பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 2

சென்ற இதழின் தொடர்ச்சி:

டாக்டர்., பேராளர்., கே.என்.சிவராமன்:

பாலுமகேந்திரா தேர்ந்தெடுத்துக்கொண்ட தொழிலுக்கு முழுக்க முழுக்க உண்மையாகவும் தகுதியானவராகவும் இருந்திருக்கிறார். அவர் பிறருடன் சண்டைபோடுவதாக இருந்தால் படத்தின் தரத்திற்காக மட்டுமே. ஒரு காட்சிக்கு எம்மாதிரியான ஒளியமைப்பு வேண்டும், அக்காட்சியின் மதிப்பு என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொண்டமையால்தான் அவரால் அம்மாதிரியான திரைப்படங்களைக் கொடுக்க முடிந்திருக்கிறது. இன்றைக்கிருக்கின்ற இளைய தலைமுறையினர்க்கு கூட பாலுமகேந்திராவின் கேமரா நிகழ்த்திய அசாத்திய அற்புதங்களின் பால் ஈர்ப்புள்ளது. அவருக்கு சினிமாவின் மீதிருந்த அதீத ஆர்வமே, அத்தகைய ஈடுபாட்டிற்கு காரணம். அவரது சினிமாவின் வேட்கைக்கான உதாரணங்கள் கூறுவதானால், படம் முடிவடைவதற்கு முன் அந்த பிலிம் சுருள்களை தயாரிப்பாளருக்கு கூட காட்டமாட்டார். அவர் மனதில் நினைத்திருக்க கூடிய தரம் நூறுசதவீதம் நிறைவேறிய பின்புதான் அவர் அதனை தயாரிப்பாளர் பார்வைக்கே கொடுப்பார். தமிழ் சினிமாவின் புகைப்பட ஒளியமைப்பினது தகுதி முன்னேறியதற்கு பாலுமகேந்திராவின் பங்கே அதிகம்.

இயக்குனர் தாமிரா:
மிக மென்மையான, ஒளியான, அழகான படைப்பாளிக்கு மரியாதை செலுத்துவதற்காக கூடியிருக்கின்ற நாம் ஏன் இறுக்கமாக இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு ’நினைவுக்கூட்டம்’, என்று வைத்திருப்பது சாலச்சிறந்தது. எனக்கும் பாலுமகேந்திராவினது படைப்பிற்குமான நெருக்கம் என்னுடைய ட்ரெளசர் காலத்திலிருந்து தொடங்கிற்று. நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பரிமளா டீச்சர் என்பவரின் மேல் எனக்கு காதல் இருந்தது. அந்தக் காதல் சரியானதா? தவறானதா? என்பதெல்லாம் அப்போது விளங்காது. ஆனால், என் பக்கத்தில் அமர்ந்திருந்த பையன் என்னிடம் ”பரிமளா டீச்சரும் உன்னைத்தாண்டா லவ் பண்றாங்க”., என்றான்.

”எப்படிடாசொல்ற”, என்றேன்.

”நீ வெயில்ல உக்காந்து எழுதிக்கிட்டு இருக்கும் போது, ’ஏய்! நீ வெயில்ல ஒட்காரதா, கருத்துப்போயிருவ’ அப்படின்னு டீச்சர் சொன்னாங்கள்ல, அப்படீன்னா, அவங்களுக்கும் உன் மேல லவ் இருக்கிற மாதிரிதான அர்த்தம்” என்றான்.

இந்தச் சந்தர்ப்பத்திற்கு தோதாக ‘அழியாதகோலங்கள்’படமும் ரிலீசாகிறது. அந்தப் படம் பார்க்கின்ற பொழுதே “ஓ இது சரி தான்”, என எனக்குள் முடிவானது. ஷோபா, பரிமளா டீச்சராகவும், பரிமளா டீச்சர், ஷோபா தோரணையிலும் காட்சிதர ஆரம்பித்தார்கள்.

நான் பாலச்சந்தர் சாரிடம் வேலை செய்து கொண்டிருக்கின்ற சமயத்திலெல்லாம், பெரும்பாலும் மகேந்திரன்சாரைப் பற்றியும், பாலுமகேந்திரா சாரைப் பற்றியுமே பேசுவேன். காரணம் நான் சினிமாவுக்கு வரவேண்டும் என்ற விதையை என்னுள் விதைத்த படம் ’யாத்ரா’. ஒரு விளக்கு ஏற்றி வை, நான் வந்து விடுகிறேன், என அவன் சொல்லிவிட்டு செல்லும்பொழுது, ஷோபனா ஆயிரம் விளக்குகளுக்கு மத்தியில் அவளும் ஒரு விளக்காய் அமர்ந்திருப்பாள்.

