ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 7

கலிபோர்னியாவில் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் மேடை ஒன்றில் உங்கள் காலணியை நீங்கள் உண்டதை லெஸ் ப்ளான்க் (Les Blank) Werner Herzog Eats His Shoe என்ற குறும்படமாக எடுத்தது பற்றி ….

எர்ரல் மோரிஸுடன் (Errol Morris) பெர்க்லியில் இளங்கலை மாணவனாகப் படித்துக்கொண்டிருந்தேன். அவர் மிகுந்த திறமைசாலி. படம் எடுக்க ஆசைப்பட்டார். தயாரிப்பாளர் கிடைக்காதது பற்றி அதிகமாகக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். எனக்குத் தயாரிப்பாளர் தேவையில்லை; என்னால் பணமில்லாமல் படம் எடுக்கமுடியும். அதற்கான ஆசையும் நம்பிக்கையும் இருந்தால் போதும் என்று எடுத்துச்சொல்லி இருந்த ஒருரோல் பிலிமைக்கொண்டு படத்தைத் தொடங்கச்சொன்னேன். அந்தப்படம் முடியும் நாளில் என் காலணியை நான் உண்ணத்தயார் எனச் சவாலிட்டு ஊக்கப்படுத்தினேன். செல்லப்பிராணிகளுக்கான கல்லறைத் தோட்டம் பற்றி Gates of Heaven என்ற அற்புதமான ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினார்.

Fitzcarraldoவின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் பெருவிலிருந்து பெர்க்லிக்கு வந்திருந்தேன். சவால் இட்ட அன்று அணிந்திருந்த அதே தோல்காலணியை அணிந்திருந்தேன். உணவகத்தின் சமையலறையில் வாத்துக்கறி சமைத்துக்கொண்டிருந்தார்கள். வாத்துக்கொழுப்பில் காலணியை வேகவைத்தால் உண்ண இலகுவாயிருக்கும் என்று முயன்றுபார்த்தால் அது மேலும் கடினமாக ஆகிவிட்டது, துண்டு துண்டாக நறுக்கி உண்டேன். அதனுடன் ஆறு பாட்டில்கள் பியர் உள்ளே சென்றது. உண்டுமுடிக்கும்போது ஓரளவுக்குப் போதை ஏறியிருந்தது. இந்தப்படம் என் குடும்பத்தின் தனிப்பார்வைக்கானது என்று படமெடுத்த லெஸ் ப்ளான்க்கிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அனைவரின் பார்வைக்கும் போய்விட்டது.

Fitzcarraldo படத்தை முடித்துக்கொண்டிருந்த போது அமெரிக்காவில் God’s Angry Man, Hule’s Sermon என்ற இரண்டு குறும்படங்களை எடுத்தீர்கள். ஜீன் ஸ்காட்டிடம் உங்களைக் கவர்ந்தது என்ன?
God’s Angry Man குறும்படத்தின் நாயகன் ஜீன் ஸ்காட் தொலைக்காட்சியில் தோன்றும் கிறித்துவ மதப்பிரச்சாரகர்களில் பிரபலமானவர். அவரின் ஒருவகையான பேச்சு என் கவனத்தை ஈர்த்தது. எப்போதும் திருப்தியில்லாது பணம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டேயிருப்பார். இன்னும் பத்து நிமிடங்களில் 2 லட்சம் டாலர்கள் நன்கொடையாக வேண்டும் என்று தொலைக்காட்சியில் பார்வையாளர்களிடம் அதிகாரத்துடன் கேட்பார். இப்போது கிறித்துவப் பிரச்சாரத்தை விட்டுவிட்டு கண்ணாடி பிரமிடு ஒன்றில் உட்கார்ந்துகொண்டு பிரமிடின் சக்திபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். நமது சமுதாயத்தின் பயங்களையும், பேராசைகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் வெற்றிபெற்ற ஒருவர் என்று இவரைச் சொல்வேன்.

Fitzcarraldo உங்கள் படங்களில் முக்கியமான ஒன்று. இன்றுவரை படத்தைவிட படம் எடுக்கப்பட்டது பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. படத்தை எடுக்கத் தொடங்கியபோது அது இந்த அளவுக்கு ஊடகங்களில் பேசப்படும் என்று எதிர்பார்த்தீர்களா?

Fitzcarraldo படப்பிடிப்பு நடந்த இடங்களில் ஏராளமான பிரச்சினைகள். பெருவிற்கும் ஈக்வேடாருக்கும் எல்லைப்போர் நடப்பதற்கான அபாயம் நிறைந்திருந்தது. சுற்றிவர ராணுவம். ஆற்றின் ஒவ்வொரு வளைவிலும் ராணுவமுகாம்கள் இருந்தன. சிப்பாய்கள் குடிபோதையில் அலைந்துகொண்டிருந்தனர். எண்ணெய்க் கம்பெனிகள் அந்த இடங்களை ஆக்கிரமித்திருந்தன. ஆதிவாசிகள் வாழும் இடங்கள் வழியாக எரிஎண்ணெய் செல்லும் பெரிய குழாய்வழிகளை அமைத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் போய்ச்சேர்ந்தபிறகு அந்தப் பிரச்சினைகளை விட்டுவிட்டு எங்கள் படப்பிடைப்பை மையப்படுத்தி ஊடகங்களின் கவனம் குவிந்தது. முதலில் க்ளாடியா கார்டினலுடன் பிரபல பாடகர் மிக் ஜாகர் (Mick Jagger), ஜேசன் ரொபர்ட்ஸ் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆதிவாசி இந்தியர்கள் படத்தில் பெருமளவு பங்குபெற்றனர். அது தொடர்பாக மனிதஉரிமை அமைப்பு ஒன்று உண்மையைக் கண்டறிய ஒரு குழுவை நேரடியாக அனுப்பியது. அவர்களின் அறிக்கைக்குப் பிறகு ஊடகங்கள் பெரிதுபடுத்திய பலவிஷயங்கள் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டன.
Fitzcarraldo கதையின் தொடக்கப்புள்ளி என்ன ?

