விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன்

அண்மையில் தமிழ்ச் சினிமாவில் கம்யூனிச கொள்கைகளின் தாக்கம் கொண்ட திரைப்படங்களைத் திரையிடலாம், என்றெண்ணி அத்தகைய படங்களை நண்பர்களின் உதவியோடு வரிசைப்படுத்தினோம். அவற்றில்ஒன்றாக ”ஏழாவதுமனிதன்”, படமும் இணைந்திருந்தது. இப்படம் நடிகர் ரகுவரன் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமான முதல்படம் என்றும், 1983ஆம் ஆண்டிற்கான தேசியவிருது பெற்றபடமாகவும் இருக்கின்ற காரணத்தினால், இதற்கான குறுந்தகட்டிற்கு அதிகம் தேடவேண்டிய அவசியமிருக்காது என்பது எண்ணம். ஆனால், எண்ணத்திற்கு நேரெதிராக எங்குதேடியும் இப்படத்திற்கான குறுந்தகடு கிடைக்கவில்லை. இறுதியான சந்தர்ப்பமாக அப்படத்தின் இயக்குனர் கே.ஹரிஹரன் அவர்களையே தொடர்புகொண்டு கேட்கையில், “அந்தப்படம்கிடைத்தால், உங்களைவிட நானே மிகுந்த மகிழ்ச்சி அடைவேன், கிடைத்தவுடன் எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்றார். இப்படியான பலபடங்கள் தமிழில் வந்ததற்கான அறிகுறிகள் இருந்தாலும், அந்தப்படங்கள் எங்கேயென்றால்?, இல்லை என்பதுதான் பதில். இதில் முக்கியமாக ஜெயகாந்தன் இயக்கிய படங்களில் சிலமட்டுமே பார்வைக்கு கிடைக்கின்றன.
ஒருமுறை சந்தியாராகம் திரையிடலில், கலந்துகொண்ட இயக்குனர் பாலுமகேந்திராவும் தன்னிடம் வீடும், சந்தியாகராகமும் நெகட்டிவாக இல்லை என்பதை வருத்தத்தோடு கூறினார். பாலுமகேந்திரா எடுத்த படங்களிலேயே வீடும், சந்தியாராகமும்தான் எவ்வித வியாபாரசமரசமின்றி எடுக்கப்பட்ட படங்கள் என்பதால் அவர் அவ்விருபடங்களையே சினிமாக்கள் என்கிற கணக்கில்கொண்டு அவ்விரண்டை மட்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஆனால், அவரே எடுத்த ”கோகிலா”, ”அழியாதகோலங்கள்”, ”மூன்றாம்பிறை”, மற்றும் இன்னபிற படங்களின் நெகட்டிவ்களும் இந்த உலகத்தில்தான் உள்ளன, என்பதற்கான எந்த அடையாளமும் இதுவரையிலும் இல்லை.
தமிழின் முதல்படமான நடராஜமுதலியாரின் ‘கீசகவதம்’, திரைப்படத்தை தொலைத்துவிட்டு இன்றுவரை தேடிக்கொண்டிருப்பவர்கள் நாமாகத்தான் இருப்போம். ஆனால், ”கீசகவதம்”, லண்டனில் இருப்பதாகவும் சிலதகவல்கள் உலாவிவருகின்றது. எனினும் இதில் எந்தளவிற்கு உண்மையின் சதவீதம் இருக்கின்ற தென்பது இன்னும் அறியப்படவில்லை. எதற்கெடுத்தாலும் மேலைநாடுகளை நாம் உதாரணம் காட்டிக்கொண்டேயிருந்தாலும், சிலவிஷயங்களில் அவர்களை உதாரணம் காட்டும்படியான நிலையில் தன்வாழ்க்கையை அவர்கள் அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அண்மையில்கூட இயக்குனர்மார்ட்டின்ஸ்கார்ஸ்ஸே சேர்த்துவைத்திருந்த ஆவணங்களையும், தொகுப்புகளையும் பரமாறிக்க அந்நாட்டின் அரசாங்கமே அவருக்காக நிதியுதவி அளித்திருக்கின்றது.

