ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 8

என் பெயரைக் குறிப்பிடாது அனாமதேயமாகப் படங்களை எடுத்தாலும் காண்பவர்கள் அவற்றை என்னுடைய படைப்புகள் என அறிந்துகொள்வார்கள் என்று 1979ஆம் ஆண்டு எடுத்த ஆவணப்படம் ஒன்றில் சொல்லியிருக்கிறீர்கள்? அதற்கு அர்த்தம் என்ன?

அப்படிச்சொல்லி இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதிகமாகச் சொல்லிவிட்டேனோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் நான் சொல்லியது சரிதான். எனது படங்களில் வரும் நிஜமனிதர்கள் வெறும் கதாபாத்திரங்கள் அல்ல. அவர்கள் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாக இருப்பவர்கள். திரைப்பட உருவாக்கத்தில் எந்த அளவு முன்னேறியிருக்கிறேனோ அந்த அளவு எனது வாழ்க்கையைப் படங்களாக உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் உணரமுடிகிறது. சில படங்கள் எனக்கு நெருக்கமானவையாக இல்லாமல் இருக்கலாம். இருந்தும் எனது படைப்புகள் அனைத்தையும் எனது குழந்தைகளைப் போல நேசிக்கிறேன். குழந்தைகள் அவர்களுக்கான குறைகளுடன் இருப்பவர்கள்தான். அவர்கள் உயிர்த்துடிப்புடன் இருப்பதுதான் எனக்கு முக்கியம். அதுபோலத்தான் எனது படங்களும். பத்துவரை மட்டுமே எண்களை எண்ணத்தெரிந்தபோதும் 600 ஆடுகளில் ஒன்றிரண்டு காணாமற்போய்விட்டால் நொடியில் அறிந்துகொள்ளும் ஆற்றலுள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினரைப் போன்றவன் நான்.
ஒரு படம் முடிந்தவுடன் அடுத்தபடத்திற்காகக் கதையைத் தேடும் படைப்பாளி நான் அல்ல; என்னுடைய ஒரே நோக்கம் புதிய இலக்கணங்களை வெளிப்படுத்தும் படிமங்களைக் கொண்டு நான் சொல்லவிரும்புவதைப் படைப்பதுதான். வாழ்கையைக் கடந்துசெல்லும் நேரத்தில் மணலில் காலடித்தடங்களை விட்டுச்செல்லும் ஒரு விசித்திர ஜந்துவைப் போன்றவன் நான். அந்தக் காலடித்தடங்கள்தான் என்னுடைய படைப்புகள். நீங்கள் திரையில் காண்பது மட்டும்தான் என்னைப்பற்றிய சரியான வெளிப்பாடு என்று சொல்லமுடியும். மகிழ்ச்சியுடன் வாழும் உரிமை பற்றி அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலான அமெரிக்கர்கள் போன்று குறிக்கோள்களுன் வாழவேண்டும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதெல்லாம் எனக்குக் கிடையாது. வாழ்தல்மீது எனக்கென்று குறிக்கோள்கள் இருகின்றன. இதற்கும் முன்பு குறிப்பிட்டுள்ளதற்கும் வேறுபாடுகள் உண்டு. புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
உங்களை ஒரு சுயாதீன திரைப்படப் படைப்பாளியாகக் கருதுகிறீர்களா?

சுயாதீனம் என்பதற்கு இங்கு அளிக்கப்படும் அர்த்தம் என்ன? நம் வீடுகளில் நமது குடும்பங்களைக் காமெராவில் படமாகப் பதிவு செய்துகொள்வதை மட்டும்தான் சுயாதீன சினிமாவாகச் சொல்லமுடியும் என்ற நிலையில் இன்று இருக்கிறோம். ஒருமுறை நியூ யார்க்கில் நான் கொண்டுசென்றிருந்த வாடகை வாகனத்தில் காமெராக்களை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. யூனியன் வாகனம் வரும்வரை காத்திருந்து அதில்தான் கமெராக்களை எடுத்துச்செல்லவேண்டும் என்று என்னைத் தடுத்தார்கள். அதைமீறி நானே காமெராக்களை எடுத்துக்கொண்டுசென்றேன். ஹாலிவுட்டைப் பொறுத்தவரை ஏராளமான சடங்குகளும் சம்பிரதாயங்களும் உள்ளன. கட்டுப்பாடுகள் எதுவும் இன்றிப் படமெடுப்பதைத்தான் சுயாதீன சினிமா என்று சொல்லமுடியும்.

