பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 1

தெரிந்தும், தெரியாமலும் தான் இதுவரை செய்திருந்த வினைகளின் பலனாக, மக்களிடையே தனக்கு வாய்க்கப்பெற்றிருக்கின்ற செல்வாக்கை, மோகத்தைத் தானே கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே, பொதுவெளிகளில் நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டாமல் தப்பிப்பவர்களுக்கு நாம் கொடுத்துவைத்திருக்கின்ற பெயர்கள்தான் ஜாம்பவான்கள், ஆளுமைகள், நட்சத்திரங்கள் என்பதெல்லாம்.

இவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தினடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக செய்கின்ற முயற்சிகளெல்லாமே, எவரும் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் நாம் இருந்தோமேயானால், தன்மீதான பிரமிப்பு கலைந்துவிடும் என்ற காரணம்தான்.. இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களைப் பற்றி பேசுபவர்களைக் காட்டிலும், வராதவர்களின் நலன்களை விசாரிக்கின்ற மக்கள் இருப்பது மற்றொரு காரணம்.

ஆனால், சுயமான முயற்சிகளின் பலனாக மக்கள் பாராட்டுகின்ற இடத்தினை தக்கவைத்துக்கொண்டிருக்கின்ற கலைஞர்கள் அவ்விதமான சங்கடங்களுக்குள் சிக்குவதில்லை. மாறாக தன் படைப்பை கண்டுரசித்துப் பாராட்டுகின்ற மக்களில் ஒருவனாகவும், அவர்களோடு தொடர்ந்து தன் படைப்புகள் குறித்து உரையாடுவதில் இன்பம் காண்பவர்களாகவும் இருக்கின்றார்கள், அவர்களில் முன்னோடியாக இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவினைச் சுட்டிக்காட்டலாம்.
எழுபது வயதினைக் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ்ஸ்டுடியோவின் பலநிகழ்ச்சிகள் பாலுமகேந்திராவின் தலைமையில் தான் நடந்துள்ளது. தமிழ்ஸ்டுடியோ சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், உண்மையான இலக்கியமும், அதற்கான வாசகர்களும் இருக்கின்ற ஒவ்வொரு கூட்டத்திலும் பாலுமகேந்திராவை தலைமையிடத்திலோ, அல்லது வாசகர்களில் ஒருவராகவோ காணலாம்.
தன் படைப்புகள் உண்மையாக இருக்கின்ற பட்சத்தில், தான் எவரிடம் இணக்கமாக இருந்தாலும் அது தனக்கு மேற்கொண்டு பெருமையைத்தான் கொண்டுசேர்க்குமே தவிர, தான் சேர்த்துவைத்திருக்கின்ற பெயருக்கு சிறிதளவும் மாசு ஏற்படாது என்பதை ஐயமின்றி தெரிந்துவைத்திருந்த பாலுமகேந்திரா அவர்கள் சினிமாவில் விட்டுச்சென்ற இடத்தினை அடைய பலபேர் போட்டியிடத் தொடங்கியிருக்கலாம். பாலுமகேந்திராவை ஒளிப்பதிவுக்கலைஞராகவும், இயக்குனராகவும் பார்க்கின்றவர்கள் அவர் எப்போதும் எளியோரின் அழைப்பிற்கு மரியாதைகொடுத்து சிறப்பித்தவர் என்ற ரீதியில் பார்க்கதவறிவிடுகின்றனர்.
அதேவேளையில், அவர் இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான புரிதலை நன்குவரையறுத்துக் கொண்டவர், சொற்பமான பொருட்செலவில் நிறைவானதொரு படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்தவர், பாடல்பதிவுகளுக்காக மெனக்கெட்டு வெளிநாட்டு சுற்றுலாத்தலங்களுக்கு விமானம்பிடிக்காதவர் என்பதையெல்லாம் பாலுமகேந்திராவின் இடத்தை அடையபோட்டிபோடுபவர்கள் தெரிந்துவைத்திருப்பார்களா?என்பதுதான் தெரியவில்லை.

