உயிர் கொடுக்கும் கலை 3 - டிராட்ஸ்கி மருது

ஓவியர் / சிற்பி தனபால் சென்னை ஓவியக் கல்லூரியின் முதல்வராக இருந்த தருணத்தில், பத்திரிகை ஒன்றில் ஓவியக் கல்லூரி குறித்து எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த கட்டுரையை படித்த பின் இந்த கல்லூரியில் தான் நான் சேர வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அதற்கான முயற்சிகளையும் எடுக்க தொடங்கினேன்.
என்னுடைய தாத்தா (அம்மாவின் சித்தப்பா) எம்.எஸ்.சோலைமலை, தமிழ் திரைப்பட உலகில் கொடிக்கட்டி பறந்த கதாசிரியர். திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதிலும் சிறப்பாக செயல்பட்டவர். பீம் சிங்கினுடைய பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர். பீம் சிங் அவர்களின் திரைப்படத்தில், தமிழ் மற்றும் தமிழர் வாழ்வு சார்ந்த, குறிப்பாக மதுரை மாவட்டம் சார்ந்த வாழ்க்கை வரலாறு பெரியளவில் பதிவானதற்கு என்னுடையா தாத்தா ஒரு முக்கிய காரணம். சிவாஜி மற்றும் எஸ்.எஸ்.ஆர் இருவரையும் வைத்து எதிர் காலம் என்று சொந்தமாக ஒரு படம் எடுக்க நினைத்திருந்தார். காலப்போக்கில் சில காரணங்களால் ஜெமினியும், ஜெய் சங்கரும் அதில் நடிப்பதாக முடிவானது. சென்னையில் படப்பிடிப்பு நடைப்பெற்று கொண்டிருந்தது. பள்ளி தேர்வு முடிந்த பின் கிடைக்கும் விடுமுறை நாட்களில் படப்பிடிப்பில் உதவி செய்வதற்கு சென்னைக்கு வந்திருந்தேன். ஓவியக் கல்லூரியில் படிக்கும் ஆர்வம் எனக்கிருந்ததால் தனபால் அவர்களின் அறிமுகம் தாத்தா மூலம் கிடைத்தது. திரைப்படத் துறை சார்ந்த பலரின் அறிமுகமும் அவர் மூலம் அந்த காலக்கட்டத்தில் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஆர்வத்தையும் திரைப்பட துறை மேல் எனக்கிருந்த ஆசையயையும் கண்டு, ஓவியக் கல்லூரியில் நான் படிக்க வேண்டுமென்று எடுத்த முடிவுக்கு தந்தையிடம் எனக்காக பரிந்து பேசியவரில் அவரும் ஒருவர்.

சென்னை வந்த பின் நான் சந்தித்த மூன்று கலைஞர்கள் குறித்து இந்த இதழில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மூன்று கலைஞர்கள் போல் பல்வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்த பல முக்கியமான கலைஞர்கள் குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை, இவர்கள் அனைவரையும் சரியான விதத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வர சினிமா உலகம் மறந்துவிட்டது. பலரின் பங்களிப்பு ஆவணப்படுத்த படாமல் இருக்கிறது. என்னால் இயன்றவரை இந்த மூவரை குறித்து சேகரித்த தகவல்களை பகிர விரும்புகிறேன்.
------------------------------------------------------------------------------------------------------
W.R.சுப்பாராவ் - ஒளிப்பதிவாளர்

பரணி - திரைப்பட விளம்பர போஸ்டர் வடிவமைப்பாளர்.

வேலுச்சாமி - Moulding துறை சார்ந்தவர்.
------------------------------------------------------------------------------------------------------
ஒளிப்பதிவாளர் W.R.சுப்பாராவ், ஆரம்ப கால தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர். Tricks shots போன்ற special effects பணிகளை சிறப்பாக செய்தவர். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வரலாற்று படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். பக்தி படங்கள் உட்பட பல படங்களில் பணி புரிந்தவர். கருப்பு வெள்ளை படங்களிலும் special effects செய்துள்ளார். என் தாத்தாவின் எதிர்காலம் படத்திற்கு W.R.சுப்பாராவ் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

