துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல்

தமிழர்களின் கனவு பூமி. நகை வியாபாரத்தில் உலகில் முதலிடம் வகிக்கும் நகரம்.
உலகின் நம்பர் 1 உயர்ந்த கட்டிடம். சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றவர்களையும் கவர்ந்து தங்கள் பயணத்தை துபாய்க்கு திருப்பிய வசீகர நகரம். என பன்முகம் கொண்ட நகரம் துபாய். துபாய் மன்னர் ஷேக் முஹம்மது பின் ராஸித் அல் மக்தூமின் சிறந்த நிர்வாகம். இந்நகரில் எந்த நாட்டைச் சேர்ந்தவராயிருப்பினும் அவர்களுக்கு துபாய் நகரம் தங்களூரைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் அற்புத நகரம்.

இந்நகரில் வேலை கிடைத்தால் அவர்களுக்கு ஒரு அற்புத வாய்ப்பு. சம்பாத்திய வேலை செய்து கொண்டே கலைச் சேவை செய்யவும் ஆர்வம் ஏற்படும். ஆனால் வேலை பளு என்பது சில நேரங்களில் ஆகிவிடுவதுண்டு. தொடங்கிவிட்ட கலைச்சேவை நிற்காது சென்றுகொண்டேயிருக்கும்.

இக்கலைச்சேவையில் ஊடகத்துறைக்கு இப்போது தான் இங்குள்ள தமிழ் இளைஞர்கள் வரத்தொடங்கியுள்ளனர். குறும்படச் சேவையில் கால்பதிக்கும் இளைஞர்களை ஊக்குவித்தல் என்பது நம் பேசா மொழிக்கு கடமையானதாகும். கவியரசர் வைரமுத்து ஒரு விழாவில் பேசும்போது,“தாய்த்தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களைவிட தூர தேசத்தில் வாழும் தமிழர்கள்தான் தமிழை வாழவைக்க முயற்சிக்கிறார்கள்” என்றார்.

அக்கூற்றை ஆய்ந்து நோக்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் அக்கருத்தின் ஆழம்
வளைகுடாவின் ஒரு பகுதியாம் துபாயில் ஒரு விமான நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே தன் இயக்குநர் கனவை, குறும்பட வாயிலாக வெளிக்கொணர முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் திரு.லெனின்.

பொருளீட்ட வந்த இடத்தில் இக்கலையார்வம் என்பது பாராட்டுக்குரியது.

சுமார் 6 வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வரும் திரு.லெனினின் கன்னி முயற்சி இந்த “தனல்“ என்ற இவரது குறும்படம். தன் சக தோழர் டேவிட் உள்பட நண்பர்கள் குழாம் இவரது குறும்படத்திற்கான தொழில்நுட்ப உதவியாளர்கள் என்பது தனிச்சிறப்பு.
இதோ திரு.லெனின் அவர்களின் பேட்டி:

வளைகுடா வாழ்க்கை எப்படி உள்ளது?

சிறப்பாகவே இருக்கிறது.

துபாய் வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது?

6 வருடங்கள்ஆகிறது.

துபையில் மிகவும் பிஸியான வேலைப்பளுவுக்கிடையில் குறும்பட ஆர்வம் எப்படி வந்தது?

பள்ளி, கல்லூரி நாட்களில் கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் என ஈடுபாட்டுடன் இருந்த எனது நிலை, தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியினால் குறும்பட இயக்கமாக மாறியிருக்கிறது.

குறும்பட இயக்குதலில்உள்ள சிரமம் என்ன?

முதல் பிரச்சினை தயாரிப்பாளர் கிடைக்காமலிருப்பது. அடுத்து சரியான தொழில்நுட்பத்தினர் கிடைக்காமல் இருப்பது.

இது எத்தனையாவது குறும்படம்?

முதல்படம். “தனல்“ The Heat என்பது இதன் பெயர். நியூக்ளிர் தொடர்பானது இக்குறும்படம்.

மாற்று சினிமா அவசியம்தானா?

நமது திறைமைகளை மேம்படுத்தும் களமாக கொள்ளலாம்.

உங்கள் இலக்கு என்ன?

நல்ல சிறந்த படைப்புகளாக சமுதாயசிந்தனை, மர்மம், காதல் என வித்தியாசமான கதைகளை இயக்குவது.

மக்களிடம்வரவேற்பு எப்படியிருக்கிறது?

மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது. நல்ல படைப்புகளை அவர்கள் கைவிடுவதில்லை.
உங்கள் கதையாக்கத்தின் முறைகள் என்ன? எப்படி வடிவமைக்கிறீர்கள்.?

கரு உருவானபின், மக்களைச் சேருமா என்று பார்த்து அதனையொட்டி திரைக்கதைகளை அமைப்பேன். பொதுவாக திரைக்கதை என்பது எளிதாகவும் வலுவானதாகவும் இருத்தல் நல்லது.

ஒரு இயக்குநர் என்கிற முறையில் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.?
ஓரளவாவது அனைத்துத் தொழில் நுட்பங்களும தெரிந்திருந்தால் நல்லது. அல்லது அந்தந்த தொழில்நுட்ப அறிவாவது டுமே நல்லஇருக்க வேண்டும்..

இசையில்லா குறும்படங்கள் சாத்தியமா?

கதையைப்பொறுத்தது. (பிண்ணனி இசைக்கருவிகள் இல்லாமலேயே இளையராஜாவின் 'தென்பாண்டிச்சீமையிலே.... தேரோடும் வீதியிலே...' பாடல் வந்தது போல)

குறும்படங்கள் பற்றிய உங்கள் கருத்தென்ன?
திரைப்படங்களின் சின்னஞ்சிறு வடிவமே குறும்படம். ஆனால், எடுக்கும் விதம் சற்று வெறுவேறாய் இருக்கும்.
குறும்படம் எடுத்துவிட்டாலே சினிமாவில் நுழைய வாய்ப்பு வந்துவிடும் என்று எண்ணுகிறார்களே இது சாத்தியமா?

குறும்படம் எடுத்தால் மட்டுமே ஒருவருக்கு திரைக்கதை எழுதும் நுட்பமும், இயக்கும் திறமையும் வந்துவிடாது என்பதே உண்மை. ஏனெனில், 'படைப்பு' என்பது அவரவர் உள்ளிருக்கும் ஊற்றுத்தண்ணீர். சுவையும் ஊறும்தன்மையும் ஒவ்வொரு கிணற்றுக்கும் மாறுபடும்.

குறும்படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடை வாய்ப்பிருக்கிறதா?

திரைப்படங்களுக்கென கோலிவுட்,பாலிவுட்,ஹாலிவுட் மாதிரி ஒருங்கிணப்புக்கென தளங்கள் இருப்பது போல, குறும்படங்களுக்கு இன்னும் வரவில்லை. ஆனால் எதிர்காலத்தில் வரும்.
தயாரிப்பாளர்களுக்கு வருமானம் பெற குறும்படத்தில் வாய்ப்புண்டா?

பறிக்கும் அளவுக்கு இன்னும் பூக்கள் பூக்கவில்லை. இன்னும் சில காலம்கழித்தே தெரியவரும்.
குறும்படம் சொல்ல வந்த கருத்தை பார்வையாளர்கள் புரிந்துகொள்கிறார்களா?

சொல்லும் முறையைப்பொறுத்தும் பார்க்கும் ரசிகரைப்பொறுத்தும்.

உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

தரமான திரைப்படங்களை இயக்குவது.

லெனின் அவர்கள் இயக்கிய “தனல்“ குறும்படத்தின் யு டியூப் சுட்டி :