வீடு - மத்திய வர்க்கத்தின் மாபெரும் கனவு

"பார்பிக்யூ நேசன்" உணவகத்திற்குச் சென்றிருக்கிறீர்களா? கொடியை இறக்கும் வரை கொட்டிக் கொண்டே இருப்பார்கள். உணவை விட அங்கு எனக்கு மிகவும் பிடித்தது அவர்கள் பரிமாறும் நேர்த்தி. குறிப்பறிந்து பரிமாறுவர். ஒவ்வொரு முறையும் உணவொன்றை பரிமாறிவிட்டு பக்கத்தில் வந்து நின்று " எப்படி இருக்கிறது ஐயா? " என்பதை கொஞ்சம் கசடான ஆங்கிலத்தில் கேட்பார்கள். (அங்கே வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் வட கிழக்கு மாநிலத்தவர். இன்று நகரத்தின் பெரும்பான்மை உணவகங்களில் அவர்களே வேலை செய்கிறார்கள். எனக்கு அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நாஞ்சில்நாடனின் "தன்ராம் சிங்" சிறுகதை தான் ஞாபகம் வருகிறது ) நீங்கள் பொதுவாக "குட்" என்று சொல்லிவிட்டீர்களானால் போயிற்று. நீங்கள் எதிர்பார்க்காத அடுத்த கேள்வியை கேட்பார்கள். " நாங்கள் எப்படிப் பரிமாறினால், நீங்கள் ' எக்ஸலண்ட்' என்று சொல்வீர்கள்? எங்களுக்குத் தேவை எக்ஸலண்ட்; குட் அல்ல ". இதுதான் அவர்களின் தாரக மந்திரம். நீங்கள் எக்ஸ்லண்ட் சொல்வதற்காக இயன்ற வரையில் எல்லாம் செய்வார்கள்.
சிறந்ததொரு படைப்பைத் தரும் எந்த ஒரு படைப்பாளியும் வெறும் "குட்" வார்த்தையுடன் திருப்தி அடைய மாட்டான். அவனுக்குத் தேவை எக்ஸ்லண்ட். இப்படி குட் என்ற வார்த்தையில் திருப்தியடைந்திருந்தால் பாலு மகேந்திரா "நெல்லு"வோடோ (அவர் ஒளிபதிவு செய்து அதற்கு தேசிய விருதுபெற்ற அவரது முதல் திரைப்படம்-மலையாளம்) "கோகிலா" வோடோ (அவர் இயக்கிய முதல் திரைப்படம். அதில் இயக்குனருக்கான தேசிய விருது பெற்றார்-கன்னடம்) நின்றிருப்பார். அவர் வாங்கயிய "குட்" என்பதே தேசிய விருதுதான். அவரைக் கேட்டால் தான் இன்னும் எக்ஸ்லண்ட் வாங்குவதற்காக போராடிக் கொண்டிருப்பதாகவே கூறுவார். அவரின் ஆகச் சிறந்த படைப்புகளான " வீடு " மற்றும் " சந்தியா ராகம் " படங்களைப் பற்றிக் கூறும் போது கூட, அவை சிறந்தவை என்று கூற மாட்டார். தான் அறிந்த வரையில் மிகக்குறைந்த தவறுகள் உள்ள படங்கள் அவை இரண்டும் என்பதே அவரது வாதம்.

