மார்த்தாண்ட வர்மா (1933) - மௌனப்படம்.

மார்த்தாண்ட வர்மா (1933) திரைப்படம் பற்றி அண்மையில் வெளியான, மலையாள திரைப்படத்தின் தந்தை என்று அழைக்கப்படும், ஜே.சி. டேனியல் பற்றிய "செல்லுலாயிட்" திரைப்படத்தில் கூட ஒரு குறிப்பு வந்திருக்கும். மலையாளத்தின் முதல் திரைப்படம், விகதகுமாரனா, அல்லது மார்த்தாண்ட வர்மணா என்கிற குழப்பமும் ஏற்பட்டு, இறுதியாக விகதகுமாரன் என்றுதான் ஆதாரங்களோடு நிரூபித்திருப்பார்கள். ஆனால் மார்த்தாண்ட வர்மன் மலையாளப் படமல்ல என்கிற வாதமும் இன்னமும் தமிழ்நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிறது. காரணம் இந்த திரைப்படம், நாகர்கோவில் ஜில்லாவில், திருவிதாங்கூர் சமாஸ்தானம் பற்றி எடுக்கப்பட்ட படமாகவே இருக்கிறது. தவிர இதில் தமிழர்கள் வாழ்வியல், கலாசாரக் கூறுகளும் படம் முழுவது கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் தியடோர் பாஸ்கரன் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் இது மலையாளப் படம்தான் என்பதை உறுதிப் படுத்துகிறார்கள். படத்தின் இடையில், மலையாளம் மற்றும் ஆங்கிலம் இரண்டு, மொழியிலும் கதை சொல்லும் சில கார்டுகள் (Card) திரையில் காண்பிக்கப்படுகிறது.
இதையெல்லாம் தாண்டி மார்த்தாண்ட வர்மா கி. பி. 1729-1758 காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமாஸ்தானத்தை நவீனமயமாக்கியவர், என்று முதலிலேயே கார்ட் போட்டு கதை சொல்லிவிடுகிறார்கள். மேலும் சி. வி. இராமன் பிள்ளையின் மார்த்தாண்ட வர்மா என்கிற நாவலை அடிப்படியாக கொண்ட திரைப்படம் இது. பி.வி. ராவ் இந்த மௌனப் படத்தை இயக்கியுள்ளார். அரசர் இராம வர்மரின் இறுதிக்காலம் முதல் மார்த்தாண்ட வர்மரின் பதவியேற்றம் வரையான வேணாட்டின் (திருவிதாங்கூர்) வரலாற்று விவரணம் கொண்ட ஒரு புராதண கற்பனைக் கதையாகவே இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது.
சிம்மாசன வாரிசின் இடத்திலிருந்து அப்புறப்படுத்த பத்மநாபன் தம்பி, எட்டு வீட்டில் பிள்ளைமார் போன்றவர்கள் போடும் திட்டங்களிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்யும் அனந்த பத்மநாபன், மாங்கோயிக்கல் குறுப்பு மற்றும் சுபத்திரா என்பவர்களைச் சுற்றிதான் இந்தக் கதை அமைந்துள்ளது. படத்தின் ஆரம்பக் காட்சியில், அரசனின் படைபலம், மக்களுக்கு அரசன் மீது இருக்கும் மதிப்பு, மரியாதை எல்லாம், துண்டு துண்டு படங்கள் மூலம் காண்பிக்கப்படுகிறது. மிக குறிப்பாக, இத்தனை பெரிய கூட்டத்தை 1933 காலக்கட்டத்திலேயே திரையில் கொண்டு வருவது என்பது அத்தனை சாத்தியமல்ல. தவிர இந்த மௌனப் படம் பெரும்பாலும் வெளிப்புறங்களிலேயே படம்பிடிக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள் தோன்றிவிட்ட காலக்கட்டத்திலும், பெரும்பாலும் ஸ்டுடியோக்களில் செட் போட்டு படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலைதான் 70 களின் பிற்பகுதி வரை தமிழ்நாட்டில் தொடர்ந்தது. அதற்கு காரணமாக பல்வேறு வசதிக் குறைபாடுகள் சொல்லப்பட்டது. மின்சாரம் இல்லாத இடங்களில் ஜெனரேட்டர் கொண்டு செல்லும் வசதி, ஒளியமைப்பில் உள்ள குறைபாடுகள், படத்தின் பட்ஜெட் குறைப்பு போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், 1933 ஆம் வருடத்தில் இந்த படத்தை பெரும்பாலும் வெளிப்புறங்களில் படமாக்கி இருப்பது ஆச்சர்யமான ஒன்றாகவே இருக்கிறது.