பிரித்தனி கடற்கரையில் கார்னாக் பகுதியில் ராட்சத அளவில் செதுக்கப்பட்ட கற்களைப் பார்த்திருக்கிறேன். பலஆயிரம் வருடங்களுக்குமுன் எவ்வாறு அவற்றை நகர்த்தி வரிசைப்படி நிறுத்தியிருப்பார்கள் என்பது என் சிந்தனை முழுவதும் நிறைந்திருந்தது. Aguirre படத்தயாரிப்பில் பங்குபெற்ற நண்பரொருவர் மீண்டும் அமேசான் காடுகளில் ஒரு படத்தை உருவாக்க ஆர்வமுடன் இருந்தார். அவர்தான் எனக்கு ஒசே ஃபெமின் ஃபிட்ஸ்கெரால்டின் கதையைச் சொன்னவர். ஃபிட்ஸ்கெரால்ட் ரப்பர் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தவர். கப்பல் அளவு பெரிய நீராவிப் படகை அக்கக்காகக் கழற்றி மலையின் மறுபகுதிக்குக் கொண்டுசென்று அங்கு ஓடும் ஆற்றுப்பகுதியில் பயன்படுத்தியவர். அந்த ஒரு செய்தி மட்டும் கதைக்கு அடிப்படையாக அமைந்தது. Fitzcarraldo அமேசான் காடுகளில் அரங்கம் அமைத்து பாடல் நிகழ்வுகளை நடத்தத் திட்டமிடும் ஆபெரா இசைமீது அதீத காதல்கொண்ட ஒருவனின் கதை.

ஃபிட்ஸ்கெரால்டோ கப்பல் ஒன்றை அமேசானில் ஒரு ஆற்றிலிருந்து மலையின் மறுபக்கம் ஓடிக்கொண்டிருக்கும் மற்றொரு ஆற்றிற்குக் கொண்டுசென்று பயன்படுத்தத் திட்டமிடுகிறான். மலைமீது கப்பலை ஏற்றி மறுபுறம் இறக்க ஆயிரம் ஆதிவாசிகளைப் பயன்படுத்துகிறான். ஒரு முழு நீராவிக் கப்பலை எவ்வாறு மலையைத் தாண்டி மறுபக்கத்தில் இறக்குவது என்ற கேள்விக்குப் பதில் தேடிக்கொண்டிருந்தேன். பிரித்தனி கடற்கரையில் கண்ட ராட்சதக்கற்கள் நினவுக்கு வந்தன. அவற்றை எவ்வாறு நகர்த்தினார்களோ அவ்வாறு கப்பலையும் மலைமீது நகர்த்தி மறுபக்கம் கொண்டு செல்லவேண்டும்.

படத்திற்கான தொடக்க வேலைகளுக்காக படப்பிடிப்புக்கு முன்பு சில வருடங்களை அமேசான் காடுகளில் கழித்திருக்கிறீர்கள். அவ்வளவு நாட்கள் ஏன் அதற்கு ஆனது ?

படத்தில் முதலில் காணப்படும் பழைய துருப்பிடித்த நீராவிக்கப்பலை கொலம்பியாவில் வங்கினேன். அதை மாதிரியாகக் கொண்டு இரண்டு நீராவிக்கப்பல்களை உருவாக்கினோம். ஒன்றை மலைமீது கடக்கும் காட்சிகளுக்கும் அடுத்ததை ஆற்றில் செல்லும் காட்சிகளுக்கும் பயன்படுத்தினோம். 20ஆம் நூற்றாண்டு ஃபாக்ஸ் நிறுவனம் (20thCentury Fox) இந்தப்படத்தைத் தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டியது. அதற்கான பேச்சுவார்த்தைகள் பலநாட்கள் நடந்தன. பொம்மைப் படகையும் செயற்கை மலையையும் பயன்படுத்திப் படமெடுக்கச் சொன்னார்கள். அத்துடன் அவர்களுடனான பேச்சுவார்த்தை முடிவடைந்தது. இந்த நேரத்தில் திட்டமிட்டபடி இரு கப்பல்களையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டேன். ஆயிரம் இந்தியப்பழங்குடிகள், படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் தங்குவதற்காக முகாம் ஒன்றையும் உருவாக்கவேண்டியதிருந்தது. படத்திற்காகப் பலவற்றை வாங்குவதற்கு அமெரிக்கவிற்குச் சென்றுகொண்டிருந்தேன். நாற்பது சதவிகிதம்போலப் படம் முடிவடைந்திருந்த நேரத்தில் மிக் ஜாகர் அவருடைய ரோலிங் ஸ்டோன்ஸ் குழுவினுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்த இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்லவேண்டியதாயிற்று. அவருக்கு மாற்றாக யாரையும் நடிக்கவைக்கவில்லை. ஃபிட்ஸ்கெரால்டோ பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த ரோபார்ட்ஸ் நோய்வாய்ப்பட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார். படத்தின் ஆரம்பகால ஆயத்தங்களில் மூன்றுவருடங்கள் இவ்வாறு கழிந்தன. க்ளாஸ் கின்ஸ்கி ஃபிட்ஸ்கெரால்டோவாக நடிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்புக்கு வந்தபின் மலையைக்கடந்து படகைக் கொண்டுசெல்லும் முயற்சியை வெகுவாக விமர்சிக்கத் தொடங்கி, இறுதியில் படத்திற்கு முற்றிலும் எதிரானவராகவே ஆகிவிட்டார்.

