பேசாதிருத்தல் என்பது ஒரு தேர்வுரிமை ஆகாது ஆனந்த் பட்வர்தனோடு யமுனா ராஜேந்திரன் & அருண் மோ. உரையாடல்

அரசுக்கு எதிரான கலகக்குரலாகவே தொடர்ந்து தன்னுடைய ஆவணப்படங்களை எடுத்து வருபவர். இவரின் பெரும்பாலான ஆவணப்படங்களுக்கு மத்திய தணிக்கை குழு, சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் போராடி தன்னுடைய ஆவணப்படங்களில் ஒரு கட் கூட இல்லாமல், இதுவரை தொடந்து உலகம் முழுவதும் திரையிட்டு வருகிறார். 1995 இல் இவர் இயக்கிய Father Son and the Holy War என்கிற ஆவணப்படம், உலகின் முக்கியமான 50 ஆவணப்படங்களில் ஒன்றாக ஐரோப்பாவின் DOX இதழால் தெரிவு செய்யப்பட்டது. மார்க்சியம், காந்தியம், அம்பேத்கரியம் என முக்கியமான சிந்தனை பார்வைகளை கொண்டவர். தன்னுடைய எல்லா படங்களையும், இந்த சிந்தனை பார்வையின் அடிப்படையில் எடுத்து வருபவர். நான்கு முறை தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

தான் ஒரு படைப்பாளி, தன்னுடைய வேலை படங்களை எடுப்பது மட்டுமே என்று நினைக்காமல், எடுக்கப்பட்ட தன்னுடைய படங்களுக்கு எதிராக அரசு அமைப்புகள் செய்யும் அத்தனை வேலைகளையும் முறியடித்து, தன்னுடைய படைப்பு நேர்மையானது, அதில் அரசின் தணிக்கை அமைப்பு எவ்விதத்திலும் தணிக்கை செய்யமுடியாது என்று தொடர்ந்து போராடி வருபர். போரும் அமைதியும் என்கிற இவரது ஆவணப்படம், ஓராண்டு காலம் தடை செய்யப்பட்டிருந்த சூழலிலும் நீதிமன்றத்தில் போராடி, மீண்டும் அந்த படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் அனுமதியை பெற்றார். சில ஆண்டுகளுக்கு இவர் இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம், தலித் அரசியலில் மிக முக்கியமான ஆவணமாகவே இருந்து வருகிறது. ஆவணப்படம் என்றாலும், அதன் வடிவம் குறித்தும், ஆனந்த பட்வர்தன் மிகுந்த தெளிவுடையவர். உலக அளவில், ஆவணப்பட இயக்குனர்களில், சம காலத்தில் ஆனந்த் பட்வர்தனே முதன்மையானவர். 2014ஆம் ஆண்டுக்கான தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதை பெரும் ஆனந்த் பட்வர்தனுடன் ஒரு உரையாடல்...
புரட்சியின் அலைகள் (Waves of Revolution) தொடங்கி தோழர் பீம் வாழ்க (Jai Bhim Comrade) வரை இந்தியாவில் உள்ள எதிர்ப்பு அரசியல் இயக்கங்களின் வரலாற்றை உங்களுக்கேயான தனிப் பாணியில் ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள். ஆர்.வி. ரமணியின் இந்த நாடு எம்முடையது (This Country is Ours) என்ற ஆவணப்படத்தில் நீங்கள் பேசும்போது, ஒரு வகையில் பார்த்தால் உங்கள் பெற்றோரின் நம்பிக்கைகளையே நீங்கள் பிரதிபலித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறீர்கள். உங்கள் குழந்தைப் பருவம் எவ்வாறு புரட்சியின் அலைகள் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது என்பதைக் கூற முடியுமா?

ஆனந்த்:
நான் எனது பெற்றோருடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். சுதந்திரப் போராட்டக் காலத்துக்கே உரித்தான மனக்கிளர்ச்சி, மதிப்பீடுகள் மற்றும் நடைமுறைகளோடு வளர்ந்தவர்கள் அவர்கள். எனது தாய் 2008இலும் எனது தந்தை 2010இலும் மறைந்தார்கள். சுமார் 60 வருடங்கள் நான் அவர்களோடு இருக்க முடிந்தது என்பது என் அதிர்ஷ்டம்தான். அவர்கள் என்மீது எந்தக் கருத்துக்களையும் திணித்ததில்லை. நான் விரும்பியபடி செயல்பட எனக்கு முழுச் சுதந்திரமும் ஆதரவும் கொடுத்தார்கள். ஒற்றை நேர்க்கோட்டில் ஒருபோதும் சிந்திக்காமல், மாறாக வாழ்க்கையின் பல்வகைமைகள், முரண்கள் குறித்து நான் அகவுணர்வு பெற்றதோடு, அவற்றைப் பரிசோதித்தும் பார்த்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் பெற்றோர் எனக்களித்த அந்தச் சுதந்திரம்தான். அவர்கள் என் மீது கொண்டிருந்த தாக்கம் என்பது சூட்சுமமானது; நேரடியாகப் புலப்படாதது. நான் ஒரு போராளியாக இருக்கக் கற்றுக்கொடுத்தவர் என் தாய். என்னுடைய சொந்த விஷயங்களைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கக் கற்றுக்கொடுத்தவர் என் தந்தை. அதனால்தான், வேடிக்கையும் விளையாட்டுமாய் இருக்க வாய்க்கும் என்றால் அப்படி இருக்கவும், ஏமாற்றமும் இழப்பும் வாய்க்கும் என்றால் தோல்வி துயரங்களுக்கு இடம் கொடுக்காமல் எதிர்கொள்ளவும் கற்றுக் கொண்டேன்.

