கதை. உண்மையிலேயே கடவுள் என்பது மனிதன் உருவாக்கிய கட்டுக்கதை. அதை ஏன் முன்னெடுங்காலத்தில் உருவாக்கி வைத்திருந்தார்கள் என்றால்., சமூகத்தில் ஒரு பயம் உண்டாகி , குற்றங்கள் நிகழாவண்ணம் தடுக்க இம்மாதிரியான கற்பனைகள் தேவைப்பட்டது, 21ஆம் நூற்றாண்டில் மேற்கத்தியர்கள் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பிய பிறகும், இன்னமும் ராமர் பிறந்த இடத்தையே தோண்டிக்கொண்டிருந்தால், நாம் எப்போது செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது.

மேலும் இந்திய விஞ்ஞானிகளின் செயல்களிலும் எனக்கு வியப்பாகவே உள்ளது. பெரும் கோடிகளைச் செலவு செய்து ஒரு ராக்கெட் கண்டுபிடிக்கும் அதே விஞ்ஞானி, புறப்படுமுன் ஒரு ஐயரைக் கூட்டிவந்து ராக்கெட்டிற்கு பூஜை செய்கிறான். தேங்காய் பூ வைக்கின்றான். இது ஒரு வெட்கங்கெட்ட நாடு. கடவுள் வெறும் கல், மரம், மண், அது மனிதன் செய்தது. இதெல்லாம் அறிவியல் விஞ்ஞானிகளுக்கும் தெரியும், அவர்களே இப்படி இருக்கும்போது மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்.?

தமிழ் ஆசிரியர்கள் போன்று தமிழ் மொழிக்கு துரோகம் செய்தவர்கள் எவரையும் நீங்கள் பார்க்க முடியாது. எங்கள் தெருவிலும் ஒரு தமிழ் வாத்தியார் இருக்கின்றார். அவர் பூஜை செய்ய வைத்திருந்த பிள்ளையார் சிலையை யாரும் திருடாமலிருக்கும் வண்ணம் ஒரு கூண்டுசெய்து அதற்குள் பிள்ளையாரை வைத்து, அதற்கு காலையில் எழுந்ததும் பூஜை செய்வார். அவருக்கு கல்லூரியில் சம்பளம் ஒரு லட்சத்து பதினைந்தாயிரம். ஒரு ஆசானாக, அவர் மாணவர்களுக்கு என்ன கற்றுக்கொடுக்கப்போகிறார்?. நெற்றி நிறைய திருநீறு வைத்துக்கொண்டு அவர் அறிவியல் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா. ? கைகளில் கயிறுகளைக் கட்டிக்கொண்டு நீ பொய் சொல்வாயா,? உண்மையைச் சொல்லிக்கொடுப்பாயா? உண்மையைச் சொல்லிக்கொடுக்கின்ற பொறுப்பில் இருக்கின்ற ஆசிரியர்கள் இவ்வளவு மூட நம்பிக்கைகளை வைத்திருக்கின்ற பொழுது அவரிடத்தில் படிக்கின்ற மாணவ சமூகம் எப்படி அறிவுள்ளவர்களாகயிருப்பார்கள். இவையெல்லாவற்றையும் எனக்கு இந்தப் படம் திருப்பித்திருப்பி சொல்லிக்கொண்டேயிருக்கின்றது.

ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படங்களைப் பார்க்கின்ற பொழுது உண்டான கோபங்களை உங்களிடத்தில் பகிர்ந்துகொள்கிறேன். முதலாவது, ஆனந்த் பட்வர்தன் சிவசேனாவிற்கு மிகவும் சொந்தக்காரர், பி.ஜே.பிக்கு மிகவும் வேண்டியவர், குறிப்பாக எல்.கே. அத்வானியை வளைத்து வளைத்து காமிராவிற்குள் கொண்டுவந்திருக்கின்றார். கடைசியாக ’மோடி’ , ’அம்பேத்கர்’ சிலைக்கு மாலை அணிவிப்பதையும் எடுத்திருக்கின்றார். படம் அதனோடு முடிகின்றது. என்ன விஷயமெனில் நாம் இப்படித்தான் மாறி வந்திருக்கின்றோம். பரிமாண வளர்ச்சி என்பது முன்னோக்கி வளர்ச்சி பெறுவார்கள். ஆனால், நம்முடைய பரிணாம வளர்ச்சியானது பி.ஜே.பி.யினுள் ஐக்கியமாகி உள்ளது.
எண்பது கோடி மக்களின் கொள்கைகளுக்கு எதிரானவர் பட்வர்தன்:

வட இந்திய சினிமா நடிகர்கள் எல்லோருமே அல்லது பெரும்பான்மையானோர் பி.ஜே.பிக்கு ஆதரவாளர்களாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் நாம் அவர்களை இங்கு கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்.

