தயாரிப்பாளர் சி.வி.குமார் - நேர்காணல் முன்னோடிகள் இல்லாததே பிரச்சனை

சினிமா உங்கள் பார்வையில் கலையா வணிகமா ?

இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. முதலில் எது கலை என்று வரையறுப்பதில் பிரச்சனை உள்ளது. மேற்குலக கலாச்சாரமோ அல்லது ஈரானிய கலாச்சாரமோ எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்தது தமிழ் கலாச்சாரம் மட்டுமே. சிற்பம், ஓவியம், நடனம் ஆகியவற்றை கலை வடிவம் என்று நம் ஊரில் குறிப்பிடுவோம். மக்களின் சேவைக்காகவோ அல்லது ஏதேனும் ஒன்றை வெளிப்படுத்துவற்காகவே கலை பாரம்பரியமாக பயன்பட்டது. 70%பொழுதுபோக்கு சார்ந்த விஷயமும், 30% நல்ல கருத்தையோ அல்லது வரலாற்று ரீதியான தகவல்கள் ஏதேனும் பதிவு செய்வதாகவே கலை இருந்தது. இவை எதுவுமே பணம் செலுத்தி பார்க்க வேண்டியது கிடையாது. கலை என்பதில் பணம் இல்லை, பணம் என்று ஒன்று ஈடுபட்டிருந்தால் அது வியாபாரமாக (தொழில்) மாறிவிடும். பணம் உள்ளே நுழையாத வரை அது கலையாகவே இருக்கும். என்னுடைய படத்தை ப்ரிவியு தியேட்டரில் நான் மட்டும் அமர்ந்து பார்ப்பது வரை அதை கலைப்படைப்பு என சொல்லலாம். எப்போது அதை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு செல்கிறேனோ அப்போது அது வியாபாரம். எது கலை, எது வியாபாரம் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

அந்த காலத்தில் புரவலர்களாக மன்னர்கள் அல்லது உள்ளூரில் அதிகம் பணம் கொண்டவர்கள் இருந்ததால், கலை சார்ந்து செயல்படுபவருக்கு எந்த கஷ்டமும் இருந்ததில்லை. கலைஞர்களை அவர்கள் ஆதரித்தனர். பிற்காலத்தில் வந்த நாடகங்களுக்கும் ஆதரவளிக்க சிலர் இருந்தனர். ஜமீந்தார் அல்லது செல்வம் கொண்டவர்கள், நாடக கலைஞர்களை பார்த்துக்கொண்டனர். வெளியூர் சென்று நாடகம் நிகழ்த்தினாலும், ஒரு சில குறிப்பிட்ட தினங்களில் (பிறந்த நாள், கோவில் திருவிழா) தங்களுக்கு ஆதரவளிப்பவருக்காகவும் நிகழ்ச்சி நடத்துவார்கள். கலைஞர்கள் நோயுற்று இருந்த காலத்திலும் அவர்களுக்கு ஆதரவளித்து வந்தனர். இப்படியாகவே அது பயணப்பட்டு வந்தது. ஆனால் சினிமா என்பது முழுவதும் வேறு விதமாதனது. ஒருவர் பணம் முதலீடு செய்து அதை ஒரு கோடி பேரிடம் வசூல் செய்யும் ஒரு வியாபாரம் இது. இதே ஒரு கோடி பேர் பணம் போட்டு அதை ஒரு கோடி பேரிடமிருந்து வசூலிப்பதைக் கலை வடிவம் என கருதலாம். ஒருவர் மட்டும் முதலீடு செய்து அதை ஒரு கோடி பேரிடமிருந்து வசூலிப்பது எப்படி கலையாகும்?
இதை கடந்தும் ஒரு புரிதல் இருக்கிறது. தயாரிப்பாளர் ஒருவர் சமூதாயத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைப்பதை பொருத்தது அது. உதாரணத்திற்கு, எனக்கு இறை நம்பிக்கை உண்டு, கோவில் கட்டுவதற்காக அல்லது சிற்ப வேலைக்காக என்னிடம் பணம் கேட்டால், ஐம்பதாயிரமோ ஒரு லட்சமோ என்னால் இயன்றதைக் கொடுப்பேன். அதுவும் ஒரு கலை வடிவம் தான். அதை நான் தெரிந்தே செய்கிறேன், அதில் நான் எந்த வித ஆதாயமோ லாபமோ எதிர் பார்க்கவில்லை. வருமானத்தை எதிர்ப்பார்க்காத அனைத்துமே கலை, வருமானத்தை எதிர்ப்பார்த்தால் அது வியாபாரம். அவ்வளவே.

சினிமா என்பது பொழுதுப்போக்குக்காக மட்டுமா? அல்லது மக்கள் சார்ந்த சமூக நிகழ்வுகளை பதிவு செய்வதாக இருக்க வேண்டுமா? அல்லது மக்களின் கலை இரசனையை ஓரளவேனும் உயர்த்த
வேண்டுமா ?

இது ஒரு ட்ரிக்கியான கேள்வி. மற்ற இடங்களில் இல்லாதளவு இங்கு சினிமா இவ்வளவு பிரபலமாவதற்கு காரணம் நமது கலாச்சாரம் மற்றும் மொழி. பாரம்பரியமாகவே நமது மொழியில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவு உண்டு. இயல் தமிழ் மட்டுமே உரையாடல், இசை மற்றும் நாடகம் நம் சினிமாவில் இருக்கிறது. பழங்காலத்திலேயே மூன்றாக பிரித்துவிட்டனர். ஒரு சிறிய எடுத்துக்காட்டு சொல்கிறேன், வெகுஜன பத்திரிக்கைகள் விற்குமளவுக்கு சிற்றிதழ் பத்திரிக்கைகள் விற்பதில்லை, அதன் காரணம் என்ன ? இதில் வரும் நிகழ்வுகள் தவறா அல்லது செய்திகள் தவறா ?. மக்களுக்கு என்ன தேவை, அதை பொருத்தே விற்பனை இருக்கும். சினிமாவை பொழுதுபோக்கு ஊடகமாகவே 80-90% மக்கள் பார்க்கின்றனர். சமூக மாற்றத்திற்கான கருத்து சொல்லும் ஊடகமாக சினிமாவை எப்போதுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சினிமாவின் மூலம் எந்த காலத்திலும் சமுதாய மாற்றம் நிகழாது, அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. வரலாற்றைப் பதிவு செய்து ஒரு தரவாக வைக்க சினிமா பயன்படும். அதுவும் ஒரு 30% வரை மட்டுமே.

சமூக மாற்றம் சாத்தியமில்லை என்று சொன்னீர்கள், ஆனால் தமிழகத்தில் சினிமா மூலம் ஆட்சியை பிடித்தவர்கள் இருக்கிறார்கள் அல்லவா ?

இது தவறான புரிதல். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள், ஆனால் அனைவரும் வெற்றி பெறவில்லை. அந்த காலம் போன்று இன்றில்லை, இன்றுள்ள தலைமுறையினர் சினிமாவை பார்த்து வாக்களிப்பது கிடையாது. பொழுதுபோக்கு எது, அரசியல் எது என்று அவர்களுக்கு நன்றாக தெரிகிறது. அப்போது எழுத்தறிவு குறைவு, காட்சி ஊடகத்தில் சொன்னதை மக்கள் ஏற்றுக்கொண்டனர், ஆனால் இன்று அப்படியில்லை. சமூக ஊடகங்கள் மூலம் எங்கு என்ன நடந்தாலும் தெரிந்துகொள்ள முடிகிறது. வெற்றிப் பெற்றவர்களும் சினிமாவினால் மட்டுமே வெற்றி பெறவில்லை, அவர்களின் அரசியல் பங்கேற்பிற்கும் அதில் பங்கு உண்டு.