Fitzcarraldo போன்ற ஒரு படத்தை மீண்டும் இயக்கநேரிட்டால் இறுதியில் என்னுடைய சாம்பல்தான் மிஞ்சும் என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறீர்கள். அது பற்றி…

ஒரு நீராவிக் கப்பலை மலைமீது ஏற்றி இறக்குவதைப் படம் எடுப்பது பலருக்கு ஆரோக்கியமான மனநிலையில் உள்ள ஒருவன் செய்யும் செயலாகத் தெரியவில்லை. ஒருவகையாக மனநிலை பிறழ்ந்தவனாக ஆகிவிட்டேன் என்று என்னைக் காப்பாற்ற முயன்றார்கள். கப்பல் மலையைக் கடக்கும் பகுதியைக் கதையிலிருந்து நீக்கிவிட்டு வேறுவிதமாகப் படத்தை எடுக்கச்செய்ய முயற்சி செய்தனர். பழங்குடிகள் கூரைவேய்ந்து கட்டிக்கொடுத்திருந்த அழகான என் வீட்டை எங்கள் குழுவிலிருந்த ஒருவர் கோபத்தில் தீயிட்டு எரித்துவிட்டார். இதற்கிடையில் எங்களுடன் இருந்த சில இந்தியர்களை அருகில் வசித்த பழங்குடியினர் அம்புகள்கொண்டு தாக்க இருவர் படுகாயமுற்றனர். மிகவும் அபாயகரமான நிலையிலிருந்த அவர்களுக்கு நாங்கள் இருந்த இடத்திலேயே அறுவைசிகிச்சை செய்யவேண்டியதாயிற்று. மலைமீது படகை ஏற்றத் தேவையான உபகரணங்களை அமெரிக்காவில் மயாமியிலிருந்து கொண்டுவரவேண்டியதாக இருந்தது. மிகுந்த முயற்சியுடன் மலைமீது ஏற்றிய கப்பலை மறுபக்கம் இறக்கமுடியவில்லை. ஆற்றில் நீர் வற்றி இரண்டடி தண்ணீர்தான் இருந்தது. கப்பலை இறக்காமல் அப்படியே நிறுத்திவிட்டோம். ஒரு இந்தியக் குடுமபத்தைக் கப்பலில் வசிக்கச்செய்துவிட்டு வந்துவிட்டோம் வேண்டிய அளவுக்கு ஆற்றில் தண்ணீர்வர ஆறு மாதங்கள் காத்திருந்தோம். படப்பிடிப்பு நடந்த இடத்தை இணைத்த சாலைகள் பயன்படுத்தமுடியாத அளவுக்கு சேறும் சகதியும் நிறைந்தனவாக இருந்தன. தினமும் இருமுறைகள் மின்வெட்டு வேறு. ஏராளமான பிரச்சினைகள்.
நரகத்தினுள் இறங்கிச்சென்று சாத்தானிடம் மல்லுக்கட்டி இப்படத்தை அவனிடமிருந்து கவர்ந்து வெளியே கொண்டுவருவதுதான் எனது ஒரே நோக்கம். அவ்வாறே செய்தும் முடித்தேன் படத்தயாரிப்பில் பங்குபெற்றவர்கள் படத்தை என்னால் தொடர்ந்து எடுத்துமுடிக்க முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளோ, கவலைகளோ Fitzcarraldo படப்பிடைப்பை எந்தவகையிலும் பாதிக்காது பார்த்துக் கொண்டேன். நான் மட்டும் ஒரு நொடி தயங்கியிருந்தாலோ, கலக்கமடைந்திருந்தாலோ அந்த முழுமுயற்சியும் அப்படியே சரிந்து மண்னோடு மண்ணாய்ப் போயிருக்கும். முடிவில் நான்கு வருடங்களுக்குமுன் மனதில் நினைத்திருந்தபடி படம் நிறைவாக உருவாகிவிட்டது.

ஹாலிவுட் எடுத்த Fitzcarraldo படத்தில் செயற்கை மேடையில் ப்ளாஸ்டிக் பொம்மைப்படகு கொண்டு படமாக்கியிருப்பார்கள். நீங்கள் யதார்த்தவாதத்தைப் பின்பற்றுபவரா?

யதார்த்தத்தைத் திரையில் காட்டுவதற்காக இந்தச் சிரமங்களை நான் மேற்கொள்ளவில்லை. அதிவேக நீரோட்டத்தில் கப்பல் மேற்கொள்ளும் அதிர்வுகள் கிராமபோனை அதிரச்செய்து, அதிலிருக்கும் இசைத்தட்டு இயங்கி ஆபெரா இசை கேட்கத்தொடங்குகிறது. பிற ஒலிகளெல்லாம் அப்படியே மெதுவாகக் குறைந்து, இல்லாமல் ஆகிவிட, கரூசோவின் குரலில் ஆபெரா பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இம்மதிரியான கட்சிகள் படம் முழுக்க இருக்கின்றன. இவை யதார்த்ததை வெளிப்படுத்தும் காட்சிகள் அல்ல. இவ்வகைக் காட்சிகள் படத்தை ஒருவகையான கனவுக்காய்ச்சலில் வெளிப்படும் அதீத கற்பனை வெளிப்பாடாக, ஆபெரா இசைநிகழ்வின் ஒரு பகுதியாக மாற்றிவிடுகின்றன.