உங்கள் பாணியை உருவாக்கிக் கொள்வதில் எந்த ஆவணப்பட இயக்குனராவது பாதிப்புச் செலுத்தியிருக்கிறாரா? அப்படியெனில், எந்த வகையான பாதிப்பு?

ஆனந்த்:
இதுபோன்ற பாதிப்புகளெல்லாம் மனமறிந்து நடப்பதில்லை; நாம் அறியாமலேயே நடப்பது. சில நேரங்களில் எதைச் செய்யக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்கிறோம்; சில நேரங்களில் நாம் எதையாவது சிலாகிக்கும்போது நம்மை அறியாமலேயே அதை உள்வாங்கிக் கொள்கிறோம். எனவே பிறரது படங்களைப் பார்ப்பது என்பது நிச்சயம் என்மீது பாதிப்பை ஏற்படுத்தியே இருக்கிறது; ஆனால் எனக்கு முக்கியமான அகத்தூண்டுதலாக இருந்தவர் என்று சொல்லும்படி எந்த ஒரு குறிப்பிட்ட திரைப்பட இயக்குனரையும் நான் அறியேன். என்னில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய படம் என்று ஒன்றைக் குறிப்பிட வேண்டுமானால், அது பட்ரீசியோ கஸ்மனின் (Patricio Guzman’s) சிலி யுத்தம் (Battle of Chile) என்ற படமாகத்தான் இருக்கும். அந்தப் படம் எடுக்கப்பட்ட விதம் ஒரு காரணமென்றால், மற்றொரு காரணம் சால்வடார் அலண்டே மீது நான் கொண்டிருந்த ஆழமான பற்றும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சோசலிச அரசு என்ற கனவும். ஆனால் சி.ஐ.ஏ.வின் ஆதரவில் நடத்தப்பட்ட இரத்தச்சிதறலால் ஒரு கொடுங்கனவாகவே அது முடிந்தது. என்றாலும், என்றாவது ஒரு நாள் இந்த உலகின் ஏதாவது ஓர் இடத்தில் அந்தக் கனவு மீண்டும் நனவாகக்கூடும்.

இந்தியத் திரைப்படத் துறையின் நிலையை அதாவது கதைப்படங்களை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?

ஆனந்த்:
திரைப்படத் துறையைப் பொருத்தளவில், அது இந்தியத் திரைப்படமாயினும் சரி வேற்றுத் திரைப்படமாயினும் சரி, நான் நிபுணத்துவம் பெற்றவன் அல்ல. ஆனால் பகட்டறியாமல் நம்பிக்கையோடு முன்னோக்கிச் செல்ல முனைந்து கொண்டிருந்த 50, 60, 70களின் திரைப்படங்கள் மீதான இறந்தகால ஏக்கம் என்பது கொஞ்சம் உண்டு.
இடதுசாரித் தாக்கம் பெற்ற இந்திய மக்கள் நாடகச் சங்கம் (IPTA) திரைப்படங்களின் மீதும் அதன் இசையின் மீதும் பதித்த முத்திரையும், சாஹிர் லூதியான்வி போன்ற பலருடைய கவிதைகளும் தங்கள் காலத்திய உலகின் நிலைமைகளை விமர்சித்ததோடு நில்லாமல், அந்த உலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கற்பனையும் கொண்டிருந்தன. அவர்கள் மேடையில் அரங்கேற்றிக் காட்டிய வன்முறை என்பது தத்ரூபமானதாக இருக்கவில்லை; சொல்லப்போனால், அந்த வன்முறை உண்மையானது அல்ல என்று லவியுறுத்திக் கூறுவது போலவே தங்கள் பாணியை மரபாக்கிக் கொண்டார்கள். இன்றைய திரைப்படத்தின் வன்முறையோ மட்டுமீறியதாக, மிகையுண்மையாக இருக்கிறது. ஹாலிவுட்டும் பாலிவுட்டும் தொலைக்காட்சியில் அன்றாடம் பார்க்கும் காட்டுமிராண்டித்தனமான கொலைகளும் கோரங்களும் சேர்ந்து மனித உணர்வுத்திறங்களை இனிச் சரிப்படுத்தவே இயலாதபடி சேதப்படுத்திவிட்டன என்று ஏறக்குறைய முடிவே கட்டிவிட்டேன்.

