முள்ளும் மலரும்

சிறு வயது முதல் இந்தப் படத்தின் தலைப்பை கேட்கும்போதெல்லாம் ஒரு சந்தேகம் மேலெழுந்தபடியே இருந்தது. இது முள் மற்றும் மலர் என்று குறிக்கிறதா அல்லது முள் கூட மலரும் என்று குறிக்கிறதா என்று. இப்போது வரை இந்த சந்தேகம் தீரவில்லை என்றாலும் படத்தை தொடர்ந்து பார்த்ததில் இரண்டு அர்த்தங்களையும் இது உள்ளடக்கியுள்ளதாகவே தோன்றுகிறது.
ஒரு திரைப்படம் என்பது அந்த காலத்தின் தன்மையோடும் அப்போது நிறைந்திருந்த சமூக கலைத்தன்மையோடும் இணைத்துப்பார்க்கப்பட வேண்டியது. அகிரா குரசேவாவின் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல உத்திகளை இப்போது பார்த்தால் ‘என்னடா இது, எத்தன படத்துல பாத்துருப்போம் இத’ என்று தான் தோன்றும். ஆனால் அக்காலகட்டத்தையும், அப்போதிருந்த திரைமொழிகளையும் கணக்கிலெடுத்துப் பார்த்தால்தான் தெரியும், அந்த உத்திகள் எல்லாம் முதன்முதல் குரசேவாவின் படங்களில்தான் பயன்படுத்தப்பட்டது என்பதும் அதற்கு முன்பு அப்போதைய சினிமா பிரிலிமினரி நிலையில்தான் இருந்தது என்பதும். 80 களில் இறுதிகளில் பிறந்த அத்தனை பேருக்கும் முந்தைய தமிழ் சினிமாக்களை அணுகும்போது இதே பிரச்சினைதான் வரும்.

தற்போதைய படங்களில் பயன்படுத்தப்படும் அத்தனை திரை உத்திகளிலும் புரண்டு விட்டு, பழைய படங்களைப் பார்க்கையில், பார்த்த உத்திதானே என்றுதான் தோன்றும். அது இயல்புதான். ஆனால் முன்னே சொன்னதுபோல் காலத்தையும் கணக்கிலெடுத்துப் பார்ப்பதுதான் அப்படங்களை மதிப்பிடுவதற்கான சிறந்த முறையாக இருக்கும்.

முள்ளும் மலரும் திரைப்படத்தை அணுகும்போதும் எனக்கு அதே பிரச்சினைதான் இருந்தது. காலத்தை கணக்கிலெடுத்தாலும், தற்காலத்திய திரை நுணுக்கங்கள் சப் கான்ஷியஸ் ஆக உள்ளுக்குள்ளேயே உறங்குவதால் எல்லா படங்களைக் காணும்போதும் அது விழித்துக்கொள்கிறது. இந்த கட்டுரையில் உங்களுக்கு முரணாக படும் சிலபல விஷயங்கள் அந்த Time Gap பிரச்சினையினால்தான் இருக்கும்.

நம் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை ஆளுமைத்தன்மைதான். ஒரு திரைப்படத்தையோ அல்லது வேறு ஒரு படைப்பையோ அணுகும்போது அந்த படைப்பாளியின் ஆளுமை குறித்த அத்தனை பெருமதிப்புகளும் நம் கண்முன் வந்து நம்மை ஆட்கொண்டுவிடும். அந்த அடிப்படையில் ஒரு படத்தை பார்த்தால் அது நன்றாக இருந்துதான் ஆக வேண்டும் என்ற ஒரு புகுத்தல் உணர்வோடே ஒரு படத்தை பார்க்க முடியும். அப்போது படம் நன்றாகத்தான் இருக்கும். அப்படத்தில் காணப்படும் சில பல முரண்களையும் கூட, ‘இது அவரு படம். அவரு எவ்ளோ பெரிய ஆளு. அவரு தப்பாலாம் செஞ்சுருக்க மாட்டாரு’ என்று மனமே சமாதானம் கூறிக்கொள்ளும். சமூகத்தில் ஒரு படம் அடைந்துவிட்ட நிலையையும் அப்படைப்பாளிக்கு இருக்கும் பெரிய அங்கீகாரத்தையும் மனத்தில் வைத்துப் பார்த்தால் எந்த ஒரு படைப்பையும் முழுமையாக அணுகவே முடியாது. சொல்லப்போனால் அது ஒரு படைப்பிற்கு செய்யும் துரோகம் என்று நினைக்கிறேன்.
‘சந்தியா ராகம்’ திரைப்படத்தில் ஒரு இடத்தில் ஷாட்கள் தவறான முறையில் எடுக்கப்பட்டிருக்கும். அதை என் நண்பனிடம் சொன்னபோது, ‘டேய் பாலுமகேந்திரா படம்டா. ஒரு காரணத்தோட தான் வச்சுருப்பாரு’ என்று அவனே அதற்கு ஒரு ஜஸ்டிஃபிக்கேஷனை கொடுத்துவிட்டான். இதுதான் இங்கே பிரச்சினை. ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது, அதன் பெரும்பெயரையும் படைப்பாளியின் புகழையும் கண்ணில் அணிந்துகொண்டு பார்ப்பது. இதற்கு ஒரே வழி, படத்தை எடுத்தது புது இயக்குனர் என்ற நினைப்போடேயே படத்தை பார்த்துவிடுவதுதான் என்று நினைக்கிறேன்.