திரைப்படங்களை எடுக்கத் தேவையான பணம் கிடைப்பது எளிதாக இருந்ததா?

படமெடுப்பதற்குத் தேவையான பணத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஏராளமான சிரமங்களை மேற்கொண்டுவந்திருக்கிறேன். ஆனால் பணம் முக்கியமானது அல்ல. பல வருடங்களுக்கு முன் முதன்முதலாக அணுகிய தயாரிப்பாளர்களை நம்பி பணத்திற்காக அவர்கள் பின்னே சென்றிருந்தால் இதுவரை ஒரு சட்டகம் கூடப் படமாக எடுத்திருந்திருக்காது நேரத்தை வீணாக்கிக்கொண்டு இருந்திருப்பேன். படமெடுக்க விரும்பினால் துணிந்து எடுக்கத்தொடங்குங்கள். என்னுடைய பல படங்கள் கையில் பணமில்லாத நிலையில் எடுக்கத்தொடங்கியவைதான். உங்கள் படைப்பாக்கத்திற்கு அடிப்டையாக நீங்கள் பற்றவைக்கும் தீ பிற இடங்களிலிருந்து உதவிக்கு வழிகோலும் அளவிற்குத் தாக்கங்களை உருவாக்கிவிடும். திரைப்பட உருவாக்கத்திற்கான சூழலை நீங்கள்தான் உருவாக்கிகொள்ளவேண்டும். அது முக்கியம் . இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. நான் புகார்களைச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல. படமெடுப்பவர்களைப் பொறுத்தவரையில் உலகெங்கிலும் நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் அவரவர்களின் பணப்பிரச்சினையைப் பற்றித்தான் முதலில் பேசுகிறார்கள். இத்தகைய குறைகூறல் திரைப்பட உருவாக்கத்திற்கான அடிப்படைக் கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. படமெடுப்பது என்பது எளிதான ஒன்றல்ல. அதற்கு மிகவும் தேவையானது நீங்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் செய்யப்போகும் ஒவ்வொன்றையும் தடுத்து நிறுத்திப் படமெடுக்க முடியாமற் செய்துவிடும்படி உங்களைச் சுற்றியிருக்கும் எதிர்மறை சக்திகளை சமாளிப்பதற்கான ஆற்றலும். திரைப்படத்தை உருவாக்குபவர்களுக்காக இந்த உலகம் படைக்கப்படவில்லை. திரைப்படத்தை உருவாக்கும் ஒவ்வொரு முறையும் கட்டாயம் சாத்தானுடன் மல்யுத்தம் செய்து அதை மீட்டுவர நீங்கள் தயாராக இருக்க வேண்டும். துணிந்து இறங்குங்கள். தீயைப் பற்றவையுங்கள். உங்களின் ஆற்றல் அனைத்தையும் ஒருமித்து ஒரு தீவிரமான படைப்பை உருவாக்கத் தொடங்குங்கள். தனக்கான தேவைகளை அது தானாகவே நிறைவுசெய்துகொள்ளும் அளவுக்குச் சென்றுவிடும். பிறகு பாருங்கள். வாலைக் கால்களுக்குள் சுருக்கிக்கொண்டு பயத்துடன் பின்னே வரும் நாயைப் போல பணம் உங்களைப் பின்தொடரும்.

பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததை உதாரணமாகச் சொல்லலாம். என் பெயர் வெளியுலகிற்கு ஓரளவு அறிமுகமான நேரத்தில் என் புத்தகங்களை வெளியிடுமாறு ஒரு பதிப்பகத்தைக் கேட்டேன். மறுத்துவிட்டனர். Skelling என்ற பெயரில் சொந்தப் பதிப்பகத்தைத் தொடங்கினேன். Heart of Glass புத்தகத்தையும் Aguirre, Fata Morgana, Signs of Life, The Enigma of Kasper Hauser திரைக்கதைகளை இரண்டு தொகுப்புகளாகவும் வெளியிட்டேன். சினிமா பற்றிப் பேசச்சென்ற இடங்களுக்கெல்லாம் ஒருகட்டுப் புத்தகங்களையும் காரில் எடுத்துச் சென்றேன். அப்படி விற்றதில் சிறு லாபமும் கிடைத்தது. பிறகு ஒரு நல்ல பதிப்பகத்தார் என்னை அணுகி அனுமதிபெற்றுப் என்னுடைய நிபந்தனைகளின்படி புத்தகங்களை வெளியிட்டனர்.

உங்கள் படங்கள் உங்களுக்குப் பணம் சம்பாதித்துத் தந்திருக்கின்றனவா?

இந்தக் கேள்விக்கு என்னால் சரியாகப் பதில் சொல்ல முடியாது. நான் வழக்கமான திரைப்படத் தயாரிப்பாளரைப் போல் இயங்குபவன் அல்ல. என்னைப் பொறுத்தவரை தயாரிப்பு என்பது நீண்டகால முயற்சி. ஜெர்மனியில் பத்து வருடங்களாக சரியான வருவாயோ என் படைப்புகளுக்கு விமர்சன எதிர்வினைகளோ இல்லாது திரைப்பட உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்தேன். Aguirre வெளியிடப்பட்ட அன்றே தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டு, அரங்குகளிலும் தொலைக்காட்சியிலும் சரியான வரவேற்பைப் பெறமுடியாது போயிற்று. அந்தப் பின்னடைவை சமாளிப்பது எப்படி, அதிலிருந்து மீள்வது எவ்வாறு என்ற கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. அம்மாதிரியான கேள்விகள் எப்போதும் வாழ்வில் என்னோடு தொடர்ந்து வருபவை. ஆனால் என் படைப்புகள் மீது என்றைக்கும் எனக்கு நம்பிக்கை உண்டு. என்றாவது ஒரு நாள் என் படங்கள் அங்கீகரிக்கப்படும்; அனைவராலும் பார்த்து ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்குள் எப்போதும் இருந்துவந்திருக்கிறது. இத்தனை வருடங்கள் என்னைத் தொடர்ந்து இயக்கிவந்திருப்பது இந்த நம்பிக்கைதான். ஒரே இரவில் அனைத்தும் நிகழ்ந்துவிடுவதில்லை. திரைப்படம் எடுப்பவர்கள் வருடக்கணக்கான கடின உழைப்புக்குத் தயாராக இருக்க வேண்டும். எழுத்து, ஓவியம் போன்றவை போலன்றி சினிமா என்பது முதல் நாளிலிருந்து பணம் தேவைப்படும் செலவுமிக்க படைப்புத்தொழில். நான் ஈட்டிய பணத்தை மீண்டும் என் படைப்புகளுக்காகச் செலவழிக்கவேண்டிய கட்டாயம் இருந்தபோதிலும் இத்தனை வருடங்கள் கழிந்தபின் இப்போது ஒரு செல்வந்தனைப் போல் வாழ்கிறேன். இதுவரை நான் படைத்திருக்கும் 45 படங்களின் மூலம் தெரியவரும் உண்மை என்னவென்றால் எவ்வித சமரமசமும் இன்றி நான் எண்ணியபடி என்னுடைய படங்களை என் வாழ்நாள் முழுவதும் படைத்துக்கொண்டிருக்க என்னால் முடியும் என்பதே. இம்மாதிரி வெகு சிலரால் மட்டுமே சொல்ல முடியும். இது நீங்கள் எனக்கு அளிக்கும் பணத்தை விட மிக அதிக மதிப்புள்ளது.

