விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 9

சென்ற இதழின் தொடர்ச்சியாக:

எம்.ஜி.ஆருடன் பலபடங்களில் உடன் நடித்த நடிகை லதா, அவர் ”வருவான் வடிவேலன்” என்ற படத்திற்கு சிறந்த நடிகையாக (சென்னை சினிமா ரசிகர் சங்கம், முருகாலயா சபா, ஃபிலிம் பேர் போன்ற 3 பெரியநிறுவனங்களால்) தேர்ந்தெடுக்கப்பட்டார். இது மிகப்பெரிய நிகழ்வு. இந்த நிகழ்ச்சியை சாதாரணமாக செய்துவிடக்கூடாது என்பதில் எனக்கொரு ஆர்வம். எனவே லதாவிடம், ”நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரை தலைமையேற்கும்படி அழைக்கலாமா?”, என்று கேட்டேன். அப்போது எம்.ஜி.ஆர். முதல் மந்திரியாக இருந்தார். ஆகவே, லதாவும் பயப்பட்டார், “நான் அவருடன் பலபடங்களில் நடித்திருந்தாலும், இப்போது முதலமைச்சராக ஆனபின்பு என்னால் அவரைச் சந்திக்க இயலுமா” என்று சொன்னார். அவர் சொன்னதும் உண்மைதான் எம்.ஜி.ஆரை யாராலும் அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது.
சிவகுமாரின் நூறாவது படம் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” வெளியான சமயம். படமும் நன்றாக ஓடி நல்ல வசூலையும், பேரையும் அப்படக்குழுவிற்கு அள்ளித்தந்தது. ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் நூறாவது நாள் வெற்றிவிழாவிற்கு எப்படியாவது எம்.ஜி.ஆரை தலமையேற்கச் செய்யவேண்டும் என்பதே சிவகுமாரின் விருப்பம். அதே வேளையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நல்லமதிப்பெண் எடுத்த மாணவர்கள் பத்துபேருக்கு அவரவர் அம்மாவின் பேரிலேயே பணத்தை டெபாஸிட் செய்துவிட்டு அதன்மூலம் வருகின்ற வட்டிப்பணத்தை எடுத்து மாணவர்களின் படிப்புச்செலவிற்கு உபயோகப் படுத்திக்கொள்ளலாம், என்ற திட்டத்தை வெற்றிவிழாவில் அறிமுகப்படுத்த வேண்டும், என்ற யோசனையில் சிவகுமார் இருந்தார். இதேவிஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சொன்னதும் தாய்மார்கள் மீது அளவற்ற மதிப்பு வைத்திருந்த எம்.ஜி.ஆர் உடனே மறுப்பின்றி ஒத்துக்கொண்டார்.
இந்த விஷயத்தை நான் லதாவிடம் சொன்னேன். சிவகுமாரின் நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் வருவது உறுதியான காரணத்தினால், லாதாவையும் ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் நூறாவது நாள் விழாவிற்காக அழைத்திருந்தேன். அவரும் ஒத்துக்கொண்டார்.

நான் சிவகுமாருக்காக அவர் நடித்த மொத்தபடங்களின் தொகுப்புகளையும் மலராக வெளியிடுகின்ற வேலையில் இருந்தேன். இதேபோல என்னிடம் நூறு புத்தகங்கள் தயாராகவும் இருந்தது. புத்தகத்தை சிவகுமாரிடம் அனைவரின் மத்தியிலும் ஒப்படைப்பதாகத்தான் ஏற்பாடு. எம்.ஜி.ஆர் அரங்கினுள் நுழைகின்றார். விழா மேடையிலிருந்த ஏ.வி.மணியன் என்பவர், எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன் ஏற்பட்ட படபடப்பில், என்ன செய்தாரென்றால் பிலிம்நியூஸ் ஆனந்தன் தொகுத்த மலரை (சிவகுமார் நடித்த நூறு படங்களின் தகவல்கள், புகைப்படங்கள் அடங்கிய புத்தகம்) எம்.ஜி.ஆர் பெற்றுக்கொள்வார் என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். நியாயமாக அதனை சிவகுமார் தான் பெற்றிருக்க வேண்டும், அவருக்குத்தான் அது நூறாவது படம், அவருக்காக தயாரிக்கப்பட்டது தான் இந்தப் புத்தகம். இத்தகைய குளறுபடிகள் நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே லதாவும் வந்துவிட்டார்.

