வெள்ளித்திரை வித்தகர்கள் - 2 சத்யஜித் ராய்

சென்ற இதழின் தொடர்ச்சி:

பின்னர் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாத வகையில் 1991 வரை கீழ்க்கண்ட முப்பது முழுநீளக் கதைப்படங்களை உருவாக்கினார்:-

1.) பதேர் பாஞ்சாலி 1955
2.) அபராஜிதோ – 1956
3.) பராஷ் பத்தர்- 1958
4.) ஜல்சா-கர் – 1958
5.) அபுர் சன்சார்- 1959
6.) தேவி – 1960
7.) தீன் கன்யா – 1961
8.) காஞ்சன் ஜங்கா – 1962
9.) அபிஜன் – 1962
10.) மகாநகர் – 1963
11.) சாருலதா – 1964
12.) காபுருஷ்-ஓ-மகாபுருஷ் – 1965
13.) நாயக் – 1966
14.) சிடியாகானா – 1967
15.) கோபிகைன் பாகாபைன் – 1968
16.) ஆரண்யேர் தின் ராத்ரி – 1969
17.) பிரதித் வந்தி – 1970
18.) சீமா பத்தா – 1971
19.) ஆஷானி சங்கேத் – 1973
20.) சோனார் கெல்லா – 1974
21.) ஜன ஆரண்ய – 1975
22.) ஷத்ரஞ்ச்-கே-கிலாடி – 1977
23.) ஜெய்பாபா ஃபேலுநாத் – 1978
24.) ஹிரக் ராஜேர் தேஷே – 1980
25.) பிக்கூஸ்டே – 1980
26.) சத்கதி – 1981
27.) கரே பாய்ரா – 1984
28.) கண சத்ரு – 1989
29.) ஷகா ப்ரொஷகா – 1990
30.) ஆகண்டக் – 1991

சத்யஜித் ராய் போன்றவர்களின் படங்கள் ‘கலைப்படங்கள்’ (ART FILMS) என்றும் ‘கவைக்குதவாத படங்கள்’ என்றும் பொழுதுபோக்கு அம்சமில்லாத வர்த்தகரீதியில் வெற்றி பெற முடியாத படங்கள் என்றும் நம்மவரில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். ஆனால் சத்யஜித் ராயின் அனேகமாக அத்தனை படங்களுமே, குறைந்தபட்சம், மேற்கு வங்கம், பீஹார், ஒரிஸா, அஸ்ஸாம், ஆகிய மாநிலங்களில் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றன என்பதுடன் உலகளவில் புகழ்பெற்று நமது நாட்டுத் திரையுலகிற்கு சர்வதேச அங்கீகாரம், புகழ், பெருமை ஆகியவற்றைக் கொணர்ந்தன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை!
(சத்யஜித் ராயின் அத்தனை படங்களையும் கண்டு ரசிக்கும் வாய்ப்புப் பெற்ற மிகச் சிலரில் இந்த கட்டுரையாசிரியரும் ஒருவர் என்ற வகையில் இதை அறுதியிட்டுக் கூற முடியும்! அவரது படங்களைப் பார்க்காத நிலையிலேயே அவற்றைக் கேலியும் கிண்டலும் செய்பவர்கள் தான் இங்கு ஏராளம்!)

மேலே குறிப்பிட்ட முப்பது முழு நீள கதைப் படங்களுடன், ஐந்து ஆவணப்படங்களையும் (DOCUMENTARIES) உருவாக்கினார் சத்யஜித்.

அவை:-
1.) ரவீந்திரநாத் தாகூர் (1961)
2.) சிக்கிம் (1971)
3.) The Inner Eye (1972)
4.) பாலா (பரத நாட்டிய தாரகை பால சரஸ்வதி) – (1976)
5.) சுகுமார் ராய் – (1987)
(தமது தந்தையாரின் வாழ்க்கை வரலாறு)

பாரத நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”, திரையுலகச் சாதனையாளர்களுக்கான “பால்கே விருது” இரண்டையும் பெற்றவர் சத்யஜித் ராய் மட்டுமே! அமெரிக்கத் திரையுலகின் மிக உயர்ந்த விருதான “வாழ்நாள் சாதனையாளர்” என்ற சிறப்பு ‘ஆஸ்கர்’ விருது 1992 ஆம் ஆண்டு அவரது கல்கத்தா இல்லத்தில் வந்து வழங்கப்பட்டது.

ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ”செவாலியே விருது”, (LEGION DE HONNEUR) அவரைத் தேடி வந்தது.

உலகப்புகழ் பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களான ‘கான்’ ‘பெர்லின்’, ‘வெனிஸ்’, ‘சான் ஃபிரான்சிஸ்கோ’, ‘நியூயார்க்’, ‘ரோம்’ ‘எடின்பர்க்’, ‘வான்கோவர்’,’டோக்யா’, ‘டென்மார்க்’, ‘லண்டன்’, ‘சிகாகோ’, ‘கார்லோவிவாரி’, ஆகியவற்றில் அவரது பலபடங்களும் பலமுறை சிறந்த படங்களுக்கான விருதுகளைப் பெற்றுள்ளன.

நமது நாட்டில் ஒவ்வோராண்டும் குடியரசுத்தலைவரால் வழங்கப்படும் சிறந்த படத்துக்கான தங்க மெடல், வெள்ளி மெடல், சிறந்த இயக்குனருக்கான விருது, சிறந்த இசைக்கான விருது ஆகியவற்றையும் அவர் பலமுறை பெற்றிருக்கிறார்.

இத்தனை சிறப்புகளையும் பெற்றுத் திகழ்ந்த சத்யஜித் ராய், 1992 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அவரது நெருங்கிய நண்பரும் “ஸ்பார்ன்” என்ற ஆங்கில மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவருமான சித்தானந்த தாஸ் குப்தா என்பவர், “The Cinema of satyajit ray” என்ற நூலில் அவரது அத்தனை படங்களைக் குறித்த விவரங்களையும், விமர்சனங்களையும் தொகுத்துள்ளார்.

நமது நாட்டுப் படங்களையும் பிற நாட்டுப் படங்களையும் ஒப்பிட்டு, “Our Films Their Films” என்ற நூலை சத்யஜித் ராய் எழுதியுள்ளார்.

மற்றொரு பிரபலமான திரைப்பட இயக்குனரான ஷியாம் பெனகல், “சத்யஜித் ராய்” என்ற பெயரில் ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இனி அவரது படங்களைக் குறித்த விவரங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

1.) பதேர் பாஞ்சாலி
’வழிநடைப் பாடல்’ என்று பொருள்படும்.
1955 – மூலக்கதை: விபூதி பூஷண் பானர்ஜி, திரைக்கதை, வசனம், இயக்கம் – சத்யஜித் ராய், இசை: சிதார் மேதை ரவிசங்கர்.

முக்கிய நடிக – நடிகையர்: கனு பானர்ஜி, கருணா பானர்ஜி, சுனிபாலா தேவி, ருங்கி, உமாதாஸ் குப்தா, சுபிர் பானர்ஜி, ஒளிப்பதிவு: சுப்ரத மித்ரா (கறுப்பு – வெள்ளை), மொழி: வங்காளம் (115 நிமிடம்)

“பதேர் பாஞ்சாலி”க்கான விருதுகள்:
அ.) 1955 ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவரின் சிறந்த படத்துக்கான தங்க மெடல்
ஆ.) சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மடல்
இ.) ‘கான் ‘ திரைப்பட விழாவில் “Best human document” என்ற உயரிய விருது.
ஈ.) எடின்பர்க், ரோம், மணிலா, பெர்லின், சான் ஃபிரான்சிஸ்கோ, வான்கோவர், ஸ்டான்ஃபோர்ட், நியூயார்க், டோக்யோ, டென்மார்க் ஆகிய இடங்களில் நடந்த உலகப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதுகள்.

2.) “அபராஜிதோ” – 1956
மூலக்கதை: “விபூதி பூஷண் பானர்ஜி”, திரைக்கதை – இயக்கம்: சத்யஜித் ராய், இசை: சிதார் மேதை ரவிசங்கர், ஒளிப்பதிவு: சுப்ரத மித்ரா (கறுப்பு – வெள்ளை) (108 நிமிடம்), முக்கிய நடிக – நடிகையர்: கனு பானர்ஜி, கருணா பானர்ஜி, பினாகி சென்குப்தா, ஸ்மரன் கோஷல்.