இவ்வேளையில் பாலுமகேந்திராவையே தலைமையாகக் கொண்டு, சென்னைப் பல்கலைக்கழக கன்னடத்துறையும், தமிழ்ஸ்டுடியோவும் இணைந்து அவருக்கான நினைவுக்கூட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தது. இதில் பாலுமகேந்திராவுடன் பணியாற்றிய கலைஞர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அல்லது பாலுமகேந்திராவை பார்த்திராத அவர் படைப்புகளையே ஆராதீக்கும் ரசிகர்களும் திரளாககலந்து கொண்டனர். இவர்கள் அனைவரின் மனதிலும் பாலுமகேந்திரா எவ்விதமான தாக்கங்களை விதைத்திருக்கின்றார் என்பதை அவரவர்கள் வாயிலாகவே தெரிந்துகொள்ளலாம். அதன்படிமுறையே.

கன்னடத்துறை முனைவர் தமிழ்ச்செல்வி:
கன்னடத்துறையே பாலுமகேந்திராவின் நினைவுக் கூட்டத்தை முன்னெடுப்பது மிகப்பொருத்தமான விஷயம். காரணம் என்னவெனில் பாலுமகேந்திரா அவர்களின் முதல்படம் கன்னடத்தில் அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எந்தவொருகலைக்கும் மொழிதடையாக இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது, அதன் அடிப்படையில் கன்னடத்துறையும், தமிழ்ஸ்டுடியோவும் இணைந்தே இந்தநினைவுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றோம். பாலுமகேந்திராவோடு பணியாற்றிய கலைஞர்கள் தங்கள் நினைவினை பகிர்ந்து கொள்ள தக்க தருணத்தினை இந்தமேடை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது என்பதில் மிக்கமகிழ்ச்சி.

ஆவணப்பட இயக்குனர் அம்ஷன்குமார்:
நான் 1982ல் சென்னை வந்தேன். அதுவரையிலும் திருச்சியில்தான் என்வாசம். திருச்சியில் இருந்த சமயத்திலெல்லாம், அதிகப்படியான உலகப்படங்கள் பார்க்கவாய்ப்புகள் அமையாது. சென்னை வந்த பின்பு அது திறந்த வெளியாக காணப்பட்டது. பல்வேறு மொழிப்படங்கள் பரவலாக திரையிடப்பட்டன. நான் அனைத்து இடங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன். அப்படியாக நான் செல்கின்றபொழுதெல்லாம் நிறைய பிரமுகர்களை பார்க்கின்றவாய்ப்புகளும் கூடவே அமையும். ஆனால் எல்லா பிரமுகர்களும் சாதரணமாக வரமாட்டார்கள், அவர்களை மதித்து கூப்பிட்டால்தான் அனுமதி தரப்படும். பின்னர் அவர்கள் பேசிமுடிந்ததும், மற்றவர்கள் பேச்சைக் கேட்கக் கூட நேரமின்றி எழுந்து விடுவார்கள். ஆனால், ஒருவர் மட்டும் பார்வையாளராகவே எந்தச்சலனமுமின்றி அமர்ந்திருப்பார். அவர்தான் பாலுமகேந்திரா. மற்ற நடிகர்களைப் பார்த்து எளிமையானவர் என்று சொல்கின்றோம். ஆனால், அதில் எந்தளவிற்கு உண்மையிருக்கின்றது என்பது தெரியவில்லை, ஆனால், பாலுமகேந்திரா உண்மையிலேயே எளிமையான மனிதர். நான் எழுதிய ‘சினிமாரசனை’, புத்தகத்தை வெளியிடுவதற்கு என்னுடைய முதல் விருப்பமாக இருந்தவர் பாலுமகேந்திராதான். விருப்பமும் நிறைவேறியது, பாலுமகேந்திராதான் நான் நினைத்தபடியே அப்புத்தகத்தை வெளியிட்டார். திரைப்படங்களைப் பற்றி தொடர்ந்து பேசுவதிலும், அம்மாதிரியான நிகழ்ச்சிகளில் தன் இருப்பினை உறுதிப்படுத்துவதிலும் என்றுமே ஆர்வம் குறையாமலிருந்தவர் பாலுமகேந்திரா.

