யமுனா ராஜேந்திரன் - படிமை மாணவர்களுடனான உரையாடல்

திரைப்படங்களை தீவிரமான கலை ஊடகமாக ஏன் இடது சாரிகள் கருதவில்லை? இடதுசாரி பார்வைகள் கொண்ட பீ.லெனின், ஜனநாதனின் படங்கள் திரைப்பட வடிவம் சார்ந்து இல்லாமலிருப்பது ஏன்.?

யமுனா ராஜேந்திரன்: பொதுவாக இடது சாரிகள் மதத்தினை போதைப்பொருள் என்று கருதினார்கள். இதனை 'பிறழ்ந்த பிரக்ஞை' என்று சொல்வார்கள். அதைப்போலவே தமிழ்ச்சினிமாவைப் பற்றிய அவர்களது கண்ணோட்டம் என்னவென்றால், தமிழ்சினிமா இயல்பான வாழ்க்கைக்கு மாறாக கற்பனை சார்ந்த வாழ்வை முன்வைக்கின்றது. அதேபோல தமிழ்மக்களின் பிரச்சனைகளைச் சொல்லாமல் முற்றிலும் கற்பனாவாதமான வாழ்க்கையை தமிழ்சினிமா உலகம் படைப்பிக்கிறது. இந்தமாதிரியான சினிமாவிற்கு எங்கள் நேரத்தை செலவிட விரும்பவில்லை என்ற கருத்தோட்டத்திற்கு இடதுசாரிகள் வந்தார்கள்.

இந்தக் கருத்தோட்டம் மார்க்சிஸ்ட்டுகளுக்கு மட்டுமில்லை என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். ராஜாஜி திரைப்படங்களை நேர்மையான ஊடகமாக பார்க்கவில்லை. பெரியார் திரைப்படங்கள் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார். அதைப் போன்ற கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தவர்தான் காமராஜரும். தமிழக மக்களின் அரசியலை, அரசியலின் மூலம் வாழ்க்கையை மாற்றமுடியும் என்று நினைத்த தலைவர்கள் பலரும் இந்தச் சினிமாவை எதிர்மறையாகவே பார்த்திருக்கின்றார்கள்.
இந்த பார்வைதான் தமிழகத்தில் மார்க்ஸியவாதிகளுக்கும் இருந்தது. இதன் காரணம் என்னவென்றால், இந்த சினிமா என்பது பிறழ்ந்த பிரக்ஞையாக, கனவுலகத்தைப் படைப்பதாக, வாழ்விற்கும் சினிமாவிற்கும் சம்பந்தமில்லாமல் சுழல்கின்றது. இந்த மாதிரியான எதிர்மறை பார்வைகள் இடதுசாரிகளிடம் இருந்தது. அதனைத் தவறான பார்வை என்று சொல்வேன். முக்கியமாக, வெகுஜனக் கலைகளின் மீதான பார்வைகள் எங்களுடைய மார்க்ஸியவாதிகளிடம் அதிகமாக விவாதிக்கப்படவோ விமர்சிக்கப்படவோ இல்லை. ஜீவானந்தம் போன்றவர்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஜீவானந்தம் பெரும்பாலான சினிமாக் கலைஞர்களிடம் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக அவருக்கு சிலை வைக்க உதவியதில் எம்.ஜி.ஆரின் பங்குதான் அதிகம் என்று வரலாறு இருக்கிறது. அந்த அளவிற்கு ஜீவானந்தம் அனைத்து திரையுலகப் பிரபலங்களிடமும் தொடர்பு வைத்திருந்தார்.

பி.ராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூட ஜீவாவின் கலை ஈடுபாட்டில் விருப்பமற்று இருந்தார்கள். அவர்களின் இந்த எதிர்மறைப் பார்வைக்கான காரணம் என்னவென்று கேட்டால், இந்தச் சினிமாவினால் ஒன்றையும் மாற்ற முடியாது, சினிமா எடுப்பதென்பது உருப்படியில்லாத வேலை. இதுதான் அவர்களின் எண்ணம்.

மிக முக்கியமாக, வெகுஜனங்களின் மீது சினிமா எந்தவிதமான மாற்றத்தை தோற்றுவிக்கிறது என்பதனை வெகுஜனகட கலைகளின்பாலான கிராம்ஸி அணுகுமுறை வெளிப்படுத்தப்பட்டதன் வாயிலாகத்தான் உலகளவில் சினிமா பற்றிய விவாதங்கள் இடதுசாரிகள் மத்தியில் தோன்றியது. வெகுஜனக் கலைகளை எவ்வாறாக அணுகுவது? ஒரு இசையை எவ்வாறாக அணுகுவது? ஒரு நாட்டுப்புறப்பாடலை எவ்வாறாக அணுகுவது என்று விவாதிக்க ஆரம்பித்தனர். ஒரு இசை வடிவத்திற்குள்ளே, ஒரு நாட்டுப்புறப்பாடலுக்குள்ளே, பழமொழி என்று சொல்லப்படுவதில் கூட மேலாண்மை என்பது, அதிகாரம் என்பது செயல்படுகிறது. அந்த அதிகாரத்திற்கு எதிரான எதிர்ச்செயல்பாடுகள், ஒடுக்கப்பட்ட மக்களின் சிறுபான்மையினரின் எதிர்ச்செயல்பாடுகளும் சமவேளையில் அதனுள்தான் இருக்கின்றது என்று கிராம்ஸி வாதிடுகிறார்.

நீங்கள் பயனற்றது என்று சொல்கின்ற ஒரு வெகுஜனக் கலையில் கூட அதிகாரம் செயல்படுகிறது. அந்த அதிகாரத்திற்கு எதிரான எதிர்ச்செயல்பாடும் அதனுள்ளேயே இருக்கின்றது, நீங்கள் என்னதான் சினிமாவை கனவுலகு என்று சொன்னால்கூட, அந்தக் கனவுலகிலும் வெகுஜன மக்களின் வாழ்க்கைக்கான உண்மை இருக்கின்றது என்று கிராம்ஸி சொன்னார். அதாவது, அடிப்படை வாழ்வின் உண்மையை எடுத்துக்கொண்டு அதனையே மாற்றி கனவுலகமாகவும், எதார்த்தமின்மையாகவும் திரித்து சினிமாவுலகம் உங்களுக்கு காட்சிப்படுத்துகிறது. இது இப்படியாகத்தான் வெகுமக்களைப் பாதிக்கிறது என்றால், அவர்கள் மத்தியில் அவர்களது உளவியலை உருவாக்குறது என்று சொன்னால், இந்த வெகுமக்களின் விமோச்சனத்தில் நம்பிக்கைகொண்டிருக்கின்ற நீங்கள், மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற இந்தக் கலையை புறக்கணிக்கக் கூடாது.