இதில் வித்தியாசம் என்னவென்றால் யார் நம்மை தொடர்ந்து அவமானப்படுத்துகின்றார்களோ, அவர்களிடமே “நீங்க என்னை ரெம்ப அவமானப்படுத்துறீங்க, ரெம்ப நன்றி சார், என்னை பறையன்னு சொல்லிட்டீங்க, அதுவே எனக்கு பெரிய அங்கீகாரங்க”, என்று அவர்களிடமே வலிந்து நிற்கின்றார்கள், இதையே ஜெய்பீம் காம்ரேட்டும் சொல்கின்றது. யார் உங்களை அவமானப்படுத்தினார்களோ, யார் உங்களை புறந்தள்ளினார்களோ, எந்த சாமி உன்னை தெருவினுள் வரக்கூடாது என்று சொல்லியதோ, எந்த சாமி உன்னை கோவிலுக்குள் வரக்கூடாது என்று தடுத்ததோ , நீ தொட்டால் தீட்டு என்று எந்தச் சாமி சொல்லியதோ, அந்தச் சாமிக்காக நீ நடுத்தெருவில் கோஷம் போட்டுத் திரிகின்றாய் . குஜராத் கலவரத்தை உண்டாக்குகிறாய், பாபர் மசூதியை இடிக்கப் போகிறாய், ராமர் கோயிலை கட்டப்போகிறேன் என்று ஓடுகிறாய், உன் மனைவி சாப்பாட்டிற்கு வழியில்லாமல் நிற்பதைப் பற்றி கவலையில்லை. ராமர் கோயில் கட்டுவதே முக்கியம். இப்படி இடைநிலைச்சாதியினர்களாக இருப்பவர்கள், தன்னை இழிவுபடுத்தியவர்கள், என்பதை அறியாமலேயே அவர்களிடமே ஐக்கியமாவது உண்மையிலேயே விநோதம், இது 8 ஆம் நூற்றாண்டிலேயோ, 9ஆம் நூற்றாண்டிலேயோ நடந்திருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டேன், ஆனால் இது 21ஆம் நூற்றாண்டில் நடந்திருக்கின்றது.
நாம் அமெரிக்காவிற்கு மிஞ்சிய உடை உடுத்தியிருக்கின்றோம், அமெரிக்காவை மிஞ்சிய ஆங்கிலம் பேசுகின்றோம், நம்முடைய கனவு முழுமையாக அமெரிக்கா செல்வதிலேயே இருக்கின்றது, ஆனால் நம்முடைய செயல்பாடுகள் மட்டும் இன்னமும் சாமிகளைச் சுற்றியே நிற்கின்றது. இந்தப் படத்தைப் பார்க்கின்றவன் சொரணையில்லா மனிதனாக இருந்தால், படம் முடிந்தபின் உண்மையிலேயே ஒரு சொரணையுள்ள மனிதனாக மாறுவான். அப்படியும் சொரணை வரவில்லையென்றால் ஒன்றுமே பண்ணமுடியாது.

’ஜெய் பீம் காம்ரேட்’, களைப்பு ஏதும் இல்லாமலேயே 3 மணி நேரமும் பார்க்கக் கூடியதுதான். மிகவும் ரசித்துப் பார்த்தேன் என்று சொல்லமுடியாது, ஒருவன் அழுவதை எப்படி ரசிக்க முடியும். ஒருவன் அவமானப்படுவதை எப்படி ரசிக்க முடியும். ஒருவன் சாக்கடை அள்ளுவதை எப்படி ரசிக்க முடியும். இது ரசிப்புக்குரியது அல்ல, கண்ணீருக்குரியது, கவலைக்குரியது, வேதனைக்குரியது, நீங்கள் யாரென்று அடையாளப்படுத்துவது இந்தப்படம்., நீ என்ன செய்துகொண்டிருக்கின்றாய் என்பதை அடையாளப்படுத்துகின்றது இந்தப்படம். நீ அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லித்தருகிறது ஆனந்த் பட்வர்தனின் படங்கள்.
’ஜெய் ராம்’, என்று யார் கத்திக்கொண்டு ராமர் கோயில் கட்ட புறப்படுகின்றார்கள். எனக்குத் தெரிந்து எந்த பிராமணரும் ராமர் கோயில் கட்ட தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு போனதாக தகவல் இல்லை. எல்லோரும் இங்கு பத்திரமாக இருக்கின்றார்கள். ஆனால் காவி உடையுடன் எங்கள் ஊரிலிருந்து ”ஜெய் ராம், ஜெய் ராம்”, என்று கத்திக்கொண்டு ஒருவன் செல்கின்றான். இப்படி ஓடுகின்ற பயல்களுக்கு தன் வீடு எப்படி கட்டியிருக்கிறது என்பது தெரியாது. ஆனால், அவனுக்கு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும்.

