முள்ளொன்று மலர்ந்தது.

அது ஒரு மாபெரும் மேடை. கீழே ரசிக வெள்ளம். கரவொலியும், விசில் சத்தமும் விண்ணைப் பிளந்து கொண்டிருக்கிறது. மேடையில் நிற்பது தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரிடம் "உங்களுக்குப் பிடித்த இயக்குனர் யார்?" என்ற கேள்வி கேட்கப் படுகிறது. கேள்வியைக் கேட்பவர் இயக்குனர் இமயமும் ரஜினியின் திரையுலக குருவுமான இயக்குனர் பாலச்சந்தர். அந்தக் கேள்விக்கு மேடையில் ரஜினி சொன்ன பதில் "மகேந்திரன்". தமிழ் கமர்சியல் சினிமாவின் முடிசூடா மன்னனான ரஜினி, இன்றளவும் தன் மனதிற்கு நெருக்கமாய் பார்க்கும் படம் "முள்ளும் மலரும்".

மற்ற படங்களைப் போன்ற கதைச் சுருக்கம் இப்படத்திற்கு அவசியமே இல்லை. கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம்.

சத்யஜித்ரேயின் வழியில் தமிழில் சிறுகதைகளையும், நாவல்களையும் அடிப்படையாகக் கொண்டு படங்களை எடுத்த இயக்குனர் மகேந்திரன். மகேந்திரனின் முதல்படமான இது 'கல்கி'யின் நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற உமாச்சந்திரனின் "முள்ளும் மலரும்" நாவலை அடிப்படையாகக் கொண்டது. மேலும் புதுமைப்பித்தனின் சிற்றன்னை சிறுகதையிலிருந்து "உதிரிப்பூக்கள்", சிவசங்கரியின் "நண்டு", பொன்னீலனின் "உறவுகள்" நாவலைக் களமாகக் கொண்டு "பூட்டாத பூட்டுக்கள்" என்று தமிழ் இலக்கியங்களை மையப் படுத்தி படங்கள் எடுத்தவர். அவர் கடைசியாக எடுத்த "சாசனம்" படம் கூட கந்தர்வனின் 'சாசனம்' சிறுகதையைத் தழுவி எடுக்கப் பட்டது.

இவருக்குப் பின் இன்றளவும் யாரும் இத்தைகய முயற்சிகளைத் தொடர்வதாய்த் தெரியவில்லை. யாராவது அப்படி ஆரம்பித்தாலும் அவர்களை நாம் அதைத் தொடர விடுவதுமில்லை. தமிழ்ச் செல்வனின் "வெயிலோடு போய்" என்ற அழகான சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு "பூ" என்ற அற்புதமான படத்தைக் கொடுத்தவர் சசி. இதோ பல ஆண்டு இடைவெளிக்குப் பின்பு வெளிவர இருக்கும் அவரின் அடுத்த படத்தின் ட்ரைலரைப் பார்த்தால் என் ஆதங்கம் உங்களுக்கும் புரியும்.

பொதுவாக ஒரு படத்தில் ஹீரோ கடைந்தெடுத்த கட்டித் தங்கமாகவும், வில்லன் முழுக்க முழுக்க கெட்டவனாகவும் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோவான காளியும் நல்லவன், அவன் எதிர்த்து நிற்கும் எஞ்சினியராகிய குமரனும் நல்லவன். அப்போது ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள்? அடிப்படையில் நல்லவர்களான இருவரும் ஏன் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? இப்படியிருக்கையில் இருவரையும் இணைக்கும் புள்ளி எது? இப்படி வரிசையான கேள்விகளுக்கு விடையை தனது அற்புதமான திரைக்கதையில் பொதித்து வைத்திருப்பார் இயக்குனர் மகேந்திரன். நாவலை சிறப்பான திரைக்கதையாக மாற்றியிருப்பார்.