சென்னைக்கு வந்து நான் சினிமாவிற்காக அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு கவிதை எழுதினேன்.

”கோடிக்கணக்கான மண்துகள்களின் மத்தியில்
உயிருள்ள துகளாய் நான்.
நாளை என் வாழ்க்கை யார் கையில்? ,
யாருடைய பையில்? என்பது தெரியவில்லை,” .
இப்படிஎனது கவிதைக்கு ஆதாரமாய் அமைந்திருப்பது, ”யாத்ரா”, படம்தான்.

மேடைகளில் பாலுமகேந்திரா பேசும்பொழுது, ஒவ்வொரு முறையும் அவருடைய மாணவர்களை, தன் பிள்ளைகளாகத்தான் அறிமுகப்படுத்துவார்.

பாலுமகேந்திராவை அழியாமல் காப்பாற்ற நமக்கொரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. அவருடைய ஆத்மா எதுவெனில் அவருடைய கல்விக்கூடம் மட்டுமே. அது அழியாமல் நாம் பார்த்துக்கொண்டோமேயானால், அவரையே நம்மோடு பாதுகாத்து வைப்பதற்கு ஒப்பாகும். அதை அவரது உதவியாளராக இருக்கக்கூடிய யாராவது ஒருவர் முன்னெடுத்து அந்தப்பள்ளியை அழியாமல் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்:

நான் பேசுவதை பிறர் கேட்பதைக் காட்டிலும், அவரோடு பழகியவர்கள், வேலை பார்த்தவர்கள் பாலுமகேந்திராவைப் பற்றி பேசுவதைக் கேட்பதிலேயே ஆர்வமாகயிருக்கின்றேன். நன்றி!

இயக்குனர் கரு. பழனியப்பன்
நான் திரு. பாலுமகேந்திராஅவர்களை ஒரேயொருமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். நான் இருந்த மதுரைக்கு மிக அரிதாகவே புதிய படங்களெல்லாம் திரைக்கு வரும். உலகசினிமாக்கள் அல்ல, உள்ளூர் சினிமாக்களே மிக அரிதானவை. இப்படியான சமயத்தில்தான் பாலுமகேந்திராவின் படங்கள் எனக்கு அறிமுகமாகின. சிலரது படங்களெல்லாம், பார்த்து முடிந்தவுடன் ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் பாலுமகேந்திராவின் படங்கள் மட்டும், பார்க்கும்போது ஆனந்தமாகவும்., பார்த்து முடிந்தவுடன் படபடப்பாகவும் இருக்கின்றதே! இவைகளெல்லாம் முதன் முதலாக அவரைப்பற்றி என்னைச் சிந்திக்கத் தூண்டின.

பின்பு பாலுமகேந்திராவைப்பற்றி நான் அறியக்கண்டது, அவரது உதவியாளர்கள் மூலமாகத்தான்.