நான் படம் எடுத்தேன். மற்றவர்கள் வீடுகளைக் கட்டினார்கள். என்னிடமிருந்த பணம் போய்விட்டது. ஆனால் படம் கிடைத்தது. முப்பது வருடங்களுக்கு முன்பு எடுத்த படத்தை இன்று டி.வி.டியாகப் பதிவுசெய்து விற்றும் அதைத் திரையிட்டும் திரைப்பட விழாக்கள் நடத்தியும் என்னால் எளிதாகப் பணம் சம்பாதிக்க முடியும். தன்னிறைவு பெற்றவனாக இருப்பதும், நானே எனது படங்களைத் தயரிக்கும் தயாரிப்பாளனாக இருப்பதும்தான் இந்த வியாபரத்திற்கான அடிப்படை என்பதை சிறுவயதிலேயே உணர்ந்துகொண்டேன். நான் எல்லா இடங்களிலும் அன்புடன் வரவேற்கப்படுவதுதான் செல்வந்தனாக என்னை உணர்வதற்கான காரணம். கையில் படங்களுடன் வரும் என்னைப் பிறர் வரவேற்று அன்புடன் உபசரிப்பது என்பது வெறும் பணத்தால் பெறமுடியாத பேறு. நேற்று மதிய உணவு அருந்தியபோது “Woyzeck திரைப்படத்தைக் கொடுத்தற்கு உங்களுக்கு நன்றி” என்று கூறி அந்த உணவைத் தன் உபசரிப்பாக எடுத்துக்கொள்ளவேண்டுமென நிர்ப்பந்தித்து எனது உணவுக்குப் பணம் செலுத்தினார் ஒருவர். உண்மையான சுதந்திரத்துடன் படமெடுப்பதற்குப் பல வருடங்களாகப் பாடுபட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு அளிக்கப்படும் சலுகைகளும் அன்பும் மரியாதையும் ஒரு பெரிய சக்திவாய்ந்த நிறுவனத்தின் தலைவரால் கூட ஒருநாளும் நினைத்துப் பார்க்கமுடியாது.

படங்களைத் தயாரிக்கும்போது எனக்கென்று ஒரு ஊதியத்தை நிர்ணயித்துக்கொள்வதில்லை. நானே தயாரிப்பதால் கதை எழுதுவதற்கும், இயக்கத்திற்கும் ஊதியம் என்று ஒன்றை எடுத்துக்கொண்டதில்லை. என்னைத்தவிர எனது சகோதரரும் மனைவியும் படத் தயாரிப்பில் என்னுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். முந்தைய படங்களின் விற்பனை, திரையிடல் கட்டணம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் பணத்தைக் கொண்டு எங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வோம். எனது தேவைகள் மிக மிகக் குறைவானவை. ஒரு காமெரா, ஒரு கார், மடிக்கணினி, நாக்ரா டேப் ரெக்கார்டர் என என் தொழிலுக்கு அத்தியாவசியமான ஒரு சில பொருட்களுடன் மட்டும் தான் எப்போதும் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். மலைகள் மீது கப்பல்களைக் கடக்கச் செய்வது பணம் அல்ல நம்பிக்கை.