இந்த வெகுஜனக் கலைக்குள் எப்படி அதிகாரமும், எதிரதிகாரமும் செயல்படுகிறது என்பதையும், எவ்வாறு உண்மை வாழ்க்கை, கனவாக உங்களுக்குச் சொல்லப்படுகின்றது என்பதையும் நீங்கள்தான் மக்களுக்குச் சொல்லவேண்டும். இதனைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். இதனைப்பற்றிய விமர்சனப்பார்வை உங்களுக்கு வேண்டும். இதனைவைத்து பல விவாதங்கள் உலக கம்யூனிஸ்ட்களின் மத்தியில் 70களில் எல்லா மட்டங்களிலும் நடந்தது. பொதுவாக வெகுஜன கலைகளையும், திரைப்படத்தையும் எவ்வாறு அணுகுவது என்று பல்வேறு விவாதங்கள் நடந்தேறின.
மூன்றாவது சினிமாக் கோட்பாட்டை உருவாக்கியவர்கள் மார்க்ஸிஸ்ட் கலைஞர்கள்தான். திரைப்படத்தில் அந்நியமாதல் கருத்தாக்கத்தை முன்வைத்து படத்தொகுப்பு சம்பந்தமாக சோதனைப்பூர்வமான முயற்சிகளைச் செய்துபார்த்த ’கோடார்ட்’, ஒரு மாவோயிஸ்ட்டாகத்தான் இருந்தார். அதேபோல மோண்டேஜ் நுட்பத்தை உருவாக்கிய ஐஸன்ஸ்டின் கம்யூனிஸ்ட்டாகத்தான் இருந்தார். இதுமாதிரியான தொடர்ச்சிகள் உலகம் முழுவதிலும் இருந்தன. இதனடிப்படையில்தான் சினிமாவைப்பார்க்க வேண்டும் என்றவிதமான கண்ணோட்டம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வருவதற்கே மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவேண்டியிருந்தது.

இப்போது சினிமாவின் வலிமையை கம்யூனிஸ்ட் கட்சிக்கள் உணர்ந்திருக்கின்றன. அறந்தை நாராயணனை எடுத்துக்கொண்டீர்களென்றால் தமிழ் சினிமாவின் வரலாற்றை முதன்முதலில் பதிவு செய்தவர். ஆய்வுப்பூர்வமாக அல்லாமல் அனுபவப் பூர்வமாக தமிழ்ச்சினிமாவிற்கான தகவல்களைத் தேடிச்சென்று ‘தமிழ் சினிமாவின் கதை’ எனும் புத்தகத்தை அவர் எழுதியிருக்கின்றார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்தான். இதனடிப்படையில் பார்த்தீர்களேயானால் கம்யூனிஸ்ட் கட்சியில் எதிர்ப்புகள் இருந்த அதே காலகட்டத்தில் வெகுஜனத்தை பிரதிபலிக்கின்ற கலை, வெகுஜன மக்களின் உளவியலைச் சென்றடையக்கூடிய கலைதான் சினிமா என்ற பார்வையும் இருந்தது..

வெகுமக்களின் விடுதலையில் நாம் நம்பிக்கை கொள்வோமென்றால், வெகுமக்கள் நேசிக்கின்ற இந்தக் கலைப்படைப்பின் மீது விமர்சனப்பூர்வமான விவாதங்களை நாம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்டுகளுக்கு தோன்றிற்று. இப்போதிருக்கின்ற முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்றவைகள் சினிமாவின் மீது ஓரளவிற்கு அக்கறை செலுத்துகின்றன. என்னைப்போன்றவர்கள் தொடர்ந்து இந்த விஷயத்தை வலியுறுத்துக்கொண்டு வருகின்றோம். எனது சிறுபிராயத்திலிருந்தே நான் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்தேன். அப்பொழுது எம்.ஜி.ஆர் தான் பல்வேறு அரசியல் சமூகப் பார்வைகளை என்னுள் உருவாக்கினார். இந்த அளவில் அவர்மீது எனக்கு மரியாதை இருக்கின்றது. அதேவேளையில் அவர் மீது கடுமையான விமர்சனமும் எனக்கு இருக்கின்றது.

பீ. லெனின் சார்ந்த சினிமாவிற்கு வருவோம். உண்மையில் சினிமா என்பது பயிற்சி சார்ந்த விஷயம்தான். அவர் அதியற்புதமான எடிட்டரும் கூட. ஆனால், ஒரு படம் நன்றாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பொருளாதார வளம் இதில் முக்கியமானது. லெனின். படம் இயக்குகிற காலகட்டத்தில் உபகரணங்கள் எந்த விதத்தில் அவர்களுக்கு கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு ஜான் ஆபிரகாமின் இரண்டு படங்களை எடுத்துக்கொள்ளலாம். அவரின் அக்கிரஹாரத்தில் கழுதை படத்தைப் பார்த்தீர்களேயானால் ஒரு குடிசை எரிகிற மாதிரியான காட்சி இருக்கும். அது எடுக்கப்பட்ட விதம் பற்றிச் சொல்கிறேன் : குடிசை போன்ற மினியேச்சர் ஒன்றை உருவாக்கி அதனை தீக்குச்சியை வைத்து எரியவைப்பார்கள். தீக்குச்சியின் ஒரே பிளம்பில் அந்தக் குடிசை பற்றி எரியும். இன்றைக்கு அதேமாதிரி சினிமா எடுத்தீர்களென்றால் சிரிப்பாக இருக்கும். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ஒரு குடிசை மாதிரியை உருவாக்குவதற்கு கூட அந்தப் படக்குழுவினருக்கு காசு இல்லை. அப்படி இந்த படத்தை மீண்டும் தகுந்த பொருளாதார தேவைகள் கொடுத்து மறு உருவாக்கம் செய்தால் அது அற்புதமான படமாக அமையும். ”அம்ம அரியான்” படமும் அதேபோல பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கின்ற படம்.

