பெங்களூரு திரைப்பட விழா - அனுபவங்கள்

பெங்களூரில் இந்த வருடம் நடைபெற்ற திரைப்பட விழா, டிசம்பர் நான்காம் தேதியில் இருந்து பதினோராம் தேதிவரை நடைபெற்றது. வழக்கப்படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் பங்கேற்றன. மொத்தம் 170 படங்கள். 44 நாடுகள். 11 திரையரங்குகள். இந்த ஆண்டின் retrospective பிரிவின்கீழ் புகழ்பெற்ற போலிஷ் இயக்குநர் க்ஷிஸ்டாஃப் ஸானூஷீ (Krzysztof Zanussi) மற்றும் ஃபில்லிப் நாய்ஸின் படங்கள் மொத்தம் பதினொன்று திரையிடப்பட்டன. இந்த ஏழாவது பட விழாவின் மையக்கரு பாலியல் வன்முறையாக இருந்தது. இந்தத் தலைப்பில் மொத்தம் ஏழு சிறப்புப் படங்கள் திரையிடப்பட்டன. இதற்கெனவே ஒரு கருத்தரங்கமும் நடைபெற்றதைக் காணமுடிந்தது. சென்றமுறை மொத்தம் ஏழே திரையரங்குகள்தான். இந்த முறை நான்கு புதிய திரையரங்குகள் சேர்க்கப்பட்டன.
சென்ற ஆண்டு பெங்களூர் திரைப்படவிழா, க்ரிஸ்துமஸை ஒட்டியே வந்திருந்தது. எனவே க்ரிஸ்துமஸில் இருந்து புது வருடம் வரை விடுப்பு எடுத்திருந்த பலரும் வந்து, விழாவே ஏதோ மிகப்பெரிய திருவிழா போலக் காணப்பட்டதை மறக்கமுடியாது. ஆனால், இந்த ஆண்டு கூட்டம் மிகக்குறைவு. காரணம் கிருஸ்துமஸ் விடுமுறையில் நடக்காமல் டிசம்பர் முதல் வாரத்தில் விழா நடந்ததே. விழா முடிந்த அடுத்த நாளே அனைத்துத் திரையரங்குகளிலும் லிங்கா வெளியிடப்பட்டது. இதுவும் தேதிகள் க்ரிஸ்துமஸில் வராமல் இருந்ததன் காரணமாக இருந்திருக்கலாம் என்றே தோன்றியது.

சென்னைத் திரைப்பட விழாவுக்கும் பெங்களூருக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், பெங்களூரில் இரண்டு மால்களின் திரைகள் அத்தனையுமே இந்தப் படவிழாவுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதனால் அங்குமிங்கும் அலையாமல், எதோ ஒரு மாலுக்குச் சென்றாலே அதன் திரையரங்குகளில் ஓடும் படங்களில் எப்படியும் நல்ல படங்களைப் பார்த்துவிடலாம் என்பதுதான். ஆனால் சென்னையில் ஒவ்வொரு திரையரங்காக ஓடவேண்டி இருக்கிறது என்பது இம்முறையும் சற்றே நெருடலான விஷயமாகத்தான் இருந்தது.

இந்தமுறை, எப்போதும்போலவே கர்னாடகாவின் திரைத்துறையினரில் மிகக்குறைவானவர்களே படவிழாவுக்கு வந்திருந்தனர். மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட பாஸ்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டதாகவும், இருந்தாலும் கர்னாடகத் திரைத்துறையினர் விழாவுக்கு வராமல் இருப்பது அவர்களுக்கு உலகப்படங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருப்பதைத்தான் காட்டுகிறது என்று விழாக்குழுவினர் காரசாரமாக அளித்திருந்த பேட்டியைப் படிக்க நேர்ந்தது. உண்மையில் ஓரிருவர் மட்டுமே வந்திருந்தனர். ஆச்சரியகரமாக, கன்னடப் படங்களில் நகைச்சுவை ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் கோமலை ஒரு நாள் பார்க்கமுடிந்தது. படங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் சற்றே பரிதாபமாக வாசலில் நின்றுகொண்டிருந்தார். ஒரே ஒரு படம் மட்டும் பார்த்துவிட்டு உடனடியாக அங்கிருந்து அகன்றும்விட்டார். அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கோபம் அடைந்திருக்கலாம். சுஹாஸினி, லக்ஷ்மி கோபால்சாமி, இயக்குநரும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டி போன்றவர்களை ஆங்காங்கே காணமுடிந்தது. 2014ல் வந்திருந்த சிறந்த கன்னடப் படங்களில் ஒன்றான 'உளிதவரு கண்டந்தே' படத்தின் இயக்குநர்தான் ரக்ஷித் ஷெட்டி. அதில் முக்கியமான வில்லன் பாத்திரம் ஒன்றும் செய்திருந்தார். அவரது படம் திரையிடப்படும் எல்லா நாட்களிலும் வந்திருந்து அனைவருடனும் பேசி, பல கேள்விகளுக்குப் பதிலும் சொன்னார்.