கவிஞர், ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்ரமணியம்:
பாலுமகேந்திராவின் ஏராளமான ரசிகர்களில் ஒருவனாகவே நான், பல ஆண்டுகள் அவரை தூரத்திலிருந்தே வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன் . நான் இயக்கிய ஜெயகாந்தன் ஆவணப்படத்தை பார்த்து முடித்த உடனேயே, என் அலை பேசி எண்ணை தேடிப்பிடித்து, அவர் அழைத்தார். இலங்கையின் அவர் ஊரிலிருந்து புகைவண்டி நிலையம் வந்து, அதிகாலைப் பனியில், ரயிலடியில் காத்திருந்து, ஜெயகாந்தன் கதைகள் வந்த சஞ்சிகைகளை படித்து பரவசப்பட்ட நாள் தொடங்கி, ஆவணப்படத்தின் பல்வேறு அம்சங்கள் வரை, தொடர்ச்சியாக ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வுக்குப் பின்னே, அவர் எனக்கு நெருக்கமானார். அதன் பின் நேரிலும் அலைபேசியிலும் மேடைகளிலும் பார்வையாளர் வரிசையிலுமாக, அவருடனான உரையாடல் தொடர்ந்தபடி இருந்தது.
ஒரு முறை, நம்பியாரைப்பற்றி நீங்கள் ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் ரவி என்றார்.
சந்தோஷமா செய்யலாம் சார், எனக்கு யாரும் ப்ரட்யூசர் இல்லை. ஆவணப்படம் எடுக்க
அடிப்படை வசதிகளுக்கே, அல்லாடுறவன் சார் நான் என்றேன். நீங்க முதல்ல ஒரு ஸ்கெலிட்டனை தயார் பண்ணுங்க. உங்களுக்காக நான் யாரிடமாவது பணம் கேட்டு வாங்குறேன். கேமிரா சைடு நான் பாத்துகிறேன். நாலு தலைமுறை இல்ல. அஞ்சு தலை முறை பார்த்த கலைஞன் அவர். சில நேர்மையான வரலாற்றை அவர்தான் சொல்ல முடியும் ரவி என்றார். ஏனோ அது பேசிப் பேசி பின், முடியாமல் ஆனது. நம்பியார் இறந்த பின் அது குறித்து ரொம்பவும் வருத்தப்பட்டார்.
தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளை அவர் வாசித்திருந்தார். இலக்கிய வெளிச்சத்தின் வழியாகவே அவர் திரைப்படத்தைப் பார்த்தார். அதன் வழியாகவே தன் மாணவர்களுக்கும் போதித்தார். பெரும்பாலும் தமிழ் இயக்குனர்களிடம் காணமுடியாத அபூர்வ பழக்கம் இது.

திரைத்துறையில் தான் பெற்ற எல்லா அனுபவங்களையும் பெருமதிகளையும் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி கொடுத்துவிட்டு போகவே அவர் முயன்று கொண்டிருந்தார். எந்த துறையில் இருந்து அவர் எல்லாம் பெற்றாரோ, அதை வைத்தே அத் துறைக்கு புது ரத்தம் பாய்ச்ச தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கலையின் ஊடே அவர் எழுப்பிய சலனங்கள், சன்னமான கேள்விகளை உள்முகமாய் எழுப்புபவை. மொழி குறித்த கரிசனம் கொண்ட அவர் மனம், சமூகம் சார்ந்த விஷயங்களோடு கூடிய, புதிய கலை சாத்தியங்களை, அவாவிக் கொண்டே இருந்தது. அவர் படைப்புகளின் வழியேயும் இயக்கத்தின் வழியேயும் செயல்பாட்டின் வழியேயும் சில சேதிகளை நமக்கு சொல்லிக் கொண்டே இருந்தார். இருப்பார்.

