தமிழ் ஸ்டூடியோவின் 55ஆவது குறும்பட வட்டம்

தமிழ் ஸ்டூடியோ பெரும்பாலும் இதற்கு முன் நடந்த வட்டங்களில், குறும்படங்களை அதிக அளவில் திரையிட்டுள்ளது. இன்று சற்றே வித்தியாசமாக இரண்டு ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த இரண்டு ஆவணப்படங்கள் என்னென்ன? அவை எந்தமாதிரியான களன்களைக் கொண்டவை? ஆவணப்படங்கள் குறித்து பார்வையாளர்கள் முன்வைத்த கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள், கருத்துக்களைப் பற்றியெல்லாம் இக்கட்டுரையின் போக்கிலேயே காணலாம்.

முதலில் தமிழ்ஸ்டூடியோ நிறுவனர் அருணின் வரவேற்புரைக்குப் பின், திரைப்பட ரசனை வகுப்பு தொடங்கப்பட்டது.
இம்முறை ரசனை வகுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படம், ”INJA”., இதனைப்பற்றி பேச அழைக்கப்பட்டிருந்தவர், திரு.எம்.சிவக்குமார். ’பெலோ பெலாஸ்’, எழுதிய திரை நுணுக்கங்கள் சார்ந்த புத்தகத்தை, “சினிமாக் கோட்பாடு”, எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர். மேலும் பிரசாத் பிலிம் இன்ஸ்டியூட்டில் மாணவர்களுக்கு ஆசிரியராகவும் திகழ்பவராக இருக்கின்ற காரணத்தினால், இவர் கொண்டுவந்திருக்கும் படம் ஏமாற்றமளிக்காது என உறுதியாக நம்பி அமர்ந்திருந்தோம். படமும் நம் நம்பிக்கையை வீணாக்குவதாகயில்லை. இதனை படம் பார்த்தவர்கள் தெரிந்திருக்கலாம். படம் பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Inja குறும்படம் திரையிடப்படுமுன் அதனைப்பற்றி பார்வையாளர்கள் தெரிந்துகொண்டால்தான் அவர்களின் புரிதலுக்கு இலகுவாக அமையுமென நினைந்த எம்.சிவக்குமார், கூறுகையில் “ இக்குறும்படம் white dogs பற்றியது, எனவே முதலில் குறும்படத்தை பார்க்குமுன் white dogs என்றால் என்ன? என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த white dogs இன்னமும் ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் சில வீடுகளில் வளர்க்கப்படக்கூடியவை. white dogs பெரும்பாலும் வெள்ளையர்கள் வீட்டில்தான் வளர்ப்பார்கள், அதுவும் சிறுவயதிலிருந்தே கறுப்பர்களை மட்டும் தாக்கவதற்காகவே வளர்க்கப்படுபவை. வேறுமனிதர்களுடன் பழகும்போது எந்த சலனமுமின்றி சகஜமாக விளையாடும். ஆனால் கறுப்பர்கள் வந்தால் மட்டும் அவர்கள் மீது பாய்ந்து தாக்கும் தன்மை கொண்டது. இந்தமாதிரியான நாய்களை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்பதனைப் பற்றியதானதுதான் இப்படம்.

ஆனால், பின்னர் white dog என்ற பெயரில் முழுப்படமுமே வெளிவந்துள்ளது. எனினும் அமெரிக்க அரசாங்கமே அப்படத்திற்கு தடைவிதித்ததால் பின்னர் 15ஆண்டுகள் கழித்துதான் வெளியானது. இந்த inja குறும்படத்தில் white dogsகளை பழக்கப்படுத்தும் முறைகளை சிறிதளவே கையாண்டுள்ளனர். ஆனால், இந்நாயினங்களைப் பற்றி மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், white dog என்ற பெயரில் வந்திருக்கும் முழுப்படத்தையும் பாருங்கள்.