ஒரு மனிதனுக்கு இவ்வளவு துணிச்சலா?, கிட்டத்தட்ட 130 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள். 80 கோடி பேராவது இந்த ’ஜெய் ராம்’, குழுவில் இருப்பவர்கள். அந்த 80 கோடி பேருக்கும் எதிராக ஒருவர் செயல்பட முடியுமா? ஆனால் ’ஆனந்த் பட்வர்தன்’, செயல்பட்டிருக்கின்றார். இதுதான் உண்மை. யாரோ உழைத்த பலனை நான் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன். என்னைப்போன்றவர்கள் 20 கோடி பேர் இருப்பார்கள். 20 கோடி பேர்களில் ஒருவருக்கு கூட வராத யோசனை ஆனந்த் பட்வர்தனுக்கு உள்ளது.

ஆனந்த் பட்வர்தனின், ஜெய்பீம் காம்ரேட்டை திரையிடுவதற்காக சில கல்லூரி பேராசிரியர்களிடமும், நண்பர்களிடம் கூட பேசினேன். இந்தமாதிரி கருத்துக்களுடன் ஒருவர் படம் எடுத்திருக்கின்றார். தயவு செய்து அந்தப்படத்தை நீங்கள் கட்டாயம் பார்த்தாக வேண்டும். இதைத் தனியாகப் பார்க்காதீர்கள், ஒரு அறையில் 10, 20 பேராவது அமர்ந்து பார்த்தால் தான் இது பலனாக இருக்கும் என்றும் கூறினேன். நானே எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றேன். வந்து படம் பார்த்துவிட்டுச் செல்லுங்கள், என்று சொன்னால், “படம் எவ்வளவு நேரம்” என்று பதில் வருகின்றது. 3 மணிநேரம் என்று சொன்னவுடன், ”அடேயப்பா இது என்ன ராமயாணமா ?”, என்று நக்கலடிக்கின்றனர். அட நன்றி கெட்ட சமூகமே!

நான் சொன்னேன், “வாழ்க்கையில என்றைக்காவது ஒரு நல்ல விஷயத்தைப் பார்க்கணும், அதுக்காகத்தான் உனக்கு கண் இருக்கு, கண் எதுக்கு ராமரைப் பார்க்க மட்டுமா?, வாய் எதற்கு ’ஜெய் ராம்’ னு கோஷம் போடுவதற்கு மட்டுமா? கொஞ்சம் தயவு செய்து இந்தமாதிரியான படங்களைப் பாருங்கள், என்று சொல்லிப்பார்த்தாலும் வரமாட்டேன் என்று நிற்பவர்களை நன்றி கெட்ட சமூகம் என்று சொல்வதே சரி.

எதிர்க்கவேண்டியதை ஏற்றுக்கொண்ட சமூகம்:

உண்மையிலேயே ’ஜெய் பீம் காம்ரேட்’, படத்தில் வரக்கூடிய தலித்கள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கின்றார்கள். அம்பேத்கர் கையெழுத்திட்ட பத்திரிக்கை மடலை பத்திரமாய் வைத்திருக்கின்ற பெண்கள் வசிக்கின்றார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு தமிழ்நாட்டையும் பார்க்கின்றபொழுது, அம்பேத்கரின் தியாகத்தை மறந்துவிட்ட சமூகமாகத்தான் எனக்குத்தெரிகிறது.

எதனை எதிர்க்க வேண்டுமோ, அதனை ஏற்றுக்கொண்ட சமூகமாகத்தான் ஆனந்த் பட்வர்தனின் ’ஜெய்பீம் காம்ரேட்’, ’ஃபாதர் சன் அண்ட் கோலிவார்’, மற்றும் ’இன் தி நேம் ஆஃப் காட்’, படங்கள் எனக்கு காட்டுவதாக உணர்ந்து இங்கு பேசியிருக்கின்றேன்.

