புரொபெசர் ஹானிபல்

‘புரொபெசர் ஹானிபல்’ (1956) திரைப்பட மேதை ஜோல்த்தான் ஃபாப்ரி (Zoltan Fabri) இயக்கிய ஹங்கேரியத் திரைப்படம். கதா நாயகன் பெலா ந்யூல் இளகிய மனம் கொண்ட வெகுளி. லத்தீன் மொழி கற்பிக்கும் பள்ளி ஆசிரியர். பண்டைய ரோமானிய அரசின் அசுர படை பலத்தை எதிர்த்து நின்ற சரித்திர நாயகன் ஹானிபல்லின் தீவிர ரசிகர். புரொபெசர் ஹானிபல் என்றே அழைக்கப்படுகிறார். அன்பான மனைவியும் மூன்று பெண் குழைந்தைகளுமாக புரொபெசர் ஹானிபலின் குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

ஹானிபல் பற்றி அவர் எழுதும் கட்டுரை பெரிய அளவில் பேசப்படுகிறது. வழக்கமான சரித்திர முடிவை மாற்றி, கார்த்தேஜில் நிகழ்ந்த புரட்சியில் ஹானிபல் வீரமரணம் அடைந்ததாக எழுதியிருக்கிறார். அனைவரும் பாராட்டுகின்றனர். கல்வித்துறையில் மிக உயர்ந்த நிலையை அடையும் வாய்ப்பு அவரை வந்தடைந்திருப்பதாக வாழ்த்துகின்றனர். பத்திரிகையாளன் ஒருவன் அவரைப் பேட்டி காண்கிறான். ஹானிபலை உயர்வாக வெளிப்படுத்திய மகிழ்ச்சியில் மனது நிறைந்தவராக இரவு உறங்கப்போகிறார்.

காலையில் பள்ளிக்கு உற்சாகமாகச் செல்பவரை வழியில் காண்பவர் வெறுப்புடன் ஒதுங்குகின்றனர். ஹங்கேரிய அரசுக்கு எதிராக புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில் ஹானிபல் பற்றிய கட்டுரை எழுதப்பட்டிருப்பதாகச் செய்தித் தாளில் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய புரட்சியாளர்களுடன் தொடர்பு உள்ளதா என அவரிடம் விசாரணை நடத்தும் பள்ளி நிர்வாகம், புரொபெசர் ஹானிபலை பணி நீக்கம் செய்கிறது. தேசத் துரோகியென அவர் பெயர் சுவர்களில் எழுதப்படுகிறது. ஒரே இரவில் நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது. பயந்து மனம் கலங்குபவர் ஊரின் தலைவர் நிலையிலிருக்கும், பள்ளிக்காலத் தோழனிடம் உதவி கேட்கச் செல்கிறார்.

மறு நாள் பாசிச அரசு சார்பாக நடைபெறும் கூட்டம். ஊரார் பெருமளவில் கூடியிருக்கின்றனர். புரொபெசர் ஹானிபலைத் தேசத் துரொகியென ஆத்திரமுடன் கற்களை எறிந்து கொல்ல முயலுகின்றனர். பாசிஸ்டுகளின் பிரதிநிதியாகத் தலைமை தாங்கும் பள்ளி நண்பர் தலையிட்டு அவர் பதிலளிக்க அனுமதி அளிக்கிறார். குழந்தைகளையும் குடும்பத்தையும் நினைவில் வைத்துப் பேசச் சொல்கிறார். ஹானிபலைப் பற்றி எழுதியவற்றை மறுத்து பாசிச அரசை வாழ்த்தி புரொபசர் ஹானிபல் பேசுகிறார். மக்கள் பாராட்டி ஆரவாரத்துடன் உயரமான இடத்தில் நின்றுகொண்டிருக்கும் அவரை நெருங்கிவருகின்றனர். தயக்கத்துடன் பின்னே நகர்கிறார். தவறி மேலிருந்து அவர் கீழே விழுந்து பரிதாபமாக மரணத்தைச் சந்திப்பதுடன் திரைப்படம் முடிகிறது.
’புரொபெசர் ஹானிபல்’ ஹங்கேரிய அரசியல் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்ட திரைப்படம். அங்கு நிகழ்ந்த அரசியல் மாற்றங்களைச் சற்று பார்க்கலாம். முதல் உலகப் போருக்குப் பின் பொருளாதார நிலை சீர்குலைந்திருந்த ஹங்கேரியும், பிற ஐரோப்பிய நாடுகளும் கள்ளச் சந்தை, விலையேற்றம், நிலையில்லாத ஆட்சி போன்ற பல குழப்பங்களில் சிக்கியிருந்தன, ஜெர்மனியிலும் இத்தாலியிலும் ஹிட்லர், முசோலினி போன்ற பாஸிஸ்டுகள் கட்டுப்பாடுகளை உறுதியாக அமல் படுத்தும் ஆட்சி வேண்டுமென விரும்பிய மக்களால் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். ரஷ்யாவில் இடது சாரிகளின் ஆட்சி ஓங்கியிருந்தது.