விருதுகள்:
அ.) தங்கச் சிங்கம் விருது – வெனிஸ் உலகப்படவிழா – 1957
ஆ.) சிறந்த படம், சிறந்த இயக்குனர் விருதுகள்: சன் ஃபிரான்சிஸ்கோ உலகப்பட விழா (1958)
இ.) சிறந்த வெளிநாட்டுப் படம் – ஆஸ்கர் விருது – அமெரிக்கா – 1958
ஈ) சிறந்த படம் – பெர்லின் திரைப்பட விழா (1960)

3.) “ப்ராஷ் பத்தர் “(PARASH PATHAR) – 1957 – (மாற்றுப் பெயர்: THE PHILOSOPHER’S STONE )

மொழி: வங்காளம் – கறுப்பு வெள்ளை – மூலக்கதை: பரசுராம் – திரைக்கதை – இயக்கம்: சத்யஜித் ராய், இசை: கிதார் மேதை ரவிசங்கர், முக்கிய நடிகர்; துளசி சக்ரவர்த்தி

4.) “ஜல்சா – கர்” (1958)
கறுப்பு வெள்ளை – மூலக்கதை; தாராசங்கர் பானர்ஜி, தயாரிப்பு – திரைக்கதை – இயக்கம்; சத்யஜித் ராய், இசை: உஸ்தாத் விலாயத்கான், ஒளிப்பதிவு: சுப்ரத மித்ரா, முக்கிய நடிக நடிகையர்: சாபி பிஸ்வாஸ், ரோஷன் குமாரி, பேகம் அக்தர், உஸ்தாத் வாஹித்கான், கங்காபாத பாசு.

5.) “அபுர் சன்சார்” (1959)
மூலக்கதை: விபூதி பூஷண் பானர்ஜி, தயாரிப்பு – திரைக்கதை, இயக்கம் : சத்யஜித்ராய், ஒளிப்பதிவு;சுப்ரத மித்ரா, இசை – கிதார் மேதை ரவிசங்கர், முக்கிய நடிக நடிகையர்: செளமித்ர சட்டர்ஜி, சர்மிளா தாகூர், ஸ்வப்பன் மகர்ஜி, அலோக் சக்ரவர்த்தி.

( “பதேர் பாஞ்சாலி”, “அபாரஜிதோ”, “அபுர் சன்சார்” – இவை ஒரு தொகுப்பாக “APU – TRILOGY” என்ற குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில் இவை மூன்றின் கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடன் அடுத்தடுத்து வருவதாக அமைந்துள்ளன.)

விருதுகள்:
அ.) சிறந்த படத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்க மெடல் விருது – 1959
ஆ.) லண்டன் உலகப்பட விழா விருது – 1960
இ.) எடின்பர்க் உலகப் பட விழா விருது – 1960
6.)”தேவி” – 1960 – வங்காளம்

மூலக்கதை; பிரபாத் முகர்ஜி, தயாரிப்பு: திரைக்கதை – இயக்கம்: சத்யஜித் ராய், ஒளிப்பதிவு சுப்ரத மித்ரா, இசை: உஸ்தாத் அலி அக்பர்கான், முக்கிய நடிக – நடிகையர்; சாபி பிஸ்வாஸ், செளமித்ர சட்டர்ஜி, சர்மிளா தாகூர்.

விருது; இந்தியக் குடியரசுத் தலைவரின் தங்க மெடல் – 1961

(மருமகளை ‘தேவி’யின் மறு அவதாரமாக ஒரு மாமனார் நம்பத் தொடங்கி வழிபடுவதல், அந்தப் பெண் மற்றும் அவளது கணவனின் இல்லற வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதான கதை).

