வாழ்க்கை – கீஸ்லோவ்ஸ்கி எனும் கலைஞன்.

’எனக்கு வெற்றி என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. என்னுடைய ஒவ்வொரு படமும் வெற்றியல்ல, முயற்சி மட்டுமே’ என்று கூறும் கீஸ்லோவ்ஸ்கி (1941-1996) அறுபதுகளில் செய்திப்படங்களின் மூலம் போலந்தில் தன் திரைவாழ்வைத் துவக்கினார். ‘என்னுடைய படங்கள் தனிமனிதனைப் பற்றியவை. தன் வாழ்வை எப்படி வாழ்வது? என்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களைப் பற்றியவை’ என்று தனக்கான சினிமா பார்வையை முன்வைக்கும் கீஸ்லோவ்ஸ்கி இருபதுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் பத்துக்குள்ளான திரைப்படங்களையும் எடுத்துள்ளார்.
இவருடைய கடைசிப்படம் ‘த்ரீ கலர்ஸ் ரெட்’ சினிமாவை மக்களுக்காக ஒரு சாதனமாகக் கையாண்ட கீஸ்லோவஸ்கி சிறந்த உலக இயக்குநர்களின் வரிசையில் கடைசிக் காலத்தில் போற்றப்பட்டார். இவருடய ‘ஷார்ட் பிலிம் அபெளட் கில்லிங்கை’ப் பற்றி சினிமா இதழான வெரைட்டி ‘ஹிட்ச்காக், தாஸ்தாயெவஸ்கியின் நாவலைப் படமெடுத்தால் எப்படியிருக்குமோ… அப்படி உள்ளது’ என்று பாராட்டுகிறது. தன் பயணம் முழுவதும் வாழ்க்கை குறித்தான தேடல்களில் செலவிட்ட கீஸ்லோவஸ்கி இறப்பதற்கு முந்தைய வருடங்களை கவனிக்கத் தொடங்கினார். இது உலக சினிமாவிற்கு மிகப் பெரிய இழப்பு.

’ கீஸ்லோவஸ்கி ஆன் கீஸ்லோவஸ்கி’ புத்தகத்தில் தன்னைப் பற்றி கீஸ்லோவஸ்கி எழுதியதிலிருந்து சில பகுதிகள்…

எங்கள் குடும்பம் வறுமையானது. என் தந்தை ஒரு பொறியாளர். அம்மா ஒரு அலுவலக உதவியாளர். என் தந்தை காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்து 12 ஆண்டுகள் அவர் அந்நோயால் சிரமப்பட்டார். நானும் என் சகோதரியும் அம்மாவுடன் அப்பாவைக் காண சானடோரியத்துக்குச் செல்வதே என் குழந்தைப் பருவத்தின் வழக்கமாக இருந்தது. குறும்புகள் சூழ்ந்த உங்களுடைய நான்கு வயதில் உணவு மேஜையில் நீங்கள் செய்த குறும்புகளுக்காக அடிவாங்குவது என்பது வாழ்க்கையின் மறக்க முடியாதவொரு பகுதிதான். ஆனால், உங்களைத் தண்டித்த அம்மாவோ, அப்பாவோ, தாத்தா பாட்டியோ உங்கள் குறும்பை மறந்து நீங்கள் உறங்கிய பின் நெற்றியில் முத்தமிட்டு தலையணைக்கடியில் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுப் பொருள்களை வைக்கும் அன்பு என்பது அதைவிட முக்கியமான பகுதி. இவைதாம் என்னை உருவாக்கின. என் தந்தை என்னிடம் அன்பாக இருந்தார். சிறு வயதில் அவர் திசை காட்டிய புத்தகங்களே என்னை எனக்கு அடையாளம் காட்டின.
என் குழந்தைப் பருவம் முழுவதும் மோசமான நுரையீரல்களுடன், காசநோய் தொற்றிக்கொள்ளும் அபாயங்களுடன் வாழ்ந்தேன். கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டாலும், பெரும்பாலான நேரங்களில் என் பால்யம் உடம்பு முழுவதும் கம்பளி போர்த்தி வராந்தாவில் அமர்ந்து தூய காற்றைச் சுவாசிப்பதாகவே அமைந்தது.