அண்மையில் கூட நீங்கள் ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகளுண்டு. ஒரு பெண்மணி தனியாகயிருந்த நாயைப் பார்த்து அதனை எடுத்துக்கொண்டு அதன் உரிமையாளரை தேடி அலைகின்றாள். ஆனால் எவரும் இந்நாய்க்கு சொந்தம் கொண்டாடி வரவில்லை. எனவே தானே வளர்ப்பது என்று முடிவிற்கு வந்துவிடுகின்றாள். பின்னர் ஒருநாள் அந்நாயுடன் கடைத்தெருவிற்குச் சென்றபொழுது ரோட்டில் ஒரு கறுப்பினத்தவரை இந்நாய் பார்த்துவிட்டு அவரை துரத்திக் கடித்து துவம்சம் பண்ணிவிட்டிருக்கின்றது. அப்போதுதான் அப்பெண்மணிக்கு சந்தேகம் . இவ்வளவு காலமாக சாதுவாக வளர்ந்த நாய்தான் இப்போது இம்மாதிரியான செய்கைகளை செய்துள்ளது, என்பதால் ஆச்சர்யத்தோடு கால்நடை மருத்துவரை அணுகி, நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் கூறுகின்றாள். அந்த கால்நடை மருத்துவரும் ஒரு கறுப்பரே. அவரே இந்நாய் பற்றியதான உண்மையைக் கூறுகின்றார். இதுவொரு white dog கறுப்பினத்தவரை மட்டும் குறிப்பிட்டு தாக்குவதற்காகவே பயிற்சியளிக்கப்பட்டவைகள். எனும்போதுதான் அப்பெண்மணி ஒரு தெளிவிற்கு வருகின்றாள். இப்படிப்பட்ட நாய்களை ஆரம்பத்தில் எவ்விதமான பயிற்சிகள் கொடுத்து வளர்த்திருப்பார்கள் என இக்குறும்படம் புரியவைக்கிறது”

இந்த அறிமுகத்திற்குப் பின்பே, inja குறும்படம் திரையிடப்பட்டது. எம்.சிவக்குமாரின் உரைக்குப்பின்னர் இப்படம் பார்ப்பதற்கும், அவர் சொன்ன கருத்துக்கள் ஒவ்வொன்றாக இதில் ஒன்றிவருவதும் காணமுடிந்தது. நாய்களின் மனதில் ஆழப்பதிந்த விஷயங்கள் பலதலைமுறைகளாக தொடர்ந்துகொண்டிருக்கின்றன, இந்த தலைமுறை வரையிலும், என்பது ஆச்சர்யத்தக்க உண்மைதான். ஆனால், நாமும், பெரும்பாலும் இந்த white dogs மாதிரிதான். நம் பரம்பரையே பார்த்து., பழக்கப்பட்ட சினிமாக்கள் நம் மூளையிலும் ஆழமாக பதிந்து வந்திருப்பதால் நம்மால் மாற்று சினிமா குறித்து சிந்திக்க முடிவதில்லை. யதார்த்த சினிமாக்கள் வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

இப்படம் முடிந்தபின்னர் பார்வையாளர்களின் மனநிலையை தெரிந்துகொள்ளும் நோக்கிலும் இப்படம் பற்றி மேலும் சில தகவல்களை சொல்லவேண்டுமென்ற எண்ணத்திலும் மீண்டும் சிவக்குமார் பேசினார்.
எம்.சிவக்குமார்:

இது சாதாரண திரைப்பட கல்லூரி மாணவர்கள் எடுத்த படம்தான். ஆனால் அதன் நேர்த்தியை நாம் கவனிக்க வேண்டும். குறும்படங்களில் எப்பொழுதுமே எதிர்பாராத தாக்கம் நிறைந்த முடிவு வேண்டும். இந்தக் குறும்படத்தில் இவ்விஷயம் பொருந்தியுள்ளதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும் உங்களால் இதன் இறுதிக்கட்டத்தை என்னவாகயிருக்கும் என்பதனை தீர்மானிக்க முடிகின்றதா? யோசித்துப்பாருங்கள். அதாவது பார்வையாளர்களாகிய நம் முடிவிற்கே இயக்குனரானவன் இறுதிக்கட்டத்தை முடிவெசெய்யும் பொறுப்பை விட்டுவிடுகின்றான்.