ஒட்டுமொத்தமாக சில நல்ல படங்கள் வந்திருந்தாலும், இம்முறை நடந்த குழப்பங்களில் தலையாயது - க் ஷிஸ்டாஃப் ஸானூஷீ பெங்களூர் வரை விமானத்தில் வந்து, பின்னர் இறங்கமுடியாமல் திரும்பிப் போலாண்டுக்கே சென்றதுதான். அவரது விசாவில் பிரச்னை இருந்ததால் அவரால் விழாவுக்கு வர இயலவில்லை. ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரிலிருந்து இந்த விழாவுக்கென்றே பிரத்யேகமாக அவர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகப் படங்களின் தரத்தை வைத்து யோசித்துப் பார்த்தால் இந்த ஆண்டைவிடவும் சென்ற ஆண்டு நடைபெற்ற திரைப்பட விழாவே சிறப்பானதாக இருந்தது. இதற்குக் காரணம், 2013 கான் திரைப்பட விழா மற்றும் உலக அரங்கில் முக்கியமானதாக விளங்கும் விழாக்களில் விருது பெற்ற பல படங்கள் சென்ற ஆண்டின் விழாவில் திரையிடப்பட்டன. ஆனால் இம்முறை பல சிறந்த படங்கள் இங்கு வரவில்லை. திரைப்பட ரசிகர்கள் இதனால் ஏமாற்றமே அடைந்தனர். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. உதாரணமாக, கான் திரைவிழாவையே கணக்கில் எடுத்துக்கொண்டால், ADIEU AU LANGAGE என்ற கொதாரின் படம் இம்முறை பெங்களூருக்கு வரவில்லை. CAPTIVES என்ற படமும் இல்லை. DEUX JOURS, UNE NUIT, FOXCATCHER, FUTATSUME NO MADO, LEVIATHAN, MOMMY, RELATOS SALVAJES போன்ற எந்தப் படமும் பெங்களூருக்கு வரவில்லை. ஒரே ஆறுதலாக, நூரி பில்கே ஜெலானின் விண்டர் ஸ்லீப் படம் அமைந்தது. அதுதான் கான் விழாவின் பாம் டோர் விருது வாங்கிய படம். கூடவே டிம்பக்டு என்ற, கானில் பாராட்டுப்பெற்ற படமும் பெங்களூரில் திரையிடப்பட்டது.