ஒரு நாவலை படமாக்குவதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நாவலை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் கற்பனையில் தனக்குள்ளேயே ஒரு படத்தை ஓட்டிப் பார்த்திருப்பார்கள். அந்த நாவல் திரைப்படமாகும் பொழுது அவரவர்க்கு ஓர் எதிர்பார்ப்பு இருக்கும். அத்தனைபேரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து வெற்றி பெறுவது என்பது அத்தனை சுலபமான காரியமல்ல. இந்த முள்ளும் மலரும் நாவல் கல்கியில் வெளிவந்த காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. அதையும் மீறி, நாவலை வாசித்தவர்களின் எதிர்ப்பார்ப்புகளையெல்லாம் தாண்டிச் சென்று இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார். அதற்குக் கிடைத்த அங்கீகாரமே இப்படத்தின் மாபெரும் வெற்றி.


இந்தப் படத்திற்கு முன்பு மகேந்திரன் பல படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆருக்காக கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை திரைக்கதையாக எழுதியும் தந்திருக்கிறார். இத்தகைய அனுபவங்களே அவர் இயக்கிய முதல் படத்திலேயே இத்தனை தெளிவான திரைக்கதையையும், திரைமொழியையும் அவருக்குச் சாத்தியப் படுத்தியிருக்கிறது.

தன் கையை இழந்ததற்காக அனுதாபம் தெரிவிக்கும் தன் நண்பர்களிடம் காளி பேசும் வசனம் அத்தனை கூர்மையானது. அவனின் சுபாவத்தை, தன்னம்பிக்கையை அதைவிட ஆழமாக யாரும் வெளிப்படுத்திவிட முடியாது. அதே போல தன் வேலை போனதும் கண்களில் கோபம் மின்ன காளி பேசும் வசனமும், அதை ரஜினி பேசும் அழகும் அருமை. " இரண்டு கையும், இரண்டு காலும் போனாக் கூட காளிங்கிறவன் பொழச்சுக்குவான் சார்.. கெட்ட பய சார் அவன் " போன்ற வசனங்கள் மகேந்திரன் எத்தனை அருமையான வசன கர்த்தா என்பதைத் தெரியப் படுத்தும்.

அதே போல, காளிக்கும், மங்காவிற்குமான காதலை, புரிதலை ஒவ்வொரு காட்சியிலும் சின்னச் சின்ன இயல்பான நையாண்டி வசனங்களில் அற்புதமாகக் கையாண்டிருப்பார். இது போன்ற உயிர்ப்புள்ள வசனங்களும் காட்சியமைப்புகளுமே, நாயகனை மையமாக வைத்துச் சுழலும் தமிழ் சினிமாவின் கதாநாயகனுக்குக் கை போன பிறகும் கூட அந்தப் படத்தில் பார்வையாளனின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கதையை காட்சிப்படுத்தவற்குத் தான் வசனமே தவிர, இட்டு நிரப்புவதற்கும், வசனகர்த்தா தன் மேதாவித்தனத்தை வெளிப்படுத்துவதற்கும் இல்லை. பார்வையாளன் வெறும் காட்சியிலேயே புரிந்து கொள்ளக் கூடிய இடத்தில் வசனம் தேவையற்றது. இங்கு ஒரு காட்சியில் சரத்பாபு ஆற்றுப் படிக்கட்டில் அமர்ந்து மீனுக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பார். அப்போது அங்கு வரும் ஷோபா, இங்கு மீனுக்கு பொரி போட்டால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம் என்பார். அப்போது சரத்பாபு பக்கத்தில் ஒரு கிழவி பொரி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பார். அவ்விடத்தில் சில நொடி மெளனத்திற்குப் பின் இருவரும் சிரிக்கத் தொடங்குவார்கள். இது போல பல இடங்களில் மெளனம் என்ற ஒரே வசனத்தால் உணர்வுகளை கவிதையாக வெளிக் காட்டியிருப்பார் இயக்குனர்.