அடிப்படைவாதம், சாதியம், ஊழல் என்பனவெல்லாம் இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் உங்களது இலட்சிய இந்தியா என்பது என்னவாக இருக்கும்?

ஆனந்த்:
இலட்சியத்தை விடுங்கள். நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது மோடி, அமித் ஷா, அவர்களுக்குப் பின்னிருக்கும் பெருமுதலாளிகள் என்று ஒரு மாக்கியவல்லிய பாசிச சக்தியை. மக்களோ இதுபற்றி எந்தக் கலக்கமும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் ''வளர்ச்சி'' ஏற்பட்டுவிடும் என்று வாயூறக் காத்திருக்கிறார்கள். அந்த ''வளர்ச்சி''க்காக பெரும்பாலான மக்களும் மிகப் பெரிய விலையைத் தர வேண்டியிருக்கும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். நமது நாட்டிலும் சரி ஒட்டுமொத்தப் புவியுலகிலும் சரி, இயற்கை வளாதாரங்கள் வரைநிலை பெற்றனவாகவே இருக்கின்றன - வரைநிலையான நீர், வரைநிலையான காற்று, வரைநிலையான பசுமை, வரைநிலையான மலைகள், வரைநிலையான எரிபொருள், வரையிலையான தாதுப்பொருள் என்று. இந்த வளாதாரங்களையெல்லாம் பகாசுரப் பெருநிறுவனங்களுக்கு விற்றுவிடுவது என்பது இவை வெகுவிரைவாக வற்றிப்போவதை உறுதிப்படுத்தும் செயலாகும். வேண்டுமானால் ஒரு குறுகிய காலத்துக்கு 'காகித' வளர்ச்சி இருக்கலாம்; சில வங்கிக் கணக்குகள் தற்காலிகமாகக் கொஞ்சம் அதிகரிக்கலாம். ஆனால் இருக்கும் வளாதாரங்கள் எல்லாம் மறைந்துவிடும்போது, இந்தப் பலன்களை எல்லாம் பணவீக்கம் அழித்துவிடும். திடீர் வீழ்ச்சி ஏற்படும். அதில் முதல் பலியாய் இருக்கப் போகிறவர்கள் ஏழைகள்தான். இது ஏற்கெனவே நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்போது சாணக்கியனும் மனுவும் அரியணையில் இருக்கிறார்கள். அவர்களது முப்பரிமாண எழுச்சியைக் கண்டு பிரமித்துப்போய் நிற்கிறோம். நம் அனைவருக்குள்ளும் இருக்கும் புத்தனை மறந்துபோனோம். என்னுடைய இலட்சிய இந்தியா என்பது இந்த புத்தனை, கருணை மனத்தை மீண்டும் உயிர்ப்பூட்டி எழுப்புவதுதான். ஆனால் இது இயற்கைக்கு மாறான செயற்கையான ஒழுக்கத்தைச் சுமத்தி நடக்கக்கூடாது; புலனின்பத்தைப் பலிகொடுத்து துறவைத் திணித்து நடக்கக்கூடாது. தவ வாழ்க்கை, புனிதத்துவம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மனிதர்கள் இப்போது இருப்பதைவிட இன்னும் அதிக ஞானம் பெற்றவர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இன்று அனைவர் மனதிலும் வலிப்பரிவர்த்தனை வேட்கையே (sado-masochism) குடிகொண்டுள்ளது. எல்லை வேலியருகே நின்று தங்கள் இராணுவத்தின் ஏவுகணைகள் காஸாவில் பாய்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொன்று குவிப்பதைக் கண்டு ஊக்கொலி எழுப்பும் இஸ்ரேலியர்களைப் பாருங்கள். பிறருடைய துன்பத்தைக் காண்பது, பிறரைத் துன்புறுத்துவது என்பது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக, கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. வன்முறை என்பது பாலுறவுக் கிளர்ச்சியாகக் கருதப்படுகிறது. ஏற்றத்தாழ்வு, தனியுரிமைக்குழுவாதம், பெருநிறுவன முத்திரைப் பொருட்கள் என்று திளைக்கிறார்கள். இது மிகவும் துயரமானது. இச்சைகள் குறித்து மக்களுக்கு அறிவுபுகட்ட வேண்டியது மிகப் பெரும் தேவையாய் இருக்கிறது. அதைப் போலவே நமக்கான அதிகாரத்தை மீட்டெடுப்பது குறித்தும், அன்னியோன்யம் என்பதில் உள்ள இனிமை குறித்தும் அறிவுபுகட்ட வேண்டியுள்ளது. பிறரிடமிருந்து விலகி வாழ்வதன் மூலம் மகிழ்ச்சியை அடைய முடியாது என்பதை புத்தியுள்ளவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

உங்களுடைய சமீபத்திய படமான ‘தோழர் பீம் வாழ்க’வை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களில் திரையிட்டு வருகிறீர்கள். திரையிட்ட பிறகு அப்படம் ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றிச் சொல்ல முடியுமா?