என்னுடைய முதுநிலை படிப்பு முடித்தவுடன், சினிமாவில் உதவிஇயக்குனராகும் எண்ணம் இருந்ததன் காரணமாக சென்னைக்கு வந்துவிட்டேன். ஆனால், இங்கு வந்தவுடன் யாரைப்பார்க்க வேண்டும், அவர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்ற எந்தவிதிமுறைகளும் எனக்குத் தெரியாது. இதேநேரத்தில் பாலுமகேந்திராவைச் சந்தித்து வாய்ப்பு கேட்கலாம் என்றும் தோன்றியது. எனவே அவரை முதல் சந்திப்பிலேயே வசீகரிக்க அவரது பாணியிலேயே கதை எழுதத் தொடங்கினேன். அரை வெளிச்சத்தில் ஒரு ஜன்னல், ஜன்னலோரத்தில் ஒரு பெண் நிற்கிறாள், அவள்தலைவாருகிறாள். லேசான வெளிச்சம் அவள் முகத்தில் எதிரொளிக்கிறது., என்றெல்லாம் ஆரம்பித்த கதையில், தனிமையாக இருக்கின்ற காரணத்தினால் கேட்கப்படுகின்ற வித்தியாசமான ஒலிகளைப் பதிவுசெய்யும் வழக்கத்தினை கொண்டிருப்பாள் கதாநாயகி. இப்படியாக பயணமாகும் அந்தக் கதையை முடித்துவிட்டு அவரைப் பார்க்க கிளம்பினேன். ஆனால், நான் பாலுமகேந்திராவிடம் உதவிஇயக்குனராக வேலை செய்யக்கூடிய வாய்ப்பு அமையவில்லை. ஆனால், இதே பாத்திரம்தான், ”பிரிவோம் சந்திப்போம்” என்கிற படத்தில் சினேகாவின் கதாபாத்திரமாக என்னால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பாலுமகேந்திராவைப் பொறுத்தவரையில் தொடர்ந்து இளம்தலைமுறையினர்களை ஊக்குவிக்கும் வழக்கம் கொண்டிருந்தவர். உதாரணமாக இயக்குனர் சங்கத்தேர்தலுக்கு அமீர் போன்ற இளம்தலைமுறையினர் வரவேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு தன் ஆதரவினைத் தெரிவித்தவர். மத்திய அரசின் தேர்வுக்குழுவில் பாலுமகேந்திரா இருந்தபொழுது, சிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவா?, ஏ.ஆர். ரஹ்மானா? எனகேட்டதற்கு, வாழ்நாளெல்லாம் இளையராஜா என்று சொல்லிகொண்டிருந்த பாலுமகேந்திரா ஏ.ஆர். ரஹ்மான் என ஆதரவுதெரிவித்தார். காரணம், இளைஞர்களை ஊக்குவிக்கின்ற அவரது மனப்பாங்குதான்.

பாலுமகேந்திராவின் கடைசிப்படமான தலைமுறைக்கு வாய்ப்புக்கொடுத்த ’சசிகுமார்’, அவர்களையும் நாம் மறந்துவிடாமல் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். பாலுமகேந்திரா போன்ற மகா கலைஞர்களையே தயாரிப்பாளர் தேடக்கூடிய இயக்குனராகத்தான் நாம் வைத்திருக்கிறோம்.

ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார்:
தமிழ்ஸ்டுடியோ பாலுமகேந்திராவிற்கான நினைவுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. இவர்கள் தான் முன்னர், ’சந்தியா ராகம்’ திரையிடலையும் பாலுமகேந்திராவின் தலைமையில் நடத்தினார்கள்.

பெங்களூரில் நான் படித்துக்கொண்டிருந்தபொழுது, ’கொடேக்’, நிறுவனம் புதுரக காமிரா மாடல் ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள். அதன் தொழில்நுட்பத்தரம் என்னவென்பதை அறிய ஒவ்வொருநாட்டிலும் ஒருவருக்கு அந்தக்காமிரா அளிக்கப்படுகிறது. அவ்வேளையில் நம் நாட்டிற்கு வந்த அந்தக்காமிரா பாலுமகேந்திராவின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. அந்தக்காமிராவை வைத்து தான் பாலுமகேந்திரா “மறுபடியும்”, என்கிற படத்தில் ”ஆச அதிகம் வச்சு”, என்ற பாடலை பதிவு செய்கிறார். இந்தியாவில் எந்த வகையான புதுதொழில்நுட்பத்துடன் காமிராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது பாலுமகேந்திராவின் கரங்களால் தான் பரிசோதக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் எழுதிய ’அசையும்படம்’, என்கிற புத்தகம் அவரது தலைமையில் தான் நடந்தேறியது. அத்தோடு, ’பிக்சல்’ புத்தக வெளியீட்டு விழாவில் அவர் தலைமேற்று பேசும்பொழுது, ”நான் ’தலைமுறை’, படம் எடுக்கதுவங்கும் ஒருவாரகாலத்திற்கு முன் இந்தப்புத்தகம் வந்திருந்தால் நான் இன்னமும் நன்றாக படம் எடுத்திருப்பேன்”. என்றுகூறினார். என்னால் மறக்க முடியாத நிகழ்வாக பிக்சல் புத்தக வெளியீட்டு விழாவும் அமைந்துவிட்டது.

