தமிழில் சினிமா வழி சமூக மாற்றத்தை முன்னிறுத்தி சமூக சினிமா எனும் கட்டமைப்பை உருவாக்க பனிரெண்டு ஆண்டுகளுக்கும் மேல் இடைவிடாமல் போராடி வரும் தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் உள்கட்டமைப்புகளில் ஒன்றுதான் பேசாமொழி பதிப்பகம். ஒரு இயக்கம் என்றால் அதற்கென தனியான உள்கட்டமைப்புகள் அவசியம். பெரு வாரியான மக்களை சென்றடைய ஒரு இயக்கம் பல்வேறு தளங்களில் ஊடகங்களில் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. கிராமம்தோறும் எல்லா மக்களையும் சந்திக்கும் களப்பணிகளை தமிழ் ஸ்டுடியோ செய்து வந்தாலும், கல்வியியல் ரீதியாக சினிமாவை அணுக அதற்கென மாத இதழ், இணைய இதழ், பதிப்பகம், நூல் விற்பனையகம் என பல்வேறு உப கட்டமைப்புகள் தேவைப்படுகிறது. அதன் நீட்சியாகவே பேசாமொழி பதிப்பகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
உலகின் மற்ற மொழிகளில் வெளியான மிக முக்கிய சினிமா புத்தகங்களை தமிழில் கொண்டு வருவதற்கு, சினிமாவை கல்வியியல் ரீதியாக அணுகுவதற்கு தேவையான புத்தகங்களை பதிப்பிப்பதற்கும் பேசாமொழி பதிப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், சினிமா இன்று வரை ஒரு போகப்பொருளாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சினிமாவை கல்வியியல் பூர்வமாக அணுகாமல் வெறுமனே கேளிக்கை என்கிற ரீதியில் அணுகியதே. கேளிக்கை அல்லது அரசியல் பிரச்சார ஊடகமாக மட்டுமே தமிழ்நாட்டில் சினிமா இருந்து வருகிறது. நூறு ஆண்டுகளை கடந்திருந்தாலும், தமிழில் சொல்லிக்கொள்வதுபோல் சினிமா சார்ந்த தொழில்நுட்ப புத்தகங்கள் இல்லை.பேசாமொழி பதிப்பகம் தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டு காலக்கத்திற்குள் அறுபதுக்கும் மேற்பட்ட மிக முக்கியமான தொழிநுட்ப புத்தகங்களை தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து, சினிமாவை கல்வியிலே கோணத்தில் அணுக வாசகர்களை தயார்ப்படுத்தி வருகிறது. முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பகங்கள் தமிழ்நாட்டில் இல்லை, நூற்றாண்டு வரலாற்றில் அந்த குறையை போக்கி, முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பகமாக பேசாமொழி பதிப்பகம் உருவாகியிருக்கிறது.
சினிமா என்றால் வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமே என்றுதான் பெரும்பாலான சினிமா ஆர்வலர்களும், பொதுமக்களும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மாறாக சினிமாவை ஆற்றொழுக்க அடிப்படையில் வாசித்தால் சினிமா சமூகத்தில் பெரும் மாற்றத்தை கொடுக்கும் என்பதை பேசாமொழி பதிப்பகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. நிறைய பரிசார்த்த முயற்சிகளை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியும் உள்ளது. தமிழில் இன்று பரவலான சினிமா நூல்களை படிக்கும் வாசகர்கள் உருவாக்க பேசாமொழி பதிப்பகம் மிக முக்கிய காரணம். வெறுமனே புத்தக பாதிப்பு என்றில்லாமல், புத்தகங்களை எல்லாருக்கும், எல்லா நாடுகளுக்கும், கிராமங்களுக்கும் கூட கொண்டு சேர்க்கும் பணியையும் தமிழ் ஸ்டுடியோவின் இன்னபிற முன்னெடுப்புகள் செய்து வருகிறது. கிராமங்களில் கூட பேசாமொழி பதிப்பக புத்தகங்களுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதே இதற்கு சான்று. சினிமாவை சமூக சினிமாவாக, சமூக மாற்றத்தை உருவாகும் சினிமாக்களை உருவாக்கும் கேந்திரமாக மாற்றும் வரை பேசாமொழி பதிப்பகம் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டு வரும்.
அருண் மோ
பதிப்பாசிரியர்