அரசியலில் நுழைய சினிமாவை ஒரு வாயில் என கூறலாம். அரசியலில் நுழைய பணம் அல்லது புகழ் தேவை. பணம் உள்ளவர்கள் வெளியே தெரியாமல் இருக்கின்றனர், புகழ் உள்ளவர்கள் வெளியே தெரிகின்றனர்.

இன்றுள்ள தமிழ் சினிமாவினால் சமூக மாற்றம் சாத்தியமில்லை, ஆனால் விழுப்புணர்வை ஏற்படுத்தலாம். நாளிதழில் வரும் ஒரு விஷயம் நான்காவதோ ஆறாவது பக்கமாக ஒரு பெட்டி செய்தியாய் இருப்பதால் மக்கள் அதிகமாக கவனிப்பதில்லை, அதிகமானவர்களை சென்று சேர்வதில்லை. அதை சினிமாவில் சொல்லும் போது பரந்து பட்ட மக்களுக்கு அந்தச் செய்தி சென்று சேருகிறது. அதனால் ஒரு விழிப்புணர்வு ஏற்படுகின்றது. ஆனால் அதை ஒரு இயக்கமாக மாற்ற முடியாது. சமூக மாற்றத்திற்கு ஒர் இயக்கம் தேவை. அப்படியான இயக்கத்திற்கு ஒர் ஆதரவு ஊடகமாக சினிமாவை பயன்படுத்தலாம். சினிமாவை மட்டுமே வைத்து எந்த மாற்றமும் நிகழாது.

தற்போது இருக்கும் திரைப்பட விளம்பர (Publicity) முறையை குறித்து?

நாம் வாழ்வது ஒரு விளம்பர யுகம். டிஜிட்டல் தொழில்நுட்ப வரவால் சினிமா எடுப்பது எளிமையாகிவிட்டது. ஒரு 5டி கேமரா இருந்தால், சினிமா எடுத்துவிடலாம் என்ற நிலை இப்போது இருக்கிறது. முன்பு இருந்த முறைகள் இப்போது தேவை இல்லை, ஒரு கணினி இருந்தால் போதும், ஒலிப்பதிவு, நிறம் சரி செய்தல், ஒலி கலவை என அனைத்தையும் ஒரே அறையில் செய்துவிடலாம். ஒரு 5டி கேமராவும் மேக் (mac) கணினியிருந்தால் படம் எடுத்துவிடலாம் என்ற காலகட்டம் இது.

இந்த வருடம் இதுவரை 200 படங்கள் வரை வெளியாகியுள்ளது. சென்சார் முடிந்து வெளியாவதற்காக 100 படங்கள் காத்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் வாரம் ஒரு முறை வெளியீடு தான். ஒவ்வொரு வெள்ளி மட்டுமே திரைப்படம் வெளிவரும். அதற்கு ஒரு சில கட்டுபாடுகள் உண்டு. தயாரிப்பாளர் தனது படம் ஒரு வாரமாவது ஓட வேண்டும் என்பதற்காக இந்த முறை உள்ளது. அல்லது குறைந்த பட்சம் 42% வருமானம் இருந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு படம் ஒரு திரையில் அனைத்து இருக்கைகளும் நிரப்பப்பட்டு ஓடினால் ஒரு லட்சம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த படம் 42 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டினால் அதை எடுக்க முடியாது. அந்தப் படத்தை ஓட்ட வேண்டும். அப்படி எடுத்துவிட்டால், தயாரிப்பாளர் திரையரங்கை எதிர்த்து கேள்விகேட்கலாம். சங்கமும் நமக்கு துணை இருக்கும். "Least minimum hold over" என்று இதை குறிப்பிடுவார்கள்.
Least minimum hold over'க்கு கீழே இருக்கும் படங்களை அடுத்த காட்சியிலேயே அவர்கள் எடுத்துவிடலாம். திரையரங்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டமைப்பு கொண்டு இயங்குகிறது, மின்சாரம், ஏசி மற்றும் 20பணியாளர்கள் இருப்பார்கள், இன்னும் சில செலவுகள் அவர்களுக்கு இருக்கும், ஓடாத திரைப்படத்தை அவர்கள் திரையிட வேண்டும் என்று கூற முடியாது. திரையரங்கை அவர்கள் மூடி வைத்திருக்கவும் முடியாது. பத்து பேர் என்றாலும் படம் ஓட்டுகிறார்கள், ஐம்பது பேர் என்றாலும் படம் ஓட்டுகிறார்கள். அந்த ஐம்பது பேரை எப்படி கொண்டுவருவது என்பதிலேயே இன்று பிரச்சனை இருக்கிறது. விளம்பரத்தை வைத்து மட்டுமே அவர்களை கொண்டு வர முடியும்.

என் படம் நல்ல படம் என எனக்கு தெரியும், ஆனால் திரையரங்க உரிமையாளர் எந்த அடிப்படையில் என் திரைப்படத்தை திரையிடுவார். நம் கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே பார்க்கிறோம், மற்றவர்களின் கண்ணோட்டத்திலும் நாம் பார்க்க வேண்டுமல்லவா ?. திரையரங்க உரிமையாளர் பல செலவுகள் செய்து திரைப்படத்தைப் பார்பதற்கான வெளியை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் செய்த செலுவுக்கான பலனை அவர் எதிர்பார்ப்பார் அல்லவா. திரையரங்கை வாடகைக்கு எடுக்க யாரும் முன்வருவதில்லை. வாடகை கொடுங்க, வரும் கலெக்‌ஷனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என திரையரங்க உரிமையாளர் கூறுகிறார்கள். படத்தின் உள்ளடக்கத்தில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை, அதனால் வாடகை எடுக்க மறுக்கின்றனர். யார் மீதாவது சவாரி செய்ய எல்லோருக்கும் ஒரு குதிரை தேவைப்படுகிறது.

பிரம்மாண்டமான விளம்பரத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? வெள்ளியன்று வெளி வரும் படத்திற்கு புதன், வியாழன் முதற்கொண்டே பல முறை திரும்ப திரும்ப விளம்பரம் செய்வதை சரியென்று நினைக்கிறீர்களா?

வேற வழியில்லை. இன்று போட்டி அப்படி இருக்கின்றது. ஒரு வாரத்திற்கு நான்கு படங்கள் வெளிவருகிறது. எதாவது ஒரு வழியில் நீங்கள் தனித்துவமாக இருந்தாலே நிலை பெற முடியும் என்ற நிலையில் என்ன செய்ய முடியும். ஐந்து கோடி போட்டு படம் எடுக்குறேன், இரண்டு கோடி விளம்பரத்திற்கு செலவு செய்தால் ஏழு கோடி திரும்ப வரும் என்ற நிலை இருக்கு, விளம்பரத்திற்காக அந்த இரண்டு கோடி போடலனா இரண்டு கோடி மட்டுமே திரும்ப வரும் நிலமை இருக்கு. அப்படியான நேரத்தில் நான் என்ன செய்வேன். இரண்டு கோடி மேல போட்டு போட்டதை எடுப்பேனா? அல்லது முன்று கோடி நஷ்டமாக விடுவேனா?.


விளம்பரத்தைப் பார்த்து தொடர்ந்து திரையரங்கு வரும் மக்கள், ஒரு கட்டத்தில் ஏமாற்றம் அடைந்து திரையரங்கு வருவதை நிறுத்தினால் ?

நம்ம மக்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கு. அவர்கள் மறந்துவிடுவார்கள். ஆண்டவன் கொடுத்த மிகப்பெரிய வரம் அது. மறதியில்லை என்றால் மனிதன் உயிர் வாழ முடியாது.

