திரைப்படத் தணிக்கைத்துறை (CBFC) மண்டல அதிகாரி (RO) பக்கிரிசாமி நேர்காணல்

"ஒரு நல்ல தணிக்கை அதிகாரி என்பவர் "திரைப்படங்களை விரும்புபவராக மற்றும் தணிக்கையை விரும்பாதவராக' இருக்க வேண்டும்" - ஏ.டி.எல்.வாட்கின்ஸ்.

திரைப்படக் கல்லூரி மாணவரான பக்கிரிசாமி 1986ல் படங்களை இயக்க ஆரம்பித்தார். நண்பர்களான உதயகுமார், ஆபாவாணன் முதலானோர்களோடு வேலை செய்து, அங்கு வேலை செய்யும் சூழல், மற்றும் சில பூசல்களின் காரணமாக அங்கிருந்து வெளியேறினார். நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதாலும், தனக்கு 28, 29 வயது வரை வேலையில்லை என்றால் தன் குடும்பத்தின் நிலை என்னவாகும் என்று யோசித்து, ஃபிலிம் டிவிஷனில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார். அவருக்கு அங்கு வேலையும் கிடைத்திருக்கிறது.
ஃபிலிம் டிவிஷனில் வேலைக்குச் சேர்ந்த பிறகு கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். பெரும்பாலும் ஆவணப்படங்கள் தான். அதில் மூன்று தேசிய விருது பெற்ற படங்களும், எட்டு இந்தியன் பனோரமா படங்களும் அடங்கும். அதே நேரத்தில் அரசாங்க ஊழியராக இருக்கின்றபோது அரசாங்கத்திற்காகவும் படம் செய்ய வேண்டிய சூழல் தான் இருக்கிறது. அதைத்தவிர்த்து ஒரு செயல்பாட்டாளராக (Activist) ஆக இங்கு இருக்க முடியாது. என்று கூறுகிற பக்கிரிசாமி, அரசாங்க வேலையிலிருந்துகொண்டே எப்படி நல்ல படம் பண்ணலாம் என்று தான் யோசித்ததாகவும்., பின்னர் 2004ல் ஆவணப்படங்கள் பற்றிய பார்வையும், விழிப்புணர்வும் அதிகமாக வரவேண்டும் என்பதற்காக வடமாநிலங்களில் அதிகமான திரைவிழாக்கள் நடத்தியிருக்கிறார். ”உத்திராஞ்சல்” போன்ற இன்னும் சில மாநிலங்கள் உட்பட எங்கெல்லாம் ஆவணப்படங்கள் பற்றிய புரிதல் இல்லையோ அங்கெல்லாம் விழாக்கள் நடத்தி படங்களைத் திரையிட்டிருக்கிறார். விருது பெற்ற படங்களையே அங்கெல்லாம் ஒளிபரப்புவார்களாம். மக்களும் அதற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். ஃபிலிம் டிவிஷனில் இருந்து 2011ல் தணிக்கைத் துறையில் இணைந்திருக்கிறார். அவர் இந்த துறைக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது.

சினிமாவில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல், சாமான்ய மக்களுக்குமே கூட சென்சார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இந்நிலையில், பேசாமொழி இதழுக்காக தணிக்கைத்துறை அதிகாரி பக்கிரிசாமி அளித்த சிறப்பு நேர்காணலிலிருந்து;

CBFC எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது? அதன் பணி என்னென்ன?

சினிமா என்பதே புதிய ஊடகம். அதேபோல பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூலம் திணிக்கப்பட்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்று. சுதந்திரப் போராட்ட காலத்தில் 1919 ஆண்டு காலகட்டத்தில் திரைப்படங்களின் வாயிலாகவும் சுதந்திரத்திற்கான கருத்துகள் சொல்லப்படக்கூடும் என்று கருதி அந்த அரசாங்கத்தினரால் தணிக்கைத்துறை உருவாக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பெல்லாம் நம்முடைய சுதந்திரப் போராட்ட தலைவர்கள் இந்த சென்சாரை எதிர்த்தாலும் கூட சுதந்திரம் அடைந்த பின்பும், இந்த தணிக்கைத்துறையின் தேவையை உணர்ந்தனர். இவ்வளவு பெரிய பரந்த நாட்டில் சினிமாவிற்கு ஏதாவதொரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று தணிக்கைத்துறையை அப்படியே வைத்திருந்தனர். அதே நேரத்தில் கருத்து சொல்லக்கூடிய உரிமை அனைவருக்கும் உண்டு என்பதையும் மறுக்காது, ஆனால் பல சாதி, மதங்கள் இருக்கிற இந்நாட்டில் ஏதும் தவறான கருத்துக்களால் பிரச்சனைகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தணிக்கைத்துறை 1952ல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது.
இங்கு ஏன் சினிமாவிற்கு மட்டும் தணிக்கைத்துறை என்பதை யோசிக்க வேண்டும். ஏனெனில் பத்திரிக்கைத்துறைக்கோ, நாவலுக்கோ, எழுத்துக்கோ இந்த தணிக்கை விதிமுறைகள் கிடையாது. இதன் காரணம் சினிமாவின் தாக்கம் ஏனைய ஊடகங்களை விட அதிவலிமையானது. உலக அளவிலே கூட சினிமாவினால் தான் பல சமுதாய மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள். பாமரனும் எளிதில் பார்த்து அதைப் பற்றி விவாதிக்க முடிந்த சூழலை சினிமா உண்டாக்கிக்கொடுக்கிறது. இதன் காரணமாகத்தான், இதன் முக்கியத்துவம் அறிந்துதான் அரசாங்கத்தால் சி.பி.எஃப்.சி (CBFC) நடத்தப்படுகிறது.

படைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த மாதிரியான அமைப்புகள் தேவையா? 1952ல் முறையாக இந்த சி.பி.எஃப்.சி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருதவாக கூறியிருக்கிறீர்கள். ஆனால், அதற்கு முன்பும் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்தப் படங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துக்களின் வாயிலாக ஏதேனும் கலகங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா? இல்லை, அப்படி நிகழவில்லையெனில் சி.பி.எஃப்.சிக்கான தேவை என்ன?

நேரு எடுத்துக்கொண்ட கொள்கைகளில் சோவியத்தின் தாக்கம் இருந்தது. சோவியத்தில் சென்சார் இன்னும் கட்டுப்பாடாக இருக்கும். ஆனால், இங்கு அந்த அளவிற்கு இல்லை. நீங்கள் சொல்வது போல அப்போது வெளிவந்த படங்களினால் கலகங்களோ, கலவரங்களோ நிகழ்ந்ததாக எனக்குத் தெரிந்து இல்லை. ஆனால், அப்போதே சில படங்களில் விஷமமாக அரை நிர்வாணக் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். 1940 காலகட்டத்திலேயே நிர்வாணக்காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார்கள். இது இந்தக் காலத்தில் கூட சாத்தியமாகாத ஒன்றை அன்றைக்கே செய்திருக்கிறார்கள். பிரிட்டிஷார் காலத்தில் திரைப்படங்களின் மீது இந்தமாதிரியான கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் நிர்வாணக்காட்சிகளை அவர்கள் அனுமதிக்கவே செய்திருக்கிறார்கள். அவர்களுடைய கலாச்சாரமும், பண்பாடும் அம்மாதிரியாக இருந்த காரணத்தினால் அப்படங்களுக்கு தடையேதும் விதிக்கவில்லை.

நீங்கள் சொன்னதுபோல தொலைக்காட்சி, பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் வரக்கூடிய தனியார் நிகழ்ச்சிகள், நாடகங்கள், என எதற்குமே தணிக்கை விதிமுறைகளை விதிக்காத பொழுது சினிமாவிற்கு மட்டும் தணிக்கை விதிப்பதென்பது அதன் படைப்பு சுதந்திரத்தை பாதிக்கிறது போல இருக்கிறதே?

நானும் இப்படித்தான் ஆரம்பத்தில் நினைத்தேன். எதற்கு தேவையில்லாமல் இந்த தணிக்கை செயல்படுகிறது என்றுதான் தோன்றியது. ஆனால், இங்கு வந்து பணியாற்றிய பின்பு, போட்டுக்காண்பிக்கிற படங்களைப் பார்க்கின்றபொழுது சி.பி.எஃப்.சி கண்டிப்பாக தேவையானதுதான் என்பதும் தெரிகிறது. அதில் சினிமாவிற்கு மட்டும் ஏன் தணிக்கை என்றால், உச்ச நீதிமன்றம் சொல்வது கூட, சினிமாவின் தாக்கம், அதன் ஒலியளவு கொடுக்கும் மகிழ்ச்சி, சூழல் இவையெல்லாம் நாவல் படிக்கிறபொழுது கிடைப்பதில்லை. சினிமாவில் நடிக்கிற கதாநாயகர்களைப் போல நாமும் திகழவேண்டும் என்ற நினைப்பு இன்றைக்கும் பலபேரிடம் உண்டு. சினிமா சாமான்யர்களின் நெஞ்சில் அவ்வளவு பாதிப்பை விளைவிக்கிறது. அதற்காகத்தான் சினிமாவிற்கு தணிக்கை தேவைப்படுகிறது என்று நீதிமன்றமே இரண்டு முறை தீர்ப்பளித்திருக்கிறது.

இரண்டாவதாக சி.பி.எஃப்.சியை தணிக்கை என்றும், காட்சிகளை வெட்டிவிடுவார்கள், தடை செய்வார்கள் என்று மட்டும் பார்க்காமல், ஒரு படத்தைக் காப்பாற்றுவதற்கும் இந்த சி.பி.எஃப்.சி தான் உறுதுணையாக இருக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். உதாரணத்திற்கு 2011ல் ”ஆரக்‌ஷன்” என்ற படம் வந்தது. அதன் மையமே என்னவென்றால் தலித்துகளுக்கு எதற்காக இட ஒதுக்கீடு அவசியம் என்பதை எடுத்துச்சொல்லக்கூடிய ஒரு படம். பிரகாஷ் ஜா இயக்கிய படம். அந்தப் படத்திற்கு எதிராக எஸ்.சி, எஸ்.டி அமைப்பினரே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். படம் சொல்வதே தலித்துகளுக்கு ஆதரவான கருத்துதான், இருப்பினும் அந்த அமைப்பே இதனை எதிர்த்தது. காரணம், கதை சொல்கிற போக்கில், தலித்துகள் அந்தக்காலத்தில் எப்படி சித்தரிக்கப்பட்டார்கள், 50களிலும், 60களிலும் தலித்துகள் எவ்வாறெல்லாம் நடத்தப்பட்டார்கள் என்பதை காண்பித்துதான் ஆக வேண்டும். அப்படிக் காட்சியாக ஆக்குகின்ற பொழுது, அதில் இடம்பெறுகின்ற ஒரு சில காட்சிகளும், வசனங்களும் சரியில்லை என்று எஸ்.சி, எஸ்.டி கமிஷனே இப்படத்தை எதிர்த்தது. அவர்கள் வழக்கு உச்ச நீதிமன்றம் வரையிலும் சென்றது. நீதிமன்றம் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, தணிக்கைத்துறை இந்த படத்திற்கு ஒப்புதல் கொடுத்தது சரிதான் என்று தீர்ப்பளித்திருக்கிறது. தணிக்கை வாரியம் ஒரு படத்தைக் காப்பாற்றவும் செய்கிறது. என்னுடைய கண்ணோட்டத்தில் தணிக்கை படைப்பாளிகளின் குரல்வளையை நெறிக்கிறது என்றெல்லாம் பார்க்கமாட்டேன். அதே நேரத்தில் அரசாங்கத்தை எதிர்த்து படம் பண்ணுவது என்று ஒன்று உள்ளது. ஒரு சுதந்திர நாட்டின் அடிப்படையே அரசை விமர்சிப்பர்களும் இருக்க வேண்டும். அது கருத்து ரீதியாக சரியாக இருக்கின்ற பட்சத்தில் அதை தடைவிதிப்பது முறையாகாது. ஆனால், நக்சல்ஸ் பற்றி ஒரு படம் எடுக்கப்பட்டு என் பார்வைக்கு வந்தது. அதில், நக்சைல்ஸ் எப்படியெல்லாம் மாற்றங்கள் செய்வார்கள், அரசியல் சாசனத்தை எதிர்க்கிறார்கள் என்றும், எப்படி அவர்கள் தங்களுக்காக ஆட்கள் சேர்க்கிறார்கள் என்றும் மூளைச்சலவை அந்தப் படத்தை எடுத்திருந்தார்கள். இந்த மாதிரியான படங்களுக்கு தணிக்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், ஆதாரம் இல்லாமல் நாட்டின் அச்சுறுத்தலுக்கு வித்திடுவது போல அமைகின்ற படங்களுக்கு வெளியிட அனுமதி மறுக்கப்படுகிறது.