ஆனந்த்:
பாட்டாளி வர்க்கத்தினரை எட்டுவது என்றளவில் என்னுடைய முந்தைய பல படங்களைக் காட்டிலும் இந்தப் படம் பல வகையிலும் சிறந்து விளங்குகிறது. இது மராத்தி மொழிப் படம் என்பதால் மஹாராஷ்டிரத்தில் மொழித்தடை என்பது ஏதும் இல்லை. தமிழில் பெயர்ப்புரையோடு ஒரு பிரதியை உருவாக்கினோம். ஆனால் எனக்குத் தமிழ் தெரியாதாகையால், தமிழ்நாட்டில் அந்தப் படம் பெற்ற வரவேற்பைப் பற்றி நேரடியாக எனக்குத் தெரியாது. தலித்துகள் மத்தியிலும் தலித் அல்லாதவர்கள் மத்தியிலும் கருத்தாடல்களைத் துவக்குவதற்கான ஒரு பயனுள்ள கருவியாக இந்தப் படம் இருக்கும் என்று நினைக்கிறேன். எல்லாக் கேள்விகளுக்குமான விடைகளையோ அல்லது குறிப்பிட்ட விடைகளையோ இந்தப் படம் தந்துவிடவில்லை என்பது உண்மைதான். ஆனால் நிச்சயமாக ஒரு விவாதத்தைத் துவக்கி வைக்கிறது. எதிர்ப்போராட்டம் என்ற ஆற்றல்மிகு இசையை இந்தப் படம் எடுத்துக்காட்டுவதால், தலித்துகளிடையே இது ஓர் உணர்வூக்கியாகச் செயல்படும் என்று நினைக்கிறேன். தலித் அல்லாதவரிடையே எவருக்கு இன்னும் மனசாட்சி மிச்சமிருக்கிறதோ அவர்களை வெட்கமுறச் செய்யும், சுயபரிசோதனை மேற்கொள்ளச் செய்யும் என்று நம்புகிறேன்.
வெளிநாட்டவரைப் பொருத்தளவில் இந்தப் படத்துக்கு இரண்டு விதமான எதிர்வினைகள் இருக்கின்றன. ஒன்று, இத்தனை கேடுகெட்ட ஒரு சாதிய அமைப்புமுறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் நீடித்திருக்கிறதா என்ற நம்பவியலாமையும், இந்தத் தீமையை எதிர்த்துப் போராடும் அனைவரையும் பாராட்டுவது என்பதும். மற்றது அக்கறையின்மை. பல முக்கியமான பன்னாட்டுத் திரைப்பட விழாக்கள் இப்படத்தைப் புறக்கணித்துவிட்டன. வசதியான சமூகங்கள் பொதுவாக சுயமோகம் கொண்டவை. மூன்றாம் உலகப் பிரச்சினைகளில் அவர்கள் தற்காலிகமாக ஈடுபாடு காட்டக்கூடும் - அந்தப் பிரச்சினைகள் அவர்களது தர்ம சிந்தனையைத் தூண்டுமானால். ஆனால் ஒரு மனித அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது, உலகில் எங்கோ நடக்கும் ஓர் எதிர்ப்போராட்ட வடிவத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்வது என்று அவர்களைக் கோருவோமானால், அவர்களில் பலருக்கும் அது ஒரு சலிப்பான விஷயமாக இருக்கும். எதிர்ப்போராட்டப் பல்கலாசாரம் என்பதை ஒரு மணி நேரம் அவர்கள் தாங்கக்கூடும்; மூன்று மணி நேரமென்றால்?

காந்திய அஹிம்சை மதிப்பீடுகளையும் அரசியல்சட்ட நம்பிக்கையையும் கொண்டவராகத் தெரிகிறீர்கள். அதே நேரம் நக்ஸல்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கிறீர்கள். இவை இரண்டுக்குமிடையில் எப்படிச் சமரசம் காண்கிறீர்கள்?