விநியோக முறையில் விளம்பரத்திற்கு மிக அதிக செலவாகிறது. மாற்று விநியோக முறை ஏதேனும் முன்னெடுக்கும் எண்ணம் இருக்கிறதா ?

மாற்று விநியோக முறை எடுக்கவே முடியாதுங்க. நாமலே தியேட்டர் கட்டுனா தான் உண்டு. தியேட்டரில் திரையிடுவது என்பது சாதரண விஷயமில்லை, அதில் பல விஷயங்கள் உள்ளது. இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், அதற்கான செலவு உண்டு. மக்கள் திருப்தியாக படம் பார்த்து திரும்பச் செல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்யும் செலவை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையும் இப்போது மாறி விட்டது, அதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். வாகனங்களில் வருபவர்களுக்காக இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும், அங்கு இன்னொரு கட்டிடம் கட்டினால் அதை விட நல்ல லாபம் பார்க்கலாம் என அவர்களுடைய பார்வையையும் கணக்கில் வைக்கவும்.
சினிமா என்பது நம்ம இரத்தத்திலேயே ஊறிய விஷயம், அதை தியேட்டரில் பார்ப்பதையே மக்கள் விரும்புவார்கள். அதைத் தவிர்த்து மாற்று விநியோக முறை என்றால், நிறைய டிஜிட்டல் ப்ளாட்பார்ம் உள்ளது. யூ டியுப்(youtube), ஃபேஸ்புக் (facebook), ஆன் லைன் ரிலிஸ் (Online Release), டி.டி.எச் (DTH), பே பெர் வியு (Pay Per View), டிவிடி(DVD) போன்றவை. ஆனால் இதில் வரும் வருமானம் ஐந்திலிருந்து பத்து சதவீதம் மட்டுமே,அதுவும் அந்தப் படம் தியேட்டரில் வெளிவந்து வெற்றி அடைந்தால் மட்டுமே சாத்தியம்.

தியேட்டர் ரிலீஸில் மட்டுமே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். திரைப்பட விழாக்கள், மக்களுக்கான திரையிடல் போன்றவற்றின் மூலம் லாபம் பார்க்கலாம். அப்படியான முயற்சிகள் தமிழில் ஏன் இல்லை ? திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்தால் அதுவே மிக பெரிய விளம்பரமாக அமையும். விளம்பரத்திற்கென்று தனியாக ஒரு தொகை தேவை இருக்காது. அந்த தொகையில் இன்னொரு படத்தை எடுக்கலாம் அல்லவா?

ஒரு விஷயத்தை நன்றாக நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். திரைப்பட விழாவில் ஒரு படத்தை திரையிடுவதிலேயே பல அரசியல் இருக்கிறது. எவ்வளவு தரமான படமாக இருந்தாலும், எல்லா திரைப்பட விழாவிலும் அதை திரையிட மாட்டார்கள். ஐரோப்பாவில் சில திரைப்பட விழாக்கள் இருக்கிறது, அதில் ஒரு விழாவில் திரையிடப்பட்ட படம் இன்னொன்றில் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். ஐரோப்பாவில் அத்துடன் முடிந்து விட்டது. கேன்ஸ்'இல் திரையிட்டால் ஆஸ்கரில் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆஸ்கரில் திரையிட்டால் கேன்ஸில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கனடாவில் திரையிட்டால் மற்ற வட அமெரிக்க நாட்டில் திரையிடுவது கடினம். இதுவே எனக்குக் கிடைத்த தகவல்கள் மூலம் நான் அறிந்தது, எந்தளவுக்கு உண்மையென எனக்கு தெரியவில்லை.

கேன்ஸுக்கு ஒரு படம் அனுப்புவது அவ்வளவு எளிதான விஷயமில்லை. அதற்கான வழிமுறைகள் விதிமுறைகள் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நிறைய செலவு செய்ய வேண்டும், நீங்கள் நினைப்பது போல் சிடி போட்டு ஒரு அப்ளிக்கேஷன் ஃபார்ம் பூர்த்தி செய்து அனுப்பினால் போதாது. அப்படியிருந்தால், உலக முழுக்கவிருந்து எத்தனை படங்கள் கேன்ஸுக்கு வந்திருக்க வேண்டும். ஒவ்வொரு திரைப்பட விழாவின் இயக்குநர் பெரும்பாலும் விழாவிற்கு முன்று-நான்கு மாதங்கள் முன்பு இந்தியா வருகின்றனர். ஒவ்வொரு மொழிக்கும் சில ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் தொடர்பு கொண்டு உங்கள் மொழியில் ஏதேனும் படம் உள்ளதா? என கேட்டு, நாம் இங்கிருந்து மும்பை செல்ல வேண்டும் அல்லது அவர்கள் இங்கு வர வேண்டும். அதற்காக பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் உங்கள் படத்தின் சில காட்சிகளை பார்த்து அவர்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே உங்கள் படம் தேர்வாகும். அவர்களை அழைத்து உங்கள் படத்தைப் பார்க்க வைக்கும் அளவிற்கு உங்களுக்கு செல்வாக்கு இருக்க வேண்டும்.

திரைப்பட உருவாக்கத்திற்காகும் செலவு இங்கு அதிகம் என சிலர் கூறுகிறார்கள். அது உண்மையா ? தமிழில் 30-40 இலட்சங்களில்(விளம்பரத்தை சேர்க்காமல்) தரமான நல்ல படங்களை எடுக்க முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா ?

நிச்சயமாக எடுக்கலாம். தமிழ் சூழலில் 40-50 இலட்சத்தில் தரமான படம் எடுக்க முடியும். ஆனால் அதை யாரிடம் சென்று திரையிடுவீர்கள். திரைப்படத்தைப் பற்றி மட்டுமே பேசுகின்றீர்கள், பார்வையாளரைப் பற்றி பேசமாட்டேன் என்கிறீர்கள். 50 இலட்சத்தில் எடுக்கும் படத்தின் பார்வையாளர்கள் யார்?. அதை தெரியாமல் படம் எடுப்பதாலே பிரச்சனைகள் வருகிறது. இங்கு நடக்கும் வியாபார முறை மிகவும் தவறாக இருக்கிறது. இங்கு எதற்கும் தெளிவு இல்லை. கலை வடிவம் என்றால் என்னவென்ற தெளிவான வித்தியாசம் இல்லை. வியாபாரம் சார்ந்தும் தெளிவான வித்தியாசமில்லை. இங்கிருப்பவர்கள் அவர்களை குறை சொல்வது, அவர்கள் இவர்களை குறை சொல்வதாகவே நிலை இருக்கிறது.
இரண்டுக்கும் இடையில் ஒன்றுள்ளது, அது குறித்தும் யாருக்கும் தெரியாது. எதிலுமே இங்கு தெளிவில்லை, அதுவே பிரச்சனை. 40 இலட்சத்தில் இங்கு படமெடுக்க முடியுமா?முடியாதா? என்ற கேள்வி தேவையேயில்லை. ஏனென்றால் எளிமையாக அது சாத்தியம். நிச்சயம் முடியும். கார்த்திக் சுப்பராஜ் பிட்சா படத்திற்காக எங்களிடம் கேட்டது 70 இலட்சம் ரூபாய் மட்டுமே, நாங்களே 1.75 கோடி என்று சொன்னோம். 70 இலட்ச ரூபாயில் எடுத்தால் தரமாக திரையிட முடியாது என்று கூறினோம். அவர் 1.5 கோடி முடித்து 25 இலட்சத்தை மிச்சம் செய்து கொடுத்தார். யாருக்கு திரையிட போறீங்க?, அவர்களுடைய தேவைகள் என்ன?. அதை நாம் சந்திக்க முடிகிறதா? என்பதே கேள்வி.