எனது தாத்தா மூலம் முதன் முதலாக அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கோபாலப்புரத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் வீட்டிலிருந்து மூன்று நான்கு வீடுகள் தள்ளி இருந்தது அவரின் வீடு. 69 அல்லது 70`இல் அவரை முதன் முதலாக சந்தித்தேன். நானும் தாத்தாவும் அவருடைய வீட்டுக்கு சென்றோம். வீட்டின் படி ஏறிய உடனே , கூடத்தில் அவர் பாய்`இல் படுத்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. இருவரையும் வரவேற்று அமரச்சொன்னார். இருவரும் பாய்`இல் அமர்ந்தோம். தாத்தாவிடம் யார் இவர் என்று என்னை குறித்து கேட்டார். என் பேரன் என்றார். ஆர்ட்டிஸ்ட், ஓவியக் கல்லூரியில் சேர இருக்கிறான் என்று சொன்னார். W.R.சுப்பாராவ் அவர்கள் உடனே, தம்பி நானும் ஆர்ட்டிஸ்ட் தான் என்று சொன்னார். உட்கார்ந்திருந்தவர் எழுந்து அவர் வரைந்த படம் ஒன்றை காண்பித்தார். வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, வாசல் கதவிற்கு நேர் மேலாக அந்த படம் இருந்தது. தனது அண்ணன் படம், தான் வரைந்தது என சொன்னார். என்னால் மறக்க இயலாத நிகழ்வு அது. பதினாறு வயது கூட இல்லாத என்னிடம் நானும் ஆர்ட்டிஸ்ட் தான் என்று சொல்லி தொடர்ந்து உரையாடினார். என்னை வளர்த்து பெரிய ஆளாக்கி கொண்டு வந்தது என் அண்ணன் தான், நானே வரைந்த அவரின் படமிது என்றார்.

திரைப்படத்தில் எப்படி இயங்குகிறார் என்று அவருடனே இருந்து பார்த்து தெரிந்துக்கொண்டேன். அவருக்கு உதவியாக அவரின் அண்ணன் மகன் W.R.சந்திரன் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தார். இளம் வயதில் அண்ணன் இறந்ததால், அவர் மகனை தன் மகனாக வளர்த்து வந்தார். "எதிர் காலம்" திரைப்படத்திற்கு மதுரை செட்டை ஸ்டுடியோவில் போட வேண்டியதாக இருந்தது. W.R.சந்திரன், அதற்கான காட்சிகளெல்லாம் படம் பிடிக்க மதுரை வந்திருந்தார். அவருடன் ஒரு சிறு குழு வேனில் பயணித்து மதுரையின் பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்தார்கள். அவர்களுடன் நானும் அந்த வேனில் சென்றிருந்தேன். Lens cap`ஐ கழட்டி என்னிடம் கொடுப்பார்கள். அதை வைத்துக் கொண்டு நான் நிற்பேன். அன்று W.R.சந்திரன் உடன் பணி புரிந்து, 35-40 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் படத்தில் special effects சார்ந்த வேலையை அவருடன் சேர்ந்து செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதையும் இங்கு மகிழ்ச்சியாக குறிப்பிட விரும்புகிறேன். W.R.சந்திரன் மூலம் W.R.சுப்பாராவ் அவர்களின் வாழ்வில் நடந்த பலவற்றை தெரிந்துக்கொண்டேன். சினிமாவில் special effects செய்வதில் 1935-1955 வரை தமிழ் சினிமா அவரை நம்பியே பெருமளவு இருந்தது. அந்த காலத்தில் special effects`காக optical printer உபயோகித்தார்கள். Optical printer brochure`ஐ வைத்துக் கொண்டு உள்ளூர் Lathe`இல் அவரே ஒரு பெரிய optical printer`ஐ வடிவமைத்தார். அவர் வடிவமைத்த அந்த இயந்திரம் அவர் இறந்த பின்பும் அவரின் குடும்பத்திற்க்கு 30 வருடங்களுக்கு மேல் உதவியது. Rao effects என்று W.R.சந்திரன் அந்த நிறுவனத்தை நடத்தினார். அந்த optical printer`ஐ வைத்து பல திரைப்படங்களுக்கு title,optical effects மற்ற special effects செய்து கொடுத்திருக்கிறார்கள்.