--------------------------------------------------------------------------------------------

புத்ததேப் தாஸ்குப்தா

இங்கிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சென்னைக்கு சினிமா குறித்த ஒரு நிகழ்வுக்கு நான் செல்ல வேண்டும் என எங்களின் பொதுவான நண்பர் மூலம் அருண் சொன்ன போது, நான் உடனே மறுத்துவிட்டேன். அருண், மீண்டும் என்னை அழைத்து, ஆனந்த் பட்வர்தனுக்கு விருதளிக்கும் விழா என்று கூறியவுடன், நிச்சயமாக நான் வருகிறேன் என உடனே ஒப்புக்கொண்டேன்.
எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் வெகு காலமாக தெரியும். அவரது முதல் படம் என நினைக்கிறேன், எனக்கும் அது தான் முதல் படம், நாங்கள் இருவரும் பெர்லினில் ஒன்றாக இருந்தோம். 1979 அல்லது 1980 என நினைக்கிறேன், சரியாக நினைவில் இல்லை. அன்று முதல் ஆனந்த பட்வர்தனை தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறேன். ஆனந்த், சமரசம் செய்துக்கொள்ளாதவர், நேர்மையானவர். சினிமாவிற்கு நேர்மையாகவும், ஆவணப்படங்களின் மேல் அவருக்குள்ள காதலுக்கு நேர்மையாகவும் அவர் இருக்கிறார்.

நேற்றும் அவரது படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன், மிகவும் அற்புதமானது. நிச்சயம் உங்களை அவரது படங்கள் சிந்திக்க வைக்கும், ஆனந்தும் அதையே செய்ய விரும்புகிறார். இவரது படங்களைப் பார்த்தபின்பு, தெரிந்தோ அல்லது தெரியாமலோ நம்மில் மாற்றம் நிகழ்கிறது. தொடர்ந்து ஆனந்தின் படங்களைப் பார்த்து வந்தால், சமூகத்தின் மீதான நமது அணுகுமுறை முற்றிலுமாக மாறிவிடும். அதுவே நடந்துக்கொண்டும் இருக்கின்றது. ஆனந்த் பட்வர்தன் மட்டுமல்ல அவரை போல் என்னுடைய நண்பர்கள், ஆனந்துடைய நண்பர்கள் என வேறு சிலரும் இருக்கிறார்கள்.

இது போன்ற திரைப்படங்களில், ஆனந்த் தொடர்ந்து உறுதியாக முன்னேறி சென்றுக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனந்த் ஒரு இயக்கத்தை ஆரம்பத்துள்ளார் என எனது நண்பர் சரியாக சொன்னார். நேர்மையாகவும் எந்தவித சமரசமின்றி படமெடுத்துள்ள ஆனந்த் பட்வர்தன் அல்லது அவர் போன்ற சிறந்த திரைக் கலைஞர்களை, இந்த நாட்டு இளம் திரைப்பட கலைஞர்களும், இளம் ஆவணப்பட கலைஞர்களும் ஏன் பின்பற்றாமல் இருக்கிறார்கள். பம்பாய் செல்லும் போதும், சென்னை செல்லும் போதும் இதை நான் காண முடிகிறது. எனக்கு தெரியாமல் ஓரிருவர் இருக்கலாம், நான் அவர்கள் படங்களை பார்க்கவில்லை. ஆனால் அது போன்றவர்கள் அதிகமானவர்கள் இல்லை.

எனது நண்பர் ஆனந்த் பட்வர்தனுக்கு விருதளிக்க, கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

நல்ல சினிமா குறித்து ஏதேனும் பேசுமாறு அருண் என்னிடம் கூறினார். எனக்கு அது என்னவென்று தெரியாது, உண்மையாகவே நல்ல சினிமா என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. நேர்மையாக இருப்பது என்றே நான் நினைக்கிறேன், தனக்கு நேர்மையாக இருப்பது, தனது ஊடகத்துக்கு நேர்மையாக இருப்பது, அதுவே சரியானதாகும். சினிமா குறித்து கனவு காணும் ஒருவருக்கு இது நடக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன், நான் திரைப்பட எடுக்க துவங்கிய போது, அரவிந்தன், அடூர், கேத்தன் மேத்தா, ஷ்யாம், கிரிஷ் காசரவள்ளி போன்றவர்கள் இருந்தார்கள். ஏதேனும் செய்ய வேண்டுமென்பதே எங்கள் கனவு. சினிமா மீது காதல் கொண்டிருந்தோம், மிக ஆழந்த காதல் அது.

