பிரசன்ன விதானகே நேர்காணல் - நன்றி: தி ஹிந்து

தி இந்து ஆங்கில இதழில் வெளியானது. சுதீஷ் காமத்தின் கேள்விகளுக்கு பிரசன்ன விதானகே மின்னஞசலில் அளித்த நேர்காணல்.

காதல் மூலம் வேறுபாடுகளை களைய முயற்சிக்கும் ஒரு திரைப்படம், வெறுப்பரசியலுக்கு இலக்காகியிருப்பது விசித்திரமாக இருக்கிறதல்லவா? இப்படி நடக்குமென நினைத்தது உண்டா?

கலையின் எந்த ஒரு படைப்பும் இங்கு இலக்காகும், ஏனெனில் நம் துணைகண்டம் இன அடையாளத்தினால் துருவமயப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி நான் எதிர்கொள்வது முதல் முறையல்ல. அடையாள அரசியலை ஆதரிக்கும் அரசியல் குழுக்கள் வெறுப்பை ஊக்குவித்து வளர்க்கின்றன. துரதிஷ்டவசமாக, இதுவே யதார்த்தம். தமிழ் நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை, எனினும் இதற்கு நான் முகம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
திரைப்படம் பார்க்காதவர்களின் நன்மைக்காக, தமிழ் பெண்ணுக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிக்கும் இடையேயான இந்த காதல் கதை மூலம் நீங்கள் என்ன செய்ய முயன்றீர் என தெளிவுபடுத்த முடியுமா? எந்த பக்கத்திற்கு நீங்கள் அதிக அனுதாபபடுகிறீர்கள்?

இந்த காதல் கதை ஒரு வகையில் போருக்கு பிந்தைய இலங்கையின் உருவகமாகும். கதைசொல்லியாக, இரு கதாபாத்திரங்களின் ஆன்மாவில் என்னை நிறுத்தி அவர்களின் அனுபவங்களை வெளிகொணர முயன்றுள்ளேன். பார்வையாளர்கள் இந்த இரு கதாபாத்திரங்களின் மீதும் அனுதாபப்படுவதை நான் விரும்பவில்லை; மாறாக அவர்களை புரிந்துக் கொள்ள வேண்டுமென விரும்பினேன்.

உங்கள் திரைப்படத்தை ஆதரிக்கும் கோரிக்கைக்கு தமிழ் நாடு அரசின் பதில் என்ன?

நானறிந்த வரை, இணை தயாரிப்பாளர் ராகுல் ராய் அவர்களால் அனுப்பபட்டு தமிழகத்தில் சிலர் கையொப்பமிட்ட கடிதத்திற்கு எந்த பதிலும் இல்லை. எப்படியாயினும், பி.வி.ஆர் தாங்கள் இந்த திரைப்படத்தை திரையிட போவதில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது போன்று இலங்கையில் குழுக்களால் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதா? அல்லது சட்டம் ஒழுங்கு அமைப்பு வலுவானதா?

இலங்கையில், தணிக்கைக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. சில நேரங்களில், முறையான தணிக்கை வாரியமன்றி சில அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. குழு தணிக்கையே அனைத்திலும் மிகவும் கட்டுபாடற்ற முகமாகும். இலங்கையில், சில குழுக்கள் தெருக்களில் இறங்கி தங்கள் எதிர்ப்புகள் மூலம் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. பின், நெருக்கடிக்காரணமாக சில திரைப்படங்கள் தயாரிப்பாளர்களால் திரும்ப பெறப்பட்டுள்ளன.

போரினால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை குணமாக்க சினிமா உதுவும் என எண்ணுகிறீர்களா? அல்லது முழுமையான பார்வையை பார்க்க உதவி, இரு தரப்பினரும் மற்றவரை நன்றாக புரிந்துக்கொள்ள உதவுமா?

திரைப்பட தந்தை. டி.டபிள்யு.க்ரிஃபித், 'எனது பணி உங்களை பார்க்க வைப்பது' என சொன்னார். தங்கள் உள்வாங்கலை தாண்டி பார்க்க விரும்பாத மக்கள் எப்போதும் இருப்பார்கள். பாராபட்சமின்றி திறந்த மனப்பான்மையோடு மக்கள் இருப்பார்களெனில், முழுமையான பார்வையை பார்த்து ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள அவர்களால் முடியும். (மிரட்டல்கள் வருவதற்கு முன்) சென்னையிலும் அது தான் நடந்தது, இத்திரைப்படம் திரையிட்ட போது மக்கள் சூழந்த திரையரங்கில் அதை நான் பார்த்தேன்.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் இத்திரைப்படத்தின் திரையிடலின் போது வரவேற்பு எப்படி இருந்தது?

இயக்குநராக, இந்த வெளியீட்டுக்கு அதிக பார்வையாளர்கள் எனக்கு கிடைத்தார்கள். இத்திரைப்படம் இந்திய சுயாதீன திரைப்பட உருவாக்கும் சமூகத்திடம் என்னை நெருக்கமாக கொண்டுவந்தது. தமிழ் நாட்டின் குழு தணிக்கை காரணமாக இத்திரைப்படம் மற்றும் இயக்குநர் பற்றியும் ஆர்வத்தை உண்டுபண்ணியது, அதுவே என்னை இளம் திரைப்பட நேசிப்பாளர்கள் மத்தியில் இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றது. அது ஒரு வரையறுக்கப்பட்ட வெளியீடானாலும், அநேகமாக கடந்த வாரம் என் வாழ்க்கையின் மிகவும் பரபரப்பான வாரமாக இருந்தது.
நாம் எப்படி வெறுப்பு மற்றும் தணிக்கையை எதிர் கொள்ள வேண்டும் ? நடைமுறை தீர்வுகள் ?

திரைப்பட வரலாற்றை பார்க்கும் போது, மெக்கார்த்தியிஸம், ஸ்டாலினிஸம் அல்லது மத அடிப்படைவாதம் என இவர்களுக்கு எதிரான அனைத்து போராட்டத்திலும், திரை கலைஞர்கள் பார்வையாளர்களிடம் தொடர்பு ஏற்படுத்த புதிய கதைசொல்லல் வடிவ முறையை கண்டுபிடிக்க தள்ளப்பட்டனர். அதுவே அவர்களின் படைபாற்றலின் சிறந்ததை கொண்டு வந்தது. ஹோவர்ட் ஹாக்ஸ், ஜான் ஹூஸ்டன், ஆண்ட்ரி தார்க்கோவ்ஸ்கி, அப்பாஸ் கியாரோஸ்தமி மற்றும் மோஹசன் மக்மல்பஃப் போன்ற திரை கலைஞர்கள், தங்கள் பார்வையில் சமரசம் செய்து கொள்ளாமல் தங்கள் கொள்கையை இரகசியமாக பார்வையாளனுக்கு கொண்டு சென்றனர். மெக்கார்த்தியின் வேட்டைக்கு பதிலளிக்கு வகையில் ப்ரெட் சின்னெமேன் அவரது காலத்தைப் பற்றி மேற்கத்திய பாணியில் ஹை நூன் என்ற திரைப்படத்தை எடுத்தார்.

வெறுப்பு மற்றும் தணிக்கை தனிப்பட்ட வெளிப்பாடுகள் அல்ல, அவை ஒடுக்குவதற்கான அரசியல் கருவிகள், ஒரு இயக்கமாக கூட்டாக போராட வேண்டும் என நான் நம்புகிறேன்.