திரைமொழி - 12 அத்தியாயம் 5 – Production Design

சென்ற கட்டுரையில் Production Cycle என்ற பிரிவின்கீழ் இருக்கும் துணைப்பிரிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவற்றில் Production Design என்ற இரண்டாவது துணைப்பிரிவில் உள்ள Script Breakdown மற்றும் Pictorial Design ஆகியவற்றைப் பார்த்தாயிற்று. இனி மற்றவற்றைக் கவனிப்போம்.

Continuity Design

Production Design என்ற துணைப்பிரிவின் மூன்றாவது அம்சம்தான் இந்த கண்டின்யூட்டி டிஸைன். கண்டின்யூட்டி என்றால் என்ன என்று திரைப்படத்துறையில் உள்ளவர்களுக்கு அவசியம் புரியும். காட்சிகளின் தொடர்ச்சியைக் கச்சிதமாகக் கவனிப்பதே கண்டின்யூட்டி. இதில் தனிப்பட்ட ஷாட்கள், கதையில் காட்சிகள் படமாக்கப்படும் விதம், அவற்றில் உபயோகப்படுத்தப்படும் லென்ஸ்கள், ஷாட்களின் வரிசை ஆகியவை முக்கியமான விஷயங்கள்.

படப்பிடிப்புக்கான லொகேஷன்கள் கிட்டத்தட்ட முடிவுசெய்யப்பட்டதுமே கண்டின்யூட்டி டிஸைன் துவங்குகிறது. லொகேஷன்கள் முடிவானதுமே ஸ்டோரிபோர்ட்கள் மூலம் இந்தப் பணி ஆரம்பிக்கிறது. சில இயக்குநர்கள் ஸ்டோரி போர்ட்கள் வேண்டாம் என்று முடிவுசெய்யலாம். இன்னும் சிலர் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் தேவையில்லை; லொகேஷனுக்குச் சென்று, அங்கே படப்பிடிப்புத்தளம் உருவானதும் அதை வைத்துக்கொண்டே படப்பிடிப்பைக் கவனிக்கலாம் என்றும் முடிவெடுக்கக்கூடும். இன்னும் சிலர், இந்தத் திட்டமிடும் வேலையையெல்லாம் ப்ரொடக்ஷன் டிஸைனர், ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டரிடம் விட்டுவிட்டுத் தன் வேலை படத்தை இயக்குவது மட்டுமே என்றும் செய்துகொண்டிருக்கலாம். அது அவரவர் இஷ்டம். ஸ்டோரிபோர்ட்களில் முன்பின் பழக்கம் இல்லை என்றால் அவற்றை திடீரென உபயோகப்படுத்துவது நேர விரயத்தை ஏற்படுத்தும் என்பதை மட்டும் நினைவில் கொண்டாலே போதுமானது.

Location Scouting

கண்டின்யூட்டி டிஸைனின் முதல் படியானது தனிப்பட்ட காட்சிகளை ஸ்டுடியோவுக்குள் படமாக்கலாமா அல்லது வெளிப்புற லொகேஷன்களில் படம்பிடிக்கலாமா என்று முடிவுசெய்வதில் துவங்குகிறது. படப்பிடிப்புக்கு முன்பான ப்ரீப்ரொடக்ஷனின்போது ஒரு இயக்குநர், தனது தயாரிப்பாளர், ப்ரொடக்ஷன் டிஸைனர் மற்றும் மிகச்சில சமயங்களில் ஒளிப்பதிவாளரோடு லொகேஷன் தேடி அலைவது ஹாலிவுட்டின் இன்றியமையாத விஷயம். அப்போதெல்லாம் அந்த இடங்களில் இருந்துகொண்டு அங்கே பின்னாட்களில் எப்படிப்பட்ட காட்சிகள் எடுக்கப்படப்போகின்றன என்று இவர்களுக்குள் விவாதங்கள் நடக்கும். சில சமயங்களில் திரைக்கதையில் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் சாத்தியப்பட்ட காட்சிகள் நிஜத்தில் அங்கே சென்று பார்க்கும்போது நடக்க இயலாமல் போகவும் பெரும் வாய்ப்பு உண்டு. போலவே இந்த லொகேஷன்களில் சில முற்றிலும் புதிய யோசனைகள் தோன்றி, திரைக்கதையை இன்னும் மெருகேற்றவும் வாய்ப்புகள் அதிகம்.

ஒருவேளை இயக்குநர் விஷுவலாகக் காட்சிகளை முன்னரே யோசித்துப்பார்க்கும் தன்மையைப் பெற்றிருந்தால், அவர் அங்கே புகைப்படங்களையும் எடுக்கக்கூடும். போலவே பலவிதமான லென்ஸ்களையும் அந்தந்த இடங்களில் பயன்படுத்தியும் பார்க்கலாம். இதற்கென்றே அந்த இயக்குநர் ஒரு வ்யூஃபைண்டரையும் தன்னுடன் எப்போதும் வைத்துக்கொள்வது நல்லது.

