தமிழ்ஸ்டுடியோ குறுந்திரையரங்கம்- ஈரான் திரைப்படங்கள் தொடர் திரையிடல்

”நல்ல படங்கள் வெளியாக திரைப்படக் கலைஞர்களை உருவாக்குதல், நல்ல படங்களை இனங்கண்டுகொள்ள மக்களை தயார்படுத்துதல்”. தமிழ்ஸ்டுடியோவின் குறிக்கோள் என்ன? என்று கேட்பவர்களுக்கு, மேற்கண்ட வாசகங்கள் இனிமேல் பதிலாக இருக்கட்டும்.

தொடர்ச்சியான திரையிடல்களே நல்ல சினிமாக்களை தரம் பிரித்தறிய ஏதுவாக இருக்கும். ஒரு நிறுவனம் சார்ந்து, அதன் நலனில் அக்கறைகொண்டு நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளுக்கும், திரையிடல்களுக்கும், ஒரு இயக்கம் சார்ந்து முன்னெடுக்கப்படுகின்ற திரையிடல்களுக்கும் வித்தியாசங்கள் உண்டு.

திரையிடலின் பெரும்பங்கு மக்களின் ரசனை முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். மேலும் பலதரப்பட்ட பார்வையாளர்களும் குறுந்திரையரங்கத்தில் கலந்துகொள்ள வாய்ப்புண்டு. வருகின்ற பார்வையாளர்கள் எந்த ஒரு உலக சினிமாவையும் பார்த்தறியாதவராகயிருக்கக்கூடும். அச்சமயத்தில் ஆழ்ந்த தத்துவ விகிதாச்சாரங்களைப் பேசும் படங்களை நீங்கள் திரையிடுவீர்களேயானால் திரையிடலின் உங்கள் முயற்சிக்கு பலன் இருக்காது.

திரையிடலின் நோக்கம் மக்கள் ரசனை சார்ந்தேயிருப்பின், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய முதல் பட்டியல் எளிய கதையும், தகுந்த வடிவமும் கொண்ட படங்களே.
இதன்படி நடக்கின்ற திரையிடல்களில் முதலிலேயே புரிதலுக்கு சிரமாகயிருக்கின்ற படங்களைத் தவிர்த்து, எளிதாகப் புரியும்படியும், சிறந்த கதைக்களன்களையும் கொண்டிருக்கக்கூடிய ஈரானியத் திரைப்படங்களே முதல் மாதம் திரையிடுவது என முடிவானது. இயக்குனர் பாலுமகேந்திரா தமிழ்ஸ்டுடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது, “அவர்கள் உள்ளூர்களில் எடுக்கின்ற சினிமாக்களே, உலக சினிமாக்கள் ஆகின்றன,” என்றார். அவர் உள்ளூர் சினிமாக்களுக்கு உதாரணம் காட்டியதும் ஈரானியத் திரைப்படங்கள் தான்.

முதல் திரையிடல் ஜீலை மாதம் 6ஆம் தேதி, மாலை 5:30 மணிக்கு படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவர்களால் கொட்டிவாக்கத்தில் உள்ள தமிழ்ஸ்டுடியோ அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. முதல் திரைப்படம் ’மோசன் மக்மல்பஃப்’, இயக்கிய “கந்தஹார்” (Kandahar – Mohsen Makhmalbaf). டைம் இதழ் 2001ல் சிறந்த நூறுபடங்களில் ஒன்றென கந்தஹாரைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. மையக்கதாபாத்திரமான நபாஸ், தன் தங்கையைத் தேடி கந்தஹார் நோக்கி பயணிக்கிறாள். நபாஸின் இந்த தேடலுக்குள், தாலிபன் அரசியலை விமர்சிக்கும் படம்.