இம்முறை திரையிடப்பட்ட படங்களில் விண்டர் ஸ்லீப் அட்டகாசமாக இருந்தது. படத்தின் நீளம் 196 நிமிடங்கள் என்றாலும், கானில் விருது வாங்கிய படம் என்பதால் இப்படத்துக்குக் கூட்டம் சற்றே அதிகம். படம் துவங்கிய அரை மணி நேரத்தில் ஒவ்வொருவராக திரையரங்கில் இருந்து செல்லத் துவங்கினர். படம் முடிகையில் பார்த்தால் ஐம்பது பேர் இருந்திருந்தால் அதிகம். ஏனெனில் படத்தின் பெரும்பகுதி வசனங்களின் வாயிலாகவே செல்கிறது. காட்சியமைப்பினால் நகரும் படமல்ல இது. இருப்பினும், படம் முழுதுமே உணர்வுபூர்மவமாகச் செல்வதைக் கவனிக்க முடிந்தது. படம், செகாவின் சிறுகதைகளின் உந்துதலால் உருவாக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் சிலான் சொல்கிறார். திரைக்கதையை அவருடன் எழுதியது அவரது மனைவி. முதலில் கதாபாத்திரங்களை உருவாக்கிக்கொண்டு, அவர்களுக்கான குனங்களை விளக்கியபின்னர் கதையை உருவாக்கிச் சம்பவங்களை இருவரும் எழுதியதாக சிலான் சொல்லியிருக்கிறார். எனக்கு இப்படத்தைப் பார்த்ததும் அஸ்கர் ஃபர்ஹதி நினைவு வந்தார். அவரது படங்களும் இப்படியாக உணர்வுகளை மையமாக வைத்து, வசனங்களின் மூலமாகவே கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் படங்கள்தான். ஆனால் அவரைவிடவும் சிலான் ஆழமானவர் என்று தோன்றியது.
டர்க்கியின் மலைப்பிரதேசம் ஒன்றில் ஒரு ஹோட்டல் நடத்திக்கொண்டிருப்பவர் ஐதீன். இவருடைய மனைவியின் பெயர் நிஹால். ஐதீனை விடவும் மிகவும் இளையவள். ஐதீனின் தங்கை இவருடனேயே தங்கிக்கொண்டிருக்கிறார். ஐதீன் பணக்காரர். அந்த இடத்தில் அவருக்குப் பல வீடுகளும் இடங்களும் உள்ளன. எல்லாமே அவரது தந்தையினுடையது. இதனால் எந்த வேலைக்கும் போகாமல் ஹோட்டலை நடத்திக்கொண்டு வசதியாக வாழ ஐதீனால் முடிகிறது. அந்த இடத்தின் பெரும்புள்ளிகளில் ஐதீனும் ஒருவர் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த ஐதீனின் வாழ்க்கையில் நாம் காணும் ஒரு குறிப்பிட்ட கால அளவே இந்தப் படம். ஐதீனின் ஹோட்டலில் பணிபுரியும் பெண்மணி ஃபாத்மா, ஐதீனின் மேனேஜர் ஹிதாயத் ஆகியயோர் அவ்வப்போது வந்துபோவார்கள். படத்தின் சம்பவங்கள் வழியே ஐதீனின் முரண்பாடான குணங்கள் மெல்ல மெல்ல நமக்குப் புரிய ஆரம்பிக்கின்றன. அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரை எப்படி வெறுக்கிறார்கள் என்பதும் அவைகளின் வழியே ஒவ்வொன்றாக நமக்கு விளங்குகின்றன. தனது வீட்டில் வாழ்பவர்கள் தன்னை ஏன் வெறுக்கிறார்கள் என்பது ஐதீனுக்குப் புரிவது இல்லை. ஒரு பெருந்தன்மை வாய்ந்த மனிதராக அவர்களிடம் நடிக்கிறார். அதேபோல் தனது சொந்தத் தங்கை தன்னுடன் கருத்துகளில் வேறுபடும்போது தனது கூரிய வார்த்தைகளால் அவளை எளிதில் இழிவுபடுத்தவும் ஐதீனால் முடிகிறது. இதையேதான் மனைவியின் விஷயத்திலும் செய்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் மனைவியுடன் இவரது வாழ்க்கை இனிமையாகவே துவங்கியது என்று நிஹால் பேசும்போது அறிகிறோம். ஆனால் இவரது அலட்சிய குணத்தால் அவர்களின் வாழ்க்கையில் மெல்ல இடைவெளி விழுந்து, பெரிதாகிக்கொண்டே வந்திருப்பதையும், அந்த எல்லாத் தருணங்களிலும் இவரிடம் அவமானப்பட்டது நிஹால்தான் என்பதையும் உணர்கிறோம். அப்போதெல்லாம் அவளுக்குப் போக்கிடம் இல்லை என்றும், தனது தயவு இல்லாமல் அவளால் எதுவுமே செய்யமுடியாது என்றும் பேசியே அவளை அவமானப்படுத்தியிருக்கிறார். இது மட்டும் இல்லாமல், தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எப்போதுமே அவர் கவலைப்பட்டதும் இல்லை. எனைவரையும் பார்த்துக்கொள்வதால் இவரை அவர்கள் எல்லாமே உயர்வாக நடத்தவேண்டும் என்பதும் அவருடைய மனதில் இருக்கிறது. தன் கருத்துக்கு எதிராக யார் பேசினாலும் இவருக்குப் பிடிப்பதும் இல்லை. அவர்களின் பலவீனமான இடத்தில் அடித்தே அவர்களின் வாயை மூடவைக்கிறார் ஐதீன்.