அந்த நேரங்களில்தான் புத்தகங்களை நோக்கித் திரும்பினேன். தொடக்கத்தில் அம்மாதான் வாசித்துக் காட்டுவாள். பின்னாளில் இரவு முழுவதும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருப்பவனாக என்னை உருமாற்றியவை அந்த நாட்கள் தாம். புத்தகங்களின் உலகம் எனக்கு அனுபவத்தின் உலகமாக விளங்கியது. என்னை ஈர்த்தது ஆல்பெர் காம்யு மற்றும் தாஸ்தாயெவ்ஸ்கி போன்றோரின் கதை உலகம் மட்டுமல்ல. கெளபாய் நாவல்களும், இந்தியக் கதைகளும் கூடத்தான். தாஸ்தாயெவஸ்கியிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டேனா, அமெரிக்க மூன்றாம் தர எழுத்தாளர்களின் கெளபாய் புத்தகங்களிலிருந்து அதிகம் கற்றுக்கொண்டேனா என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் கவலைப்படவுமில்லை.

சிலரைப் போல நான் கனவுகளை நிறைய நாட்கள் நினைவு வைத்திருப்பவன் அல்ல. என் கனவுகள் பயங்கரமானவை. சில கனவுகளில் நான் பூமியில் இருந்து பறந்திருக்கிறேன். சில கறுப்பு வெள்ளைக் கனவுகள். சில வண்ணம் பூசிய கனவுகளும் உண்டு.

என் பால்யத்தில் நடந்த அநேக சம்பவங்கள் எனக்கு நினைவில் இல்லை. ஆனால், என்னிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது. யாராவது தங்களின் குழந்தைப் பருவச் சம்பவங்களை என்னிடம் சொன்னால், நான் அதை எனக்கு நடந்ததாக வேறொருவரிடம் சொல்வேன். நாளடைவில் அதை என் வாழ்வில் நடந்ததாக நானே நம்பவும் தொடங்கி விடுவேன். இப்படி நான் அடுத்தவரின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பலமுறை எனக்காகத் திருடி இருக்கிறேன். உதாரணத்துக்கு ஒன்று, நான் பள்ளி செல்லும் பருவத்தில் ஒரு நாள் என் அம்மாவின் கைப்பிடித்து பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த போது எதிரே ஒரு யானை வந்தது. அதைக்கண்டு அச்சப்பட்டு அம்மாவின் கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். “ஆனால் என்னைப் பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் காலத்தில் ஒரு நாளும் யானை எதிரில் வந்ததில்லை” என்று அம்மா உறுதிபடக் கூறுகிறாள். இந்தச் சம்பவத்தை நான் யார் வாழ்க்கையிலிருந்து திருடினேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால், அது என் வாழ்க்கைச் சம்பவம்தான் என இன்று வரை நம்பிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு முறை என் படமான ‘Double Life of Veronica’ படத்தை நியூயார்க் திரைப்பட விழாவில் வெளியிட்டார்கள். அந்தப் படத்தின் கதைப்படி Veronica தன் கணவனோடு முரண்பட்டு, வாழ்க்கையை வெறுத்து, தன் தாய் தந்தை , குடும்பத்துக்கே திரும்புகிறாள். இதை அமெரிக்க ரசிகர்களால் புரிந்துகொள்ளவோ, ஜீரணிக்கவோ முடியவில்லை. “ஏன் அந்தப் பெண் குடும்பத்துக்குத் திரும்ப வேண்டும்?” எனக் கேள்விகளை அடுக்கினார்கள். நானோ அந்த விஷயம் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் இயல்பானதென்றும், அதையே எங்கள் கலை, இலக்கியம், இசை, ஆகியவை பிரதிபலிக்கின்றன என்றும் கூறினேன். குடும்பத்துக்குத் திரும்புவதும், அதை வலிமைப்படுத்துவதுமே எங்கள் பண்பாட்டின் இயல்பு என்றும் விளக்கினேன். அமெரிக்கர்களால் இதைக் கடைசிவரை விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. அமெரிக்கர்கள் அப்படித்தான்; இதற்கு இன்னொரு சம்பவத்தைச் சொல்கிறேன்.