பிலிம்நெகட்டிவ்களை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்கள் என்னவென்றால் குறைந்தது 15 நாட்களுக்கு ஒருமுறையாவது, அவற்றை ப்ராஸஸிற்கு உட்படுத்தி, பிலிம்கள் ஒன்றோடொன்று இணைந்து வேதியல் மூலக்கூறுகள் சிதையாவண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும். இதனை அரசாங்கத்தின் துணையோடு செய்வதே எளிது. ஆனாலும், சுதந்திர இந்தியாவில் இதுவரை தமிழகத்தின் முதலமைச்சர்கள் அதிகமாக சினிமாவிலிருந்தே வந்திருந்தாலும், படங்களை சேமித்துவைப்பதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. இருப்பினும் சினிமாவின் மீதானபற்றுதலால் ஒரு சிலர், தன்னால் முடிந்த அளவு, திரைப்படங்களின் தடயங்களை ஒருங்கிணைத்துவருகின்றனர். பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களில் ஒருவர்.

இவர் தொடர்ந்து திரைப்படம் சார்ந்த ஆவணங்களை சேர்த்துக்கொண்டே வந்தாலும், இந்தச் சேமிப்புகளின் மூலமாக அவருக்குவந்த ஆதாயங்களைக்காட்டிலும், பணம், நேரம் முதலான இழப்புகள் அதிகமாக இருக்கலாம். ஆனாலும் இன்றுவரை ஓயாதுதொடர்ந்து தனக்கு இஷ்டமான வேலையில் தன்புலன்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றார்.

பாலுமகேந்திரா குறிப்பிடுவதுபோல, தான்மேற்கொண்ட தொழிலில் தோற்கின்றோமா, வெற்றிபெறுகின்றோமா, என்பதைக்காட்டிலும், தனக்குப் பிடித்ததொழிலைச் செய்கின்றோமா? என்பதுதான் முக்கியம்.

தொடர்ந்து பிடித்தமான வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்ற பிலிம்நியூஸ் ஆனந்தனது வாழ்க்கைகுறிப்புகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கம். இணையத்தில் ஓரிரு தகவல்கள் பிலிம்நியூஸ் ஆனந்தனைப் பற்றி தேடுகின்றபொழுது கிடைத்தாலும், அதிலில்லாத தகவல்கள் இத்தொடர்கட்டுரையில் முழுதுமாக நிரம்பியிருக்கின்றது என்பதில் மகிழ்ச்சியே!

பிலிம்நியூஸ்ஆனந்தன்

என்னுடைய தாத்தா பூந்தமல்லி கிருஷ்ணசாமி முதலியார்னு பேர், பச்சையப்பா கல்லூரியில தமிழ்ப்பேராசிரியர். அவருக்கு நான்கு மகன்கள். முதலாவது மகன் வித்யாசாகரம், இரண்டாவது ஞானசாகரம், மூன்றாவது குணசாகரம், நான்காவது அமுதசாகரம். சாகரம் என்பதற்கு கடல் என்று பொருள். இவர்களில் என்தகப்பனார் தான் ஞானசாகரம். என்தாத்தா அவரது பையன்களுக்கு சாகரம் என்றுவருவது போல பெயர்வைக்கயில், என் தந்தையோ கிருஷ்ணன் என்று வரும்படியாக குழந்தைகளுக்கு பெயர்களை வைத்தார். அதன்படி ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், அடுத்ததாக சந்தானகிருஷ்ணன். முதலில் பிறந்தராமகிருஷ்ணனுக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் ஜாகத்தில் எண்பதுவயது என்றும், தரணிஆள்வார்கள் என்றும் குறிப்பிருந்தது. ஆனால் 12ஆவது வயதிலேயே ’பெரியம்மை’, என்றுசொல்லப்படக்கூடிய நோயினால் அவ்விருவரும் காலமானார்கள். அவ்விருவரது மரணமும், அப்பாவிற்கு ஜாகத்தின் மேல் கடுமையான கோபம் உண்டாக ஏதுவாக அமைந்துவிட்டது. இதன் பயனாய் எனக்கு ஜாதகமே எழுதவில்லை, எல்லாருக்கும் ’கிருஷ்ணன்’, என்ற பெயர் தொனிக்கும் படியாக வைத்தோமல்லவா! இனிமேல் அப்படிசெய்யக்கூடாது. என்றெண்ணிய என் தந்தை, எனக்கு ”மணி”, என்று பெயர் வைத்து தொட்டிலில் போட்டார். பால்யகாலம் முதலாக என்னுடன் நெருக்கமாக பழகியவர்களுக்கும், டிராமா சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் ”மணி”, என்று சொன்னால்தான் தெரியும்.