எம்.ஜி.ஆர், லதாவைப் பார்த்ததும், மேடைக்குவரச் சொன்னார். எம்.ஜி.ஆரின் அருகிலேயே இருக்கை ஒன்று காலியாக இருந்த காரணத்தினால், லதாவை அங்கு அமரும்படி சொன்னார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு லதாவும், எம்.ஜி.ஆரிடம் தன் “வருவான் வடிவேலன்”, திரைப்படத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சொல்லிவிட்டார். புத்தகம் மாறிப்போன குழப்பத்தில் இருந்த எனக்கு இது எதுவும் தெரியாது.
அடுத்த நாள் காலை ஏழுமணிக்கு லதா, அவர் இல்லத்திற்கு என்னை வரச் சொன்னார். ”எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிக்கு வருவதாகவும் ஒத்துக்கொண்டார், ஆனால் மூன்று நாட்களுக்குள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முடித்துவிட வேண்டும், என்றும் பின்பு எனக்கு கட்சிவேலைகள் நிறைய இருக்கின்றன”, என்று எம்.ஜி.ஆர். சொன்னதாக லதா என்னிடம் சொன்னார். மூன்று நாட்களுக்குள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் என்பது மிகவும் கஷ்டம்தான் ஆனாலும் நான் முடித்து தருவதாக ஒப்புக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச்செய்ய ஆரம்பித்தேன்.

அந்நிகழ்விற்கு 200க்கும் அதிகமான பத்திரிக்கையாளர் நண்பர்கள் வந்தார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிபேசுகின்ற மக்களும், பத்திரிக்கை நண்பர்களும் வந்திருந்தனர். எம்.ஜி.ஆர் சொன்னபடியே தலைமையேற்று நிகழ்வினை சிறப்பாக நடத்தி வைத்தார். பின்னர் கடைசியாக பேசிய எம்.ஜி.ஆர், என் செயலைப்பாராட்டி மேடையிலேயே ரூபாய் 20,000 தொகையை அன்பளிப்பாக அளித்தார். இவ்வளவு பெரிய தொகையை அன்பளிப்பாக பெற்றுக்கொள்வது இதுவே முதல்முறை. உடனிருந்த பத்திரிக்கையாளர்கள் எல்லாமே, பிலிம்நியூஸ்ஆனந்தன்தான் அடுத்த சினிமா மந்திரி, என்றும், ”சினிமா மந்திரி பிலிம்நியூஸ் ஆனந்தன் வாழ்க!”, என்றும் கோஷமிட தொடங்கி விட்டார்கள். அடுத்தநாள் பேப்பரிலும் இதே செய்திகள்தான் அடிபட்டன.

நடிகர் திலகத்தின் நூறாவது படம்:

அப்போது சிவாஜி கணேசன் 98 படங்கள் நடித்து முடித்துவிட்டார். பி.ஆர். பந்தலு இயக்கிய ”முரடன் முத்து”, மற்றும் ஏ.பி.நாகராஜன் இயக்கிய “நவராத்திரி”, இரண்டும் ஒரே காலகட்டத்தில் படப்பிடிப்பும் நடந்துமுடிந்தன. 1964ஆம் வருடம் நவம்பர் 3ஆம் தேதி தீபாவளியன்றி இப்படங்கள் வெளியாகும் சூழ்நிலையும் இருந்தது.
இவ்விரு இயக்குனர்களுமே புகழ்வாய்ந்தவர்கள், அத்தோடு இருவருமே தன் படத்திற்கான வெளியீட்டுத்தேதியை மாற்றிக்கொள்ள தயாராகயில்லை. தீபாவளி நாளில் படம் வெளியானால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதே இவ்விருவரின் எண்ணமும் கூட. இருப்பினும் ஏ.பி.நாகராஜன் விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் ஓர் முடிவிற்கு வந்தார். அதன்படி ஸ்டார் தியேட்டரில் சிவாஜி, தேவிகா நடிப்பில் உருவான “முரடன் முத்து”, காலைக்காட்சியாகவும், ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் , சிவாஜி, சாவித்திரி நடிப்பில் உருவான “நவராத்திரி” மிட்லண்ட் திரையரங்கில் மதியக்காட்சியாகவும் வெளியானது. ”முரடன் முத்து”,தான் தீபாவளி நாளில் முதலில் வெளியான படம். மதியக்காட்சியாக நவராத்திரி வெளியாகியதால், சிவாஜியின் நூறாவது படமாக அது மாறியது. நவராத்திரி படம் பெருவெற்றி பெற்று ஒன்பது வேடத்தில் சிவாஜியின் நடிப்பிற்கு இலக்கணமாக ”நவராத்திரி”, இன்றளவும் பேர்சொல்லும் படி நிலைத்திருக்கின்றது.