ஆனந்த்:
சரியாகச் சொன்னால், காந்தி, அம்பேத்கர் இருவருமே அஹிம்சையின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டவர்கள்தான் என்றபோதிலும், அரசியல்சட்ட உரிமைகள் பற்றிய அவர்களது புரிதல் ஒன்றுபோல் இருக்கவில்லை. ஒடுக்குபவர்களின் மனதை மாற்ற வேண்டியதன் அவசியத்தை காந்தி வலியுறுத்தினார். ஆனால் அம்பேத்கரோ அதிக யதார்த்தமாக இருந்தார். அத்தகைய மனமாற்றத்துக்காகக் காலவரம்பின்றிக் காத்திருப்பதைவிட, இந்த நாட்டின் சட்டம் மாற்றியமைக்கப்பட்டு அரசியல் சட்டத்தில் சம உரிமைகள் பொறிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதிர்ஷ்டவசமாக, தன்னுடைய இறுதிக் காலத்தில் அம்பேத்கரின் ஞானத்தையும் நேர்மையையும் அறிந்துகொண்ட காந்தி, அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் தலைமைப் பொறுப்பை அம்பேத்கர் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நக்ஸல்களைப் பொருத்தளவில், நீதி கோரி ஆயுதப் போராட்டப் பாதையில் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பவர்களது (பலர் அந்தப் பாதையைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்) அர்ப்பணிப்பையும் உயிர்த்தியாகத்தையும் நான் அங்கீகரிக்கிறேன். ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் ஆயுத ஆற்றலைக் கொண்டு ஓர் இந்தியப் புரட்சி நேரும் என்று நான் நம்பவில்லை. மக்கள் செல்வாக்கற்ற ஒரு சர்வாதிகாரிக்கு எதிராக 12 பேர் கொண்ட ஓர் ஆயுதக்குழு புரட்சியைத் தூண்டிவிட முடிந்த 1950களின் கியூபா அல்ல நமது நாடு. நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நமக்கு வாய்த்த சர்வாதிகாரி பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே நமக்குத் தேவையான முதல் புரட்சி ஒரு கலாசாரப் புரட்சியாக இருக்க வேண்டும். மதச்சார்பின்மை, பாலினச் சமத்துவம், சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றைக் கற்றுத்தரும் கலாசாரப் புரட்சி தேவை; சூறையாடலுக்கு எதிராகப் போராடி சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருபவர்களை நேசிக்கக் கற்றுத்தரும் கலாசாரப் புரட்சி தேவை. அந்தளவில், வனப்பகுதிகளைக் கைப்பற்ற முயலும் சுரங்க நிறுவனங்களுக்கும் அரசுக்கும் எதிராகப் போராடித் தடுத்தவர்கள் நக்ஸல்கள்; ஒரு சேவையைச் செய்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், என்றேனும் ஒரு நாள் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்களானால், இன்று பின்பற்றப்பட்டு வரும் வளர்ச்சி மாதிரிக்கு மாற்றாக வேறு விதமான மாதிரியை உருவாக்குவார்கள் என்று சொல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட பொருளாதாரப் புரிதலைக் காட்டும்படியான விஷயம் எதுவும் அவர்களது எழுத்துக்களில் காணக் கிடைக்கவில்லை.

நக்ஸல்கள் என்று குறிவைக்கப்பட்டு வேட்டையாடப்படுபவர்களுக்கோ சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுபவர்களுக்கோ நான் அளிக்கும் ஆதரவு என்பது குடிமை உரிமைகள் என்ற பார்வைநிலையின் அடிப்படையிலானது. குறிவைக்கப்பட்ட சமூகக் குழுக்களான தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேயே பலரும் நக்ஸல்கள் என்று தவறாக முத்திரை குத்தப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். தாங்கள் நக்ஸல்கள்தான் என்று சுய அறிவோடு உணர்ந்து செயல்படுபவர்களைக்கூட நான் எதிரிகளாக நினைக்கவில்லை. அவர்கள் உடன்விவாதிக்கத் தக்கவர்கள், அவர்களைக் கருத்தேற்கச் செய்ய முடியும் என்றே நினைக்கிறேன். நானும்கூட சே குவேரா, பகத் சிங் என்று வீரக்கனவில் திளைத்து வளர்ந்தவன்தான். நான் அரசாய் இருந்தால், நக்ஸல்களை உரையாடலுக்கு அழைப்பேன்; துப்பாக்கியைக் கொண்டு அவர்களைத் துடைத்தெறிந்துவிட முயல மாட்டேன். தாங்கள் விரும்பும் புரட்சியை உருவாக்குவதில் நக்ஸல்கள் எப்படி வெற்றிபெற முடியாதோ, அப்படியே நக்ஸலிஸத்தைத் துடைத்தழித்துவிடுவதில் அரசும் வெற்றிபெற முடியாது. வெற்றிபெறுவார்களேயானால், இந்தியா மேலும் வறிய நாடாகிவிடும். ஏனென்றால், இந்த மண்ணின் மிகச் சிறந்த, வீரஞ்செறிந்த மனிதர்கள் பலரை இந்த நாடு இழந்துவிடும்.
இந்திய அரசியல் இயக்கங்கள் பற்றி நாற்பது ஆண்டுகளாகப் படம் எடுத்து வருகிறீர்கள். பண்புரீதியான மாற்றங்கள் எதையாவது கண்டிருக்கிறீர்களா? உங்கள் கருத்தில் இடதுசாரி அரசியல் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் எவை?

