பாலு மஹேந்திரா சில ஞாபகக் குறிப்புகள்

ஏற்றமும் இறக்கமும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்த அவர் எளிய வாழ்வில், எதிர்பாரா திருப்பங்களும் விநோத சம்பவங்களும் விரவிக் கிடந்தன. கலை உச்ச பங்களிப்பை நல்கியதில் வந்த புகழால், அவர் எப்போதும் தளும்பாமல் இருந்தார். ஒன்றை அடைந்ததும் அதில் தேங்கி நில்லாமல், அடைய முடியா இலக்கொன்றை தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டு, சதா அவர் பயணப்பட்டுக் கொண்டே இருந்தார். ஆசிரியராக இருந்தாலும் மாணவனாக வாழ்ந்தார். எல்லா வெற்றிகளுக்குப் பின்னும், துயரத்தின் மெல்லிய நிழல் அவரை தொடர்ந்தபடியே இருந்தது. ஆனால் ஒரு போராளியின் வீர்யம் மட்டும் கடைசி வரை அவரை விட்டு அகலவே இல்லை.

அவரது ஏராளமான ரசிகர்களில் ஒருவனாகவே நான், பல ஆண்டுகள் அவரை தூரத்திலிருந்தே வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன் . நான் இயக்கிய ஜெயகாந்தன் ஆவணப்படத்தை பார்த்து முடித்த உடனேயே, என் அலை பேசி எண்ணை தேடிப்பிடித்து, அவர் அழைத்தார். இலங்கையின் அவர் ஊரிலிருந்து புகைவண்டி நிலையம் வந்து, அதிகாலைப் பனியில், ரயிலடியில் காத்திருந்து, ஜெயகாந்தன் கதைகள் வந்த சஞ்சிகைகளை படித்து பரவசப்பட்ட நாள் தொடங்கி, ஆவணப்படத்தின் பல்வேறு அம்சங்கள் வரை, தொடர்ச்சியாக ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வுக்குப் பின்னே, அவர் எனக்கு நெருக்கமானார். அதன் பின் நேரிலும் அலைபேசியிலும் மேடைகளிலும் பார்வையாளர் வரிசையிலுமாக, அவருடனான உரையாடல் தொடர்ந்தபடி இருந்தது.

ஒரு முறை, நம்பியாரைப்பற்றி நீங்கள் ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் ரவி என்றார்.
சந்தோஷமா செய்யலாம் சார், எனக்கு யாரும் ப்ரட்யூசர் இல்லை. ஆவணப்படம் எடுக்க
அடிப்படை வசதிகளுக்கே, அல்லாடுறவன் சார் நான் என்றேன். நீங்க முதல்ல ஒரு ஸ்கெலிட்டனை தயார் பண்ணுங்க. உங்களுக்காக நான் யாரிடமாவது பணம் கேட்டு வாங்குறேன். கேமிரா சைடு நான் பாத்துகிறேன். நாலு தலைமுறை இல்ல. அஞ்சு தலை முறை பார்த்த கலைஞன் அவர். சில நேர்மையான வரலாற்றை அவர்தான் சொல்ல முடியும் ரவி என்றார். ஏனோ அது பேசிப் பேசி பின், முடியாமல் ஆனது. நம்பியார் இறந்த பின் அது குறித்து ரொம்பவும் வருத்தப்பட்டார்.

தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளை அவர் வாசித்திருந்தார். இலக்கிய வெளிச்சத்தின் வழியாகவே அவர் திரைப்படத்தைப் பார்த்தார். அதன் வழியாகவே தன் மாணவர்களுக்கும் போதித்தார். பெரும்பாலும் தமிழ் இயக்குனர்களிடம் காணமுடியாத அபூர்வ பழக்கம் இது.

எனது நினைவுக் குமிழிகள் என்ற கவிதையை குறும்படமாக ஆக்க விரும்பி, அதற்கான ஒப்புதலை எழுதிக் கேட்டு ,அவரிடம் பணியாற்றிய சுரேஷ் என்ற உதவி இயக்குனரை அனுப்பினார். அதுவும் ஏனோ பிற்பாடு வராமல் போனது. அப்போது கவிதைகள் குறித்து பேசும் போது தான், தமிழ் கவிதைகள் குறித்த அவரது வாசிப்பையும் அது குறித்து அவர் கொண்டிருந்த வியப்பையும் உணர முடிந்தது. கவிதையின் நுட்பங்களை காட்சி வடிவமாக அவர் விவரிக்கும் போது, அவர் வழியில் மேலும் அதனுள் சில உப பிரதிகள் உருவாகியிருப்பதை என்னால் உணரமுடிந்தது.

நான் கவிதைகளை பாடுகிற சில கூட்டத்தில், பாடிவிட்டு அமர வருகிற போதே, தவறாமல் கை கொடுப்பார். அந்த கவிதை குறித்து பேசுவார். நான்கைந்து இருக்கை தாண்டி தூரத்தில் இருந்தால், ரவி என்றொரு முறை அழுத்தி உச்சரிப்பார். அவருக்கு பிடித்த நகுலனின் ஒரு கவிதை இது.

மீண்டும் வீதியில் யாருமில்லை
வெறும் தனிமை

வெகு தொலைவில் மிதந்து வரும் மகிழ்வுந்து
என் வீடு வருமென்று
நம்பிக்கையின் வேதனை தாங்கி
நான் வாழ மனம் தூண்ட
'நான்' வறிதே வீற்றிருக்க
வந்த வண்டி
என் வீடு
தாண்டிப்
போகும்.

திரைத்துறையில் தான் பெற்ற எல்லா அனுபவங்களையும் பெருமதிகளையும் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி கொடுத்துவிட்டு போகவே அவர் முயன்று கொண்டிருந்தார். எந்த துறையில் இருந்து அவர் எல்லாம் பெற்றாரோ, அதை வைத்தே அத் துறைக்கு புது ரத்தம் பாய்ச்ச தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கலையின் ஊடே அவர் எழுப்பிய சலனங்கள், சன்னமான கேள்விகளை உள்முகமாய் எழுப்புபவை. மொழி குறித்த கரிசனம் கொண்ட அவர் மனம், சமூகம் சார்ந்த விஷயங்களோடு கூடிய, புதிய கலை சாத்தியங்களை, அவாவிக் கொண்டே இருந்தது. அவர் படைப்புகளின் வழியேயும் இயக்கத்தின் வழியேயும் செயல்பாட்டின் வழியேயும் சில சேதிகளை நமக்கு சொல்லிக் கொண்டே இருந்தார். இருப்பார்.