இங்கு ஓர் விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும், வேறு எந்த நடிகனுக்கும் கிடைக்காத பெருமை, நடிகர் திலகத்திற்கு உண்டு. என்னவெனில், சிவாஜியின் நூறாவது படம் “நவராத்திரி”, நூறு நாட்கள் ஓடியிருக்கின்றது. அவரின் 150 வது படம் ”சவாலே சமாளி” இதுவும் நூறு நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படம். அவரின் 175 வது படம் ”அவன் தான் மனிதன்”, இதுவும் ஒரு வெற்றிப்படமே. இதைவிடச் சிறப்பாக அவரின் 200 வது படம் “திரிசூலம் “ மாபெரும் எதிர்பார்ப்புடன், 200 நாட்களைக் கடந்து வெற்றிபெற்ற படம்.
முதல்முறையாக சிவாஜி 100 படங்களை முடித்த பின்பு அவருக்காக சிறப்புமலர் வெளியிட்டிருக்கின்றேன். அதேபோல ஜெயலலிதா, கே.ஆர். விஜயா என்று, தொடர்ந்து கமலஹாசன், சிவக்குமாருக்கு ”ரோசாப்பூ ரவிக்கைக்காரி”, என்று சிறப்புமலர்கள் ஆல்பமாக வெளியிட்டிருக்கின்றேன். இதுபோக ஒவ்வொரு வருடமும் அந்த வருடம் எத்தனை படங்கள் வெளியாகியிருக்கின்றன என்ற அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து புத்தகமாக உருவாக்கிக்கொண்டு அதனை ஒவ்வொரு அலுவலகமாக நானே சென்று இலவசமாக கொடுத்தும் வந்திருக்கின்றேன். என்னுடைய தொகுப்புகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு ”சாதனை படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு”, என்று ஜெயலலிதாவின் தலைமையில் அரசு நிதியுதவில் புத்தகம் வெளியிட்டேன்.

தமிழ் மட்டுமல்லாமல், 80 வருட தெலுங்கு சினிமாவிற்கு ஒரு கண்காட்சி வைத்திருந்தேன். அப்போது நாகேஸ்வரராவ் என்னிடத்தில் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்.

”வெற்றிபெற்ற படம்”, ”தோல்வியடைந்த படம்”, என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து வகையான கோப்புகளையும் நான் சேமித்து வைப்பேன்.

நான் சேமித்து வைத்திருப்பவைகளை ஒன்றிணைத்து ”திரைக்கலைத் தொகுப்பு”, நடிக நடிகையர்கள், இயக்குனர்களின் முகவரிப் புத்தகம், தயார் செய்தேன். புத்தகத்தை தேவர் வெளியிட சிவாஜி பெற்றுக்கொள்வதாக இருந்தது. ”ஆட்டுக்கார அலமேலு”, தேவர் பிலிம்ஸ் தயாரித்த படத்தின் ஸ்டில்களும் இதில் இருந்தன. புத்தகத்தின் விலை 15 ரூபாய். பெற்றுக்கொள்பவர்களின் மதிப்பிற்காக அதிக பணத்தைச் சொல்லிவிட்டு வாங்குவார்கள். அதேபோல சிவாஜி, புத்தகம் வாங்குகையில் 5000 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு கவரில் 100 ரூபாய் மட்டும் தந்தார். அவசர நிலையில் வந்திருந்த தேவர், பணம் ஏதும் எடுத்துவரவில்லையாதலால் சிவாஜியின் வழிமுறையின்படி தேவரும் அப்படியேச் செய்தார். ஜெய்சங்கர் மட்டும் மேடையில் ஏறி நான் இப்போதே 5000 ரூபாய் தருகிறேன் என்று மேடையிலேயே ரூபாய் 5000 கொடுத்தார். இவர்கள் சொல்கின்ற கணக்கின் படி பார்த்தால் புத்தகத்தின் தொகை லட்சங்களைக் கடந்து விற்றிருக்க வேண்டும். ஆனால், 5000 ரூபாய் தருவதாகச் சொன்னவர்கள் எல்லாம் வீட்டிற்குச் சென்று தருகின்றேன், மேக்கப் மேனிடம் கொடுத்து அனுப்புகின்றேன் என்றுதான் சொன்னார்களே தவிர, இவர்கள் காட்டிய கணக்கிற்கு புத்தகம் விற்பனையாகவில்லை.
ஒரு நாள் தேவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். நான் வடமாநிலம் செல்லவிருக்கின்றேன். உனக்கு ஒரு கடன் திருப்பித்தர வேண்டியிருக்கின்றது. அநேகமாக இனிமேல் திரும்பியும் தமிழகத்திற்கு வரும் எண்ணமில்லை. என் அலுவலகத்தில் ராமசாமி என்பவர் இருப்பார் அவரிடம் உனக்குத்தரவேண்டிய 5000 ரூபாயைக் கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும் என்று சொன்னார். தேவரின் அலுவலகத்திற்குச் சென்றேன், ராமசாமி தாமதமாக வந்து 5000 ரூபாய் தந்தார். அவர் சொன்னதுபோலவே வடமாநிலம் சென்ற தேவர் திரும்பி வரவில்லை, அவர் அங்கேயே மரணமடைந்துவிட்டார்.