W.R.சுப்பாராவ் அன்றைய தினத்தின் திரைப்பட ஒளிப்பதிவு வேலைகள் முடித்த பின், இரவு ஒன்று அல்லது இரண்டு மணியானாலும் லேத்துக்காரரை?? சந்தித்து optical printer உருவாக்கம் குறித்து விசாரித்துவிட்டு தான் வீட்டுக்கு செல்வாராம். அப்படி பார்த்து கவனித்து செய்தது அந்த இயந்திரம். W.R.சந்திரனும் அவருடன் பணிபுரிந்ததால் அவரையும் அந்த நேரத்தில் கூட்டிச் செல்வாராம். எனக்கு அப்போது சிறிய வயது, தூக்கமாக வரும் என என்னிடம் கூறினார் W.R.சந்திரன். W.R.சுப்பாராவ் அவர்களும் லேத்துக்காரரும் சில நாட்கள் விடிய விடிய பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த optical printer தமிழ் சினிமாவுக்கு பெரும் சேவை செய்ததுள்ளது. அந்த optical printer அவர்களிடம் இப்போது இல்லை. அதை அவர்கள் விற்று விட்டார்கள். 40 வருடங்களுக்கு பிறகு என்னுடைய வேலைக்காக Rao effects`க்கு சென்ற போது அதே பழைய optical printer அங்கு இருந்தது. நான் சிறு வயதில் பார்த்த அந்த ஓவியமும் அங்கு இருந்தது. W.R.சுப்பாராவ் அவர்களால் வரையப்பட்ட அவர் அண்ணனின் ஓவியம். அதைப் பார்த்தவுடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அந்த பழைய ஞாபகம் வந்தது. என்னை பார்த்தவுடன் தம்பி நானும் ஆர்ட்டிஸ்ட் தான் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. இதை W.R.சந்திரன் அவர்களுடனும் பகிர்ந்துக் கொண்டேன்.

W.R.சுப்பாராவ் அவர்களின் உறவினர் என்னிடம், சுப்பாராவ் வத்தலக்குண்டுவில் இருந்து வந்தார் என்று, சொன்னதாக எனக்கு நினைவு. புகைப்படக் கலையில் ஆர்வமிருந்ததால், ஒளிப்பதிவு துறையில் நுழைந்தார் என்று அவர் சொன்னார். அவரிடம் W.R.சுப்பாரவ் குறித்து இன்னும் நிறைய கேட்பேன். அவர் எதுக்கு சார் இதெல்லாம் என்று விட்டுவிடுவார். நான், இல்லை நீங்க சொல்லுங்க, பிற்கால சினிமா மாணவர்களுக்கு இது உதவும் என்று கூறினேன்.

W.R.சுப்பாராவ் அவர்கள் நகைச்சுவையுணர்வுடன் அருமையாக கருத்து (கமெண்ட்) சொல்பவர். தெளிவான தீர்க்கமான பார்வையுடன் கருத்து கூறுபவர். பகடியுடன் பேசுபவர். நான் சிறுவனாக இருக்கும் போது அவர் கமெண்ட் அடிப்பதை இரசித்து கேட்டதுண்டு. ஒரு முறை W.R.சுப்பாராவ் அவரின் உறவினரை பார்க்க காஞ்சிபுரம் செல்ல இருந்தார். என்னுடைய தாத்தா நானும் வரேன், காஞ்சிபுரம் கோவிலையும் அப்புடியே பார்த்துட்டு வந்துவிடலாம் என்றார். நானும் அவர்களுடன் சென்றேன். எனக்கு அப்போது 16 அல்லது 17 வயது இருக்கும். தாத்தாவின் standard 21 காரில் அனைவரும் சென்றோம். ஓட்டுனரின் இருக்கை அருகில் W.R.சுப்பாராவ் அமர்ந்திருந்தார். நானும் தாத்தாவும் பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தோம். இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது எம்.ஜி.ஆர் இயேசு நாதராக நடிக்கவிருப்பதாக விளம்பரங்கள் பத்திரிக்கையில் வந்திருந்த நேரமது. பொதுவாகவே சுப்பாராவ் கடுமையாக கமெண்ட் அடிப்பவர். தாத்தா சுப்பாரவ் அவர்களிடம், என்ன எம்.ஜி.ஆர் இயேசுநாதராக நடிக்க போறாரமே என்று அந்த செய்தியை பற்றி பேசினார். அன்று W.R.சுப்பாராவ் சொன்ன கமென்ட் இன்றும் எனக்கு மறக்காமல் இருக்கிறது. அவர் அனைவரையும் ஏக வசனத்தில், அவன் இவன் என்று தான் பேசுவார். பொம்மை பத்திரிக்கையில் முழு படம் போட்டு விளம்பரம் அப்போது தான் வந்திருந்தது. அந்த படத்தின் இயக்குனர் ஜோசம் தலியத். கதை வசனம் கலைஞர் கருணாநிதி. இயேசு நாதராக நடிப்பது எம்.ஜி,ஆர். அவர் சொன்னதை அவர் கூறிய விதத்திலே சொல்லுகிறேன், "ஜோசப் தலியத் நான் எடுக்குறது தான் படம்னு சொல்வான், இவன் நான் நடிக்குறது தான் நடிப்புன்பான், இவன் நான் எழுதுறதுதான் வசனம்ன்பான். மூனுபேரும் ஒன்னா சேரா மாட்டாங்க. இந்த படம் வராது. இந்த படம் வந்தா நான் கேமராவை பிடிக்குறதை விட்டுறேன்" என்றார். உண்மையிலே இந்த படம் வெளி வரவில்லை.

