லத்தீன் அமெரிக்க சினிமா - 6

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படித்து விட்டுத் தொடர்ந்து இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். முந்தைய பகுதி:


1971 இல் நெல்ஸன் பெரேரா இயக்கிய படம் How Tasty Was My Little Frenchman. மானுடவியல், காலனி ஆதிக்கம், கலாச்சாரம், நாகரீகம், அதிகாரம், பெண்ணியம் போன்றவைகளைப் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் விசாரணைகளையும் முன்வைக்கும் படம் இது.
Hans Staden என்ற ஜெர்மானியர் 1547 மற்றும் 1550-ஆம் ஆண்டுகளில் தென்னமெரிக்காவுக்கு இரண்டு முறை பயணம் செய்தார். இரண்டாவது முறை அவர் ஒரு ஸ்பானியக் கப்பலில் சென்ற போது ப்ரஸீலில் உள்ள பரனாகுவா என்ற துறைமுகத்தில் நின்றது கப்பல். அப்போது அங்கிருந்த போர்த்துக்கீசியர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட ஹான்ஸ் ஸ்டாடனை அவர்கள் தங்களுடைய கோட்டை ஒன்றில் உள்ள ராணுவத்தில் பணிபுரியும்படி உத்தரவிடுகின்றனர். வேறு வழியில்லாததால் 1553 வரை அந்த வேலையைச் செய்கிறார் ஸ்டாடன். ஆனால் ப்ரஸீலில் போர்த்துக்கீசியர்கள் துப்பி ஆதிகுடிகளை ஒழித்துக் கட்டிக் கொண்டிருந்ததால் அவர்கள் போர்த்துக்கீசியர்களைத் தங்கள் ஜென்ம எதிரியாக பாவித்தனர். போர்த்துக்கீசியர்கள் துப்பி இனத்தவரை சிறைப் பிடித்து அவர்களை கிறித்தவர்களாக மாற்றுவதும் அதற்கு உட்படாதவர்களைக் கொல்வதுமாக இருந்தனர். பதிலுக்கு துப்பி இனத்தவர் போர்த்துக்கீசியர்கள் மீது கெரில்லா தாக்குதல் செய்து கொண்டிருந்தார்கள். இப்படியாக இரண்டு பக்கமும் தாக்குதல் நடந்து கொண்டிருந்த சூழலில் போர்த்துக்கீசியர்களின் கோட்டையில் அவர்களுக்காகப் போரிட்ட ஸ்டாடன் ஒருநாள் துப்பி இனத்தவரால் சிறைப்பிடிக்கப்படுகிறார்.