ஆனந்த்:
நான் கூறியபடி இந்த நேரத்துக்கான தேவை என்பது கலாசாரப் புரட்சிதான். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 1948ல் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதும் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள் இந்துத்துவக் கருத்தியல் என்பது நாடு முழுதும் வெறுப்பையே பெற்றிருந்தது. ஆனால் அவர்கள் தலைமறைவாக இயங்கி தங்கள் விதையைத் தூவிப் பேணி வந்தார்கள்; இப்போது மீண்டும் அனைவரும் அறியப் பொதுவெளியில் தலைதூக்கும் நாள் வந்திருக்கிறது. அவர்கள் வனைந்த கலாசாரப் புரட்சி இன்று அவர்களே எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருக்கிறது. மதச்சார்பின்மை என்ற சொல் இப்போது விஷம் போல் பாவிக்கப்படுகிறது. தன்னை வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர் இரும்புக்கரம் கொண்டு இந்த நாட்டை ஆள்கிறார். பாசிசக் கலாசாரத்துக்கு எதிராகச் சமபலம் வாய்ந்த ஒரு கலாசார இயக்கத்தை உருவாக்கிப் போராடத் தெரியாத எந்த ஓர் இடதுசாரி இயக்கமோ ஜனநாயக இயக்கமோ நீடித்திருக்க முடியாது. நமது வரலாற்றில் இருந்து எடுத்துக்கொள்ள ஏராளமாய் இருக்கிறது. பார்க்கும் கண்களையும் கேட்கும் காதுகளையும் பெற்றிருந்தோமானால், நீண்ட வரலாறு கொண்ட நமது பகுத்தறிவு மரபு நமக்கு விடுக்கும் கோரிக்கையைப் புரிந்துகொள்ள முடியும்.
கலைநயம் சார்ந்த கடப்பாடு, அரசியல் சார்ந்த கடப்பாடு ஆகியவற்றுக்கான நெறிமுறைகளை அடுத்த தலைமுறை இயக்குனர்களுக்கு எவ்வாறு விளக்குவீர்கள்?

ஆனந்த்:
கடப்பாடு என்பது கற்றுத்தரப்படுவது அல்ல. அது ஒருவரது மனதுக்குள்ளிருந்து வர வேண்டும். அது உள்ளில் இருக்குமானால், வெளிப்பாட்டு நிலையை எட்ட வேண்டும். இந்த வெளிப்பாட்டுக்கென்று எந்த விதிமுறைகளும் சூத்திரங்களும் இல்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கே உரித்தான வெளிப்பாட்டு முறையைக் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும். 'கலைநயம்' என்பதைப் பொருத்தளவில், அந்தச் சொல்லை ஒதுக்கிவிடுவதே நல்லது. கலை என்பது வாய்மையின் உடன்விளைவாகும். அதைக் கற்றுத்தரவோ கற்றுத்தேரவோ முடியாது. ஒருவர் நேர்மையான முறையில் எதையாவது செய்யும்போது அது தானாகவே தோன்றுகிறது. நீங்கள் அதைத் தேடுவீர்களேயானால், அது உங்களைவிட்டு நழுவிப் போகும். மீறி மீறிப் போனால், நாலுபேர் மத்தியில் அலப்பிக் கொள்வதற்கான ஆற்றலைக் கற்றுக்கொள்ளலாம்; வணிகத் தந்திரங்களைக் கற்றுக்கொள்ளலாம். கலை என்பதொன்று தோன்றுமானால், அது எவரும் அறியாமலேயே தோன்றும். அப்போதுகூட, தேவையான புரிதலை காலமும் தூரமும் ஏற்படுத்தித்தராத வரை, அது அவ்வளவு எளிதில் பிறரால் உணர்ந்துகொள்ளப்படுவதில்லை.