ஹாலிவுட்டில் எடுத்ததுபோல் பொம்மைக்கப்பலைப் பயன்படுத்தப்போவதில்லை என்று ஆகிவிட்டபடியால் 340 டன்கள் எடையுள்ள ஒரு கப்பலை உயரமான மலைச்சரிவின்மீது ஒரு மைலுக்கும் மேலாக இழுத்துச்சென்றோம். அந்த அடர்த்தியான வனப்பகுதி குடியிருப்புகளிலிருந்து 1200 கிலோமீட்டர்கள் தள்ளியிருந்தது. படம் 6 மில்லியன் டாலர்களுக்குள் எடுத்துமுடிக்கப்பட்டது. இம்மதிரியான முயற்சிகளில் பணத்தை முதலீடு செய்ய எவரும் முன்வருவதில்லை. முதலில் என்னிடமிருந்த பணத்தைப் பயன்படுத்தி இரண்டு கப்பல்களைக் கட்டவும், ஆயிரம் பழங்குடிகளும் படத்தில் வேலை செய்பவர்களும் தங்குவதற்கான குடியிருப்பை உருவாக்கவும் தொடங்கியபிறகே இப்படத்தில் முதலீடு செய்வதற்குப் பிறர் முன்வந்தனர்.
அறிவுப்புனைவு (Science Fiction) வகைப் படங்கள் முழுமையாகக் கற்பனையை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் இவற்றை pure சினிமா என்று சொல்லலாம். இப்படங்கள் ஸ்டுடியோவில் செயற்கையாக டிஜிட்டல் முறையில் படமாக்கப்படும்பொழுது அவை பார்வையாளரிடம் ஏற்படுத்தும் வியப்புணர்வு பாதிக்கப்படுகிறது. டிஜிட்டல் முறையில் என்னென்ன செய்யமுடியும் என்பதை சிறுவர் முதல் அனைவரும் இக்காலத்தில் அறிந்திருக்கின்றனர். இந்தப் படத்தில் கப்பல் மலைமீது ஏறும் காட்சியைக் காணும் ஒவ்வொரு பார்வையாளரும் அக்காட்சியை உள்வாங்கும்நிலை முற்றிலும் வேறானது.

பழங்குடிகளின் உயிரைப் பயணம்வைத்து இந்தக் கப்பலை மேலே ஏற்றும் காட்சிகளைப் படமெடுத்தேன் என்பது என்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று. இது முட்டாள்த்தனமான குற்றச்சாட்டு. இதற்கான ஏற்பாடுகள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டன. சக்திவாய்ந்த உருக்குக் கயிறுகளும் புல்லிகளும் இழுக்கும் உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டன. நாங்கள் பயன்படுத்தியது படத்தில் வரும் கப்பலைவிடப் பத்துமடங்கு எடையைத் தாங்கும் சக்தியுள்ள அமைப்பு. கப்பலின் மிகஅருகாமையில் பழங்குடிகளுக்கு முன்னால் நான் நின்றுகொண்டு அவர்களைப் பயமில்லாது படப்பிடிப்பில் பங்கேற்கச்செய்தேன். அப்படியே ஏதாவது நிகழ்ந்து கப்பல் கட்டவிழ்ந்து பின்னால் சறுக்க நேர்ந்தால் சிறு விபத்துகூட நேராமல் நேராகக் கீழே சறுக்கி இறங்கும்படி செய்திருந்தோம். நாங்கள் பயன்படுத்திய உபகரணங்களை ஒருசில விரல்களைக்கொண்டு இயக்கி நான் ஒருவனே கப்பலை மேலே இழுக்கச்செய்யமுடியும். படத்தில் அபாயத்தையும் கடும்முயற்சியையும் வெளிப்படுத்துபவையாகத் தோன்றுமாறு இக்காட்சிகளை வேறுவிதமாகக் காட்டியிருக்கிறேன்.

Wings of Hope படத்தில் விபத்துக்குள்ளான விமானத்தைத் தேடிக்கண்டுபிடிக்கச் செல்லும் ஹெலிகாப்டர் இறங்க வனப்பகுதியில் மரங்களை வெட்டி இடமுண்டாக்கியிருப்பீர்கள். சினிமாவிற்காக எந்த எல்லையையும் கடந்துசெல்பவர் என Fitzcarraldo உங்களை நிரூபித்துவிட்டது.