அவர் இறந்த பிறகு, பிற்காலத்தில் பல பழைய படங்களை பார்க்க வாய்ப்பு ஏற்ப்பட்டது. பல படங்களில் effects`க்கு இவரது பெயர் பார்க்க முடிந்தது. சாவித்ரி கரடியாக மாறுவது உள்ளிட்ட பல special effects`ஐ சிறப்பாக செய்திருப்பார். அவரின் தேடல், அவரின் பங்களிப்பு இவையாவும் பதிவு செய்யப்படவில்லை. இவரை போலவே தமிழ் சினிமாவில் இந்த துறையில் ஐந்தாறு பேர் மிக முக்கியமானவர்கள். பெரிய திரையை திறந்து அந்த optical printer`ஐ பார்த்தது ஒரு science fiction’ படத்தில் வரும் ரோபா போலவே இருந்தது. ஆரம்ப கால இயந்திரம் அது, ஆனாலும் 40 ஆண்டுகள் பயனளித்தது. அவருடைய யோசனையும் தரிசனத்தையும் நினைத்து உருகுவதுண்டு.

ஓவிய கல்லூரி சேர்வதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கும் போது "தங்க கோபுரம்" திரைப்பட பணி துவங்கியது. தாத்தா இயக்குனர். தங்க கோபுரம் மிகவும் முக்கியமான படம் என கனவு கண்டு கொண்டிருந்தார். ஒன்றாய் கல்லூரியில் படிக்கும் மூன்று பெண்கள், தாங்கள் திருமணமாகி சென்றாலும் ஒரே வீட்டிற்க்குள் தான் செல்வோம் என்று ஆசைப்பட்டவர்கள், இறுதியில் தற்செயலாக ஒரே வீட்டிற்கு ஒருவர் தாயாக, ஒருவர் மகளாக, ஒருவர் மருமகளாக வந்துவிடுவார்கள். அப்படியான ஒரு கதை. மிகவும் முக்கியமான கதை. (தாத்தா நினைத்தது போல் அது படமாக வெளி வரவில்லை). எம்.ஜி.ஆரின் பரிந்துரையின் பேரில் மோகன் ப்ரொடக்‌ஷன் இந்த திரைப்படத்தை தயாரித்தார்கள். இந்த படத்தில் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, சுந்தர்ராஜன், வி.கே,ராமசாமி மற்றும் பலர் நடித்தனர். சத்யா மூவிஸ் வளாகத்தை இரண்டாக பிரித்து, ஒரு பாதி சத்யா மூவிஸ்ஸில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன் படப்பிடிப்பும், இன்னொரு பாதியில் மோகன் ப்ரொடக்‌ஷன்ஸ்ஸின் தங்க கோபுரம் படப்பிடிப்பும் நடந்தது. நான் தாத்தாவுடன் தினமும் படப்பிடிப்புக்கு செல்வேன். அப்படி சென்று கொண்டிருந்த கால கட்டத்தில் தான் ஓவியர் பரணியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்ப்பட்டது. சத்யா மூவிஸ் எதிரே மாடியில் பரணியின் வீடு இருந்தது. ஓவியர் பரணி அப்போது பெரிய ஸ்டார். பரணியை குறித்து இப்போது சிலருக்கு தெரிந்திருக்கும், சிலருக்கு தெரிந்திருக்காது. தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் இருந்து வந்தவர். ஆரம்பத்தில், அவர் கஷ்டப்பட்ட காலத்தில் அவருக்கு உதவியவர் SPB, அவருக்கு நெருக்கமானாவர். பேசும் படம் பத்திரிக்கையில் layout artist`ஆக வேலைப்பார்த்தவர். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, பரணி செய்த பக்கங்கள் வித்தியாசமாக சிறப்பாக இருந்தது. அப்படி இருந்தவர் சினிமா விளம்பர டிஸைனராக மாறினார். அதற்கு தக்க சமயத்தில் உதவியவர் சந்திர பாபு, பரணியை எல்.வி.பிராசத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். எல்.வி.பிரசாத்துக்காக இருவர் உள்ளமோ இரு மலர்களோ(???) முதல் படம் செய்தார். அந்த படத்திற்கு விளம்பர டிஸைனுக்காகவே பெரிய முக்கியத்துவம் கிடைத்தது. அதன் பிறகு கிட்ட தட்ட ஸ்ரீதரின் அனைத்து படங்களுக்கும் பரணி விளம்பர டிஸைன் செய்தார். ஸ்ரீதரின் படங்களுக்கு ஒரு மிக முக்கியமான தோற்றத்தை கொடுத்தது அவருடைய போஸ்டர் டிஸைன்.