இளம் திரைக்கலைஞர்களை பார்க்கும் போது, முக்கியமாக வங்காள இளம் கலைஞர்களைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை, அவர்கள் புகழ் பெற வேண்டுமென விரும்புகிறார்கள், அவர்களது புகைப்படங்கள் மூன்றாவது பக்கத்தில் வர வேண்டும் என நினைக்கிறார்கள், வெளிநாடுகள் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள், பிரபலமாக வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்தளவிற்கு சினிமாவை காதலக்கிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. சினிமா மீது ஆழந்த காதலிருந்தால் மட்டுமே சினிமா வெளிப்படும். காதல் எதையும் செய்யும். நான் எனது வேலையை விட்டேன். வேலைய விட வேண்டும் என முடிவெடுத்த பின், எனது அப்பாவிடம் கூறினேன், அவர் மிகவும் வருத்தமடைந்தார், என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். என் அம்மா எப்படியோ எனது முடிவை ஏற்றுக்கொண்டார். எனது அப்பாவிடம் பணம் கேட்கமாட்டேன் என முடிவெடுத்தேன்.

எனது முதல் படத்தை எடுக்க முயற்சித்த போது, தயாரிக்க யாரும் முன்வரவில்லை. என்னிடம் கொஞ்சமே பணம் இருந்தது, எனது இரண்டு வருட சேமிப்பையும் வைத்து படம் எடுக்க துவங்கினேன். இந்த படத்திற்கு பின்பு என்னவாகும் என எப்போதும் அச்சத்துடனே இருந்தேன். என்னை தக்க வைத்துக்கொள்ள, மீண்டும் ஆசிரியர் பணிக்கு செல்ல வேண்டுமா அல்லது வேறேதெனும் வேலையை தேட வேண்டி இருக்குமோ என நினைத்தேன். நல்ல வேலை அப்படியேதும் நிகழவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை என் வகையான திரைப்படங்களை எடுத்துக்கொண்டு வாழ்க்கிறேன். நல்லதோ கெட்டதோ, நான் எதை நம்புகிறேனோ அதையே உருவாக்குகிறேன்.

வித்தியாசமாக ஒன்றை உருவாக்க, பார்வையாளர்களை சிந்திக்கவைக்க, உங்களின் ஒவ்வொரு கனவிலும் வருகின்ற அந்த படிமங்களை பின் தொடருங்கள். படிமங்களை கையாளவதில் தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலான திரைக்கலைஞர்களிடம் பிரச்சனை இருக்கிறது. படிமங்களை நாம் மாற்றுவதன் மூலம் அதன் உண்மைதன்மை இழக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனந்தின் திரைப்படங்களைப் பார்க்கும் போது, இந்த படிமங்கள் மிகவும் உண்மையானது, மிகவும் சக்திவாய்ந்தது என தெரிகிறது. எளிமையான ஒன்றே அது. மாற்றி அமைக்கப்படாத (manipulated) படிமங்களின் நன்மை அதுவே.

எனக்கு தமிழ் சினிமா குறித்து அவ்வளவாக தெரியாது. ஆனால் இந்த சினிமாவிற்கு பெரும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும், அது வங்காளத்திலோ அல்லது இந்தியாவின் வேறு பகுதியிலோ இல்லாத ஒன்று. கேரளாவிலுள்ள எனது பழைய நண்பர்களிடம் பேசும்போது, மெதுவாக படம் தயாரிப்பதை நிறுத்திக் கொள்வதாகவும், பார்வையாளர்கள் இல்லை என்றும் கூறினார்கள். அதனாலே அங்கு தயாரிப்பாளர் இல்லை, பைனானிசியர் இல்லை. தமிழ்நாட்டில் பெரும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். பார்வையாளர்களை மகிழ்ச்சி படுத்தும் திரைப்படத்தை உருவாக்குமாறு திரைக்கலைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக வளரும் திரைக்கலைஞர்கள், வித்தியாசமாக ஏதேனும் எடுக்க வேண்டும் என உண்மையாக இருப்பவர்கள், அவர்கள் முயற்சித்து தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், திரைப்பட விழாக்களுக்காக படம் எடுக்காதீர், விருது பெற வேண்டும் என்பதற்காக படம் எடுக்காதீர், சினிமா பார்வையாளர்களுக்காக படம் எடுங்கள்.

எனக்கு தெரியும், நிச்சயம் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். எது வேண்டுமானாலும் உங்கள் கருவாக இருக்கலாம், அதை எடுத்துக்கொண்டு ஆனந்த் செய்த்தை போல செய்ய வேண்டும். சிறிய மதிப்புள்ள எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு, திரைப்படமாக உருவாக்கவும். அதிக பணமில்லாமலும் ஒரு படத்தை எடுக்க முடியும். சினிமா உன்னிடமிருந்து எதிர்ப்பார்பது நேர்மை மட்டுமே.

மிகவும் நன்றி நண்பர்களே... நன்றி ஆனந்த் மற்றும் ஷஷி.

அடுத்த இதழில் தொடரும்...

தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 - காணொளி (Video)