தங்களிடம் உயிரோடு சிக்கிய போர்த்துக்கீசியர்களை மதச் சடங்குகள் செய்து – நாகரீக மனிதர்களாகிய நாம் கால்நடைகளை தெய்வத்துக்குப் பலியிட்டு, பின்னர் அவற்றை உண்பது போல் - தங்கள் குலதெய்வத்துக்குப் படையல் போட்டு பிறகு அவர்களை வெட்டித் தின்பது துப்பி ஆதிகுடிகளின் வழக்கமாக இருந்தது. ஆனால் தென்னமெரிக்காவுக்கு வந்த ஃப்ரெஞ்சுக்காரர்கள் துப்பி இனத்தவரோடு நட்பு பாராட்டினார்கள். அதற்குக் காரணம் மனிதாபிமானம் அல்ல; ப்ரஸீலின் மீதான அதிகாரப் போட்டியே. எதிரியின் எதிரி நண்பன். துப்பி மக்களிடம் மாட்டிக் கொண்ட ஸ்டாடன் அவர்களிடம் தான் போர்த்துக்கீசியன் அல்ல என்றும், அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவன் என்றும், ஃப்ரெஞ்சுக்காரர்களின் நண்பன் என்றும், அதனால் மற்ற போர்த்துக்கீசியர்களைக் கொன்று தின்பது போல் தன்னைத் தின்ன வேண்டாம் என்றும் எவ்வளவோ மன்றாடுகிறார். துப்பி இனத்தவரில் ஓரிருவருக்கு ஃப்ரெஞ்ச் தெரிந்திருக்கிறது. அவர்கள் ஸ்டாடன் சொல்வதைத் தங்கள் தலைவரிடம் மொழிபெயர்த்துச் சொல்கிறார்கள். ஸ்டாடன் ஒரு ஃப்ரெஞ்சுக் கவிதையைக் கூட சொல்லிப் பார்க்கிறார். ஆனால் போர்த்துக்கீசியர்களுக்காகப் போரிட்ட ஒரு வெள்ளைத்தோல் மனிதனின் பேச்சை துப்பி தலைவர் நம்புவதாக இல்லை. ஒரு ஃப்ரெஞ்சுக்காரன் எந்தக் காலத்திலும் தங்களுக்கு எதிராக துப்பாக்கியை எடுக்க மாட்டான் என்று சொல்லும் அவர், ஸ்டாடனை எட்டு பௌர்ணமிகளுக்குப் பிறகு படையல் போடுவதாகச் சொல்கிறார். அந்த எட்டு மாதங்களில் பல போர்த்துக்கீசியர்கள் படையல் போடப்பட்டு துப்பி மக்களால் உண்ணப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாடன்.

ஸ்டாடனிடம் Clairvoyance திறமை இருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது; அடுத்து அவர்கள் எங்கே போக வேண்டும்; ஒரு மிருகம் எப்போது தாக்கப் போகிறது என்பது போன்ற விஷயங்களை மிகத் துல்லியமாக அவர் சொல்வதைப் பார்த்து வியக்கும் துப்பி தலைவர் அவரைப் பலி கொடுப்பதை ஒத்திப் போடுகிறார். அப்போது அந்தப் பகுதிக்கு வரும் ஃப்ரெஞ்சுக்காரர்கள் துப்பி தலைவரிடம் பேசி அவரை விடுவிக்கிறார்கள். தன் நாட்டுக்குத் திரும்பும் ஸ்டாடன் தன் அனுபவங்களையெல்லாம் ஒரு நூலாக எழுதி 1557-ஆம் ஆண்டு வெளியிட்டார். (Voyages to Brazil என்ற தலைப்பில் இந்நூல் 1892-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.)
ஆனால் பிறகு என்ன நடந்தது என்றால், ஸ்டாடன் காப்பாற்றப்பட்டது கர்த்தரின் அருளால்தான் என்று சொல்லி (தேவனின் மகிமைக்கு சாட்சியாக நிற்கிறார் ஹான்ஸ் ஸ்டாடன்!) அவரைக் கொல்லாமல் விட்ட துப்பிகள் அனைவரும் கிறித்தவர்களாக மாற்றப் பட்டார்கள். (ஸ்டாடனிடமிருந்த clairvoyance திறமையும் கர்த்தரின் அதிசயங்களில் ஒன்றாக சாட்சி சொல்லப்பட்டது.)

ஸ்டாடனின் இந்தப் பயணக் குறிப்புகள் தான் தென்னமெரிக்காவில் பதினாறாம் நூற்றாண்டில் பரவிய ஐரோப்பியக் காலனி ஆதிக்கத்தின் மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது. ஸ்டாடனின் அந்தக் கதையைத்தான் படமாக ஆக்கினார் நெல்ஸன் பெரேரா. முடிவை மட்டும் மாற்றி துப்பிகள் ஸ்டாடனைக் கொன்று தின்பதாக அமைத்தார். காரணம், ப்ரஸீலிய கவிஞரும் களச் செயலாளியுமான Oswald de Andrade (1890-1954), 1928-ஆம் ஆண்டு வெளியிட்ட Manifesto Antropófago (நரமாமிச அறிக்கை) என்ற நரமாமிச அறிக்கை. இந்த அறிக்கையின் சினிமா வடிவமே நெல்ஸன் பெரேரா இயக்கிய How Tasty Was My Little Frenchman.