இலங்கையில் நடந்த போர்களை மையமாக வைத்து சரியான படங்கள் இதுவரையில் வரவில்லை என்றே நினைக்கிறோம். அதனைப்பற்றி உங்கள் கருத்து?

உண்மைதான். 2009 முள்ளிவாய்க்கால் சம்பவத்தை வைத்து இரண்டு விதமான முடிவுகளுக்கு வரலாம். இந்த விஷயத்தை சிங்களக் கலைஞர்கள் எவ்விதமாக பதிவு செய்திருக்கின்றார்கள், தமிழ்க்கலைஞர்கள் எவ்விதமாக பதிவுசெய்திருக்கின்றார்கள்? இங்கு தமிழ்க்கலைஞர்கள் என்று வருகையில் மூன்று இடங்களிலிருந்து தமிழ்க்கலைஞர்களைச் சொல்கின்றேன். முதலாவது ஈழத்துக்குள்ளேயே இருக்கின்ற தமிழ்கலைஞர்கள். இரண்டாவது, புகலிட நாடுகளில் அகதிகளாக வசிக்கின்ற தமிழ்க்கலைஞர்கள். மூன்றாவது தமிழகத்திலே இருக்கின்ற கலைஞர்கள்.

இன்று ஈழத்திலிருந்து முள்ளிவாய்க்கால் பற்றிய படமெடுக்கக் கூடிய சாத்தியமேயில்லை. இராணுவ ஒடுக்குமுறை, அரசாங்கத்தின் தணிக்கை விதிமுறைகள் எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டு அங்கு படமெடுக்க முடிகின்ற சூழல் இல்லை. புகலிட நாடுகளில் அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ”கன் அண்ட் த ரிங்க்” படம் பார்த்தீர்களேயானால் போராட்டத்தின் முரண்பாடுகளை ஓரளவிற்கு அது சொல்லியிருக்கின்றது. அதுவும் கூட பின் முள்ளிவாய்க்கால் பிரச்சனையை மையமாக வைத்ததுதான் என்று சொல்லமுடியாது. பின் முள்ளிவாய்க்கால் பிரச்சினையை மையமாக வைத்து முழுநீளப்படம் என்று எதுவுமே வரவில்லை. ஆனால், அந்தப் பிரச்சினையை தொட்டுச்செல்கின்ற மாதிரியான சில குறும்படங்கள், சதா பிரணவனின் படங்கள் புகலிட நாடுகளில் வந்திருக்கின்றன.


தமிழ் நாட்டைப்பொறுத்த வரை இங்கிருக்கின்ற சென்சார் விதிமுறைகள், இந்திய அரசாங்கத்தின் தணிக்கைக் குழுவிற்கு எதிராக இதுவரையிலும் அம்மாதிரியான படங்கள் வெளிவரவில்லை என்றே நினைக்கிறேன். புகழேந்தி தங்கராஜ், மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் படங்களையும் முன்வைத்தே இதைச் சொல்கின்றேன். எந்தப்படமும் முள்ளிவாய்க்காலுக்கு பின்பு அல்லது முன்பான தமிழ் யாதார்த்தத்தை சொல்லவில்லை. ”மெட்ராஸ் கஃபே” படம் இந்திய அரசின் பார்வையுடன் எடுக்கப்பட்ட படம் என்றுதான் சொல்லவேண்டும். ”இனம்”, படத்தின் ஆங்கிலத் தலைப்பே அயோக்கியத்தனமான தலைப்பு. மாப் என்று துணைத்தலைப்பு வைத்திருக்கின்றார்கள். மாப் என்றால் கும்பல். கும்பல் என்று பார்த்தீர்களென்றால் கும்பல்களுக்கு அறிவே கிடையாது. ஆனால், இதுதான் அந்தப் படத்தின் தலைப்பு. ”சிலோன் த மாப்”. விடுதலைப் போராட்டத்தை நடத்தியவர்களை ’சந்தோஷ் சிவன்’ அழைக்கிற விதம் கும்பல். அது சமூக விரோத காரியத்தைச் செய்கிற ஒரு கும்பல். இந்தப் படத்தைத்தான் எங்களுக்கும் லிங்குசாமி போன்ற இயக்குனர்களெல்லாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சொல்கிற படம் என்று சொன்னார்கள். இது புரட்சிகரப்படம் என்று ஜிகிர்தண்டா எடுத்த கார்த்திக் சுப்புராஜ் போன்ற அரசியல் கத்துககுட்டிகள் சொன்னார்கள்.

இன்றைய நிலைமையில் பின் முள்ளிவாய்க்கால் சம்பந்தமான படம் வரமுடியுமென்றால் அதற்கான சாத்தியம் புகலிட நாடுகளில்தான் இருக்கின்றது. புகலிட நாடுகளிலிருந்துதான் அந்தப் படங்கள் வரும். கூடிய சீக்கிரமே அதுமாதிரியான படங்கள் வருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. ”லெனின் சிவம்” போன்றவர்களுக்கு அந்தத் திறமையும் ஆகிருதியும் இருக்கின்றது.

அதே நேரத்தில் சிங்களத்தரப்பில் இரண்டு படங்கள் வந்திருக்கின்றது. ஒன்று ”இனி அவன்” என்ற அசோக கந்தஹமாவின் படம். மற்றொன்று பிரசன்ன விதானகேவின் ”வித் யு வித் அவுட் யூ” படம். இதுவரையில் என் அனுமானத்தில் பின் முள்ளிவாய்க்கால் பிரச்சனையை முன்வைத்து படம் இயக்கியிருப்பது சிங்களக் கலைஞர்கள்தான். தமிழர்கள் ஈழத்துக்குள்ளும் புகலிட நாடுகளிலும் சரி, தமிழகத்திலும் சரி அத்தகைய படத்தை இதுவரை உருவாக்கவில்லை.

இந்த உலக சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் வந்த திரைப்படம் ஒன்று ஏதாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? அப்படியிருந்தால் அது சார்ந்து சில குறிப்புகள்?