7,) “தீன் கன்யா” (மூன்று இளம்பெண்கள்) – 1961 – வங்காளம்.
ரவீந்திரநாத் தாகூரின் “போஸ்ட் மாஸ்டர்” , “சமாப்தி”, “மோனிஹரா” ஆகிய மூன்று சிறுகதைகளை உள்ளடக்கிய படம். தயாரிப்பு – திரைக்கதை – இயக்கம் – இசை; சத்யஜித் ராய்.

(சத்யஜித் ராய் இசையமைத்த முதல் படம்)

ஒளிப்பதிவு: சோமேந்து ராய், முக்கிய நடிக – நடிகையர்;அனில் சட்டர்ஜி, சந்தனா பானர்ஜி, காளி பானர்ஜி, கனிகா மஜீம்தார், செளமித்ரா சட்டர்ஜி , அபர்ணா தாஸ் குப்தா,

(பின்னாளில் அபர்ணா சென்.)

விருதுகள்:
அ.) இந்தியக் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் – 1962
ஆ.) மெல்போர்ன் உலகப் பட விழாவில் சிறந்த படம் விருது – 1962
இ.) பெர்லின் பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது – 1963

8.) கஞ்சன் ஜங்கா: (முதல் வண்ணப்படம்) – 1962 வங்காளம்

கதை – வசனம் – இசை- இயக்கம்: சத்யஜித் ராய், ஒளிப்பதிவு: சுப்ரத மித்ரா, முக்கிய நடிக நடிகையர்: சாபி பிஸ்வாஸ், அனில் சட்டர்ஜி.

9.)அபிஜன் – 1962 – வங்காளம்
மூலக்கதை: தாரா சங்கர் பானர்ஜி, திரைக்கதை – இயக்கம்; சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; சோமேந்து ராய், நடிக நடிகையர்; செளமித்ர சட்டர்ஜி, வஹிதா ரஹ்மான்.

10.) “மகா நகர்” – 1963 – வங்காளம்
மூலக்கதை: நரேந்திர நாத் மித்ரா, திரைக்கதை – இசை – இயக்கம்; சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; சுப்ரத மித்ரா, முக்கிய நடிகர்; அனில் சட்டர்ஜி, முக்கிய நடிகை: மாதவி முகர்ஜி

11.) சாருலதா – 1964 – கறுப்பு வெள்ளை – 115 நிமிடம் – வங்காளம்

மூலக்கதை : ரவீந்திர நாத் தாகூர், திரைக்கதை – இசை – இயக்கம் : சத்யஜித்ராய், ஒளிப்பதிவு : சுப்ரத மித்ரா, முக்கிய நடிகர்கள்; செளமித்ர சட்டர்ஜி, சைலேன் முகர்ஜி, முக்கிய நடிகை; மாதவி முகர்ஜி, இசை, ஆர்ட் டைரக்‌ஷன் (பன்சி சந்திர குப்தா) நடிப்பு, இயக்கம் ஆகியவற்றுக்காக மிகவும் பிரபலமான படம் “சாருலதா” என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். விமரிசகர்களால் போற்றப்பட்டது. தமக்கு மிகவும் பிடித்தமான படம் “சாருலதா” என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

12.) “காபுருஷ் – ஓ – மகா புருஷ்” – 1965 – வங்காளம்.

மூலக்கதை: பிரமேந்திர மித்ரா/ பரசுராம், திரைக்கதை – இசை – இயக்கம்: சத்யஜித் ராய்
முக்கிய நடிகர்கள் – செளமித்ர சட்டர்ஜி, சாருப்ரகாஷ் கோஷ், ரோபி கோஷ், மாதவி முகர்ஜி, ஒளிப்பதிவு: சோமேந்து ராய்.

13.) “நாயக்” – 1966 – வங்காளம்

கதை - திரைக்கதை – இசை – இயக்கம்: சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; சுப்ரதமித்ரா (ஓடும் ரயிலிலேயே முழுப்படமும் படமாக்கப்பட்டது) முக்கிய நடிகர்; உத்தம் குமார், முக்கிய நடிகை; சர்மிளா தாகுர்.

14.) “சிடியகானா” – 1967 – வங்காளம், கதை – திரைக்கதை – இசை – இயக்கம்: சத்யஜித்ராய், ஒளிப்பதிவு: சோமேந்து ராய், நடிகர்கள்: உத்தம் குமார், முக்கிய நடிகை: சைலேன் முகர்ஜி.