மக்மல்பஃப் படங்கள் பெரும்பாலும், அந்நாட்டு அரசாங்கத்தினாலேயே தடைவிதிக்கப்படுவதற்கு காரணம், இது போன்ற அரசியலை தன் படங்களின் வாயிலாக உலகிற்கு உணர்த்துவதுதான். சிறுவயதிலிருந்தே சமூக கண்ணோட்டத்துடன் இருப்பதே இவர் படங்களுக்கான காரணம். சமூக நாடகங்களிலும் அவருக்கு ஈர்ப்பு உண்டு.
மேலும் இத்தொடர் திரையிடல் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும் என்பதற்காக, மாலை 7 மணிக்கு மேல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதுபோக, ஒருமுறை படத்தை தவற விட்டவர்களுக்காகவும், அல்லது தான் ரசித்த படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்களுக்காக, தமிழ்ஸ்டுடியோ குறுந்திரையரங்கத்தில் ஒரு திரைப்படம், இரண்டு அல்லது மூன்று முறை குறிப்பிட்ட இடைவெளியில் திரையிடப்பட்டது.. முதல் படமான கந்தஹார் இதுவரையிலும் மூன்று முறை திரையிடப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு திரையிடலிலும் அப்படத்திற்கான புது பார்வையாளர்கள் வருகையும் இருந்தது. அதேபோல, மக்மல்பஃப் மகள் சமீர மக்மல்பஃப் எடுத்த At Five in the afternoon, படமும் அரசியல் சிந்தனை கொண்ட படமே. இந்தப் படம் சாமிக்கண்ணு திரைப்பட சங்கத்தின் முதல் நாள் கூட்டத்தில் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டது.

மக்மல்பஃபின் மற்றைய படங்களான, சைக்ளிஸ்ட் (Cyclist), காப்பே (Gabbeh), முதலிய படங்களும் இத்திரையிடலுக்கு தவறவில்லை.

இதில் காப்பே குறியீடுகளால் கதை சொன்ன படம். நிறங்களின் பயன்பாடுகளையும், கம்பளம் தயாரிக்கின்றவர்களின் நாடோடி வாழ்க்கையையும் காப்பே பதிவுசெய்திருக்கின்றது. இதனை ஆவணப்படமாக எடுக்கவே மக்மல்பஃப் முதலில் திட்டமிட்டிருக்கின்றார். திட்டமிடலுக்கு ஏற்ப ஆவணப்படம் போன்ற பாணியையே இவரின் படங்களான கந்தஹாரும், காப்பேயும் கொண்டிருந்தன. ஆனால், சைக்ளிஸ்ட் அனைவருக்கும் பிரியமான படம்.

இந்த மாதம் முழுக்க உள்ள திரையிடல் பட்டியலில் குறைந்த கால அளவு கொண்டுள்ள படமாகவும் இதனைக் குறிப்பிடலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவிக்கு, மருந்துச்செலவிற்காக தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்தும் பலனில்லாததால், மூன்று நாட்கள் தொடர்ந்து சைக்கிள் ஓட்ட சம்மதிக்கின்றான் நஸீம். ஆனால், அவனின் ஏழ்மை நிலையை பயன்படுத்திக்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், மூன்றிலிருந்து நான்கு, ஐந்து, ஆறு இறுதியாக ஒருவாரம் என தன் நாட்கணக்கினை அதிகப்படுத்துகிறார். ஆனால், நஸீமிற்கு ’ஆமாம்’, என்று சொல்வதைத்தவிர மறுதலிப்பதற்கு வழியில்லை. மனைவியின் மருத்துவமனைச் செலவிற்காக, தொடர்ந்து ஒருவாரம் சைக்கிள் ஓட்டவேண்டிய நிலைமை. மகனின் உதவியோடு தொடர்ந்து ஏழு பகலும், ஏழு இரவும் கூட்டத்திற்கிடையே சைக்கிள் ஓட்டுகின்றான். தொடர்ந்து ஓட்டுகின்றான். இதுதான் சைக்ளிஸ்ட்.
இதுவும் மக்மல்பஃபின் படம். இவரையும் ஒரு கதாபாத்திரமாக படத்தினுள் நுழைத்து அப்பாஸ்கிரியோஸ்தமி எடுத்த படம்தான் க்ளோஸ் அப்.

