திரைமொழி - 13

இந்த அத்தியாயத்தில் இருந்து, ஷாட் பை ஷாட் புத்தகத்தின் நான்காவது அத்தியாயத்தைக் கவனிக்க ஆரம்பிக்கலாம்.

Visualization: Tools and Techniques

Photoboards

சென்ற சில அத்தியாயங்களில் பார்த்த ஸ்டோரிபோர்ட்கள் மட்டுமேதான் நமது எண்ணங்களையும் ஐடியாக்களையும் விஷுவலைஸ் செய்து பார்க்கும் ஒரே வழிமுறை அல்ல. இன்னும் சில இருக்கின்றன. அவற்றை விரிவாகப் பார்க்கப்போகிறோம். அவற்றில் ஒன்றுதான் இந்த ஃபோட்டோபோர்ட்கள். ஃபோட்டோக்களை ஒரு போர்டில் ஒட்டிவைத்து நினைத்த காட்சியை இவற்றில் கொண்டுவருவது. இவைகளின் நன்மை என்னவென்றால், திரைப்படங்களின் காட்சிகளின் ஆழமும் ஒளியமைப்பும் இவற்றில் எளிதாக வந்துவிடும். ஆனால் இவற்றின் பாதகங்கள் – அந்தக் காட்சிகளை மாடலிங் செய்ய நடிகர்களும் பின்னணிகளும் வேண்டும். சில நடிகர்களே இடம்பெறும் ஒரு சிறிய காட்சியை இப்படிப்பட்ட ஃபோட்டோபோர்ட்களின் மூலம் உருவாக்கிவிடலாம். அதேசமயம், மிகப்பெரிய லொகேஷன்கள், அதிகமான நடிகர்கள், ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றை ஸ்டோரிபோர்ட்கள் மூலம் மட்டுமே உருவாக்கமுடியும். இந்த முறை இப்போது வழக்கொழிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

Video

இது வீடியோக்களின் காலம். மிகக் குறைந்த விலையில் வீடியோ கேமராக்கள் இப்போது கிடைக்கின்றன. போலவே எடிட்டிங் செய்வதற்கும் குறைந்த விலையில் சாதனங்கள் உள்ளன. ஒரு மடிக்கணினி இருந்தாலே இப்போதெல்லாம் வீடியோக்கள் எடுத்து அவற்றை எடிட் செய்ய முடிகிறது. எனவே சில நடிகர்களை வைத்து ஒரு காட்சி எப்படி இருக்கவேண்டுமோ அப்படி ஷூட் செய்துகொள்ள இப்போது வசதிகள் உள்ளன. ஸ்டோரிபோர்ட்களைவிடவும் இந்த வீடியோக்கள் அந்தக் காட்சியின் அமைப்பைத் தெளிவாகக் காட்டிவிடும். ஆனால் இதன் குறைகள்: எல்லா நடிகர்களையும் வைத்துப் படமாக்குதல், அப்படிப் படமாக்கிய காட்சிகளை அதேபோல் படத்தில் எடுப்பதில் உள்ள பிரச்னைகள் ஆகியவை.

குறைந்த செலவில் படங்கள் எடுக்கப்படும்போது இந்த வீடியோவில் விஷுவலைஸ் செய்வது உபயோகப்படுகிறது. எளிதில் நடிகர்களை நடிக்கவைத்துவிட்டு அதனைப் படங்களில் காட்சிகள் எடுக்கும்போது உபயோகப்படுத்திவிடலாம். போலவே இந்த டெஸ்ட் ஷாட்களை எடிட் செய்து சீக்வென்ஸ்களாகவும் மாற்றலாம். அப்படி எடிட் செய்ய இப்போது பல மென்பொருட்கள் கிடைக்கின்றன.