மலைகள், நீரோடைகள், குகைகள் என படத்தின் வெளிப்புற தளங்களும் சவால் நிறைந்தவையாகவே இருக்கிறது. குறிப்பாக குகைகளில் எப்படி ஒளியைப் பாய்ச்சி இவர்கள் படம்பிடித்திருக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் டார்ச் லைட் மாதிரியான ஒரு உபரகரனத்தில் இருந்து ஒளி குகைக்குள் ஊடுருவுவதை திரையில் காண முடிகிறது. இந்த படத்தில் ஒரு இஸ்லாமியப் பெண்மணி ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்துக் கொண்டு வீணை வாசித்துக் கொண்டிருப்பார். இந்த காட்சி கட்டமைக்கப்பட்டிருக்கும் நிச்சயம் சினிமாவின் அத்தனை சாத்தியக் கூறுகளையும் அந்த காலக்கட்டத்தில் தொட்டுவிட துடித்திருக்கிறார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது. லோ அங்கிள் ஷாட், தொடங்கி, அந்த பேன் வீணை வாசிப்பதை அத்தனை நேர்த்தியாக படம்பிடித்திருப்பார்கள். 2013 இலும், கதாநாயகியின் இதழில் கதாநாயகன் முத்தமிடும் காட்சி வந்தால், பலரும் கைத்தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால் 1933 இல் எடுக்கப்பட்ட இந்த மௌனப்படத்தில் உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.
ஒலி இல்லாத காலக்கட்டத்தில் முழுக்க முழுக்க காட்சிப் படிமங்களை வைத்தே இவர்கள் கதைசொல்ல நினைத்திருக்கிறார்கள். அதுவும், ஒரு வீடு, தோட்டம் என்றில்லாமல், காடுகள், மலைகள், நீரோடைகள் என்று முழுக்க முழுக்க வெளிப்புறங்களில் நிறைய மக்களை பயன்படுத்தி படம்பிடித்திருக்கிறார்கள். இந்த மாதிரி படங்களில் நடிப்பு பற்றியெல்லாம் பெரிதாக விமர்சிக்க கூடாது என்றாலும் இவர்கள் நடிப்பில் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. படை அணிவகுத்து நிற்கும்போது மட்டுமே ஒரே ஒரு நபர் கேமிராவை பார்த்து முறைத்தபடியே நிற்பது அப்பட்டமாக தெரிந்தாலும், பெரும்பாலான கதாபாத்திரங்கள், ஏதோ இயல்பாக வாழ்வது போல நடித்து அதகளப்படுத்தியிருக்கிரார்கள்.
அன்மையில் புனே சென்றிருந்தபோது, புனே திரைப்படக் காப்பகத்தில் மலையாளத்தை சேர்ந்த ஒரு மௌனப்படம் இருப்பதை கேள்விப்பட்டு அதை பார்க்க அங்கு சென்று அனுமதி கேட்டேன். முதல் நாள் மறுத்தார்கள். இரண்டாவது நாள் ஒரு விண்ணப்பம் கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள். பூர்த்தி செய்து கொடுத்த பின்னரும், ஏதோ சில காரணங்கள் சொல்லி நாளைக்கு வாங்க என்றார்கள். ஆனால் மறுநாள் எனக்கு வேறு வேலை இருந்தது, தவிர அடுத்த நாள் சனிக்கிழமை, அவர்களுக்கு விடுமுறை. அடுத்த நாள் ஞாயிறு நான் சென்னை திரும்ப வேண்டும். எனவே அன்று பார்த்துவிட வேண்டும் என்று உறுதியாக அடம்பிடித்தேன். பின்னர் திரைப்படக் காப்பக அதிகாரி ஒருவர் வந்தார். என்னைப் பற்றி விசாரித்தார். ஹிந்தியில் சில நிமிடங்கள் இன்னொரு நபரிடம் பேசினார். பிறகு என்னிடம் ஆங்கிலத்தில் பேசினார். அவர்களுக்கு உங்களைப் பற்றி தெரியவில்லை. தவிர, இங்கே ஒவ்வொரு படங்களையும் பாதுகாத்து வைப்பதில் நிறைய அக்கறையோடு செயல்படுகிறார்கள். எனவே கொஞ்சம் கெடுபிடிகள் இருக்கவே செய்யும். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள், நீங்கள் அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லி, எனக்காக ஒரு தனி அறையில் அந்த படத்தை திரையிட ஏற்பாடு செய்தார்.
அந்த படத்தை பார்த்துவிட்டு, புனேவின் வீதிகளில் ஏதோ சாதித்துவிட்டது போல் திமிறிக் கொண்டு அலைந்தேன். மராட்டியர்களின் பாரம்பரிய உணவை விரும்பி சாப்பிட்டுக் கொண்டே அலைந்துக் கொண்டிருந்தேன். அன்று முழுவதும், எதையோ சாதித்த ஒரு உணர்வில்தான் வாழ்ந்துக் கொண்டிருந்தேன். சினிமா வெறும் சினிமாவல்ல எனக்கு.
இந்த திரைப்படத்தில் நடித்தவர்கள்:

செய்தேவ் - மார்த்தாண்ட வர்மா
எ.வி.பி மேனன் - அனந்த பத்மநாபன்
வி. நாயிக் - பத்மநாபன் தம்பி
பத்மினி - பாறுக் குட்டி
தேவகி
வி. சி. குட்டி
எச். வி. நாத்
சுந்தரம் ஐயர்

இயக்கம்: பி.வி. ராவ்.

நன்றி:

விக்கிபீடியா.
புனே தேசிய திரைப்படக் காப்பகம்.
தியடோர் பாஸ்கரன.
அரந்தை மணியன்.
ராஜசேகர் (புனே திரைப்படக் கல்லூரி படத்தொகுப்பு துறை தலைவர்).