இந்தப் படத்தை நகர்த்திச் செல்லும் முக்கியமான பாத்திரம் செபியோ. அவள்தான் ஐரோப்பியர்களுக்கும் துப்பி இனத்தவருக்குமான பாலமாக இருக்கிறாள். காரணம், ஃப்ரெஞ்சுக்காரர்களோடு பேசிப் பேசி அவளுக்குக் கொஞ்சம் ஃப்ரெஞ்ச் தெரிந்திருக்கிறது. ஆனால் அதே சமயம் துப்பி இனத்தில் நிலவும் பெண்ணடிமைத்தனமும் அவள் மூலம் காண்பிக்கப்படுகிறது. ஜானுக்கு (படத்தில் ஸ்டாடனின் பெயர்) உதவி செய்பவளாக – அதாவது, மனைவியாக செபியோவை நியமிக்கிறார் துப்பி இனத்தலைவர் குனாம். குனாமின் உத்தரவுக்கு எதிராகப் பேச செபியோவுக்கு அதிகாரம் இருப்பதில்லை. துப்பிகள் ஒருவரைக் கொன்று தின்பதற்கு முன் அவரை வேட்டை, போர், மத வழிபாடு போன்ற தங்களுடைய குலச் செயல்பாடுகளோடு இணைத்துக் கொள்வது வழக்கம். ஜான் அவர்களோடு எட்டு மாதங்கள் இருக்கிறான். செபியோதான் ஜான் சொல்வதை இனத்தலைவர் குனாமிடம் மொழிபெயர்த்துச் சொன்னவள். ஆனாலும் அவர்களின் மண வாழ்க்கை ஜானின் உயிரைக் காப்பாற்றுவதற்கு எந்த வகையிலும் உதவியாய் இருப்பதில்லை. செபியோவும் கூட எட்டு பௌர்ணமிக்குப் பிறகு ஜானைத் தின்னும் ஆர்வத்துடன் தான் இருக்கிறாள். இதற்கிடையில் ஜானுக்கு துப்பி மொழியைக் கற்றுக் கொடுக்கிறாள் செபியோ. அவனும் ஒரு துப்பி இனத்தவனைப் போலவே மாறுகிறான். உடம்பில் வண்ணங்களைத் தீட்டிக் கொள்கிறான். துப்பியின் எதிரிகளோடு போரிடுகிறான். இதற்கெல்லாம் அவனுடைய ஒரே நம்பிக்கையாக இருப்பது, எப்படியாவது இந்த இடத்தை விட்டுத் தப்பித்து விடலாம் என்பதுதான்.

எட்டு மாதங்கள் கழிந்து மறுநாள் ஜானைப் பலியிடுவதற்கான சடங்கு நடக்கும் தினத்துக்கு முந்தின மாலையில் செபியோவும் ஜானும் சந்திக்கும் வேளையில் அவன் அவளிடம் கேட்கிறான். ”நான் கொலை செய்யப்பட்டால் நீ அழுவாயா?”

“ஆமாம்; எனக்கு அது வருத்தமாகத்தான் இருக்கும்.”

“ஆனால் நீ என்னைச் சாப்பிடுவாய் தானே?”

அவள் லேசாகப் புன்முறுவல் செய்து விட்டு, ஆமாம் என்பது போல் தலை ஆட்டுகிறாள்.