இப்படியாக, ’மணி ’,என்ற என்பெயர் ’ஆனந்தனாக’, எப்படி மாறியது என்பதொரு சுவாரஷ்யமான சம்பவம். அதாவது, என்னை பள்ளியில் சேர்ப்பதற்காக அப்பா அழைத்துச்சென்றிருக்கின்றார். அங்கு சென்றதும் தலைமையாசிரியர் மடியில் நான் அமர்ந்துகொண்டேன். அப்பொழுது தலைமையாசிரியர் என்னிடம்”பேர்என்ன?”,என்றுகேட்க., அதற்கு நான் உடனே ’ஆனந்தகிருஷ்ணன்’, என்று சொல்லியிருக்கின்றேன். என் அப்பாவிற்கு அதிர்ச்சியாகயிருந்திருக்கின்றது. ”எல்லாருக்கும் அவரவர் அப்பாவோ அம்மாவோ தான் பேர்வைப்பாங்க. ஆனா இந்தப்பையனை பாருங்களேன், இவனே அவனுக்கு பேர்வச்சிக்கிட்டான்”,னு தலைமையாசிரியரும் சிரிச்சாராம். இது ஒரு ஆச்சரியம்தான். எல்லோர் பேருக்கும் பின்னால கிருஷ்ணனு வந்திருக்கே, எனக்கு மட்டும் இல்லையேனு சின்னவயசிலிருந்தே எனக்கிருந்த எண்ணம்தான் தலைமையாசிரியர் கேட்கும்பொழுது என்னை “ஆனந்தகிருஷ்ணன்”, என்று சொல்லவைத்திருக்கின்றது.