எழுத்தாளர் பவா செல்லத்துரை:
சினிமாவின் மீதான தணிக்கை விதிமுறைகளை எதிர்த்து தி.நகரில் சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடி பாலுமகேந்திராவின் தலைமையில் போராட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில்தான் நான் பாலுமகேந்திராவை முதன்முறையாகப் பார்க்கிறேன். அவரோ ஒரு ஓவியத்தை உற்றுப்பார்த்தபடியே அமர்ந்திருக்கிறார். ஓவியத்தில் காமிரா ஒன்று வரையப்பட்டிருக்கிறது. அந்தக் காமிராவின் மீது ஆக்டோபஸ் ஒன்றும், அதனை அசையவிடாமல் படுத்திருப்பது போன்ற படம். வெகுநேரமாக அந்த படத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் பாலுமகேந்திரா. பின்பு அவரை தலைமையுரையாற்ற அழைக்கையில், “நான் என் வாழ்க்கையில் ரொம்ப உயர்வாக நினைப்பதே இந்தக் காமிராதான். என்னுடைய காமிராவின் மீது ஒரு ஆக்டோபஸ் படுத்திருப்பதை என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ளவே முடியாது. அதை விட நான் செத்துப்போய்விடுவேன்”, என்றார். அந்த நிமிடங்கள் தான் அவரோடு நான் நெருங்கின நிமிடமாக நினைக்கிறேன்.

கடந்த ஐந்து , ஆறு வருடங்களாக என்னோடும், என் குடும்பத்தோடும் மிகவும் நெருக்கமான அன்போடு இருந்தார். அவர் காலை எத்தனை மணிக்கு போன் பண்ணுவார் என்பது கூட எனக்குத்தெரியும். காலை நேரத்தில் வகுப்பு இடைவேளையில் 11 :30 க்குள் போன் பண்ணுவார். அவர் பார்த்த அனைத்து நிகழ்வுகளையும் எங்களோடு பகிர்ந்துகொள்வார். அப்படித்தான் ஒரு நாள் போன் செய்து “ரெம்ப கொடுமை பவா…! இன்னைக்கு வாக்கிங் போகும் போது ரெண்டு கிழ பசங்க என்னோடு சேந்துகிட்டாங்க”, என்பார். அவருடைய உரையாடல் எங்கிருந்து தொடங்கும் என்பதே யூகிக்க முடியாது. அன்று ஒருநாள் எனக்கு போன் பண்ணி “என்ன பவா, எனக்கு கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்லலையா”, என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியாமல், ”எதற்கு சார்” என்றேன்., “ பவா., கிருஷ்ண ஜெயந்திக்கு என்னை விட பொருத்தமான ஆள், வேற யாராவது இருக்க முடியுமா?., “ என்று சிரிப்பார்.

மற்றொரு நாள் ”வீடு”, படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது, “வீடு படத்தை நான் கருப்பு வெள்ளையில் தான் எடுக்க திட்டமிட்டேன், ஆனால் கடைசி வரையிலும் தயாரிப்பாளர் அனுமதி மறுத்ததன் காரணமாக , என்னால் செய்யமுடியவில்லை, ஆனால், தரமான கருப்பு வெள்ளை பிரதி ஒன்று என்னுடைய தேவைக்காக தனியாக வைத்திருந்தேன். கொரியன் திரைப்பட விழாவுக்கு ”வீடு”, படத்தைக் கேட்டபொழுது, அதையே நான் அனுப்பி வைத்தேன். 25 வருடங்கள் கழித்து பார்க்கின்றபொழுதும் அது இன்றும் அதன் தன்மையிழக்கவில்லை. நான் இறந்துவிடலாம், ஆனால், புலிக்கு இருப்பது போல என் உடலில் கோடுகள் நிரம்ப பரவியுள்ளது. அதன் கோடுகளெல்லாமே என் படைப்புகள், என்னை அழித்துவிடலாம்., ஆனால், என் படைப்புகள் என்றுமே அழியாது” என்றார்.

நீங்கள் எத்தனை பேர் அவரை கூர்ந்து கவனித்திருப்பீர்கள் என்பது தெரியாது. அவர் கையில் வைத்திருக்கக் கூடிய பையை வேறு யாருக்கும் தருவதில்லை. அதில் முழுக்க முழுக்க அவருடைய கதை நேரப்படங்கள், இன்ன பிற அவசியமான குறுந்தகடுகள் அடங்கிய தொகுப்புகள் தான் வைத்திருப்பார்.