மாற்று முயற்சிகள் தமிழில் சாத்தியமில்லை என்று நினைக்கிறீர்களா ?

நிச்சயம் சாத்தியம். நடந்துக்கொண்டும் இருக்கிறது. அதை புரிதலோடு செய்ய வேண்டும் என்றே நான் சொல்லுகிறேன். என்னுடைய இலக்கு என்ன என்பதை பொருத்துதான் என்னுடைய வழி முடிவாகும். இலக்கு தான் பாதையை தீர்மானிக்கிறது, பாதை இலக்கை தீர்மானிக்காது. வணிக சினிமாவின் அத்தனை இன்பங்களும் வேண்டும் ஆனால் நான் மாற்று சினிமா எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களால் மாற்று சினிமாவை எடுக்க முடியாது. வணிக சினிமாவில் பேர் கிடைக்கிறது, புகழ் கிடைக்கிறது, பணம் கிடைக்கிறது, ஆறு மாதத்தில் 50 லட்சம் சம்பளம் அடுத்த ஆறு மாதத்தில் 2 கோடியாக சம்பளம் உயர்கிறது. பென்ஸ் கார், ஜாக்வார் கார்'ல போகனும், பீச் ஹவுஸ் வாங்கனும், இந்த மாதிரி இலட்சியம் உள்ளவர்கள் மாற்று சினிமா குறித்து சிந்திப்பதே தவறு.

மாற்று சினிமா என்றால் பாதை வேறாக இருக்க வேண்டும், ஆனால் இங்கு நடப்பது என்ன?, எடுக்க விரும்பவது மட்டுமே மாற்று சினிமா ஆனால் அது செல்ல வேண்டிய பாதை வணிக சினிமாவுக்கான விளம்பர வழியில். கோவிலில் தண்ணி தெளித்து ஒரு ஆட்டை கொண்டுவந்து அறுப்பதற்கு சமம் அது. தயாரிப்பாளருக்கு தெரியாமலே அவரை அழைத்து ஏமாற்றி இது நல்ல படம், தரமான படம், பார்வையாளர்கள் கொண்டாடுவாங்க, இவங்க கொண்டாடுவாங்க அவங்க கொண்டாடுவாங்க என சொல்லுவார்கள். பத்திரிக்கையில் கொண்டாடுவார்கள், ஃப்லிம் ஃபெஸ்டிவலில் கொண்டாடுவார்கள், திரைப்பட சங்கங்கள் கொண்டாடுவார்கள் எல்லாரும் கொண்டாடுவார்கள், அதை நான் மறுக்கவேயில்லை, ஆனால் தயாரிப்பாளரின் நிலமை. அவருக்கு தெரியாமல் இப்படி செய்ய கூடாது என்றே நான் சொல்கிறேன்.

நான் மாற்று சினிமா எடுக்க தயாராக இருக்கிறேன். உம்மியை நான் கொண்டு வரேன், அரிசியை நீ கொண்டு வா, இருவரும் ஊதி ஊதி சமமாக திங்கலாம் என்பது எவ்வளவு முட்டாள்தனமான விஷயமோ, அதே போல 5கோடி ரூபாயில் மாற்று சினிமா எடுப்பது முட்டாளத்தனமான செயல். 30 லட்சத்துக்கு எடுக்கப்படும் மாற்று சினிமாவை 25 லட்சத்துக்கு எளிமையாக சந்தைப் படுத்திவிடலாம். பத்திருபது லட்சம் லாப நட்டம் என்பது உள்ளடக்கத்தை பொருத்து, சூது தெரியாதவன் இந்த தொழிலை செய்ய முடியாது. எல்லா படத்திலும் கணக்கு பாத்தே துணிந்து முயற்சி எடுக்கிறோம். இந்தப் படத்தை லாபம் பார்த்தால் 2 கோடி வரும், நட்டமானால் 1 கோடி ரூபாய் போகும். நான் அந்த 1 கோடி நட்டத்திற்கும் தயாராக இருக்கிறேன். 2 கோடி லாபத்திற்கும் தயாராக இருக்கிறேன். இதுவே இந்த தொழிலின் இயற்கை. தொழில் தெரிந்து நான் இதை செய்கிறேன்.
வணிக சினிமா தயாரிப்பாளர்கள் மாற்று சினிமா தயாரிக்க ஒப்புக்கொள்வது கிடையாது. வெளியில் இருப்பவர்களை தயாரிப்பாளராக அழைத்து வந்து அவரை தெரியாமலே ஈடுபடுத்த வைத்து, அதை என்ன பட்ஜெட்டில் எடுக்க கூடாதோ அதை தாண்டிய பட்ஜெட்டில் எடுக்க வைத்து அவருடைய வாழ்வாதரத்தையும் சேர்த்து அழித்துவிடுகின்றனர். கடந்த மாதம் வெளியான ஒரு படம், எனக்கு தெரிந்த வட்டத்தில் நல்ல படமென்று பெயர் வாங்கிய படம். 1.25 கோடி ரூபாய்க்கு படம் எடுத்தார்கள், 40 லட்சத்துக்கு விளம்பரம் செய்தார்கள். 1 கோடி 65 லட்சம் செலவாச்சு, ஆனால் அந்த் தயாரிப்பாளருக்கு 5 லட்சம் கூட திரும்ப வரவில்லை.

பொது மக்கள் திரையிடல் குறித்து ?

நீங்க முயற்சி பண்ணுங்க. முயற்சி செய்து சாத்தியம் என காட்டுங்க. நானே ஆதரவளிக்கிறேன், நான் மட்டுமல்ல அனைவரும் ஆதரவளிப்பார்கள். முன்னோடி இல்லாததே பிரச்சனை. உங்களை எப்படி நம்புவார்கள். சென்ற வருடம் 167 தமிழ் படங்கள் வெளியானது, அதில் 7% படங்கள் மட்டுமே லாபம் கொடுத்தது. 10% படங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுத்தது. 83% நட்டம், அதில் 3% ஓரளவான நட்டம், 80% மிகப்பெரிய நட்டம் அடைந்தது.

மக்கள் நல்ல படங்களை பார்க்க வருவதில்லை அதனால் தான் கமர்சியல் மசாலா படங்களை எடுக்கிறோம் என தொடர்ந்து சில தயாரிப்பாளர் கூறுகிறார்கள். இது உண்மையா?

மக்கள் நல்ல படங்களை பார்க்கிறார்கள். என்னை பொருத்தவரை, மக்கள் பார்க்கும் அனைத்து படமுமே நல்ல படம். பெரும்பாலான பார்வையாளர்களுக்கு படம் பிடித்திருந்தால் அது நல்ல படம் தானே, அந்த கருத்தை நீங்கள் எப்படி மறுக்க முடியும்.

கலை படங்களுக்கு இரசிகர் வட்டம் மிக குறைவு. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் மட்டுமே கொண்டாடப்படும். அவர்களுக்குள் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும். அதற்கேற்ப அந்த படங்களுக்கு தயாரிப்பு செலவும் விளம்பர செலவு இருக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறேன். உதாரணத்திற்கு சொல்லுகிறேன், இன்று கோ-ஆப் டெக்ஸ் இருக்கிறது, பட்டு ஜவுளி கடை, அயல் நாட்டு ஆடை அங்காடிகளும் இங்கு இருக்கிறது. தி.நகரில்500 ரூபாயில் ஆரம்பித்து 5000 ரூபாய் வரை சட்டை விற்கிறார்கள். கோ-ஆப் டெக்ஸ் நம்ம நாட்டுக்கு ஏற்றது தான், எத்தனை பேர் அங்க வாங்கறோம். வருடத்திற்கு ஒரு ஆடையாவது கோ-ஆப் டெக்ஸில் வாங்குகிறோமா?.மக்களோட விருப்பத்தை சார்ந்தே இருக்கிறது. அன்று வேட்டி கட்டிக்கொண்டிருந்தார்கள், இன்று கட்டுகிறோமா?. யாராவது நம்மை கட்ட கூடாது என்று சொன்னார்களா. இதை மறுக்க முடியாது, இது போன்ற உளவியல் ரீதியான வெளிபாடுகளே அனைத்தையும் முடிவு செய்கிறது. காலத்திற்கேற்றவாரு நாம் மாறிக்கொண்டே வருகிறோம்.