பொதுவாக நான் மதிக்கும் பெரும் எழுத்தாளுமைகள் பலரும் கூட, மத்திய வர்க்கத்தை சுற்றிச் சுழலும் எழுத்தை, அவர்களின் அன்றாட வாழ்வின் துயரங்களை " குமாஸ்தா இலக்கியம் " என்று எள்ளளோடு விளிப்பதை கவனித்திருக்கிறேன். என்னைப் பொருத்த வரையில் இந்தியாவே ஒரு குமாஸ்தா நாடுதான். அடிமைப்பட்ட காலத்திலிருந்து அப்படியே பழகிவிட்டது நமக்கு. பெரும் போராட்டங்களற்ற குமாஸ்தா வாழ்வில் ஊறிப்போன ஒரு எழுத்தாளன் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதினால்தான் அதில் போலித்தன்மை மிகுந்திருக்கும். உள்ளிருந்து எழும் உண்மையான படைப்புகள் மட்டுமே உன்னதங்களைத் தொட முடியும். உலகின் ஆகச்சிறந்த படைப்புகள் பலவும் அவ்விதமே. அவ்வகையில் " வீடு " படத்தின் கரு உருக்கொண்ட பொழுது பாலு மகேந்திரா தனது பால்யத்தைத் தாண்டியிருக்கவில்லை. அவரின் அன்னை வீடு கட்டும் முயற்சியில் அவர்தம் சுயத்தை தொலைத்த நிகழ்வே இக்கதையின் கரு. வீடு மட்டுமல்ல, தமிழ்த்திரையுலகமே தலையில் வைத்துக் கொண்டாடிய " மூன்றாம் பிறை " கூட அவரின் உயிர்ச் சினேகிதியான ஷோபாவின் பிரிவில் உயிர்த்த கதையே. இதையும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மத்திய வர்க்கத்தின் மாபெரும் கனவு சொந்தமாக ஒரு வீடு. அவர்களை நோக்கித்தான் நாளிதழ்களின் பக்கங்கள் எல்லாம் பில்டர்ஸ்களின் விளம்பரங்களால் ததும்புகின்றன. ஆனானப்பட்ட பாரதியே காணி நிலம் கேட்டான் என்றால், சாதாரண நாமெல்லாம் எம்மாத்திரம். இப்படி வீடு பற்றிய கனவொன்று ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் ஆசைப்பட்டபடி ஒரு வீடு கட்டி முடிப்பது என்பதென்ன அவ்வளவு சாதாரண காரியமா? அது எத்தனை பேருக்குச் சாத்தியமாகின்றது? இதற்கஞ்சி வாடகை வீடுகளிலேயே வாழ்க்கையைக் கழித்துவிடுகிறவர்கள் தாம் எத்தனை எத்தனை?! அப்படியே வாடகை வீடுகளில் காலம் தள்ளுவது மட்டும் சுலபமான காரியமா என்ன?

" பம்பு அடிக்கும் போது மெதுவா அடிக்கணும். தக்கு புக்குன்னு அடிக்கக் கூடாது. பம்புக்கு வாஸர் போடணும்னா வாடகைக்குக் குடியிருக்கவுஹ தான் துட்டுப் போட்டு வாஸர் வாங்கிப் போடணும்.. என்ன சொல்லுதீய ?

ராத்திரி ஒன்பது மணிக்குள்ளே யாரா இருந்தாலும் வீட்டுக்குள்ள வந்திரணும். சரியா ஒம்பதுன்னா ஒம்பதுக்குத் தலை வாசல் கதவச் சாத்திடுவேன். அப்புறமா அம்மான்னாலும் முடியாது. அய்யான்னாலும் தொறக்க முடியாது. .. கதவைத் தாழ்ப்பாள் போட்டு சாவியை நான் வச்சிருப்பேன்..

வீட்டுக்குள்ள கண்ட எடத்துலேயும் ஆணி அடிக்கக் கூடாது. விறகு அடுப்பு வச்சு சமையல் பண்ணக் கூடாது.. சமையல் கட்டுலே ஒரு பொட்டுக் கரியைப் பார்த்தாலும் எனக்குப் புடிக்காது..என்ன சொல்லுதீய?

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே.. துணிமணிகளை மொட்டை மாடியிலே கொண்டு போய்க் காயப் போடக் கூடாது. மொட்டை மாடிக்கு யாரும் போகவே கூடாது... வத்தல் போடுதேன், துணி காயப் போடுதேன்.. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளைப் படுக்க வைக்கேன்னு ஆரம்பிச்சிரக் கூடாது.. என்ன சொல்லுதீய ? "