15.) “கூபிகைன் பாகாபைன்” – 1969 – வங்காளம்

மூலக்கதை: (சத்யஜித்தின் தாத்தாவான), உபேந்திர கிஷோர் ராய் சவுத்ரி, திரைக்கதை – இசை – இயக்கம்; சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; சோமேந்து ராய், நடிகர்கள்; தபன் சட்டர்ஜி, ரோபி கோஷ்.

(குழந்தைகளுக்கான படமென்றாலும் எல்லோராலும் ரசிக்கக் கூடிய படம்)

16.) “ஆரண்யேர் தின் ராத்ரி” (காட்டில் பகலும் இரவும்) – 1970 – வங்காளம்

மூலக்கதை: சுனில் கங்கூலி, திரைக்கதை – இசை – இயக்கம்: சத்யஜித் ராய், ஒளிப்பதிவு: சோமேந்து ராய், நடிகர்கள்; செளமித்ர சட்டர்ஜி, ரோபிகோஷ், நடிகைகள்; சர்மிளா தாகூர், சிமி, காவேரி போஸ்.

(”மனித உறவுகளைப் பற்றிய நுண்ணிய தேடலை வைத்து நன்கு கட்டமைக்கப்பட்ட படம்” என்று மேலை நாட்டு விமர்சகர்கள் பாராட்டினர்)

17.) “ப்ரதீத் வந்தி” - 1970 – வங்காளம்

மூலக்கதை: சுனில் கங்கூலி, திரைக்கதை – இசை – இயக்கம்; சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; சோமேந்து ராய், நடிகர்; த்ரீதிமன் சட்டர்ஜி, நடிகைகள்; பபீதா, சந்தியாராவ்.

(வேலை தேடி அலையும் ஓர் இளைஞனின் மனப் போராட்டம்)

விருது: குடியரசுத் தலைவரின் வெள்ளிப்பதக்கம்

18.) சீமா பத்தா – 1971 – வங்காளம்.

மூலக்கதை; சங்கர், திரைக்கதை – இசை – இயக்கம்: சத்யஜித் ராய், ஒளிப்பதிவு: சோமேந்து ராய், நடிகர்; பருண் சந்தா, நடிகைகள்; சர்மிளா தாகுர், பாரமீதா சவுத்ரி.

19.) “ஆஷானி சங்கேத்” (தூரத்து இடி முழக்கம்)

1973 – வண்ணப்படம் – வங்காளம்

மூலக்கதை: விபூதி பூஷண் பானர்ஜி, திரைக்கதை – இசை – இயக்கம்: சத்யஜித் ராய், நடிகர்; செளமித்ர சட்டர்ஜி, நடிகையர்: பபீதா, சந்தியா ராய்.

இரண்டாம் உலகப்போரின் போது உணவுப்பொருட்கள் போர் வீரர்களுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதால், செயற்கையான உணவுப்பஞ்சம் நாட்டில் ஏற்பட்டது. அதனால் கிராம மக்கள் பட்ட பாட்டை விவரித்த படம்.

விருதுகள்.
அ. ) குடியரசுத் தலைவரின் , சிறந்த படத்திற்கான தங்கப்பதக்கம் (1972)
ஆ.) சிறந்த இசையமைப்பாளர் விருது
இ.)சிகாகோ உலகப்பட விழாவில் சிறந்த படத்திற்கான தங்கப் பதக்கம் (1973)
ஈ.) பெர்லின் உலகப்பட விழாவில் சிறந்த படத்திற்கான தங்கச் சிங்கம் விருது (1974)

20) “சோனார் கெல்லா “ (தங்கக் கோட்டை)
1974 வங்காளம் – வண்ணப்படம் –

தயாரிப்பு: மேற்கு வங்க அரசு, கதை – திரைக்கதை – இசை – இயக்கம்: சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; சோமேந்து ராய், முக்கிய நடிகர்; செளமித்ர சட்டர்ஜி.

(குழந்தைகளுக்கான திரைப்படமாயினும் எல்லோராலும் ரசிக்கக் கூடியது.)