அறிவு ஜீவிகளென நம் வட்டாரத்தில் சொல்லும் சிலர், சமூக கருத்தை கண்ணீரை வரவைத்து உணர்ச்சி பூர்வமாக சொன்னால் மட்டுமே தரமான உலக சினிமா என்கிற தோற்றத்தை இங்கு உருவாக்கி விட்டார்கள். உலக சினிமா என்றாலே கஷ்டத்தை சொல்லனும் என்பது தான் என்னை பொருத்தவரை இங்கு இருக்கும் புரிதல். அதற்கென்று மற்றவர்கள் வாழ்வதெல்லாம் வாழ்க்கை கிடையாதா ?

இயல்பாக இல்லாமல் பிரம்மாண்டத்துடன் காட்சிப்படுத்துவது சரியா ?

இங்கு சினிமா ஆரம்ப காலத்தில் பக்தி இலக்கியம் சார்ந்தும், பின்பு மன்னர் கதைகள், அதன் பின்பு குடும்ப உறுவுகள் சார்ந்தும், அடுத்த கட்டமாக நாயகனை மையப்படுத்தி திரைப்படங்கள் வர ஆரம்பித்தது. இயக்குநர் க்ளைமாக்ஸில் சொல்வதை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அதைச் சொல்லும் கதாபாத்திரம் வலுவாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நம்மையே அறியாமல் அதனால் ஒரு நாயக பிம்பம் உருவாக்கப்பட்டே ஆக வேண்டும். ஒரு விஷயம் நான் சொல்ல வேண்டுமென்றால், நான் செய்ய கூடியது சாத்தியமா என பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். எல்லாரையும் வைத்து ஆக்‌ஷன் படம் எடுக்க முடியாது. புதுசா ஒரு கதாநாயகனை வைத்து ஆக்‌ஷன் படம் எடுக்க முடியாது. அதே போல் ஆக்‌ஷன் நாயகனை வைத்து கலை படம் செய்வதும் மிக கடினம்.

எல்லாவற்றையும் ஒன்றாக கலக்காதீர்கள் என்று சொல்லுகிறேன். இது மிகப்பெரிய தொழில் துறை. இங்கு எல்லாவிதமான ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எதில் பயணம் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த படகில் ஏறி நீங்கள் செல்லலாம். எல்லா படகுகளும் ஒரே இடத்திற்கு செல்ல வேண்டுமென நீங்கள் எப்படி சொல்ல முடியும். உங்களுக்கு தேவையான படகில் நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள், அதற்காக அடுத்தவன் செய்யும் பயணத்தை தவறு என சொல்லாதீங்க. அவர்கள் பார்வையில் அவர்கள் செய்வது சரி. எல்லாருக்கும் அவரவர் தரப்புக்கென்ற ஒரு நியாயம் இருக்கிறது.

நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்கள் பட்ஜெட்டுக்கு பெரிய நடிகர்களை நாடி செல்ல முடியாது, கடன் வாங்கி தொழில் செய்ய முடியாது, எங்களுக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். நீங்களும் ஒரு பாதை அமைத்து அதில் செல்லுங்கள். அடுத்தவர்களை நமக்காக மாற வேண்டும் என எப்படி சொல்ல முடியும்.

நல்ல படங்கள் தமிழிலும் இந்தியளவிலும் எப்படி வெற்றி பெற்று லாபம் பார்த்தது?

நிச்சயம் நம்மிடத்தில் அதற்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன. நல்ல படங்கள் ஓரளவேனும் வெளி வந்து மக்களின் இரசனையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமல்லவா ? அதே வேலையில் திரைப்பட சங்கம் மற்றும் இன்னப்பிற வழிகளிலும் மக்களின் இரசனையை உயர்த்த பணி செய்ய வேண்டும். இரண்டு பக்கமும் இதற்கான வித்து இருக்க வேண்டுமல்லவா ? தரமான நல்ல படங்கள் கணிசமாக தயாரிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் அதை மறுக்கவில்லை. அந்த மாதிரியான இரசிகர்களை தயார்படுத்தனும். இது தொடர்ந்து நடக்க வேண்டிய ஒன்று. ஒன்றை ஒன்று சார்ந்தும் இருக்கிறது. அதற்காக வலிந்து திணிக்க முடியாது. எந்த ஒரு படத்தையும் நீங்கள் பார்த்தே ஆக வேண்டும் என சொல்ல முடியாது. இது சரி, இது தவறு என யாரையும் கட்டாய படுத்த முடியாது. தனித்துவம், எனக்கென ஒரு அடையாளம் என்பது இன்று வந்துவிட்டது. அப்படியான தளத்திலே நாம் இயங்கி கொண்டிருக்கிறோம். கணவன் - மனைவி உறவிலேயே இன்று இது உள்ளது, எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன், உனக்கு பிடித்ததை நீ செய், எல்லையை ஏன் நீ கடக்கிறாய் என்ற நிலையில் சமுதாயம் இன்று உள்ளது. முறையான செயல் திட்டமில்லாமல் இதை செய்ய முடியாது. பொத்தாம் பொதுவாக இதை பேச முடியாது. இதற்கான இரசிகர் வட்டம் உருவாக்க வேண்டும்,அவர்களுக்காக படம் வேண்டும், அப்போது அந்த படத்தை யார் தயாரிப்பார்?. வெளியிலிருந்து யாராவது ஒருவரை அழைத்து வரவேண்டும் என சொல்லுவார்கள்.

தமிழிலும் அப்படியான படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அது போன்ற படங்கள் நிறைய வெளிவராமல் இருக்கிறது. அப்படியான படங்களை ப்ரிவியு காட்சியில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். வணிக ரீதியாக நாம் ஆதரவு கொடுக்க முடியாதளவு அவர்கள் எடுத்து வைத்திருப்பார்கள். இரண்டு கோடி அல்லது மூன்று கோடி செலவு செய்துள்ளார்கள் என்று சொன்னால், நாம் என்ன செய்ய முடியும்.

மக்களிடமிருந்து நிதி திரட்டி "Crowd Fund" மூலம் படம் எடுக்கும் முறையும் உள்ளது. இது போன்ற சினிமாவிற்கு ஒரு கோடி ரூபாயில் நல்ல படம் எடுக்கலாம் என நம்பிக்கை இருக்கிறது. அப்படியான படத்திற்கு பத்து இலட்சமோ பதினைந்து இலட்சமோ என்னால் கொடுக்க முடியும், அதற்கு மேல் முடியாது. எனக்கு பிடித்த துறை என்பதால், ஆண்டுக்கு இருபது இலட்சம் வரை செலவழிக்க நான் தயாராக இருக்கிறேன். அது போன்ற ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்றினைக்கனும். அதற்கான ஒரு இயக்கத்தை இங்கு உருவாக்கனும்.