அதுவரையில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினியை ஹீரோவாக மாற்றியது முள்ளும் மலரும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு இடத்தில் கூட நீங்கள் ரஜினியைப் பார்க்க மாட்டீர்கள். காளி என்ற ஒற்றைக் கதாப்பாத்திரத்தையே சுற்றி சுழலும் கதை என்றாலும் கூட, காளி இங்கு மரங்களைச் சுற்றி காதல் பாடல் பாடிக் கொண்டு, எதிரிகளை வானத்தில் பறந்து சண்டையிடும் சூப்பர் ஹீரோ அல்லன். வள்ளியின் அண்ணன். மங்காவின் கணவன். இஞ்சினியரின் எதிரி. அவ்வளவுதான். சுயமரியாதையும், சுருக்கென்ற கோபமும் கொண்ட இளைஞனின் கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டிருப்பார் ரஜினிகாந்த்.

ட்ராலியில் ஏறிய ஊர் மக்களை சரத்பாபு இறக்கிவிடச் சொல்லுமிடத்தில் ஊர் மக்கள் முன்னால் தான் படும் அவமானத்தையும், அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நிற்கும் நிலையையும் உடல் மொழியில் அத்தனை அற்புதமாய் வெளிப்படுத்தியிருப்பார் ரஜினிகாந்த். அதே போல கடைசிக் காட்சியில் தன் சுய கெளரத்தையும் விட்டுக் கொடுக்காமல், தங்கையையும் விட்டுக் கொடுக்காமல் அவர் பேசும் வசனமும், அப்போது அவரின் கண்களில் வெளிப்படும் கர்வமும் ரஜினி என்ற அற்புத நடிகனை நாம் நாயக வழிப்பாட்டில் தொலைத்துவிட்டோம் என்ற உண்மையை முகத்தில் அறைகிறது.
அதிகாரம் படைத்தவர்களின் மீதும், பணக்காரர்கள் மீதும் காளிக்கு இருக்கும் இயல்பான கோபத்திற்கான காரணங்களை காளியின் சிறுவயது காட்சிகளிலிருந்தே கவனமாக கட்டமைத்திருப்பார் இயக்குனர். காளியின் பாத்திரப் படைப்பு குறித்து பார்வையாளனுக்கு எந்தக் கேள்வியும், குழப்பமும், எந்தக் காட்சியிலும் எழாமல், "இவன் தான் காளி" என்பதை காட்சிகளின் கோர்வையில் தெளிவாக காட்டியிருப்பார் இயக்குனர்.

தான் பார்த்துவந்த வேலை போகும் காட்சியில், வேதனையை மனதில் தேக்கிக் கொண்டு, கண்களில் நீரைத் தேக்கிக் கொண்டு ரஜினி பேசும் வசனம் ஒன்று இருக்கிறது. அதை உச்சரிக்கும் பாவனையெல்லாம் அவருக்கு மட்டுமே வரும். அவரே சொல்வது போல அதெல்லாம் "கூடவே பொறந்தது." கடைசிக் காட்சியில் " அவுங்க எல்லாம் என்னத் தாண்டிப் போனாங்க, ஏன்னா அந்த நாய்ங்கெல்லாம் என் கூட பொறந்ததுங்க இல்ல ". இந்த வசனத்தைப் பேசும் பொழுது "அந்த நாய்ங்கெல்லாம்" என்ற வார்த்தைக்கு அழுத்தம் சேர்த்து வெறுப்பை உமிழ்வார் ரஜினிகாந்த்.

யாருக்கு எப்படியோ, ரஜினியைப் பொருத்தமட்டில் இந்தப் படம் அவரது நடிப்புலகின் நிஜ மகுடம். அவரே நினைத்தால் கூட இது போன்ற ஒரு படத்தை அவரால் இனி கொடுக்கவே முடியாது. அதை அவரும் உணர்ந்திருப்பதையே இந்தக் கட்டுரையின் முதல் பத்தி காட்டுகிறது.