படம் பார்க்க சாதாரணமாக தெரிகின்றது. ஆனால் படம் முடிந்தவுடன் திரையிடப்படுகின்ற பெயர்களைப் பார்த்தவுடன் அங்கு எத்தனை குழுக்கள் ஒன்றிணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளன. என்பதும் புரிகின்றது. உங்கள் பார்வையில்?

முன்பு சொன்னது போல, இது திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த படமானாலும், அதில் எவ்வித நேர்த்தியாளர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதனையும் பார்க்க வேண்டும். கதைக்கு அவ்வாறு தேவைப்படுகின்ற பொழுது அப்படியான சிறந்த நபர்களை கண்டடைந்து பயன்படுத்துவது தவறல்ல.

படத்தைப் பற்றி முன்பே கூறியதால் அதனைக் கேட்டு நாங்கள் படம் பார்ப்பதால் படம் எளிதாகப் புரிந்துவிடுகின்றது. இல்லையென்றால் இது எந்த நாட்டில் எடுக்கப்பட்டிருக்கின்ற படம் என்பது கூட தெரியாமல் போயிருக்கும். ஆனால் அதே சமயம் நீங்கள் குறிப்பிடுவது போல நிறவெறிக்கொள்கை படத்தில் முழுமையாக கையாளப்பட்டிருக்கின்றதா?

அதை நீங்கள் படம் பார்ப்பதிலிருந்தே அறிந்துகொள்ள இயலும் . வெள்ளைக்காரனுக்கு எல்லைகள் தெரியும். அந்த நாய் எஜமானைவிட, உதவியாளனிடம் அதிகமாக விளையாடுவதால் வெள்ளைக்காரன் கூறுகின்ற வார்த்தையைக் கவனியுங்கள். “இந்த நாய் பாடம் கற்றுகொள்ள வேண்டும்”, என்கிறான், அவன் எந்த நாயைத்தான் குறிப்பிடுகின்றானா? என்பது கூட எவருக்கும் தெளிவாகத் தெரிவதில்லை. ஒருவேளை அந்த கறுப்பின உதவியாளரைக்கூட நாய் என்று கூப்பிட்டிருக்கலாம். பின்னர் அவர்களிருவரும் வேட்டைக்குச்செல்லும்பொழுதுகூட தனித்தனியான உணவுகள் பரிமாறப்படுவதில்லை. இருவருக்குமே ஒன்றேயான உணவுதான். ஆனால் வெள்ளையர்கள், பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருக்கின்ற காரணத்தினால் கறுப்பினத்தவரால் ஆபத்து நேரிடுமோ?, என்ற பயத்தினால்தான் அவர்கள் அத்தகைய நாய்களை வளர்க்கின்றார்கள். முன்னமே சொன்னதுபோலவே வெள்ளைக்கார்ர்கள் பிறர் எல்லைகளை சரியாக அளவிட்டு வைத்திருக்கின்றார்கள். எல்லை மீறும்பொழுதுதான், பிரச்சனையே ஆரம்பமாகிறது.

ஆஸ்திரேலியாவில் நிறவெறி அதிகம் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் ஏன் இப்படம் ஆஸ்திரேலியாவிலேயே எடுக்கவில்லை.?

அது அந்தப்படம் எடுக்க கூடிய இயக்குனரது விருப்பம். அவருக்கு எது செளகரியாமாக பிரியப்படுகின்றதோ அங்கு அவரது விருப்பப்படியே படம் எடுக்கலாம். ஆனால் அபத்தமில்லாமல் எடுப்பதுதான் முக்கியம்.

