மீதி வெள்ளித்திரையில்... - தியடோர் பாஸ்கரன்.

வரலாறு என்பது எப்போதும் எல்லாருக்கும் பிடித்தமானதாக இருப்பதில்லை. ஆனால் வரலாறு என்கிற ஒன்றுதான், இன்னமும் இந்த உலகின் ஆக சிறந்த கூறுகளை எல்லாம் நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது. வரலாறு இல்லாதவர்கர்களை இந்த உலகம் தன்னகத்தே இருத்திக் கொள்வதில்லை. ஆனால் நமக்கு எப்போதும் வரலாற்றின் மீது பெரிய பிரயாசை இருந்ததில்லை. அது ஏதோ ஒருவித இறுக்கமான, நிறைய மனனம் செய்யக் கோரும் ஒரு பாடமாகவே வகுப்பறையில் இருந்துவிட்ட காரணத்தால் அதன் மீது ஒருவித வெறுப்பு நிலையே நம்மிடையே இருந்து வருகிறது. ஆனால் வரலாறு ஒரு கடல். அதில் கடைந்தெடுக்க ஏராளமான தேவாமிர்தங்கள் இருக்கிறது. படிக்க படிக்க நம்மை வேறு ஒரு உலகிற்கு இட்டு செல்வது. திமிரையும், கர்வத்தையும் கொடுத்து, அதன் வழியே ஒரு உண்மை நிலையை பதிவு செய்து நம்மை பிரம்மிக்க செய்து, நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற உண்மையை பதிவு செய்யும் கலை வரலாறு.
தமிழ்நாட்டில் பொதுவாக வரலாறு எப்போதும் தகராறாகவே இருந்து வருகிறது. நமக்கு ஆவணபடுத்துதல் என்பதிலும், வரலாற்றை பதிவு செய்து வைப்பதிலும், சுணக்கம் இருக்கும் அதே வேளையில், போதிய அறிவும் இல்லாமல் இருந்து வருகிறது. அல்லது அதன் அருமையோ, அதன் தேவையோ நமது பல சந்ததிகளுக்கு தெரியாமலேயே இருந்து வருகிறது. வரலாற்றின் மிக முக்கியமான தேவை, உண்மை. நமக்கு சொல்லப்படும் பல வரலாறு பொய் கலந்து, கொஞ்சம் திரித்துக் கூறப்பட்டு வருகிறது. உள்ளதை உள்ளபடியே அடுத்த சந்ததிக்கு, நேர்மையாக கடத்த வேண்டும். இப்படி பொய் கலந்து வரலாறு எழுதப்பட்டால் வரலாறு மொத்தமும் பொய் என்றாகிவிடும்.

ஒவ்வொரு தமிழனின் ரத்தத்திலும், நாடி நரம்பிலும் பதிந்துப் போன திரைப்படங்கள் சார்ந்து, இங்கே வெளிவந்திருக்கும் வரலாற்று நூல்கள் மிக குறைவே. இன்னும் சொல்லப்போனால், தமிழ் சினிமாவின் வரலாறு பல இடங்களில் காலியாகவே இருக்கிறது. அந்த காலியிடத்தை நிரப்பும் வேலையை தன்னுடைய வாழ்நாள் பணியாகவே தொடர்ந்து செய்து வருபவர், தியடோர் பாஸ்கரன். வரலாற்றை, அழகியலில் தோய்த்து எழுதுவதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. நாளைய சந்ததி தமிழ் திரைப்பட வரலாற்றை தெரிந்துக் கொள்ளுமேயானால், அதில் பெரும்பங்கு தியடோர் பாஸ்கரனுக்கு உண்டு. குறிப்பாக தியடோர் பாஸ்கரன், சினிமா வெறும் பொழுதுபோக்கு ஊடகமல்ல என்பதை தன்னுடைய எல்லாக் கட்டுரைகளிலும் ஆழமாக பதிவு செய்து வருபவர். தமிழ்நாட்டில் சினிமாவின் மீது இருக்கும் மோகத்தை, இங்கே ஏற்பட வேண்டிய ரசனை மாற்றத்தை தொடர்ச்சியாக எழுதி வருபவர்.