- இவையெல்லாம் வண்ணநிலவனின் ஆகச்சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான "வீட்டுக்கார சொர்ணத்தாச்சி" சிறுகதையில் வரும் சொர்ணத்தம்மாள் ஆச்சி வாடகைக்கு குடி வருபவர்களிடத்தே போடும் கண்டிஷன்களில் சில. வாடகை வீடுகளில் குடியிருக்கும் ஒவ்வொருவரும் அன்றாடம் சந்திக்க நேரிடும் பிரச்சனைகளுள் இவையத்தனையும் உள.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இப்படி முழுக்க முழுக்க வீட்டைச் சுற்றிச் சுழலும் ஒரு படம் இதற்கு முன்போ இதற்குப் பின்போ வந்ததாக நினைவில் இல்லை. ( வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி எடுக்கப்பட்ட படங்கள் ஏராளம் உண்டு ). ஏன் தமிழ் இலக்கியத்தில் கூட இது போன்ற ஒரு சில சிறுகதைகளைத் தவிர, வீட்டைப் பற்றி எழும்பிய நல்லதொரு நாவல் ஏதும் இருக்கிறதா?. அப்படி ஏதேனும் இருப்பின் நண்பர்கள் குறிப்பிடலாம்.

படத்தின் நாயகி சுதா ஒரு வங்கியில் குமாஸ்தாகப் பணியாற்றுகிறாள். அவள் பணி ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியரான தன் தாத்தாவுடனும், பள்ளி செல்லும் தன் தங்கையுடனும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறாள். வீட்டுச் சொந்தக்காரர் திடீரென்று வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார். அதன் பொருட்டு வாடகைக்கு வீடு தேடியலைந்து சோர்ந்து போகிறாள். அப்பொழுது தன் உடன் வேலை பார்க்கும் அவளது காதலனும் மற்றும் ஒரு நண்பரும் சொந்தமாய் வீடு கட்டிக் குடியேற அறிவுறுத்துகின்றனர். அவளும் சம்மதித்து தன்னுடைய நிலத்திலேயே வீட்டைக் கட்ட ஆரம்பிக்கின்றாள். அப்போது தேவைப்படும் வீட்டு லோனிலிருந்து, கட்டட வேலை வரை ஒவ்வொன்றிலும் அவள்படும் இன்னல்களும் அவற்றிலிருந்து அவளின் மீட்சிகளுமே மீதிக் கதை.

ஒரு படம் எடுக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படுவதே அதன் மகத்தான வெற்றி. அதிலும் நட்சத்திர கதாநாயகர்களை மையப்படுத்தாமல், ஆடல், பாடல், சண்டை போன்ற எந்த ஒரு வழமையான வியாபார சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் எடுக்கப்பட்ட ஒரு படம் அது வெளியாகி 25 ஆண்டுகளுக்குப் பின்னாலும், பேசப்படுகிறது, விவாதிக்கப் படுகின்றது, கொண்டாடப் படுகின்றது.

லஞ்சத்தாலும், ஊழலாலும் பழுதடைந்திருக்கும் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கை கடுமையாக சாடியிருக்கிறது இப்படம். 'இந்தியன்' படத்தில் வரும் சுஜாதாவின் இந்த வசனம் - " இங்க தேசிய ஒருமைப்பாடுங்கிறதே லஞ்சத்துல மட்டும் தான்டா இருக்கு" - அன்றைக்கும் பொருந்திப் போகிறது. இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும் பொருந்திப் போகும் என்றே தோன்றுகின்றது.

80 களில்- வீட்டிலும், சமூகத்திலும் பெண்களின் நிலையை அவர்களின் உணர்வுகளை மிக நுணுக்கமாக படமாக்கியிருப்பார் பாலுமகேந்திரா. சிமண்ட் மூட்டைத் திருட்டுப் போவது கண்டு சுதா குரல் உயர்த்தும் அவ்விடத்தில், வாழ்ந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணின் மீதும் காலம் காலமாக சுமத்தப்படும் பழிச் சொல் சுதாவின் மீதும் சுமத்தப்படும். அதே போல எத்தனைதான் படித்து, உழைத்து முன்னுக்கு வந்த போதும் தாமே சுயமாக சம்பாரித்த போதும், உற்ற சினேகிதிக்கு உதவ நேரிடும் வேளையில் கூட கணவனின் கண்ணசைவிற்காக காத்து நிற்பாள் சுதாவின் அலுவலகத் தோழி. "ஒருத்தன் நெனப்ப நெஞ்சுக்குள்ள வச்சிக்கினு இன்னொருத்தனுக்கு எப்படிக் கண்ணு முந்தானை விரிக்கிறது " - இது கட்டிடத் தொழிலாளி மங்காத்தா, சுதாவிடம் கூறும் வசனம். இப்படி எளிமையிலும் பேரன்பு போற்றுவாள் ஒருத்தி. பாலு மகேந்திராவின் படங்களில் வரும் பெண்களின் அந்தச் செல்லக் கொஞ்சலும், மெல்லிய சலிப்பும் அடடா !