இத்தகையதான எம்.சிவக்குமாருடனான உரையாடல் முடிந்தபின்பு, அடுத்த இரண்டு ஆவணப்படங்களும் திரையிடப்பட்டன. அதில் ஒன்று கீதா இளங்கோவன் இயக்கிய “மாதவிடாய்”, என்னும் ஆவணப்படம். இரண்டாவதாக “ வசந்த். கே. பாண்டியன்”, இயக்கிய “விடியாத பொழுதுகள்”. இதில் முதல் படமாக ”மாதவிடாய்”, திரையிடப்பட்ட பின்பு, இரண்டாவதாக, ”விடியாத பொழுதுகள்” திரையிடப்பட்டது.

பெண்கள் வெளிப்படையாக பேசத்தயங்குகின்ற விஷயமாகவும், ஆண்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவும், மாணவர்களால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டும் இருந்த பெண்களின் ”மாதவிடாய்”, காலத்தைய பிரச்சனையைப் பற்றி ’கீதா இளங்கோவன்’, ஆவணப்படம் எடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இதை வெறும் மேம்போக்காக மட்டும் பதிவுசெய்யாமல் உள்ளார்ந்த பிரச்சனைகள் குறித்தும் நல்லதொரு ஆவணம். அதிலும் தலைப்பிலேயே இது ”ஆண்களுக்கான பெண்களின் படம்”, என்ற வாசகத்தின் உண்மையை படம் நிறைவடைந்த பின்பு அறிந்துகொள்ளலாம். கண்டிப்பாக படம் பார்த்தவர்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்தியதோ இல்லையோ., ஆனால் சிறு சலனத்தையாவது ஏற்படுத்தியிருக்கும். அதுவே இப்படத்தின் முழு வெற்றிதான். காரணம் அரங்கில் கீதா இளங்கோவனை தவிர அனைவரும் ஆண்களே. எனவே இப்படத்தை பெண்கள் மத்தியில் திரையிட்டு அவர்களின் அனுதாப அலைகளை வாங்குவது பெரிய காரியமில்லை. எதிர் வர்க்கத்தினர் முன்னால் தனி ஆளாக பெண்களின் பிரச்சனையை முன்னிறுத்தியதோடு அதனைப் பற்றி பார்வையாளர்கள் முன்னிலையில் கருத்துப் பரிமாற்றம் செய்ததும் பாராட்டப்பட வேண்டிய செயல்தான்.

கீதா இளங்கோவன் இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே திட்டமிட்டு இப்படத்திற்காக உழைத்திருக்கின்றார். அதிலும் இப்படத்தில் நகரத்தின் சூழலைக் காட்டிலும் கிராமத்தின் சூழலும் அங்கு நிலவுகின்ற மாதவிடாய் பற்றிய அறிவிண்மையையுமே காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால் நகரத்தைக் காட்டிலும் கிராமப்புறத்தில் தான் அவர்களின் பிரச்சனைகளைக் கேட்பது முரணாக அமைந்துவிடும். அதற்காகத்தான் இயக்குனருடன் வருகின்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் பெண்களாகவே தேர்ந்தெடுத்திருக்கின்றார். இதன் மூலமாக அப்பெண்களுடன் சக தோழமையை பாராட்டி அவர்களின் அவலங்களை பதிவுசெய்ய முடியும்.