ஒர் சிறிய குழுவை வைத்துக்கொண்டு உலகளவில் வெற்றிகரமாக சிலர் தரமான சினிமா எடுக்கிறார்கள். வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் அதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அப்படியான முயற்சிகள் சாத்தியமா ? மிக அதிகமான technicians ஒரு படத்திற்கு தேவையா ?

இது சாத்தியமாக வேண்டுமென்றால், நடைமுறையில் இருக்கும் முறை மாற வேண்டும். கலை படத்திற்கென்ற ஒரு தனி வேலை முறை கொண்டு வர வேண்டும். ஃபெஃப்சி, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என அனைத்து சங்ககளும் சேர்ந்து கலை படங்களுக்கு சலுகை கொடுக்க ஒப்புக்கொள்ள வேண்டும். கலை படங்களுக்கு தேவையானளவு அவர்களது வாகனங்களையும், அவர்களுக்கான கலைஞர்களை வைத்துக்கொண்டு அவர்களே படப்பிடிப்பு செய்யலாம் என்று விதி முதலில் வர வேண்டும்.

இப்போது அப்படியான சூழ்நிலை இல்லையா? சுயாதீன இயக்குநர்கள் படம் எடுத்து திரையிட முடியாதா?

சுயாதீன இயக்குநர்கள் தயாரித்து திரையரங்கில் திரையிட முடியும் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. இங்கு சினிமா வொர்க்கர்ஸ் யுனியன் இருக்கிறது. அவர்களை வைத்து தான் தயாரிப்பு சங்கத்தில் இருக்கும் என்னை போன்றவர்கள் சினிமா எடுக்க வேண்டும். இப்படியான சூழல் இருக்கவும் காரணங்கள் இருக்கிறது. அடிமட்ட தொழிலாளர்கள் அன்றைய தின வருமானத்தை நம்பியே இருக்கிறார்கள். சில தயாரிப்பாளர்கள், நீங்க வேலை செய்யுங்க அடுத்த வாரம், பத்து நாள் கழித்து சம்பளம் தருகிறேன் என்று சொல்லுவார்கள். பத்து நாள் கழித்து காசில்லையென்று ஊருக்கு சென்றுவிட்டால், பத்து நாள் வேலை பார்த்த காசை யாரிடம் வாங்குவது?. அந்த குறிப்பிட்ட சங்கம், தயாரிப்பாளரிடம் பேசி பணத்தை வாங்குவார்கள். அதற்காகவே சங்கங்கள் மூலம் சில கட்டுபாடுகள் உள்ளது.
மாற்று சினிமாக்களுக்கான வேலை நடைமுறையை மாற்ற வேண்டும். அதற்கான சூழ்நிலையை முதலில் உருவாக்க வேண்டும். இரசிகர் வட்டம் என்பது ஒன்று, அதே போன்று தயாரிப்பு சார்ந்தும் சில மாற்றங்கள் தேவை. இப்படியான படங்களுக்காக ஒரு குழுவோ இயக்கமோ உருவாக வேண்டும். இதற்கான முன்னெடுப்பகள் நடக்க வேண்டும். ஃபெஃப்ஸியில் விதிவிலக்கு கோரி பேச வேண்டும். திரைப்பட விழாக்களுக்கான படங்களுக்கென சில விதிகளை தளர்த்துமாறு சங்ககளை கேட்க வேண்டும். முன்னெடுப்புகள் தேவை.

உங்களை TREND SETTER என்று சிலர் சொல்லுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறீர்களா ?

அப்படியெல்லாம் நினைப்பது கிடையாது.

மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்து நீங்கள் மாறுப்பட்டு வேறுவிதமான படம் தயாரிப்பதால், அப்படிச் சொல்ல வாய்ப்புண்டா ?

இங்கு வழக்கமான பாணியில் படங்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து விலகி படம் தயாரிக்கும் போது, அதை ஒரு முயற்சி என்று அங்கீகரிக்கிறார்கள். இந்த அங்கீகரிப்பின் மூலம் என்னைப் போன்று இன்னும் நான்கு பேர் வருவார்கள். அந்த நால்வரில் ஒருவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்லலாம்.

நீங்கள் தயாரித்தது மற்றும் இன்னும் சில படங்களை மாற்று சினிமா என்றும், அதன் இயக்குநர்களை புதிய அலை இயக்குநர்கள் என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். இந்த கூற்றில் உங்களுக்கு உடன்பாடு உண்டா ?

புதிய அலை என்று சொல்வதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரு தலைமுறை சென்று அடுத்த தலைமுறை இளைஞர்கள் வந்துள்ளனர், அப்போது அதை புதிய அலை என்று தானே சொல்ல வேண்டும். அவர்களின் திரை மொழி, தொழில்நுட்பம், கதை சொல்லும் விதம் என எல்லாவற்றிலும் புதிதாகவே செய்கிறார்கள். அதனால் புதிய அலை என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
பிரான்சின் புதிய அலை இயக்குநர்களுடன் இவர்களை ஒப்பிடுகிறார்கள் ?

பிரான்சின் புதிய அலையும் எனக்கு தெரியாது., இத்தாலியின் புதிய அலையும் எனக்கு தெரியாது. அது குறித்து நான் கேள்விப்பட்டதில்லை.

வெகுஜன அல்லது commercial படங்களை மட்டுமே நீங்கள் தயாரிப்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆர்ட் சினிமா என சொல்லப்படும் மக்களுக்கான கலை படங்கள் நீங்கள் தயாரிக்க வாய்ப்பிருக்கிறதா ?

நிச்சயமாக தயாரிப்போம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறோம். Crowd funding மூலம் கலை படங்களை செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறோம். அனைவரிடமும் சென்று பணம் வாங்காமல், என் அலைவரிசையில் உள்ள 20-30 பேரைக் கண்டு பிடித்து, நமக்குப் பிடித்த ஒரு விஷயத்திற்காக வருடத்திற்கு பத்து லட்சம் செலவு செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறோம். இரண்டு கோடிகளுக்குள் வருடத்திற்கு அது போன்று இரண்டு படங்கள் தயாரிக்கலாம் என்று நினைக்கிறோம். அதற்கேற்ப விளம்பரமும் செய்து, பார்வையாளர்களிடம் அதைச்சென்று சேர்ப்பதற்கான முயற்சிகளும் எடுக்க உள்ளோம். அதுவும் எங்களுடைய வணிக எல்லைக்குள் உட்பட்டே.

மலையாளத்திலும் இந்தியிலும் குறும்படங்களின் தொகுப்பு திரைப்படமாக வெளியாகியுள்ளது. அப்படியான முயற்சி தமிழில் சாத்தியமா ? குறும்பட இயக்குனர்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் நீங்கள் இந்த முயற்சியை தமிழில் முன்னெடுக்க வாய்ப்பு இருக்கிறதா ?

அனைவரும் ஒரு முனையிலிருந்தே யோசிக்கிறார்கள். உள் அடக்கம் சார்ந்தே பேசுகின்றார்கள். அது போன்ற முயற்சிகளுக்கான வரவேற்புகள் இங்கு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாமல் எப்படி ஈடுப்பட முடியுமா. ஒவ்வொரு கலாச்சாரமும் மாறும், வேறு இடத்தில் வெற்றி பெற்றது இங்கும் வெல்லும் என சொல்ல இயலாது. காலம் மாறலாம், பத்தாண்டுகள் கழித்து இப்படியான திரைப்படங்கள் உருவாகலாம். இன்றைய நிலைமையில் அதற்கான சாத்தியம் மிக குறைவு.
ஆவணப்படங்களை உருவாக்குவது தமிழ் சூழலில் மிகவும் கடினமான ஒன்று. நல்ல ஆவணப்படங்களை தயாரிக்கவோ அல்லது இணை தயாரிப்பாளராக இருக்க நீங்கள் முன் வருவீர்களா ?