என் அப்பாவிற்கு அரசாங்க உத்யோகம். இந்தியா முழுவதிலுமுள்ள அரசாங்க ஊழியர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்ககூடிய இடத்தில்தான் அப்பா அக்கெளண்ட்ஜெனரலாக வேலைபார்த்துவந்தார். அப்பொழுது அந்த அலுவலகத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து டிராமா குரூப் ஒன்றும் நடத்தி வந்தார்கள். டிராமா குரூப்பின் பெயர் ”கவர்மெண்ட் அஃபீஸியல் பார்ட்டி”, என்பதாகும். அப்பொழுது எனது சனி, ஞாயிறு, பள்ளி விடுமுறைகளில் அந்தடிராமா குரூப்பிற்கு சென்று ஒத்திகைகளை வேடிக்கைப்பார்ப்பது வழக்கம். பெண்கள் நாடகத்திற்கு வராத காலமாதலால், ஆண்களே, பெண்கள் வேஷம் எல்லாம் போட்டு ஒத்திகை நடத்துவார்கள். சனி, ஞாயிறு களில் டிராமா நடக்கும். அப்போதெல்லாம் அங்கு சென்று வேடிக்கைப்பார்த்தபடியே இருப்பேன். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்பொழுதே ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு பிரிவில் கலந்து கொள்ள வேண்டும். எல்லோரும் விளையாட்டு, இசை, நாடகம் இவற்றுள் ஏதேனும் ஒன்றிற்கு பெயர் கொடுப்பார்கள்,, ஆனால் நான் மட்டும் இம்மூன்றிலும் பெயர் கொடுப்பேன். இந்த மூன்றிலுமே வெற்றிபெற்று வாங்கியிருக்கின்ற சான்றிதழ்கள் இன்றளவும் என்னிடம் பத்திரமாக உள்ளது.
இப்படி சின்ன வயதிலிருந்தே நாடகங்களைப் பார்த்து பழக்கப்பட்டிருந்த காரணமாக எனது ஒன்பதாம் வயதிலேயே ’கலியுகஎமன்’, என்ற புராதாண நாடகத்தை பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து நடித்துக்காட்டினேன். மேலோகத்தில் நடப்பது போன்ற கதையில் எமன், மற்றும் இன்னபிற பூதகணங்களெல்லாம் இருக்கையில் அவர்களின் உடையலங்காரங்களுக்கு வித்தியாசமாக இரண்டு மனிதர்கள் நாகரீகமாக பேண்ட், சர்ட்டெல்லாம் போட்டுக்கொண்டு வருவார்கள், அவர்கள் வந்தவுடனேயே அரங்கமே சிரிப்பொலியில் ஆழ்ந்துவிடும்.

வந்தவர்கள் எமனிடம் முறையிடுவார்கள். ”மக்களுக்கு வரி போடுகிறார்கள்”,என்பார்கள். அதற்கு அவன், ”என்ன வரி”, என்பான் எமன். ”ஜனவரி”, என்று சொல்வார்கள் வந்தவர்கள். அதாவது ஜனவரி என்ற ஆங்கில மாதத்தை ஜனங்களுக்கு போடப்படும் வரி என்று முறையிடுவார்கள். இது அப்பொழுதே எல்லோரையும் சிரிப்பிற்குள்ளாக்கியது.

எஸ்.எஸ்.எல் . சி. வரைக்கும் இந்து உயர்நிலைப்பள்ளியில் தான் படிச்சேன்.

பள்ளிப்படிப்பு முடிந்து என் கல்லூரிக்காலம், முகமதின் கல்லூரியில் தொடர்ந்தது. ஆனால், நான் காலேஜிக்கு போகும் பொழுது முகமது காலேஜ், அரசு கல்லூரியாக இருந்தாலும், அங்கு அதிகமாக ஹிந்துக்கள் தான் படிப்பதால் மாணவர்களெல்லோரும் ஆர்ப்பாட்டம் நடத்தி அந்தக் கல்லூரிக்கு பெயர்மாற்றம் வரும்படி செய்தோம். பின்னர் தான் முகமதியன் காலேஜ் அரசு கலைக்கல்லூரியாக பெயர்மாற்றம் அடைந்தது.

கல்லூரியில் படிக்கின்ற சமயங்களிலெல்லாம் எனக்கு தமிழ்ப்பற்று அதிகமாக இருக்கும்., அதனை தமிழ்ப்பற்று என்பதைக் காட்டிலும், தமிழ்வெறி என்றே கூறலாம். எப்படியெனில் ”ஆனந்தகிருஷ்ணன்”, என்ற பெயரையே ”களிப்புகர்ணன்”, என்று பெயர் மாற்றம் செய்திருக்கின்றேன்.

நான் அந்தக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கின்ற பொழுதே ஒய்.ஜி.பார்த்தசாரதி எனக்கு அறிமுகமானார். என் அப்பாவிற்கும் அவருக்கும் முன்பே பழக்கமிருந்ததும் ஒரு காரணம். ”யுனைட்டெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட், அம்பாசமுத்திரம்”, என்ற பெயரில் ஒய்.ஜி. பார்த்தசாரதி நாடக அரங்கு ஒன்றை நடத்திவந்தார். நானும் அடிக்கடி அவர்கள் நடத்துகின்ற நாடக ஒத்திகைகளை காணச்செல்வேன்.