சினிமாவின் வடிவம், உள்ளடக்கம் என பேசினாலும், இதையெல்லாம் பூர்த்தி செய்யாத படங்களையும், வரலாற்று ரீதியாக நேர்மையாக பதிவு செய்யக்கூடியவர். திராவிட சினிமா குறித்த பல விமர்சனங்கள் இருந்தாலும், திராவிட சினிமா குறித்தும், அதன் தன்மை குறித்தும், வரலாறு குறித்தும் மிக நேர்மையாக பதிவு செய்து வைத்திருப்பவர். வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து வெளிவந்திருக்கும் புத்தகம் "மீதி வெள்ளித்திரையில்"... இந்த புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
திரைப்பட வரலாறு, சினிமா அழகியல், ஆளுமைகள், திரைப்படங்கள் என ஒவ்வொரு பிரிவிலும் சில கட்டுரைகளை தொகுத்துள்ளார். குறிப்பாக எப்போதும் திரைப்பட வரலாறுதான் அவரது நூல்களில் முதலிடம் பெரும். இதிலும் அப்படிதான். ஏன் வரலாற்றுக்கு முதலிடம் அல்லது முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காரணம் எந்த ஒன்றின் வரலாறும் தெரியாமல் நாம் அதன் மீது பெரிய நாட்டம் கொள்ள முடியாது. மிக சிறிய உதாரணத்தை சொல்கிறேன். ஒருவர் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாத சந்தர்பத்தில் அவரிடம் நீங்கள் செலுத்தும் மரியாதை, அன்பு போன்றவையும், அவர் இன்னார், இன்ன இன்ன வேலைகளை செய்திருக்கிறார், இத்தனை சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் என்கிற வரலாறு தெரியும்போது அவரிடம் நீங்கள் காட்டும் மரியாதையும், அன்பும் வேறுவிதமாகத்தான் இருக்கும். அதுதான் வரலாறு.

அதனால்தான் தியடோர் பாஸ்கரன் தன்னுடைய நூல்களில் வரலாற்றை முதலில் வைக்கிறார். வரலாற்றின் வழியே நீங்கள் பயணம் செய்யும்போதுதான், சினிமாவின் உன்னதம் உங்களுக்கு புலப்படும். அது ஏதோ வெறும் பொழுதுபோக்கு சாதனம் என்கிற பொதுப்புத்தி சிந்தனையில் இருந்து, சினிமா எப்பேர்பட்ட ஆளுமை கொண்ட ஒரு ஊடகம் என்பதை தன்னுடைய வரலாற்று சிந்தனை கொண்ட எழுத்துகளின் வழியே பதிவு செய்கிறார்.

குறிப்பாக போரும் தமிழ் திரையும் என்கிற அவரது கட்டுரையில், காங்கிரஸ் கட்சி எப்படி சினிமாவை ஆதரித்தது, என்பதையும், காங்கிரஸ் கட்சிதான், சினிமாவையும், அரசியலையும் முதலில் இணைத்தது என்பதையும் பதிவு செய்கிறார். இந்தியாவிலேயே சினிமாவில் இருந்து முதன் முதலில் காங்கிரஸ் சார்பில், 1958 இல், கே.பி. சுந்தராம்பாள்தான் சட்டசபைக்குள் நுழைகிறார். இங்கேதான் தமிழ்நாட்டில், சினிமாவும், அரசியலும் இரண்டறக் கலக்கும் கொடுமை தொடங்குகிறது. ஆனால் இன்றும் நாம் நினைத்துக் கொண்டிருப்பது, திராவிடக் கட்சிகள்தான், சினிமாவையும், அரசியலையும் கலந்து நாசமாக்கியது என்று. தவிர, தியடோர் பாஸ்கரனின் கட்டுரைகள் வெறுமனே செய்துத் துளிகளாக மட்டுமல்லாமல், பல திரைப்படங்களையும், அதன் வரலாற்று முக்கியத் துவத்தையும், அழகியலையும், வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் இந்த நூல் முழுக்க விவரித்துக் கொண்டே செல்கிறது. பர்மா ராணி, மர்மயோகி, தியாகபூமி, கௌசல்யா, துருவன், மேனகா, டம்பாச்சாரி, மனிதன், விடுதலை, சாமிக்கண்ணுவின் பல படங்கள், என தியடோர் பாஸ்கரன் பட்டியலிடும் எல்லா படங்களும், வரலாற்று ரீதியில் ஏதோ ஒரு முக்கியத்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த எல்லாப் படங்களையும் தேடித் தேடி பார்க்க வேண்டும் என்று வாசகனின் மனதில் ஒரு எழுச்சியை உண்டுபண்ணுகிறது இந்த கட்டுரைகள். தியடோர் பாஸ்கரனின் வசீகரமான வரலாற்றுப் பார்வை நம்மை மேலும் மேலும் ஆழமான வரலாற்றை தேடி அலைய வைக்கிறது. வரலாற்றை எழுதுவதன் மூலம், வாசகனையும் வரலாறு குறித்து ஒரு தேடலை மேற்கொள்ள செய்வதே அந்த எழுத்தின் ஆகப் பெரிய வெற்றி என்று நினைக்கிறேன்.
திருத்தப்பட வேண்டிய பதிவுகள் என்கிற கட்டுரையில், தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிழையான விபரங்களை திருத்தி, ஆய்வுப் பூர்வமாக அதை மறு கட்டமைப்பு செய்கிறார். தமிழின் முதல் சமூகப் படம், முதன் முதலில் இரட்டை வேடத்தில் கதாநாயகனை கொண்டு வெளிவந்தப் படம், என்கிற தகவல்களின் வழியே, மௌனப்படக் காலத்திலேயே வெளிவந்த சமூகப் படம் பற்றிய குறிப்பையும் பதிவு செய்திருக்கிறார்.