”கத்தி” படத்தில் கூட எப்படி 2ஜி பற்றி பேசுகிற வசனத்தையெல்லாம் எப்படி அனுமதித்தீர்கள்”, என்று கேட்டார்கள். எப்படியானாலும் அரசுக்கு எதிரான எதிர்க்குரலும் படத்தில் இடம்பெற வேண்டும். அதன் அடிப்படையில் அனுமதித்தோம். அரசாங்க சாசனத்தை மதிக்காத படங்கள், ஒட்டுமொத்த நடைமுறையே சரியில்லை என்று ஆதாரமற்ற முறையில் கருத்து பரப்புகின்ற படங்கள் தடைசெய்யப்படுகிறது.
இந்தியாவில் பல சாதி மதங்கள் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், மொழி, கலாச்சாரம் என எல்லாமே மாற்றமடைகிறது. அப்படிப்பார்க்கையில் எல்லா மாநிலத்திற்கும் தகுந்தாற்போல ஒரே தணிக்கை விதிமுறைகள் தான் இருக்கின்றனவா? அல்லது ஒவ்வொரு மாநிலத்திற்கும் தகுந்தாற்போல விதிமுறைகளும் மாறுகின்றனவா?

எல்லா மாநிலத்திற்கும் சினிமோட்டோகிராஃபி ஆக்ட் 52 என்பது ஒன்றுதான். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான விதிமுறைகள் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. பின்னர், வடகிழக்கு மாநிலங்களில் முத்தம் கொடுப்பது சாதாரண கலாச்சாரமாக இருக்கும். பெற்றோர்கள் அருகில் அமர்ந்திருக்கின்ற பொழுதே காதலர்கள் முன்னாலேயே முத்தம் பரிமாறிக்கொள்வார்கள்,. அங்கு அது சாதாரணமான ஒரு நிகழ்வு. ஆனால், இதுவே மற்ற சமூகத்தில் இதுமாதிரியாக இல்லை. இதை வைத்துக்கொண்டு மும்பையில் சிற்சில விதிகளை தணிக்கையில் வைத்திருக்கிறார்கள். சிற்சில மாற்றங்கள் தான். தமிழ்நாட்டிற்கும், மகாராஷ்டிராவிற்கும் அவ்வளவு ஒன்றும் வித்தியாசங்கள் இல்லை. அப்படியிருந்தும், இந்திப் படங்களுக்கும் ஒரு தனி தகுதி, தமிழ் படங்களுக்கு ஒரு தனி தகுதி அடிப்படை என்று ஆரம்ப காலத்திலிருந்தே வந்துவிட்டது. இந்திப் படங்களைக் காட்டிலும் தமிழ் படங்களில் வன்முறைகள் அதிகமாக இருக்கிறது. தென் தமிழக நடைமுறை வாழ்க்கையில் வன்முறைக் கலாச்சாரங்கள் இல்லாவிட்டாலும் கூட, திரைப்படங்களில் இது அதிகமாக பரப்பப்படுகிறது. இது அந்தக் கால எம்.ஜி.ஆர் காலத்தில் குத்துச்சண்டை என்றால், இந்தக் காலத்தில் கத்திச்சண்டை என்று வந்திருக்கிறது. ஆனால், வடமாநிலங்களைப் பொறுத்தவரை கொஞ்சம் வன்முறை வந்தாலும் ”ஏ ”சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். இதுதான் வித்தியாசமே ஒழிய விதிமுறைகள் அனைத்தும் ஒன்றுதான். பின்பு தணிக்கை வாரிய உறுப்பினர்களைப் பொறுத்தும், பின்பாக ஆர்.ஓவைப் பொறுத்தும் தரச்சான்றிதழ் மாறுபடுகின்றது. இளைஞர்களுக்கு அந்தப் பொறுப்பினைக் கொடுத்தால் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தணிக்கையில் இருப்பவர்களெல்லாம் அறுபதைத் தாண்டியவர்களாக இருந்தால், என்ன செய்ய முடியும்?.

இந்த சென்சார் போர்டில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதிகபட்சமாக எவ்வளவு உறுப்பினர்கள் வரையில் இருக்கலாம். ஒரு படத்தை அதிகபட்சமாக எவ்வளவு உறுப்பினர்கள் பார்வையிடுகிறார்கள். இதற்கான விதிமுறைகள் ஏதேனும் இருக்கிறதா?

இந்த அமைப்பில் ஒரு சேர்மன் இருப்பார். ஒரு தலைவர் (chair person) இருப்பார். அவர்களுக்கு கீழ் 24 உறுப்பினர்கள் இருப்பார்கள். தணிக்கை வாரிய உறுப்பினர்கள் என்றால் அவர்கள் தான். இந்தியா முழுவதற்கும் ஒரு Board தான். அந்த போர்டின் கீழ் தான் ஒரு சேர்மன் அல்லது சேர்பெர்ஷன் இருப்பார். 24 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதற்கு முன்பு தியாகராஜன் உறுப்பினராக இருந்துள்ளார், இப்போது எஸ்.வி.சேகர் இருக்கிறார்.

இந்தியாவில் மட்டும் ஒன்பது இடங்களில் சென்சார் சான்றிதழ் வழங்குகிற அலுவலகம் இருக்கிறது. 1986க்கு முன்பு தென்னிந்தியாவிற்கெல்லாம் சேர்த்து படங்களுக்கு தணிக்கை செய்ய சென்னைக்குத்தான் வரவேண்டி இருந்தது, பின்புதான் தனித்தனியாக மாநிலங்கள் ஒன்றிற்கும் அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஐதராபாத், இதுமட்டுமல்லாமல் கட்டாக், கல்கத்தா, கெளகாத்தி, பின்பாக டெல்லி, மும்பை இவற்றின் தலைமையிடம். இத்தனை பகுதிகள் இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு பிராந்திய அதிகாரி (R.O) அவரது தலைமையில் அலுவலகம் செயல்படும். இங்கு இத்தனை உறுப்பினர்கள் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணிக்கை கிடையாது. சென்சார் போர்ட் உறுப்பினர்கள் வேறு, அட்வைஸரி மெம்பர்கள் வேறு. அட்வைஸரி பேனல் மெம்பர்கள் இத்தனை பேர்தான் படம் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. முந்தைய பேனலில் என்னிடம் 200 பேர் இருந்தார்கள். அவர்கள் எப்படி சேர்க்கப்படுகிறார்கள் என்பதை பின்பு பார்க்கலாம்.

பின்னர், உதாரணத்திற்கு ஒரு நான்கு உறுப்பினர்கள் என்று வைத்துக்கொண்டால் அவர்களில் இருவர் பெண் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஒருவேளை ஆர்.ஓ பெண்ணாக இருந்தால் உறுப்பினர்களில் ஒருவர் பெண்ணாக இருத்தல் வேண்டும். அதாவது குறைந்தபட்சம் இருவராவது பெண்ணாக இருக்க வேண்டும். ஆர்.ஓ பின்னர் 4 உறுப்பினர்கள் மொத்தம் ஐந்து பேர் படம் பார்ப்பார்கள். எந்தவித இடையூறும் இல்லாமல் படம் பார்த்து முடித்த பின்பு தான் படம் குறித்து இயக்குனருடன் விவாதிப்பார்கள். இந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். இந்த உறுப்பினர்களை யார் நியமிக்கிறார்கள் என்று கேட்டால் அது இந்திய அரசாங்கம் தான் கவனித்துக்கொள்கிறது. நாங்கள் இவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்னால் கூட அவர்களை பணியில் நியமிக்கிற பொறுப்பை இந்திய அரசாங்கம் தான் கவனிக்கிறது. நாங்கள் இவர்கள் இந்தப் பணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சிபாரிசு செய்தாலும் கூட அவர்களைத்தேர்ந்தெடுக்கிற உரிமையும் அதிகாரமும் இந்திய அரசாங்கத்திடமே உள்ளது.

அண்மையில் புதிய அரசாங்கம் அமைந்ததிலிருந்து ஏதும் புதிய உறுப்பினர்கள் இதுவரை வரவில்லை. பழைய உறுப்பினர்களை வைத்துத்தான் செயல்பட்டு வருகிறோம். முந்தைய பேனலில் இருந்த 200 உறுப்பினர்களில் 35 பேர் தான் இப்பொழுது இருக்கிறார்கள்.

ஆர். ஓ தான் இதன் முதல் படி. இப்பொழுது ஒரு இயக்குனராக நீங்கள் படமெடுத்துக் கொண்டுவருகிறீர்கள். பெரும்பாலும் படத்தின் கதையினை சிதைக்காமல் காட்சி கட் செய்யப்பட வேண்டும் என்பதுதான் தணிக்கைத் துறையின் வேலை. இங்கு தமிழ் திரையுலகைப் பொறுத்தமட்டில் எல்லோருக்கும் யு சான்றிதழ் வேண்டும் என்பார்கள். ஏனென்றால் யு சான்றிதழ் இருந்தால்தான் வரி விலக்கு முதலிய சலுகைகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக இது அவர்களுக்கு மிக முக்கியமானது.

அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் கூட அவர்கள் தரப்பு வாதம் என்னவென்றால் நாங்கள் 160கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம், அதற்காக யு சான்றிதழ் வேண்டும் என்றார்கள். அவர்கள் 160 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள் என்பதைக் கணக்கில் கொண்டா அந்தக் கதையைப் பார்க்க முடியும்?. இவ்வளவு கோடி செலவு செய்திருக்கிறார்கள் அதை வைத்துதானா ஒரு சான்றிதழ் கொடுக்க முடியும். அந்தப்படம் ஒரு சில குழந்தைகளுக்கு பயமாக கூட இருக்கலாம். அதற்காக யு/ஏ கொடுத்தால் பெற்றோரின் வழிகாட்டுதலோடு அந்தப் படத்தைப் பார்க்கலாம்.

