வெள்ளித்திரை வித்தகர்கள் - 1 சத்யஜித் ராய்

உலகளவில் இந்தியத் திரைப்படங்களுக்கு ஓர் அறிமுகத்தை ஏற்படுத்தித்தந்தவர் சத்யஜித் ராய் தான்!

அவரது முதல் படமான ‘பதேர் பாஞ்சாலி’ வெளிவந்து ஐம்பத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் அது இன்றளவும் பாரத மண்ணின் யதார்த்தத்திற்குள், மனித வாழ்வின் மெய்மைக்குள், வெகு ஆழமாகப் பயணமாகும் அனுபவமாகவே நமக்கு அமைகிறது.
ஒரு வெகுஜனப் பொழுதுபோக்கு ஊடகமாக அவரது திரைப்படங்களை அணுக முடியாது. அவரது படைப்புகளைக் கலா பூர்வமாகக் கண்டுணரும்போது தான் ஒரு பூரணமான ‘பார்வை’ கிட்டும்! சத்யஜித் ராய், பாரத நாட்டின் பண்டைய காவியப் பண்புகளின் வழிநடந்தவர். ‘அழகு’ என்பது உண்மையோடும் நற்பண்புகளோடும் இரண்டறக் கலந்திருப்பதுதான் என்ற பாரம்பரியக் கண்ணோட்டத்தின் வாரிசாகத் திகழ்ந்தவர் அவர்!

’நமது நாட்டின் வறுமையைப் படமெடுத்துக் காட்டி மேலை நாடுகளில் பிரபலமடைந்தவர் அவர்’ என்று விமரிசித்தவர்கள் ஏராளம். ஆனால், அப்படிக் கூறியவர்கள் யாருமே அவரது அத்தனை படங்களைக்கூட வேண்டாம்; மூன்று அல்லது நான்கு படங்களைக் கூட பார்க்காதவர்களாகத்தான் இருந்தார்கள். ஏனெனில், அவர் உருவாக்கிய முப்பது முழு நீளக் கதைப் படங்களில் மூன்றில் மட்டுமே வங்க மாநிலத்தில் நிலவிய வறுமையைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தார். அதுவும் கடந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும், 1920களிலும், இரண்டாம் உலகப் போர் நடந்த ஆண்டுகளிலும் அங்கு உண்மையிலேயே நிலவிய வறுமையைத்தான் பிரச்சாரத்தொனி இல்லாமல், தமது சமூக – அரசியல் கருத்துக்களைத் திணிக்காமல், ஒதுங்கி நின்று படம் பிடித்துக் காட்டினார். ஆகவே அந்த மூன்று படங்களும் கூட (’பதேர் பாஞ்சாலி’ ’அபாரஜிதோ’ மற்றும் ’ஆஷானி சங்கேத்’) வரலாற்றுப் பதிவுகள் மட்டுமே!

மிருணாள் சென் போன்ற இடது சாரி படைப்பாளிகளின் படங்களில் இருந்த அரசியல் – கோபம், சத்யஜித் ராயின் படைப்புகளில் இருந்ததில்லை.

அவரது படங்களில் ‘வில்லன்கள்’ என்று யாரும் இருந்ததில்லை., ஒடுக்குபவரும் சரி, ஒடுக்கப்படுபவரும் சரி, இருவருமே பலியாடுகள்தான் என்று அவர் கருதினார்.

அவரது முப்பத்தாறு வருட (1955 – 1991) படைப்புப் பணி என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இந்திய நாட்டின் சமூக மாற்றங்களின் தொடர் வரலாறு எனலாம்.

அவரது ‘ஷத்ரஞ்ச் – கே – கிலாடில்’ என்ற படத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் முடிவான வீழ்ச்சிக்கான காரணம் விவரிக்கப்படுகிறது.
அவரது ‘ஜல்சா- கர்’ என்ற படத்தில் ஜமீந்தார்களின் பிரபுத்துவ வாழ்க்கை முறையின் வீழ்ச்சி, கருப்பொருளானது.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட அந்த மூன்று படங்களிலும் , இருபதாம் நூற்றாண்டில் வங்கதேசக் கிராமங்களில் குறிப்பாக, ஏழை அந்தணக் குடும்பங்களில் நிலவிய வறுமை சித்தரிக்கப்பட்டது.

”சாருலதா;”, “தேவி” ஆகிய இரு படங்களிலும் வங்க மாநில மேட்டுக்குடிமக்களின் பகுத்தறிவுவாதக் கருத்துகள் விவாதிக்கப்பட்டன.

நாடு அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்ற பின்னும், கலப்புப் பொருளாதாரக் கொள்கை, சோஷலிச அரசியல் கொள்கை போன்றவற்றால் 1970களில் நிலவிய கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதனால் இளைஞர்கள் அடைந்த மனவேதனையையும் அவரது ‘பிரதித் வந்தி’ என்ற படம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஊழல் மலிந்த சமுதாயத்தில் விளையும் மனசாட்சியின் கொடூரமான மரணம் என்பதாய் ‘ஜன ஆரண்ய’ என்ற படம் அமைந்திருந்தது.