பல நூறு ஆண்டுகளாக மன்னராட்சி நிலவி வந்த ஹங்கேரியில் பாசிசக் கொள்கைகள் மக்கள் ஆதரவைப்பெற, பாசிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்த ஆட்சிக் காலம் இடதுசாரிகளுக்கும் இடதுசாரிகளாகச் சந்தேகிக்கப்பட்டவர்களுக்கும் நரகமாக ஆனது. அடுத்து இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஜெர்மனிய நாஜிப்படையினரின் ஆக்கிரமிப்பில் ஹங்கேரிய மக்கள் தாங்கொண்ணாத் துயரங்களை அனுபவித்தனர். போருக்குப் பின் 1948 இலிருந்து 1984 வரை ரஷ்ய அரசின் உதவியுடன் நிறுவப்பட்ட கம்யூனிச ஆட்சி தொடர்ந்தது. தற்போது ஜனநாயக முறை குடியரசு ஆட்சி நடைபெறுகிறது.

’புரொபெசர் ஹானிபல்’ ’white terror’ எனக் குறிப்பிடப்டப்படும் பாசிஸ்டு ஆட்சிக் கால ஹங்கேரியில் நிகழும் கதை. சிரிப்புப் படம் போல இலகுவாகத் துவங்கி படிப்படியாக இறுக்கமான நிலையை அடைகிறது. பயந்த சுபாவமும் வெள்ளை உள்ளமும் கொண்ட பெலா ந்யூல் என்ற புரொபெசர் ஹானிபல் பாத்திரம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. புரொப்ஸர் ஹானிபல் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஒரு பக்கமிருக்க, மறுபுறம் எப்போதும் போல மகிழ்ச்சியுடனிருக்கும் குழந்தைகள் , வீடு என நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ள கதை.

புரொபசர் ஹானிபல் அந்த ஊரில் அனைவராலும் விரும்பப்படுபவர். பள்ளியில் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் நிர்வாகம் பெருமையுடன் வைத்திருந்த பரிசுப்பொருளான பதப்படுத்தப்பட்ட மயிலை அழியாது காப்பாற்றி நிர்வாகத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதிலும், வகுப்பறையில் அவரைக் கீழே விழச்செய்து கேலி செய்யும் மாணவர்களைத் தண்டிக்காது சிரித்து மகிழச் செய்வதிலும் எப்போதும் மற்றவரை மகிழ்விக்க முயலும் கள்ளமற்ற உள்ளத்தைக் கொண்டவராக அவரைக் காண்கிறோம்.