அந்தப் படத்திற்கு நாங்கள் யு/ஏ கொடுத்தோம். ஆனால், அவர்கள் யு சான்றிதழ் தான் வேண்டும் என்று ரிவைஸிங் கமிட்டிக்கு சென்றார்கள். முன்பு சொன்னேனே 24 உறுப்பினர்கள் என்று, அதில் தமிழ்நாட்டிற்கு என்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பார்கள். இரண்டு பேர் இருக்கலாம், அல்லது மூன்று பேர் இருக்கலாம். டெல்லியைச் சார்ந்த ஏழு பேர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாமே சமூக ஆர்வலர்களாக இருந்தவர்கள் தான். இப்படியாக போர்டு உறுப்பினர்கள் ரிவைஸிங்க் கமிட்டியிலிருந்து படம் பார்ப்பார்கள், கூடவே ஒன்பது பேனல் உறுப்பினர்களும் இருப்பார்கள். இதிலும் உங்களுக்கு வேண்டிய சான்றிதழ் கிடைக்கவில்லையென்றால் அதற்கு அடுத்த பிரிவு தான் தீர்ப்பாயம்.

FCAT (Film Certification Appellate Tribunal) தணிக்கை தீர்ப்பாயம் என்பார்கள். அதற்கும் சென்சார் போர்டிற்கும் சம்பந்தம் கிடையாது. அங்கும் உங்களுக்கு திருப்தியில்லையெனில் உயர் நீதிமன்றம் போகலாம். பொதுவாக இதுமாதிரியான வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைத்தான் நியமித்திருப்பார்கள். அல்லது மூத்த வழக்கறிஞர், இவர்கள்தான் இவற்றின் தலைவராக இருப்பார்கள்.

படம் எடுத்து முடித்த பின்பு கூட எப்படி தணிக்கைச் சான்றிதழ் வாங்குவது முதலான வழிமுறைகள் தெரியாமல் இருக்கும். ஆனால், முதலில் இதனை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். இங்கும் ஊழல் நடப்பதற்கு வழிகள் உள்ளது. இந்த வாய்ப்புகளைக் குறைப்பதற்காக வேண்டிதான், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை வைத்திருக்கிறார்கள். வேலைகளைத் தவிர்த்து விட்டு நேரடியாகச் சந்தித்து விண்ணப்பிக்க வேண்டும், போன்ற சங்கடங்களையெல்லாம் தவிர்ப்பதற்காக முழுவதும் ஆன்லைனில் செயல்படுத்த வேண்டும் என்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை முழுமையடையவில்லை. அடுத்த படி அதுதான் ஆன்லைன் கொண்டுவரப்பட்டுவிடும். இதனால் ஊழலின் எண்ணிக்கை குறையும் என்ற நம்பிக்கை உள்ளது.

நீங்கள் கொண்டுவருகிற படங்களை நாங்கள் பார்க்கிறோம். பார்த்த பின்பாக சில கட் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொண்டால், பின்பு நேரடியாக இயக்குனரிடமோ, தயாரிப்பாளரிடமோ பேசுகிறோம். உங்களுக்கு கட் செய்யப்பட்ட காட்சியின் வலிமை தெரியுமாயின் அதற்காக நீங்கள் வாதாடலாம். அதிலும் உங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லையென்றால் தான் முன்பு சொன்னது போல ரிவைஸிங் கமிட்டி, மத்திய தீர்ப்பாயம் போன்றவைகளை நாட வேண்டும். ஆனந்த் பட்வர்தனை எடுத்துக்கொண்டால் உயர்நீதிமன்றம் சென்றுதான் அவரது படங்களை திரையிடுவதற்கான அனுமதியெல்லாம் வாங்கியிருக்கிறார். அவர் அனுமதி வாங்கியது தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காக. ஒரு பக்கம் அவருக்கான விருதுகள் கிடைப்பது இருக்கட்டும், ஆனால் அவரது படங்களை மக்கள் பார்த்திருக்க வேண்டுமே, அதற்காகத்தான் தூர்தர்ஷனுக்குச் செல்கிறார். ஆனால் அவர்கள் ஒளிபரப்ப மறுக்கிறார்கள். அப்படியே ஒளிபரப்பினாலும் இரவு பன்னிரண்டு மணிக்குமேல் ஒளிபரப்புவார்கள். அவருக்கான உரிமைக்காக உயர் நீதிமன்றம் செல்கிறார்.

குறும்படங்களுக்கும், குறிப்பாக ஆவணப்படங்களுக்கும் சென்சார் செய்ய பணம் வாங்கக் கூடாது, அப்படியே வாங்கினாலும் மிகக் குறைந்த அளவில் செலுத்தினால் போதும் என்றிருக்க வேண்டும். என்று அதைச் செயல்படுத்த தொடங்கியிருக்கிறோம். சினிமோட்டோகிராபி ஆக்டின் கடந்த கால செயல்பாட்டு விவரங்களை உயரிடத்தில் அளிக்கிறபொழுது இதுகுறித்தும் எழுதியிருக்கிறோம். ஆவணப்படங்கள் எடுப்பவர்களையும், வெகுஜன சினிமா எடுப்பவர்களையும் ஒரே மாதிரியாக மதிப்பிட முடியாது. ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு கட்டணம் குறைவாக வசூலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் நல்லது.

1952ல் உருவாக்கப்பட்டதுதான் இந்த சினிமோட்டோகிராபி ஏக்ட் என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த வாழ்க்கைமுறையில் யு, என்றும் யு/ஏ, என்றும் ஏ என்பதற்குமான வரையறைகள் தனியாக இருந்திருக்கும். ஆனால் அந்தக்காலத்திலிருந்து இந்தக்காலம் வரையிலும் பலமாதிரியான வழிமுறைகள் மாறியிருக்கிறது. இன்றைக்கு சிறுவர்கள் கூட பெரியவர்கள் மாதிரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் வீட்டிற்கே சென்று ஆபாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள் சிறுவர்கள் அதனையும் பார்க்கிறார்கள். அப்படியிருக்கையில், இன்றும் ஒரு முத்தக்காட்சிக்கு கட் கொடுக்க வேண்டி ஏதேனும் அவசியம் இருக்கிறதா?

1952ல் ஆரம்பிக்கப்பட்டதாக இருப்பினும் அதன் வரையறைகளையும், சான்றிதழ் கொடுப்பதற்காக அவர்கள் வைத்திருக்கிற கோட்பாடுகளையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நீங்கள் சான்றிதழ் அளிக்கிற பொழுது, அந்தச் சமுதாயத்தின் தற்கால நிலை என்ன என்பதை வைத்துத்தான் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று விதிமுறையில் உள்ளது. 1950, 60 காலகட்டங்களில் தமிழ் படங்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கொஞ்சம் நெருங்கினால் கூட ஏ சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். அப்பொழுதெல்லாம் யு சான்றிதழ் மற்றும் ஏ சான்றிதழ் இரண்டுதான் இருக்கும். இந்த யு/ஏ கூட 86க்குப்பின்பாக கொண்டுவரப்பட்டதுதான். நான் வந்த காலத்திற்குப் பின்பாக கதைக்கு தேவையாயின் சில முத்தக்காட்சிகளைக் கூட படத்தில் இடம்பெறச்செய்திருக்கிறேன். உதாரணமாக மணிரத்னத்தின் கடல் படத்தில் கதையோடு இயைந்த முத்தக்காட்சியை படத்தில் இடம்பெறச்செய்திருக்கிறேன். கதைக்கு அந்தக் காட்சி தேவையானதாக இருந்தது. அதற்காக படம் எடுப்பவர்களின் நிலையை வைத்து அவர்களுக்கு சலுகை கொடுக்கிறீர்கள் என்றும் சொல்லமுடியாது.

புதுமுகங்களால் நிறைந்திருந்த “வெங்காயம்” என்ற படத்தில் “ தேவடியா பையன் “ என்ற வார்த்தையை அனுமதித்திருந்தேன். எனக்கு முன்பு வரை ”ஏ சான்றிதழ்” கொடுக்கிற படத்திற்கு கூட அந்த வார்த்தையை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், அந்தப்படத்தில் சிறுவர்களெல்லாம் சேர்ந்து விளையாடுகிற பொழுது ஒரு சின்னப்பெண் அவர்களைப் பார்த்து திட்டுகிறமாதிரி இந்த வார்த்தையை அந்த இயக்குனர் பயன்படுத்தியிருப்பார். கதைக்கு அது தேவைப்பட்ட காரணத்தினால் அதை கட் செய்யவில்லை. எங்களைப் பொறுத்தவரை contemporary standardயைத்தான் பின்பற்றுகிறோம், அதைத்தான் பின்பற்றவேண்டும், பின்பற்றியாகணும். 1952ல் பின்பற்றியிருந்த விதிமுறைகளையே இன்றும் பின்பற்றிக்கொண்டிருக்க முடியாது.
நீங்கள் சொன்னதுபோல குழந்தைகளும் நிறையவே மாறிவிட்டார்கள். எங்கள் குடும்பத்தையே எடுத்துக்கொள்ளலாம், என் அம்மா, என் அப்பாவின் பெயரைச் சொல்லிகூட அழைக்கமாட்டார். ஆனால், இன்று அப்படியில்லை. காலம் மாறிவிட்டது. இதைத்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அந்தக்காலத்தில் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட படங்கள் நிறைய தணிக்கைத்துறையின் கட்டுப்பட்டிற்கு வந்து பிரச்சனைக்குள்ளாகியிருக்கிறது என்பது உண்மையானது. அரசாங்கம் என்பது ஒருபுறமிருக்கட்டும், ஆனால் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் விமர்சிப்பது படைப்பாளிகளின் உரிமை. ஆனால், படம் பார்ப்பவர்கள் அந்த அடிப்படை எண்ணம் இல்லாமல், இது அரசாங்கத்தை எதிர்மறையாக காட்டுகிறது என்கிற குறுகிய கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்ப்பார்கள். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் சமூகமே அந்த மாதிரியான சூழலைச் சந்திக்கின்ற பொழுதும், அரசாங்கத்தைப் பற்றிய தன் எண்ணத்தை பேசிக்கொண்டிருக்கின்ற பொழுதும் சினிமாவும் அதனையே பிரதிபலிப்பதாக இருப்பின் அந்த வசனங்களை அனுமதித்துதான் ஆக வேண்டும். அந்த இடத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வசனம் இருக்கிறது என்று தடை செய்யவோ, கட் பண்ணவோ முடியாது.