உங்களது சில படங்கள் தணிக்கைச் சான்றிதழைப் பெற்றதேயில்லை. இந்தியத் தணிக்கைக் குழுவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆனந்த்:
இங்கே ஒன்று சொல்ல வேண்டும். தணிக்கைக் குழு தன்னை அப்பெயரில் அழைத்துக்கொள்வதில்லை; 'மத்தியத் திரைப்படச் சான்றளிப்புக் குழு' என்றே தன்னை அழைத்துக்கொள்கிறது - ஏதோ அது சான்றளிக்க மட்டுமே செய்வது போலவும், தணிக்கையே செய்வதில்லை போலும்! உள்ளபடி பார்த்தால், இது உண்மைக்கு மாறானது. பெயரில் 'சான்றளிப்பு' என்று இருப்பதென்னவோ ஒரு நல்ல விருப்பம்தான். ஏனென்றால் பெயரின்படி நடக்க வேண்டுமானால் அவர்கள் U, A, X என்று சான்றளிக்கத்தான் வேண்டுமே தவிர, படங்களை வெட்டவோ தடை செய்யவோ கூடாது. பிரிட்டிஷ்காரர்கள் ஒரு காலத்தில் நமது சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக தணிக்கை அதிகாரத்தைப் பயன்படுத்தியது போலவே, இன்றைய சுதந்திர இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்தக் கருத்தியலைத் திணிப்பதற்காக இந்தத் மத்தியத் திரைப்படச் சான்றளிப்புக் குழுவைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பிரதேசச் சான்றளிப்பு மையத்திலும் படங்களைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்லவென்று ஒரு குழு இருக்கிறது. வேறு கட்சி ஆட்சிக்கு வரும்போது இந்தக் குழு உறுப்பினர்களும் தலைவரும் மாற்றப்படுகிறார்கள். உங்கள் படத்தைத் தணிக்கை செய்யப் போகிறவர்கள் எந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் என்பதைப் பொருத்துத்தான் எல்லாம் இருக்கிறது. இந்தக் குழுக்களுக்குக் கிடைக்கக்கூடிய நபர்களில் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள், தாராள சிந்தனை கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பா.ஜ.க. போன்ற வலதுசாரி அரசு ஒன்று அமையும்போது, விவகாரங்கள் இன்னும் மோசமடைகின்றன.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். சான்றிதழ் பெறாத எனது சில படங்களைப் பொருத்தளவில், நான் அவற்றுக்குச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கவில்லை என்பதே உண்மை. நான் விண்ணப்பித்த எந்த ஒரு படத்திலுமே எந்த ஒரு வெட்டும் இருந்ததில்லை. ஏனென்றால், எந்த ஓர் ஒற்றைக்காட்சியையும் விட்டுத்தராமல் நாங்கள் மல்லாடினோம். இவற்றில் பெரும்பாலான மல்லாட்டங்களும் திரைப்படச் சான்றளிப்புக் குழுவின் சட்டதிட்ட வரம்புக்குட்பட்டே நடந்தன. அதாவது, மறுஆய்வுக் குழுவுக்குச் செல்வது அல்லது மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்குச் செல்வது என்று. ஒரே ஒரு முறைதான் நான் நீதிமன்றத்துக்கே செல்ல வேண்டியிருந்தது. அது 2003ல், பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது நடந்தது. என்னுடைய 'போரும் அமைதியும்' படத்துக்கு எந்த ஒரு வெட்டும் இல்லாமல் ‘U’ சான்றிதழ் வழங்க வேண்டுமென்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விந்தை என்னவென்றால், பா.ஜ.க. ஆட்சியின் மத்திய திரைப்படச் சான்றளிப்புக் குழு அந்தப் படத்திலிருந்து நீக்கச் சொன்ன ஏராளமான காட்சிகளில் ஒன்று, 'உயர்சாதி இந்துவான நாதுராம் கோட்ஸேவால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார்' என்ற நடப்புரை வாக்கியம் கொண்டது. அந்த நேரத்தில் பா.ஜ.க. வரலாற்றுப் புத்தகங்களை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது, காந்தி கொல்லப்பட்டது ஒரு பைத்தியக்காரனால் என்று. அந்தப் பைத்தியக்காரனின் கலாசாரப் பின்னணியும் அரசியல் சார்பும் குறிப்பிடப்படவில்லை. இப்போது புதிதாக அமைந்துள்ள பா.ஜ.க. ஆட்சியில் இத்தகைய வரலாற்றை மாற்றியெழுதும் முயற்சி தொடர்கிறது. 'துப்புரவு' என்ற பெயரில் உள்துறை அமைச்சகத்தில் இருந்த காந்தியின் படுகொலை தொடர்பான வரலாற்றுக் கோப்புகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. சமீபத்தில் நடந்த முசாபர்நகர் மதக்கலவரம் பற்றி சுப்ரதீப் சக்ரவர்த்தி உருவாக்கிய மிகச் சிறப்பான படம் சென்ற மாதம் மத்தியத் திரைப்படச் சான்றளிப்புக் குழுவால் தடை செய்யப்பட்டது. அவர் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறார். நாம் விழிப்போடு இருந்து இம்மாதிரியான தணிக்கைச் செயல்களையெல்லாம் கண்டிக்க வேண்டும்.

திரைப்படச் சான்றளிப்புக் குழுவின் தணிக்கை என்பது போராட்டத்தின் ஒரு பகுதிதான். அதைவிடப் பெரிய போராட்டம், உங்கள் படத்தைப் பெருவோட்டத்துக்கு எடுத்துச்சென்று பெருவாரியான பொதுமக்களைப் பார்க்க வைப்பதுதான். இதற்குக் கிட்டும் பதில் தொலைக்காட்சி என்பதுதான். ஆனால் இந்த வணிகத் தொலைக்காட்சிகள் எங்கள் படங்களை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிடுகின்றன. அவர்களுக்கு வணிகக் காரணங்களோடு அரசியல் காரணங்களும் இருக்கின்றன. ஒட்டுமொத்த வணிகத் தொலைக்காட்சி ஊடகமும் இப்போது 'மோடிமயம்' ஆக்கப்பட்டுள்ளது. உறுதியான மதச்சார்பற்ற உள்ளடக்கம் என்பது இந்த வணிகத் தொலைக்காட்சிகளுக்கு நிச்சயமாக ஒரு தடைப்பாடுதான். இதற்கு ஒரே மாற்றாக இருப்பது பெருமளவு பார்வையாளர்களைக் கொண்ட அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன்தான். பல வருடங்களாக தூர்தர்ஷனுக்கு எதிராக நீதிமன்றங்களில் போராடி ஆறு வழக்குகளில் வென்றுள்ளோம். கடைசியில் ஒரு வழியாக என்னுடைய படங்கள் வெகுஜனப் பார்வையாளர்களைச் சென்றடைந்தது இப்படித்தான். இதோ இப்போதுகூட தூர்தர்ஷனுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கைத் தொடுக்கும் தறுவாயில் இருக்கிறேன் - 'தோழர் பீம் வாழ்க' படத்தை ஒளிபரப்புவதற்காக.

