ராமையாவின் குடிசை - எரிக்கப்படாத உண்மைகள்

உலகின் விலைமதிக்கமுடியாத ஒரு பொருள் உண்மைதான். வரலாற்றின் அத்தனை நூல்களும் கலைகளும் வரலாறு கடந்த போன உண்மைகளை நிறுவவே பயன்பட்டு வந்திருக்கின்றன

கலை என்பது கலைக்காகவா மக்களுக்காகவா என்ற விவாதம் காலந்தொட்டு இன்றும் நிகழ்ந்தே வருகின்றது. கலையழகியலுடன் உருவாக்கப்பட்ட கலைவடிவங்களும் இன்றுவரை போற்றப்பட்டு வந்தாலும், மக்களுக்காக உருவாக்கப்பட்ட கலைதான் காலங்கள் கடந்து இன்றும் மக்கள் வாழ்வோடு வாழ்ந்து வருகின்றது. நெற்களஞ்சியமாக புகழப்பட்ட தஞ்சாவூரில் நெற்களைத் தவிர்த்து சாதியும் எத்தனை ஆழமாக விதைத்து வளர்க்கப்பட்டது என்பது அரசியல் மறைத்து வரும் உண்மை. வர்க்கம், சாதி, நிலப்பிரபுத்துவம் போன்ற அத்தனை குரூரங்களும் எப்படி 44 உயிர்களை உயிரோடு எரித்துக் கொன்றது என்பதை, சட்டம் தவறவிட்ட உண்மைகளோடு நம் கண்முன்னே கொண்டுவருகின்றது ‘ராமையாவின் குடிசை’ என்னும் ஆவணப்படம்.

1968. இயேசு பிறந்தநாளென்று உலகம் கொண்டாடிக்கொண்டிருந்த அதே டிசம்பர் 25 ஆம் நாளில், 44 விவசாய உயிர்கள் கீழவெண்மணியில் ராமையாவின் குடிசையில் உயிரோடு எரித்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையின் அடித்தளமாக விளங்கியது நிலப்பிரபுத்துவம். அந்த வரலாற்றோடு துவங்குகிறது இந்த ஆவணப்படம். கோவில்களின் கீழ் இருந்த நிலம் எப்படி ஒருசில உயர்சாதியினரின் கைகளில் குத்தகைக்கு விடப்பட்டன என்பதும், மண்ணின் மைந்தர்களாக விவசாயிகள் எப்படி விவசாய அடிமையாக்கப்பட்டார்கள் என்ற உண்மையோடு துவங்கும் இப்படம் ஒவ்வொரு நிமிடமும் விளக்கும் உண்மைகள் நெஞ்சை உலுக்குபவை. நிலப்பிரபுக்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான வர்க்கப் போராட்டமான இந்த பிரச்சினை எப்படி சாதி எனும் கொடூர வடிவத்தை தன்னோடு இணைத்துக்கொண்டது, வறியவர்கள் அடிபடுகையில் அரசாங்கம் எப்படி கண்மூடி செல்கிறது, அதிகாரம் எப்படியெல்லாம் உழைப்பாளிகளை அடக்கிவைத்திருக்கிறது, அரசாங்கம், அதிகாரம் போன்றவை எப்படியெல்லாம் பணம் படைத்தவர்களை காத்தும், ஏழைகளை எரித்தும் வந்திருக்கின்றது என்று இந்த பிரச்சினையின் அடித்தளம் வரை போய் அலசுகிறது ‘ராமையாவின் குடிசை’.
இதற்கு முன் நான் பார்த்திருந்த பல ஆவணப்படங்கள், ஒரு மனிதரைப் பற்றியோ, அல்லது ஒரு பிரச்சினை பற்றியோ பலதளங்களில் பேசுபவையாக இருந்திருக்கின்றன. ஆனால், கல்லூரி நாட்களில் நான் பார்த்த இந்த ஆவணப்படம், திட்டமிட்டு நடத்தப்பட்டு, திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒரு படுகொலையை படிப்படியாக நம்முன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றது. என்ன மாதிரியான சூழ்நிலை அப்போது வெண்மணியில் இருந்தது, யாரெல்லாம் இந்த பிரச்சினையில் சம்பந்தபட்டு இருந்தார்கள், எப்படி இந்த பிரச்சினை படிப்படியாக விஸ்வரூபம் எடுத்தது, படுகொலை நடந்த அந்த நாளில் என்ன நடந்தது, யார் நடத்தியது என்பதை தெளிவாக பல கோணத்தில் இருந்து அணுகுறது இப்படம். இப்படத்தின் முக்கியமான சிறப்பம்சம், அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களையே வைத்து இந்த படத்தை ஆவணப்படுத்தி இருப்பதுதான்.