நான் ஒருமுறை என் படம் தொடர்பாக அமெரிக்கா செல்ல விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அருகில் அமர்ந்திருந்த சக பயணியிடம் என்னை சினிமா இயக்குநர் என அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் தன்னைப் பற்றி “வீடுகளுக்கு ஜன்னல் கதவு செய்து கொடுப்பவன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சொற்கள் காடாகப் பெருகின. அவர் தன்னுடைய ஐந்தாவது நிறுவனத்தை அமெரிக்காவில் உருவாக்க தான் பட்ட சிரமங்களையும் விளக்கினார். “நான் முதல் நிறுவனம் தொடங்கியபோது ஜன்னல் கதவுகளுக்கு ஐம்பது ஆண்டு காலம் உத்தரவாதம் அளித்தேன். ஆனால் விற்பனையே ஆகவில்லை. பிறகு 25, 10, 5, 2 என ஆண்டுகளைக் குறைத்துக் கொண்டே வந்தேன். வியாபாரம் பெருகியது. இதற்கு அடிப்படையாக இருக்கும் அமெரிக்க மனோபாவம் இதுதான். யார் இங்கே 50 ஆண்டுகள் ஒரே வீட்டில் இருக்கப்போகிறார்? எனவே உடனக்குடன் மாறிக்கொண்டே செல்லும் வாழ்க்கை இயல்பு கொண்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் உத்தரவாதமே பொருத்தமானது” எனவும் கூறினார். இச்சம்பவத்தில் இரண்டு சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளன. ஒன்று அமெரிக்கர்களின் மனோபாவத்தை விளக்க பலரிடமும் இச்சம்பவத்தைக் கூறியிருக்கிறேன். மற்றொன்று அந்த வியாபாரியின் வாழ்க்கைச் சம்பவத்தை நான் என்னுடையதாகவே பல பேரிடம் கூறி வந்துள்ளேன்.

அது 1939ஆம் ஆண்டு. ஜெர்மன் ராணுவம் போலந்தின் சகல வசதிகளிலும் ஊடுருவி ஆக்ரமிப்பு செலுத்தியது. அந்த ராணுவ வீரர்கள் போலந்து மக்களை விரட்டிவிட்டு எங்களின் வீடுகளில் தங்கிக்கொண்டனர். அக்காலத்தில் போலந்தின் எல்லாப் பகுதிகளிலும் ஜெர்மானியர்களே காட்சி தந்தனர்.

இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்ததும் ஜெர்மானியப் படையினர் எம் வீடுகளையும், நாட்டையும் விட்டு வெளியேறினர். அதன் பிறகு அவர்கள் தங்கியிருந்த வீடுகளுக்குச் சிறுவர்களாகிய நாங்கள் செல்வோம். அங்கு அவர்கள் பயன்படுத்திய காம்பஸ், உலக வரைபடம், பெரிய பெரிய புத்தகங்கள் இருக்கும். அவற்றை எடுத்து நான் புரட்டுவேன். அப்புத்தகங்கள் முழுக்க முழுக்க ஜெர்மனில் எழுதப்பட்டவை. அவற்றின் பொருள் எனக்கேதும் புரியவில்லை. ஆனால் இன்னமும் அழியாமல் நினைவிலிருப்பவை, அப்புத்தகங்களின் வழுவழுப்பான தாள்களில் நான் கண்ட மலை, இயற்கைக் காட்சிகளே.