பேருந்துப் பயணத்தின் பொழுது சாப்ஸின் கையில் ’சைக்ளிஸ்ட்’ திரைக்கதை புத்தகத்தை படித்துவருகின்றான். சாப்ஸின், மக்மல்பஃபின் தீவிர ரசிகன், அப்பொழுது அவன் இருக்கையில் அமர்ந்திருக்கின்ற பெண்மணி சாப்ஸினிடம் பேச்சுக்கொடுக்கின்றாள். கையில் வைத்திருக்கின்ற புத்தகத்தைப் பற்றியும் விசாரிக்கின்றாள், காரணம் அவளும் மக்பல்ப்ஃபின் ரசிகை. பேச்சுவாக்கிலேயே நான் தான் மக்பல்பஃப் என்று அவளிடம் அறிமுகமாகிறான் சாப்ஸின். அவன் பின்னாளில் அந்தப் பெண்மணியின் வீட்டிற்குச் சென்றும் மக்பல்பஃபின் தோரணையிலேயே பழகுகின்றான்.

அந்தப்பெண்மணி தங்கியிருக்கின்ற வீட்டினை தன் அடுத்த படத்திற்கு பயன்படுத்திக்கொள்வதாகவும், அவளின் மகனையே அதில் நடிக்க வைப்பதாகவும் தன் மனதில் வந்த பொய்களைச் சொல்கின்றான் சாப்ஸின். பின்னாட்களில் அந்தக் குடும்பத்தினருக்கு அவன் பேரில் சந்தேகம் வருகின்றது. போலீஸார் உதவியுடன் அந்தச் சந்தேகம் நிரூபிக்கப்பட்டு சிறைக்குச் செல்கின்றார் போலி மக்மல்பஃப் சாப்ஸின். இது உண்மைக்கதை. இந்தக் கதையில் ஈடுபாடு ஏற்பட்டே க்ரியோஸ்தமி இதனை படமாக்க விழைந்திருக்கின்றார். பிறிதொரு சமயம் சாப்ஸினை அழைத்துக்கொண்டு மக்மல்பஃபினை பார்க்க ஏற்பாடு செய்கின்றார் அப்பாஸ் க்ரியோஸ்டமி. இதுவும் படத்திலேயே காட்சிகளாகயிருக்கின்றன. படம் பார்க்கின்ற பொழுது இது ஆவணப்படமா? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.. க்ரியோஸ்டமியே கதையை முன்னெடுப்பவராகவும் சில காட்சிகளில் நடித்திருக்கின்றார். மக்மல்பஃற்கு அந்நாட்டு மக்களிடமிருந்த வரவேற்பு இந்தப்படம் மூலம் தெரியவருகின்றது.

மக்மல்பஃப் போல, அவரது மாணவரான மஜித்மஜிதியின் படங்களுக்கு அரசியல் இடர்ப்பாடுகள் இல்லை. காரணம் அவர் படங்கள் அரசாங்க நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு எடுக்கப்படுகின்றன என்றும் மக்பல்பஃப் கூறுகின்றார். ஆனால் மஜித் மஜிதியின் படங்கள் மனித உணர்வுகளையும், காதலையும் பேசுகின்றன.

கதை சொல்லலில் உண்டான தெளிவு மஜிதியின் படங்களில் தெரிகின்றது. இவரது பரன் (Baran – Majid Majidi) திடைப்படம் ஜீன் 7ம் தேதி திரையிடப்பட்டது. இவரது மற்றொரு திரைப்படமான கலர் ஆஃப் பேரடைஸ் (Color of paradise) திரையிடப்பட்டது ஜீன் 17ஆம் தேதி.

கட்டிட வேலை நடக்கின்ற இடத்தில்தான் லதீஃப் இருக்கின்றான். அவன் வேலை செய்துகொண்டிருக்கின்ற இடத்திற்கே ரஹ்மத் என்ற ஒருவனையும் வேலைக்காக அழைத்து வருகின்றனர். ஆனால், ரஹமத்தைக் கண்டாலே, லத்தீஃபிற்க்கு பிடிக்கவில்லை. வந்த இரண்டொரு நாளில் லத்தீஃபின் வேலை, ரஹமத்திற்கு மாற்றலாகின்றது. தன்னாலான எதிர்வினைகளையும் லத்தீஃப் தொடர்ந்து அவனிடம் காட்டி வருகின்றான். ஆனால், ஒரு சமயத்தில் தான் இத்தனை நாட்களாக சண்டையிட்டு வந்தது ஒரு ஆணிடம் அல்ல, அவள் ஒரு பெண் என்பதை தாமதாகப் புரிந்துகொள்கின்றான் லத்தீஃப். குடும்பச் சூழல் காரணமாக ஆண் வேஷமிட்டு ரஹ்மத் என்ற பெயரில் வேலை செய்துவருகின்றாள் அந்தப் பெண்.