“ஹவர் ஆஃப் த ஃபர்னஸஸ்” என்ற படம். இலத்தீன் அமெரிக்கத் திரைப்படம் அது. அந்தப்படம் இலத்தின் அமெரிக்கப் புரட்சிகர அரசியலில் மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கியது. அதே போல ”பேட்டில் பர் சிலி” என்றொரு படம். அலண்டே, பாப்லோ நெருதா போன்றவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை வைத்து ஒரு ஹிட்டன் கேமராவைக் கொண்டு படம் முழுமையாக எடுக்கப்பட்டு மேற்கு நாடுகளில் அது திரையிடப்பதன் மூலம் சிலி பெகாடுங்nகைவல் பினோசே மீது மிகப்பெரிய அரசியல் அழுத்தம் ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் எழுந்தது. இதற்கு மிக முக்கியக் காரணம் ‘பேட்டில் பர் சிலி’ படத்தை பிரான்சின் ஆவணப்பட இயக்குனர் கிரிஸ் மார்க்கர் என்பவர் தான் மக்களிடம் கொண்டு சேர்த்தார். ஆதேபோல ‘ஹவர் ஆஃப் பர்னஸஸிஸ்’ இல் சேகுவேரா இறந்தவுடனே எந்த விதமான அரசியல் மாற்றம் .லத்தீன் அமெரிக்காவில் சாத்தியம், அமெரிக்காவின் ஆட்சியதிகாரத்திற்கு எதிராக எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது, போராட்டம் என்றால் ஆயுதப் போராட்டம்தான் எம்மிடையில் விட்டுவைக்கப்பட்டிருக்கிறது என்கிற விஷயங்கள் சொல்லப்பட்டன. இந்தப் படத்தின் கடைசி மூன்று நிமிடத்திற்கு சே குவேரா கொல்லப்பட்ட நிவையிர் அவரது முகத்தினை குளோசப்பில் அப்படியே திரையில் நிறுத்தி வைத்திருப்பார்கள். மூன்று நிமிடங்களும் அதே காட்சிதான். இது மிகப்பெரிய மாற்றத்தை இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்கிற்று.

‘பேட்டில் ஷிஃப் பொட்டாம்கின்’ அதிகமான உலக நாடுகளில் தடை செய்யப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அந்தப் படம் தடைசெய்யப்பட்டிருக்கிறது. காரணம் என்னவெனில் அக்டோபர் புரட்சி பற்றிய சம்பவத்தை வெற்றி பெற்ற புரட்சியாக அந்தப் படம் சித்தரித்தது. அரசாங்கங்களை நடுநடுங்க வைத்த படமாகவும் அது இருந்தது. அந்தப்படம் உலக அளவில் இருந்த பல கலைஞர்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. இதில் இடம்பெறுகின்ற ஒரு காட்சி உலக சினிமா வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது.


ஒடேசா படிகளில் எல்லோரும் ஓடிக்கொண்டிருப்பார்கள். குழந்தையின் வண்டி ஒவ்வொரு படியாக இறங்கி அவந்துகொண்டிருக்கும். சனங்கள் ஓடிக்கொண்டிருக்க, துப்பாக்கி ஏந்தியவர்கள் மேலேறிப் போய்க்கொண்டிருக்க, குழந்தை ஒவ்வொரு படியாக கீழிறங்கிவருகிறது. இந்த மாதிரியான படபடப்பை ஏற்படுத்திய காட்சியானது திரும்பத் திரும்ப உலகின் பல படங்களில் மாற்றிமாற்றி திரும்பத்திரும்ப சொல்லப்பட்ட காட்சியாக இருந்தது.

அதேபோல எதிர்மறையான கருத்துக்கள் சொல்லப்படுகின்ற படங்களும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. ஹிட்லரின் செல்லப்பெண் என்று சொல்லப்படுகின்ற ஆவணப்பட இயக்குனர் லெனி ரீப்செந்தால் இயக்கிய ‘தி வில்’ படத்தை அனைத்து நாடுகளும் தடைசெய்தன. ஹிட்லருக்கு ஆதரவாக அந்தப்படம் இருக்கின்றது, ஹிட்லருக்கு ஆதரவான ஒரு கருத்தை அந்தப்படம் உருவாக்கும் என்று சொல்லி உலக நாடுகளில் அதனைத் தடைசெய்தார்கள். என் அனுபவத்தின்படி சினிமா சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியிருக்கிறது. உருவாக்கி வருகிறது.

தமிழ் அல்லது இந்திய சூழலில் படங்கள் சமூகம் சார்ந்து மாற்றங்கள் கொண்டுவர வேண்டுமா? அல்லது தனி மனித ஒழுக்கங்கள் சார்ந்து மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமா?

இந்த சினிமாவிற்கான ரசனையை யார் உருவாக்குகிறார்கள் என்ற கேள்வி முக்கியமானது. ரசிகன் விரும்பித்தான் அந்தப்படத்தைப் பார்க்கச் செல்கின்றானா? அல்லது தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குனர்களும் ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும் என்று அதுமாதிரியான படங்களை எடுக்கின்றார்களா என்பது முக்கியமான கேள்வி.

தனிமனிதனை முன்வைத்து எடுக்கப்படுகின்ற படங்கள் தனிமனித மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்று கேட்டால் ”ஆம்” என்றும் ”முடியும்” என்றும் சொல்வேன். ’அம்பேத்கர்’ படத்தைப் பார்த்தீர்களென்றால் உண்மையில் ஒருவருக்கு சாதி ஒதுக்கல் எத்தனை மனித விரோதமானது எனும் ஆத்ம ரீதியிலான கேள்வியை அப்படம் எழுப்பும். அம்பேத்கர் பட்ட பாடுகள், அம்பேத்கர் அவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்து பெரிய பல்கலைக்கழகங்களில் படித்திருந்தால் கூட, இந்திய சமூகத்தில் எவ்வளவு தூரம் அவமானப்பட்டார் என்பதை அரமடரம் சொல்கிறது. அந்த அவமானங்களையெல்லாம் தாண்டி எப்படி இவ்வளவு பெரிய ஆளுமையாக அவர் மாறுகின்றார்? அம்பேத்கருக்கும் மனைவிக்கும் இடையேயான உறவு எவ்வளவு அற்புதமான உறவாக இருந்திருக்கின்றது! அம்பேத்கருக்கும் அவர்களது தோழர்களுக்கும் இடையேயான உறவு எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக இருந்திருக்கின்றது. கருத்தியல் ரீதியாக காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையேயான உறவு எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றது என்றெல்லாம் தனிமனிதனாக அம்பேத்கரைப் பற்றிய அந்தப் படம் சித்தரிக்கின்றது. ஆன்மீக மலர்ச்சியை அம்பேத்கர் படம் தனியொரு மனிதனாக உங்களுக்குக் கொடுக்க முடியும்.