அந்த அடிப்படையில், பல வருடங்களாக முள்ளும் மலரும் படத்தை பற்றிய அத்தனை புகழ்பாடல்களையும் கேட்டு கேட்டு வந்து விட்டு, திரைப்படத்தை பார்த்தால் அது எனக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தைத்தான் அளித்தது. ஆம். சந்தியா ராகமும் வீடும் என்னை ஆட்கொண்ட அளவிற்கு முள்ளும் மலரும் என்னை ஆட்கொள்ளவில்லை. குறிக்க - அப்படங்கள் அளவிற்கு இது என்னை கவரவில்லை என்றுதான் சொல்கிறேனே தவிர, இது என்னை கவரவேயில்லை என்று சொல்லவில்லை. ஒரு வேளை, முன்னே கேட்ட அத்தனை நன்மதிப்பு விமர்சனங்கள் கிளப்பிய அளவு கடந்து எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். நிச்சயம் இது ஒரு நல்ல படம்தான். ஆனால் அதில் பல விஷயங்கள் எனக்கு உறுத்துகின்றன.

முதல் விஷயம் சிலபல இடங்களில் தலைதூக்கும் செயற்கைத் தன்மையும் உடனடியாக நடக்கப்போகும் ஒரு காட்சியின் கனத்தை அதிகரிக்க புகுத்தப்பட்ட காட்சிளும். இதற்கு சரியான உதாரணமாக ஒரு காட்சியை சொல்லலாம். ஒரு காட்சியில் ஷோபா ரஜினியிடம் சுடுதண்ணியை இறக்கி வைக்க சொல்வார். அடுத்த காட்சியில் ரஜினி ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு வேலைக்கு செல்வார். அடுத்த காட்சியில் அவருக்கு வேலை போய்விடும். தொடர்ந்து கை போய்விடும். அதற்கடுத்து வரும் காட்சிகளில் மீண்டும் யதேச்சையாக ஷோபா தண்ணியை இறக்கி வைக்கச் சொல்ல ரஜினி செய்வதறியாது நிற்பார். இருவரும் கண் கலங்குவர். இது நிச்சயம் மிகச்சிறந்த ஒரு காட்சிதான். நல்ல கனெக்சன் தான். ஆனால் இங்கே நான் குறிப்பிட விரும்புவது அந்த முதல் காட்சி வைக்கப்பட்ட இடம். படத்தில் முன் காட்சிகளில் யதேச்சையாக இந்த காட்சி இடம்பெற்று பின் இப்படியொரு ரிப்பீட் காட்சி வந்திருந்தால் அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் அடுத்தடுத்து வரும் பட்சத்தில் அதில் ஒரு செயற்கைத்தன்மை மேலெழுவதை தடுக்க முடியவில்லை.

இரண்டாவது எனக்கு உறுத்தலாக பட்ட விஷயம், ரஜினியின் மனைவியாக வருபவரின் பாத்திரப் படைப்பு. கொஞ்சம் குழப்பமாகவே இருக்கிறது. முதல்பாதி முழுக்க ஒரு வகையான தான்தோன்றியாகவும், அந்தளவிற்கு மனமுதிர்ச்சி இருப்பதாகவும் அமைக்கப்பட்ட அந்த கதாப்பாத்திரம், பின்பாதியில் சட்டென்று மிக முதிர்ச்சியான ஒரு அவதாரம் எடுப்பது நிச்சயம் இயல்பாக இல்லை. கதையில் போக்கிற்கும் நடக்கும் சம்பவங்களுக்கும் வலு சேர்க்க புகுத்தப்பட்ட விஷயமாகத்தான் பட்டது.