Where the Green Ants Dream படத்தின் கதை பற்றி…

1970 இல் பெர்த் திரைப்பட விழாவிற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது அங்கிருந்த பழங்குடிகளுக்கும் பாக்ஸைட் கனிமச்சுரங்க நிறுவனத்திற்கும் இடையே நடந்த போரட்டம், வழக்குகள் பற்றி அறிந்தேன். ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தவர் தாங்கள் புனிதமாகக் கருதும் நிலத்தைக் கனிமச்சுரங்கங்கள் அமைக்கும் பெரும் நிறுவனத்தின் புல்டோசர்களிடமிருந்து தடுத்துப் பாதுகாக்க முயன்றதைப் பற்றிய கதை அது. நீதிமன்றத்தில் வாதாடிய நிஜத் தரவுகளைக் கொண்டு படத்தில் அக்காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
நாங்கள் படமெடுத்தபோது அப்பழங்குடியினரில் ஆறு பேர்கள் மட்டும் அவர்களின் மொழியில் பேசத் தெரிந்தவர்கள் என்பதை அறிந்தபோது பெரும் அதிர்ச்சிக்குள்ளானேம். அந்த அளவுக்குப் பழங்குடிகளின் கலாச்சார அழிவு அங்கு நிகழ்ந்திருந்தது. அவர்களுடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவமாக அமைந்தது. 20,000 வருட சரித்திரம் அவர்களிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் பாடல்களின் லயங்களைக் கொண்டு தங்கள் பூமியின் அடையாளங்களை அறிந்துகொள்பவர்கள். அதுபற்றி Songlines என்ற பயண நூலை எழுதியுள்ள ப்ரூஸ் சாட்வின் (Bruce Chatwin) என் நண்பர். அவரிடமிருந்து அவர்களைப்பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன்.

அடுத்ததாகக் கின்ஸ்கி நடித்த Cobra Verde படத்தை இயக்கினீர்கள். படம் முடிந்தபின் அது அவருடனான இறுதிப் படம் என்று முடிவு செய்துவிட்டீர்கள் அல்லவா?

எனது வாழ்க்கையிலே மிகவும் மோசமான தயாரிப்பாக அப்படத்தைச் சொல்வேன். அதற்குப்பிறகு கின்ஸ்கியுடன் இணைந்து படமெடுப்பதில்லை என்று வேளிப்படையாக அறிவித்துவிட்டேன். அப்படத்தை என்னுடையதாக இல்லாது அந்நியமான ஒன்றாகவே எப்போதும் உணர்கிறேன். கின்ஸ்கி படப்பிடிப்பிற்காக கொலம்பியா வந்திருந்தபோதே சரியான மனநிலையில் இல்லை. அவரைச் சரிப்படுத்தி இயங்கவைப்பது என்பது முதல் நாளிலிருந்தே பெரும் பிரச்சினையாக ஆகிவிட்டது. அந்தநேரத்தில் பகானினி பற்றி அவர் எழுதிய ஒரு படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். பகாகினி வேடத்தில் நடித்தவரும் அவரே. என்னை இயக்குமாறு பலவருடங்களாகக் கேட்டுக்கொண்டிருந்தார். மறுத்துவிட்டேன். Cobra Verde படப்பிடிப்பில் கின்ஸ்கி ஒளிப்பதிவாளர் தாமஸ் மாச் உட்பட அனைவரையும் மிரட்டிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புகளில் அவர் நடந்துகொண்டவிதம் படத்தை முடிக்கமுடியாது என்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. தாமஸ் மாச்சுக்குப் பதிலாக வேறு ஒரு ஒளிப்பதிவாரைப் பயன்படுத்தவேண்டியதாயிற்று.
புரூஸ் சாட்வின் எழுதிய The Viceroy of Ouidah நாவலின் கதையைப் பயன்படுத்தியது பற்றி..

பத்தொன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்த கொள்ளைக்காரன் ஃப்ரான்சிஸ்கோ மனொயெல் த சில்வா பிரேசிலில் இருந்து ஆப்பிரிக்கா வந்து அங்கு வைஸ்ராய் ஆகி அடிமை வணிகத்தை நடத்தியது பற்றிய நாவல் The Viceroy of Ouidah. படமெடுப்பதற்கு ஏற்ற கதை அல்ல. ஆனால் ஆப்பிரிக்காவைப் பற்றியும் அங்கு நடந்த அடிமை வணிகம் பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சிறந்த கதை . அதன் முக்கிய கதாபாத்திரத்தின் கதை மிகவும் சுவராஸ்யமானது. Cobra Verde திரைப்படத்திற்கேற்ப நான் கதையை மாற்றிக்கொண்டதற்கு சாட்வின் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆங்கிலேய காலனியாதிக்கம் பற்றிய படமாகவோ சரித்திரப் படமாகவோ அதை நான் உருவாக்கவில்லை.