நட்பு நாடுகளை அவமதிக்க கூடாது, கேலி செய்யக்கூடாது, அவர்களை விமர்சிக்க கூடாது என்று சொல்வதெல்லாம் படைப்புகளுக்கு எப்படி பொருந்தும்? உதாரணமாக இன்றைக்கு நட்பு நாடுகளின் பட்டியலில் இருப்பவை நான்கைந்து வருடங்கள் கழித்து, எதிரி நாடாகவும், அல்லது பகை நாடுகளாக இருப்பவை சில வருடங்கள் கழிந்து நட்பு நாடுகளாகவும் மாறிவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆக, எதிரி நாடாக இருக்கின்ற போது ஒரு நாட்டை விமர்சித்து நாம் படம் எடுத்துவிட்டு பின்பு அவையே நமது நட்பு நாடாக மாறிவிட்டால் நாம் அந்தப்படங்களை திரும்பவும் சென்சார்க்கு அனுப்ப முடியுமா?. அப்படிப்பார்க்கையில் நீங்கள் எப்படி இந்த விதிமுறைகளைப் பின்பற்ற முடியும்.?

எதிரி நாடு, நட்பு நாடு என்று நீங்கள் பார்த்தால் எதிரி நாடுகளே கிடையாது. 90க்கு முன்பு வரை எதிரி நாடு பாவனையில் இருந்தது இஸ்ரேல் மட்டுமே. ஆனால் அதுவும் கூட பெரும்பாலும் எதிரி நாடாக பாவிக்கப்படவில்லை. 90க்குப் பிறகு அதுவும் கிடையாது. இங்கு எல்லா நாடுகளுமே நட்பு நாடுகள் தான். இலங்கை, பாகிஸ்தான், பங்களா தேஷ், பின்னர் சீனா இவையெல்லாம் இந்தியாவின் அண்டை நாடுகள். இங்கு இலங்கை பிரச்சனை சம்பந்தமாக சில படங்கள் வருகின்ற பொழுது கூட நானே சான்றிதழ் கொடுக்க யோசித்திருக்கிறேன். ஏனெனில், முழுக்க முழுக்க அங்கு நடக்கிற பிரச்சனைகளைப் பற்றிச் சொல்வதில் தவறு கிடையாது. ஆனால், படம் முழுவது சில அமைப்புகளை புகழாராம் செய்து மட்டுமே படம் எடுக்கையில் தான் பிரச்சனையாகிறது. ”மெட்ராஸ் கஃபே” மாதிரியான படங்களை பார்த்து நாங்கள் சான்றளித்திருக்கிறோம். ”இனம்” படமும் அப்படியே. சென்சார் அதனை தடை செய்யவில்லை, ஆனால் மக்கள் தான் அதற்கு எதிராக நின்றார்கள்.

தமிழ் படங்களைப் பொறுத்தவரையில் தீவிரவாதிகள் எங்கிருந்து வருகிறார்கள், என்றால் அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வருகிறார்கள் என்பது வரை தணிக்கைத் துறை அதனையும் அனுமதித்திருக்கிறது. ஆனால், ஒரு இனப்படுகொலை நடந்த ஒரு நாட்டின் பெயரைக் கூட யாரும் சொல்ல முடிவதில்லை. அண்மையில் வெளியான சில படங்களில், இலங்கை என்ற பெயர் கூட இடம்பெறமுடியாமல் இருப்பது எதனால்?

இந்தக் கேள்வியை நீங்கள் அந்த இயக்குனர்களிடம் தான்கேட்க வேண்டும். இலங்கை என்ற பெயரை வைத்தால் தன் படத்திற்கு பிரச்சனை வருமோ என்று அந்த இயக்குனர்களே படத்தில் தவிர்த்திருக்கிறார்கள். சென்சார் போர்டின் மீதான பயத்தை விட அவர்களுக்கு வெளியில் உள்ளவர்கள் மீதான பயம் தான் அதிகம். நேற்று கூட ஒரு படம் பார்த்தேன். ஒரு காட்சியில் இலங்கையின் பெயரை சொல்லவேண்டிய கட்டாயமான சூழல் வருகிறது. ஆனால், இலங்கை என்ற வசனம் படத்தில் இடம்பெறவில்லை. நான் அந்த படக்குழுவினருடன் பின்னர் கேட்டபோது அவர்கள் சொல்கிறார்கள், “சென்சாருக்கு பயந்துகொண்டுதான் வைக்கவில்லை”., என்கிறார்கள். அவர்கள் படத்தில் வசனத்தை வைத்துவிட்டு அதனை சென்சார் நீக்கச்சொல்லியிருந்தால் நீங்கள் சொல்கிற குற்றச்சாட்டை நானும் ஒத்துக்கொள்கிறேன், அதற்குப் பதிலாக படத்திலேயே வசனத்தை வைக்காமல் அதற்கும் சென்சார் தான் பொறுப்பு என்பதை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள இயலும்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மறைப்பதென்பது ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதைதான். அப்படியிருக்கையில் அது சம்பந்தமான வசனங்கள் வருகிற பொழுது அதனை நீக்கிவிடுங்கள் என்று நான் சொன்னதில்லை. என்னைத் தவிர்த்து எனக்கு முன் இருந்தோர் அப்படிச் செய்திருக்கலாம்.

”விஸ்வரூபம்”, படத்தையே எடுத்துக்கொள்ளுங்கள் நாங்கள் அந்தப் படத்தை வெளியிட அனுமதித்தோம். ஆனால், பின்னர் எதற்காக சில காட்சிகள் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டது?. உயர் நீதிமன்றமே நாங்கள் தணிக்கைச் சான்றிதழ் அளித்தது சரியான செயல்தான் என்று தீர்ப்பளித்தது. நான் கூட இரண்டு நாட்கள் வழக்கிற்காக நீதிமன்றத்தில் தான் இருந்தேன். பின்பு எதற்காக விஸ்வரூபம் படத்தில் சில வசனங்களை நீக்கினார்கள்?.

ஒரு படத்தின் இடையில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு விளம்பரத்தை அதாவது பிரபல நிறுவனத்தின் பெயரை காண்பிக்க கூடாது, என்ற ஒரு விதிமுறை சினிமோட்டோகிராஃபி விதிமுறையில் இருக்கிறதா? அதாவது ”துப்பாக்கி” படத்தில் விஜய் colgate plex பயன்படுத்துவது போல இருக்கும். இதனால் கோல்கேட் கம்பெனிக்கு நல்ல வியாபாரம் ஆகிற சூட்சுமம் இருக்கிறது. இது கதைக்கு சம்பந்தமில்லாத பட்சத்தில் இதைத் தடைசெய்கிற விதிமுறைகள் உள்ளதா?

நாங்கள் அந்தமாதிரியாக ஏதும் விளம்பரங்கள் வருவதை தடைசெய்வதில்லை. இப்பொழுது நிறைய படங்களில் இதுமாதிரியாக வருகிறது. இதில் சிகரெட், மதுக் கம்பெனிகள் பெயர்கள் படத்தின் இடையில் வந்தால் அது தடைசெய்யப்படுகிறது. பின்னர் சில மருத்துவமனைகள், அல்லது மருத்துவர்கள் சம்பந்தமாக விளம்பரங்கள் எடுக்கப்பட்டு எங்களிடம் வரும், ஆனால், எந்த மருத்துவரோ, மருத்துவமனையோ தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், தொலைக்காட்சியில் இதுபோல வருகிறது என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. நாங்கள் பார்ப்பது மருத்துவர் தன் சேவையை விளம்பரப்படுத்தக்கூடாது, அதே போல மருத்துவமனைக்கும் விளம்பரம் கொடுக்க கூடாது. ஆனால் இப்போதிருக்கிற மாறுபட்ட சூழலில் நிறைய பேர் விளம்பரம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

”ஷமிதாப்” படத்தில் Life buoy தான் படத்தின் கருவே. நாங்கள் பார்ப்பது குடி, சிகரெட் போன்றவற்றின் பிராண்ட்கள் வந்தால் மட்டும் அதை தடைசெய்வோம்.
அப்படியெனில் இந்த இரண்டு பொருட்களுக்கு இருக்கிற தடை ஏன் மற்ற பொருட்களுக்கும் இல்லை, ஏனென்றால் ஒரு சினிமாவில் சில வினாடிகளே வந்து செல்கிற இது போன்ற பிராண்ட்கள் மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை விளைவிப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. பின்னர் சினிமா என்பது விளம்பரம் செய்வதற்கான பகுதியும் அல்ல. இதுவே சினிமாவை கலை வடிவத்திலிருந்து கமர்ஷியல் வடிவத்திற்கும் மாற்றுகிறதுதானே?

இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பதை படம் பிடிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், பேசுகின்ற பொழுது தண்ணீர் குடிப்போம. குறிப்பிட்ட பிராண்டாக இருந்தால், அதற்கு சென்சார் பொறுப்பல்ல. ஆனால், அதே சமயத்தில் வேண்டுமென்ற தன் ஆதாயத்திற்காக பிராண்ட் பெயர்களை படத்தில் இடைச்செருகலாகச் சேர்ப்பதும் நடந்திருக்கிறது.

நீங்கள் “எங்கேயும் எப்போதும்” படத்தை எடுத்துக்கொள்ளலாம், சிகரெட்டுக்கு எந்த விளம்பரமும் கூடாது என்ற கட்டுப்பாடு விதித்தவுடன் அவர்கள் புதுவிதமாக ஒரு சிகரெட் பிராண்டை காட்சியில் நுழைத்திருந்தார்கள், ”எங்கேயும் எப்போதும்” படத்தில் அப்படியான காட்சிகள் வருவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. பின்பு ஒரு நாள் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்கிற பொழுதுதான் இந்த விஷயங்களெல்லாம் நடப்பது தெரியும்.

இருட்டறையில் ஒரு பெரிய திரையில் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்பொழுது அதன் காட்சிகளின் வலிமையை குறைப்பது போல, படத்தின் மையத்திற்கேற்ப ஒரு சிகரெட் பிடிக்கிற காட்சி வருகிறபொழுதோ, அல்லது மது குடிப்பது போல காட்சி வருகிற பொழுது திரையின் கீழ் ஒரு எச்சரிக்கை வாசகம் போடுகிற நிலை உள்ளது. இவை அந்த காட்சியின் வலிமையை பாதிப்பது போல இருக்கிறது. மேலும், படம் ஆரம்பிக்கிறபொழுதே புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடானது என்றும் மது அருந்துதல் கூடாது என்றெல்லாம் ஒளிபரப்புகிறார்கள். இருந்தும் படத்திற்கு நடுவிலேயும் இதுபோல இடைச்செறுகலாக வாசகம் போடுவதற்கான காரணம் என்ன? அல்லது அவசியம் என்ன? மேலும் இதனை அயல் நாட்டினர் பார்த்தால், நம் நாட்டு மக்களின் சுய ஒழுக்கம் சார்ந்த கேள்வியும் எழும் தானே? இது மாதிரியான கட்டுப்பாடுகளின் தேவை என்ன?

விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதுதான் நம்முடைய வேலை. சிகரெட்டைப் பொறுத்தவரை 2011ல் ஒரு சுற்றரிக்கை வந்தது, அதில் படத்தில் ஒரு காட்சியில் சிகரெட் வந்தாலும் அதற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கவேண்டும். இதன் நோக்கம் என்னவென்றால், 2010 வரையிலும் சிகரெட்டினால் பல லட்சக்கணக்கான மக்கள் சாகிறார்கள். சிகரெட் பழக்கத்தினால் கேன்சர் வருகிறது என்றெல்லாம் நிரூபித்திருக்கின்ற காரணத்தினால், இதில் சிகரெட் லாபி, ஆண்டி சிகரெட் லாபி என்ற இரண்டு பிரிவு இருக்கிறது, இதில் ஆண்டி சிகரெட் லாபி மிகவும் வலுவாக அமைத்து அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்த பொழுது இதனை நடைமுறைப்படுத்தினார்கள். அந்த விதிமுறை அமல்படுத்தப்படுகிறது, பின்னர் நாம் அந்த விதிமுறைகளை அமல்படுத்திதான் ஆக வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட படம் தான் ”வழக்கு எண் 18/9”. அதில் சிகரெட் காட்சி வருகின்ற காரணத்தினால் அந்தப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. ஆனால், குடிக்கிற மாதிரியான காட்சிகளுக்கு ஏதும் இதுவரை விதிமுறைகள் விதிக்கப்படவில்லை. ஆனால், சினிமாக்காரர்களே அந்த மாதிரியான வாசகங்களை குடிக்கிறமாதிரியான காட்சிகளுக்கு கீழே போட்டுக்கொள்கிறார்கள். நீங்கள் கீழே எச்சரிக்கை வாசகம் போட்டுத்தான் ஆகவேண்டும் என்று நாங்கள் சொல்வது கிடையாது.

அவர்கள் இந்தமாதிரியாக செய்வதற்கு காரணம், அந்தப் படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவதற்கு இந்த விதிமுறைகளைக் கேட்கிறார்கள். சில படைப்பாளிகள் இந்த விதிமுறைகள் தமிழ் படங்களில் மட்டும்தான் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது அப்படியில்லை. இந்தி சினிமாக்களிலும் இதே சங்கதிதான் நடந்தேறுகிறது.

சினிமாவில் என்னதான் சொன்னாலும், தனிமனித தாக்கம் நிகழ்ந்தேறுகிறது. ரஜினி அவர்களோ, அல்லது எம்.ஜி.ஆர் மாதிரியான பெரிய ஆளுமைகள் சினிமாவில் செய்துகாட்டுகிற பொழுது இதனை முன்னோடியாக எடுத்துக்கொள்கிறோம். இதன் தாக்கம் இருக்கிறது. இல்லை என்று சொல்லமுடியாது.

ஒரு அட்டவணை இணையத்திலேயே இருக்கிறது. அதாவது இந்தந்த கெட்ட வார்த்தைகளெல்லாம் வந்தால் அதனை கட் செய்ய வேண்டும், பீப் ஒலி கொடுக்கவேண்டும், அந்த நேரத்தில் அவர் பேசும் சப்தம் நிசப்தமாக ஆக்கப்படவேண்டும் என்றெல்லாம் வைத்திருக்கிறீர்கள். ஆனால், உதாரணத்திற்கு ”மங்காத்தா”, படத்திலும், ”என்னை அறிந்தால்”, படத்திலும் அஜித் கெட்ட வார்த்தைகள் சொல்கிற பொழுது அவரின் வாயசைவுகளை வைத்துக்கொண்டு இது என்ன என்பதை பார்வையாளர்கள் தெரிந்துகொள்கிற பாங்கு இருக்கிறது. உங்கள் நோக்கம் அந்தக் கெட்டவார்த்தை பார்வையாளர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்து செய்ல்படுவதாயின், இது எப்படி காட்சியை மட்டும் கொடுத்து, ஒலியை மட்டும் நிறுத்தி வைப்பது எப்படிச் சரியான நடைமுறையாகும்?
க்ளோஸ் அப் காட்சியில் இப்படி படம் பிடிக்கிறபொழுது அதன் ஒலியளவை மட்டும் நிறுத்தினால் ஹீரோவின் வாயசைவை வைத்தே இதென்ன வார்த்தை என்று பார்வையாளர்கள் கண்டுகொள்வார்கள். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதற்காக அந்த ஒரு காட்சியை நீக்கினால் கோர்வையாக சென்றுகொண்டிருக்கிற படத்தின் காட்சியமைப்பில் சிறு தடுமாற்றம் நிகழும்., அதுவும் க்ளோஸ் அப் காட்சியில் இது மிகவும் அதிகம். இது மிகப்பெரிய இடையூறு. இதன் பாதகம் இயக்குனரின் இடத்தில் இருந்து பார்த்தால் புரியும். அதற்காகத்தான் அமைதியாக விடுவது, ஒலியளவை நிறுத்துவது இதெல்லாம்.

ஆனால், கெட்ட வார்த்தைகளை எதற்காக தடை செய்ய வேண்டும்? ஆங்கிலப்படங்களை விடுவோம், இந்திப் படங்களையே எடுத்துக்கொண்டால் கூட Fucking, sucking போன்ற வார்த்தைகளெல்லாம் சர்வ சாதாரணமாக பேசப்படுகிற படங்கள் உண்டு. ஒரு நாட்டினுள் ஏன் இத்தனை வேறுபாடு?

ஆங்கிலப்படங்களில் ஏ சான்றிதழ் பெருகிற படங்களில் இம்மாதிரியான கெட்ட வார்த்தைகள் அதிகமாக இடம்பெறுவதுண்டு. ஆனால் இப்பொழுது யு/ஏ படங்களுக்கும் கெட்டவார்த்தைகளுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது. நாங்களே கூட யு/ஏ படங்களில் கெட்ட வார்த்தைகளுக்கு அனுமதி அளிக்கிறோம். நான் இப்படித்தான் அவர்களுடன் சகஜமாக, படைப்புகளுக்கு மரியாதை கொடுத்து நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் கூட மக்கள் என்ன சொல்கிறார்கள்?, காசு வாங்கிவிட்டு சான்றிதழ் கொடுத்துவிடுகிறார்கள் என்று சொல்கின்றனர். ”இசை” படத்தில் அப்படித்தான் நடந்தது. அதற்கு யு/ஏ தான் கொடுத்தோம். ஆனால், மக்கள் இதை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தெரியவில்லை. அந்தப்படத்திற்கு எப்படி யு/ஏ என்று கேட்கிறார்கள். நடுத்தர குடும்பத்து மக்கள் தான் இந்த மாதிரியான படங்களையெல்லாம் எதற்காக வெளியிட அனுமதி அளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நாங்கள் படைப்புகளை புரிந்துகொண்டு செயல்பட்டாலும், மக்கள் விடுவதில்லை.

நல்லி குப்புசாமி போன்று பிரபலமான ஆட்கள் தணிக்கை குழுவில் உறுப்பினராக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ரஜினி காந்த், கமலஹாசன், இயக்குனர் சங்கர் போன்றோரின் பிரபலமான படங்களைத்தான் பார்க்கிறார்கள், இது ஒரு வித பாரபட்சமான செயல் தானே. அனைத்து படங்களையும் ஒரேமாதிரியாக நீங்கள் அணுகவில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது. பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு தனியான தணிக்கைமுறைகள் ஏதேனும் இருக்கின்றனவா?

நாம் தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம், நல்லி குப்புசாமி செட்டி என்றால் பெரிய படங்கள் தான் பார்ப்பார் என்று, ஆனால் இப்பொழுது அவர் சராசரியான, சிறிய பட்ஜெட்டில் வெளியான ஒரு படத்தை பார்த்துவிட்டுத்தான் செல்கிறார். எல்லா உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்கான செயல்தானே தவிர, நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இந்தப் படம் பார்க்க வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற தனி விதிமுறைகள் கிடையாது. 2011 வரையில் எடுத்துப்பார்த்தால் நல்லி குப்புசாமி எல்லா பெரிய படங்களையும் பார்த்திருப்பார். 2011க்குப் பின்பாக பார்த்தீர்களேயானால் எல்லா மோசமான படங்களையும் பார்த்திருக்கிறார். பத்து படங்கள் வருகிறதென்றால் அவற்றில் இரண்டு நீங்கள் சொல்வதுபோல பெரிய பட்ஜெட் படங்களாகயிருந்திருக்கலாம். இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளைக் களைவதற்காகத்தான் முற்றிலும் ஆன்லைனிலேயே கொண்டுவரலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். உறுப்பினர்கள் தேர்வு கூட ஆன்லைனிலேயே நடப்பதுபோல இருக்கும். நீங்கள் மட்டுமில்லை உறுப்பினர்கள் சிலரே கூட சொல்கிறார்கள், நல்லி வந்துவிட்டால் ”இன்றைக்கு பெரிய படம் போலயிருக்கு”, என்கிறார்கள்.

”விஸ்வரூபம்”, பிரச்சனையில் தனிப்பட்ட முறையில் தமிழக அரசு ஒரு படத்தினை தணிக்கை செய்ய அரசுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள். அது எவ்வாறு சாத்தியம் என்பதை கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா?

சினிமா என்பது கன்கரண்ட் லிஸ்டில் வரும். ஒரு படத்திற்கு சென்சார் கொடுப்பதோடு எங்கள் பணி நிறைவுபெற்றுவிட்டது. அதற்குப் பின்பாக படம் வெளியில் வந்து அதனை மக்களுக்கு காண்பிப்பதெல்லாம் அந்தந்த மாநில அரசின் கீழ் வருகிறது. ஆக, அந்த மாநில அரசு ஒரு படத்தை தணிக்கை செய்யலாமா? என்று கேட்டால், அவர்களால் நிச்சயமாக தணிக்கை செய்ய முடியாது, அவர்களுக்கு எந்த வித உரிமையும் இதில் இல்லை. அதேபோல ஒரு படத்தை தடைசெய்யக்கூடிய உரிமையும் அவர்களுக்கு கிடையாது. எப்பொழுது அவர்களுக்கு தடை செய்யக்கூடிய அதிகாரம் வருகிறதென்றால், ”மெட்ராஸ் கஃபே”, அல்லது ”விஸ்வரூபம்” மாதிரியான படங்கள் வெளியான பின்பு சட்ட ஒழுங்கு பிரச்சனை வருகிறது, அல்லது மாநிலத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது, என்று வரும்பொழுது அவர்கள் அந்தப் படத்தை தடைசெய்யலாமே தவிர, ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அவர்களால் தடைசெய்ய முடியாது. இந்தப்படம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைப் பாதிக்கலாம் என்று அனுமானிக்க கூடாது. ஆனால், ”விஸ்வரூபம்” படத்தில் நடந்தது அதுதான். இதற்கு அந்த அரசியல் தான் காரணம்.

உயர்நீதிமன்றம் இதையேத்தான் சொல்லியது. எனவே படத்தை தடை விதிக்க வேண்டாம் என்றுதான் நீதிமன்றம் சொல்லியது.

இந்நேரத்தில் கமலஹாசன் படத்தை வெளியிட்டிருப்பது சாத்தியம்தான். கமலஹாசன் விஸ்வரூபம் படத்தை வெளியிட்டிருந்தால் அரசாங்கமே அதற்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். ஆனால், நாலு பேர் தன் படம் ஓடுகிற தியேட்டரில் கல் எறிந்தால் படம் நின்றுவிடும், திரையரங்க உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு அது இடையூறாக அமைந்துவிடும் என்று கமல் நினைத்திருக்கலாம். ஆகையால்தான் அவரே சமரசமான பேச்சுக்கு உடன்பட்டார்.

