விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 10

இதழ் 24 இன் தொடர்ச்சி...

”களத்தூர் கண்ணம்மா”, படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஜெமினி கணேசன், என்னை அழைத்துச் சொன்னார், அவர் அருகில் ஒரு சிறு பையனும் நின்றுகொண்டிருந்தான். ”ஆனந்தா இந்தப்பையனை நல்லா பார்த்துக்கோ, பிற்காலத்துல இவன் பெரிய நடிகனா வரப்போறான், இப்பவே இவனை போட்டோ எடுத்து வச்சுக்க” என்று அந்தச் சிறுவனை என்னிடம் அறிமுகப்படுத்தினார். அந்தச் சிறுவன்தான் பின்னாளில் ’உலக நாயகன்’ என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஜெமினி கணேசனின் வாக்குகள் பொய்க்கவும் இல்லை. நான் கமல ஹாசனுக்காக அவர் பிறந்த நாளிலும், அவர் நூறு படங்கள் நடித்து முடித்தபின்னும் சிறப்பு மலர் செய்து வெளியிட்டுருக்கிறேன்.
என் செயல்கள் சில சமயம் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதும், சில பொழுதுகளில் கண்டுகொள்ளாமல் விடப்படுவதும் உண்டு. ஹிந்து பத்திரிக்கை மட்டும் என் பெயரை சரியாக கொண்டுசேர்க்கின்ற விதமாக One man’s archive என்ற பெயரில் கட்டுரை வெளியிட்டு என்னைச் சிறப்பித்தது.

பலரும் என்னிடம் குறையாகவும் சொல்வதுண்டு, நான் சேர்த்து வைத்திருக்கின்ற புகைப்படங்களை யார் கேட்டாலும் தருவதில்லை. நான் அந்த விஷயத்தில் கொஞ்சம் கறாராகவே இருக்கிறேன். அனைத்துமே நான் அரும்பாடுபட்ட சேர்த்த பொக்கிஷங்கள். என் ஒவ்வொரு சேமிப்பின் பின்னாளும் என் உழைப்பு இருக்கிறது. தேடலும், காத்திருப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன. அவை சரியான விதத்தில் கொண்டு சேர்க்கப்பட்டு., பயன்படுத்தப்பட்டு திரும்பவும் என்னிடம் பத்திரமாகவே வரும் என்பதில் சந்தேகமிருக்கிறது.

சின்ன சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறேன். ஒரு முறை நடிகர், தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் என்னைச் சந்தித்து, தான் எடுக்கவிருக்கும் ”வெள்ளித்திரை” திரைப்படம் குறித்துச் சொன்னார். மேலும், அது சினிமாவிற்குள் நடக்கிற சம்பவங்களால் சூழ்ந்திருக்கிற கதையாதலால், தமிழ்சினிமாவைப் பெருமைப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் கிடைத்தால் நன்றாகயிருக்கும் என்ற ஆசையுடன் அவர் குழுவுடன் என்னை நாடி வந்தனர். நான் சேர்த்து வைத்திருந்த புகைப்படங்களில் அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்தனுப்பினேன். ஆனால், அதற்குப் பின்பாக அந்தப்புகைப்படங்கள் எங்கு இருக்கின்றன, எங்கு சென்றன என்பதற்கான தகவல்களையே காணோம்.

படக்குழுவினரும் அதுகுறித்தெல்லாம் ஏதும் பதில் சொல்லவில்லை. ”வெள்ளித்திரை” படம் வெளியாகி அதனைப் பார்க்கச்சென்றால் நான் கொடுத்த தொகுப்புகளிலிருந்த படங்கள் வரிசையாக திரையில் வருகின்றனநன்றிக்காக கூட அதில் என் பெயர் குறிப்பிடப்படவில்லை.
பிறிதொரு நாளில் யதேச்சையாக பிரகாஷ்ராஜ் அவர்களை ஒரு விழாவில் சந்தித்தேன். கையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார், என்னைப் பார்த்ததும் அதை மறைத்து வைத்துக்கொண்டே என்னிடம் நெருங்கி வந்தார். மரியாதை தருகின்றாராம், எனக்கு வேண்டியது அந்தமரியாதையா? அவரையே நேரில் பார்த்து தகவல் சொன்னால் கிடைத்துவிடும் என்று அவரிடம் புகைப்படங்கள் பற்றிக் கேட்டதற்கு, “நாளைக்கு காலை உங்கள் வீட்டில் இருக்கும்” என்று அவருக்கேயுரிய சிரிப்பு பாணியில் சொல்கின்றார். ஆனாலும் இன்றுவரை அந்தப் புகைப்படங்கள் என் வீட்டிற்கு வரவில்லை.