அதிலும் இவ்வாவணப்படத்தில் இடம்பெறுகின்ற ஒரு கிராமத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனியாக தங்குவதற்காக ஒதுக்குப்புறமாக வீடு ஒன்றை கட்டி வைத்திருக்கின்றார்கள் அவ்வூர்மக்கள். இதுவும் காலங்காலமாக நடந்து வருகின்றது. அந்த அறையில் தங்குவதால் நேரிடுகின்ற பிரச்சனைகளை பெண்கள் கூறும்பொழுது, நாட்டின் முதுகெலும்பென நினைத்துக்கொண்டிருக்கும் கிராமங்களின் புரையோடிக்கொண்டிருக்கின்ற மூடநம்பிக்கைகளை தெரிந்துகொள்ளலாம்.
ஆனால் சில இடங்களில் இந்த மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற உதிரப்போக்கை விதை நெல்லுடன் கலந்து விதைத்து விவசாயம் பார்ப்பவர்களும் உள்ளார்கள்களாம். கொல்கத்தாவில் அம்மனின் பிரசாதமாக குங்குமம் தரப்படுகின்றது. அதுவும் மாதவிடாய் காலத்தைய உதிரத்தையே தருவதாக பக்தர்கள் அதனை வணங்கி ஏற்றுக்கொள்கின்றார்கள். ஒரு இடத்தில் போற்றப்படுகின்ற விஷயமே, சில இடங்களில் ஒதுக்கிவைக்கப்படுவதாகவும் உள்ளது. ஏன்.? நம்மூரிலேயே உதிரப்போக்கு முதன்முறையாக வருகின்ற பெண்களுக்கு விழா எடுத்து கொண்டாடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

முக்கியமாக இப்படம் முன்வைக்கும் கருத்துக்கள், பெண்களுக்கான கழிப்பறையில் நாப்கின்களை அகற்றுவதற்காகவும், இடம் வைத்திருக்க வேண்டும் என்பதே. சட்டமன்ற உறுப்பினர்களாக பெண்கள் பணியாற்றுகின்ற அலுவலகத்திலே கூட இதற்கான, தக்க வசதிகள் கிடையாது என்பதிலிருந்தே கீதா இளங்கோவன் முன்வைக்கின்ற கருத்தின் வித்தை அறிந்துகொள்ளலாம். மேலும், 2000 பேர் படிக்க கூடிய பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் வைத்துக்கொண்டால் கூட, 50 கழிப்பறைகள் கட்டிவைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கால அவகாசமோ பத்து முதல் பதினைந்து நிமிடங்கள். இதில் எப்படி அந்த 2000 குழந்தைகளும் கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியும்.?

இது நகரப்புறத்தில் என்றால், கிராமப்புறங்களில் இன்னும் கொடுமை அங்கு கழிப்பறைகளேயில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்.?

கிராமத்து பிள்ளைகள் மாதவிடாய் காலத்தில் காலையிலேயே வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர் என்றால் பள்ளிக்கு வந்தவுடன், அவர்கள் பெரும்பாலும் எதுவும் சாப்பிடுவதில்லை., முடிந்தவரை தண்ணீர் குடிப்பதைக் கூட தவிர்த்துவிடுகின்றனராம். பின்னர் அந்தப்பெண் மாலையில் வீடுசென்று தான் தண்ணீர் குடிப்பது, கழிப்பறையை பயன்படுத்துவது எல்லாமே.

இப்படியாகத்தான் அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர்களுக்கும் இத்தகைய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவர்களும் இதனைப் பற்றி எந்தக்குறையும் சொல்லாமல், மகள் பிரச்சனையில்லாமல் வந்துவிட்டாள் என்று சந்தோஷம் அடைகின்றனர். ஆனால் இப்பிரச்சனையே அவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரை இட்டுச்செல்லக் கூடிய அபாயமுண்டு., என்பதையும் மருத்துவர்கள் வாயிலாகவே ஆவணப்படம் பதிவுசெய்கின்றது.