அர்ச்சனாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுத் தந்த படம். அதற்குத் தான் முழுத் தகுதியுடையவர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருப்பார் அர்ச்சனா. தன் கண் முன்னே சிமண்ட் மூட்டை திருட்டுப் போவதைக் கண்டும் ஒன்றும் செய்யவியலாத நிலையில் பொங்கி வரும் அந்த கண்ணீரில்தான் எத்தனை இயல்பு, எதார்த்தம், கோபம், இயலாமை! வீடு கட்டும் பொறுப்பின் மிகுதியால் ஏற்படும் தன் இயல்பு மாற்றத்தை அவ்வளவு அருமையாக வெளிக்காட்டியிருப்பார். தங்கையிடமும், காதலனிடமும் கோபத்தில் பொங்குவதும் பின்பு தன் தவறை உணர்ந்து மருகுவதும் என்று சுதாவாகவே வாழ்ந்திருப்பார் அர்ச்சனா.

தாத்தாவாக வரும் சொக்கலிங்க பாகவதரின் முதுமையே அவரின் மேல் நம்மிடத்தில் ஒரு பரிவை, ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணிவிடுகிறது. அவரின் முகமும் பாவமும் அப்படி. தன் நண்பர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் உயில் எழுதி வைக்கிறார். இந்நிகழ்வு முதுமையை எதிர்கொள்ளும் அவரின் பக்குவத்தையும், மரணம் பற்றிய பயத்தையும் ஒருங்கே வெளிப்படுத்துகின்றது. இவர் தவிர சுதாவின் காதலனாக வருபவரும், அலுவலக நண்பராக வருபவரும் தங்களுக்கான பணியைச் செவ்வனே செய்து போயிருக்கிறார்கள். வீடு கட்டும் கட்டிடத் தொழிலாளியான மங்காத்தாவும், அவளின் சென்னைத்தமிழும் அப்படியே மனதில் ஒட்டிக் கொள்கிறது.

தனது நண்பரின் மரணம் குறித்து செய்தி சொல்லும் மற்றொரு நண்பரிடம் அதிர்ச்சியுடன் கேட்பார் பாகவதர் - " என்னாச்சு ? " அதற்கு நண்பர் சிறு இடைவெளியும் இன்றி சொல்லுவார் "வயசாச்சு". அதே போல ஒரு காட்சியில் " தங்கத்துக்கும் நிலத்துக்கும்தான் காசு " என்று பெரியவர் சொல்ல, உடனே அர்ச்சனா சொல்வார் " தண்ணிக்கும் ". இப்படிச் சின்னச் சின்ன வரிகளில் அர்த்தம் பொதிந்த வசனங்கள்.

குறைந்த ஒளி மட்டுமே ஊடுருவும் அந்த வாடகை வீடு, பெரியவர் அமரும் அந்த நாற்காலி, ஒவ்வொரு நிலையாக மெதுவாக எழும் வீடு, வரிசை கலையாத டேபிள்கள் நிறைந்திருக்கும் அலுவலகம், மக்கள் உலாவும் மார்க்கெட் என்று அஃறிணைகளையும் உயிர்ப்பித்து உலவவிடுகிறது பாலுமகேந்திராவின் காமிரா என்று மாய இயந்திரம்.

