முள்ளும் மலரும் - முள்ளில் மலர்ந்த மலர்....

ஒரே வருடத்தில் வெளிவந்த இரண்டு படங்களில் ஒரே மாதிரியான காட்சியில், நடிப்பின் உச்சக்கட்ட பரிமாணத்தை ரஜினிகாந்த் தொட்டிருப்பார். ஒன்று பதினாறு வயதினிலே, இன்னொன்று முள்ளும் மலரும். அந்த காட்சி, முக்கு கடை ஒன்றின் அருகே பெஞ்ச் போடப்பட்டிருக்கும், அதில் சக கூட்டாளிகளுடன் ரஜினிகாந்த் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சி.
பதினாறு வயதினிலே படத்தில் எதிர்மறை கதாநாயகனாகவும், முள்ளும் மலரும் படத்தில் கதையின் நாயகனாகவும் மேற்சொன்ன காட்சியில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். ஆனால் இந்த முக்கு கடை காட்சி இரண்டு படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கட்டமைப்பையே கொண்டுள்ளது. பதினாறு வயதினிலே படத்தில் சப்பாணியாக வரும் கமலை பிடித்து தன் சக கூட்டாளிகளுடன் கிண்டல் செய்யும், ரஜினிகாந்த், முள்ளும் மலரும் படத்தில் கல்யாணத்திற்கு வாத்தியங்கள் வாசிக்க சென்றுக் கொண்டிருக்கும் கோஷ்டியை பிடித்து நையாண்டி செய்துக் கொண்டிருப்பார். நடிப்பில் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும், முள்ளும் மலரும் இன்னொரு பதினாறு வயதினிலே படமோ என்று நம்மை சிந்திக்க வைத்திருக்கும். ஆனால் கதையின் அசுர தேவை, ரஜினிகாந்தை கைவிடவில்லை. சுய கௌரவம் உடைய, தான்தோன்றித் தனமாக சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கும், கதையின் நாயகனுக்கு உறவின் மீதும், அந்த உறவு வைத்திருக்கும் கடமையின் மீதும் அக்கறை இருப்பதை கதை வலுவாக கட்டமைக்கிறது. இறுதியாக, தன் தங்கையை கல்யாணம் செய்துக் கொள்ள, சரத்பாபு, ரஜினியின் சம்மதத்தை கேட்பார். அப்போது நாளை முக்கு கடைக்கு வாங்க.. பதில் சொல்கிறேன் என்பார்.

இந்த படம் கோரும் முரட்டுத் தனத்திற்காக ரஜினிகாந்த் பொருந்தி போயிருந்தாலும், இப்படி நெகிழ்ச்சியான இடங்களில் அவர் பொருந்துவாரா என்கிற கேள்விகள் பலர் மனதில் இருந்திருக்க கூடும். ஒரு நடிகனை எப்படியும் நடிக்க வைக்கும் பக்குவம், கதைக்கும், இயக்குனருக்கும் இருக்கிறது. அந்த இடத்தில் ரஜினியின் உடல்மொழியும், பதற்றமும், ஆவேசமும், சரத்பாபுவை பழிவாங்கத் துடிக்கும் வெகு சாதாரண ஒரு மனிதனின் மன பக்குவத்தையும் ரஜினி அனாயசமாக வெளிப்படுத்தி இருப்பார். இரண்டு படங்கள்.. ஒரே இடம்.. கதாபாத்திரத்தின் வெவ்வேறு பரிமாணங்களை கதையின் நாயகனாக, கதையின் வில்லனாக ரஜினிகாந்த் வெளிபடுத்தி இருக்கும் இடமே அவரது ஸ்டைலையும் தாண்டி இன்னமும் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நிலைத்து இருக்க காரணமாக இருக்கிறது.

1978 ஆம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும் திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றின் ஒரு அற்புத அத்தியாயத்தின் தொடக்கம். இயக்குனராக இது மகேந்திரனுக்கு முதல் படம். அதுவரை வசனங்களால் நிரம்பி வழிந்த தமிழ் சினிமாவின் பக்கங்களை, காட்சிகளால் நிரப்பும் வேலையை தொடங்கி வைத்தவர் மகேந்திரன். ஒரு காட்சியின் தன்மையை உணர்த்தும் பொருட்டு, பல நீளமான காட்சிகளை இந்த படத்தில் மகேந்திரன் பயன்படுத்தி இருப்பார். அதுவரை, வசனம், நடிப்பு, கட் அடுத்தக் காட்சி என்று அவசர கோலத்தில் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நீளமான காட்சிகள் பிரம்மிப்பை கொடுத்த அதே நேரத்தில், கதையில் ஒவ்வொரு காட்சிகளின், கதாபாத்திரங்களின் தன்மையையும் உணர்ந்துக் கொள்ள உதவியது.