விருதுகள்:
அ.) சிறந்த இயக்குனருக்கான, குடியரசுத் தலைவரின் வெள்ளிப்பதக்கம்.
ஆ.) டெஹ்ரான் நகரில் நடந்த குழந்தைகளுக்கான உலகப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது – 1975

21.) “ஜன ஆரண்யா” – 1975 வங்காளம் – திரைக்கதை- இசை – இயக்கம்: சத்யஜித் ராய், ஒளிப்பதிவு: சோமேந்து ராய், நடிகர்கள்; பிரதீப் முகர்ஜி, திபங்கர் டே.

விருதுகள்:
அ.) சிறந்த இயக்குனருக்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப்பதக்கம்
ஆ.) கார்லோவி வாரி உலகப்பட விழாவில் சிறந்த படம் சிறந்த கதை சிறந்த இயக்கம்- 1976

22.) ‘ஷத்ரஞ்ச் – கே – கிலாடி’ (சதுரங்க விளையாட்டு வீரர்கள்) – ஹிந்திப் படம்
வண்ணப்படம் – 1977
மூலக்கதை: முன்ஷி பிரேம் சந்த், திரைக்கதை, இசை, இயக்கம்; சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; சோமேந்து ராய், முக்கிய நடிகர்கள்; அம்ஜத் கான், சஞ்சீவ் குமார், சையீத் ஜாஃப்ரி, ரிச்சர்ட் அட்டன்பரோ, முக்கிய நடிகை; ஷபானா ஆஸ்மி.

(சதுரங்க விளையாட்டில் மூழ்கிக் கிடக்கும் லக்னோ நவாப், எவ்வாறு தனது நாட்டையே வெள்ளைக்காரர்களிடம் பறிகொடுத்தார் என்பதான கதையமைப்பு)

விருது; ஹிந்தி மொழியில் சிறந்த படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப்பதக்கம் – 1977

23.) “ஜெய் பாபா ஃபேலுநாத்”

1978 – வங்காளம் – வண்ணப்படம்

கதை , திரைக்கதை, இசை, இயக்கம்; சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; சோமேந்து ராய், முக்கிய நடிகர்கள்; செளமித்ர சட்டர்ஜி, உத்பல் தத், சித்தார்த் சட்டர்ஜி.

(குழந்தைகளுக்கான படமாயினும், எல்லோராலும் ரசிக்க்க்கூடியது)

குழந்தைகளுக்கான சிறந்த படம் என்ற தேசிய விருது – 1978

24) “ஹீரக் ராஜேர் தேஷ்”;

1980 – வங்காளம் – வண்ணப்படம்

கதை , திரைக்கதை, இசை, ஆடைகள் வடிவமைப்பு, இயக்கம்; சத்யஜித் ராய், தயாரிப்பு; மேற்கு வங்க அரசு, ஒளிப்பதிவு; சோமேந்து ராய், முக்கிய நடிகர்கள்; செளமித்ர சட்டர்ஜி, உத்பல்தத், ரோபி கோஷ், தபன் சட்டர்ஜி.

(இதுவும் குழந்தைகளுக்கான படமே ஆயினும் எல்லோராலும் ரசிக்க முடியும்)

25) “பிக்கூஸ் டே”

1980 – வங்காளம் – வண்ணப்படம்

கதை , திரைக்கதை, இசை, இயக்கம்; சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; சோமேந்து ராய்,

(தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்டது.)

முக்கிய நடிகர்; விக்டர் பானர்ஜி, முக்கிய நடிகை; அபர்ணா சென்.

26) “சத்கதி”
1981 – வங்காளம் - வண்ணப்படம்

(தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்டது.)