அந்தத் தருணத்தில் கேமரா வானத்தையும், சூரியனையும், சூரிய ஒளியில் தகதகக்கும் கடலையும் காண்பிக்கிறது. அடுத்து, ஜானின் ஒவ்வொரு உறுப்பாகத் தொட்டுப் பார்த்து அதை எப்படியெல்லாம் அறுப்பார்கள், எப்படியெல்லாம் அது சுவையாக இருக்கும் என்று செபியோ அவனிடம் சொல்கிறாள். படத்தில் மறக்கவே முடியாத காட்சியாக நம் மனதில் அது தங்குகிறது. ”நீ ஒரு துணிச்சல் மிகுந்த வீரனைப் போல் சாக வேண்டும். கோழையைப் போல் அச்சம் அடையக் கூடாது” என்று சொல்லி விட்டு அவன் தலையில் தன் கையை வைத்து, பின் அதை அவனுடைய நாசியிலும் கன்னங்களிலும் தொட்டுத் தடவி அவனுடைய காமத்தை எழுப்புகிறாள் செபியோ. அதே நேரத்தில் அவன் எப்படி கொல்லப்படுவான் என்பதையும் நுணுக்கமாக விவரிக்கிறாள்.


”குனாம் தன் ஆயுதத்துடன் உன் முன்னே வருவார். ’உன்னுடைய ஆட்கள் என்னுடைய மக்களில் பலரையும் கொன்றதால் இப்போது உன்னைக் கொல்வதற்காக வந்திருக்கிறேன்’ என்று சொல்வார்.”

அடுத்த காட்சியில் ஜானின் தலையும் தோளும் க்ளோஸப்பில் காண்பிக்கப்படுகிறது. அவன் முகத்தின் அருகே செல்லும் செபியோ அவனிடம் இப்படி சொல்லச் சொல்கிறாள். ”நான் இறந்தால் அதற்குப் பழி வாங்குவதற்காக என் மக்கள் இங்கே வருவார்கள்.”

”அவர் தன் ஆயுதத்தால் முதலில் உன் தலையில்தான் போடுவார்.” அவள் கற்பனையாக ஆயுதத்தை ஓங்கி அவன் தலையில் போடுகிறாள். அவன் தலையைக் குனிந்து அந்த அடியை வாங்கிக் கொண்டு செத்து விழுவது போல் பாவனை செய்கிறான். இருவரும் சிரிக்கிறார்கள். பிறகு அவனை மெதுவாக பாறையில் படுக்க வைத்தவாறே சொல்கிறாள்: “பெண்கள் உன் உடலின் மீது கொதிநீரைக் கொட்டுவார்கள். பிறகு உன் கைகளும் கால்களும் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு ஒவ்வொருவரும் அதிலிருந்து ஒரு பகுதியைக் கடித்துக் கொள்வார்கள்.” சொல்லிக் கொண்டே அவன் மீது படர்ந்து படுக்கும் அவள் அவனுடைய கழுத்தைக் கடித்தபடி ”என் செல்லக் கழுத்து” என்கிறாள். நாளை அவள் கடிக்கப் போகும் பகுதி அதுதான் என்று பார்வையாளர்களாகிய நாம் புரிந்து கொள்கிறோம். அதன்பின் இருவரும் உருள்கிறார்கள். இரண்டு உருவங்கள் கலவி கொள்ளும் காட்சி மங்கலாகத் தெரிகிறது.

கலவி முடிந்த பிறகு தான் தப்பித்துச் செல்ல வேண்டிய தருணம் வந்து விட்டதை உணர்கிறான் ஜான். தான் செய்து வைத்திருக்கும் படகையும் ஒளித்து வைத்திருக்கும் தங்கத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பும் போது அவன் காலில் குறி பார்த்து அம்பு விடுகிறாள் செபியோ. அதையும் பொருட்படுத்தாமல் அவன் படகை நோக்கி ஓடுகிறான். ஆனால் அவன் சற்றும் எதிர்பாராத வகையில் படகில் ஒரு பெரிய ஓட்டையைப் போட்டு வைத்திருக்கிறாள் செபியோ. கடும் கோபத்துடன், ஏய் அட்டையே என்று கத்துகிறான். (இதில் ஒரு சிலேடை இருக்கிறது. துப்பி மொழியில் செபியோ என்பதன் பொருள் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை!)