என்மீதான விமர்சனங்களுக்கு எல்லையே இல்லை. Wings of Hope படத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடம் அடர்த்தியான காட்டுப்பகுதி. விமானத்தைக் கண்டுபிடிக்க பலநூறு கிலோமீட்டர்கள் அந்தக்காட்டினுள் நடப்பதைவிட ஹெலிகாப்டரில் அந்த இடத்தை விரைவில் அடையமுடியும். ஐந்து மரங்களுக்கு மேல் வெட்டப்படவில்லை. ஆனால் அதற்குப் பெரிய விமர்சனங்கள் எழுந்தன. Fitzcarraldoவிற்காக மரங்களை வெட்டிப்படமெடுத்த காட்டுப்பகுதியை இன்று கண்டுபிடிக்க முடியாது. அப்பகுதி மீண்டும் மரங்கள் அடர்ந்த காடாகி விட்டது, Fitzcarraldoவில் ஒரு இடத்தில் கப்பல் கட்டவிழ்ந்து பின்னால் சரிந்துசென்று சில இந்தியர்கள் அதனடியில் நசுங்கிவிடுவது போன்ற காட்சி இருக்கிறது. அக்கட்சி படமாக்கப்பட்டபோது இரண்டு இந்தியர்கள் இறந்துவிட்டனர் என்று ஒரு வதந்தியும் பரவியது அந்த அளவு அக்காட்சி தத்ரூபமாக அமைந்துவிட்டது. அந்தக் காட்சியை எப்படி எடுத்தோம் என்பதை. லெஸ் ப்ளான்க்கின் Burden of Dreams ஆவணப்படத்தில் காணலாம்.

படப்பிடிப்பில் விபத்துகள் நிகழவில்லையா?

ஆற்றில் வெகுவேகமாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் ஆபத்தான இடம் ஒன்றில் படப்பிடிப்பு நடந்தபோது ஒளிப்பதிவாளர் ரெய்னர் க்ளாஸ்மன் ஒரு பாறையின்மீது இருந்து படமெடுத்துக்கொண்டிருந்தார். முழுவதும் பாசியும் சேறும் படர்ந்திருந்த ஆபத்தான பாறை. படப்பிடிப்பு முடிந்தபின் தங்குமிடத்திற்குத் திரும்பிவிட்டோம். மறுநாள் காலையில்தான் க்ளாஸ்மனை அந்தப் பாறையின் மீது விட்டுவிட்டு வந்துவிட்டதை உணர்ந்தோம். அவசரமாகச் சென்று பார்த்தால் பாறையின் ஒருபக்கத்தில் தொங்கிக்கொண்டு இருந்தார். அதிகக் கோபத்துடன் இருந்த அவரை மீட்டு அழைத்து வந்தோம். மற்றொரு முறை ஆற்றுடன் இணந்து இருந்த ஒரு நீர்த்தேக்கத்தில் குளிக்கும்போது ‘பிரானா’மீன் க்ளாஸ்மனின் கால்விரலைக் கடித்துவிட்டது. ஆறுவாரங்கள் ஊன்றுகட்டைகளின் உதவியுடன் நடந்துகொண்டிருந்தார்.

படப்பிடிப்பிற்குமுன் அங்குள்ள இந்தியர்களைத் தொடர்புபடுத்தி உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி…

படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்குப் பலமாதங்களுக்கு முன்பிருந்தே எங்களை அங்கிருந்த ராணுவ அரசுடன் இணைத்துப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. உண்மையில் நடந்தது வேறு. அனுமதிச் சான்றிதழ்கள் எங்களிடம் இல்லாதிருந்ததால் ராணுவத்தால் பலமுறைகள் கைதுசெய்யப்பட்டோம். படப்பிடிப்பிற்காக லிமாவில் இருந்த அரசு அலுவலகத்தில் அனுமதி கேட்பதைவிடப் படம் எடுக்கப்போகும் அமேசான் ஆற்றுப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளிடம் அனுமதிபெற்றுப் படமாக்குவது சரியானது என்று முடிவு செய்திருந்தேன். ஊதியம் முதற்கொண்டு எல்லவற்றையும் அவர்களுடன் தெளிவாகப் பேசி எழுத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டபிறகே அந்த இடத்தில் படத்திற்கான வேலைகளைத் தொடங்கினோம். அங்கிருந்த மரம் அறுக்கும் தொழிற்சாலைகளில் அளிக்கப்பட்ட ஊதியத்தைவிட இருமடங்கு அதிக ஊதியம் அவர்களுக்கு அளித்தேன். துரதிர்ஷ்டவசமாக அங்கிருந்த பழங்குடி இனங்களுக்குள் போட்டியும் பகையும் சண்டைகளும் நிறைந்திருந்தன.
எங்களால்தான் எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய்வழிகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பிற்கு ராணுவம் வந்திருப்பதாகவும் இந்தியர்களிடையே புரளிகள் கிளப்பிவிடப்பட்டன. இரண்டு ஆறுகளுக்கு நடுவே ஒரு கால்வாய் வெட்டி நாங்கள் அந்த இடத்தை நாசம் செய்யப்போவதாகவும் அவர்களுடைய பெண்களைக் கற்பழித்துக் கொன்றுகொண்டிருப்பதாகவும் வதந்திகள் பரவின.

பிரான்ஸிலிருந்து அங்கு வந்திருந்த ஒரு அரசியல்வாதி ஆஷ்விட்ஸ் முகாமில் நாஜிகளால் யூதர்கள் சித்ரவரதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களைப் பழங்குடியினருக்குக் காட்டி, ஜெர்மனியர்களான நாங்கள் அவர்களையும் அவ்வாறு சித்திரவதைக்குள்ளாக்கப் போவதாக அறிவித்துக்கொண்டிருந்தார். பிரான்ஸிலிருந்து வேறுசிலரும் அவ்வப்போது அங்கு வந்து எங்களுக்கு எதிராக வேலைசெய்துகொண்டிருந்தனர். 1968 புரட்சியில் மனமுடைந்துபோன ஒரு கூட்டம் அது. ஜெர்மனியர்கள் மோசமானவர்கள், குரூரசிந்தையுடையவர்கள் என்று நிரூபித்துவிட என்னென்ன செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் செய்துகொண்டிருந்தனர். எங்கள் முகாமை அமைத்தபிறகு ராணுவக்கெடுபிடிகள் அதிகரிக்க அந்த இடதைவிட்டு உடனே சென்றுவிட முடிவுசெய்தேன்.