ஐதீனை கவனித்தால், அவரது பெரும்பாலான குணங்கள் நம்மிடையே இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். நாமுமே ஐதீன் போல் பெரும்பாலான நேரங்களில் பிறரை அவமானப்படுத்தவே நினைக்கிறோம். பிறரைப்பற்றி யோசிக்காமல், நம்மை நல்லவன் என்றே அவர்கள் நினைக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். எனக்கு என்னைப்பற்றிய பல எண்ணங்கள் இப்படத்தைப் பார்க்கையில் தோன்றின. இப்படி எனக்கு இதற்குமுன்னர் எந்தப் படத்தைப் பார்த்தபோதும் தோன்றியதில்லை. இதுதான் இந்தப் படத்தின் வெற்றி. அதன் தாக்கம். படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அணுகி, அவர்களிடம் இப்படி சிலான் பேசியிருக்கிறார் என்றுதான் நான் புரிந்துகொண்டேன். இந்தப் படத்தின் சிறப்பம்சம் இதன் ஒளிப்பதிவு. கதையை பாதிக்காமல், கதையில் வரும் இடங்களை உள்ளது உள்ளபடியே காட்டுவதன்மூலமே படம் பார்ப்பவர்களின் மனதை அவர்களை அறியாமல் கவருவதுதான் ஒளிப்பதிவாளர் கோஹான் திர்யாகியின் திறன். கூடவே, தீவிரமான நாடக நடிகராக இருந்த ஐதீன், தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தை எப்படியெல்லாம் ஏளனத்துடன் பார்க்கிறார்; அதனால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் என்னென்ன என்பதையும் துல்லியமாகப் பதிவுசெய்யும் படம் இது.

இதைப்போலவே Now or Never என்ற படமும் எனக்குப் பிடித்தது. Now or Never - ஃப்ரான்ஸில் 2014ம் ஆண்டு வெளிவந்திருக்கும் படம் இது. உணர்வுரீதியாக ஒரு த்ரில்லரை இயக்குவது எப்போதுமே கொஞ்சம் கஷ்டம். கதாபாத்திரங்களின் நிலைமை, அவர்களது பிரச்னைகள் என்று பேச ஆரம்பித்தாலே அந்தப் படம் உடனடியாக வேகம் குறைந்து புஸ்ஸென்று ஆவதுதான் பல படங்களில் நேரும். ஆனால் நிஜவாழ்க்கையில் நமக்கு நிகழும் சில துயரமான சம்பவங்கள் எல்லாமே இப்படிப்பட்டதுதானே? அவற்றில் வேகமும் த்ரில்லும் எங்கே இருக்கின்றன? அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு வேகமான திரைக்கதையாலும் கதாபாத்திரங்களின் உருவாக்கத்தாலும் இறுதிவரை நம்மைப் படத்துடன் பிணைப்பதே Now or Never. வங்கி அதிகாரி ஒருவருக்குத் திடீரென வேலை போய்விடுகிறது. அவர் மிகப்புதிதாக வாங்கியிருக்கும் கனவு வீட்டுக்குப் பணம் கட்ட முடிவதில்லை. பியானோ சொல்லிக்கொடுத்துச் சந்தோஷமாக வாழும் மனைவி சோகமுறுகிறாள். அப்போது அவளது கைப்பை களவுபோய்விடுகிறது. திருடனை அடையாளம் காட்டக் காவல்நிலையம் செல்லும் அப்பெண், அவனை நேரில் பார்த்தும் அடையாளம் காட்ட மறுத்து, திருடன் அங்கே இல்லவே இல்லை என்று சொல்லிவிடுகிறாள். ஏன்? இந்தக் கேள்விக்கு விடையாகத்தான் படம் விரிகிறது. பின்னணி இசை ஒரு திரைப்படத்துடன் எப்படி இழையவேண்டும் என்பதற்கு இது சரியான உதாரணம். கதாநாயகியாக நடித்துள்ள லைலா பெஹ்த்தி அட்டகாசமாக நடித்திருந்தார். இது சென்னையிலும் திரையிடப்பட்டது.