Echoes of the Sombre Empire படத்தில் வரும் ழான் பெடெல் பொக்காஸாவைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியவந்தது?

Fata Morgana படப்பிடிப்புக்காக ஆப்பிரிக்கா சென்றிருந்தபோது பொக்காஸாவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவனைப் பற்றி நம்பமுடியாத கதைகள் பல இருந்தன. ஹிட்லர், நீரோ போன்று மனித இருண்மையை வெளிப்படுத்தியவர்களில் அவனும் ஒருவன். Echoes of the Sombre Empire மனித மனதின் இருண்ட நிலப்பரப்புகளைப் பற்றி ஆழமாக அறியும் முயற்சி என்று சொல்லலாம். சீருடைகள் அணியாத ஏராளமான பள்ளிக் குழந்தைகளைக் கொன்றது, நாட்டின் கஜானாவிலிருந்த பணத்தில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் தனது முடிசூட்டு விழாவுக்குச் செலவழித்தது என்று தோண்டத் தோண்ட அவனைப்பற்றிப் பல செய்திகள் வெளிப்பட்டன. படம் எடுத்தபோது அவன் உயிருடன் இருந்தான். அவனுடன் ஒரு நேர்காணலைப் படமெடுக்க முயன்றேன். முடியவில்லை.
பொக்காஸாவின் கதையைச் சொல்பவராகப் படத்தில் வரும் மைக்கேல் கோல்ட்ஸ்மித் பற்றி...

மைக்கேல் கோல்ட்ஸ்மித் ஒரு பத்திரிகையாளர். 1970 இல் கைது செய்யப்பட்டு பொக்காஸாவால் மரனதண்டனை அளிக்கப்பட்டவர். அவன் அவரை அடித்த அடியில் அவர் உயிரழ்ந்திருப்பார். அந்த அளவுக்கு ஆபத்தில் சிக்கியிருந்த அவர் எப்படியோ உயிர் தப்பிப் பிழைத்தார். பொக்காஸோவின் கைதுக்குப் பிறகு மைக்கேல் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படம் முடிந்தபின் லைபீரியா சென்றவர் அங்கு போரிட்டுக்கொண்டிருந்த புரட்சியாளர்களால் கைது செய்ய்யப்பட்டார். அங்கிருந்து தப்பிவந்தபின் அவரைச் சந்தித்தேன்.

இந்தியாவில் உதய்ப்பூர் அரண்மனையில் படமெடுத்தது பற்றிச் சொல்லுங்கள் …

மகாராஜாவின் அழைப்பில் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலியப் பாடகர், இயக்குநர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளர் ஆந்த்ரே ஹெல்லெர் உதய்ப்பூர் அரண்மணையில் கைவினைக் கலைஞர்கள், பாடகர்கள், ஆட்டக்கரர்கள், மாயவித்தைக்காரர்கள் என ஆயிரம் பேருக்குமேல் கூடச்செய்து ஒரு மாபெரும் விழா நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதற்கு என்னை அழைத்திருந்தார். ஹெல்லர் அந்த ஒருநாள் நிகழ்ச்சியை அற்புதமான முறையில் நடத்திக் காண்பித்தார். அவர் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு முதன்முறையாகச் சென்றிருந்தேன். அந்த நிகழ்வை Eccentric Private Theatre of the Maharaja of Udaipur என்ற பெயரில் ஒரு கதைபோலப் படமாக்கினேன்.

நீங்கள் எப்போதாவது நாடகம் காணச் செல்வதுண்டா ?