அமேசான் பகுதியில் இரண்டு இடங்களில் மட்டும் நாங்கள் படமெடுக்க வசதியாக ஆறும் மலையும் அமைந்திருந்தன. அதில் ஒன்று நாங்கள் முன்பு இருந்த இடம். அடுத்த இடம் அங்கிருந்து 1500 கிலோமீட்டர்கள் தொலைவில் காட்டின் நடுவில் இருந்தது. காட்டினுள் செல்லப்போகிறோம் என்றதும் பத்திரிகைகள் அதை எதிர்த்து எழுதத்தொடங்கின. முதலில் இருந்த இடத்தின் அருகில் பெருவிற்கும் ஈக்குவேடாருக்கும் இடையே எல்லைப் போர் தொடங்கியது.

நீங்கள் ஜெர்மனியில் இல்லாதபோது சிலரால் உங்கள் மீது ஒரு விசாரணைக் கமிஷன் உருவாக்கப்பட்டு உங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் விசாரிக்கப்பட்டன. அவர்கள் யார்?

பழங்குடிகளைக் கைதுசெய்து சித்திரவதை செய்ததாகாகவும், அவர்களின் கலாச்சாரத்தை அழிக்க முயன்றதாகவும் பெருவில் படம் எடுத்துக்கொண்டிருந்த என்மீது ஜெர்மனியின் தீவிர இடதுசாரிகள் சிலர் குற்றம்சுமத்தி அந்த, விசாரனையை இங்கு நடத்தினார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகள் மிகவும் அபத்தமாக இருந்ததால் அம்மாதிரியான செய்திகளால் மகிழ்ச்சியுறும் பத்திரிகைகள்கூட அவற்றைக் கண்டுகொள்ளாது விட்டுவிட்டன. பழங்குடி அகாருனா இந்தியர்களில் பலர் நாங்கள் சந்திப்பதற்கு முன்பே ரணுவத்தில் பணியாற்றியவர்கள். ரேடியோ மூலம் தொடர்புகொள்வதையும், குங் ஃபூ விடியோக்களைக் காண்பதையும் பழக்கமாகக் கொண்டவர்கள். Burden of Dreams ஆவணப்படத்தில் அவர்கள் ஜாண் ட்ரவோல்ட்டா டீ சர்ட்டுகளை அணிந்திருப்பதைக் காணலாம்.

நான்கு இந்தியர்களை ராணுவம் கைதுசெய்ததற்கு நான்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு வேறு. அதற்காக சாந்தாமரியாவிற்குச் சென்றேன். அந்த நால்வரையும் நான் பார்த்ததில்லை. அவர்கள் படத்தயாரிப்பிற்குத் தொடர்புடையவர்கள் அல்ல. என்னுடைய வேண்டுகோளின்படி சர்வதேச ஆம்னெஸ்டி குழுவினரை என்மீது சுமத்தப்பட்ட மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை நேரில்வந்து விசாரித்து அறியுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்கள் வந்து விசாரித்து அளித்த அறிக்கைக்குப் பிறகு அம்மாதிரியான குற்றச்சாட்டுகள் இல்லாமல் போயின.

லெஸ் ப்ளான்க் Burden of Dreams படம் எடுத்தது பற்றி…
லெஸ் ப்ளான்கிற்கு Fitzcarraldo படத்திற்காக முதலில் எடுத்துப் பயன்படுத்தாதுவிட்ட மிக் ஜாகர், ரோபார்ட்ஸ் நடித்திருந்த பகுதிகளைக் கொடுத்திருந்தேன். பெருவிற்கு வரச்சொல்லி அவரை அழைக்கவில்லை. நான் படம் எடுத்துக்கொண்டிருப்பதை ஒருவர் பதிவுசெய்வது எனக்குப் பிடிக்காது. ஆனால் லெஸ் ப்ளான்க்கால் எவ்விதப் பிரச்சினையும் எழவில்லை. மிகுந்த ஈடுபாட்டோடு பழங்குடிகளுடன் பழகி அவர்களுடன் இருந்தார். Fitzcarraldo எடுத்துமுடிக்க நான்கு வருடங்களானது. லெஸ் ப்ளான்க் எங்களுடன் ஐந்து வாரங்கள்தான் தங்கிப் படமெடுத்தார். நாங்கள் படமெடுக்க மேற்கொண்ட முயற்சிகளின் மிகச்சிறு பகுதியையே அவருடைய ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது.

இறுதியில் கப்பல் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்படும் காட்சியை எடுக்க மிகவும் சிரமப்பட்டோம். சுழலில் சிக்கிய கப்பலின் அடிப்பாகம் பாறையில் மோதி நொறுங்கிவிட்டதால் இரண்டாவது கப்பலைப் பயன்படுத்தினோம். நீரின் வேகமும் சுழல்களும் கப்பலை உக்கிரமான அதிர்வுகளுக்கு உள்ளாக்கின. ஒரு பக்கம் சென்று மோதிய வேகத்தில் சிலர் காயமுற்றனர். தாமாஸ் மாச் காமெராவுடன் வெளியே தூக்கி எறியப்பட்டார். கனமான காமெராவுடன் வெளியே காற்றில் பறந்த அவரின் கைவிரல்களின் இடையேயுள்ளபகுதி கிழிந்துவிட்டது. ஆற்றில் நீரோட்டத்தின் வேகம் மணிக்கு அறுபது கிலோமீட்டர்களுக்கு மேல் இருந்தது. இறுதியில் கப்பல் கரைப்பகுதில் சிக்கிக்கொண்டது. மழைபெய்து நீரின் அளவு கூடியபிறகுதான் அதை மீண்டும் வெளியே எடுக்கமுடியும். அதற்குப் பலமாதங்கள் காத்திருந்தோம்.