அடுத்த காட்சியில் ஜான் கயிறால் கட்டப்பட்டிருக்கிறான். இரண்டு பேர் அவனைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தம் உடலில் பலவித வண்ணங்களைத் தீட்டிய பெண்கள் அவனைச் சுற்றி வந்து அவனைக் கண்டபடி திட்டுகிறார்கள். அந்தப் பெண்களில் செபியோவும் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைகிறான் ஜான். (’நான் கொலை செய்யப்பட்டால் வருத்தப்படுவேன் என்று நேற்று சொன்னாளே?’) அவனைக் கிண்டல் செய்து திட்டுவதில் செபியோ தான் முதன்மையாக இருப்பதையும் காண்கிறான். “இவன் கறி எவ்வளவு ருசியாக இருக்கும்?” “என் செல்லக் கழுத்து…” என்றெல்லாம் அவனைச் சீண்டுகிறாள். அவனைக் கொல்லப் போகும் சடங்குகளில் அவள் தான் பிரதானமாக இருக்கிறாள். அவனைத் தாக்கப் போகும் ஆயுதம் வலுவாக இருக்கிறதா என்று பரிசோதிக்கிறாள். அதை ஜானிடமும் காட்டுகிறாள். ”நீ இன்னும் வீரமாகவும் துணிவாகவும் இருக்க வேண்டும்” என்று அவனிடம் கூறுகிறாள். அவன் அவளைக் கோபத்துடன் பிடித்துத் தள்ளுகிறான். இதை அடுத்து குனாம் ஜானை நெருங்கி அவன் தலையில் ஒரே போடாகப் போட்டுக் கொல்கிறான். சடங்குகளும் இசையும் நடனமும் தொடர்கின்றன.

(செபியோ ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொண்டாள் என்பதை உங்களில் யாரேனும் ஊகிக்க முடிகிறதா? முடிந்தால் பேசாமொழிக்கோ எனக்கோ எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com)
***
மனித மாமிசத்தைத் தின்பதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று பசிக்காகத் தின்பது; இன்னொன்று, மதச் சடங்குகளுக்காக பலியிட்டு அந்தச் சடங்குகளின் ஒரு பகுதியாகத் தின்பது. துப்பி இனத்தவர் ஒருபோதும் பசிக்காக மனிதர்களை வேட்டையாடித் தின்றவர்கள் அல்ல. ஆனால் இன்னொரு நாட்டில் புகுந்து அங்கே வசிக்கும் மக்களின் மொழியையும், கடவுளையும், கலாச்சாரத்தையும் அழித்து, தங்களின் மொழியையும் கடவுளையும் புகுத்திய ஐரோப்பியர்களே நர மாமிசம் தின்பவர்களைக் காட்டிலும் கொடூரமானவர்கள் என்பதே How Tasty Was My Little Frenchman படத்தின் அடிப்படை.

‘The most original meta-cultural theory ever produced in Latin America to the present day’ என்று கருதப்படும் ஆஸ்வால்டின் நரமாமிச அறிக்கை தான் ஃபிடலின் கூபப் புரட்சி, சே குவேராவின் பொலிவிய கெரில்லா போராட்டம் உட்பட லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க-ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இன்று வரை நடந்த எல்லாப் போராட்டங்களுக்கும் காரணியாக அமைந்தது; மட்டுமல்லாமல், க்ளோத் லெவி-ஸ்ட்ராஸின் கலாச்சார மானுடவியல் கண்டுபிடிப்புகளுக்கும் இந்த அறிக்கையே உந்துதலாக இருந்தது என்று சொல்லலாம். எது நாகரீகம், எது காட்டுமிராண்டித்தனம் என்ற அடிப்படைக் கேள்வியை முன்வைக்கும் இந்த அறிக்கை இவ்வாறாக ஐரோப்பியர்களின் கலாச்சார மேலாண்மைவாதத்துக்கு (cultural hegemony) பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. தர்க்கம், ஒருதார மணம் போன்றவற்றுக்கு எதிரான தொல்குடித்தன்மை (Primitiveness) இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்று. (துப்பிகளிடையே ஒருதார மணப்பழக்கம் இருந்ததில்லை.)