இதேமாதிரியான ஆளுமையாக தமிழகத்தில் பெரியார் இருக்கிறார். தோழர் ஜீவா இருக்கிறார். பெரியார் மிகப்பெரிய சமூகச் சீர்திருத்தவாதி. ஜீவா அப்பழுக்கற்ற பொதுவுடமையாளர். அதேபோல காமராஜர். இவர்கள் குறித்த படங்களெல்லாம் கூட அம்பேத்கர் போல ஒரு ஆன்மீக மலர்ச்சியை ஏற்படுத்த முடியும். ஜாபர் பட்டேலுக்கு அம்பேத்கர் கிடைத்த மாதிரி இங்கு பெரியாருக்கும், ஜீவாவிற்கும், காமராஜருக்கும், அண்ணாதுரையை உருவாக்கவும் தமிழ்ச்சினிமா சூழலில் இதுவரைக்கும் ஜாபர் பட்டேல் இல்லையென்பது கொடுமை.

அண்மையில் ”இனம்” என்ற படம் வெளியாகியது, அந்தப் படத்திற்கு வந்த எதிர்ப்பிற்கும் அதேபோல ”வித் யு வித் அவுட் யூ” படத்திற்கு வந்த எதிர்ப்பினை எப்படி பார்க்கிறீர்கள்.?

என்னுடைய பார்வை என்னவென்றால் எந்த படத்தையும் தடைவிதிக்க கூடாது. மோசமான படத்திற்கான எதிர்வினை கடுமையான விமர்சனமாகத்தான் இருக்க வேண்டும். படைப்பு ரீதியாக எடுத்துக்கொண்டீர்களென்றால் மோசமான படத்திற்கு எதிர்வினையானது நல்ல குறும்படமாகவோ எங்களவில் பெரும்படமாகவோ எடுப்பதுதான் அந்தப்படத்திற்கு எதிர்வினையாக இருக்கும். ”இனம்” படமானாலும், ”மெட்ராஸ் கஃபே”வானாலும், ”வித் யு வித் அவுட் யூ” ஆனாலும் இதுதான் என் நிலைப்பாடு.


அதே சமயத்தில் ‘இனம்’ படத்திற்கும், ‘மெட்ராஸ் கஃபே’ படத்திற்கும், ‘வித் யு வித் அவுட் யூ’ படத்திற்கும் இடையே என்னால் வித்தியாசம் காட்ட முடியும். இந்திய தேசிய நிலைப்பாட்டின் படி இந்திய உளவுத்துறையின் பார்வையில் எடுத்த படம் ”மெட்ராஸ் கஃபே”. ”இனம்” படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. ஆயினும், சந்தோஷ் சிவனின் அரசியல் படங்களைப் பொறுத்தவரை எனக்கு வேறொரு நிலைப்பாடு இருக்கின்றது. என்னவென்றால், தேசிய விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து படம் எடுக்க உள்ளார்ந்த நேசமோ, ஆழ்ந்த அறிவோ அவருக்கு இல்லை என்பது எனக்கு திட்டவட்டமாகத் தெரியும். அவருடைய இரண்டு படங்கள் இதையே எனக்கு உணர்த்தின. ஒன்று ஈழப் பிரச்சினையை வைத்து அவர் எடுத்த ”டெரரிஸ்ட்”. இன்னொன்று காஷ்மீர் பிரச்சனையை மையமாக வைத்த ‘தஹான்’ என்றொரு படம். அந்த இரண்டு படங்களிலும் அரசின் பார்வையிலிருந்து போராளிகளை கொச்சைப்படுத்துவதுதான் அவரின் பார்வையாக இருக்கும். அதேபார்வைதான் ‘இனம்’ படத்திலும் அவர் கைக்கொண்டிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதுவே அவரது சிந்தனைப் பள்ளி. ‘இனம்‘ படத்தின் தலைப்பிலேயே அதற்கான விஷமத்தனம் இருக்கின்றது. கூட்டம், கும்பல் என்று பொருள்கொண்டு ”மாப்” என்று இனம் படத்திற்கு துணைத் தலைப்பு வைத்திருக்கின்றார்.

படத்தைப் பார்க்காமலேயே ”இனம்” படம் இப்படியாகத்தான் இருக்கும் என்ற முடிவிற்கு எப்படி வருகின்றீர்கள்?

படத்தைப் பார்க்காமல் முழுமையான மதிப்பீட்டினை நிச்சயமாக முன்வைக்க முடியாது. அப்படிச் செய்யவும் கூடாது. ஒரு தேசிய இனப்போராட்டப் பிரச்சினையை சந்தோஷ் சிவன் எவ்வாறாக அணுகுகிறார் என்பதை வைத்து எனக்கு இதைச் சொல்வதற்கு இரண்டு ஆதாரங்கள் உள்ளன. ஒன்று, அவருடைய ’டெரரிஸ்ட்’ படத்தில் பார்த்தால் ராஜீவ் காந்தி படுகொலைப் பிரச்சினையை முன்வைத்துதான் அவர் படம் எடுத்திருக்கின்றார். அந்தப் பிரச்சினை என்னவென்று எங்களுக்கும் தெரியும். இந்தக் குறிப்பிட்ட சம்பவத்துக்குப் பின்பாக நிறைய அரசியல் முரண்பாடுகள் இருக்கின்றன. அந்தப் படத்தைப் பார்த்தீர்களேயானால் அவ்வித அரசியல் முரண்பாடுகள் எல்லாமே அரசியல் நீக்கம் பெற்றுவிடுகின்றன. அந்தப் பிரச்சனை எதை நோக்கிப் போகும் என்றால், ஒரு கர்ப்பிணிப்பெண் தற்கொலைப் போராளியாக முடியுமா? அது பாவமில்லையா? என்ற அறவியல் கேள்வியுடன் இயக்குனர் முடிப்பார். அரசியல் பிரச்சினை ஒன்றினை தாய்மை சார்ந்த அறவியல் கேள்வியாக சந்தோஷ் சிவன் அணுகுகிறார். இங்கு பிரச்சினை கருவில் இருக்கின்ற குழந்தையை கலைப்பது சரியா பிழையா என்ற அறவியல் கேள்வி அல்ல. இவர் முன்வைக்கக்கூடிய கேள்வி ஆணாதிக்கம் சம்பந்தப்பட்ட கேள்வி மட்டுமல்ல, மதம் சம்பந்தப்பட்ட கேள்வியும் கூட. கருவைக் கலைக்கலாமா? வேண்டாமா? என்பது ஒரு பெண்ணின் உரிமை சம்பந்தப்பட்ட விசயம். அப்படியெனில் ஒரு அரசியல், வரலாற்று ரீதியான கேள்வியை இப்படி அறவியல் கேள்வியாக சந்தோஷ் சிவன் கொண்டுவந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