அவளை இனங்கண்டு கொண்ட லத்தீஃப் அதன் பின்பாக, அனுசரணையுடன் அவளுக்குத் தக்க உதவிகள் செய்து வருகின்றான். அவளின் உண்மையான பெயர்தான் பரன் (Baran). பிறிதொரு நாளில் அப்பெண்ணின் குடும்பத்திற்கு தன்னாலான பொருளாதார உதவிகளையும் செய்கின்றான் லத்தீஃப். அவளுக்கும், லத்தீஃபின் மேல், காதல் இருப்பினும் மெளனத்தினாலேயே ஒவ்வொரு இடத்திலும் கடந்துசெல்கின்றாள். மூடிவைக்கின்ற பர்தாவினுள் தன் காதலையும் ஒளித்துவைத்துக்கொள்கின்றாள். திரும்பவும் ஆப்கானுக்கேச் சென்று விடலாம் என்று அப்பெண்ணின் குடும்பத்தினர் முடிவுசெய்தவுடன், அவர்கள் ஊருக்குப் புறப்படுவதற்குள் லத்தீஃப் உதவிகள் புரிய தவறவில்லை. மழைநாளின் ஒருபொழுதில் அந்தப் பெண் குடும்பத்தோடு ஆப்கானுக்கு செல்கின்ற வேளையில், ஈரமண்ணில் அவளின் பாதச்சுவடுகளை மட்டுமே விட்டுவிட்டுச் செல்கின்றாள். அந்தப் பாதங்களைக் கண்டு நிற்கின்ற லத்தீஃபின் பார்வையில் அந்தச் சுவடுகளை மழைநீர் கரைத்துவிட படம் முடிவடைகின்றது.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் போலவே, மஜித் மஜிதியின் கலர் ஆஃப் பேரடைஸ் படமும் அநேகம் பேரால் விரும்பப் பட்ட படம் எனலாம். கண் தெரியாத முகமத், மற்றும் அவன் தந்தைக்கும் இடையே நடக்கின்ற சம்பவங்களே கலர் ஆஃப் பேரடைஸ் ( The color of paradise).

இத்திரையிடலில் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் இடம்பெறவில்லை. ஆனால், ஜாபர் பனாஹி இயக்கியிருந்த வொயிட் பலூன் (The White Ballon), அதே குழந்தைகளின் அக உலகைச் சித்தரிக்கின்ற படம். இப்படத்தின் பெரும்பகுதியில் இடம்பெற்றிருந்த அக்குழந்தையை (Razieh) மறக்கவிட்டு, ஆப்கான் சிறுவனைப் பற்றிய சிந்திப்புகளே படம் முடிந்தபின்பும் நினைவிருக்கின்றது. இந்தப் படம் ஜீலை 29 அன்றைய மாலைப்பொழுதில் திரையிடப்பட்டது.

அப்பாஸ் க்ரியோஸ்தமியின் படங்களும் இத்திரையிடலில் பெரும்பான்மையான இடத்தைப் பிடித்திருந்தன. முன்பு குறிப்பிட்டது போல , ஜீலை 8ம் தேதி திரயிடப்பட்ட க்ளோஸ் அப் (Close up - Abbas Kiarostami) , ஜீலை 22 அன்று திரையிடப்பட்ட ’த்ரோ த ஆலிவ் ட்ரீஸ்’, (Through the olive trees - Abbas Kiarostami). பின்பு, ஜீலை 16 அன்று திரையிடப்பட்ட டேஸ்ட் ஆஃப் செர்ரி ( Taste of Cherry - Abbas Kiarostami)