இந்தியர்கள் கப்பலை மேலிழுத்து மறுபக்கம் கொண்டுசெல்ல பிட்ஸ்கெரால்டோவிற்கு முதலில் உதவிவிட்டு இறுதியில் அந்த முயற்சியைத் தோல்வியுறச் செய்வது ஏன்?

ஃபிட்ஸ்கெரால்டோ அமேசான் காட்டினுள் ஆபெரா இசைஅரங்கு ஒன்றை அமைக்கவேண்டும் என்பதில் வெறிகொண்டவனாக இருந்தான். ஆற்றின் நீரோட்டத்தில் வாழும் தீயஆவிகளால் தங்களுக்குத் துன்பங்கள் நேர்கின்றன என நம்பிக்கொண்டிருந்த இந்தியர்கள் அவற்றிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். முடிவில் ஃபிட்ஸ்கெரால்டோவின் ஆசை நிறைவேறுவதில்லை. இந்தியர்கள் வெற்றிபெறுகின்றனர். ஆவிகளுக்குக் காணிக்கையாகக் கப்பலை ஆற்றின் நீரோட்டத்துடன் சென்றுவிடும்படி செய்துவிடுகின்றனர். ஃபிட்ஸ்கெரால்டோவின் முயற்சிகள் தோல்வியுற்றபோதிலும் அவனுடைய மதிநுட்பத்தாலும் கற்பனையாலும் மீண்டும் வேறுமுயற்சிகளில் வெற்றிபெறுவான். சாகச உணர்வுகளும் கனவுகளும் அவனுள் எப்போதும் உயிர்த்திருப்பதால் இவ்வகைத் தோல்விகள் அவனுக்குப் பொருட்டல்ல. Fitzcarraldo இயற்கையின் அடிப்படை விதிகளுக்குச் சவால்விடும் படைப்பு. படகுகள் மலைகளைத் தாண்டிப் பறந்து செல்பவை அல்ல. Fitzcarraldoவின் கதை யதார்த்தத்தின் கனத்தை மீறிச்செல்லும் கனவுகளின் கனமின்மை பற்றியது. கப்பல் மலைமீது கடப்பதை ஒரு கனவைப்போலக் காட்டுவதற்காகவே இப்படத்தில் ஆபெரா இசையைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

இந்தியர்களுக்கு ஊதியம் கொடுத்ததுடன் நிறுத்தவில்லை, அவர்கள் வாழ்ந்த இடத்திற்கான உரிமையைப் பெற்றுத்தரும் முயற்சியையும் மேற்கொண்டோம். சில வருடங்கள் கழித்து My Best Friend படப்பிடிப்பிற்காக அங்கு சென்றிருந்தபோது அவர்கள் வாழ்ந்த நிலத்தின் உரிமையை அரசிடமிருந்து சட்டப்படி பெற்றுவிட்டனர் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் இருப்பது அந்தப் பகுதியில் அதிக எண்ணெய்வளம் கொண்ட பகுதியாகக் கணிக்கப்பட்டுள்ள இடம். எந்த மாற்றமும் இன்றி அப்படியே வனப்பகுதியாக உள்ளது. அவர்கள் இருந்த இடத்தை ஒட்டி ஓடும் ஆற்றின் மறுபக்கம் எண்ணெய்க் கம்பெனிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

அடுத்து உருவாக்கிய Ballad of the Little Soldier படத்தால் பிரச்சினைகள் எழுந்தன அல்லவா? அது உங்களின் படைப்புகளில் தீவிரமான அரசியலை உள்ளடக்கிய திரைப்படம். சாண்டினிஸ்டாவிற்கு எதிரான நிக்கராகுவா மிஸ்கிட்டோ இந்தியர்களின் போராட்டத்தைப் பற்றியது.

நீங்கள் சொன்னதைத் திருத்திச்சொல்ல விரும்புகிறேன். அது அந்தப்போரில் ஈடுபட்டிருந்த குழந்தைப் போராளிகளைப் பற்றிய படைப்பு. சாண்டினிஸ்ட்டாவையோ சோமொசாவையோ பற்றிய படம் அல்ல. எனக்கு எதிராகச் செய்யப்பட்ட பிரச்சாரத்தின்படி நான் சி.ஐ.ஏ வுக்காகப் படமெடுப்பவன் அல்ல. எனது நண்பர் டெனிஸ் ரிச்சீ குழந்தைப்போராளிகள் பற்றி அங்கு எடுத்துக்கொண்டிருந்த படத்தைத் தொடரமுடியாது போனதால் உதவுமாறு என்னிடம் கேட்டார். நான் அதைத் தொடர்ந்து எடுத்து முடித்தேன்.
டெனிஸ் ரிச்சீ என்பவர் யார்?

