திரைப்பட நடிகர் : இயக்குனரின் பார்வையில்

ஒரு திரைப்பட நடிகர் புரிந்து கொண்டுதான் நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நடித்தாலே போதுமானது. நடிக்க வேண்டுமென்றால் புரிந்து கொள்ள வேண்டுமே என ஒருவர் எண்ணலாம். அது அவ்வாறல்ல, அப்படியிருப்பின் , அறிவுக் கூர்மையுள்ள நடிகர், சிறந்த நடிகராகவும் ஆகி விடுவார். உண்மை இதற்கு நேர்மாறாகவே உள்ளது.
ஒரு நடிகர் அறிவுக் கூர்மையுள்ளவராக இருப்பாரேயானால், திறமையான நடிகராக அவருக்கு மும்மடங்கு உழைப்பு அவசியமாகிறது. அவர் தனது புரிந்து கொள்ளுதலை ஆழமாக்க விரும்புவார். அதனால் பல விஷயங்களை தனது கருத்தில் கொண்டு கூர்ந்தறிவார். இவ்வாறு செய்கையில் அவருக்கு உரிமையில்லாத காரியங்களில் தலையிட்டு, உண்மையில் அவருக்கு அவரே தடையாகிறார்.

ஒரு நடிகர், ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது, தன்னுடைய இயல்பான குணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவராகவும், கதாபாத்திரத்தின் தன்மை ஒன்றினையே எதிரொளிப்பவராகவும் விளங்குகிறார். ஒரு நடிகர், படப்பிடிப்புக்கு வரும்பொழுது எவ்வித மன தாக்கத்திற்கும் உள்ளாகாமல், தெளிவாக வருதல் வேண்டும். அவ்வாறின்றி மனதில் ஏந்த உணர்வுடன் வருகிறாரோ, அவ்வுணர்வையே அவர் தன் நடிப்பில் வெளிக் கொணருவார்.

ஒரு திரைப்பட நடிகர் உளவியல் அடிப்படையில் நடித்தல் இயலாது. கற்பனை அடிப்படையில் தான் நடிக்க வேண்டும். அக்கற்பனையான நிலையினைக் கூட அவர் உடனே எட்டும் மனப்பக்குவம் பெற்றிருத்தல் அவசியம். அந்நிலைக்கு எந்தவிதமான இடை நிலைகளோ, பிறவற்றை சார்ந்து நிற்கும் தன்மையோ இருக்கக் கூடாது.

ஒரு நடிகரும், இயக்குநரும் இணைந்து பணிபுரிந்தாலும், உண்மையில் ஒருமித்த நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இருவரும், இரு மாறுபட்ட நிலையில் பணியாற்றுவார்கள். இயக்குநர்கள், படத்தில் இடம் பெறும் அனைத்து கதாபாத்திரங்களைப் பற்றியும், பொதுவான விளக்கம் தரவே கடமைப்பட்டுள்ளார். விளக்கமாக நடிகர்களுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. அவ்வாறு விளக்குவது ஆபத்தானதும் கூட. இயக்குநரும், நடிகரும் சில வேளைகளில் எதிர் கருத்து கொள்ளுதல் அவசியமாகிறது. மேலும் இயக்குநர் தான் வெளிப்படுத்த நினைக்கும் எண்ணங்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் சமாதானம் செய்து கொள்ளுதல் ஆகாது. நடிகர் என்பவர், இயக்குநரின் கோட்டையில் உள்ள ஒரு டிரோஜான் குதிரையினைப் போன்றவர்.

இயக்குநர் என்ற முறையில் நான் ஒரு மறைமுகமான வழிமுறை வாயிலாக நல்ல பலனைப் பெற விரும்புகிறேன். அதாவது ஒவ்வொரு நடிகரிடமும் அவருக்கு தெரியாமலேயே அமைந்துள்ள நடிப்புத் திறமையினை ஆய்ந்து அறிந்து, அவரின் அறிவுக்கு சவாலாக அமையாவண்ணம்., அவரின் இயல்பான பிறவிக் குணத்தினை தூண்டி, எந்த விஷயத்திற்கும் சமாதானம் செய்து கொள்ளாமல், அவரது திறமையை ஒளிரச் செய்யவேண்டும். ஒவ்வொரு இயக்குநரும், நடிகரின் திறமைக்கேற்ப மறைமுக வழிகள் வாயிலாக பெறவிரும்பும் நடிப்பினை வெளிக்கொணர வேண்டும். இயக்குநர், நடிகரிடம் எந்தவித நடிப்பினை கேட்க வேண்டும் என்றும், கிடைப்பதில் தேவையானது, தேவையற்றது எவையெவை என்பதனை பிரித்துணர்ந்து அறியும் தன்மையினையும் பெறுதல் மிக அவசியம்.
ஒரு இயக்குநரின் முதன்மையான தன்மை எந்தச் செயலையும் உற்று நோக்குதல் ஆகும். இந்தச் செயல்தான் நடிகர்களை நன்கு பயன்படுத்தி நிர்வகிக்கும் திறமையினைத் தரும் விலைமதிப்பற்ற கலையாகும். இயக்குநரின் எண்ண வெளிப்பாட்டிற்கும், சித்தரிப்புக்கும் நடிகரே முக்கியமான கருவி. ஒரு நடிகரின் பாவனை அல்லது சைகையில் ஏற்படும் மாற்றம், கதாபாத்திரத்தின் சித்தரிப்பிலேயே மாற்றத்தினை ஏற்படுத்தும். ஒரு நடிகரால் சுருக்கமாக பேசப்படும் ஒரு சொற்றொடரின் பொருள் அவர் காட்டும் முகபாவனையால் வித்தியாசப்படலாம். நடிகருக்கு மேல்நோக்கி காமிரா வைக்கப்பட்டிருக்கும்போது, அவர் பேசும் சொற்றொடர் தரும் பொருள், காமிரா அவருக்கு கீழ்நோக்கி வைக்கப்பட்டிருக்கும்போது பொருள் மாறலாம்.