இதுபோன்ற சின்ன சின்ன முரண்களைத் தாண்டி இப்படத்தில் மிகவும் கவர்ந்து ஒரு விஷயம் திரைமொழி. அக்கால படங்களில், அவன் நல்லவன், கோபக்காரன் என்று பலபேர் வாயாலேயே நாயகனை நம்முன் கட்டமைப்பர். ஆனால் இங்கே ரஜினியின் கதாப்பாத்திரம் முழுக்க முழுக்க ஒரு காட்சிமொழியாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. டாக்சி லைட்டை உடைப்பது, முதியவருக்கு உதவுவது என்று அனைத்தும் காட்சிகளாகவே கட்டமைக்கப்படுகிறது. சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து அக்காலத்தில் வரத்துவங்கிய படங்களில் முதன்மையான படமாக இருப்பதினால்தான் இத்தனை பாராட்டுக்களுக்கு உரியதாகிறது இப்படம் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த இரண்டு காட்சிகளும் கூட திரைக்கதையோடு பின்னப்படாமல் பேக் டூ பேக் வருவது சிறிய உறுத்தல்தான். ரஜினி கதாப்பாத்திரத்தின் பன்முகத்தன்மை சரத்பாபுவிற்கு தெரியவர இக்காட்சிகள் பயன்பட்டாலும் ஒரு திரைக்கதையோட்டத்தோடு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று பட்டது.


ரஜினியை பற்றி அலுவலக கிளார்க் சரத்பாபுவிடம் தவறாகப் போட்டுக்கொடுக்கிறார் என்பதை அவர் குரலோடே உண்மையான குணாதியசத்தை குறிக்கும் காட்சிகள் மூலம் காட்டியதும் சிறப்பான காட்சி மொழிதான். இவை எல்லாவற்றையும் விட படத்தின் ஆகப்பெரிய பலமாக பட்டது, ரஜினி மற்றும் சரத்பாபு இருவருக்கும் இடையேயான ஒருவகை ஊடல் உணர்வுகள் தான். இருவருமே நல்லவர்கள் தான். சூழ்நிலைதான் சதி செய்கிறது. சரத்பாபுவை ரஜினிக்கு பிடிக்காமலே போகிறது. க்ளைமாக்சில் தன் தங்கையையே கூட சரத்பாபுவிற்கு கட்டி வைக்கிறார். ஆனாலும் ‘உங்கள எனக்கு பிடிக்கல சார்’ என்றே கூறுகிறார். க்ளைமாக்ஸ் வந்துவிட்டது என்பதற்காக கதாப்பாத்திரங்கள் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை. இந்நிலைதான் திரையில் காணும் கதாப்பாத்திரங்களை யதார்த்தத்திற்கு மிக மிக அருகில் அழைத்து வருவது.

சரத்பாபுவை ரஜினிக்கு பிடிக்காததால் வேறு மாப்பிள்ளை ஏற்பாடு செய்கிறார். அதை அவர் மனைவியே எதிர்க்கிறார். தங்கையை தன் கூட வருமாறு அழைக்கிறார். இல்லாவிட்டால் இறந்துவிடுவதாகவும் கூறுகிறார். இது எல்லாம் சரிதான். ஆனால் ரஜினிக்கு சரத்பாபுவைத்தானே பிடிக்காது. அதற்கும் சேர்த்து தன் தங்கையை பிடிக்குமே. அவரை தனக்குப் பிடிக்கிறது என்று தங்கை ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அங்கேயே இந்த முடிச்சு தீர்ந்திருக்குமே. அண்ணனுக்கு பிடிக்காததால் பயந்து தங்கை கூறாமல் இருக்கிறாள். சரி. ரஜினியின் மனைவியாவது இந்த உண்மையை ரஜினியிடம் சொல்லலாமே. ஒரு கதாப்பாத்திரம் இயல்பாக உடனே செய்வதுதானே இயல்பான திரைக்கதை அமைப்பு. அப்படி பார்த்தால் மனைவி கதாப்பாத்திரம் கோபத்தோடாவது இந்த உண்மையை ரஜினியிடம் சொல்லித்தான் இருக்க வேண்டும். அதுதான் இயல்பு. மாறாக இறுதியில் அத்தனை பேரின் முன்னும் இந்த உண்மை தெரியவேண்டும் என்று அப்பாத்திரம் எப்படி நினைக்க முடியும்? திரைக்கதைக்காக இச்சூழ்நிலை புகுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அதற்கான ஒரு conflict ஐ யும் ஏற்படுத்தி திரைக்கதையை முன்னெடுத்திருக்க வேண்டுமல்லவா?

அக்கால படங்களைப் போல் இதில் தேவையற்ற நாயக சண்டைக்காட்சிகள் எதுவும் அறவே இல்லை. ஆனால் பாடல்கள் வெவ்வேறு வடிவில் அப்படியே இடம்பெற்றுத்தான் இருக்கின்றன.