எழுத்தாளர் சந்திரா:
இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது எழுத்தாளர் சைலஜா,தான். ஒருநாள் சைலஜா எனக்கு போன் செய்து, “பாலுமகேந்திரா சார், உங்கள பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க”, என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இயக்குனர் என்னுடைய கதைகளைப் படித்ததன் பொருட்டே என்னைக்காண விழைந்திருக்கின்றார் என்பதை சைலஜா மூலமாகத் தெரிந்துகொண்டேன். பின்னர் அவரைச்சந்தித்து,”நான் இயக்குனர் அமீர் மற்றும் ராமிடம் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கின்றேன்”, என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன், ”அப்படியெனில் பாலா, அமீர், ராம், வரிசையில் நீயும் என்னுடய பள்ளியைச் சார்ந்தவள்தான்”, என்று சிரித்தார். என்னைப்பற்றி விசாரித்த பின்பு, நானும் சினிமாத்துறையைச் சார்ந்தவள்தான் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் மிகவும் மகிழ்ந்தார். பின்னர் அவரும் நானும் சினிமாவைக் குறித்துப் பேசியதைக்காட்டிலும், இலக்கியம் தொடர்பாகவே அதிகமாகப் பேசியிருக்கின்றோம்.

எழுத்தாளர் தமயந்தி:
”வீடு”, படம் வெளியான சமயத்தில் நான், அண்ணன் அறிவுமதியைச் சந்தித்து எப்படியாவது பாலுமகேந்திராவைப் பார்க்கவேண்டும் என்று கூறினேன். ஆனால், பாலுமகேந்திரா அப்பொழுது ஊரில் இல்லாத காரணத்தினால் அவரைக் காண இயலவில்லை. பின்னர் அந்த வீடு, அர்ச்சனாவின் வீடு, சொக்கலிங்க பாகவதர் என்று ஒவ்வொருவராகப் பார்த்து விட்டுத் திரும்பினோம். ஆனாலும், பாலுமகேந்திராவைச் சந்திக்க முடியவில்லை என்பது ஆறாதரணமாகவே இருந்து வந்தது. அந்த அளவிற்கு ”வீடு”, படம் எனக்கு இஷ்டமானது. இளையராஜாவின் (how to name it) இசையை நானும் என்தோழியும் கருவிகளின் துணையின்றியே உதடுகளைக் குவித்து இசைத்து மகிழ்வோம்.
பின்னர் ஜோதிவிநாயகம் பரிசுத் திட்டத்தின் மூலமாக, சங்கர் நாராயணன் பரிசு எனக்கு அளிக்கப்படுவதாக இருந்தது. அந்நேரம் அம்மாவின் அப்பா அதாவது தாத்தா உடல் நிலைசரியில்லாமல் இருந்த காரணத்தினால் என்னால் பரிசு வாங்கமுடியவில்லை. பரிசுகொடுத்தவர் பாலுமகேந்திராதான் என்ற தன் காரணமாக இங்கும் அவரைக்காண இயலவில்லையே என்பதில் கவலையாகத்தான் இருந்தேன்.

பிறிதொரு நாளில் தமிழ்ஸ்டுடியோ அருண் மூலமாக அவரது நிகழ்ச்சிகளில் நான் பாலுமகேந்திராவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட உடனேயே அவர் எந்தன் கைகளைப் பற்றிக்கொண்டு நான் எந்தன் கதைகளைப் பற்றியே விவாதித்தார். எனக்கு அவர் பேசியகதைகள் சரியாக ஞாபகம் இல்லாவிட்டாலும், அவர்கைகளைப் பற்றிய தருணங்களை மறக்க இயலாது.