எனக்கு நாடகம் பிடிக்காது. நான் பார்த்த சில நாடகங்களால் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் வெறுப்பும் என்னை நாடகங்கள் பக்கம் போவதையே நிறுத்திவிட்டன. வலிந்து நடிப்பதும், செயற்கையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதும் என்னால் கானமுடியாதவை. நாடகத்தைவிட ஒரு மல்யுத்தப் போட்டியை ஓரளவு என்னால் பார்க்க முடியும். நான் நாடக உலகைச் சேர்ந்தவன் அல்ல..

மைக்கேல் ஒண்டாட்டே (Michael Ondaatje) எழுதியிருக்கும் The Collected Works of Billy the Kid புத்தகத்தை ஜெர்மன் மொழியில் நீங்கள் மொழிபெயர்த்திருப்பது பற்றி…

முதலில் நாடக இயக்குநரான என் சகோதரி நாடக வடிவிலிருந்ததை மொழிபெயர்த்துத் தரச் சொன்னார். அதை அவர் பயன்படுத்தவில்லை. அந்த நாவலை ஜெர்மன் மொழியில் பதிப்பிக்க விரும்பி கார்ள் ஹெஸ்னர் என்னிடம் கேட்டபோது ஒப்புக்கொண்டேன். அது ஒரு முக்கியமான நாவல். தெரியாத வார்த்தைகளுக்கு ஒண்டாட்டேயிடம் அர்த்தம் கேட்டு எழுதினேன். நான் சில சமயங்களில் நாடகங்களைப் படிப்பதுண்டு. ஆபெராவைப் பொறுத்தவரை என்னுடைய படைப்புகள் மட்டுமே எனக்குச் சரி. மற்றவர்களுடைய ஆபெரா படைப்புகள் பெரும்பாலும் ஏமாற்றங்களையே அளித்திருக்கின்றன.

நடனங்கள், பாலே போன்றவற்றில் விருப்பமுண்டா?

இல்லை. இசைக்கச்சேரிகளையும் தவிர்த்துவிடுவேன். அங்கு இசையைக் கேட்பதைவிட வாத்தியங்கள் வாசிப்பவர்களின் கைகளையும் அவர்களின் செய்கைகளையும் கூர்ந்துகாண்பதில் கவனம் சென்றுவிடும். பதிவு செய்யப்பட்ட இசையைக் கேட்பது எனக்கு உவப்பானது. ஆழமாகக் கேட்கமுடியும். அருங்காட்சியகங்களுக்கும் அவ்வளவாக நன் சென்றதில்லை. சிறு வயதிலிருந்து பல முறைகள் ஏதென்ஸ் சென்றிருக்கிறேன். கடைசியாகச் சென்றபோதுதன் அக்ரொபோலிஸைப் பார்த்தேன். ஒரே ஒரு முறை லண்டன் அருங்காட்சியகம் சென்றிருக்கிறேன்.

பெரிய ஹோட்டல்கள் எனக்கு ஒவ்வாதவை. இருந்தும் என்னுடைய தொழிலில் ஹோட்டல்களில் தங்குவது தவிர்க்க முடியாதது. பெர்லினில் ஹோட்டலை விட என் மகனின் அறையில் தரையில் படுத்து உறங்குவது எனக்குப் பிடிக்கும். வாரக்கணக்கில் அமேசானில் படகில் தங்கியது ஹோட்டல்களை விட வசதியாக இருந்தது. பெரிய உணவு விடுதிகளில் உண்ணுவதும் என்னால் முடியாத ஒன்று. உருளைக்கிழங்கு வருவலை நடைபாதையில் அமர்ந்து உண்பது போதும். இவை எல்லம் வாடகை, பணச்செலவு, அதிக வசதி என்ற காரணங்களுக்காக நான் ஒதுக்குபவை அல்ல. என்னால் முடியாதவை, எனக்குப் பிடிக்காதவை அவ்வளவுதான்.