பொதுவாக, ஒரு பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டுதான் பெரும்பாலான படங்கள் எடுக்கப்படும். இப்படத்திலும் பாதிக்கப்பட பொதுமக்கள், சங்கங்களை சார்ந்தவர்கள், இயக்கங்களை சார்ந்தவர்கள் என அனைவரது பார்வையிலும் படம் நகர்த்தப்பட்டாலும், கொலைகளை செய்த கூட்டத்திலிருந்தும் அதற்கு துணை போன கூட்டத்திலிருந்துமே வாக்குமூலங்களைப் பெற்று அதையும் இப்படத்தில் இணைத்ததுதான் இப்படத்தின் உன்னதத்தை கூட்டுகின்றது. இந்த கட்டத்தில் இது ஒரு படம் என்பதைத் தாண்டி, ஒரு வழக்கு விசாரனையை நேரில் பார்ப்பதுபோன்ற ஒரு அசல் உண்மையான முகத்தை அணிந்துகொள்கிறது. வாதி, பிரதிவாதி ஆகிய இருவரின் வாக்குமூலங்களையும் சேகரித்ததைப் போல, ஒவ்வொருவரின் பேச்சும், சட்டம் தவறவிட்ட உண்மையின் மேல் மெல்ல மெல்ல நீரூற்றி விலக்குகின்றது. ஒவ்வொருவர் கூற்றின் வழியும் சம்பவங்கள் வேறுவேறு வகையில் நம் கண்முன் விரிய, உண்மை ஒரே வகையில் நம்முன் அறைகிறது. இதில் கொலைகளை செய்த கூட்டத்திடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் அவர்களுக்கு தெரியாமல்தான் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது முக்கியமான ஒரு ஆவணச்செய்தி.
ஒரு ஆவணப்படத்திற்கு நேர்மையும் உண்மையும்தான் மிகமிக அவசியம். அதை இந்தப் படம் முழுமையாக நிவர்த்தி செய்கிறது. சமூகத்தில் மறைக்கப்பட்ட, நீதியின் முன் பதுங்கிய, அரசியலால் புதைக்கப்பட்ட, அதிகாரத்தால் எரிக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சம் போட்டு கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு தெரியவைப்பதில்தான் இதுபோன்ற படங்களின் கடமையும் தேவையும் இருக்கிறது.

இந்த இரண்டையும் ‘ராமையாவின் குடிசை’ இம்மி பிசிறாமல் செவ்வனே செய்கிறது. அழகியல் ரீதியாக இப்படத்தை கூற்றுக்கு உட்படுத்துவது, விவசாயியின் வியர்வையை ஏ.சி ரூமில் அமர்ந்திருக்கும் கவிஞன் அழகென உவமை கூறி விளிப்பதைப் போலத்தான் இருக்கும். ஆனால், திரைமொழி ரீதியாக இப்படத்தை நிச்சயம் கூற்றிற்கு உட்படுத்த வேண்டும். திரைமொழி வகையாக பார்த்தாலும் இப்படம் பிரச்சாரப் பாணியிலோ அல்லது வசன ஆவணமாகவோ வந்துவிடவில்லை. ஒரு வரலாற்றின் தோன்றலில் ஆரம்பித்து, படிப்படியாக ஒரு கொடுமையின் வீரியத்தை தனது காட்சிகள் ரீதியாகவும், படங்கள் ரீதியாகவும், இசை மூலமாகவும் மெல்ல மெல்ல நமக்குள் ஏற்றுகிறது இப்படம்.