காஷ்மீர் தொடர்பான அவரது ‘தஹான்” என்ற படத்தில் சின்னப் பையனை வெடிகுண்டு வைக்க அந்தப் போராளிகள் பயன்படுத்துவார்கள். இது அந்தப் பையனுக்கே தெரியாது. இதுதான் அந்தப் படம். காஷ்மீர் சம்பந்தமாக 25க்கும் அதிகமான படங்கள் வந்திருக்கின்றன. அங்கிருந்து வருகின்ற செய்திகளைப் பார்த்தீர்களென்றால் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரியும். உலகிலேயே அதிகமாக பாலியல் வல்லுறவு நடக்கின்ற இடம் அதுதான். உலகிலேயே அதிகமாக ஒடுக்கப்படுகின்ற மக்கள் வாழ்கின்ற பகுதி காஷ்மீர்தான். ”பாதி விதவைகள்” என்று ஒரு ஆவணப்படம் வந்திருக்கின்றது. காணாமல் போனவர்களின் மனைவிகள் தான் ‘பாதி விதவைகள்’ என்ற பதத்தில் வருகின்றார்கள். இந்தச் சொல் டிக்ஷனரியில் இடம்பெறும் வகையில் காஷ்மீர் பிரச்சினை வளர்ந்துள்ளது. கணவன் செத்துவிட்டாரா? உயிருடன் இருக்கின்றாரா? என்பது தெரியாது. ஒருவேளை அவர் இறந்துவிட்டாரெனில் அவரை மறந்துவிட்டு ”விதவை” என தன் பங்கிற்கு ஒரு வாழ்வினை அவள் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், கணவன் வருவாரா? வரமாட்டாரா? என்று ஏங்குகின்ற ஆயிரக்கணக்கான பெண்கள் காஷ்மீரில் இருக்கின்றார்கள். இந்த ‘பாதி வலிகைநைள’ப் பற்றி சிலர் படமெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். அங்கு நிலவி வருகின்ற மனித உரிமை மீறல்களைப் பற்றி சிலர் படமெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

சந்தோஷ் சிவன் என்ன படமெடுக்கிறார்? சின்னக் குழந்தைகள் எப்படி தற்கொலைப் போராளிகளாகிறார்கள் என்று படமெடுக்கிறார். அதேபோல இலங்கையில் நடப்பது இனப்பிரச்சனை. கலாச்சாரப் பிரச்சினை. அவர்களுடைய பொருளியல் விடுதலைக்கான பிரச்சினை. அவர்களுடைய அரசியல் விடுதலைக்கான பிரச்சினை. சந்தோஷ் சிவன் அதனை அணுகுகின்ற விதம் என்ன? அது கும்பல்களுக்கு இடையிலான பிரச்சினை என்கிறார் அவர். இத்தகைய மனப்பான்மை உடைய ஒருவரிடமிருந்து ஒரு நல்ல படம் வருமென்று நம்பிக்கை எனக்கு இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் இல்லையா?

ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதுகையில் உள்ளடக்கம் சார்ந்துதான் அதிகமான விமர்சனங்கள் வருகின்றன. வடிவம் சார்ந்தும் விமர்சனங்கள் அதிகம் எழுதப்படுவதில்லையே ஏன்?

தமிழ்ச்சூழலில் எங்கெங்கெல்லாம் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன என்று பார்த்தால், தினசரி, வார, மாத இதழ்களிலெல்லாம் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. அதேபோல டி.வி. மற்றைய ஊடகங்களிலும் சினிமா விமர்சனம் செய்யப்படுகிறது. இந்த விமர்சனங்களில் 99 சதவீதம் வடிவம் சார்ந்த விமர்சனங்கள்தான். இன்னும் சொல்லப்போனால் ரசனை சார்ந்த விமர்சனங்கள்தான் எழுதப்படுகின்றன. பேசப்படுகின்றன. சினிமா என்ன பிரச்சினையை பேசுகிறதோ அந்தப் பிரச்சினையோடு சம்பந்தப்படுத்தி எழுதவேண்டிய சமூக விமர்சனங்கள் இங்கு முற்றிலுமே துப்புரவாக இல்லாமலாகின்றது. இந்தச் சூழலில் யாரோ ஒருவராவது திரைப்படம் பேசுகின்ற விஷயங்கள், வெளிச்சமூகத்தில் என்ன விதமாக நிலவுகின்றது என்று உறவுபடுத்திப் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றதில்லையா? இந்த தேவையின் அடிப்படையில்தான் என்னுடைய விமர்சனங்கள் எழுதப்படுகின்றன.