ஆவணப்படத்தின் கரு'வை பொருத்தது அது. எனக்கு பிடித்தமான விஷயமாக இருந்தால் நிச்சயம் செய்வேன்.

இந்தியில் திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தில் DVD வெளிவந்து விடுகிறது மற்றும் DTH'லும் திரைப்படங்களை சிறிய தொகையை செலுத்தி பார்க்க முடிகிறது. தமிழில் ஏன் அது நடப்பதில்லை ?

சாட்டிலைட் உரிமத்துடன் இவையெல்லாம் சேர்த்து விற்கப்படுகிறது. DTH, payperview, டிஜிட்டல் மீடியம், யுடுயுப், டிவிடி, விசிடி, MOD இது போன்று எலக்டாரின்க்ஸ் மீடியம் உரிமங்கள் அவர்களுக்கு கொடுத்துவிடுகிறோம். அவர்கள் அதை சரியாக உபயோகிப்பதில்லை.

இந்தியில் திரைப்படங்களை ஒரு குறிப்பிட்ட சேனல்களுக்கும் மட்டும் கொடுக்காமல், per screening based ஒப்பந்தம் செய்கிறார்கள். தமிழில் ஏன் அப்படியான முயற்சிகள் நிகழ்வதில்லை. ?

நடக்கும். இனி வரும் காலங்களில் தமிழில் இது போன்ற முன்னெடுப்புகள் இருக்கும். அதற்கான முயற்சிகள் இங்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இணைய வேகம் முன்பில்லாதது போல் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. இணையத்தளத்தில் பணம் செலுத்தி பார்க்கும் முயற்சிகள் தமிழில் ஏன் இல்லை ? இது நீண்ட காலத்திற்கு வருமானம் தரக்கூடிய ஒன்றல்லவா. தரமான ஒளி/ஒலியுடனே பார்க்க பெரும்பாலானோர் விருப்ப படுவார்கள், அதற்கு செலுத்தும் சிறு தொகை நிச்சயம் ஒரு பொருட்டாக இருக்காது.?

சரியான முறை போல் தோன்றும். ஆனால் வருவாய் அதிகமாக இருப்பதில்லை. டாரன்ட்ஸில் இலவசமாக இருக்கும் போது பணம் கொடுத்து எதற்கு வாங்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இதை செய்ய வேண்டுமென்றே நினைக்கிறார்கள், ஆனால் யதார்த்தம் செய்ய விடுவதில்லை.

சாட்டிலைட் உரிமம் சேர்த்தே விற்கப்பழகி விட்டோம். ஆரம்பத்திலிருந்து அப்படியே இருக்கிறது. இப்போது மாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள். வருங்காலங்களில் நடக்க வாய்ப்பிருக்கிறது.

சுயாதீன திரைக்கலைஞர்கள் குறித்து?

யாரை சுயாதீன கலைஞர் என சொல்லுகிறோம் என்பதும் இதில் கருத்தில் கொள்ள வேண்டும். இயக்குநரா அல்லது தயாரிப்பாளரா ?.

சுயாதீன திரைக்கலைஞர்கள் எடுக்கும் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை என்பதற்கு சில காரணங்கள் இருக்கிறது. நடிகர், நடிகை, குண சித்திர நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர்,படத்தொகுப்பாளர், கலை இயக்குநர் என மேல் மட்டத்தில் சிலர் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் என்றும் ஒருவர் உள்ளார். எங்காவது அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதா? மற்ற எல்லாருக்கும் கொடுக்கும் அங்கீகாரத்தை விட ஒரு 10% தயாரிப்பாளர்களுக்கு அதிகமான அங்கீகாரம் கொடுத்திருந்தால் மாற்று சினிமாவிற்கு ஆதரவளிக்க சிலர் வந்திருப்பார்கள். தயாரிப்பாளரை ஒரு மனிதராகவே இங்கு பலர் கருதுவதில்லை. ATM இயந்திரம் போலத்தான் பார்க்கிறார்கள், அப்படியான பார்வை முதலில் மாற வேண்டும். இப்படியான படங்கள் தயாரிக்கும் போது அங்கீகாரம் கிடைக்கிறது என்பதற்காகவே நிறையவர் வருவார்கள். இன்று சினிமாவில் முதலீடு செய்பவர்கள் லாபத்தை எதிர்பார்த்து செய்பவர்கள் கிடையாது, அவர்களுக்கு தேவை ஒரு அங்கீகாரம். எந்த பத்திரிக்கையிலாவது படத்தில் தயாரிப்பாளர் குறித்து குறிப்பிடுகிறார்களா ? திரைப்பட விழாவில் இயக்குநருக்கு இருக்கும் அங்கீகாரம் ஏதாவதொரு தயாரிப்பாளருக்கு இருக்கிறதா?

சுயாதீன இயக்குநர்களை பத்திரிக்கைகள் அங்கீகரித்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் கிடைப்பார்கள். வெகுஜன மக்களோ அல்லது வெகுஜன பத்திரிக்கைகளோ அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாற்றும் சினிமாவை அங்கீகரிக்கும் இரசிகர்கள் அல்லது அது சார்ந்த பத்திரிக்கைகள் அல்லது அது சார்ந்து இயங்கும் அறிவு ஜீவிகளின் அங்கீகாரம் இருந்தால் போதும், அதன் மூலமாகவே தயாரிப்பாளர் கிடைக்க வாய்ப்புண்டு.

பணம் முதலீடு செய்கிறேன், பணம் திரும்ப வரவில்லை. குறைந்த பட்சம் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமல்லவா?. கலை படம் எடுத்த எந்த தயாரிப்பாளருக்கு திரைப்பட விழாவில் விருது கொடுத்தார்கள். இயக்குநருக்கு கொடுப்பது சரி, அந்த படத்தை தயாரித்தவருக்கும் கொடுப்பதில் என்ன தவறு இருக்க போகிறது. இதை செய்ய ஏன் மறுக்கிறார்கள் என்று புரியவில்லை. அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் பணம் சார்ந்தே இயங்க வேண்டி வரும்.

தயாரிப்பாளர் கிடைக்காததாலே அவர்கள் சுயாதீன இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்கள். எந்த ஆதாயமும் இல்லாததாலே தயாரிப்பாளர்கள் முன்வர மறுக்கின்றனர். நல்ல படம் எடுத்த தயாரிப்பாளருக்கு சரியான முறையில் அங்கீகாரம் இல்லை. எந்தவொரு தயாரிப்பாளரின் பேட்டியையாவது தொலைக்காட்சியில் பார்த்ததுண்டா?

கதை திருட்டு மற்றும் காட்சி திருட்டு குறித்து உங்கள் கருத்து?

நிச்சயம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சில நேரத்தில் ஒரே விஷயத்தை சார்ந்து இருவர் ஒன்று போல் சிந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது போன்ற நேரத்தில் யார் சொல்வது உண்மை என நிருபிக்க முடியாது. காட்சி திருட்டு என்பது மிகவும் தவறான செயலாகும். அப்படி அந்த காட்சியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டி வருமாயின் அதற்கான க்ரெடிட்ஸ் கொடுப்பது நல்லது. இந்த படத்தின் தாக்கத்திலிருந்த எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடலாம். அடுத்தவரின் உழைப்பை நம் உழைப்பு என சொல்வது மிக தவறான செயலாகும்.

ஒரு படத்தை தயாரிக்க எதன் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறீர் ? நீங்கள் பின்பற்றும் வழி முறையென்ன ?