உலகெங்கும் பல நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் அவதிகளைப் படமெடுத்து வெளிப்படுத்தியவர். பயம் என்றால் என்னவென்று அறியாதவர் . பிறந்த மறு நிமிடம் அனாதையாகக் கைவிடப்பட்டவர். அனாதைச் சிறுவனான அவர் உலகப்போரின் இறுதிநாட்களில் பெர்லினில் ஹிட்லரின் ராணுவத்தால் மனிதகேடயமாகப் பயன்படுத்தப்பட்ட முதியோர் சிறுவர்கள் கொண்ட குழுவில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்.

இந்தப்படத்தின் பின்புலத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா?

மிஸ்கிட்டோ இந்தியர்கள் முதலில் சாண்டினிஸ்ட்டாவுடன் இணைந்து சோமொசாவிற்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தனர். மிஸ்கிட்டோ சமுதாய வாழ்க்கைமுறை அடிப்படையில் ஒருவித சோசலிச அமைப்பைக் கொண்டது. சாண்டினிஸ்டாக்கள் அவர்களின் கிராமக்குடியிருப்புகளின் மறுமாற்றதிற்காக மேற்கொண்ட முயற்சிகளில் பிரச்ச்சினைகள் எழ இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகிவிட்டனர். சாண்டினிஸ்ட்டாகளுக்கு எதிரான போராட்டதில் ஒன்பது வயது சிறுவர்கள் சண்டையிட்டுகொண்டிருந்ததைக் காட்டியதால் சிலருக்கு நான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக ஆகிவிட்டேன். சாண்டினிஸ்ட்டாவும் இந்தியர்களின் அடிப்படை உரிமைகளைமீறிச் செயல்பட்டதை இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளனர். படம் வெளியானஉடன் சி.ஐ.ஏ யிடம் பணம் வாங்கியவன் என்று குற்றம் சுமத்தப்பட்டேன்.

மிஸ்கிட்டோ இந்தியப் போராளிகளில் இருபது சதவிகிதத்தினர் பதிமூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்கள். ஒன்பதுவயதுப் போராளிச் சிறுவர்களும் இருந்தார்கள். இளம் பாலகர்கள் அழிவிற்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி உயிரிழப்பது பற்றிய அவலத்தை எண்ணிப்பார்ப்பதையும், இந்தப் படைப்பு எதைச் சொல்கிறது என்பதை அறிந்துகொள்வதையும் விட்டுவிட்டு தாங்கள் பின்பற்றும் அரசியல் பார்வை வழியாக ஒவ்வொருவரும் இப்படத்தை விமர்சித்துக்கொண்டிருந்தனர்.

மனிதத்துவப்பார்வையில் இப்போராட்டத்தை அணுகுவது எனது நோக்கம். பழங்குடிகளான மிஸ்கிட்டோ இந்தியர்களின் கலச்சார விழுமியங்கள் நவீன ஆயுதங்களின் அறிமுகத்தால் படிப்படியாக அழிந்துகொண்டிருக்கும் அவலத்தை இந்தப்படம் சொல்கிறது.

குழந்தைப் போராளிகள் அனைவரும் தாங்களாக முன்வந்து போராட்டத்தில் இணைந்தவர்கள். கட்டாயப்படுத்தப்பட்டுப் போராளிகளாக்கப்பட்டவர்கள் அல்ல. இதன் காரணம் என்னவென்று அறிவதற்கு ஒரு சிறுவனின் கதை போதும். நான் கமாண்டோ பிரிவிலிருந்த அந்தச் சிறுவனிடம் பேசியபோது மிகுந்த அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய இரண்டுவயது சகோதரனும் நான்குவயது சகோதரனும் தந்தையும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாய் அவன் கண்முன்னே கண்டந்துண்டமாக வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தநாளே அதற்குப் பழிவாங்க அவன் போராளியாகக் கிளம்பிவிட்டான். இப்படத்தில் நீங்கள் காணும் பல சிறுவர்கள் இப்படம் முடிக்கப்பட்ட நேரத்தில் உயிருடன் இல்லை.

உங்களின் The Dark Glow of the Mountain படம் புகழ்பெற்ற ஆஸ்திரிய மலையேறுபவரான ரெயினோல்ட் மெஸ்னர் (Reinhold Messner)பற்றியது.. . .

ரெயினோல்ட் மெஸ்னர் உலகின் உயர்ந்த மலைச்சிகரங்களாகச் சொல்லப்படுபவற்றில் எட்டாயிரம் மீட்டர்களுக்குமேல் உயரமுள்ள பதினான்கு மலைச்சிகரங்களில் ஏறியிருப்பவர். குறந்தபட்ச உதவியுடன் இம்முயற்சிகளைச் செய்துமுடித்தவர். மிகக்குறைவான உபகரணங்களுடன் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இறங்கியவர். The Dark Glow of the Mountain மலையேறும் முயற்சியில் தனது சகோதரரைப் பறிகொடுத்த மெஸ்னர் ஏன் மீண்டும் இரண்டாவது முறையாக நங்க பிரபாத் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்பது போன்ற எனது பல கேள்விகளுக்கு விடைகளைத் தேடும் முயற்சியாக அமைந்த படம்.
- தொடரும் -

பால் க்ரானினின் (Paul Cronin) கேள்விகளுக்கு தனது வாழ்க்கை, படைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி ஹெர்ஸாக் மனம் திறந்து சொல்லும் பதில்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘Herzog on Herzog’ நூலின் முக்கிய பகுதிகள் தமிழில் தொடராக அளிக்கப்படுகிறது.