தனக்கான சவக்குழியை தயாராக வைத்துக்க்கொண்டு, அன்று இரவே தற்கொலை செய்து கொள்ளவும், தான் இறந்த பின்பு தன்னை புதைக்கும் ஆள் தேடி அலைகின்றார் நடுத்தர வயது நபர் ஒருவர். ஆனால், அவர் ஏன் தான் தற்கொலை செய்துகொள்கின்றார் என்ற காரணத்தை பிறரிடம் கூறாமலேயெ தனக்கான உதவியை ஒவ்வொருவரிடமாக கேட்டுவருகின்றார். ஏராளமான பணம் தருவதாகவும் கூறுகின்றார். அவர் காரில் பயணிப்பதால் ஒவ்வொருவரும் காரில் ஏறுவதும், பின்னர் இறைநம்பிக்கைக்கு மாறானது என்றும், விருப்பமில்லை என்றும் ஒவ்வொருவரும் இறங்கும்பொழுது கூறிச்செல்கின்றனர். அந்நபரின் விருப்பத்திற்கும் ஒருவர் சம்மதிக்கின்றார். காரணம் அவருக்கும் பணத்தேவை. இதன் பின்பு அந்நபரின் கதி என்ன? என்பதே டேஸ்ட் ஆஃப் செரியின் மீதிக்கதை. படம் முழுக்கவும் பயணங்களாலும், பேச்சுக்களாலும், நிரப்பப்பட்டிருக்கின்ற படம். இப்படத்தின் இறுதிக்காட்சியில் க்ரியோஸ்டமி தன் குழுவினரிடன் படப்பிடிப்பில் ஈடுபடும் காட்சியும் காட்டப்படுகின்றது.

இதுபோலவே சாண்டெளரி (Santouri – Dariush Mehrjui) எனும் தமிழகத்திற்கு புதுமையான இசைகளைக் கொண்டுள்ள படம். இந்தப் படத்தில் வருகின்ற இசைக்கருவியின் பெயர் தான் சாண்டெளரி. இசைக்கும், குடும்ப வாழ்விற்கும், காதலுக்கும் இடைப்பட்ட நடைமுறைச் சிக்கலைச் சொல்லும் படம். தன் மனைவி தன்னைத் தனியனாக்கிச் சென்றுவிட்டாள் என்பது தெரிந்து, ’சாண்டெளரி’, இசைக்கலைஞன் பாதை மாறிப்போகின்றான். போதைப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் இருப்பவனுக்கு, மீண்டும் அவன் பயன்படுத்துகின்ற இசையே மறுவாழ்வு கொடுக்கின்றது,. சாண்டெளரி திரையிடப்பட்டது ஜீலை 15.

சாண்டெளரி படத்தினது இயக்குனரின் மற்றொரு படமே அடுத்து திரையிட்ட The Cow. ஒரு பசுவின் மீது பாசம் வைத்து , அதன் மரணத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் தன்னை ஒரு பசுவாகவே கற்பனை செய்துகொண்டு, தொழுவத்திலேயே தங்கி, அங்கிருந்து வெளிவர மனமில்லாமல், ஒரு கட்டத்தில் தற்கொலையும் செய்துகொள்கிற ஹாசனின் கதையைச் சொல்கின்ற திரைப்படம் த கெள. ( The Cow – Dariush Mehrjui). ஜீலை 18ஆம், தேதி திரையிடப்பட்டது.

மேலும் கமால் தாப்ரிஸி யின் marmoulak, ashar farhadi யின் about elly யும் திரையிடலில் திரையிடப்பட்ட படங்கள்.

தொடர்ந்து இந்தத் திரையிடலில் பங்கெடுத்துக்கொண்டவர்களுக்கு, ஈரான் திரைப்படங்கள் சார்ந்த புரிதலும், வித்தியாசமான கதைசொல்லும் முறைகளில் சில படங்களில் கையாளப்பட்டிருக்கும் விதமும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஈரான் சார்ந்த நிலப்பரப்பின் அரசியலையும், அந்நிலவாழ் மக்களின் வாழ்முறைகளைப் பற்றிய பார்வையும் கிடைத்திருக்கும். திரையிடலில் தொடர்ந்து கலந்துகொண்டவர்களுக்கு மட்டுமே.

குறிப்பு: ஜீலை மாத ஈரான் திரைப்படங்கள் திரையிடலைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் முழுவதும் மனிதத்தை வலியுறுத்தக் கூடிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படவிருக்கின்றது.

--------------------------------------------------------------------------------------------------