”நரமாமிசத்தைப் புசித்தல் (anthropophagy) என்பது நெல்ஸன் பெரேராவின் இந்தப் படத்தில் ஒரு உருவகமாக (metaphor) அமைந்திருக்கிறது. நவீன நுகர்வுக் கலாச்சாரம் என்பது வெளியிலிருந்து வரும் விஷயங்களுக்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்கிறது. ஆனால் ஆஸ்வால்டின் நரமாமிசக் கோட்பாடு வெளி விஷயங்களை “தின்று” விடுகிறதே தவிர அதற்கேற்றபடி தம்மை உருமாற்றிக் (transform) கொள்வதில்லை” என்கிறார் நெல்ஸன் பெரேரா பற்றி நூல் எழுதியிருக்கும் Darlene J. Sadlier.

ஆஸ்வால்ட் ஆந்த்ராதே தன்னுடைய நரமாமிசக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு 1933-இல் ’மெழுகுவர்த்தி அரசன்’ (O Rei da Vela) என்ற ஒரு நாடகத்தையும் எழுதினார். அந்தக் காலத்து ப்ரஸீலிய சினிமா, ஓவியம், நாடகம் போன்றவற்றில் பெரிதளவு தாக்கம் செலுத்தியது இந்த நாடகம். 1960களிலிருந்து 80கள் வரை ப்ரஸீலில் நிகழ்ந்த எதிர்க்கலாச்சார கலை வெளிப்பாடுகள் அனைத்திற்கும் ஆஸ்வால்டின் நரமாமிச அறிக்கையும் இந்த நாடகமுமே அடிப்படையாக இருந்தது. 1983-இல் ’மெழுகுவர்த்தி அரசன்’ திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.


மெழுகுவர்த்தி அரசனிலிருந்து ஒரு காட்சி.
How Tasty Was My Little Frenchman என்ற இந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்த போது எனக்கு ஒரு சிறிய அதிர்ச்சி காத்திருந்தது. துப்பி இனத்தவர் ஆடை எதுவும் அணிவதில்லை. மற்ற சில ஆஃப்ரிக்க ஆதிவாசிகளைப் போல் பிறப்பு உறுப்புகளைக் கூட இலை தழைகளால் மறைப்பதில்லை. முழு நிர்வாணம். சுமார் 3000 பேரை படம் முழுவதும் நிர்வாணமாகவே பார்க்க நேர்ந்ததுதான் அந்த அதிர்ச்சி. இந்த ஒரே காரணத்தினால் ப்ரஸீல் போலீஸ் இந்தப் படத்தைத் தடை செய்து விட்டது. ஆனால் இத்தனை பேரின் முழு நிர்வாணம் நமக்குள் எந்தவிதமான பாலுணர்வையோ அசூயை உணர்வையோ கிளர்ச்சியையோ ஏற்படுத்துவதில்லை என்பது முக்கியமான விஷயம். மூவாயிரம் பேரின் ஆணுறுப்பையும் பெண்ணுறுப்பையும் முழு நிர்வாணமாக ஒன்றரை மணி நேரம் பார்க்கும் போது நமக்குள் சிறிதளவு பாலுணர்வுச் சலனம் கூட ஏற்படுவதில்லை என்றால் என்ன பொருள்? ஒட்டு மொத்தமான ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் சினிமாக்களின் voyeuristic pleasure என்பதையே இதன் மூலம் தோலுரித்துக் காட்டி விடுகிறார் நெல்ஸன் பெரேரா. பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது நிர்வாணத்தில் இல்லை. அந்த நிர்வாணத்தை எந்த நோக்கத்தில், எந்த விதமாகக் காண்பிக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது என்பதே நெல்ஸனின் செய்தி. வேறு விதமாகச் சொன்னால் Gaze (உற்றுப் பார்த்தல்) என்பதில்தான் பாலுணர்வுக் கிளர்ச்சி தூண்டப்படுகிறது. இந்த Gaze என்பதுதான் நம்முடைய வணிக சினிமா முழுவதற்குமான அச்சாணியாக அமைந்திருக்கிறது.