சமீபமாக ”பனுவல்”, புத்தக நிலையத்தில் அவரது ”வீடு”, படம் திரையிடப்பட்ட போது, பாலுமகேந்திராவின் அருகிலேயே உட்கார்ந்து படம்பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. பின்னர் எனக்காக அவரே கையெழுத்திட்ட ”வீடு”, படத்தின் கறுப்பு வெள்ளை குறுந்தகட்டை என்னிடம் கொடுப்பாதச் சொன்னார். இந்நிகழ்ச்சிகளெல்லாம் முடிந்த பின்னர் நான் திருநெல்வேலிக்குச் சென்றுகொண்டிருக்கின்ற பொழுதுதான் பாலுமகேந்திரா இறந்தசெய்தி எனக்குத் தெரியவந்தது.
பாலுமகேந்திராவைப் பற்றிநினைத்தாலே இந்நான்கு நினைவுகளும் சட்டென உதித்துக் கொண்டேயிருக்கும்.

பத்திரிக்கையாளர் அசோகன்:
பாலுமகேந்திரா என்று சொன்னாலே எனக்கு அச்சம் கலந்த மரியாதை ஏற்படுவதுண்டு. நான்கு வருடத்திற்கு முன்பு ’தமிழ்சினிமா, உலகசினிமா’,என்ற கருத்தரங்கிற்காக பாலுமகேந்திரா வந்திருந்தார். நிகழ்வு தாமதமாகத் தொடங்கினாலும், அவர் சரியான நேரத்திற்கு வந்துவிட்ட காரணத்தினால், ஏதாவது அவரிடம் பேசவேண்டுமே என்று அவரருகில் சென்றேன். ”நீங்கள் நடத்துகின்ற இன்ஸ்டிட்யூட்டில் எத்தனைபேர் படிக்கின்றார்கள்” என்று கேட்டேன், அவர் உடனேயே கோபமடைந்து விட்டார், “நான் இன்ஸ்டிட்யூட் நடத்தல, அது ஒரு வீடு, பள்ளிக்கூடம், இன்ஸ்டிட்யூட்டிற்கும் இதற்கும் நிறையவித்தியாசங்கள் உண்டு” என்றார். இச்சந்திப்பிற்குப் பின்பாக அவரை அதிகமாக வெளியிடங்களில் சந்திக்கின்ற வாய்ப்பு அமையவில்லை, இதற்கிடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் நாங்கள் ’அந்திமழை’, என்றொரு பத்திரிக்கையும் தொடங்கிவிட்டோம். ஏதோவொரு சமயத்தில் ’அந்திமழை’, பத்திரிக்கையை வாசித்திருக்கின்ற பாலுமகேந்திராவிடமிருந்து எங்களுக்கான பாராட்டுக் கடிதம் வந்தது. பாலுமகேந்திரா அவ்வாறெல்லாம் எழுதவேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால், இலக்கியத்திற்கும் ,சினிமாவிற்கும் இடையே அவர்பாலமாக இருந்தார் என்பதைத்தான் இக்கடிதம் எனக்கு உணர்த்தியது.