Monument to Michael Jackson – 2009ல் செர்பியாவின் கிட்டத்தட்ட அழியும் நிலையில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் நடக்கும் கதை இது. அந்த ஊரில் இருக்கும் விமான நிலையம் அரசால் மூடப்பட்டுத் தனியாருக்கு விற்கப்படப்போகும் சூழ்நிலை. ஊரில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த ஊரில் உள்ள நாவிதன் ஒருவன், அவனை விட்டுச் சென்றுவிட்ட மனைவியைத் திரும்ப மீட்கவும், ஊரை மறுபடியும் பிரபலப்படுத்தவும் வித்தியாசமான யோசனை ஒன்றைச் சொல்கிறான். அப்போது தனது உலகளாவிய ரசிகர்களுக்காக ஒரு சுற்றுப்பயணத்தை அறிவித்திருந்த மைக்கேல் ஜாக்ஸனுக்கு ஒரு சிலையை வடிப்பதுதான் அது. இதனால் அதைப் பார்க்க வரும் சுற்றுப்பயணிகளால் விமான நிலையம் திறக்கப்படும்; ஊருக்கும் புகழ் கிடைக்கும் என்பது அவனது கருத்து.


இதன்பின் அந்த ஊர் எப்படி மாறுகிறது என்பதைக் குறித்த மெல்லிய நகைச்சுவை இழையோடும் படம்தான் இது. நகைச்சுவை மட்டுமில்லாமல் மென்சோகம், காதல், வீரம் முதலிய பல்வேறு உணர்வுகளில் படம் பார்ப்பவர்களை மூழ்கடிக்கும் படம். நான் பார்த்தவரையில் பெங்களூரின் திரைப்பட விழாவில் இதுபோல் கைதட்டலும் விசில்களும் வாங்கிய படம் வேறு எதுவும் இல்லை.

The Ambassador to Bern – நிஜத்தில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் இருக்கும் ஹங்கேரிய தூதரகத்தை 1955ல் இரண்டு நபர்கள் தாக்கினர். அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள் என்பதை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் தரும் படம் இது. படத்தில் இதற்கான காரணம் மிக வலுவானது. ஹங்கேரியின் சுதந்திரப் போராட்டம் சம்மந்தமானது.

Two Lives – ஜெர்மனியின் பெர்லின் சுவர் உடைந்த காலகட்டத்தில் நடக்கும் கதை இது. 1935ல் ஜெர்மனியில் ’லெபென்ஸ்பார்ன்’ என்ற அமைப்பு மிகத் தீவிரமாக செயல்பட்டது. இதன் நோக்கம் என்னவெனில், ஹிட்லரால் ‘ஆரியர்கள்’ என்று அழைக்கப்பட்ட தூய ஜெர்மன் இனத்தைப் பெருக்குவதுதான். இந்தத் திட்டத்தின்கீழ், தூய ஜெர்மானியர்களின் கலப்பினால் உண்டாகும் குழந்தைகள் ஆரிய இனத்தை வளர்க்க ஜெர்மனிக்கு எடுத்துவரப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்கு முன்னரும், போரின்போதும் ஜெர்மனியிலும் பிற நாடுகளிலும் இது தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஜெர்மனியைச் சுற்றியுள்ள பல நாடுகளில் ஜெர்மன் தந்தைகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு ஜெர்மனியில் வளர்க்கப்பட்டன.


அப்படி ஒரு குழந்தையைப் பற்றியதே இப்படம். நார்வேயில் வாழ்ந்துவரும் கேத்ரீன், அன்பான கணவனுடம் தாயுடனும் தனது இளம் மகளுடன் வாழ்ந்துவருபவள். கிழக்கு ஜெர்மனியில் இருந்து தப்பி நார்வேக்கு வந்து தனது தொலைந்த குடும்பத்துடன் வாழ்பவள் அவள். ஒருநாள் ஒரு வக்கீல் அவளைச் சந்திக்கிறார். இப்படிப்பட்ட குழந்தைகளை ஜெர்மனியிடம் இருந்து கொண்டுவர எந்தப் பிரயத்தனமும் செய்யாத நார்வே அரசு மீது சமூகநல வழக்கு போடப்போவதாகவும், அதில் கேத்ரீன் சாட்சி சொல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார். இந்த சம்பவத்துக்குப் பின்னர்தான் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவருகின்றன.