”வித் யு வித் அவுட் யூ” படத்தை எடுத்துக்கொண்டால் அதனின் காட்சியமைப்புகள் சார்ந்து நிறைய விஷயங்கள் நான் எழுதியிருக்கின்றேன். ஒரு காட்சிப் பிம்பதிதை எந்தவிதமாகப் புரிந்துகொள்வது எனத்துவங்கி அந்தப் படத்தின் நிகழ்களம் எதுவென்று நான் சொல்லியிருக்கின்றேன், படம் எங்கு நடக்கின்றது என்பதை அலசி ஒரு குடியிருப்பு, அந்தக் குடியிருப்பில் வந்த தமிழ்சினிமா பாட்டு, ஏழை மக்களின் குடியிருப்பு என்பது அந்த கேமரா கோணங்களிலேயே தெரிய வருகின்ற விஷயம் என்பதைச் சுட்டியிருக்கிறேன். கதை நிகழும் காலகட்டத்தை அவள் பாடுகின்ற பாடலின் வாயிலாக விளக்கியிருக்கின்றேன். கதை எந்த மனநிலையில் நிகழ்கின்றது என்பதை இந்த இசைத்துணுக்குகளைக் கொண்டு ஆதாரமாக வைத்துப் பார்க்கமுடியும். இதுமாதிரியான விஷயங்களையும் அந்தப்படத்திற்கான விமர்சனத்தில் நான் எழுதியிருக்கின்றேன். (யமுனா ராஜேந்திரனின் வித் யு வித் அவுட் யூ படத்திற்கான விமர்சனம் படிக்க)

‘ரே’யின் படங்களைக் குறித்து எழுதுகின்ற நேரத்தில் இசையைக் குறித்தும் நிறைய நான் எழுதியிருக்கின்றேன். ரசனை சார்ந்த விமர்சனங்கள் எழுதுவது மிகவும் சுலபமான விஷயம். இந்த மாதிரியான விமர்சனங்கள் நிறைய எழுதலாம். என்னைப் பொறுத்தவரை ரசனை சார்ந்த விமர்சனங்கள் ஒன்றிரண்டோடு நிறுத்திக்கொண்டு, பெரும்பாலும் பேசப்படாத பார்வையிலமைந்த விமர்சனங்கள் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். விமர்சனங்களில் சொல்லப்படாத விஷயங்களை கண்டுபிடித்து எழுத வேண்டும் என்று முக்கியமாக யோசிக்கின்றேன். இதனை இயக்குனர் மணிரத்னம் பற்றி நான் காட்சிப்பிழை இதழில் எழுதிய தொடரில் இருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக ’இருவர்’ படத்தில் எப்படி இசையும் காட்சியும் ஒன்றி வருகின்றது என்பதைக் குறித்து எழுதியிருக்கின்றேன். அழகியல் சார்ந்தும் விவரித்திருக்கின்றேன்.

ஒரு காட்சியை விவரிக்கையில் ஒரு கேமராவின் மொழியைத்தான் என்னுடைய மொழியாக நான் கையாள்கிறேன். உதாரணமாக ”பார்லிக் கதிர்களை அசைத்துச்செல்லும் காற்று”, என்பதனை நான் விவரிக்கும்பொழுது கேமராவின் பார்வையில்தான் என் மொழி செயல்படுகிறது. விமர்சனங்கள் உண்மையில் எழுதும் தர்க்கத்திற்கு தகுந்தமாதிரியாக வரும். ஒரு அரசியல் பிரச்சினைதான் ஒரு படத்திற்கான பிரதான பிரச்சினையாக வருகிறதென்றால் அரசியல் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான மொழி வடிவத்தைத்தான் எனது விமர்சனத்திற்கு நான் தேர்ந்துகொள்கின்றேன்.

நான் காட்சி வடிவம் சார்ந்து விவரிக்க வேண்டுமானால் கேமரா மொழிதான் தேர்ந்தெடுப்பேன். என்னுடைய விரிவான கட்டுரைகளில் இதனைப் பார்த்தாலே தெரியும். பரதனின் ”வைஷாலி” படத்தில் வண்ணங்கள் எவ்வாறு பாவிக்கப்பட்டிருக்கின்றது என்று எழுதியிருக்கின்றேன். ”வித் யு வித் அவுட் யூ”, அசோக கந்தகஹமாவின் ’இனி அவன்’, பிரசன்ன விதானகேவின் பல படங்களுக்கு நீங்கள் சொல்கின்ற விமர்சனங்கள் நான் எழுதியிருக்கின்றேன். இன்னும் முத்தாய்ப்பாகச் சொல்லவேண்டுமென்றால், பாலு மகேந்திராவுடன் என்னுடைய உரையாடல் சம்பந்தமான எனது புத்தகம் முழுக்க முழுக்க அவரது படங்களின் அழகியல் சம்பந்தப்பட்ட புத்தகமாகத்தான் வெளிவரவிருக்கிறது. முக்கியமாக அவரது படத்தில் வெளிச்சமும், வண்ணங்களும் எவ்விதம் பாவிக்கப்பட்டிருக்கின்றது என்பது பற்றி மட்டும் 60 பக்கங்களுக்கு அவருடன் நான் உரையாடியிருக்கின்றேன்.

எழுதப்படுகின்ற பெரும்பாலுமான விமர்சனங்கள் ஒரு திரைப்படத்தினை சமூகத்தோடு தொடர்புபடுத்தாமல் வெறுமே ரசனை கண்ணோட்டத்தோடு மட்டுமே இருப்பதால் அதற்கு மாற்றான விஷயங்களை என்னுடைய விமர்சனங்களில் நான் வலியுறுத்துகின்றேன்.

நீங்கள் நாவலொன்றுக்கு விமர்சனம் எழுதியிருந்தீர்கள். அந்த விமர்சனத்தை அந்நாவலின் எழுத்தாளர் எதிர்மறையாகத்தான் பார்த்தார். விமர்சித்தவருக்கு இலக்கிய அனுபவம் இல்லை எனவும் கூறினார். இதேபோல சினிமாவிலும் இலக்கியத்திலும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் இல்லையே ஏன்?

சமூகப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள், சம்பவத்தை நேரடியாகச் சந்தித்தவர்கள் என இவர்களது சொல்முறை மிகப்பெரிய அகன்ற பரப்பைப் படைப்பில் எடுத்துக்கொள்கிறது. வெகு நுட்பமாக சம்பவங்களையும் உறவுகளையும் அற்புதமாக அவர்களது படைப்புகள் சொல்கின்றன. வாழ்க்கையைப் பற்றிய விசித்திரங்களைச் சொல்கின்றன. இப்படியான ஆழ்ந்த அனுபவங்கள், பார்வைகள் கொண்டவர்களுக்கு இலக்கிய வாசிப்பு இல்லை. பயிற்சியும் இல்லை. இவர்களது படைப்புக்களை அதியற்புதமான சினிமாக்களாகப் படைக்க முடியும்.