என் மகன் டைமண்ட் பாபுவின் கல்யாணத்திற்கு வந்த சிவாஜி கணேசன் 5000 ரூபாய் மொய் செய்துவிட்டு என்னிடம் சைகையில் சொன்னார். அன்று தரவேண்டிய பணம் தான் இங்கு மொய் செய்திருக்கின்றேன் என்று.

சிவாஜி மலர் தயார் செய்துவிட்டு அவரிடம் காண்பித்தால் மலரில் உள்ள புகைப்படங்களைப் பார்த்துவிட்டு இதெல்லாம் எங்கள் ஆபீஸில் இருந்து திருடியதுதானே? என்று நக்கலாகக் கேட்பார். நான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து என் வேலைகளையே ஆரவமாகச் செய்தேன், செய்துவருகின்றேன்.

முதலிலெல்லாம் இவ்வாறான கலெக்‌ஷன்களுக்கு வீட்டில் அனுமதி வாங்கத் தேவையிராது, ஆனால் இன்னும் வயதான காலத்திலேயும் இதேமாதிரியான வேலைகளையே செய்துவருவதால், நிறைய ஏச்சுக்களும், பேச்சுக்களும் கேட்கவேண்டியதாகயிருக்கிறது. ஆனாலும் இன்னமும் ஆர்வம் குறையவில்லை. என் பையனும் பி.ஆர்.ஓவாகத்தான் இருக்கின்றான். டைமண்ட் பாபு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும், எனக்கு ஏதேனும் புதிய படங்கள் பற்றிய தகவல்களோ, புகைப்படங்களோ வேண்டுமென்று கேட்டால், இணையத்தில் அனுப்பிவைப்பதாகச் சொல்கின்றான். நான் இணையத்தில் தேடியெடுக்கக் கூடிய பருவத்திலா இருக்கின்றேன் என்பதை யோசிக்ககூட அவன் தயராகயில்லை.

தமிழ்ச் சினிமா 80வது ஆண்டு கொண்டாடியபொழுது பாராட்டிய கூட்டம் நூறாவது ஆண்டு கொண்டாடுகின்ற வேளையில் என்னை மறந்துவிட்டார்கள்.

இந்த வாரத்தில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன. அதில் டப்பிங்க் செய்யப்பட்ட படங்கள் எத்தனை? இரட்டைவேட கதாபாத்திரப்படம் எது? பெண் இயக்குனர்கள் எத்தனை பேர்? என்று தனித்தனியாக குறித்து வைத்துக்கொண்டிருக்கின்றேன். எனினும் கண்பார்வையும் சரியாக இல்லை, பிலிம்நியூஸ் ஆனந்தனிடம் கேட்டால் சரியான தகவல்வரும் என்கின்ற நம்பிக்கை கேட்பவர்களிடம் இருக்கின்றது. அது கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தப்பான தகவல்களைத் தருவது மிகவும் ஆபத்தானது, அதற்குப்பதிலாக தகவல்கள் ஏதும் தராமல் சும்மாயிருப்பதே நல்லது.

தொடரும்...