நீங்கள் இன்னொன்றையும் பார்க்க வேண்டும், எத்தனை படங்கள் தணிக்கைத்துறையால் பாதிக்கப்பட்டிருக்கிறது? எத்தனை படங்கள் தணிக்கைத்துறையின் அனுமதி பெற்ற பிறகும், மாநில அரசினாலும், அல்லது மற்ற அமைப்பினரின் எதிர்வினைகளாலும் படங்கள் வெளியாகாமல் இருந்திருக்கின்றன என்பதைப் பார்க்கவேண்டும். DAM999 படம் கூட, எப்படி இலங்கை பிரச்சனையை நாம் கையாள்கிறோமோ, அதேபோலத்தான், இந்தப்படத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எல்லாமே படம் தான்.
நீங்கள் ஒரு கணக்கு எடுத்துப்பார்த்தால், சென்சாரினால் பாதிக்கப்படுகிற படங்களைக் காட்டிலும் மற்ற அமைப்பினரால் பாதிக்கப்படுகிற படங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.

மத்திய அரசால் தணிக்கை செய்யப்பட்ட படங்களை தொலைக்காட்சியினர் மீண்டும் தணிக்கை செய்கிறார்கள். அதற்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளனவா? வயது வந்தவர்களுக்கு மட்டும் வயது வராதவர்களுக்கு, குழந்தைகள் படம் என்றெல்லாம் ஏற்கனவே சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னர் தொலைக்காட்சிகள் இவ்வாறு செய்வது சரியா? தொலைக்காட்சி தொடர்கள் தணிக்கை செய்யப்படாத போது அதில் காட்டப்படும் திரைப்படங்கள் மட்டும் ஏன் மறு தணிக்கைக்கு உள்ளாகின்றன?

நாங்கள் கொடுப்பது யு, யு/ஏ., ஏ போன்ற சான்றிதழ்கள் தான். இதில் ஏ சான்றிதழ் பெற்ற படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமுடியாது. ஆனால், யு சான்றிதழ் அல்லது வழக்கு எண் 18/9., மாதிரியாக யு/ஏ சான்றிதழ் பெற்ற படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம். பின்னர் ஏ சான்றிதழ் பெற்ற படங்களும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் தான் அவர்களுக்கும் கொஞ்சம் பணம் கிடைக்கும். ஏ சான்றிதழ் பெற்ற படங்களை ஒளிபரப்ப என்ன வழி என்று யோசித்தால், நானே கூட சில இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் சொல்வதுண்டு. ”இப்போதைக்கு ஏ சான்றிதழ் வாங்கி படத்தை வெளியிடுங்கள். பின்னர் தொலைக்காட்சி வருமானமும் உங்களுக்கு மிகவும் முக்கியமானது, அப்போதைக்கு மீண்டும் கொண்டுவாருங்கள் தனியாக நீங்களே நீக்க வேண்டிய காட்சிகளையெல்லாம் நீக்கிவிட்டு கொடுங்கள் அதற்கு யு சான்றிதழ் கொடுக்கிறோம்”., என்று சொல்கிறோம். இதுதான் நடைமுறை. இதில் தொலைக்காட்சி நிறுவனங்களே தலையிடுவது சட்டவரைமுறை கிடையாது.

பின்னர் தொலைக்காட்சித் தொடர்களிலே கூட சில வன்முறை களியாட்டங்கள் நிறைந்ததாகத்தான் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு சென்சார் அவசியமில்லை, ஆனால், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் எந்த படமானாலும் ஏன் ஆங்கிலப் படங்களை இங்கு ஒளிபரப்பினாலும் அதுவும் சென்சார் செய்யப்பட்ட பின்பே ஒளிபரப்ப வேண்டும். 2005ல் தான் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலப்படங்களுக்கும் சென்சார் வாங்கவேண்டும், பின்பே அவற்றை ஒளிபரப்ப வேண்டும் என்றெல்லாம் தீர்ப்பளித்தார்கள்.

படைப்பாளிகளின் பெரிய குறைபாடே இதுதான், சீரியல்களையெல்லாம் எந்த சென்சாரும் இல்லாமல் அனுமதியளிக்கிறீர்கள். படங்களுக்கு மட்டும் ஏன் ? என்று கேட்கிறார்கள். அது உண்மைதான். குழந்தைகளுக்கானது என்று சொல்லிக்கொண்டு வருகின்ற நிகழ்ச்சிகளும் கூட தொலைக்காட்சிகளில் மிகவும் ஆபாசமாக, விரசமாக உள்ளது. ”A படங்களிலிருந்து வருகிற காமெடிகளைக் கூட பயன்படுத்துகிறார்கள். இதன் மீது யாரேனும் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு.

ஒரு படத்தை மேல்முறையீட்டிற்கு அனுப்பப்படும்பொழுது அவை விரைவாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றனவா? மேல்முறையீடு என்றாலே காலதாமதம் ஆகும் என்கிற கருத்து திரைப்பட உலகினரிடம் நிலவுகிறதே?

முதலில் 100 முதல் 120 படங்கள் ஒருவருடத்திற்கு வெளியாகும். ஆனால் இன்றைக்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்தபிறகு 5டி, 7டி என தொழில்நுட்பங்கள் விரியவிரிய புதியபுதிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இந்த திரைத்துறைக்குள் வருகிறார்கள். போன வருடத்தைப் பொருத்தவரை நாங்கள் 325 படங்களுக்குச் சான்றிதழ் கொடுத்திருக்கிறோம். அதில் டப்பிங் படங்களே முப்பது முதல் நாற்பது படங்கள்தான் இருக்கும். மற்றது எல்லாமே தமிழ்படங்கள்தான். சில சமயம் தெலுகு படத்தை தமிழ் படம் என்பார்கள், இப்படியான போலியான படங்களையெல்லாம் தவிர்த்து மொத்தம் 275 தமிழ்படங்கள் சென்சார் செய்யப்பட்டிருக்கிறது. இப்படி படங்களின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கின்றபொழுது, இன்றைக்கு மட்டும் ஐந்து விண்ணப்பங்கள் சென்சாருக்காக வந்திருக்கிறது.

சமீபத்தில் ஒரு இயக்குனர் எனக்கு போன் செய்து சொல்கிறார், எனக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ் வேண்டும் என் படத்தை கொஞ்சம் சீக்கிரம் பாருங்கள் என்றார். நான் சொன்னேன், நான் படத்தை வரிசைக்கிரமாகத்தான் பார்க்க முடியும். அது அஜித் படமானாலும், விஜய் படமானாலும், கமல் படமானாலும் வரிசைப்படிதான் கொண்டுவரமுடியும். வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு நான்கு படங்கள் பார்க்கலாம், அதற்காக உங்கள் படத்தை முன்னாடியே பார்ப்பதும் கடினம் என்று சொன்னேன். வேறு மாநிலங்களில் எப்படியோ அது தெரியாது, ஆனால் தமிழகத்தில் வரிசைப்படிதான் படங்கள் பார்க்கப்படுகிறது. இங்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டுவிடும். இதேதான் மேல்முறையீட்டிற்கும். கொஞ்சம் நாட்கள் அதிகமாகலாம், ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகும். போர்ட் மெம்பர்ஸ் உடனிருக்கவேண்டும். இதற்காக கொஞ்சம் நாட்கள் ஆகும். FCAT நம் கையில் இல்லை. அண்மையில் ”ஐ” படம் தான் மேல்முறையீட்டிற்காகச் சென்றது, அதுவும் சென்சார் செய்யப்பட பத்துநாட்கள் எடுத்துக்கொண்டது.

தமிழ்நாட்டில் மட்டும் தான் யு சான்றிதழுக்காக போராடுவார்கள். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இது மாதிரியான சம்பவங்கள் நிகழாது. இங்கு யு சான்றிதழ் பெற்ற படங்களுக்கு 30 சதவீதம் வரிவிலக்கு உள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் யு சான்றிதழ் இருந்தால்தான் வரிவிலக்கு என்ற காரணத்திற்காக அனைவரும் அதற்காக போராடுகிறார்கள். அண்மையில் வெளிவந்த பெரிய நடிகர்களின் படங்கள் வெகுவாக யு/ஏ தான் வாங்கியிருக்கின்றன. அந்தப் படங்களில் சொல்லப்படுகின்ற கதை அந்த மாதிரியான காரணத்தினால் அவை யு/ஏ பெறுகின்றன. பெரிய நடிகர்களின் படம் என்கிற ஒற்றைக்காரணத்திற்காக அவர்களுக்கு யு சான்றிதழ் அளிக்கமுடியாது.

மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். இங்கு படைப்பாளிகளுக்கும், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து நடந்துகொண்டால் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார் என்று சொல்வார்கள். அதுவே மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தாலும் படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாக சொல்கிறார்கள். இப்படி இருதலைக்கொல்லி எறும்பாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது.

ஆவணப்படங்களுக்கும், குறும்படங்களுக்குமே கூட சென்சார் வாங்கவேண்டும் என்பது கட்டாயமா? ஏனென்றால் இந்தப் படங்களெல்லாம் தியேட்டர்களுக்கு வராது, பொது இடங்களில் தான் திரையிடப்படும், அதையும் குறிப்பிட்ட மக்கள்தான் பார்ப்பார்கள். அப்படியிருக்கையில், ஏன் இந்த நடைமுறை? மேலும், திரைப்பட விழா படங்களையும் தணிக்கை செய்யவேண்டியதில்லை. ஆனால்., இந்தியாவில் நடக்கும் பட விழாக்களில் திரையிடப்படும் படங்களுக்கு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதே ஏன்? வெகுஜன சினிமாவில் சொல்லமுடியாத விஷயங்களைத்தான் தன் படங்களின் வாயிலாக அவர்கள் முன்வைக்கிறார்கள். அதற்கும் இதே விதிமுறைகள் எதற்கு, விதிகளைக் கொஞ்சம் தளர்த்தலாமே?

இங்கும் கூட கல்லூரிகளில் எடுக்கப்படுகின்ற படங்களுக்கும் திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகின்ற படங்களுக்கும் தணிக்கை அவசியமில்லை என்றுதான் இருந்தது. அப்போது, ஆனந்த் படவர்தன் தானென்று நினைக்கிறேன். அவர்தான் ஒரு வழக்கில் எல்லா படங்களுக்கும் தணிக்கை பெறவேண்டும். ”எந்த வகையில் எஃப்.டி.ஐ படங்கள் சிறந்தது என்று சொல்லமுடியும்?.,” என்ற வினா எழுப்பினார். எல்லா படங்களும் தணிக்கை செய்யப்பட வேண்டும்., என்று உச்ச நீதிமன்றத்தில் சொன்ன காரணத்தினால் தணிக்கை செய்யப்படவேண்டியது அவசியமாகிறது. ஆனால் அயல்நாட்டிலிருந்து வருகின்ற சில படங்களுக்கு ஸ்பெஷல் எக்ஸம்ஷன் என்ற வரையறை சினிமோட்டோகிராஃபி ஆக்டிலேயே இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இருக்கின்ற படங்களுக்கு அந்த விதிமுறைகள் கிடையாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் பின்பற்றத்தான் வேண்டும்.