இடைவேளை எனும் குறுக்கீடு என்கிற கட்டுரையில், உலகில் வேறு எந்த சினிமாவிலும் இல்லாத, இந்த இடைவேளை எனும் சமாச்சாரம் எப்படி வந்தது என்பதை ஆய்வுப் பூர்வமாக விளக்கி, அதை கடுமையாக சாடவும் செய்கிறார். சினிமா என்கிற கலையம்சத்திற்கு எதிரான விஷயம் இந்த இடைவேளை என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு பார்வையாளனுக்கு காட்சிப் படிமங்கள் மூலம் ஏற்படவேண்டிய பரவச நிலையை இந்த இடைவேளை என்கிற அம்சம் கெடுப்பது பற்றி பெரிதும் கவலைக் கொள்கிறார்.

தொடர்ந்து, எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் ஆற்றிய பங்கு, நாவல் அல்லது சிறுகதையிலிருந்து சினிமாவாக வெளிவந்த படைப்புகள், தமிழ் மக்களின் சினிமா பற்றிய ரசனை போன்றவற்றை மிக ஆழமாக, பல்வேறு உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார்.

ஆளுமைகள் எனும் பிரிவில் இருக்கும் எல்லாக் கட்டுரைகளும், தியடோர் பாசகரனை இன்னொரு ஆளுமையாக சித்தரிக்கும் விதத்தில் இருக்கிறது. குறிப்பாக ராம்நாத், சாமிக்கண்ணு வின்சென்ட் போன்ற ஆளுமைகளைப் பற்றியும், அவர்கள் இயக்கிய படங்களின் முக்கியத்துவம் பற்றியும் சிலாகித்து பேசிவிட்டு, இறுதியாக அதில் பெரும்பாலான படங்கள் இன்று நம்மிடையே இல்லை என்று சொல்லும்போது கண்கள் தானாகவே பனிக்க ஆரம்பிக்கிறது.

வெவ்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை ஒன்றாக தொகுத்து ஒரு புத்தகமாக கொண்டு வருவது வாசகனுக்கு மகிழ்ச்சியான செய்தி. காரணம், தொகுப்பாக படிக்கும்போதும், ஒரு கட்டுரைக்கும் இன்னொரு கட்டுரைக்கும் இருக்கும் தொடர்பு, பிழைகள் போன்றவற்றை மிக எளிதாக வாசகன் கண்டுணர முடியும். சில முக்கியமான தகவல்கள் எல்லா கட்டுரைகளிலும் தொடர்ந்து பதிவு செய்யப்படும்போது, அதை வாசகன் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. படிப்பதை சுகமாக்கி, வரலாற்றை தெளிவாக்கும் தியடோர் பாஸ்கரனின் இந்த கட்டுரைகளில் என்னால் ஒரே ஒரு பிழையை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. ஒரு கட்டுரையில், நண்பா...நண்பா... எனும் ஜெயபாரதியின் திரைப்படம், ரவீந்திரனின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று பதிவு செய்திருப்பார் (பக்கம்: 60), இன்னொரு கட்டுரையில், இதே படம் து. ராமமூர்த்தியின் கதை என்று பதிவு செய்திருப்பார் (பக்கம்: 133). ஆனால் இது பிழையே அல்ல, இந்த படத்தின் மூலக்கதை ஜெயபாரதியின் சகோதரர் ரவீந்திரன் ராமமூர்த்தியினுடையது . (ரவீந்திரன், ரமாமூர்த்தி இரண்டும் ஒருவரின் பெயரே).

நண்பா...நண்பா.. படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=5v2mEwngMhs