இந்தப் புகைப்படங்கள் எதையும் சாதாரணமாக சேர்த்துவிட முடியாது, ”மோட்டார் சுந்தரம் பிள்ளை” என்கிற படத்தில் சிவகுமார் நடித்திருக்கின்றார் என்ற தகவலை மெய்ப்பிக்க அதற்கான போட்டோ வேண்டும், எந்த போஸ்டரிலும் பிரதான கதாநாயகன் கதாநாயகி பாத்திரத்தைத்தான் போடுவார்களே தவிர மற்ற நடிகர்களை முன்னிலைப் படுத்தமாட்டார்கள், சிவகுமார் அன்றைக்கு வளர்ந்து வருகிற நடிகர்தான். அந்தப் படத்தில் அவர் இடம்பெற்றிருக்கின்ற காட்சி வேண்டுமென்பதற்காக நான் அந்தப் படத்தின் முழுப்பிலிமையும் பார்த்து அதில் எங்கு சிவகுமார் வருகின்றார் என்பதையெல்லாம் தேர்ந்தெடுத்து அந்த ஃப்லிமை டெவலப் செய்து பயன்படுத்துவேன்.எல்லாம் என் சொந்தக்காசில். அதற்குரிய மரியாதை கூட இங்கு கிடைப்பதில்லை.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கண்காட்சிகள் வைத்திருக்கின்றேன். மலையாளத்திலும், கன்னடத்திலும் கூட எனக்கான மரியாதை இன்றும் இருக்கிறது.

நான் சேகரித்து வைத்திருக்கின்ற புகைப்படங்களும், தரவுகளும் மிகுந்த எண்ணிக்கையில் இருப்பதனால் அதனை தொகுத்து புத்தகமாக போடவேண்டுமென்று எனக்கொரு ஆசை, இதற்காக பலரையும் அணுகினேன். நடிகர் சங்கத்தினர் கூட ஒத்துழைப்புதருவதுபோல் கூறி மறுத்துவிட்டனர். தமிழக அரசிடம் அனுப்பினேன், பின்னர் அங்கு சென்றால் ’இன்றைக்கு வா,நாளைக்கு வா’, என்று இழுத்தடித்தனர். பின்னர் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு நான்கு வரியில் கடிதம் எழுதினேன். காரணம் அவர்களை சிறு குழைந்தப்பருவத்திலிருந்தே எனக்குத்தெரியும்.

நான் சேர்த்து வைத்திருக்கின்ற தொகுப்புகளைத்திரட்டி ஒரு கண்காட்சி வைக்க வேண்டும், அதேபோல புத்தகம் ஒன்றும் போட வேண்டும், என்று அதில் எழுதியிருந்தேன். அடுத்தவாரமே அரசாங்க அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, ’புத்தகம் வெளியாக எவ்வளவு பணம் வேண்டும்?’ என்று கேட்டனர்,

’இப்போதைக்கு மூன்று லட்சம் போதுமென்று நினைக்கின்றேன், ஒருவேளை புத்தக வேலை முடிய அதிக காலம் எடுக்கலாம்,அதேவேளை அதிக தகவல்கள் இடம்பெறப்போவதால் அதிக பணம் தேவைப்படலாம்., எனக்கு இதைப்பற்றியெல்லாம் சரியாகத் தெரியாது, அத்தோடு பணம் பற்றாக்குறையானால் புத்தகம் பாதியிலேயே நின்றுவிடும்’, என்றும் கூறினேன்.

பின்னர் மற்றொரு அரசாங்க அதிகாரி வந்துபார்வையிட்டு, மிகப்பெரிய சேமிப்புகளாக இது உள்ளத, கண்டிப்பாக 4 லட்சம் ஆகும் என்றவுடன், உடனடியாக ஜெயலலிதா மூன்று லட்சத்தை நான்கு லட்சமாக உயர்த்திக்கொடுத்தார். மேலும், புத்தக வேலை முடிந்தவுடன் இந்த தொகுப்புகளையெல்லாம் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

நான் எல்லாப்புத்தகங்களையும், காசு கொடுத்துதான் வாங்கியிருக்கின்றேன். அப்படியே அவர்கள் இனாமாகக் கொடுத்தாலும், காசு வாங்க மறுத்தாலும் அவர்களின் புத்தகங்களை நான் வாங்க மாட்டேன். இப்படியாக சிறுக சிறுகச் சேர்த்ததுதான் எனது மொத்த தொகுப்புகளும். (1931- 2003).