மேலும் தன்னுடைய படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒளியமைப்பானது திரையிடப்படக்கூடிய இடங்களிலும் சரியாக பார்க்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பார். நான் எப்படி படம் எடுத்தேனோ அதுவே பார்வையாளனுக்கு கடத்தப்பட வேண்டும் என்பதில் சமரசத்திற்கு வாய்ப்பளிக்காதவர்.

கடந்த 25 வருடங்களாக எனக்குத் தெரிந்த வரையில் லெனின் சாரும், பாலு மகேந்திரா சாரும் தான் இடது சாரி இயக்கங்களோடும், அவர்கள் ஏற்பாடு செய்கின்ற கலாச்சார நிகழ்ச்சிகளோடும் தொடர்பு வைத்துக்கொண்டவர்கள். மூடப்பட்ட கேட்டுகளுக்கும், கொழுத்த நாய்களுக்கு மத்தியிலும் தான் இயக்குனரானவன் இருக்க வேண்டும், என்பதை பாலுமகேந்திரா முற்றிலுமாக தவிர்த்து வந்திருக்கிறார்.

பிறிதொரு நாளில் கதைநேரம் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் ”கதை நேரம்”, எடுக்கின்ற சமயத்தில் சரியாக மக்களால் பார்க்கப்படவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் தொடரின் நடுவிலேயே இரண்டு முறை இடைவேளை , மீண்டும் பார்வையாளர்களை கதையோடு ஒன்ற வைப்பதில் உள்ள சிரமம் இதையெல்லாம் தாண்டித்தான் மக்களால் படம் பார்க்க முடிந்திருக்கின்றது. மீண்டும் ”கதை நேரத்தை”, வெளிக்கொண்டுவர நினைக்கின்றேன். நாம் இருவரும் இணைந்து அதற்கான வேலைகளை செய்யலாம் என்றார். அவர் மிகுந்த நேர்த்தியில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர். கதை நேரத்திற்கான கதைகளையும், திரைக்கதைகளையும் தேடி எடுத்து அதனை ஒரு புத்தகமாகவும் கொண்டுவரவேண்டும், படங்களை குறுந்தகடுகளாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் கூறினார். அதன்படியே செய்தோம்.

அந்த குறுந்தகடுகளை 100 நகல் எடுக்க வேண்டுமென்றாலும் அவர் தனது உதவியாளர்களை அனுப்புவதில்லை, தானே நேரில் செல்வார். குறுந்தகடுகளை பதிவுசெய்கையில் நான்கு மணிநேரங்களும் தயக்கமின்றி அமர்ந்திருப்பார். ஒவ்வொன்றையுமே சோதித்துப் பார்த்து வாங்குவார். பின்பு பாலுமகேந்திராவின் கதைநேரம் முழுவதையும் தொகுத்து புத்தகமாக வெளிக்கொணர்கையில், அவர் குனிந்து நிற்பது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படம் முகப்புப் படமாக இடம்பெறும். இரண்டாவது தொகுப்பு வெளிவருகையில் அதில் ஒன்று என்பதை எடுத்துவிட்டு இரண்டு என மாற்றப்போகிறோம். அதையே கணினியில் செய்தால் அரைநொடி வேலைதான். ஆனாலும் அந்த அரைநொடி வேலையையும் அவர் ஒரு நாளும் எங்களைச் செய்ய அனுமதித்ததே கிடையாது. ஒரு வாரம் கழிந்தாலும் அவருடைய டிஸைனர் வரும்வரை காத்திருந்துதான் அதற்கான வேலையை செய்வார்.

அண்மையில் புத்தக கண்காட்சியில் வம்சியின் ஸ்டாலுக்கு தொடர்ச்சியாக ஒரு நாள் கழித்து மறுநாள் வருவார். முதல் நாள் வந்து உட்கார்ந்ததும் ”டீ சொல்லுங்க பவா”, என்றார். நான் அருகிலிருந்த பையைனைக் கூப்பிட்டு, பாலு மகேந்திராவின் உடல் நலனை கவனத்தில் கொண்டு ”ரெண்டு டீ, கொஞ்சம் சர்க்கரை கம்மியாக”, என்றதும், பாலுமகேந்திரா கோபத்தோடு அந்தப் பையனை நிற்கச் சொன்னார். மீண்டும் அந்தப் பையனிடம் ”டபுள் சுகர்”, என்றிருக்கின்றார். பின்பு என்னிடம் திரும்பி “எனக்கு சர்க்கரையெல்லாம் ஒண்ணுமில்லை பவா, இன்னும் நாலு படம் பண்ணுவேன், டிஸ்கஷனுக்கும் நீங்க கண்டிப்பாக வந்தரணும் ”, என்றார்.