அரசுத் தணிக்கை, சந்தைத் தணிக்கை ஆகியவை தவிர மூன்றாவது தணிக்கை வடிவம் குண்டர்கள் மூலம் வருவது. என்னுடைய திரைப்படக் காலம் முழுவதுமே இப்பிரச்சினையைச் சந்தித்திருக்கிறேன். மத்தியத் திரைப்படச் சான்றளிப்புக் குழுவின் சான்றிதழ்களைப் பெற்ற படங்களைக்கூடத் திரையிடவிடாமல் தடுக்க வலதுசாரிக் குழுவினர் முனைந்தனர். இதில் எங்களுக்கு இருந்த ஒரேயோர் அனுகூலம் என்னவென்றால், சரியான அர்த்தத்தில் பார்த்தால், சான்றளிக்கப்பட்ட படங்களைத் திரையிட எங்களுக்கு உள்ள உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால் நடப்பதென்னவோ பெரும்பாலான விவகாரங்களிலும் அவர்கள் பாதுகாப்பு அளிக்கத் தவறுகிறார்கள் என்பதுதான். இந்த அச்சுறுத்தல் இப்போது அதிகரித்துள்ளது. பல திரைப்பட இயக்குனர்களும் இந்த வலதுசாரி அடியாட்களின் இடைஞ்சல்களைச் சந்தித்து வருகிறார்கள். என்னுடைய 23 வருடப் பழமையான 'ராமனின் பெயரால்' படம் கடந்த வருடத்தில் இரண்டு முறை தாக்கப்பட்டுள்ளது - பெங்களூரில் ஒரு முறையும் அயோத்தியில் ஒரு முறையும். 'தோழர் பீம் வாழ்க' படத்தைப் புனேவில் திரையிட்ட பிறகு, மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளியான நரேந்திர தபோல்கர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத் திரையரங்கில் அதே படத்தைத் திரையிட்டோம். திரையிடலுக்கும் கலந்துரையாடலுக்கும் பிறகு, அந்தப் படத்தில் இடம்பெற்ற தலித்-பாட்டாளி வர்க்கக் கலாசாரக் குழுவான கபீர் கலா மன்ச்சைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு முதன்முறையாக அந்த மேடையில் ஏறிப் பாடினார்கள். நக்ஸல் ஆதரவாளர்கள் என்று போலீசாரால் முத்திரை குத்தப்பட்டுத் தலைமறைவானவர்கள் இவர்கள். நாங்கள் கபீர் கலா மன்ச் பாதுகாப்புக் குழுவை உருவாக்கியபோது தலைமறைவிலிருந்து வெளிப்பட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் தீர்மானித்தார்கள். சிலருக்குப் பிணைய விடுதலை கிடைத்தது. ஆனால் இன்னும் மூன்று பேர் சிறையில் இருக்கிறார்கள். இந்தத் திரையிடல், பாடலெல்லாம் முடிந்து நாங்கள் கலைந்து செல்லும்போது, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று திரைப்படக் கல்லூரி மாணவர்களைத் தாக்கி ஐந்து பேரைக் காயப்படுத்தினார்கள். போலீசார் தலையிடவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் VIBGYOR திரைப்பட விழாவின்போது, காஷ்மீரப் போராளிகளோடு இந்திய அரசையும் சேர்த்தே விமர்சித்து ஆவணப்படம் எடுத்த பிலால் ஜன், விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டார். நல்லவேளையாக, திரைப்பட விழாக்குழுவினரும் பார்வையாளர்களும் உறுதியோடு நின்றதால் அந்தப் படம் திரையிடப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கும்பல் மீண்டும் தாக்குதல் நடத்தி மக்களைக் காயப்படுத்தியது. போலீஸாரோ தாக்கியவர்களை விட்டுவிட்டு தாக்கப்பட்டவர்களைக் கைது செய்தனர்.

ஆனால் இந்த மூன்று வகையான தணிக்கைகளையும்விட நான் மிக அதிகமாய் அஞ்சுவது நான்காம் வகைக்குத்தான். அது சுயத் தணிக்கை. திருவாளர் 56 அங்குலம் மேடையேறி வீம்புநடை காட்டும்போது ஒட்டுமொத்த நாடும் மலைப்பிலும் அச்சத்திலும் பேச்சிழந்து நிற்கிறது. இந்த நேரத்தில் ஒரு விஷயத்துக்கு மட்டும் நாம் பலியாகிவிடக்கூடாது - பேசாமையின் மூலம் உடன்படுவது.