ஆந்திராவில் இருந்து வந்ததால், தெலுங்கு எழுத்து சுழிப்புகள் போன்ற தன்மையை தமிழ் லிபிக்கு பாப்புலர் ஆர்ட்டில் கொடுத்ததில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. பாபு என்ற பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆந்திராவில் இருக்கிறார். அவருடைய சித்திரங்கள், ஓவிய பாணி ஆந்திராவை 50-60 வருடம் தாங்கி பிடித்திருந்தது, முக்கியமான இயக்குனர், பல படங்களை எடுத்துள்ளார். அவருடைய தாக்கமும் பரணியிடம் இருந்தது. G.H.ராவ், பக்தா, கே. மாதவன் அவர்களின் பாணியிலிருந்து மாறி வேறொரு தளத்திற்கு சென்றவர் பரணி.

தாத்தா மூலம் பரணியின் அறிமுகம் கிடைத்தது. ஓவிய கல்லூரி சேர்வதற்காக விண்ணப்பங்கள் அனுப்பி விட்டு காத்துக்கொண்டிருந்த நேரம் அது. அவர் போஸ்டர் டிஸைன் செய்வதை பார்த்த போது பெரிய excitment எனக்குள் இருந்தது. தாத்தாவுடன் தொடர்ந்து ஸ்டுடியோ செல்லும் போது பரணி அவர்களின் மாடிக்கு சென்றுவிடுவேன். அவர்கள் செய்வதை கவனிப்பேன். ஒரு நாள் என்னிடம் பேசுகையில் திண்டுக்கலில் இருந்து ஒரு பையன் என்னை தேடி வந்தான், certificate எல்லாம் கொண்டு வர சொல்லியிருக்கேன். வந்தவுடன் ஓவிய கல்லூரியில் அவனை சேர்த்துவிட வேண்டும் என்று சொன்னார். அவர் யார் என்றால் எஸ்.பாண்டியன், கடந்த 15-20 ஆண்டுகளாக பல முக்கியமான படங்களுக்கு போஸ்டர் டிஸைன் செய்தவர். பாரதிராஜாவின் நிழல்கள் படத்திற்க்கு போஸ்டர் டிஸைனர் செய்தவர். பாண்டியன் ஓவிய கல்லூரியில் என்னுடைய கல்லூரி தோழனாக வந்தார். அவரின் உடன் பிறந்த சகோதரர் நடிகர் சந்திரசேகர். (பாண்டியன்) சுந்தரபாண்டியனும் நானும் ஒன்றாக படித்தோம், பரணி வீட்டில் தான் முதன் முதலில் சந்தித்தோம். பரணி வீட்டில் தங்கி ஓவிய கல்லூரிக்கு செல்வான் பாண்டியன். நான் என்னுடைய தாத்தா வீட்டில் இருந்து ஓவியக் கல்லூரிக்கு செல்வேன்.