ஆனால் மேலை நாடுகளில் இம்மாதிரியான பிரச்சனைகள் இல்லை. அவர்களுக்கு பதின் பருவத்திலேயே மாதவிடாய் கால கட்டத்தில் எம்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். என்று சரியான பயிற்சி அளித்து பயத்தை போக்குகின்றனர். அங்கு வாழ்கின்ற சிறுமியர்களும் திடீரென உதிரப்போக்கு ஏற்பட்டால் அவர்களின் பயிற்சியின்படியே நடந்துக்கொண்டு மாலை வீடு திரும்பும் வரையிலும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் சகஜமாக இருப்பதாக கீதா இளங்கோவன் கூறுகின்றார்.
இந்த ஆவணப்படம் பெரும்பாலும் பேச்சுக்களாலேயே நகர்கின்றது. அதனை விடுத்து காட்சிகளாகவும் சில விஷயங்களைச் சேர்த்திருக்கலாம். பின்னர், ஆவணப்படம் மாதவிடாய் என்னும் பிரச்சனையைச் சுற்றி நூல் பிடித்தாற்போல நேர்கோட்டில் போய்க்கொண்டிருக்கின்ற சமயத்தில், தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சனையையும் கையிலெடுக்கும்பொழுது பாதை சற்று பிசகுகிறது. (கழிப்பறை சுத்தப்படுத்த தாழ்த்தப்பட்ட மக்களையே பயன்படுத்துகின்றனர். என்ற நோக்கில் அங்கு வேலை செய்கின்ற பெண்களின் கருத்துக்களையும் உடன் இணைத்துள்ளனர்). போகுற போக்கில் இவர்கள் பிரச்சனையையும், சொல்லிவிடலாம் என்பதுபோல இது அமைந்துவிடுகின்றது.
பார்வையாளர்களின் கருத்துக்களைக் கேட்கும்பொழுது கூட அனைவரும் கீதா இளங்கோவனுக்கு சாதகாமாகவே கூறினர். பெண்களின் பிரச்சனையை தானும் புரிந்து கொண்டதாகவும் சிலர் கூறியதிலிருந்து முன்னர் குறிப்பிட்ட சலனத்தை இவர்கள் மத்தியில் காணமுடிந்தது. வேறுசிலர் இன்னும் ஒரு படிமேலே போய் தான் இளவயதில் இம்மாதிரியாக பாதிக்கப்பட்ட பெண்களைப் பார்த்து கேலி செய்ததற்காக இப்பொழுது வருத்தப்படுகிறேனென்று அனைவரின் முன்நிலையிலும் தன் தவறை ஒத்துக்கொண்டார். நிச்சயமாக கீதா இளங்கோவன் எந்த நோக்கத்திற்காக படம் எடுக்க முனைந்தாரோ அதில் பாதி வெற்றி கிடைத்திருக்கும், மீதி வெற்றியும் சீக்கிரமே கிடைக்கும்.

அடுத்ததாக வசந்த் கே. பாண்டியனது ஆவணப்படமான விடியாத பொழுதுகள். மீனவர்களின் பிரச்சனையை மையச்சரடாக வைத்து ஆவணப்படுத்தப்பட்ட படம். முதலில் இதனை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்த காரணத்திற்காகவே கீதா இளங்கோவனைப் போலவே இவரும் பாராட்டுக்குரியவர் ஆகிறார்.

இலங்கை கப்பற்படையினரால் தமிழக மீன்வர்கள் தாக்கப்படுவதும், எல்லை தாண்டி வருவதால் இவர்களை இரக்கமின்றி சுடுவதும், நிர்வாணமாக கடல் நீரில் தலைகீழாக மூழ்கடிப்பதுமாக அவர்களின் கொடுமையான செயல்களை இப்படத்தின் வாயிலாக முன்வைக்கின்றார்.

நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் பார்க்கும் சமயத்தில், ”இலங்கை கப்பற்படையால் தமிழக மீனவர்களின் 50 வலைகள் நாசம்”, என்கிறவரிகளில் நமக்கு ஏதோ 50 வலைகள்தான் என்ற நினைப்பு வரும். ஆனால், ஒரு வலையின் விலை குறைந்தது 50,000 (குறைந்தது) என்ற கணக்கில் வைத்துக்கொண்டால் கூட மீனவர்களின் நஷ்டக்கணக்கை பார்த்துக்கொள்ளலாம்.