நாடகத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாகிக்கொண்டே இருந்த காலகட்டம் அது. அதேசமயத்தில் நாடக ஆசான் என்று அழைக்கப்படக்கூடிய பம்மல் சம்பந்தமுதலியார், இரண்டு அணாவிற்கு கதை, வசனத்துடன் கூடிய நாடகங்களை புத்தகமாக வெளியிட்டு வந்தார். அத்தோடு, ”தன் புத்தகங்களை யார் வேண்டுமானாலும் நாடகமாக அரங்கேற்றலாம், அதற்கு நான் முழு உரிமையும் தருகின்றேன்”, எனவும் அறிவிப்பு செய்திருந்தார். கதையும் வசனமும் புத்தகமும் தயாராக இருக்கின்ற காரணத்தினால் யார் வேண்டுமானாலும் இந்ததரவுகளை வைத்துக்கொண்டு எளிதாக நாடகத்தை அரங்கேற்றிவிடலாம். அதற்காக நீங்கள் எனக்கு பத்து ரூபாய் மணியார்டர் செய்தால் போதும் என்றும் சம்பந்தமுதலியார் சொல்லியிருக்கின்றார். இப்படி பத்து பத்து, ரூபாயாகச் சேர்ந்தே ஒரு நாளைக்கு 200 ரூபாய் அவருக்கு மணியார்டர் வந்திருக்கின்றது. பம்மல்சம்பந்தமுதலியாரின் நாடகம்தான் ”மனோகரா”, என்பது, அதுவே பின்னர் கருணாநிதியின் வசனத்தில் படமாகவும் உருவானது. ”வேதாளஉலகம்”, ”சபாபதி” போன்ற படங்களும் அவரது நாடகங்கள் தான்.

இப்படிப்பட்ட பம்மல் சம்பந்த முதலியாரின் கதைதான் ”காதல்கண்கள்”, நான் அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தேன். பார்த்தால் அனைத்து வசனங்களும் இலக்கிய வடிவத்தோடு, பழந்தமிழ் வசனங்களாக இருந்தன. நாடகமும் நகைச்சுவையையே மையமாக கொண்டிருந்தது. எனக்கு அந்நாடகத்தில் சிறுசிறுமாற்றங்கள் செய்து பார்க்கலாம் என்று யோசனை தோன்றியது. இக்கதையை அடிப்படையாக வைத்துக்கொண்டே, கதையில் சிறுசிறு மாற்றங்களுடன் சமூகநாடகமாக மாற்றிவிட்டேன். வசனத்தையும் நடைமுறை வழக்கத்திற்கு எழுதி வைத்துவிட்டு, சுபணவிலாஸ்சபாவில், ஒய்.ஜி.பார்த்தசாரதி தயாரிப்பில் இதுவே நாடகமாகவும் அரங்கேற்றமாகியது. வந்திருந்த பார்வையாளர்களும் கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர். எனக்கு மிக்கமகிழ்ச்சியாக இருந்தது.

பின்னர் கல்லூரியின் முதலாம் ஆண்டில், நாடககுழுவிற்கு பெயர்கொடுத்தவர்களெல்லாம் சேர்ந்துநாடகம் போடவேண்டும் என்ற நிர்பந்தமான சூழல் உருவானது.