எழுத்தாளர் கெளதமசித்தார்த்தன்:
திரு. பாலுமகேந்திரா அவர்களுடன் நெருங்கிப் பழகும்சந்தர்ப்பம் எந்தன் வாழ்நாளில் அமையவில்லை. அதற்கான அவசியமும் வேண்டாம் என்பதே என்எண்ணம். அவரது படங்களின் வாயிலாகவே வாழ்விற்கான வெவ்வேறு கோணங்களை அறிமுகப்படுத்திவிட்டார். மரபான சினிமாவாக தமிழ்ச்சினிமா இருந்தகாலத்திலே பாலுமகேந்திரா அவர்கள் அதனை மரபானதிலிருந்து நவீனசினிமாத்தளத்திற்கு நகர்த்தினார். இவரோடு தான் பாரதிராஜா, பாலச்சந்தர், மகேந்திரன் ஆகியோரும் பயணித்தனர். இதில் பாலுமகேந்திராவைப் பற்றிய என்னுடைய கருத்து என்னவென்றால், முழுக்க முழுக்க அழகியல் பூர்வமான பார்வையைக் கொண்ட படத்தினை எடுத்தவர். அதேபோல சினிமாவின் மாற்றுப்பாதை குறித்துச்சிந்திப்பவர்களெல்லாம் ’தேவராஜ்மோகன்’, என்ற இயக்குனரையும் மறந்துவிட வேண்டாம்.
பாலுமகேந்திராவின் பயணமென்பது தமிழ்ச்சினிமாவிலே மிக முக்கியமான மைல்கல்.
இவரைப் போன்றவர்களை தயவுசெய்து அடுத்ததலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள். இத்தகைய மாற்றுசினிமா முன்னோடிகளைப்பற்றி அடுத்ததலைமுறைக்கு அறிமுகப்படுத்தாமற் போனதன் காரணம்தான் இன்றைய தமிழ்ச்சினிமா மோசமான பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கான அடையாளம்.

ஒளிப்பதிவாளர் ஜி.பி.கிருஷ்ணா:
இந்திய சினிமாவைப் பற்றிப் பேசினால் அதில் பாலுமகேந்திரா என்ற பெயரை தவறவிட முடியாது. தன்னுடைய கருத்தை இப்படி ஆணித்தரமாக பாலுமகேந்திரா முறையிட்டிருக்கின்றார். அவரை நான் முதன் முதலாகப் பார்த்த்து 1979ல். 35 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படக்கல்லூரிக்கு ‘கோகிலா’ என்ற படத்தை அவரே ஆட்டோரிக்ஷாவில் கொண்டுவந்து அந்தப் படத்தைப் பற்றி மாணவர்களுடன் உரையாடவேண்டுமென்று விரும்பினார். நாம் ஒரு துறையில் முன்னேற துடிக்கின்ற பொழுது அது ஒளிப்பதிவாக இருந்தாலும், இயக்குவதாக இருந்தாலும் நமக்கான ஒரு முன்மாதிரியை தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கின்றோம். அப்படி ஒளிப்பதில் எனக்கான முன்னோடிகளாக நான் முன்னிறுத்தியது, சத்யஜித்ரேயின் ஒளிப்பதிவாளர், சுபத்ரமித்ராவும், நம் பாலுமகேந்திராவும்தான். காரணம் இவரது ஒளிப்பதிவில் யதார்த்தம் இருந்தது. ஏதாவதொரு விஷயத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில், சொல்லவேண்டிய விஷயத்தை சரியாகவே காமிராவின் துணைகொண்டு சொன்னார்கள். இதை பாலுமகேந்திரா தனதுமுதல் படத்திலிருந்து கடைசிப்படம் வரையிலும் கையாண்டிருக்கின்றார்.

காலங்காலமாக திரைப்படங்களின் இறுதிக்காட்சியானது விறுவிறுப்பானதொரு தொனியில் அமையவேண்டியிருந்த நிர்பந்தத்தை உடைத்தெறிந்தவர் பாலுமகேந்திரா. உதாரணமாக அவருடைய ”யாத்ரா”என்கின்ற மலையாளப் படத்தில் பார்த்தீர்களேயானால், ”நீ என் மீது காதல் வைத்திருந்தால், எனக்காக ஒரேயொரு தீபத்தை ஏற்றிவை”, என்று கதாநாயகன் சொல்வான். பின்னர் படத்தின் க்ளைமேக்ஸ் என்று சொல்லப்படுகின்ற இறுதிக்காட்சியில், கதாநாயகன் தனக்கான தீபம் ஏற்றப்பட்டிருக்கின்றதா என்று பார்க்கின்றான், அந்நேரத்தில், ஆயிரக்கணக்கான தீபங்களுக்கு மத்தியில் ஷோபனா அமர்ந்திருப்பாள். இதற்கு முன் பிருந்த படங்களின் கிளை மேக்ஸிலிருந்து இக்காட்சி மாறுபட்டு நிற்கின்றது.