நான் பள்ளிப் பருவத்தில் வெகு சாதாரணமாகப் படிக்கும் மாணவர்களில் ஒருவனே. என் நண்பர்களால் நான் கேலி செய்யவும் அடிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டேன். என்னை அடிக்கும் நண்பர்களை நான் என் பாட்டியிடம் சொல்வதால், பாட்டி இல்லாத நேரங்களில் மறுபடியும் அவர்களால் அடிக்கப்பட்டிருக்கிறேன். என் அம்மா ஜெர்மன் ராணுவத்தில் இருந்தபோது ஜெர்மன் கற்று வைத்திருந்தாள். பிறகு ரஷ்யன் கற்றுக்கொண்டு பல பிள்ளைகளுக்கு ரஷ்ய மொழியை டியூஷன் எடுத்தாள். நான் அந்த வகுப்புகளுக்கெல்லாம் சென்று பாடத்தை ஏனோதானோவெனக் கேட்டிருக்கிறேன்.


அதேபோல நானும் என் சகோதரியும் பால்யத்தின் பெரும் பகுதியைக் குழந்தைகளுக்கான சானடோரியத்திலேயே கழித்தோம். அங்கேயும் சில குறும்பும் கும்மாளமுமான சம்பவங்கள் உண்டு. அந்தச் சானடோரியத்தில் வாரம் ஒருமுறை அதற்கென உள்ள திரையரங்கில் திரைப்படம் போடுவார்கள். அந்தப் படங்களைப் பார்ப்பதற்கு பணம் இல்லாததால், திரையரங்கின் பக்கத்திலுள்ள மரத்தில் ஏறி கூரையை அடைந்து அதை ஓட்டையிட்டு திரைப்படத்தைப் பார்ப்போம். திரை ஓரளவுக்கு மட்டுமே மேலிருந்து பார்க்கும் எங்களுக்குத் தெரியும். எனவே எரிச்சலடைவோம். ஆனந்தமாகப் படம் பார்க்கும் மக்கள் மீது ஓட்டை வழியே எச்சில் துப்புவோம். சில நேரங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் எங்களை உதைத்திருக்கிறார்கள். என்றாலும், அந்த சானடோரியத்தில் உண்பதற்கோ, படிப்பதற்கோ ஏதேனும் கிடைக்கும் தருணங்களில் , நாங்கள் மர உச்சியிலேதான் செலவழித்திருக்கிறோம். மிக இனிமையான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, எனக்கு என் அப்பா செய்த ஏற்பாடு மிகவும் சுவாரஸ்யமானது. இருப்பிடமும், உணவும் இலவசமாக அளித்து பயிற்சி தந்த ஒரு தீயணைப்புப் பயிற்சியாளர்கள் பள்ளியில் நான் சேர்க்கப்பட்டேன். அதை முடித்ததும், நாடகப் பள்ளி ஒன்றில் இணைந்து வீதி நாடகங்கள், அதன் நுணுக்கங்களைக் கற்றேன். இதையடுத்துதான் காசநோய் முற்றிய நிலையில் 47 வயதான என் அப்பா இறந்து போனார். குடும்பம் வறுமையில் நனைந்து நடுங்கியது. இந்தக் காலகட்டத்தில்தான் சில திரைப்படங்களுக்கு நான் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். இப்போது நினைத்தாலும் என்னைப் பிசையும் ஓர் உண்மை, என் இப்போதைய வயதைவிட மிக சொற்பமான வயதிலேயே என் அப்பா இறந்ததுதான்.