படத்தில் நான் கவனித்த இன்னொரு விஷயம், துப்பி இனத்தவராக நடித்த அத்தனை ஆண்களின் பிறப்பு உறுப்பும் அளவில் மிகச் சிறியதாகவும், (ஐரோப்பிய) ஜானின் பிறப்பு உறுப்பு அளவில் மிக நீண்டும் இருந்தது. மானுடவியல் ரீதியாக எந்த அளவுக்கு நுணுக்கமாக எடுக்கப்பட்ட படம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது இது நம்முடைய காலத்தில், ஒரு கேமராவின் மூலம் சிருஷ்டிக்கப்பட்ட கற்பனைப் படைப்பு என்றே தோன்றாமல் ஒரு ஆவணப் படத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. ஆனால் துப்பி இன மக்களையே வைத்து இந்தப் படத்தை எடுக்கவில்லை என்பது சில விமர்சகர்களின் கருத்து. இதில் நடித்திருப்பவர்கள் ப்ரஸீலைச் சேர்ந்தவர்களே தவிர துப்பி இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் துப்பி மொழியில் எடுக்கப்பட்ட முதல் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


விவாதத்திற்குரிய இன்னும் சில பிரச்சினைகள்: விவிலியத்தில் குறிப்பிடப்படும் திருப்பலிக்கும் (Eucharist) ஆஸ்வால்டின் நரமாமிசக் கோட்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமையையும் சில விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். யோவான் ஆறாம் அதிகாரம், வசனம் 53-இலிருந்து 57 வரை பார்க்கவும்.

”என் மாமிசத்தைப் புசித்து, என் ரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். (யோவான், 6:54)

ஆஸ்வால்டின் நரமாமிசக் கோட்பாடு என்பது மனிதனின் மாமிசத்தைத் “தின்னும் செயல்” அல்ல. அது ஒரு உருவகம். அவ்வளவுதான். ஆனால் தென்னமெரிக்கர்கள் நரமாமிசம் தின்பவர்கள் என்று சொல்லி அவர்களின் இனத்தையே அழித்தொழித்தார்கள் ஐரோப்பியர்கள். படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஃப்ரெஞ்ச் ராணுவ அதிகாரியின் கடிதம் வாய்ஸ் ஓவராக வருகிறது.

ப்ரஸீல் ஒரு பாலைவனம். இங்கே வீடுகளோ தெருக்களோ எதுவும் இல்லை… இங்குள்ளவர்கள் நாகரீகமோ பண்பாடோ இல்லாத காட்டுமிராண்டிகள். இவர்களை மனித இனத்திலேயே சேர்க்க முடியாது. இவர்களுக்கு மதம் இல்லை. நீதி, நியாயம் என்று எதுவுமே இங்கே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், மனித முகத்தில் வாழும் மிருகங்கள்.

இந்த வாய்ஸ் ஓவர் வரும் போது படத்தில் நாம் காணும் காட்சி… ப்ரஸீலின் பசுமை படர்ந்த ஒரு சமவெளி. அங்கே துப்பி இனத்தவர் ஃப்ரெஞ்சுக்காரர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு தருகிறார்கள். அங்கே அவர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு உதவி செய்கிறார்கள்.