ராஜாவின் இசையில் பித்து கொண்டு அலையும் ஒரு கூட்டமே இருக்கின்றது. அவர்களின் பித்தை முற்றச் செய்யும் இப்படத்தின் பின்னணி இசை. குடும்பத்துடன் வீடு தேடி அலையும் காட்சிகளில் வெளிப்படும் இசை உலகத்தரம். அதே போல வீட்டு வேலை ஆரம்பமாகும் இடத்திலும். பேருந்தில் சுதா தன் காதலன் கையைப் பற்றும் பொழுதும் வரும் ப்ளூட்தான் எத்தனை இனிமை.

மெளனத்தையெல்லாம் இசையென்னும் சொற்களால் நிரப்பியிருக்கிறார் ராஜா. படத்தின் பல இடங்களில், ராஜாவின் "ஹவ் டு நேம் இட்" ஆல்பத்திலிருந்து எடுத்தாண்டிருக்கிறார் பாலுமகேந்திரா. இதற்காகவே இசைத்தது போல படத்துடன் அவ்வளவு அழகாகப் பொருந்திப் போகிறது அவ்விசை.

வாடகைக்கு வீடு தேடி அலைபவர்கள் படும் பாட்டை அப்படி வாழ்க்கையில் ஒருமுறையாவது அலைந்தவர்களால் மட்டுமே உணர முடியும். அதுவும் சென்னை போன்ற மாநகரத்தில் வீடு தேடுவதென்பது அவ்வளவு சுலபமில்லை. அப்படியொரு காட்சியில் வீடு தேடியலைந்து வீடு எதுவும் கிடைக்காத விரக்தியில், களைப்பில், கொளுத்தும் வெயிலில் நடந்து வந்து கொண்டிருப்பாள் சுதா. அவள் வைத்திருக்கும் மடக்கிய குடையை நீங்கள் பார்க்காதவரை இது வெறும் சாதாரண காட்சிதான். வெளியில் வெயில் கொளுத்துகின்றது. உள்ளே விரக்தியும் ஆற்றாமையும் கொளுந்து விட்டெரிகின்றது. அந்த வெம்மையில் புற வெயில் பெரிதாகத் தோன்றுவதில்லை. அதனால்தான் அவளுக்கு கையில் வைத்திருக்கும் குடையை விரிக்கக் கூட தோன்றியிருக்காது. மனம் சோர்ந்திருக்கும் ஒரு நாளில் யாரும் முகப்பூச்சில் கவனம் செலுத்துவதில்லை. அதே போல மற்றொரு காட்சியில் புது வீட்டைப் பார்வையிட வரும் பெரியவர் முதலில் இடது கால் வைக்க வந்து, மாற்றி வலது காலால் ஏறுவார். அதே போல அந்தப் பெரியவர் இறந்ததும் அடுத்த காட்சியில் காட்டப்படும் அந்த நாற்காலி, அவரில்லாத வெறுமையை அழகாக எடுத்தியம்பும். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் எளிய மனிதர்களின் உணர்வுகளை பாலுமகேந்திரா மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார்.

தான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டை, திடீரென்று அவ்வீடு நல்ல தண்ணீர் வரும் இடத்தில் அமைந்திருப்பதால் மாநகரக் குடிநீர் ஆணையம் அதைக் கைப்பற்ற முயற்சிக்கும். (படம் வெளி வந்த காலத்தில் சென்னையில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவியது இங்கே குறிப்பிடத் தக்கது.) இவ்வாறாக, குடிநீர் ஆணையத்திலிருந்து தன் வீட்டை கையகப்படுத்தும் முயற்சியில் அதற்கு எதிராக வழக்குத் தொடுப்பாள் சுதா.

வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்பது உங்களுக்கும், எனக்கும் ஏன் சுதாவிற்கும் தெரியும் என்பதால், வழக்கு தொடுக்கும் காட்சியுடனே படத்தை முடித்திருப்பார் இயக்குனர். கடைசி வரையில் கட்டி முடிக்கப் படாத அவ்வீடு, நிறைவேறாத மத்திய வர்க்கத்தின் மாபெரும் கனவின் எச்சமாக எஞ்சியிருக்கும்.