எஞ்சினியர் திட்டிவிட்டார் என்று கோபத்தில் இருக்கும் அண்ணனுக்கு தங்கை சாப்பாடு கொண்டு வருகிறாள். அண்ணன் தன்னுடைய சுய கௌரவத்திற்கு ஏற்பட்ட இழிவை எண்ணி கழிவிரக்கம் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் தங்கையின் பாசம், அவனது கழிவிரக்கத்தை மேலும் கூட்டுகிறது. உரிமையின் காரணமாக தங்கையிடம் அண்ணன் கோபித்துக் கொள்கிறான். பின்னர் இரவு தங்கையை, அண்ணனும், அண்ணனை தங்கையும் சமாதானப்படுத்தும் இடங்கள் காட்சிகளால் நிரம்பி வழியும் அற்புதம்.

கிட்டத்தட்ட ஒரு படமாகவே எடுக்க வேண்டிய விசயத்தை ஒரே காட்சியில் உள்ளிட்டு, அதை நேர்த்தியாக படைத்திருப்பார் மகேந்திரன். காளியின் கதாப்பாத்திரம் பற்றி எஞ்சினியர் இன்னொரு அலுவலரிடம் கேட்கும்போது அதற்கு அவர் காளியின் கதாப்பாத்திரத்தை விளக்கும்போதே, காளியின் நிஜ கதாப்பாத்திரத்தை பின்னணியில் காட்சிகளாக வடித்திருப்பார். காட்சிகளால் நகர்ந்துக் கொண்டிருக்கும் கதையை, ஒரே ஒரு வசனத்தால் இன்னும் பல படிகள் முன்னோக்கி நகர்த்தி இருப்பார் இயக்குனர். தம்பி இல்லாத வேற ஏதாவது அலுவலர்கள் இருந்தால் வர சொல்லுங்கள், என்று எஞ்சினியர் கதாப்பாத்திரம் சொல்கின்ற அந்த இடம், காட்சிகளும், வசனமும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒரு படத்தை நகர்த்தி செல்லும் மாபெரும் அதிசயமான கட்டமைப்பு.

இந்த காட்சிகளும், வசனமும் தமிழ் சினிமாவிற்கு மிக புதிது. சொல்ல வேண்டிய கதையை திரையில் நகர்த்தி செல்ல இப்படி புதுவிதமான உத்தியை கையாள்வது தமிழ்சினிமாவை சர்வதேச தரம் நோக்கி அழைத்து செல்லும் பக்குவம் வாய்ந்தவர் மகேந்திரன் என்பதை நிரூபிக்கும் இடங்கள்.

இந்த படத்தில் அதிகம் கவனித்திருக்க முடியாத பகுதி, அங்கா என்கிற பெண்ணுக்கும், வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் இடையே இருக்கும் காதல். ஆனால் அங்கா முன்னமே திருமணமான பெண். இவர்களது கள்ளக் காதலை, எந்தவித விரசமும், ஆபாசமும் இல்லாமல், ஒரு பெண்ணின் மனநிலையை அப்படிப்யே அப்பட்டமாக மகேந்திரன் படம்பிடித்திருப்பார். பெண் தனக்கு பிடித்ததை தேடிக் கொள்வதில் எப்போதும் சிரத்தை எடுத்துக் கொள்கிறாள். தன் மனம் விரும்பியதை செய்துக் கொள்ள அவள் ஒருபோதும் சமூக விழுமியங்களை எதிர்நோக்கி காத்திருப்பதில்லை. இந்த படத்தில் அங்காவின் கதாப்பாத்திரம், அந்த கள்ளக் காதலுக்காக ஒரு நாளும் மனம் வருந்தியதில்லை. மாறாக அதை ஒரு குற்றமாக, அவளை ஒரு ஈனப் பிறவியாக, ஒரு ஆண் கதாப்பாத்திரமே வழிமொழிகிறது. அதை வெண்ணிற ஆடை மூர்த்தி சிறப்பாகவே செய்திருப்பார். சமூகத்தின் ஒழுங்கற்ற கட்டமைப்பை இதைவிட மிக சிறப்பாக படம்பிடித்து சொல்லி இருக்கும் திரைப்படம் 70-80 களில் வெளிவரவே இல்லை எனலாம்.

பொதுப் புத்தி சார்ந்த சமூக விழுமியங்களை கேள்விக் கேட்கும் ஒரு படைப்பு அந்த சமூகம் உயிர் பெற்றுள்ள வரை நிலைத்திருக்கும் என்பதற்கு இந்த படமும் ஒரு சாட்சி.