ஒரு கட்டத்திற்கு மேல், வேறு ஏதோ ஒரு ஊரில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்து சும்மா உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பதாக இல்லாமல், நம் முன் கண்முன்னே விரியும் கொடுமைகளின் வலியை பங்குபோட்டுக்கொள்கிறது மனம். ‘அங்க என்ன நடந்துச்சுனா’ என்று பாட்டி கூறும் கதையை வாய்மூட மறந்து நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல, அப்படுகொலைகளின் முழு வரலாற்றையும் அறிய அடுத்தடுத்த தகவல்களையும், வாக்குமூலங்களையும் தேடிக்காத்திருக்க துவங்குகிறது நம் மனம். இதற்காக போராடிய மனிதர்கள், இயக்கங்கள், இயக்கக்கொடியை பாதுகாக்க உயிரையும் தரத் தயாராக இருந்த விவசாயிகள் என அனைவரையும் பதிவு செய்திருக்கிறது இப்படம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளையும், வெண்மணியில் இயக்கத்தின் ஈடுபாட்டையும், கட்சிப் பத்திரிக்கையின் பதிவுகளையும் மட்டுமே காட்டுவது போல் தெரிந்தாலும், இப்பிரச்சினையில் வேறு எந்த கட்சியோ ஊடகமோ முழுமையான உணர்வோடு ஈடுபடவில்லை என்பதும் வரலாறுதான்.

இப்படம் எங்கள் கல்லூரியில் திரையிடப்பட்ட போது, விவசாயி ஒருவர், அந்த நிலப்பிரபுவை கொன்றதை விவரிக்கும் காட்சி வரும்போது நண்பர்கள் நாங்கள் கைத்தட்டினோம். என்ன காரணம், எங்கள் முதிர்ச்சிநிலை, அரசியல் புரிதல் போன்ற எந்த காரணங்களோ தெரியாது, ஆனால் அந்த வயதில் நாங்கள் கைத்தட்டினோம்.
எந்த ஒரு சமூகத்திலும், அந்த சமூகம் சந்தித்த பிரச்சினைகளும், சந்திக்கின்ற பிரச்சினைகளும், அந்த சமூகத்தின் கலைகளுக்கு கருப்பொருள்களாக இருக்கும். முக்கியமாக, இப்போதைய காலகட்டத்தின் பெருங்கலையாகிய சினிமா. ஆனால், நம் சமூகத்தில் மட்டும்தான், இதுபோன்ற நாட்டையே உலுக்குகின்ற, நம் சமூகத்தின் ஆணிவேறான பிரச்சினைகளைப் பற்றி, எந்த ஒரு திரைப்படமும் மறந்தும்கூட வாய்திறக்க மறுக்கும் விந்தை இருக்கின்றது. யாருக்கும் அடிமைப்பட்டது கலை? யாருக்கு பயப்படும் கலை? எந்தவொரு தனிமனிதனுக்கோ கூட்டத்திற்கோ அஞ்சாமல், உண்மையை மட்டும் கருப்பொருளாய் கொண்டு, சமூகம் காண வேண்டிய உண்மைகளையும் தேட வேண்டிய பாதைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவருவதுதான் ஒரு உண்மையான கலையின் தன்மையாக இருக்க வேண்டும். அதைத் தவிர்த்து காதல், ஹீரோயிசம், மசாலா என்று சமூகத்தை முடமாக்கும் ஒரே கிணற்றிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் தவளைகளுக்கு மத்தியில், இந்த உண்மைகளை அடிப்படையாக கொண்டு ஒரு ஆவணப்படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் தோழர் பாரதி கிருஷ்ணகுமார், நிச்சயம் பெரும்பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்.

இப்படத்தை பற்றி எழுத ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த அத்தனை விஷயங்களும் இப்படத்திலேயே சொல்லப்பட்டு இருக்கின்றன. இதை படிப்பதைக் காட்டிலும் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியம், இப்படத்தை பார்ப்பதுதான். தயவுசெய்து ‘ராமையாவின் குடிசை’ பாருங்கள்.

ஆவணப்படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=yTj9tJ5iyyY&list=PL5951EDC91FED319F