ஏன் சென்சார் செய்யப்பட வேண்டும் என்றால், எடுக்கப்பட்ட படத்தை நீங்கள் பொதுவிடங்களிலோ, கல்லூரிகளிலோ, பள்ளிகளிலோ திரையிட்டாலும் அதுவும் மக்கள் தான் பார்க்கிறார்கள். ப்ப்ளிக் எக்ஸிபிஷன். பொதுவெளியில் திரையிடப்படுகிற எல்லா படங்களுக்கும் சென்சார் செய்துதான் ஆக வேண்டும். கமர்ஷியல் படத்திற்கு சென்சார் செய்யவும் அதே கட்டணம், ஆவணப்படங்களுக்கும் அதே தொகைதான் என்றால் அதுதான் சிரமம், மேலும் அவர்களின் கட்டணத்தொகையை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாமே தவிர, ஒரு படத்திற்கு சென்சார் வாங்குவதென்பது படைப்பாளிகளுக்கும் நன்மையானதுதான்.

சிறுவர் திருமணங்கள் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அந்தப் படத்தை சிறுவர்களுக்கு மத்தியிலும் திரையிடுவோம். அப்போது ஏதேனும் நிர்வாணக் காட்சிகள் வந்துவிட்டு அதற்கும் நீங்கள் ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டால், அதனை நாங்கள் பொதுவெளியில் திரையிட முடியாதுதானே. உதாரணத்திற்கு சில பழங்குடி பிரிவுகளில் தந்தை இறந்துவிட்டால் மூத்தபையன் தான் தன் தாயை மணந்துகொள்ள வேண்டும். இந்தமாதிரியான விஷயங்களை அதன் தீவிரத்தன்மை குறையாமல் காட்சிப்படுத்துகிறபொழுது, நீங்கள் கடைப்பிடிக்கிற விதிமுறைகள் எப்படி இதற்குச் சாத்தியமாகும்?

அதை எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அதற்கு கொடுக்கப்படுகின்ற சான்றிதழ் அடங்கும். நீங்கள் சொல்கிற சம்பவங்கள் ஒரு சில பழங்குடிமக்களிடையே நிலவி வந்தாலும், அதனையே திரைப்படங்கள் பிரதிபலிக்கிறபொழுது அதனை அழகாக படத்தொகுப்பு செய்து அதற்கு நீங்கள் யு சான்றிதழ் கூட பெறமுடியும். அதே படத்தை பெட்ரூம் காட்சிகளையெல்லாம் காண்பித்து நீங்கள் ஏ சான்றிதழும் வாங்க முடியும். படத்தை நாம் காட்சிகளாப் பார்க்காமல் எதையும் தீர்மானிக்க முடியாது. நீங்கள் சொல்கிற களம் வயது வந்தோருக்கானதாக இருந்தாலும் அதை எப்படி அணுகுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அவற்றிற்கு யு சான்றிதழ் கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு படத்தை அணுகிற விதம் தான் முக்கியம்.

திரைப்பட விழாக்கள் மூலமாக திரையிடுகிற படங்களுக்கும் இதுமாதிரியான சென்சார் விதிமுறைகள் பொருந்துமா, அல்லது அதற்கு ஏதேனும் விசேஷ சலுகைகள் உள்ளதா?

அண்மையில் நடந்து முடிந்த சென்னை பிலிம் பெஸ்டிவலில் கூட சென்சார் அனுமதி வாங்காத படங்களைத் திரையிட்டிருக்கலாம். அதனை திரு. சந்தானம் அவர்களோ, அல்லது தியாகராஜன் அவர்களோ முன்னமே எங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவார்கள்., அரசாங்கம் அதனைப் பார்த்து திரையிட அனுமதி கொடுப்பார்கள், அதுவும் குறிப்பிட்ட தேதிக்கு, குறிப்பிட்ட நேரத்தில் திரையிட வேண்டுமெனில் அந்த ஒரு காட்சிக்கு மட்டுமே அனுமதி கொடுப்பார்கள். மீண்டும் வேறொரு முறை திரையிட வேண்டுமெனினும் அதற்கும் தனியாக ஒரு அனுமதி வாங்க வேண்டும். படத்தினை அனுப்ப முடியாவிட்டாலும் அந்தப் படத்தின் கதைச்சுருக்கத்தையாவது எங்களுக்கு அனுப்பித்தரவேண்டும். excemption ஆர்டர் வாங்கப்பட்ட படங்களின் விவரங்கள் என் பார்வைக்கு வரும்.

”ஐ” படத்தில் திருநங்கைகளை அவமதிப்பதுபோல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. திருநங்கைகளை தமிழ்படங்களில் தொடர்ச்சியாக அவமதித்துக்கொண்டுதான் வருகிறார்கள். அதுவும் வேண்டுமென்றே அவர்களைக் கிண்டலடிப்பதுபோன்ற காட்சிகளும் வைக்கப்பட்டிருக்கும். பின்னர், "உன்னைப் போல் ஒருவன்", ”விஸ்வரூபம்” போன்ற படங்களில் கமலஹாசன் தீவிரவாதிகள் எல்லாமே இஸ்லாமியர்களாகத்தான் இருப்பார்கள் என்ற பிம்பத்தைக் கொண்டுவருகிறார். ஆகையால், இம்மாதிரியான படங்கள் வருகிறபொழுது, அச்சமூகத்தினரிலிருந்தும் சிலர் உறுப்பினராக இருக்க ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா.? அவர்களைப் பற்றி பேசுகிற காட்சிகள் வருகிறபொழுது அவர்களும் உடன் இருந்தால்தானே ஜனநாயகப் போக்கு என எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு முன்னர் மாற்றுத்திறனாளிகளும் ஒரு பெரிய போராட்டம் செய்தார்கள், அவர்களையும் சென்சார் குழுவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக., ”ஐ” படத்திற்குப் பின்பாக திருநங்கைகள் இதே கேள்வியை எங்களிடம் கேட்டார்கள். ஏன், எங்களில் யாரும் சென்சாரில் உறுப்பினர்களாக இல்லை. ”திருமணம் என்னும் நிக்காஹ்” படத்தைப் பார்த்துவிட்டு ஷியா முஸ்லிம்ஸ் வந்து கோபித்துக்கொண்டார்கள். எங்களையும் இந்த மாதிரியான படங்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினரையோ, இனத்தவரையோ, மக்களையோ துன்புறத்தக்கூடாது என்ற வரையறை இங்கு உள்ளது. அந்தக் காட்சி நீக்கப்படவேண்டுமா இல்லையே என்பதையெல்லாம் அந்தக் கதை தான் தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு ”ஐ” படத்தை எடுத்துக்கொள்வோம், அந்தப் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரம் ஒரு நாளைக்கு ரூபாய் 50,000 ரூபாய் வாங்க கூடிய டாப் மாடல் ஒப்பனையாளர். அவரை கதையில் கிண்டல் பண்ணுவதுபோல காட்டினால், இருவர் அந்த திருநங்கையை கிண்டல் செய்தார்கள் என்று எடுத்துக்கொள்வீர்களா?, அல்லது ஒட்டுமொத்த சமூகமே திருநங்கைகளை இப்படித்தான் கிண்டல் பண்ணுகிறது, இந்தச் சமூகம் அதனையே இந்தப்படமும் பிரதிபலிக்கிறது என்று எடுத்துக்கொள்வீர்களா? இது மாதிரி சமுதாயத்தில் நிகழ்ந்துகொண்டிருப்பவைகளை நாம் மறக்கக்கூடாது. ஒரு நாளைக்கு 50000 ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய ஒப்பனையாளரையே இப்படிக் கிண்டல் பண்ணுகிறவர்களாகத்தான் இந்தச்சமூகம் இருக்கிறது என்பதைத்தான் மேற்கூறிய படத்தில் காட்சியாக்கியிருக்கிறார்கள்.
அப்படியே எடுத்துக்கொண்டாலும், சமுதாயத்தில் சிகரெட் பிடிக்கிறார்கள், மது அருந்துகிறார்கள். அதனையே சினிமாவிலும் நாம் காட்டுகிறபொழுது சமுதாயத்தில் நடப்பவைகளைத்தானே பிரதிபலிக்கிறோம் என்று எண்ணாமல், அதற்கு மட்டும் கீழே எச்சரிக்கை வாசகம் இடுவது எந்த விதத்தில் தகும்?

நீங்கள் சொல்கிற புகை பழக்கமும், மது பழக்கமும் உடல்நலத்தைப் பாதிக்கும். இதே விஷயத்தை இன்னமும் கொஞ்சம் விரிவாக சொல்லவேண்டுமானால் ஆரக்‌ஷன் படத்தைப் பார்த்தால் தெரியும். ஆராக்‌ஷன் படத்தில் ஒரு காட்சி, அந்தப்படமே என்னவென்றால் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான படம் தான். ஏனென்றால் அந்தப் படத்தில் தலித் மக்களின் வலியைச் சொல்கிற பொழுது அந்தக் காலகட்டத்தில் அவர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதையும் பற்றிச் சொல்லப்படவேண்டும். அது அந்தச் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கோ பிடிக்காமல் தங்களை அவமதிப்பதாகச் சொல்லி தடை விதிக்கக் கோரினர். இதை நீங்கள் அவமானப்படுத்துவதாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது அந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், ”ஐ” படத்தில் அந்தக் குறிப்பிட்டக் காட்சியை நீக்குவதால் கதையில் எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை. அவர்களைக் கிண்டல் செய்வது சாதாரண ஆட்கள் இல்லை, ஹீரோவும் அவருடன் இருக்கிற மிகப்பெரிய காமெடி நடிகரும் ஆவார். அப்படியிருக்கையில், கதையில் சேதாரம் இல்லாதபொழுது ஏன், அந்தக் காட்சிக்கு அனுமதி?

தலித்களின் மீதான சமுதாயப் பிரச்சனை எப்படி மாறியதோ, அதைப்போலவே இவர்களின் மீது இருக்கின்ற பார்வையும், அணுகுமுறையும் சமூகத்தில் மாறவேண்டுமே தவிர, இந்த ஒரு படத்தில் ஒரு காட்சியை நீக்குவதன் மூலமாக எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. மேலும் இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு படம் எங்கள் பார்வைக்கு வந்தது. அதில் தன் மகன் பார்வையற்றிருப்பதைப் பற்றி தாய் சொல்கிற பொழுது, ”என் மகன் குருடு” என்று சொல்வாள். இந்த குருடன் என்ற வார்த்தையை எடுத்துவிடுவீர்களா? மாட்டீர்களா?. அதேதான் ”ஐ” பிரச்சனையிலும் வந்தது, அந்த இடத்தில் காட்சியை துண்டிப்பது என்பது அறியாமையாகப்பட்டது. அதனால் அதைச்செய்யவில்லை. நாங்களும் வெறுமனே படம் பார்த்துவிட்டுப் போகவில்லை. படம் முடிந்த பின்பாக கலந்தாலோசித்துவிட்டு அதிலிருந்து ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துவிட்டோம். ’ஒன்பது’ மாதிரியான வார்த்தைகளை அந்தக் காட்சியில் பிரயோகித்திருந்தார்கள். அதனை மட்டும் நீக்கிவிட்டோம். நம்முடைய காட்சி துண்டிப்புகள் அநாவசியமாகவும் இருக்க முடியாது. அதே சமயம் சமுதாயத்தில் நடக்கிற விஷயங்களைத்தான் ஒருவர் பதிவு செய்கிறார் என்று பார்க்கிற பொழுது அதனை தடைசெய்யவும் முடியாது. இதேமாதிரிதான் ”அநேகன்” படத்திலும் ஒரு பிரச்சனை நடந்தது.