சில வருடங்களுக்கு முன்பு என் அம்மாவும் இறந்துபோனாள். நான் உறவுகளற்ற தனிமையை உணர ஆரம்பித்தேன். இப்போது உறவுகளின் அத்தியாவசியம் 57 வயதில் புலப்படுகிறது. எனக்கிருக்கும் ஒரே உறவு என் மகள் மார்த்தா மட்டுமே. அவளும் என் இளமைப் பருவத்தின் அத்தனை பருவங்களோடும் இருக்கிறாள். நான் இப்போது நினைத்துக்கொள்வது என் அப்பா எனக்குக் கூறிய மதிப்புயர்ந்த அறிவுரைகள், அவற்றின் சிறப்புணராமல் ஓர் அறிவுக் குருடன் போல் நானவற்றைக் கடந்து வந்தது எல்லாம் தான். ஆனால் எனக்கு இப்போது அவை மிகப்பெரும் பொக்கிஷமாகப் படுகின்றன. எனினும் பல விஷயங்கள் கால ஓட்டத்தில் மறந்தும் போய்விட்டன. எனவேதான் என்னைப் போலவே இளமையால் திசையறியாது பயணம் செய்யும் என் மகளிடம் நான் அறிவுரைகளால் துளைப்பதில்லை. நான் அவளுக்குச் சொல்ல வேண்டியதாக நினைப்பதை எல்லாம் கடிதங்களாக எழுதிக் கொடுத்துவிடுகிறேன். என்னைப் போலவே பொறுப்பற்ற முறையில் இப்போதவள் என் கருத்துகளைக் கடந்து விட்டாலும் பின்பொரு நாள் அவற்றை அர்த்தத்தோடு பார்க்கக்கூடும். அப்போது கடித வடிவில் சிதையாமல் முழுமையாக அவளுக்கு என் கருத்துக்கள் கிடைப்பதையே நான் விரும்புகிறேன்.

தார்கோவஸ்கி திரைப்படத்தின் மிக முக்கியமான கலைஞன். ஆனால் எல்லோரையும் போலவே அவரும் இறந்துவிட்டார். மிக முக்கியமான கலைஞர்கள் அனைவரும் இறந்துவிடுகிறார்கள் அல்லது படைப்பதை நிறுத்திவிடுகிறார்கள். தங்களின் கற்பனை, தனித்தன்மை, படைப்பாளுமை அனைத்தையும் இழந்து, வாழ்க்கையின் தொடர் ஓட்டப் பந்தயத்தில் மூச்சிரைக்க ஒதுங்கிவிடுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக இவ்விபத்து தார்கோவஸ்கிக்கு நடக்கவில்லை. ஆனாலும், அவர் இறந்து விட்டார். நம்மால் தொடர்ந்து வாழ முடியாது என்கின்ற பட்சத்தில்தான் பெரும்பாலான மக்கள் இறந்துவிடுகிறார்கள். மனிதர்கள் ஏன் இறக்கிறார்கள்? புற்றுநோயாலா? மாரடைப்பாலா? விபத்துக்களாலா? நிச்சயமில்லை. மரணம் முற்றுப்புள்ளியோடு காத்திருக்கும்போது வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்கள் பொய்த்துவிடுகின்றன.

என்னிடம் பெரும்பாலும் பத்திரிக்கைகாரர்கள் கேட்கும் கேள்வி “உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்?” என் பதில் “ஷேக்ஸ்பியர், காஃப்கா, தாஸ்தாயெவஸ்கி”, அவர்களின் அடுத்த கேள்வி ஆச்சரியத்துடன் தொடரும். ”இவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள் அல்லவா?” அதற்கு என் பதில் என்னைப் பொறுத்தவரை “இயக்குநர்களை விடவும் எழுத்தாளர்கள் முக்கியமானவர்கள்.”