இந்த மொத்த தொகுப்புகளும் 2003ல் என்னைவிட்டு போயின. யாரோ என் குழந்தைகளை என்னைவிட்டு தூக்கிச் சென்றதுபோல் இருந்தது. ஒரு மாதமாக தூக்கமில்லை, கண்ணீர்தான் வந்து கொண்டேயிருக்கும்.

இன்றுவரையிலும் அந்த தொகுப்புகளெல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை, நான் வைத்த அறைக்குச்சென்று பார்த்தேன், அங்கு அந்த புத்தகங்கள் ஒன்றுமே இல்லை. 2003லிருந்து அடுத்தஇரண்டு வருடங்களுக்கு எனக்கு இந்த பொக்கிஷங்களைக்குறித்து எந்த ஒரு கடிதமும் வரவில்லை, நானே அவர்களுக்கு கடிதம் போட்டாலும், அங்கிருந்து எந்தப்பதிலும் திரும்பவுமில்லை.

என் சேமிப்புகளை அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், மீண்டும் 2005லிருந்து சினிமாவைப்பற்றிய ஆவணங்களைத் திரும்பவும் முதலிலிருந்தே சேர்க்க ஆரம்பித்திருக்கின்றேன், ஆனால், எனது பழைய தொகுப்புகளின் அளவிற்கு இன்றைக்கு என்னிடம் இல்லை. அந்த தொகுப்புகளெல்லாம் எங்கே போனது, என்று இன்றளவும் தெரியவில்லை, அரசாங்கத்தை குறை சொல்கின்றோமே, இந்த அரசாங்கத்தை விடுங்கள், சினிமாக்காரர்கள் எங்கே போனார்கள்? நடிகர் சங்கம் எங்கே போனது?, அவ்வளவு நடிகர்கள் இருக்கின்றார்களே! அவர்களில் எத்தனைபேர் எனக்கு உதவ முன்வந்தனர்?.

அறுபது வருட காலமாக பிலிம் சேம்பருக்காக நாயாக உழைத்திருக்கின்றேன். எனக்காகவா செய்தேன். அவர்களாவது இதனைப்பற்றி கேட்டிருக்க வேண்டாமா.? எத்தனையோ நடிகர்களுக்கு என்னைத்தெரியும், அவர்கள் யாருமே இதனைக் கண்டுகொள்ளவேயில்லையே. இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என்று நினைகக்கூடிய புத்தகங்களை ஆயிரக்கணக்கில் நான் வைத்திருந்தேன். பல படங்களின் படச்சுருள்கள் கிடைப்பதில்லை, அதனைப்பற்றி வந்திருந்த செய்திகளை ஒட்டி, அதில் படத்தின் பெயரினையும், நடிக நடிகர், இயக்குனர் இன்ன பிறவிவரங்களையும் எழுதிவைத்திருப்பேன். பின்னர் தினகரனில் சினிமாவின் வரலாறைப்பற்றி தொடர் எழுதி வந்தேன். அங்கு எழுதப்படும் சமயத்திலெல்லாம், அப்படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் சந்ததிகள் மிக்க நன்றியோடு தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கின்றார்கள். இப்படி இருக்கின்ற சமயத்தில் அரசாங்கத்திற்கு ஏன் இதனை ஒரு ஆவணமாக சேர்த்துவைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமில்லை.

நடிகர் சங்கத்தைப் பார்த்தும் பலமுறை நான் இதுகுறித்து முறையிட்டிருக்கின்றேன். ’நான் சொல்கின்றேன், நாளை சொல்கின்றேன்’, என்கின்றார், யார் சொன்னார்கள்?, இதுவரையிலும் யாரும் எனக்குச் சரியான பதில் சொன்னதாக தெரியவில்லையே.