காட்சி ரூபமாகத்தான் கதையை நகர்த்த வேண்டும் என்ற கொள்கையை வகுத்துக்கொண்டவர் பாலுமகேந்திரா. இந்த 40 வருடங்களாக மணம் வீசிவந்திருக்கின்ற இந்தமலர் எங்கள் வீட்டில் பூக்கவில்லையே என்பது தான் வருத்தம்.

எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மாலன்:
பாலுமகேந்திரா எப்பொழுதுமே சிறுகதைகளை வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பவர். என்னுடைய வீட்டில் அவருடன் மூன்று இரவுகள் தங்கியிருந்து இலக்கியம் முதலாக விவாதித்திருக்கின்றோம். சன்.டி.விக்காக கதை நேரம்பண்ணுகின்ற பொழுது, அதில் அவரே புதியகதைகளையும் வாசித்து நன்றாகயிருக்கின்ற பட்சத்தில் என்னைச்சந்தித்து, படித்த கதைகளைப் பற்றி விவாதிப்பார், அத்தோடு அக்கதைகளை எழுதியவர்களைப்பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்வார். “வீடு”,படத்தில் வருகின்ற அதேவீட்டில் தான் அவரது மாணவர்களுக்கான பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகின்றது. அதையும் அவர் வீட்டிற்குச் செல்கின்ற பொழுது சுட்டிக்காட்டியுள்ளார். என்னைப் பொறுத்தவரை பாலுமகேந்திரா ஒரு இயக்குனராக, கேமிராமேனாகத் தெரிவதைக்காட்டிலும், படமெடுப்பவர்களுக்கு இலக்கியவாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணரச்செய்தவராகத்தான் பரிமாணமளிக்கின்றார். அவர் கூறுவது போலவே சினிமா என்பது, செயற்கையானது, இலக்கியம் தான் மனிதர்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைவது, அப்படியான வேளையில் இலக்கியம் சினிமாவிற்குள் வந்தால்தான் நல்லபடங்கள் என்பது சாத்தியம், இதனை முழுமையாக பாலுமகேந்திரா நம்பினார்.

இதைவிட முக்கியமானது ஒருவன் கதைகளைப் படித்தால் அதில் சிறந்தவைகளெல்லாம் படமாக வெளிவந்ததோ? இல்லையோ?, ஆனால், மனிதர்களையும், மக்களையும் புரிந்துகொள்வதற்கு இலக்கியவாசிப்பு அத்தியாவசியம்.

எழுத்தாளர் சா.கந்தசாமி:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் நடைபெறுகின்றது, கன்னடத்துறைக்கு மிக்கநன்றி. அத்துறை சார்பாக சிறுசம்பவத்தை நினைவு கூர்கிறேன். 1937ஆம்ஆண்டு, சத்யமூர்த்தி அவர்கள் சினிமாவைக்கற்றுக் கொடுப்பதற்கு ஒரு தீர்மானம் போட்டிருந்தார்.அப்போது உடனிருந்தவர்கள் இந்த ஆபாசத்தை கற்றுக்கொடுக்க முடியாது என்று புறந்தள்ளி படிப்பிலிருந்து சினிமாவை நீக்கிவிட்டார்கள். அந்த இடத்தில் தான் பாலுமகேந்திராவிற்கான நினைவுக்கூட்டம் நடத்தப்படுகின்றது.