ஹீரோவின் நண்பன் வந்து ஹீரோவிடம் சொல்வான், ’வண்ணான்’ என்ற வார்த்தையை அவர்கள் உபயோகிக்கவில்லை. ”துணி துவைக்கிறவன் பொண்டாட்டிக்கு கழுதை மேல ஆசை …”என்பது மாதிரியாக ஒரு சில வசனம் வந்திருந்தது. சரியாக ஞாபகம் இல்லை. சில பிரச்சனைகள் வரும் என்று தெரிந்து அந்த இயக்குனரே அந்தக் காட்சியை எடுத்துவிட்டார்.

குறிப்பாக ”ஊரோரம் புளியமரம்” என்கிற பாடலெல்லாம் குறிப்பாக திருநங்கைகளைக் குறித்தாக அங்கு பாடப்படுகிறது. இன்றைக்கு நிறைய திருநங்கைகள் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டார்கள், ஆனால் மீண்டும் இது போன்ற காட்சியமைப்புகள் மீண்டும் திருநங்கைகளை தங்களை பழைய நிலைமைக்கு கொண்டுவந்துவிடுமோ என்கிற பயம் தான் இருக்கிறது.

திருநங்கைகளையோ மாற்றுத்திறனாளிகளையோ கூப்பிடலாம், ஆனால், அதைத்தாண்டியும் தணிக்கை விதிமுறைகள், மற்றும் வரையறைகள் என்று உள்ளது. நம்முடைய தீர்ப்பு என்பது நான்கு உறுப்பினர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதுதான். அப்படியிருக்கும்பொழுது ஒவ்வொரு அமைப்பும் இந்தமாதிரியாக கோரிக்கை வைப்பது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. வேண்டுமென்றால் அவர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளலாம்.

சென்சார் அமைப்பில் இருக்கும் உறுப்பினர்கள் அல்லது படம் பார்க்க வரும் உறுப்பினர்களில் நிறைய பேருக்கு சினிமா தெரியாது என்று குற்றச்சாட்டு நிலவி வருகிறது. சினிமா தெரியாதவர்கள் படம் பார்க்கிற பொழுது, நல்ல சினிமா எடுக்கிற சிலரும் அதனால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணத்திற்கு ஆனந்த் பட்வர்தன் படத்தினைப் பார்க்கிறபொழுது தலித் அல்லாதவர் அந்தப் படத்தினைப் பார்த்தால் அந்தப் படத்திற்கு சில துண்டிக்கவேண்டிய செய்திகளைச் சொல்வார். ஒரு நல்ல படத்திற்கும், சினிமாவிற்கும் வித்தியாசம் தெரிந்த போராளிகள், சமூக ஆர்வலர்கள் ஒரு படத்தைப் பார்ப்பதற்கும், மற்றவர்கள் படம் பார்ப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பிற்படுத்தப்பட்ட ஆட்கள் ஒரு படத்தைப் பார்க்கிற பொழுது, படம் பார்க்கிறவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாத காரணத்தினால்தான் இரண்டாவது முறையாக மேல்முறையீடு அமைத்திருக்கிறார்கள். ஒருவேளை என்னுடைய படத்தை குளறுபடி பண்ணினார்கள் என்றால் அடுத்த கட்டத்திற்குச் செல்ல்லாம். சினிமா தெரிந்தவர்கள் மட்டும் என்ன, ஒரு வேளை அவர்கள் என்ணமும் பிற்போக்குத்தனமாக இருந்தால் என்ன செய்வது? உங்களுக்கு சினிமாவைப் புரிந்தவர்கள், சமுதாய நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டவர்கள், படித்தவர்கள் உறுப்பினர்களாகயிருப்பது நல்லது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலும் வெகுஜனப் படஙக்ளைத்தான் சினிமா என்று சொல்கிறார்கள். வெகுஜன சினிமா கொஞ்சம் நன்றாகயிருந்தால் அதனை ஆவணப்படம் என்பார்கள். அதுதான், அந்த அறிவு தான், அவ்வளவுதான் அவர்களின் சினிமா அறிவு. எப்பொழுது நாம் எதிர்க்குரலையும் ஏற்றுக்கொண்டு விவாதிக்க கற்றுக்கொள்கிறோமோ, அன்றைக்குத்தான் ஆரோக்கியமான சூழலைக் கொடுக்க முடியும். நான்கு பேரும் நான்கு விதமான விஷயங்களைச் சொல்கின்ற பொழுதுதான் நமக்கும் சிந்திக்க ஏதுவாக இருக்கும். அதுமாதிரியான உறுப்பினர்கள் குறைவுதான்.

”இரத்தக்கண்ணீர்” பற்றிய பிரச்சனை இன்றளவும் போய்க்கொண்டிருக்கிறது. அதன் படி என்னவென்றால் ஒருவன் ஒரு பெண்ணுடன் தான் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களோடு உறவுக் கொண்டால் அவனுக்கு குஷ்ட நோய் வரும் என்றெல்லாம் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆக, உண்மையாக குஷ்ட நோய் வந்தவர்களைப் பார்க்கின்றவர்களுக்கு அவர்களும் இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டதன் காரணமாகத்தான் அவர்களுக்கும் நோய் வந்திருக்கிறது என்று மக்கள் பெரும்பாலும் நினைக்க கூடும். இன்னொரு விஷயம், விபச்சாரிகளை இழிவு படுத்துவது போலவும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பார்த்து அதற்கும் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இரண்டு குழுவையுமே அந்தப் படம் அவமதித்திருக்கிறது. அதற்கு விலக்காக குஷ்ட ரோகம் வந்தவர்கள் இன்றைக்கு வரைக்கும் அதற்கு எதிராக போராட்டம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆக இந்தமாதிரியான படங்களையெல்லாம் முற்றிலுமாக எதிர்ப்பதற்கான வாய்ப்புகள் சென்சார் துறையில் இருக்கிறதா அல்லது ஒரு படத்தின் கருத்து முற்றிலுமே தவறானதாக இருக்கிற பட்சத்தில் தணிக்கை வாரியம் என்ன செய்யும்?

இது மருத்துவரீதியாக பொய்யான விஷயமும் கூட, பல பெண்களுடன் இருந்தால்தான் குஷ்டம் வரும் என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவுமில்லை. அந்தப்படம் இந்தக்காலத்தில் வந்தால் அதனையும், அந்தக் காட்சியையும் மாற்றியமைக்கத்தான் சொல்வேனே தவிர , குஷ்ட நோய் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனும் ஒரு மனிதன் தான் அவர்களுக்கும் ஒரு நேர்மையான வாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வாழ்வு பாதிக்கப்படுமாயின் அதனை அவர்களுக்குச் சொல்லித்தான் ஆக வேண்டும். அதனால் படத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்பதெல்லாம் முடியாத காரியம். அந்த நேரத்தில் என்ன கட் இருக்கிறதோ, அதைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அப்பொழுது குஷ்டநோய், ஆனால் இப்பொழுது எய்ட்ஸ் நோய் இதே பிரச்சனையைத் தழுவியிருக்கிறது. சிறு குழந்தைகள் கூட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களையும் ஒரு மனிதர்களாய் மதித்து நடக்க வேண்டுவது மனிதர்களின் கடமை. எய்ட்ஸ் நோய் வந்ததன் காரணமாக அவர்கள் தனிமைப் படுத்தப்படுவது ஒற்றுக்கொள்ள முடியாது.
காமெடி என்கிற பெயர்களிலும் இதனைச் செய்து வருகிறார்கள். சிகரெட் பிடிப்பது இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அதே வேளையில் சிகரெட் பிடித்தால் சொர்க்க லோகம் போகலாம் என்றெல்லாம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, அதே தான் ஒரு நகைச்சுவையானது நகைச்சுவையாக இருக்கிறபொழுது அதனை ஏற்றுக்கொள்ளலாம், அது அடுத்தவர்களை நோகடிப்பது போல காட்சிப் படுத்தப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அது போன்ற காட்சிகளுக்கும் இதற்கு முன்னெல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

சினிமோட்டோகிராஃபி ஆக்ட் சமீபத்தில் ஏதேனும் திருத்தப்பட்டிருக்கிறதா?

அண்மையில்தான் ”விஸ்வரூபம்” பட பிரச்சனையின் பொழுது மந்திரி எங்களைச் சந்தித்துப் பேசினார். சென்சார் விதிமுறைகளை மாற்றுவது குறித்து பேசுவதாக இருந்தார்கள். முதலில் என்ன பண்ணினார்கள் என்றால், முத்கல் கமிட்டி என்று ஒன்று ஆரம்பிக்க நினைத்தார்கள் ஓய்வுபெற்ற நீதிபதி முத்கல் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதால் இது முத்கல் கமிட்டி என பெயர் பெற்றது. ஆறு மாத காலம், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதைச் செயல்படுத்துவதற்கான ஒரு தகவலைக் கொடுத்திருக்கிறார். அதை நடைமுறைப்படுத்துவதற்கு பார்லிமெண்ட் செல்ல வேண்டும். கூடிய விரைவில் செய்துவிடுவார்கள். அதைச் செய்துவிட்டால், சினிமோட்டோகிராஃபி ஆக்ட்டில் கொஞ்சம் மாற்றங்கள் வரலாம், இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது, திடீரென்று யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்திற்குச் சென்று ஒரு படத்திற்கு எதிராக தடை வாங்குவது, அதுமாதிரியாக இல்லாமல் தீர்ப்பாயத்திற்கு அதிக ஆற்றல் கொடுக்க நினைக்கப்பட்டிருக்கிறது. ஏதோரு பிரச்சனைக்கும் நீதிமன்றத்தை நாடாமல் தீர்ப்பாயத்திற்குச் சென்றாலே போதுமானது.

இப்பொழுது தீர்ப்பாயத்திற்குச் செல்கிற உரிமை திரைப்பட படைப்பாளிகளுக்கு மட்டுமே உள்ளது, மக்களுக்கு அது கிடையாது, இனிமேல் மக்களுக்கும் அது சாத்தியம். அது இந்நேரம் செய்திருக்க வேண்டியது. கடைசி வருட பார்லிமெண்டிலேயே அதைச் செயல்படுத்திக்காட்ட திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் சாத்தியப்படாமல் போய்விட்டது. கூடியவிரைவில் சாத்தியமாகும். நன்றி! எந்தவொரு படத்தையும் ஒரு காட்சியையும் தனிமைப்படுத்திப் பார்க்காமல் ஒட்டுமொத்த படமாக பார்க்கவேண்டும் என்பதை நினைவில் நிறுத்துவது நல்லது.