மேற்சொன்ன சில எளிமையான உற்று நோக்குதல்களினால், இயக்குநர், அதாவது எடுக்கப்படும் காட்சியினை தீர்மானிப்பவர்தான், காட்சியில் பங்கேற்கும் நடிகர்களின் பாவனை, சைகை மற்றும் இயக்கம் பற்றி முடிவு எடுக்க உரிமை உள்ளவர். படத்தின் உரையாடல்களின் போது காணும் குரல் ஏற்றத்தாழ்வுகளுக்கும் இக்கொள்கை பொருந்தும். ‘குரல் ஒலி’ என்ற சப்தம் மற்ற சப்தங்களுடன் நெருங்கிய உறவு கொண்டது. படத்தில் இயக்குநருக்குதான் குரல் ஒலி, மற்ற சப்தங்களுடன் படத்தில் ஒருமித்து வருகிறதா?, வித்தியாசப்படுகிறதா? என்பதை அறியும் வாய்ப்பு அதிகம்.


ஒரு நடிகரின் நடிப்பில் தவறு இருந்தால்கூட அவரின் நடிப்பினை நன்கு கவனித்தல் அவசியம். பொதுவாக நடிக்கும் போது படத்தில் அவர் எங்கெங்கு நடிப்பில் தவறு செய்ய வாய்ப்புள்ளது என்பதனை முன் கூட்டியே இயக்குநர் ஊகிக்கலாம். ஏனென்றால் தன்னிச்சையான நடிப்பில் தவறு செய்தல் என்பது நடிகர்களுக்கு இயல்பான ஒன்றாகும்.

ஒரு காட்சியையோ, உரையாடல்கள் பற்றியோ விளக்கும்போது அனைத்து நடிகர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் இயக்குநர் பார்க்க வேண்டும். ஆனாலும், மாறாக ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு தனி நடிப்பு முறை தேவைப்படுகிறது. இதனால் நடிகர்களுக்கேற்ப பலவகையான நடிப்பு முறைகளை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒரு படத்தில் இயக்குநர், அப்படத்தில் நடிகர் நடிப்பில் செய்யும் தவறுகளை அவர் அறியாமலேயே மாற்றி சிறிது சிறிதாக அவரை சரியான நடிப்புப் பாதையில் செலுத்த வேண்டும்.

இந்த முறை நம்பத்தக்க ஒன்றாக தோன்றலாம். ஆனால் இந்த வழி ஒன்றே தொழில்முறை நடிகர் அல்லாத நடிகர்களிடமிருந்து, சிறந்த நடிப்பினைப் பெற உதவும் வழியாகும். நியோ ரியலிசம் இந்த வழியினை நமக்கு கற்பிக்கிறது. இது தொழில்முறை நடிகர்கள், சில வேளைகளில் பெரிய நடிகர்களுக்கும் கூட உகந்த வழியாகப்படுகிறது.


நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். உண்மையில் சிறந்த நடிகர் என்பவர் உண்டோ? நிறைய சிந்திக்கும் நடிகர், சிறந்த நடிகராகும் ஆசைக்கு ஆட்படுகிறார். இது அவரின் நடிப்பின் உண்மை நிலையினையே நீக்கக்கூடிய ஆபத்து கொண்ட தடைக்கல்லாகும். எனக்கு இரண்டு கால்கள் உள்ளனவா என்பதைப் பற்றி நான் சிந்திக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கு இரண்டு கால்கள் நிச்சயம் இருக்கும். ஒரு நடிகர் சில விஷயங்களை புரிந்து கொள்ள சிந்திக்கிறார். அவ்வாறு சிந்திப்பதினால் அடக்கம் என்பது அவருக்கு கடினமான ஒன்றாகிறது. அடக்கம் என்ற ஒன்றுதான் உண்மையினை அடைவதற்கான வழிவகை.

சில வேளைகளில் நடிகர் தனது புத்திக் கூர்மையால், இயற்கையாக தனக்கு அமைந்துள்ள தடைக்கற்களை தகர்த்தெறிந்து, சரியான பாதையில் தனக்குத்தானே வழிநடத்தி செல்வார். அதாவது அவர் தனது அறிவினை மேற்குறிப்பிட்ட பகுதியில் நான் சொன்ன வழிகளில் செலுத்தி பயன்பெறுவார். இவ்வாறு நிகழும்போது நடிகர், இயக்குநருக்குரிய தன்மைகளை பெறுகிறார்.

நன்றி: சலனம்: அக்டோபர் – நவம்பர் 93