தற்காலத்தில் எந்தெந்தக் காமெராக்கள் நன்றாகப் படம் எடுக்கக்கூடியவையோ அவைகளை வாங்கிக்கொண்டு எடுத்துச்செல்லலாம். இந்தப் புத்தகத்தை எழுதிய ஸ்டீவன் டி காட்ஸ், தன்னுடன் ஒரு 35mm SLR கேமராவையும் சில ஸூம் லென்ஸ்களையும் எப்போதும் எடுத்துச்செல்வது வழக்கம் என்று சொல்கிறார். இதன் காரணம் என்னவெனில், பொதுவாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டபோது திரைப்படங்கள் பெரும்பாலும் திரைப்படச் சுருள்களை (ஃபில்ம்) உபயோகித்தே படமாக்கப்பட்டன. இதனால் முன்கூட்டியே அந்தப் படச்சுருள்களை உபயோகித்து லொகேஷன்களைப் படம் பிடித்தால், அவை பின்னாட்களில் திரைப்படம் எடுக்கும்போது கொடுக்கக்கூடிய ஒருவிதப் பழகிய உணர்வைக் கொடுக்கக்கூடும்; அது இயக்குநருக்கு உதவும் என்பதால்தான்.

The Illustrated Script

திரைப்படத்துக்குத் தேவையான லொகேஷன்களைப் பெரும்பாலும் பார்த்துவிட்டபின்னர், இயக்குநர் அதுவரை எடுத்த புகைப்படங்களை உபயோகித்து ஒரு ஆல்பம் அமைக்கலாம். இந்தக் கட்டத்தில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் பற்றி ஒரு திட்டத்தை உருவாக்கிக்கொள்வது நல்லது என்பதாலேயே இப்படிச் செய்வது நல்லது என்று கருதப்படுகிறது. சில சமயங்களில் புகைப்படங்களுடன் சின்னச்சின்ன ஸ்கெட்ச்களையும் வரைந்துவைத்துக்கொள்ளலாம். சில சமயம், ஒட்டுமொத்தப் படத்தையும் யோசிக்கையில் லொகேஷன்கள் சம்மந்தப்பட்ட சில யோசனைகள் இயக்குநருக்கு மறக்கலாம். இப்படி ஆல்பம் செய்துகொண்டால் வரிசையாக இருக்கும் இந்த லொகேஷன்களைப் பார்த்தாலே அவசியம் சில யோசனைகள் தோன்றக்கூடும். அதேபோல் தனித்தனியே இருக்கும் இந்த லொகேஷன்கள் ஆல்பத்தில் வரிசையாக வருவது முற்றிலும் வித்தியாசமான ஒரு தோற்றத்தைத் தரலாம். அதிலிருந்து புதிய யோசனைகள் வரலாம். திரைப்படத்தின் விஷுவல் கண்டின்யூட்டியை மறக்காமல் நினைவு வைத்துக்கொள்ள இந்த ஆல்பம் ஒரு நல்ல வழிமுறை.

Overview Meetings

திரைப்படத்துடன் சம்மந்தப்பட்ட முக்கியமான நபர்கள் ஒன்றாக அமர்ந்துகொண்டு, குறிப்பிட்ட காட்சியைப்பற்றி விவாதிப்பதே ஓவர்வ்யூ மீட்டிங்ஸ் என்று அழைக்கப்படுகிறது. காட்சியைப் படமாக்குவதற்குத் தேவையான விஷயங்கள் (முந்தைய பிரிவில் பார்த்த ஆல்பங்கள், புகைப்படங்கள், ஸ்கெட்ச்கள்) ஆகியவற்றை எங்காவது ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு அவற்றைப் பற்றி விவாதிக்கலாம். இதன்மூலம் பல யோசனைகள் கிடைக்கலாம். அந்தப் படங்களையும் ஸ்கெட்ச்களையும் மாற்றிமாற்றிப் போட்டுப் பேசுவதன் மூலம் அந்தக் காட்சியின் பரிமாணங்கள் மாறலாம். காட்சி இன்னும் மெருகேறலாம்.

Phase Three: Script Analysis

கையிலிருக்கும் திரைக்கதையை இன்னும் தெளிவாக்கிக்கொள்வதே ஸ்க்ரிப்ட் அனாலிஸிஸ். இதன்கீழ், திரைக்கதையை ஸ்டோரிபோர்ட்களாக வரைந்துவைத்துக்கொள்வது, லொகேஷன்களில் கேமராவை வைப்பது பற்றிய ஸ்கெட்ச்கள் அல்லது குறிப்புகள் ஆகியவை உதாரணங்கள். ஒரு திரைக்கதையை இப்படிப்பட்ட சீக்வென்ஸ்களாக மாற்றிக்கொள்ளப் பல வழிமுறைகள் உள்ளன. அவை இயக்குநர்களைப் பொறுத்து மாறும். இனிமேல் கொடுக்கப்படும் பரிந்துரைகள், இப்படிப்பட்ட பல்வேறு வழிமுறைகளைப் பற்றிச் சொல்கின்றன.