ஒரு உணர்வுப் போராட்டமாகவே படம் அத்தனை கட்டங்களிலும் நகர்ந்து செல்கிறது. கோபம், பாசம், இயலாமை, காதல் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும் சண்டை, கதறி அழுவது என்பதாக வெளிப்புற வெளிப்பாடாக இல்லாமல் அந்தந்த உணர்வுகளைப் போல தன்மையாகவே வெளிப்பட்டிருக்கிறது. எந்த ஒரு சிறந்த திரைப்படத்திற்கும் சூழ்நிலைகள் தான் வில்லன்களாக இருக்க முடியும். இதிலும் அப்படியே.

இவை எல்லாவற்றையும் விட இப்படத்தில் என்னை முழுதும் கட்டிப்போட்ட ஒரு விஷயம், ரஜினிகாந்த் என்ற ‘நடிகன்’. அத்தனை அற்புதமான, இயல்பான ஆகச்சிறந்த நடிப்பு. ஆறிலிருந்து அறுபதுவரை படத்திலும் ரஜினியின் யதார்த்த நடிப்பு வெளிப்பட்டாலும் நாடகத்தனமான காட்சி அமைப்புகள் அதைக் கொஞ்சம் பதம் பார்க்கும். ஆனால் திரைமொழியோடு எடுக்கப்பட்ட இந்த படம்தான் ரஜினியின் மிகச்சிறந்த நடிப்பிற்கு உதாரணம் என்று சொல்வேன். ரஜினியிடம் இயல்பாகவே ஒரு ஆளுமை இருக்கும். சிரிப்பு, கோபம், அழுகை, பாசம், இயலாமை என அத்தனை உணர்வுகளும் ரஜினியின் முழு ஆளுமையோடு வெளிப்பட்டது எனக்குத் தெரிந்து இந்த படத்தில்தான். ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் இயல்பான ஆளுமையே மேலோங்கி நிற்கிறது.

நண்பர்களிடத்தில் சிரிப்பதில், தங்கையிடம் பாசத்தை கொட்டுவதில், ஊரில் ரவுடித்தனம் செய்வதில், சரத்பாபுவிடம் கோபத்தை காட்ட முடியாமல் பொறுமுவதில், ஒரு கை இழந்தாலும் தன்மானம் இழக்காமல் அதே சமயம் இயலாமையும் போட்டு அமிழ்த்த இரண்டும் கலந்த ஒரு உணர்வில் என அத்தனை இடங்களிலும் ரஜினி என்ற நடிகன் மிளிர்கிறான். ஒரே ஒரு உதாரணம், ரஜினிக்கு வேலை போய்விட்டது என்று சரத்பாபு சொல்லும் இடத்தில், கண்கலங்கி, சுயமரியாதையை விடாமல், ‘ரெண்டு கையும் காலும் இல்லனா கூட இந்த காளி பொழைச்சுப்பான் சார்’ என்று சொல்லிவிட்டு பின் யதார்த்தத்தையும் உணர்ந்து சரத்பாபுவின் முகத்தை பார்க்காமல் மேலே பார்த்து கண்கலங்கி பின் ‘தாங்க் யூ சார்’ என்று விடைபெறும் அந்த காட்சி ரஜினி என்னும் அத்தனை அற்புதமான நடிகனுக்கான ஒரு சோற்றுப் பதம். கைத்தட்டல்களிலும், பாலாபிஷேகங்களிலும் தலைவா பட்டங்களிலும் ஒரு அற்புதமான நடிகனை இழந்துவிட்டோம் என்ற ஆதங்கம் மீண்டும் எழுகிறது.

மீண்டும் சொல்கிறேன் இது நிச்சயம் சிறந்த படம்தான். ரஜினிக்கு கை போனது, சரத்பாபுவிற்கு ரஜினியுடன் ஏற்படும் விதவிதமான அனுபவங்கள், ரஜினியின் பாத்திரப்படைப்பு, அண்ணன் தங்கை பாசம், தங்கை பாத்திரத்தின் குழந்தைத்தனம் கலந்த முதிர்ச்சி என அத்தனையும் வசனங்களாக கட்டமைக்கப்படாமல், காட்சிகளாக மட்டுமே கட்டமைக்கப்பட்டு சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் என்ற ஆழ்ந்த புரிதலோடு, அப்போதைய தமிழ் சினிமாவின் அத்தனை பிம்பங்களையும் உடைத்து, யதார்த்தத்தோடு நெருக்கமாக, மிக முக்கியமாக இலக்கிய பின்புலத்திலிருந்து படமாக்கப்பட்ட இத்திரைப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் பலகாரணங்களுக்காக பேசப்பட்டுக்கொண்டேதான் வரும். இதில் எனக்குத் தோன்றியிருக்கும் அத்தனை முரண்களுக்கு காரணமும் இதைப் போன்ற படங்கள் போட்டுக்கொடுத்த பாதையில் பயணித்ததுதான் என்பதையும் இங்கே அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

ஆக இது முள்ளும் மலரும்தான். அதே நேரம் முள் கூட மலரும்தான்.