பரணி bachelor`ஆக இருந்த சமயத்தில் அவரது வீடு bachelor`கலைஞர்களின் சொர்க்கமாக இருந்தது. ஓவியர்கள் மற்ற கலைஞர்கள் என அவருடைய நட்பு வட்டம் மிக பெரியது. வந்தவர்களுக்கெல்லாம் உணவு இருக்கும். அப்படியொரு அற்புதமான மாமனிதர் அவர். இளம் வயதில் ஓவியக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது, ஆனால் அது நடக்கவில்லை. படங்களெல்லாம் குறைந்த பின்பு தினமும் ஓவிய கல்லூரி வந்துவிடுவார். ஓவிய கல்லூரி ஆசிரியர்கள் நட்பு மூலம் தனது நாளை கல்லூரியில் செலவழித்தார், அது அவருக்கு பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

ஸ்ரீதரின் படங்களுக்கு பிறகு பாலசந்திரனின் படங்களுக்கு பரணியின் போஸ்டர் விளம்பரங்கள் மிக பெரிய முகமாக செயல்பட்டது. பாலசந்தரின் மற்ற இயக்குனர்களை போல் அல்லாமால் வேறு மாதிரி படம் எடுக்கிறார் என்பதை முதலில் அறிவிப்பதே பரணியின் போஸ்டராக இருந்தது. அவருடைய போஸ்டர், படத்தை இன்னொரு உயரத்திக்கு கொண்டு சென்றது என சொல்லலாம். மக்களை திரையரங்கிற்கு அழைத்து வர பரணியின் போஸ்டர் பெரிய பங்களித்தது. வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் ஒரு ஊமை ஓவியராக ஒரு காட்சியில் நடித்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவர் படம் ஒன்றையும் இயக்கினார். அவரால் சிறப்பான இடத்தை அடைந்த ஓவியக்கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். பல ஓவியர்களுக்கு பின்புலமாக இருந்து உதவியிருக்கிறார். முக்கியமான கால கட்டத்தில் வெளி நாடு செல்ல இருந்தவர்களுக்கு தானே பணம் கொடுத்து உதவியுள்ளார். பலருக்கு உதவிய அற்புதமான கலைஞர். அவர் செய்த போஸ்டர்களை யாராவது காப்பாற்றி வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. யாரேனும் அதை காப்பாற்றி சேமித்து வைத்திருந்தால் அது பெரிய விஷயம். தமிழ் சினிமாவை சார்ந்த பல சங்கங்கள் எது எதற்க்காகவோ போராடுபவர்கள் சரித்திரத்தை காப்பாற்ற ஏதும் செய்யவில்லை. போஸ்டர்களின் நகலும் நம்மிடம் இல்லை. பதிவு செய்யப்படாமல் போய்விட்டோம், அற்புதமான முக்கியமான மறக்கப்பட்ட கலைஞர்களில் அவரும் ஒருவர்.