ஒரு சிறிய உதாரணத்தை யோசித்துக்கொள்வோம். அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் ஒரு குறிப்பிட்ட காட்சி. போரின் முடிவில் ராபர்ட் லீ என்ற தளபதி, யுலிஸிஸ் க்ராண்ட் என்ற தளபதியிடம் சரணடைகிறார். அதனைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வருகிறது. இதுதான் காட்சி.

இயக்குநர் திரைக்கதையைப் பலமுறை படித்துக்கொள்கிறார். திரைக்கதையாசிரியரிடமும் நிறையப் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து அந்தத் திரைக்கதையின் மார்ஜின்களில் பல குறிப்புகளை எழுதிக்கொள்கிறார். இந்தக் குறிப்புகள் எல்லாவற்றையும் பின்னர் தனியாக ஒரு நோட்டிலோ கணினியிலோ எழுதிவைத்துக்கொள்கிறார். இந்தக் குறிப்புகளில் புகைப்படங்கள், ஸ்கெட்ச்கள், மற்ற புத்தகங்கள், தகவல் குறிப்புகள் ஆகிய எல்லாமே அடக்கம். இப்படித் தன்னை முற்றிலும் தயார் செய்துகொண்டதும், லொகேஷனுக்குச் சென்று அங்கும் நன்றாகத் தன்னைத் தயார் செய்துகொள்கிறார். இதன்பிறகு, அந்தக் காட்சியை ஒவ்வொரு ஷாட்டாக எப்படி எடுப்பது என்ற அடுத்த கட்டத்துக்கு அவர் தயார்.

ஷாட் ஒன்றைப் படமாக்கப்போகிறார் என்றால் அந்த ஷாட்டில் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது, அந்தக் காட்சியின் ஒளியமைப்பு என்ன, கேமரா எங்கிருக்கப்போகிறது, கேமரா ஆங்கிள் என்ன, அதன் லென்ஸ்கள் என்னென்ன என்பதெல்லாம் அவரது மூளையில் தராயாக இருக்கின்றன என்றே அர்த்தம். அதாவது, ‘wide shotடில் ஒரு நீளமான லென்ஸை உபயோகிக்கிறோம். அப்போதுதான் காட்சியின் முன்னணியும் பின்னணியும் சரியாக அமையும்; இதன்பின்னர் கேமரா, காட்சியில் உள்ள படைவீரர்களை ஓரளவு உயரமான ஆங்கிளில் பார்க்கிறது; அப்போது முன்னணியில் மரங்கள் உள்ளன; அவற்றின் மேலே இருந்து கேமரா இறங்குகிறது; ஃப்ரேமின் வலதுபக்கத்தில் ஒரு குதிரை வீரன் முழைகிறான்; கேமரா அவனுடனேயே பயணித்துக் காட்சியின் மத்திக்கு வந்து சேருகிறது’ என்பதுபோன்ற முழுத்திட்டமும் அவரிடம் இருக்கவேண்டும்.

இதுபோன்றவற்றை விளக்க ஹாலிவுட்ட்டில் சில வார்த்தைகள் உண்டு. இவற்றின்மூலம் ஒரு காட்சியின் அத்தனை விஷயங்களும் தெளிவுபடுத்தப்பட்டுவிடுகின்றன. கீழே கவனியுங்கள்.

1. Graphic – கேமரா எங்கே உள்ளது?

Narrative – யாருடைய பாயிண்ட் ஆஃப் வ்யூவில் கேமரா பார்க்கிறது?

2. Graphic – ஷாட்டின் சைஸ் என்ன? (மிட் ஷாட்டா? க்ளோஸப்பா? லாங் ஷாட்டா போன்றவை)

Narrative – அந்தக் காட்சியில் படமாக்கப்படப்போகும் கதாபாத்திரங்களிடமிருந்து கேமரா எத்தனை தொலைவில் உள்ளது?

3. Graphic – நமது கேமராவின் ஆங்கிள் என்ன?

Narrative – நமக்கும் கேமராவில் படமாக்கப்படப்போகும் காட்சியில் உள்ளவர்களுக்கும் என்ன தொடர்பு? (அதாவது, அவர்கள் நம் பக்கம் பார்த்துப் பேசக்கூடிய காட்சியா?)

4. Graphic – கேமராவைக் கட் செய்யப்போகிறோமா அல்லது நகர்த்தப்போகிறோமா?

Narrative – பல பாயிண்ட் ஆஃப் வ்யூக்களை ஒப்பிடப்போகிறோமா?

இதுபோன்ற கேள்விகளின்மூலம் ஒரு ஷாட்டுக்குத் தேவையான பல விஷயங்களையும் தயாராக வைத்துக்கொண்டுவிடலாம். இப்படித்தான் ஹாலிவுட்டில் சிலசமயங்களில் ஷாட் தயார் செய்யப்படுகிறது.

அடுத்த கட்டுரையில் இதன்பின் திரைக்கதையில் செய்யவேண்டியது என்ன என்று கவனிக்கலாம்.
தொடரலாம்.