இப்பொழுதுகூட இந்திய சினிமா நூறுவருடத்திற்கான விழா கொண்டாடினார்கள். எனக்கு மிகப்பெரிய ஆசை, நமது கண்காட்சியை நிர்மாணிப்பதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம், என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கும் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

”சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு” என்ற புத்தகத்தை தமிழக அரசு உதவியுடன் தயாரித்திருக்கிறேன். “திரைக்கலைத் தொகுப்பு” என்ற நூலையும் எழுதியிருக்கிறேன். நான் சேகரித்து வைத்திருக்கின்ற பாட்டுப் புத்தகங்களையும் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன். இன்னமும் திரையுலகைச் சார்ந்த பலருக்கும் அவர்களது நூறாவது படம் வெளியாகின்ற பொழுதும், பிறந்த நாட்களின் பொழுதும் அவர்கள் படங்களின் தொகுப்புகளையெல்லாம் சேர்த்து ஆல்பமாக தயாரித்து அவர்களுக்கு பரிசளிப்பேன்.


கண்காட்சிகள் அமைத்தும் சிறந்த அரங்கு, சிறந்த கண்காட்சி முதலான விருதுகளைப் பெற்றிருக்கிறேன். தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களிலும் என் கண்காட்சியை வெற்றிகரமாக முடித்துத் தந்திருக்கிறேன். இன்றுவரையிலும் ஏதேனும் ஒரு திரைத்துறைப் பிரபலத்தின் முகவரியைக் கேட்டு எனக்கான தொலைபேசி மணி ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது.

பல விருதுகளும், பட்டங்களும் பெற்றிருக்கிறேன். ”நடமாடும் திரையுலகக் கலைக்களஞ்சியம்”, என்று என்னைச் சொல்கிறார்கள். இதைவிட பெரிய பாராட்டாகவும், எனக்கான பெரிய கெளரவமாகவும் நான் கருதுவது என்னிடமிருந்து தமிழக அரசு வாங்கிச்சென்ற சேகரிப்புகளைக் கொண்டு நிரந்தர ஆவணக்காப்பகம் அமைக்கவேண்டும். நானும் முடிந்தவரை முயன்று பார்த்துவிட்டேன், அதற்கான ஒரு முன்னெடுப்பும் நடப்பதாக தெரியவில்லை. அந்தப்பொருட்களெல்லாம் இன்று எங்கு இருக்கிறது? என்றும் தெரியாது. என் காலத்திற்குப் பின்னால் இந்த வேலையை யார் முன்னெடுத்துச் செய்யப்போகிறார்கள் என்பதும் பெரிய கேள்விக்குறியே. இன்றைய வளர்ந்துவிட்ட அறிவியல் தொழில்நுட்பத்தில் மெத்தனமே மிஞ்சும்.

இதனைப் பற்றியெல்லாம் என்னைப் பார்க்க வருபவர்களிடமும், நான் கொடுக்கிற பேட்டிகளிலும், சந்திப்புகளிலும் சொல்வதுண்டு. இதனைக் குறித்து நான் பேசும்போதெல்லாம் புலம்புகிறேன் என்றும் சொல்கிறார்கள். விலகிச்செல்கிறார்கள். இந்த வயதான காலத்தில் நான் ஆசையாசையாக சேர்த்து வைத்த தொகுப்புகளும், சேமிப்புகளும் கண்காட்சியாக வைக்கப்படவேண்டும்., அதனை மக்கள் பார்த்து பயனடைய வேண்டும் என்பதே எம் விருப்பம். என் ஆவணத்தொகுப்புகளுக்கு உயிர் இருக்கிறது, அது தினமும் என்னோடு உரையாடியதுண்டு, அவைகள் வெறுமனே குப்பையிலேயே கிடந்து மக்கிவிடக்கூடாது, அதனை நான்கு பேர் பார்த்து அதனோடு பேசவேண்டும், அதற்கு உயிர்கொடுக்க வேண்டும், அதற்கு நிரந்தர ஆவணக்காப்பகம் அமைப்பதுதான் ஒரே வழி என்ற என் நியாயமான ஆசையின் தீவிரம் அவர்களுக்கெல்லாம் புலம்பலாகத் தெரிகிறது.

எனக்கான அங்கீகாரம் கிடைக்காத போதிலும் நான் இந்த வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டுதானிருப்பேன். இதற்கு சினிமா மீது நான் வைத்திருக்கின்ற ஒருவித மயக்கம் தான் காரணம், அது காதல்.

-முற்றும்-