பேராசிரியரும் ”காதல்கண்கள்”, என்ற நாடகத்தையே எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்., மற்ற மாணவர்களெல்லாம் கலைந்த பின்னர் நான் மட்டும் பேராசிரியரை நெருங்கி, “சார், இந்தக் கதையின் வசனங்கள் எல்லாமே இலக்கியத்தமிழில் இருக்கிறது, நான் சிற்சில மாற்றங்கள் செய்து வைத்திருக்கின்றேன், அது நன்றாகவே வந்திருக்கின்றது” என்று சொன்னதும், புத்தகத்தை காட்டும்படி என்னிடம் கேட்டார். நானும் புத்தகத்தைதரவும் அதைப்படித்துப் பார்த்துவிட்டு மிகவும் பரவசமாகிப்போனார் பேராசிரியர். ஆனாலும் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகத்தை மாற்றக்கூடாது இல்லையா? , இருப்பினும் இந்நாடகத்திற்கான கதையும் வசனமும் ஒத்திகையும்தான் என்னிடம் தயாராக இருக்கின்றது, என்ற காரணத்தினால் மற்றமாணவர்களுடன் இணைந்து அடுத்தகட்ட வேலையில் இறங்கினோம். ஏற்கனவே நாடகம் நடத்திக் காண்பித்த பரிட்சயம் இருப்பதனால் ‘காதல்கண்களே’, நாடகத்தையே மீண்டும் கல்லூரியிலும் அரங்கேற்றிவிடலாம் என்று தீர்மானமாக முடிவுசெய்தோம்.

28ம்தேதி நாடகம் அரங்கேற்றம் இருக்கிறதென்றால், 24ம்தேதி எங்களுக்கு ஒருசுற்றரிக்கை வருகின்றது. அதாவது நாடகத்திற்கு தலமை திரு. பம்மல்சம்பந்தமுதலியார் என்று. இது பேராசிரியரின் ஏற்பாடாகயிருந்திருக்கின்றது. அவரே பம்மல்சம்பந்தமுதலியாரைச் சந்தித்து அரங்கேற்றம் குறித்தான கல்லூரியின் விபரங்களைக் கூறியிருக்கின்றார். சம்பந்தமுதலியாரின் நாடகம் என்பதாலும் அவருக்கே நாடகத்தின்மீது அளவு கடந்த பிரியம் இருக்கின்ற காரணத்தினாலும் பம்மல்சம்பந்தமுதலியாரும் வருகின்றேனென்று ஒத்துக்கொண்டுள்ளார். முதலியார் அவர்கள் வருவதற்கு முக்கியக்காரணம், தன்நாடகம் அரங்கேறப்போகின்றது என்ற எதிர்பார்ப்பும்கூட.

சம்பந்தமுதலியார் வருகின்றார் என்று கேள்விப்பட்டதுமே, என்னைச் சுற்றிலும் பயம் கவ்விக்கொண்டது. ஏனென்றால் பம்மல்சம்பந்தமுதலியாரின் கதையிலும், வசனத்திலும் திருத்தம் செய்துதான், நாடகம் அரங்கேற்றமாகப் போகிறது. இனிமேலும் இன்னொரு நாடகத்தை குறுகியகால அவகாசத்திற்குள் ஒத்திகை பார்ப்பதென்பதும் நடவாதகாரியம் என்பதால் ”காதல்கண்கள்”, நாடகமே அரங்கேற்றுவது என்று அரைமனதாக என்மனதில் முடிவானது.
நாடகம் அரங்கேறுகின்ற தருணமும் வந்தது. என்னசெய்வதென்று தெரியாமல் நாடகம் அரங்கேறிக்கொண்டிருக்கின்ற பொழுதே நான் மேக்கப் அறைக்குள் சென்று ஒளிந்துகொண்டேன். நாடகம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு காட்சிக்கும் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பும் ஆரவாரமும் மேலோங்கி ஆர்ப்பரிக்கின்றனர். இந்தக் கூட்டத்திற்கிடையே திரு.பம்மல்சம்பந்தமுதலியாரும் அமர்ந்திருக்கின்றார். அவரும் நாடகம் பார்க்கின்றார்.

தொடரும்...