உங்களின் Scream of Stone ஜெர்மன் சினிமாவின் ஆரம்பகால மலைப்படங்கள் (mountain film) பகுப்பை நினைவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டதா?
மலைப்படங்கள் பகுப்பு பின்னாளில் நாஸிக் கருத்துக்களை வெளிப்படுத்தும் படங்களாக மாற்றம் கண்டது. புதிய, தற்கால மலைப்படங்களை உருவாக்கும் எண்ணம் எனக்குப் பிடித்திருந்தது. ரெய்ன்ஹொல்ட் மெஸ்னரின் ஆலோசனைப்படி செங்குத்தாக ஊசிபோன்று நிற்கும் இரண்டு கிலோமீட்டர்கள் உயரம் கொண்ட செர்ரோ தாரே (Cerro Torre) சிகரத்தில் முதல்முறையாக வெற்றிகரமாக ஏறிய உண்மைக்கதையைப் படமாக்குவது எனத் திட்டமிட்டிருந்தோம். மலையேற்றத்தைப் பொறுத்தவரை செர்ரோ தாரே உலகின் மிக அபாயகரமான சிகரங்களில் ஒன்று. அதைவிட உயரமான சிகரங்கள் இருந்தபோதிலும் அதன் அமைப்பும் கட்டுப்பாடில்லாத அளவு எல்லைகளை மீறும் தட்பவெப்ப நிலையும் மலையேறும் நிபுணர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்துவருகின்றன. சிகரத்தைக் காணமுடியாதபடி பனிமூட்டமிருக்கும். சிகரத்தில் 200 கிலோமீட்டர்கள் வேகத்தில் அடிக்கும் காற்றில் துப்பாக்கி ரவைகல் போல பனிக்கட்டிகள் பறந்துகொண்டிருக்கும்.

அந்தச் சிகரத்தின் உச்சியில் இரண்டுமுறைகள் ஹெலிகாப்டர் மூலம் இறங்கியிருக்கிறேன். உச்சியில் உள்ள பனிக்குகை ஒன்றில் எட்டு நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வைத்துக்கொண்டோம். படப்பிடிப்பில் பலமுறைகள் அபாயமிக்க சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சமாளித்துப் படத்தை எடுத்தோம். ஒருதடவை பனியுடன் சேர்ந்து புயலும் சுழற்காற்றும் கட்டுக்கடங்காது போக உணவும் தண்ணீரும் இல்லாமல் இரண்டுநாட்கள் அந்த உயரத்தில் கழித்து ஹெலிகாப்டர் மூலம் உயிர் தப்பிக் கீழே வந்து சேர்ந்தோம்.
1990 இல் வியன்னா திரைப்பட விழாவின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த நீங்கள் அங்கு பேச அழைத்திருந்தவர்களைக் கொண்டு எட்டு அரைமணி நேரப்படங்களை Film Lesson என்ற பெயரில் உருவாக்கினீர்கள். வந்தவர்களின் உரைகள் திரைப்படம் பாமரர்களின் கலை என்பதை நிரூபிக்கும் வண்ணம் இருந்தன.

திரைப்படப்பள்ளியில் கற்பிக்கும் முறையை நான் எவ்வாறு அணுகுவேன் என்பதை வெளிப்படுத்தும்படியாக அந்தப் பேச்சுகள் அமைந்தன, திரைப்பட விழா நடந்த இடத்தில் அமைக்கப்ட்டிருந்த சர்க்கஸ் கூடாரம் ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் தினமும் ஒருவரைப் பேசுமாறு செய்திருந்தேன். மந்திரவாதி , கயிறுமேல் நடப்பவர், பூட்டுகளைத் திறப்பவர், விண்வெளி ஆய்வாளர் போன்றவர்களைப் பேச அழைத்திருந்தேன்.

- தொடரும் -

பால் க்ரானினின் (Paul Cronin) கேள்விகளுக்கு தனது வாழ்க்கை, படைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி ஹெர்ஸாக் மனம் திறந்து சொல்லும் பதில்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘Herzog on Herzog’ நூலின் முக்கிய பகுதிகள் தமிழில் தொடராக அளிக்கப்படுகிறது.