மூலக்கதை; முன்ஷி பிரேம்சந்த், திரைக்கதை, இசை, இயக்கம்; சத்யஜித் ராய், தயாரிப்பு; தூர்தர்ஷன், ஒளிப்பதிவு; சோமேந்து ராய், முக்கிய நடிகர்கள்; ஓம் பூரி, மோகன், ஆகாஷே, முக்கிய நடிகை; ஸ்மிதா பட்டீல்

27) “கரே பாய்ரே”

1984 – வங்காளம் – வண்ணப்படம்

தயாரிப்பு; தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம், மூலக்கதை; ரவீந்திர நாத் தாகூர், திரைக்கதை, இசை, இயக்கம்; சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; சோமேந்து ராய், நடிகர்கள்; செளமித்ர சட்டர்ஜி, விக்டர் பானர்ஜி, நடிகைகள்; ஸ்வாதிலேகா சட்டர்ஜி, ஜென்னிஃபர் கபூர்.

28.) “கண சத்ரு”

1989 – வங்காளம் – வண்ணப்படம்
மூலக்கதை; இபசனின் புகழ்பெற்ற நாடகம், தயாரிப்பு; தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், திரைக்கதை, இசை, இயக்கம்; சத்யஜித் ராய், ஒளிப்பதிவு; பரூன் ராஹா , முக்கிய நடிகர்; செளமித்ரா சட்டர்ஜி, முக்கிய நடிகை; மம்தா சங்கர்

(ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் ஒரு கிராமத்தின் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. அதனால் ஒரு கோயிலை ஒட்டி உள்ள கிணற்று நீரை, ‘ புனித தீர்த்தமாக’க் கருதி அருந்தும் கிராம மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராகப் போராடும் கதாநாயகன் எதிர்கொள்ள நேரிடும் துன்பங்களை விவரிக்கும் கதை).

29.) “ஷகா ப்ரொஷகா” – 1990 – வங்காளம் – வண்ணப்படம்

(ஃப்ரான்ஸ் நாட்டு நிறுவனமொன்றுடன் கூட்டுத் தயாரிப்பு)
- கதை, திரைக்கதை, இசை , இயக்கம்: சத்யஜித் ராய், முக்கிய நடிகர்கள்; ரஞ்சித் மல்லிக், முக்கிய நடிகை; மம்தா சங்கர்.

(நேர்மை, உழைப்பு இரண்டை மட்டுமே நம்பி இலட்சிய வாழ்க்கை வாழ்ந்து ஓய்வு பெற்ற குடும்பத் தலைவரின் நான்கு மகன்களில் மூவர் அவருக்கு நேர் மாறாக வாழ்பவர்கள், ஒரு மகன் மனநிலை பாதிக்கப்பட்டவன்...)

31.) “ஆகண்டக்” (அந்நியன்)
1991- வங்காளம், வண்ணப்படம், 120 நிமிடங்கள்.

கதை, திரைக்கதை, இசை, இயக்கம்; சத்யஜித்ராய், ஒளிப்பதிவு; பருண் ராஹா, முக்கிய நடிகர்கள்; திபங்கர்டே, பிக்ரம் பானர்ஜி, உத்பல் தத், த்ரீதிமன் சட்டர்ஜி, முக்கிய நடிகை; மம்தா சங்கர், தயாரிப்பு; தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்.

(நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இளம் தம்பதி... அவர்களுக்கு ஒரு மகன்... மனைவியின் தூரத்து உறவினர் ஒருவர் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு சென்றவர் திடீரென்று வந்து ஒரு வாரம் அவர்களுடன் ஒரு வாரம் தங்குகிறார். அவர் உண்மையிலேயே அவர்களுடைய உறவினர்தானா? ஏன் திடீரென்று வந்தார்? ஒரு வாரத்திற்குப் பிறகு ஏன் கிளம்புகிறார்? எங்கு போகிறார்?... இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அந்தத் தம்பதி விடைகளைத் தேடுகிறார்கள்... இறுதியில் அவர்களுக்கு ஒரு எதிர்பாராத மகிழ்ச்சியான அதிர்ச்சி காத்திருக்கிறது.... இதுதன் கதை!)

கொசுறு செய்திகள்:

அ.) சத்யஜித் ராயின் அதிக எண்ணிக்கையிலான படங்களில் கதாநாயகனாக நடித்தவர்; செளமித்ர சட்டர்ஜி)14 படங்கள்.
ஆ.) சத்யஜித் ராய் இசையமைத்த மொத்த படங்களின் எண்ணிக்கை - 24


- தொடரும்