இனி கடல்புற மக்கள் எவரும் தன் பிள்ளைகள் படித்து வேறு வேலைக்கு போய்விட வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்களே தவிர யாரும் தன்பிள்ளை மீன்பிடிப்பவனாக வரவேண்டும், என்றெல்லாம் சொல்வதில்லை. தான் படுகின்ற கஷ்டங்களை தங்கள் பிள்ளைகளும் அனுபவிக்க கூடாது, என்று பெற்றோர்கள் நினைப்பது நியாயம்தான். அப்படியே ஓரிருவர் மீன்பிடிக்க அடுத்த தலைமுறையிலிருந்து தப்பி வந்தாலும் அவர்கள் படிப்பின் மேல் நாட்டமற்று , தேர்வில் தோல்வியடைந்து வேறுவேலை கிடைக்காமல் மீன்பிடிக்க வருகின்றவர்களாகத்தான் இருப்பார்கள். அதுவும் படிப்படியாக குறைந்து போகும், கிட்டத்தட்ட 600க்கும் அதிகமான தமிழர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்திய அரசாங்கம் இவர்களைக் காக்க எவ்வித முயற்சிகளும் செய்யவில்லை என்பதே வசந்த்.கே.பாண்டியனின் வாதமாக உள்ளது.
ஏதாவது ஓரிரண்டு கட்சிகள் இவர்களைக் காக்க முன்வருவதாக சூழுரைத்து ஒன்றாக கட்டியணைத்தபடியே புகைப்படம் எடுத்துக்கொண்டு தேர்தல் முடிந்தபின்பு இந்தப்பக்கமே தலைவைத்து படுக்காதவர்களும் உள்ளார்களாம். எந்தக் கட்சி பெரும்பான்மை இல்லையோ அவர்களே, மீனவர்களின் பிரச்சனைகளை பகடைக்காயாக பயன்படுத்திக்கொள்கின்றனர். சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல, ”தமிழக மீனவர்களின் பிரச்சனையை மையப்படுத்தி”, என்று விளம்பரம் செய்யப்பட்ட படங்கள் எல்லாம், தனது வணிக வியாபார உத்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகவேயிருந்தன. இதற்கு விதிவிலக்காக வசந்த்.கே.பாண்டியன் மீனவர்களின் பிரச்சனையை மட்டுமே மையப்படுத்தி முழுப்படமும் எடுக்க திட்டமிருப்பதாக கூறுகின்றார். அதற்காக காத்திருக்கலாம்.

பின்னர் நமக்கெல்லாம் சாதாரண விளையாட்டுக்களாகத்தெரிகின்ற கிரிக்கெட் மீனவர்களுக்கு அச்சுறுத்துகின்ற ஒன்றாக உள்ளது. அதாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் கிரிக்கெட் போட்டி நடக்கின்ற சமயத்தில் இந்தியா வெற்றிபெற்றுவிட்டால் நாம் அந்த இரவிலும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் மீனவன் கடலுக்குச் செல்ல அஞ்சுவான்.
இலங்கை ஜெயித்தாலும், தோற்றாலும் மீனவர்கள் இலங்கை கடற்படையில் சிக்கினால் ஜெயித்தால் சந்தோசத்திலும், தோற்றால் சோகத்திலும் அடிப்பார்களாம். முன்பெல்லாம் இலங்கை கப்பற்படைதான் இவ்வாறு செய்தது என்றால், சில காலங்களாக இலங்கையில் வசிக்கின்ற சாதாரண மக்களே தமிழக மீனவர்களைக் கண்டால் அங்கேயே வைத்து அடிப்பதும், படகை உடைப்பதும், வலையைக் கிழிப்பதுமாக உள்ளனர். இப்படியாக இலங்கை மக்களுக்கு தைரியம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இதில் அரசாங்கம் என்ன செய்கின்றது? என்பதே ஆவணப்படம் முன்வைக்கின்ற விஷயங்களிலேயே முக்கியமான கருத்து.