அவர் எழுதிய ஹானிபல் கட்டுரை பற்றி வெளிவரும் பத்திரிகைச் செய்தி அவர் வாழ்க்கையைக் குலைத்துவிடுகிறது. புரட்சியை உருவாக்கும் கோணத்தில் கட்டுரை அமைந்திருப்பதாக பத்திரிகை எழுதிவிடுகிறது. அரசிலைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை என அவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும். பத்திரிகை சொல்வதையே பள்ளி நிர்வாகத்திலிருந்து அரசியல் தலைவர் வரை அனைவரும் வேதவாக்காக எடுத்துக் கொள்கின்றனர்.
எந்தத் தவறும் செய்யாத, நிர்மலமான உள்ளம் கொண்ட ஒரு எளிய குடிமகன் அரசின் அசுர அதிகார பலத்தை சந்திக்கச் சக்தியற்றவனாக ஆகிவிடுகிறான். மக்களும் தலைவர்களும் நாட்டுப்பற்றைப் பற்றி உணர்ச்சி மிகும் பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருக்கும் காலத்தில் கட்டுரையில் எழுதப்படும் ‘புரட்சி’ என்ற வார்த்தை பெலா ந்யூலைத் தேசத் துரோகியாக ஆக்கி விடுகிறது.

அதிகரத்தின் வன்முறையையும் ஆட்டு மந்தைகள் போல மக்கள் தலைவர்களின் பின் அடிமைகளாகச் சென்றுகொண்டிருந்ததையும் இயக்குநர் ஜோல்த்தான் ஃபாப்ரி இப்படத்தில் வெளிக்கொணருகிறார் வலதுசாரி பாசிஸ்ட் அரசு மட்டுமல்லாது இடது சாரி அரசும் ஹங்கேரியில் பிரச்சினைகள் உருவாகக் காரணமாக இருந்தது. 1948 இலிருந்து ரஷ்ய உதவியுடன் ஹங்கேரியை ஆண்ட கம்யூனிஸ்ட் அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக 1956 இல் உருவான மக்கள் எழுச்சியை கம்யூனிச அரசு இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது.

ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர். அவ்வெழுச்சியில் பங்கு கொண்ட ஜோல்த்தான் ஃபாப்ரியின் Korhinta ('Merry-Go-Round'’ 1955) படக் கதாநாயகன் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார். 1956 எழுச்சி நசுக்கப்பட்ட விதமும், முந்தைய பாசிச அரசு மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளும் இயக்குநர் ஃபாப்ரியை அதிகமாகப் பாதித்திருந்தன. அவற்றை நினைவுறுத்தும் உருவகங்ளையும் குறியீடுகளையும் கொண்டதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. தொடர்ந்து அவர் உருவாக்கிய திரைப்படங்களிலும் இந்நிகழ்வுகளின் பாதிப்பைக் காணலாம்.

கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகள் மீண்டும் நிகழாமலிருக்க சரித்திரம் சரியாகப் பதிவு செய்யப்பட்டு மறுவாசிப்பு செய்யப்படுதல் அவசியம். ஆவணப் படங்கள், வெகுஜனத் திரைப்படங்கள் மூலம் தமது நாட்டின் கடந்த கசப்பான சரித்திர நிகழ்வுகளைத் திரைப்படங்களாகப் பல நாடுகளில் பதிவு செய்துள்ளனர். உலகப் போர்களும், உள்நாட்டுப் போர்களும், மக்கள் எழுச்சிகளும் திரைப்படங்களாக வெளி வந்துள்ளன. ஆனால் உலகிலேயே அதிக திரைப்படங்களைத் தயரிக்கும் நாடுகளில் ஒன்றான நமது நாட்டில் இத்தகைய படைப்புகளைக் காண்பது அரிது.

’அரசியல் திரைப்படங்கள்’ என்பது நம் தமிழ்த் திரையுலகில் அருகியிருக்கும் ஒரு பகுப்பு (genre). அனல் கக்கும் அரசியல் வசனங்களைப் பேசுவதால் ஒரு திரைப்படம் அரசியல் படைப்பாக ஆகிவிடாது. ஜோல்தான் ஃபாப்ரியின் திரைப்படங்கள் மனிதம், அரசியல், அதிகாரம். ஆகியவற்றை நுட்பமான காட்சிப் படிமங்களைக் கொண்டு வெளிப்படுத்துபவை; என்றும் மறக்க முடியாத அளவு பார்ப்பவரின் மனதை ஆழமாகப் பாதிப்பவை.

ஃபாப்ரியின் முக்கிய படைப்பான ‘ஐந்தாவது முத்திரை’ (Fifth Seal) பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்