இன்றைய காலகட்டத்தில் பரவலாகப் பேசப்படும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்தது அவரது “கணசத்ரு” என்ற படம்.!
இப்படியாக, மாறுபட்ட கோணங்களில் அமைந்த விதவிதமான கதைகளைத் தான் சத்யஜித் ராய் தமது படைப்புகளுக்காகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆகவே, அவர் நமது நாட்டு வறுமையை விற்பனை செய்துப் புகழ் சேர்த்துக்கொண்டார் என்று கூறப்படுவது அபத்தமான கண்ணோட்டமாகும்!

சத்யஜித் ராய் கல்கத்தா நகரில் 1-5-1921 அன்று பிறந்தார். அவரது குடும்பம் மிகவும் வசதியானது. அவரது தாத்தா உபேந்திர கிஷோர் ராய், அச்சகத் துறையில் விற்பன்னர். சொந்தமாக ஓர் அச்சகத்தை நடத்தி வந்தார். அத்துடன் இசையார்வமும், எழுத்து, ஓவியம் ஆகியவற்றில் ஈடுபாடும் கொண்டவர். சத்யஜித் ராய் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் மரணமடைந்து விட்டார். சத்யஜித்தின் தந்தையார் சுகுமார் ராயும் இங்கிலாந்தில் அச்சுத் தொழில்நுட்பம் பயின்றவர். ‘சந்தோஷ்’ என்ற சிறுவர் இதழையும் வெளியிட்டு வந்தார். அதில் சத்யஜித் சிறுவனாக இருக்கும் போதே ஓவியங்கள் வரைந்ததுடன் சிறுவர்களுக்கான கதைகள், பாடல்கள் ஆகியவற்றையும் எழுதியிருக்கிறார். தந்தைக்குப் பிறகு சத்யஜித்தே அந்த இதழைச் சில காலம் பொறுப்பேற்று நடத்தியும் வந்தார்.

கல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற சத்யஜித், பின்னர் ரவீந்திரநாத் தாகூர் தோற்றுவித்த ‘சாந்தி நிகேதனில்’ நுண்கலை (Fine Arts) பட்டயமும் பெற்றார். அங்குதான் அவருக்கு ஓவியம், இந்தியப் பாரம்பரிய இசை, மேற்கத்திய பாரம்பரிய இசை ஆகியவற்றில் ஈடுபாடும், பயிற்சியும் தேர்ச்சியும் கிடைத்தன. (அவரது தாயும் நன்கு பாடக்கூடியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).

கல்கத்தா திரும்பிய சத்யஜித் அங்கு ஒரு கொள்ளைக்கார விளம்பர நிறுவனத்தில் ‘காட்சி ஊடக ஓவியர்’ (Visualartist) என்ற பணியில் சேர்ந்து விளம்பரங்கள் புத்தகங்கள் ஆகியவற்றுக்கான ஓவியங்கள் வரைந்து வந்தார்.

அவருக்கு இந்தியத் திரைப்படங்களைத் தவிர, அமெரிக்க நாட்டு ‘ஜான் ஃபோர்ட்’ (John Ford) என்ற இயக்குனரின் படங்களின் மீதும் லயிப்பும் ரசனையும் இருந்தது. ஆயினும் பிற நாட்டுத் திரைப்படங்களைக் காணும் வாய்ப்பில்லாமலிருக்கிறதே என்ற ஆதங்கம் இருந்து வந்தது. அதன் விளைவாக , ’சித்தானந்த தாஸ் குப்தா’, போன்ற நெருங்கிய நண்பர்களை இணைத்துக்கொண்டு 1947ல் ‘கல்கத்தா ஃபிலிம் சொசைட்டி’ என்ற இந்தியாவின் முதல் திரைப்பட சங்கத்தை தோற்றுவித்தார். தில்லியிலிருந்து வெளிநாட்டுத் தூதரகங்களை அணுகி அந்தந்த நாடுகளிலிருந்து திரைப்படங்களைத் தருவித்து அவற்றைத் திரைப்படச் சங்கத்தில் உறுப்பினர்களுக்காகத் திரையிட்டு வந்தார்.

அந்த வகையில் (அமெரிக்கா தவிர) பிற நாட்டுத் திரைப்படங்களை அவரும் அவரது நண்பர்களும் காணும் வாய்ப்பு கிடைத்தது.