என்னுடன் கல்லூரியில் படித்தவர் V.கலை. மணிவண்ணன் அவர்களின் நிறைய திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர். நான், சுந்தரபாண்டியன், கலை எல்லோரும் ஒன்றாக ஓவியக் கல்லூரியில் பயின்றவர்கள். கலை ஒரு 80 படங்களுக்கு மேல் கலை இயக்குனராக பணியாற்றியவர். கலை இயக்குனர்களில் முக்கியமானவர். கலை இயக்குனர் சங்கத்தின் உபதலைவராக இருப்பவர். கலையின் தந்தை வேலுச்சாமி. தங்கப்பதுமை படத்தில் இருந்த பெரிய அம்மன் சிலையை செய்தவர் அவர்தான். அது போல் தமிழ் சினிமாவில் 35-40 ஆண்டுகள் பல சிறந்த சிலைகளை செய்துள்ளார். இளம் வயதில் புதுவை கிராமத்திலிருந்து சென்னை புரசைவாக்கத்திற்கு, களி மண்ணில் கைவினை தொழில் செய்யும் குயவர்களாக குடியேறினர். நல்ல பொம்மைகள் செய்வதில் தேர்ச்சி பெற்றவராக அவரும் அவரின் சகோதரரும் இருந்தனர். விஜயா-வாஹினி ஸ்டுடியோக்கள் பெரியளவில் வந்தபின்பு, ஸ்டுடியோ ஊழியராக சேர்ந்தார்கள். விஜயா-வாஹினியின் முக்கியமான moulder'ஆக விளங்கினார். முன்னின்று பல வேலைகள் செய்தார். பின்னர் வெளியே வந்து சொந்தமாக வெங்கடேஸ்வரா toy workers நிறுவனத்தை துவங்கி, தமிழ் சினிமாவிற்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்தவர் வேலுச்சாமி.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் இந்த துறையில் வேலைப்பார்பவர்களில் 100-150 பேர்கள் அவரின் வழி தோன்றல்தான். அவர்கள் எல்லாருமே அவரிடம் தொழில் கற்றவர்கள். தேவர் படமாயிருந்தாலும் சரி, ஏ.பி.நாகராஜன் படமாக இருந்தாலும் சரி, அதில் வரும் மண்டபமோ, கோவிலோ, எல்லா வகையான சிற்பங்களையும் செய்தவர். திருப்பதியை செட் போட வேண்டுமானால், திருப்பதி கோவிலுக்கு சென்று எல்லாவற்றையும் அளந்து தத்துரபமாக துள்ளியமாக வடிவமைப்பவர். என்.டி.ராமா ராவ்வின் அனைத்து முக்கியமான படங்களிலும் இவரின் பங்களிப்பு இருந்தது. பெரும்பாலான தமிழ், தெலுங்கு, கன்னட வரலாற்று படங்களில் இவரின் பங்களிப்பு இருந்தது. கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

கல்லூரி முடிந்த பின் நானும் சுந்தர பாண்டியனும் மாலையில் சில நேரங்களில் கலை வீட்டுக்கு செல்வது உண்டு. கலையின் அப்பாவின் பார்வையில் ஒரு 30-40 பேர் வேலை செய்துக்கொண்டே இருப்பார்கள். சிற்பங்கள் சினிமாவிற்காக செய்துக்கொண்டே இருப்பார்கள். மிக busy`யான ஸ்டுடியோ. 60-70 களில் மிகவும் முக்கியமான ஒரு ஸ்டுடியோ. கே மாதவன் அவருக்கு மிகவும் பரிச்சயமானவர். அவர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்துதிருந்தால் அவரிடம் கலையை படிக்க அனுப்பினார். கே மாதவன் அவர்களின் அசல் ஓவியங்களை பார்க்க கலை மூலம் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நான் அவரை பார்க்க போகும் போது, நான் படிக்கும் புத்தகத்தை வாங்கி பார்ப்பார். எப்போதும் இயங்கி கொண்டே இருந்த சிற்பி அவர். அவரின் இறுதி மூன்று ஆண்டுகளில் கை முடக்குவலியால் பாதிக்கப்பட்டிருந்தார், அப்படியிருந்த நிலையிலும் தனக்கு முன் கொஞ்சம் கள்ளி மண்ணை வைத்து எதாவது செய்து கொண்டே இருந்தார். அவருடைய பங்களிப்பு மிக பெரியது. தமிழ் சினிமாவின் பின்புலமே வேலுச்சாமி தான். தென்னிந்திய சினிமாவில் வேலுச்சாமி நிறைந்திருக்கிற பகுதி மிக அதிகம்.

நான் சொன்ன இந்த மூன்று பேரும், ஒருவர் ஒளிப்பதிவாளராக, tricks shot செய்பவராக அவரின் பங்களிப்பை சிறப்பாக செய்தார். ஒருவர் விளம்பர போஸ்டர் டிஸைனராக வெற்றியுடன் வளம் வந்தவர். ஒருவர் moulding துறையில் சிறந்து விளங்கியவர்.

கேமரா பின்பிருந்து இயங்கிய W.R.சுப்பாராவ், கேமராவுக்கு முன்பிருந்து இயங்கிய வேலுச்சாமி, இந்த இரண்டு படைப்பையும் வெளியே கொண்டு வந்து மக்களுக்கு காண்பிக்க இணைக்கிற கலைஞரான பரணி. இது போல் இன்னும் பல கலைஞர்கள் தமிழ் சினிமாவில் இருந்தார்கள், இருக்கிறார்கள். நடிகர் / நடிகையர்கள் அல்லாமல் பின்னால் பணி செய்த பலரைக் குறித்து பதிவுகள் வெளி வராத சுழல் இன்றும் இருக்கிறது.