இந்தப் படம் வேகமாகச் செல்வது அல்ல. ஆனாலும் ஜெர்மனி தன்னைச் சுற்றியிருந்த நாடுகளில் இருந்து கைப்பற்றிய குழந்தைகளைப் பற்றியும் அவர்கள் அனாதைகளாகவே வளர்ந்தது பற்றியுமான பல சரித்திர உண்மைகள் நமக்குப் புரியும். கூடவே கேத்ரீனின் குடும்பம், அவர்களின் உறவுகள் போன்றவற்றைக் கையாளும் சற்றே சீரியஸான படம் இது.

Fish & Cat – ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட படம் இது. இதற்கு முன்னரே Russian Ark படம் இதுபோன்ற ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ரஷ்யன் ஆர்க் போல இது ஒரு மெதுவான படம் அல்ல. மாறாக, இது ஒரு த்ரில்லர். நிஜமான செய்தி ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. என்ன அந்த செய்தி? ஒரு உணவகத்தில் மனித சதையை உணவாகப் பரிமாறினார்கள் என்பதே. ஆனால் கவலைப்படவேண்டாம். ரத்தம் தெறிக்கும் வகையான படம் அல்ல இது. மாறாக, வேகமாக நகரும் படம். இதன் கதாபாத்திரங்களை கவனியுங்கள். ஒரே ஷாட்டில் எப்படி ஒரு முழுப்படத்தையும் இயக்குநர் ஷஹ்ராம் மொக்ரி எடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்தால் தமிழின் தொழில்நுட்பத்துக்கு நல்லது.


Of Horses and Men – ஐஸ்லாந்தின் எல்லைகளில் குதிரைகளின் தேவை இன்றியமையாதது. அப்படிப்பட்ட குதிரைகளையும், அந்தக் குதிரைகளை வைத்திருக்கும் மனிதர்களையும் பற்றிய இதமான படம் இது. பெரிதாகக் கதை எதுவும் இல்லை என்றாலும், எல்லாப் படங்களுக்கும் கதை தேவையே இல்லை என்பதைச் சொல்லும் படம். குதிரைகள் மனிதர்களை விடவும் அறிவு மிக்கவை என்பதை இப்படத்தின் சில காட்சிகள் சொல்லும். முக்கியமாக, ஒளிப்பதிவில் மிகச்சிறந்த படம் இது. வருங்கால ஒளி ஓவியர்கள் அவசியம் தவறவிடக்கூடாத படம்.

Obsessed – காதலையும் காமத்தையும் பற்றிப் படங்கள் எடுப்பதே கொரிய இயக்குநர் கிம் டே வூவின் இயல்பு. அவரது புதிய படம் இது. வியட்நாம் யுத்தம் முடிந்த காலகட்டம். கிம் ஜின் ஒரு கர்னல். அவனது மனைவி சூக் ஜின், அவன் தற்போது இருக்கும் ராணுவத்தளத்தின் தலைமையதிகாரியின் மகள். இதனால் இவர்கள் இருவருக்கும் அங்கே நல்ல மரியாதை. கூடவே, அந்தத் தளத்தில் இருக்கும் அனைவருக்குள்ளும் கடுமையான கட்டுப்பாடுகளும் நிலவுகின்றன. போர் முடிந்திருந்தாலும், Post traumatic stressஸினால் ரகசியமாக மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான் கிம் ஜின். அவனுக்கு அந்த இடத்தின் கடுமையான விதிமுறைகள் இன்னும் சிக்கலைக் கிளப்புகின்றன. இந்த நிலையில்தான் ஜோங்-கா-ஹ்யூன் என்ற பெண், தனது கணவன் கேப்டன் க்யூங்-வூ-ஜின்னுடன் அங்கு வருகிறாள். அவளுக்கும் அவளது கணவனுக்கும் காதலற்ற உறவே இருப்பதால், அவளுக்கு கிம் ஜின்னைப் பார்த்ததும் அவன் மேல் இதுவரை யார் மேலும் வந்திராத காதல் வருகிறது. கிம்முக்கும் இவளைப் பிடிக்கிறது.

இதுதான் அப்ஸெஷன். இந்த இருவரின் நடிப்பையும், அவர்களின் சிக்கல்களையும் உணர்வுகளையும் எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று அவசியம் கவனித்துப் பார்க்கவேண்டிய படம். கொரியன் பட ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுக்கும்.