ஆனால் மேற்சொன்ன கருத்துக்கள் எதுவும் ஆவணப்படத்தில் சரியான விதத்தில் பொருத்தமாக அமைந்திருக்கவில்லையென்பதே உண்மை. மேலும், ஏ.ஆர். ரஹ்மானின் இசையினை ஆவணப்படத்தில் இடைச்செருகலாக வைத்திருக்கின்றார். உணர்ச்சிகரமாக மக்கள் பேசுகின்ற சமயத்தில் அவர்களின் உணர்ச்சிகளை அதிகமாக்கி வெளிக்காட்ட இத்தகைய இசையினைப் பயன்படுத்தியிருக்கின்றார்., ஆனால் இது சொல்ல வேண்டிய விஷயத்தைத் திசைதிருப்பி, படத்தில் ஒன்றவிடாமல் செய்கின்றது.

மேலும், ஆவணப்படத்தின் துவக்கத்தில் இடம்பெறுகின்ற வசந்த்.கே.பாண்டியனின் பேச்சானது, வேகமாக பயணிப்பதால் அவ்வுரையில் பொதிந்திருக்கும் வீரியத்தை நம்மால் துரத்த முடிகிறதே தவிர, பிடிக்கமுடியவில்லை. படங்களில் பல இடங்களில் சரியான துல்லியம் இல்லை.

ஆனால் வசந்த்.கே.பாண்டியன் இந்த ஆவணப்படத்தை தன் கல்லூரிக் காலத்தில் எடுத்துள்ளார். மேலும் 15 நிமிடத்திற்குள் படத்தை முடிக்கவேண்டும் என்ற நிர்பந்தம்தான் அவர் ஆரம்பத்தில் வேகமாக பேசிய உரையின் காரணம். வேறொரு இசையமைப்பாளரிடம் இதற்கு இசை வாங்க அவகாசமின்மையால் பிரபலமான இசையைப் பயன்படுத்தியது. மேலும், இப்படத்தினை வெறும் 1500 ரூபாய் செலவில் முடித்துள்ளார் என்பதோடு இதுவொரு கன்னிமுயற்சிதான், இந்த அளவிற்கு எவரும் முன்னெடுக்க தயங்குகின்ற பிரச்சனையை முதல் முயற்சியிலேயே முன்னிறுத்தியதற்கே பாராட்டுக்கள். இதில் இப்படியான சிறு சிறு குற்றங்கள் கண்டுபிடிப்பது அபத்தமாகவே படுகின்றது.
பார்வையாளர் ஒருவர், “இதுவரையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் எத்தனை குடும்பங்கள், எவ்விதமாக பாதிப்படைந்துள்ளன? என்ற கேள்விக்கு, வசந்த.கே.பாண்டியன் கூறிய பதில், “ நாளையிலிருந்து ஒரு மாதம் கணக்கு வைத்துக்கொள்ளுங்கள், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களின் எத்தனை படகுகள், உடைக்கப்படுகின்றன?, எத்தனை வலைகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன?, எத்தனை பேர் பாதிப்படைகின்றனர்? உயிரிழக்கின்றனர்?, என்று., இந்தப்பிரச்சனையும் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நடந்து வருவதாக கூறுகின்றார்கள், எனில் ஒரு மாதமாக நடக்கின்ற பிரச்சனைகளை 20 ஆண்டுகளுடன் கணக்கிட்டுப் பாருங்கள்”, என்றார்.
இந்தப் பதிலுடன், சர்ச்சைகளற்ற தமிழ்ஸ்டூடியோவின் குறும்பட வட்டம் நிறுவனர் அருணின் நன்றி சொல்லலுக்குப் பின்பாக முடிவுற்றது.

அடுத்த நாள் காலையில் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருக்கையில், ”இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களிடம் அட்டூழியம்”, என்ற செய்தி கண்ணில் பட்டதாக நண்பர் சொன்னார். எண்ணிக்கை தொடங்குகிறது.