இலக்கியத்தை வாசிக்க மட்டுமே செய்பவர்களுக்கு அனுபவம் மிகவும் குறைவு. அவர்கள் சம்பவத்தை வர்ணிக்கின்றபொழுது அவர்களால் இலக்கியத்தரத்தில் எழுதிவிட முடியும். காரணம் அவர்களுக்கு அந்த எழுத்துப்பயிற்சி இருக்கின்றது. இன்னொரு விஷயம் நேரடியாகச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நேரடியான துன்பத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்க்கையை ரசிப்பதற்கான சந்தர்ப்பமே வாய்ப்பதில்லை
எழுதுபவர்களுக்கு இலக்கியப் பயிற்சி இருக்கின்றது. வாழ்க்கை அனுபவம் இல்லை. தமிழில் மட்டுமே நான் நாவல்கள் வாசிப்பவனில்லை. தமிழில் பத்து நாவல்கள் என்றால் ஆங்கிலத்தில் இருபது நாவல்கள் வாசிப்பேன். உலகத்தின் மிகச்சிறந்த நாவல்களையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு இலக்கிய வாசிப்பு இல்லையென்று சொல்வது அபத்தமானது. இதற்குமேல் இதில் சொல்ல என்ன இருக்கிறது?

ஈழத்தமிழர்களின் கதையைப் படமாக எடுக்கவேண்டுமென்றால் எந்த தளத்தில் வைத்துப் படமெடுக்க முடியும்?

உங்கள் படத்தை நேர்மையாக ஈழத்திலேயே எடுக்க முடிந்த சூழல் அங்கு முற்றிலுமாக இல்லை. இப்பொழுது தமிழகத்திலும் இந்தப் பிரச்சனையை முன்வைத்து எடுக்கபட்ட படங்கள் உருப்படியாக இல்லை என்பது ஒன்று. உருப்படியாக உருவாக்கக் கூடிய டைரக்டர்கள் இல்லை என்பழ இன்னொன்று. அப்படியான இயக்குனர்கள் வந்தாலும் அவர்களது படங்கள் சென்சாரிலிருந்து தப்புமா? என்பது மற்றொன்று.

அதே சமயத்தில் எனக்கொரு சின்ன நம்பிக்கை வந்திருக்கிறது. ”செங்கடல்” படம் பார்த்ததிலிருந்து, இலங்கைப் பிரச்சனையையும் கொண்டுவந்து, தமிழ் பிரச்சனையையும் முன்வைத்து தமிழகத்தின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்திருக்கின்ற படம் அது. அந்தப் படத்தைப் போராடி சென்சார் சான்றிதழ் வாங்கமுடிந்த சூழல் இருக்கின்றது. இந்தமாதிரியான படங்கள் உலக அளவிலான திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிகின்ற சூழலும் உள்ளது. நீங்கள் தமிழ்நாட்டில் ஒரு படத்தை எடுத்துவிட்டு, இந்தியன் சென்சார்க்கெல்லாம் செல்லாமல் ஒரு கம்பெனியின் வாயிலாக அந்தப் படத்தை மேற்கில் திரையிடக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அது எல்லாவற்றையும் விடவும் உண்மையிலேயே ஒரு நல்ல படத்தை உருவாக்க முடியுமென்றால் அதற்கான சூழ்நிலை மேற்கத்திய நாடுகளில் புகலிட நாடுகளில்தான் உள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைவகுப்பில் இறுதி ஆண்டு படிக்கிற மாணவர்கள் ஒரு குறும்படம் எடுத்திருந்தார்கள். ஒரு பையன் வேகவேகமாக சைக்கிளில் செல்கின்றான். சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் சில பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பவும் தன் அறைக்குள் வந்து சாப்பிட்டுவிட்டு பயத்துடனேயே இருந்துகொண்டிருக்கின்றான். சிறிது நேரத்தில் கறுப்பு முகமூடி அணிந்துகொண்டிருக்கின்ற பல ஆட்கள் அந்த அறைக்குள் வருகின்றனர். வந்தவர்கள் அந்தப் பையனை அடிக்கின்றார்கள். அடித்து உதைத்து அந்தப்பையனை இழுத்துச்செல்கின்றார்கள். முள்ளிவாய்க்காலுக்கு பிற்பாடான பல்கலைக்கழக மாணவனின் வாழ்க்கையை அப்படம் சொல்கின்றது. கடத்தலை அதை யார் செய்கிறார்கள்? ஏன் செய்கிறார்கள்? என்பதற்கான பதில் அந்தக் குறும்படத்தில் காணக்கிடைப்பது இல்லை. அப்படிப் பார்க்கையில் ஒரு யதார்த்தத்தை அப்படம் முன்வைக்கிறது. அது என்னவென்றால், மாணவர்கள் இம்மாதிரியான சூழலில் வாழ்கிறார்கள். பாதிக்கப்படுகிறார்கள் என்ற விஷயத்தை அந்தக்குறும்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். ஈழத்திலிருந்து வந்த இப்படம் வித்தியாசமான அனுபவத்தை தருவதாக இருக்கிறது.

இறுதியாக எனது இளம் நண்பர்களுக்குச் சில வரிகள் சொல்ல விரும்புகிறேன். எழுத்திற்குக் கொடுக்கக்கூடிய அதே முக்கியத்துவத்தை உரையாடலுக்கும் கொடுங்கள் என்று சொல்வார்கள். உரையாடலில் எதையும் மறைக்க முடியாமல் உடனடியான உண்மை வெளிப்படும். அறிவுக்குத் தேடி அறிதலைத் தவிர வேறு குறுக்கு வழி இல்லை எனது இளம் நண்பர்களே. ‘படிக்கப் படிக்க உன்னுடைய அறியாமைதான் வெளிப்படும்’ என்று விவேகானந்தர் சொல்வார். லெனின் சொல்வார் : படி,படி,படி. இதiனையே நான் உங்களுக்கும் சொல்லி விடைபெறுகிறேன். இந்த உரையாடலுக்கான வாய்ப்பளித்த தமிழ் ஸ்டுடியோ அருணுக்கும் என்னுடனான உரையாடலில் ஈடுபாட்டுடன் பங்குபற்றிய படிமை மாணவ நண்பர்களுக்கும் எனது நன்றியும் அன்பும்..