Marsella – ஸாரா என்ற பெண் சிறையில் இருந்தபோது அவளது மகளை விர்ஜீனியா என்ற பெண் வளர்க்கிறாள். அப்போது அந்தக் குழந்தைக்கு வயது நான்கு. இதன்பின் பல வருடங்கள் கழித்து, அவளது பத்தாவது வயதில் மறுபடியும் ஸாராவின் குழந்தை அவளுடன் சேரலாம் என்று முடிவு செய்யப்படுகிறது. தீர்ப்பும் அளிக்கப்படுகிறது. ஸாராவும் க்ளேய்ரும் – அதுதான் மகளின் பெயர் – க்ளேய்ரின் தந்தையை சந்திக்கக் கிளம்புகிறார்கள். ஆனால் இங்கே ஒரு சிறிய திருப்பம் இருக்கிறது. ஸாரா சும்மா வருவதில்லை. அவளுடன் அவர்களது வாழ்க்கையையே கொடூரமாக மாற்றக்கூடிய ஒரு பொருளை எடுத்து வருகிறாள். அது என்ன? கதை எப்படிச் செல்கிறது? என்பதெல்லாம் படத்தைப் பார்த்தால் உணர்வுரீதியில் புரியும். இவர்களுடன் விர்ஜீனியாவும் சேர்ந்துகொள்ளும்போது கதை இன்னும் தீவிரமடைகிறது.


இந்தப் படத்தில் இருக்கும் சிறிய பிரச்னை, கதை இன்னொரு திரையில் செல்வதுதான். படம் பார்ப்பவர்களுக்கு எளிதில் பல கேள்விகள் எழும். ஆனால் அவற்றுக்குப் பதில்கள் படத்தில் இல்லை. இருந்தாலும் இந்த மூன்று கதாபாத்திரங்களை சிறப்பாகச் சித்தரித்திருப்பதற்கே இப்படத்தைப் பார்க்கலாம்.

Love is All – நெதர்லாந்தில் க்ரிஸ்த்மஸ் சமயத்தில் நடக்கும் கதை. ஐந்து சிறிய கதைகளை ஒன்றுசேர்க்கும் ஒரு பெரிய கதைதான் இப்படம். வழக்கமாக நெதர்லாந்தின் க்ரிஸ்த்மஸ் விழாவில் ஸாண்ட்டா க்ளாஸாக ஒவ்வொரு வருடமும் வேடமிடும் நபர் திடீரென மாரடைப்பால் இறக்க, அங்கே இருக்கும் யாரோ ஒரு நபர் ஸாண்ட்டா க்ளாஸாக்கப்படுகிறார். அப்போது தண்ணீரில் மூழ்கும் ஒரு சிறுமியை அவர் குதித்துக் காப்பாற்ற, உடனடியாக தேசிய ஹீரோ ஆகிவிடுகிறார். அந்தக் களேபரத்தில் அந்த மனிதர் அங்கிருந்து அகன்றுவிடுகிறார். அவரைத் தொலைக்காட்சி நிறுவனம் தேட ஆரம்பிக்கிறது. இப்படித் துவங்கும் கதையில் காப்பாற்றப்பட்ட சிறுமியின் தந்தையும் தாயும் பற்றிய கதை, இறந்துபோன ஸாண்ட்டா க்ளாஸின் மகளின் கதை, அந்த விழாவில் பங்குபெற்ற ஒரு யுவதியின் கதை, அவளது சகோதரன் ஒருவன் தன்னுடைய ஆண் நண்பனைத் திருமணம் செய்ய நினைக்கும் கதை ஆகிய வித்தியாசமான கதைகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டு நடக்கின்றன.

இந்தப் படம் எனக்கு Love Actually படத்தை நினைவுபடுத்தியது. அதைப்போலவே சில காட்சிகளைக் கண்டேன். இருந்தாலும், க்ரிஸ்த்மஸ் சமயத்தில் மனதுக்கு இதமான படமாக இது இருந்தது.

இம்முறை நல்ல படங்களைப் பார்த்திருந்தாலும், முழுத்திருப்தி இல்லை. அடுத்தமுறையாவது 2015ன் சிறந்த உலகப்படங்கள் பெங்களூருக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.