”தலைமுறைகள்”, முதலாவதாக என் நண்பர் ஒருவர் தயாரிப்பதாக இருந்தது. காலை பத்து மணிக்கு வரச்சொல்லியிருந்தார். நாங்கள் 10:30க்குச் சென்றுவிட்டோம். நாங்கள் தாமதமாக வந்ததன் காரணமாக எங்களோடு பாலுமகேந்திரா சரியாக பேசவில்லை. பின்னர் அவரை சமாதானம் செய்துமுடித்து அவரோடு பேச அமர்ந்தோம். 40 லட்சம் ரூபாயில் இந்தப் படத்தை நான் பண்ணிவிடுவேன் என்றார். இளையராஜாவின் சம்பளம் உட்பட 40 லட்சம் போதுமானது என்றார். உடனே என் நண்பர் சந்தோஷத்தோடு, “சரிங்க சார் ஸ்க்ரிப்ட் கொடுங்க”, என்றதும், நான் அந்தப் பக்கம் திரும்பி பார்க்கிறேன், கோபத்தோடு அமர்ந்திருக்கிறார் பாலுமகேந்திரா, ஆனால் எதுவுமே பேசவில்லை, அந்த நேரத்தில் போன் வரவும் அவர் கிளம்பி வெளியே சென்றுவிட்டார். பின்னர் காரணம் கேட்டதற்கு “ஸ்கிரிப்ட் என்பது என் ஃபர்ஷனல் டைரி, அதை யாருக்கும் தரமாட்டேன்”, என்றார். அவர் நிதானமாக நீண்ட நாட்கள் ஆனது.

அவருடைய ஆசைகள், கனவுகள் அனைத்தையும் அவர் இறப்பிற்கு வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற பெரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இத்தனை நாட்களில் நான் கார் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்ற லெளகீக வாழ்க்கையைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசியதே கிடையாது. கடைசி நாள் வரையிலும் அதாவது நாளைக்கு இறக்கப்போகிறாரென்றால், அதற்கு முந்தைய தினம் வரையிலும் தன் மாணவர்களோடு ஒன்றாக “அழியாத கோலங்கள்”, படம் பார்த்திருக்கிறார். லெளகீக வாழ்க்கையைக் காட்டிலும் அவருக்கு இதில் தான் மகிழ்ச்சிகள் அடங்கியிருக்கின்றன.

எடிட்டர் லெனின்:
பாலு மகேந்திராவுக்கு முன்னாடியே நான் சினிமாவிற்கு வந்திருந்தாலும், நான் அவரைக்காட்டிலும் வயதில் சின்னவன் தான். பாலுமகேந்திராவை மனதில் வைத்துக்கொண்டு நிறைய பேர் சினிமாவுக்கு புதிதாக வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் பாலுமகேந்திராவாக ஆகிவிட முடியாது. அவர் அதிகமாக கேமராவில் ஸ்லோ ட்ராலி தான் உபயோகிப்பார். ஆனால், ஜீம் தொடவே மாட்டார். அவர் பயன்படுத்திய தொழில்நுட்ப விஷயங்களை தொடுவதற்கே இன்றைக்கு வருகின்ற இளைஞர்கள் திணறுகின்றனர்.

இவள் பாரதியின் கவிதை வாசிப்பு:

“மட்டக்கலப்பு மகா கலைஞன் மண்ணில் உறங்கப் போகிறானென்று,
அவர் தொட்ட கருவிகளெல்லாம் இனி ஏங்கும் அவரின் தொடு உணர்ச்சிக்காக,
எழுதப்படாத அவரின் கவிதைகளெல்லாம் நின்று ஓலமிடும்
அவர் வாசித்த புத்தகங்களெல்லாம் அவரின் வாசம் தேடும்.
அவர் வாழ்ந்த இடங்களெல்லாம் வரலாறாகும்
யாதுமாகி நின்றாயே!
எல்லாமாக உறங்குவாய் நீ!”

[அடுத்தஇதழில்தொடரும்…..]