1949ஆம் ஆண்டு பிரபல ஃப்ரான்ஸ் நாட்டு திரைப்பட இயக்குனரான ‘ழான் ரென்வார்’ என்பவர் கல்கத்தாவுக்குத் தமது படப்பிடிப்புக் குழுவுடன் வந்து கங்கை நதிக்கரைகளில் ‘நதி’ (The River) என்ற படத்திற்கான ஆக்கப் பணிகளில் இறங்கினார். அவரைச் சந்தித்த சத்யஜித், அப்படப்பிடிப்பின் போது ஒரு ‘பயிற்சியாளர் போல, அந்த இயக்குனரின் செயல்பாடுகளையும், அவர்களின் படப்பிடிப்பு முறைகளையும் ஊன்றிக் கவனித்தார். (பின்னர் அவர் வேறெந்த இயக்குனரிடமும் உதவியாளராக இருந்ததில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).
1950ல் அவர் பணியாற்றி வந்த விளம்பர நிறுவனம் , மேற்பயிற்சிக்காக அவரை லண்டனுக்கு அனுப்பி வைத்தது.

அந்த லண்டன் பயணம் சத்யஜித்துக்கு உலகத் திரைப்படங்களின் ஜன்னல்களைத் திறந்து வைத்தது. அங்கிருந்து சில மாதங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொண்ணூறுக்கும் அதிகமான படங்களைக் காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அவற்றில் குறிப்பாக இத்தாலி நாட்டின் ‘புதிய யதார்த்த’ (Neo – Realistic) படங்களான, ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ (Bicycle Thieves) ’ரோம் ஓப்பன் சிட்டி’ (Rome Open City) போன்றவை அவரை மிகவும் கவர்ந்தன. அத்தகைய படம் ஒன்றைத் தாம் உருவாக்க வேண்டுமென்ற முடிவையும் அவர் அப்போதே எடுத்துக் கொண்டார்.

கிராமங்களையே பார்க்காமல், கல்கத்தா நகரத்திலேயே பிறந்து, வளர்ந்து, படித்து, பணியாற்றி வந்த சத்யஜித், தமது முதல் படத்துக்காகத் தேர்ந்தெடுத்தது ஒரு சிறிய கிராமத்தில் நடப்பதான கதையைத்தான்! அன்றைய பிரபல வங்க மொழி எழுத்தாளரான ‘விபூதி பூஷண் பண்டோபாத்யாயா’ என்பவர் எழுதிய “பதேர் பாஞ்சாலி”யை ஆழ்ந்து படித்து அதில் விவரிக்கப்பட்டிருந்த கிராமத்து ஏழை அந்தணரின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொண்டு , குறைந்த செலவில் யதார்த்தமாகப் படமெடுக்க உதவியாகத் திரைகதையை உருவாக்கினார். படப்பிடிப்புகாக, கல்கத்தா நகரிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். பலமுறை அங்கு சென்று கதாநாயகனின் ஏழ்மையான வீடு, மற்றும் சுற்றியுள்ள வீடுகளைக் குறைந்த செலவில் அமைத்துக்கொண்டார். அதிகப் பிரபலமில்லாத நடிக – நடிகையரைப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். தமது சேமிப்பு மற்றும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற பணம் ஆகியவற்றைக் கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினார்.

பாதிப் படம் முடிவடைவதற்குள்ளாகவே பணப் பற்றாக்குறையால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொழுதுபொக்கு அம்சம் எதுவுமில்லாத, புதுமாதிரியான பரிசோதனை முயற்சி என்பதால், வழக்கமாகத் திரைப்பட தயாரிப்புகளுக்குப் பணம் கடன் கொடுக்கும் ஆசாமிகள் கடன் தர மறுத்துவிட்டனர். அந்த இக்கட்டான சூழ்நிலையில் அன்றைய மேற்கு வங்க அரசு, படத்தை முடித்து வெளியிடும் அளவிற்கு நிதியுதவி செய்ய முன்வந்தது.

படப்பிடிப்பு தொடரப்பட்டு, 1955ஆம் ஆண்டு ‘பதேர் பாஞ்சாலி’ வெளிவந்தது. ஸ்டுடியோக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, ஸ்டுடியோவினுள் ‘செட்’ போட்டுப் படம் பிடிக்கப்படாமல், ஒரு கிராமத்தில் ஒரேயொரு வீட்டிலும், வெளிப்புறங்களிலும் மட்டுமே உருவாக்கப்பட்டு வெளியான அப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து இன்று வரையிலும் மேற்கு வங்க அரசுக்கு வர்த்தக ரீதியிலான இலாபத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் 1956 முதல் 1966 வரை உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த பன்னிரண்டு சர்வதேசப்பட விழாக்களில் ”சிறந்த படம்”, என்ற விருதையும் வாரிக்குவித்தது.

”பதேர் பாஞ்சாலி”யின் வெற்றியினால் தமது முதலீட்டையும் திரும்பப் பெற்று மனைவியின் நகைகளையும் அடமானத்திலிருந்து மீட்கவும் முடிந்த சத்யஜித் ராய் உலகப் புகழ்பெற்ற இயக்குனராகப் போற்றப்பட்டார்.

- தொடரும்