Desktop Video

இந்தப் புத்தகம் வெளிவந்த காலத்தில் கணினிகள் அப்போதுதான் பிரபலம் ஆகிக்கொண்டிருந்தன. எனவே டெஸ்க்டாப் வீடியோ என்று இங்கே விபரமாக எழுதப்பட்டிருப்பது, ஒரு கணினியில் எப்படியெல்லாம் வீடியோக்களை உருவக்கலாம் என்பதையே. ஆனால் தற்போது கணினிகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவையாக உருவாகிவிட்டன. அவற்றால் முடியாதது எதுவுமே இல்லை என்ற நிலை. செல்ஃபோனில்கூட ஒரு வீடியோவை இப்போது அருமையாகப் படம்பிடித்துவிட முடியும். அப்படி எடுக்கப்படும் வீடியோவைக் கணினியில் உள்ளீடு செய்து அதனைப் பல மென்பொருட்களின் மூலம் உருமாற்றி, இசையைக் கோர்த்து, க்ராஃபிக்ஸ்களைச் சேர்த்து அழகாக உருமாற்றிவிட முடியும். மல்ட்டிமீடியாவின் நன்மைகள்.

Storyboard/Animation Programs

ஸ்டோரிபோர்ட்கள் செய்வதற்கும் அனிமேஷன்கள் செய்வதற்கும் பல மென்பொருட்கள் உள்ளன. இந்தப் புத்தகம் வெளிவந்த காலகட்டத்தில் Storyboarder மற்றும் Director ஆகிய இரண்டு மென்பொருட்கள்தான் பிரபலம். ஆனால் இப்போது Adobe Flash, Adobe After Effects, Frameforge Previz Studio, Storyboard Pro, Storyboard Quick, Storyboard Artist Storyboard That போன்ற பல மென்பொருட்கள் வந்துவிட்டன. இவையெல்லாமே மிகவும் உபயோகமானவை. இந்தப் பகுதியில் Storyboarder மற்றும் Director ஆகிய பழைய மென்பொருட்களை விவரித்துள்ளார் ஸ்டீவன் காட்ஸ். ஆனால் அவை தற்போது வழக்கில் இல்லை என்பதால், மேலே புதிய மென்பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

CAD Technology

Computer Aided Design and Drafting என்ற CAD, திரைப்படங்களில் க்ராஃபிக்ஸ் காட்சிகளில் அதிகம் உபயோகமாகிறது. உதாரனமாக, டிஸ்னி தீம் பார்க்கில் மிகப்பெரிய ராட்டினங்கள், விளையாட்டுகள் ஆகியவையெல்லாமே முதலில் இந்த CAD மென்பொருட்களின் மூலம் மிகச்சிறியவையாக உருவாக்கப்பட்டு அவற்றின் அளவுகளை வைத்தே ஆராயப்பட்டுப் பின்னர் நிஜமாக உருவாக்கப்பட்டன. இதையேதான் லார்ட் ஆஃப் த ரிங்ஸில் பீட்டர் ஜாக்ஸன் செய்தார். தற்போதைய காலகட்டத்தில் இந்தப் புத்தகத்தில் சொல்லப்படும் Virtus Walkthrough, Cyberspace போன்ற மென்பொருட்கள் வழக்கொழிந்துவிட்டன. இப்போது பெரிதும் உபயோகிக்கப்படும் CAD மென்பொருட்கள் – Audodesk 3ds max மற்றும் Autodesk Maya 3d. இவைகளால் எப்படிப்பட்ட காட்சியையும் முதலிலேயே உருவாக்கிச் சரிபார்க்க முடியும். Previz என்று இதற்குப் பெயர்.

Production Management

திரைப்படத் தயாரிப்பில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கட்டத்திற்கும் - திரைக்கதை, பட்ஜெட், படப்பிடிப்பைத் திட்டமிடுதல், போஸ்ட் ப்ரொடக்ஷன் ஆகிய அனைத்துக்குமே- ஒவ்வொரு மென்பொருள் இப்போது உள்ளது. இவைகளை ஒன்றிணைத்தும் பயன்படுத்தலாம். இதனால் துவக்கத்தில் இருந்து இறுதிவரை எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு திரைப்படத்தை முழுமையாக்கும் அனுபவத்தைத் தருகின்றன.

ஒரு உதாரணமாக, நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த Empire of the Sun திரைப்படத்தின் ஸ்டோரிபோர்ட்களின் தொடர்ச்சியைக் கவனிப்போம். இவற்றைப் பார்ப்பதால் விஷுவலைஸேஷன் என்ற இந்த அத்தியாயத்தின் பொருள் விளக்கப்படுகிறது. இந்த ஸ்டோரிபோர்ட்களோடு இந்த அத்தியாயம் நிறைவுபெறுகிறது. வரும் இதழில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்.


தொடரலாம்...