முதலில் அந்த கதை எனக்கு பிடித்திருக்க வேண்டும். அடுத்து பட்ஜெட். சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற கருத்தியல் என்னிடம் கிடையாது. கதைக்கு தான் பட்ஜெட். என்ன கதையெடுக்க போகிறோம்?, அதற்கு எவ்வளவு செலவு செய்ய போகிறோம். கதையின் பட்ஜெட் எவ்வளவு என மதிப்பிட்டு முடிவுக்கு வரவேண்டும். அந்த பட்ஜெட்டுக்குள் இயக்குநர் படமெடுக்க திறமையானவராக இருக்கிறாரா? என்பதை மதிப்பிட்டு முடிவு செய்ய வேண்டும். அதன் பின்பே மற்ற விஷயங்கள்.

உங்கள் TEAM குறித்தும் சொல்லுங்களேன் ?

ஐந்து ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள், படத்தொகுப்பாளர் லியோ, இசையமைப்பாளர் சந்தோஷ், நிவாஸ், சாம், இப்போது புதிதாக ஆதி. நான் தயாரிப்பாளர் அவர்கள் வேலை செய்பவர்கள் என்று எப்போதும் வேலை பார்த்தது கிடையாது. ஆரோக்கியமான விவாதத்திற்கு பின்பே சரி என சொல்லுவோம். அவரவர் துறையில் மற்றவர்கள் தலையிட மாட்டார்கள். ஒவ்வொருவரின் பணி சுதந்திரத்தை உறுதி செய்கிறோம். ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு அடுத்தவரின் வொர்க் ஸ்டைலை பாதிக்காத அளவுக்கு அனைவரும் பணி புரிவோம். ஆரம்பத்திலிருந்தே ஒரு அணியாகவே பணி செய்கிறோம்.
மூன்றாண்டுகள் ARENA மல்டிமீடியாவில் படித்தது, திரைப்பட உருவாக்கத்தில் எந்தளவு உங்களுக்கு உதவுகிறது ? அனிமேஷன் சார்ந்த படங்களுக்கு முன்னுரிமை அளிப்பீரா ?

மிக அதிகமாக உதவியிருக்கிறது. தொழில் நுட்பரீதியாக அங்கு புத்தகத்தில் படித்தது, சினிமாவினுள் வந்தவுடன் எளிதாக புரிந்தக்கொள்ள உதவியது. கேமரா குறித்து தெரிந்துகொண்டேன். படத்தொகுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், பிரிமியரில் எதையாவது எடுத்து எடிட் பண்ணிட்டு இருப்பேன். ஸ்கிர்ப்ட் குறித்தும் அங்கு சொல்லிக்கொடுத்தார்கள், அதுவும் இங்கு வந்தபின் உதவியது.

அனிமேஷன் சார்ந்த திரைப்படங்கள் எடுக்க ஆசை உள்ளது. அனிமேஷன் சார்ந்த ஈடுபாடும் எனக்கு உண்டு. கதையும் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். ஆனால் அதற்கான பட்ஜெட் மட்டுமே பிரச்சனை. அதற்கு தேவையானளவு செலவு செய்ய இயலாத நிலை. என்னுடைய நண்பர் மணிகன்டன், அவருடன் பெரும்பாலும் அனிமேஷன் சார்ந்து உரையாடுவது உண்டு. அட்டகத்தி முடித்தவுடன் ஒரு அனிமேஷன் படம் துவங்கலாம் என்ற யோசனையில் இருந்தோம். ஆனால் அதற்கான சாத்தியங்கள் ஏற்படவில்லை. கண்டிப்பாக வருங்காலத்தில் எடுப்போம் என நம்புகிறேன்.

ஒரு திரைப்படத்தில் விநியோகஸ்தர்களின் தலையீடு எந்த அளவிற்கு இருக்கிறது ?

தலையீடே கிடையாது.

கிட்டத்தட்ட நூறுவருட தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்கள் எடுத்த இயக்குநர்கள் என சிலரைச் சுட்டுக்காட்டலாம். நல்ல தயாரிப்பாளர்கள் என யாரைச் சுட்டிக்காட்டுவீர்கள் ? காரணம் என்ன?

நெறையப் பேர் இருக்காங்க. ஏ.வி.எம் நிறுவனம், ஜெமினி ஸ்டுடியோஸ், மார்டர்ன் தியேட்டர்ஸ், பிரசாத் ஸ்டுடியோ, விஜயா-வாஹினி என பலர் இருக்கிறார்கள். இவர்களே முன்னோடிகள். எல்லாவித திரைப்படங்களையும் எடுத்துள்ளனர். சினிமாவை ஒரு தொழிலையும் தாண்டி நேசித்தனர். இன்று சினிமா இங்கு உயிர்த்து இருப்பதற்கு அவர்களே காரணம். அவர்கள் இல்லையென்றால் இன்று இந்த நல்ல நிலையில் இருந்திருக்க முடியாது.

ஐந்து ஆண்டுகள் கழித்து நீங்கள் தமிழக/இந்திய/உலக சினிமாவில் எந்த நிலையில் இருப்பீர்கள் என எண்ணுகிறீர் ?

அதெல்லாம் நிச்சயம் சொல்ல முடியாதுங்க. சுனாமி அலை இருக்கும் தொழில் துறை இது. எந்த சுனாமி நம்மை எங்கு தூக்கி வீசும், மேல தூக்கி வீசுமா அல்லது கடலுக்குள்ள விட்டுவிடுமோ என யாருக்கும் தெரியாது. தற்போதையளவில் நன்றாக சென்று கொண்டிருக்கிறோம். இதை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறோம். அனைத்து மொழியிலும் படம் பண்ண வேண்டுமென ஆசையிருக்கிறது, எனது இலட்சியம் அது. அதை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். மலையாளத்தில், தெலுங்கில், கன்னடத்தில், இந்தியில், பெங்காலியில் படம் பண்ண ஆசை. கன்னடத்தில் அடுத்த வருடம் செய்கிறோம், மலையாளத்தில் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறோம். தெலுங்கிலும் முயற்சி நடக்கிறது. 2015'இல் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் பண்ண வேண்டுமென்ற இலக்கு இருக்கிறது, அதை நோக்கி பயணம் செய்கிறோம். எவ்வளவு தூரத்திற்கு அது சாத்தியம் என தெரியாது. பொருளாதார சூழ்நிலை என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
மாற்று சினிமா கனவா ? நிஜமா ?

மாற்று சினிமா யதார்தத்திற்கு எப்போது திரும்புகிறதோ அப்போது அது சாத்தியம். யதார்த்தம் என்பது நான் முன்பு குறிப்பிட்டதையே குறிக்கிறது. வணிக எல்லைக்கு உட்பட்டு இங்குள்ள நிலமைக்கு ஏற்றது போல் செயல்படுவது. அதில் ஈடுபடுவர்களின் நோக்கமென்ன, எந்தளவு அவர்கள் இதில் ஈடுபாட்டோடு இருக்கிறார்கள். அவர்களின் இலக்கு என்னவாக இருக்கிறது. மாற்று சினிமா எடுக்க வேண்டும் என்று இருக்கிறார்களா அல்லது இயக்குநராக ஜெயிக்க வேண்டும் என்று இருக்கிறார்களா.

மாற்று சினிமாவிற்கான சூழல் வர வேண்டும், புரிந்துக்கொள்கிற தயாரிப்பாளர்கள் வர வேண்டும். இதை சரியாக புரிந்துக்கொண்டு இயக்கும் இயக்குநர்கள் வர வேண்டும். இப்படியான படங்களை எடுக்கும் தயாரிப்பாளருக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இவையெல்லாம் கூடி வர வேண்டும். இன்று அது கனவாகத்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது அது யதார்தத்துக்கு திரும்பினால் நிஜமாக மாறிவிடும்.