இந்த ஆபாசம் என்று சொல்லப்பட்ட சினிமாவை கலையாக மாற்றிக்காண்பித்தவர் பாலுமகேந்திரா. ஒரு கவிதையைப் படித்தால் உண்மையாக இருக்கின்ற பட்சத்தில் இதயத்திலிருந்து வருகின்ற ஒளியைப் போல, அவரது படைப்புகள் இருக்கும். அவர் சினிமாவாக மாற்ற எடுத்துக் கொண்ட கதைகளை அவர் அப்படியே எடுத்துக்கொள்ளாமல், அந்தக்கதையிலிருந்து தனக்கான ஒரு கதையை வடிவமைத்துக் கொண்டார். அந்தவடிவத்திலிருந்துதான் ’கதைநேரம்’, முதலான அவரது பிறபடைப்புகள் வெளிவந்தன.
இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் ஏதோ தன் படைப்பு சினிமாவில் வந்துவிடவேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். ஆனால் அந்த ஆசை ஒரு போதும் முழுதாக நிறைவேறுவதில்லை.
உலகின் எந்த எழுத்தாளனும் தன்கதை சினிமாவாகின்ற பட்சத்தில், தான் என்ன வெல்லாம் கற்பனைகள் செய்து எழுதினோமோ, அவைகளெல்லாமே சிதையாமல் சினிமாவாக வந்துள்ளது, என்று பெருமைப்பட முடியாது. காரணம் சினிமா என்பது வேறு, எழுதுவது என்பதுவேறு. இதை முதலில் எழுதுகின்றவர்களும், படமெடுப்பவர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

சத்யஜித்ரே, பதேர்பாஞ்சாலி, என்ற படத்தை ‘விபூதிபூஷணன்’, நாவலை அடிப்படையாக வைத்து எடுத்தபொழுது ‘விபூதிபூஷணன்’, என்ன சொன்னார் என்பதை நினைத்து பார்க்கவேண்டும். எந்த எழுத்தாளருக்கும் தன் கதை முழுப்படைப் பாகதிரையில் வந்திருக்கின்றது என்று மகிழ்ச்சிகொள்ளமுடியாது என்பதை அவருடைய பதிலிலிருந்தே காணலாம். ஏனெனில் முன் கூறியது போலவே, இரண்டும் வெவ்வேறு தளங்கள். இந்ததளங்களையே அவர்களிருவரும் வெவ்வேறு நுட்பத்தில் தனக்கு தெரிந்ததைப் போல படைக்கின்றனர்.

எழுத்தாளர், வ.ஐ.ச.ஜெயபாலன்:
என்னுடைய நீண்டகால நண்பர், ஈழத்து பாலுமகேந்திரா நினைவாக....

முல்லையே பூத்திடு முழுமதியே தேன் சிந்து
ஆம்பலே கண்சிமிட்டு அல்லியே கமழ் இனிது
நீலமலை முகடே நின்னுடைய காதலனின்
நினைவில் குறிஞ்சி மலர் வளையம் சூடிக்கொள்.
நாளை பகல் விடிந்து நறும் கமலம் கண்விழித்து
சோலைப் பறவையெல்லாம் சுந்தரமாய் தமிழ்பாடி
ஈழத்துப்பாலுவுக்கு இறுதியாய் விடை கொடுக்கும்
கல்லில் சங்கக் கவியில் சுவடான
தென்னகத்து அழகியலை திரையில் உயிர்பித்த
எங்கள் ஈழத்துப் பொக்கிசத்தை
ஆழப்புதைத்தாலும் நீறாய்விதைத்தாலும்
ஐந்திணையும் தோப்பாகி அழகழகாய் பூமலர்ந்தது
பறவைகளாய் பாடி பசும்தரையாய் பாய்விரிக்கும்
கோல ஒளி நெய்யும் ஒரு கோத்திரத்தின் பெரும் தலைவா
உன் பொற்தாலிப் பூங்கொடியில் பூத்தமலர் ஒன்று
உன்கலைஞானப் பூங்கொடிக்கோ காலமெல்லாம் பொன்மலர்கள்
[அடுத்தஇதழில்தொடரும்…..]