நீங்கள் ஒரு அமெரிக்கனை ‘ எப்படியிருக்கிறாய்?’ என்று நலம் விசாரித்தால், ‘மிகவும் நலமாக இருக்கிறேன்’ என்றுதான் சொல்வான். யாரும் இங்கு நலமாகவே இருப்பதில்லை. இதில் மிகவும் நலமாக எப்படி ஒருவன் இருக்க முடியும்? அவர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு சதா மற்றவர்களையும், வாழ்க்கையையும் துரத்திக்கொண்டிருக்கிறார்கள். மேற்கு நாடுகளில் வாழ்கிற மக்களுக்கு இந்த உலகம் சரியாக விவரிக்கப்படவில்லை. விவரிக்கப்படாத இவ்வுலகை, அவர்கள் முன் பதிவு செய்வதை என் செய்திப் படங்களின் நோக்கமாக நான் கருதுகிறேன்.

ஒரு திரைப்படத்தை நல்ல படம், கெட்ட படம் என எப்படித் தீர்மானிப்பது? எனக்குத் தெரியவில்லை. எல்லோரையும் போலவே நானும் திரைப்படங்களைப் பார்ப்பேன். என்னைப் பொறுத்தவரை ஒரு படம் மனதைப் பாதித்து திரும்பவும் பார்க்கும்படி தூண்டினால் நல்ல படமாக இருக்கும். எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனில் அது நல்ல படமாக இருக்க முடியாது. நான் அப்படி 100 முறை பார்த்த படம், “Battleship Potemkin” என் பள்ளி வாழ்க்கையின்போது, இருப்பினும் அந்தப் படத்தின் சிறப்புப் பற்றி என்னிடம் கேட்டால் பதில் இல்லை. சொல்லத் தெரியவில்லை.


படங்களைத் திருடுவது என்பது தவறானதா? படங்களிலிருந்து கதைக்கான கருவோ, காட்சியோ, சில கணங்களையோ நம்மை பாதிக்கும் பட்சத்தில் திருடிவிடுகிறோம். அவை தவறாகிவிடாது. என்னைப் பொறுத்தவரை வாழ்வின் நிகழ்வுகளையே படமாக்குகிறோம். அதே நிகழ்வுகள் எனக்கும் மற்றொருவருக்கும் பொதுவானதுதானே? ஏன் அதே நிகழ்வுகள் என் வாழ்வில் நடந்திருக்கக் கூடாது? அப்படியே படமாக்கினாலும் நான் திருடித் தான் படமாக்கினேன் என்பது எனக்கும் மற்றவருக்கும் மறந்தும் போகலாம். ஏனேனில் அதையும் விட வாழ்க்கை விசாலமானது.

என் மாணவர்களுக்கு திரைப்படக் கல்லூரியில் பாடம் நடத்தும்போது சொல்வேன்; யாரும் வெளியிலிருந்து கதை தேடக் கூடாது. உனக்குள்ளே, உன்னைச் சுற்றியிருக்கிற சூழலைச் சார்ந்தே படம் எடுக்க வேண்டும். உனக்குள்ளிருந்துதான் கதைக்கான கரு பிறக்க வேண்டும். யார் யாரோ வெளியில் ஏதேதோ வேலை செய்யும்போது, என் முன்னால் வந்து நின்று திரைப்படம் பற்றிப் பேச வைத்தது எது? அந்த அனுபவத்தை, உன் வாழ்க்கையின் நிகழ்வுகளை, உன் தேடலை, உனது ஏக்கங்களை, உன் தோல்வியை மற்றவர்களுடையதாய் வெளிப்படுத்தவும் முயற்சி செய். இவையின்றி கதைக்கான சூட்சுமம் வேறொன்றுமில்லை ஒரு ஓவியனும், கவிஞனும், எழுத்தாளனும், எல்லாக் கலைஞனும் தன்னைப் பற்றிய பரிணாமத்தை நேர்மையுடன் வெளிப்படுத்தும் செயல்பாடே மிகப்பெரிய கதையாக இருக்கலாம். உனக்குள்ளிருந்துதான் கதையும் படமும் எனச்சொல்வேன்.

நன்றி: டிசம்பர் 2005 – திரை