அண்ணனின் அன்பிற்குக் கட்டுப்பட்டு காதலை மறைக்கும் காட்சியிலும், கையிழந்த அண்ணனை கல்யாணம் கட்டிக் கொள்ள சமாதானம் செய்யுமிடத்திலும் என்று எந்த ஒரு காட்சியிலும் தனது மிகைப்படுத்தாத இயல்பான நடிப்பால் நம்மை ஈர்க்கிறார் ஷோபா. காளியை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கும் அந்தக் காட்சியில் காளிக்கும் வள்ளிக்குமான உறவை உன்னதமாய் வெளிப்படுத்தியிருப்பார் ஷோபா. இப்படியான அண்ணன் தங்கை பாசத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தனக்கான இடத்தை தக்கவைக்கத் தவறவில்லை காளியின் மனைவி மங்காவாக வரும் படாபட் ஜெயலட்சுமியும். தன் தோழியான வள்ளியின் வாழ்க்கைக்காக தனது வாழ்க்கையைக் கூட பணையம் வைக்கும் கதாப்பாத்திரம் அவருடையது. திருமணம் முடிந்த மறுநாள் இட்லி பரிமாறிக் கொண்டே அவர் காட்டும் புதுப்பெண் வெட்கம் இருக்கிறதே கவிதை !

படித்த இஞ்சினியராக வரும் சரத்பாபுவின் கதாப்பாத்திரம் கண்டிப்பும், முதிர்ச்சியும் கொண்டதாய் அமைக்கப் பட்டிருக்கும். தன்னை அவமானப்படுத்தியதற்கு பழிவாங்கும் விதமாய், சரத்பாபு செல்லும் ட்ராலியை வேண்டுமென்றே வழியில் நிறுத்துவான் காளி. அதைப் புரிந்து கொண்டு புன்னகைப்பார் சரத்பாபு. அந்த ஒற்றைப் புன்னகையே வெளிப்படுத்திவிடும் அந்த கதாப்பாத்திரத்தின் தன்மையை.

மலையடிவாரக் கிராமம், கிராமத்தை ஒட்டி ஓடும் ஆறு. நதி போல வளைந்து ஓடும் சாலை என்று கதை நடக்கும் களத்திற்கு கூடவே நம்மைக் கூட்டிச் செல்கிறது பாலுமகேந்திராவின் கேமரா. எழுபதுகளில் எந்த ஒரு மலைக் கிராமத்திலும் மின்சாரம் அத்தனை சாத்தியப் பட்டிருக்கவில்லை. இரவுகளில் எல்லாம் சிம்னி திரி விளக்குகள் தாம். அவ்விளக்கொளியில் காட்சிகள் நகரும் பொழுது பார்வையாளனுக்கு கொஞ்சமும் உருத்தாமல் ஒளியைத் தன்வசப் படுத்தியிருப்பார் பாலுமகேந்திரா.

நான்கே பாடல்கள். ஒவ்வொன்றும் தனிவிதம். ராஜாவின் ஆகச்சிறந்த பாடல்கள் பத்தை பட்டியலிடச் சொன்னால், என்னளவில் "செந்தாழம்பூவில்" பாடலுக்கு நிச்சயம் ஒரு இடமுண்டு. மயக்கும் இசையும், உருக்கும் குரலும், கண்ணதாசனின் வரிகளுக்கு உயிரூட்டி உலவ விட்டிருக்கும். அதிலும் பாடலின் ஆரம்பத்தில் வரும் யேசுதாசின் ஹம்மிங் இருக்கிறதே அதை எப்படி எழுத்தில் வர்ணிக்க?!. இந்தப் பாடலுக்கு பாலுமகேந்திரா மாண்டேஜ் ஷாட்களை கையாண்டிருப்பார். இப்போது பரவலாக அனைவராலும் கையாளப்படுகின்றது.