முள்ளும் மலரும் காலம் தாண்டியும் நிலைத்திருக்க இன்னொரு முக்கிய காரணம், இளையராஜாவின் இசை. இந்த திரைப் படத்தில் நான்கு பாடல்கள் வருகிறது. நான்கிலும், பாடல் வரிகளும், மெட்டும், அதன் பின்னணி இசையும், அதை மகேந்திரன் காட்சி படுத்தி இருக்கும் விதமும் அழகின் உச்சம். எவ்வித தடங்கல்களும் இல்லாமல், மிக பத்திரமாக தாயின் கருப்பையில் இருக்கும்போது நாம் உணரும் கதகதப்பை இந்த பாடல்கள் மனதுக்குள் ஏற்படுத்துகிறது. குறிப்பாக செந்தாழம்பூவில் பாடல் கொடுக்கும் பரவசம் அமைதியின் இழப்பை நமக்கு உணர்த்துகிறது.

ராவன் ஆண்டாலும், பாடலில் இடையிடையே வரும், கோரஸ் நம்மை அந்த மலை வாழ் இடத்திற்கே அழைத்து செல்கிறது.

உமா சந்திரனின் நாவலே, மகேந்திரனால் திரைக்கதை உருவம் கொடுக்கப்பட்ட பின்னர் திரைப்படமாகவும் படைக்கப்பட்டது. ஆனால் இந்த நாவலில், புலி அடித்துதான் காளி கதாப்பாத்திரத்தின் கை போனது என்று எழுதி இருப்பார் உமா சந்திரன். இதை அப்படியே மகேந்திரன் உள்வாங்கி, திரைக்கதையாக்கி, திரைப்படமாக எடுத்திருந்தால் நிச்சயம் இந்தப் படம் இன்றளவும் நீடித்திருக்குமா என்று சொல்ல முடியாது. ஆனால் அங்கேதான் மகேந்திரன் இலக்கியத்திற்கும், திரைப்படத்திற்குமான இடைவெளியை உணர்ந்த ஒரு மாபெரும் படைப்பாளி என்பதை நிரூபிக்கிறார்.

புலி அடித்து கை போனதாக காட்டி இருந்தால், சரத்பாபு கதாப்பாத்திரத்திற்கும், காளி கதாப்பாத்திரத்திற்குமான அந்த உணர்வுப் பூர்வமான போராட்டத்தை இப்படி நேர்த்தியாக சொல்லி இருக்க முடியாது. எஞ்சினியரால் தனக்கு கைப்போனது என்கிற ஆதங்கமே, கடைசி வரை காளியை ஒரு கம்பீரமிக்க, தன்னம்பிக்கை மிக்க, தன்மானத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத கதாப்பாத்திரமாக உருவாக்கியது. இந்த இடைவெளியை மகேந்திரன் மிக சிறப்பாக உள்வாங்கியே கதையில் சில மாற்றங்களை செய்து, அதை திரைப்படமாக உருவாக்கி இருப்பார்.

படத்தின் ஆரம்பக் காட்சியில், தன் தங்கைக்காக கோபத்தில் ஒரு காரின் கண்ணாடியை காளி உடைத்தெறியும் காட்சியிலிருந்து, இறுதியில், தன் தங்கைக்காக எஞ்சினியர் கதாபாத்திரத்திடம் என் தங்கையை உனக்கு கொடுக்கிறேன். ஆனால் இப்பவும் உன்ன எனக்கு பிடிக்காது என்று சொல்லும் காட்சி வரை நீளும், ஒரு உன்னதமான அதிஅற்புதமான பாத்திரப் படைப்பு காளியினுடயது.

இன்றளவும் தமிழ் திரைப்பட உலகில் ஒரு மாபெரும் காவியமாக வீறு நடைபோட்டுக் கொண்டிருக்கும் முள்ளும் மலரும் பல சங்கடங்களையும், தடைகளையும் தாண்டிதான் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அதன் தயாரிப்பாளருக்கு மகேந்திரன் படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறார். என் வாழ்க்கையே போயிற்றே.. இந்த படம் எப்படி ஓடும்.. இதில் வசனங்களே இல்லையே என்று கோபம் காட்டி இருக்கிறார். மேலும், இறுதியாக படம் பிடிக்க வேண்டிய பாடல் காட்சிக்கு பணம் தர மறுத்திருக்கிறார். பின்னர் கமலின் உதவியால் அந்த பாடல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல்தான் இன்றளவும் அழியா இசை பெருவெள்ளமாக இருக்கும் "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்" என்கிற பாடல்