மலைவாழ் மக்களின் இசைப்பின்புலத்தில் ஆரம்பிக்கும் "ராமன் ஆண்டாலும்" பாடலை எப்போது கேட்டாலும் உற்சாகம் தீயாக பற்றிக் கொள்ளும். காளி கதாப்பாத்திரத்தின் தன்மையை உள்வாங்காமல் எஸ்.பி.பியால் இதனை இத்தனைச் சிறப்பாக பாடியிருக்க முடியாது. நம் நாட்டுப்புறப் பாடல்களை திரையிசையில் திறம்பட கையாண்ட ஒரே இசையமைப்பாளர் ராஜா மட்டுமே. அன்னக்கிளியில் "மச்சானைப் பாத்தீங்களா"வில் ஆரம்பித்தது. இந்தப் படத்தில் வரும் " நித்தம் நித்தம் நெல்லுச் சோறு" அவ்வகையில் சேர்த்தி. "மானினமே" பாடல் அண்ணன் தங்கை பாசப்பாடலாக ஆரம்பக் காட்சிகளில் வரும். இந்தப் பாடலை விட இதன் இசையை ஆங்காங்கே காளிக்கும், வள்ளிக்குமான உணர்வுப் பூர்வமான காட்சிகளில் பயன்படுத்தியிருப்பார் ராஜா. இந்த உத்தியை இவருக்குப் பின் வந்த இசையமைப்பாளர்கள் அனைவரும் பின்பற்றினர். பின்பற்றுகின்றனர்.

கையில் கட்டுப் போட்டு கிடக்கும் காளியை இஞ்சினியர் பார்க்க வரும் இடத்தில் வரும் இசை காளியின் மனநிலையை அத்தனை கச்சிதமாய் பிரதிபலிக்கும். கடைசிக் காட்சியில் வெறும் தாள வாத்தியத்தை மட்டும் வைத்தே ஆத்திரம், கோபம், இயலாமை எனப் பலவித உணர்ச்சிகளை கொட்டி நிறைத்திருப்பார். அதே நேரத்தில் வள்ளித் திரும்ப வந்து காளியைச் சேருமிடத்தில் அண்ணன் தங்கைப் பாசத்தை உணர்த்தும் அந்தப் பின்னணி இசை ஒலிக்கும். இப்படி படத்தை இசையால் நிரப்பியிருப்பார் ராஜா.

ராஜா, பின்னணி இசையில் தன் தனித்துவமான ராஜநடையை அழுத்தமாக பதித்த படம் இது.

அப்படியென்றால், படத்தில் குறைகளே இல்லையா? காளியிடம் மூர்த்தி அடிபடும் காட்சியில் பக்கத்தில் கொத்து பரோட்டா போடுவது காட்டப்படும். இதுபோன்ற தமிழ் சினிமாக்களுக்கே உண்டான சில க்ளிஷேக்களிலிருந்து இந்தப் படம் கூட தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அதென்ன இஞ்சினியர்களுக்கும் டாக்டர்களுக்கும் நாக்கு நன்றாகச் சுழலாதா? இல்லை அப்படி மொட்டை நாக்கில் பேசினால்தான் மெத்தப் படித்த படிப்பிற்கு அழகோ? ஆனால் இது போன்ற சின்னச் சின்ன குறைகள் கண்ணில் படாதவாறு பார்வையாளனை தன்னுடன் கட்டிப் போடுவதே இப்படத்தின் வெற்றி.

எடுத்துக் கொண்ட கதை, அதை எடுத்துச் சொன்ன விதம், செதுக்கிச் செய்த வசனங்கள், கதைக்குப் பொருத்தமாய் கதாப்பாத்திரங்கள், அவர்களின் இயல்பான நடிப்பு, கவிதை போன்ற ஒளிபதிவு, காட்சியை மீறாத இசை, காலத்திற்கும் நிற்கும் பாடல்கள், இத்தனையையும் இழுத்துக் கட்டிய இயக்கம் என அனைத்தும் சேர்ந்தே "முள்ளும் மலரும்" என்ற க்ளாசிக் திரைப்படத்தை சாத்தியமாக்கியது. வணிகத்தைச் சார்ந்தே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் இந்தச் சமூகத்தில், வணிக ரீதியிலும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.