இந்திய சினிமா வரலாறு – 1

உற்சாகமான துவக்கம்

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன், பூனாவிற்கு 100 மைல் தொலைவில் ஒரு சின்னஞ்சிறு ஊரில், ஆசாரமான ஹிந்து குடும்பத்தை சேர்ந்த ஒருவர், தன் புரோகிதத் தொழிலை கைவிட்டு, மனைவியின் ஆபரணங்களை விற்று.., முதல் இந்தைய திரைப்படத்தை தயாரித்தார். அந்த மனிதரே பிரபலமாக தாதா ஸாஹேப் பால்கே (Dada Saheb Phalke) என அழைக்கப்பட்ட துந்திராஜ் கோபிந்த் பால்கே (Dhundiraj Gonind Phalke)- நடந்த இடம் நாஸிக் – திரைப்படத்தின் பெயர் – ராஜா ஹரிச்சந்திர (1913) (Raja Harichandra). உண்மைக்காக தன் ராஜ்யம், மனைவி, சொத்து எல்லாவற்றையும் இழந்த ஒரு பேரரசனை பற்றிய நான்கு ரீல் கொண்ட மெளன திரைப்படம் (ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் விளக்கவுரை அட்டைகள் இடையிடையே இருந்தன) “சுவதேசி பிலிம்” என்ற நெடு நாள் கனவு அன்று நினைவு ஆயிற்று. இந்திய சினிமாவின் நீண்ட பயணக் கதை இப்படியாகத்தான் தொடங்கியது... பால்கேயின் திரைப்படம் ஒரு விபத்து அல்ல. ஒரு பெரும் மேதாவியும் அவருக்கு முன்னே பல மேன்மையான முன்னோடிகளும் பல ஆண்டுகளாக செயல்படுத்திய நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளை நோக்கி செல்லுவோம். அப்பொழுதே ‘சினிமா’ என்ற நாம் அறிந்த விந்தையைப் பற்றி சில வியக்கத் தகுந்த விடைகள் கிட்டும்.
சினிமாவிற்கு முந்தைய காலம்:

பாடல்களுடனும், கவிதைகளுடனும், வரைபடங்கள் கொண்டு கதை, சொல்வது தொன்மைவாய்ந்த இந்திய மரபு பாட் பெயின்டிங்க்ஸ் வரைப் படங்களுடன் (Pat paintings) நேர்முக நாடகங்கள் கூடிய கதைக்கூற்று வங்காளம், ஒரிசா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் பிரபலமாக இருந்தன. சுவர்கள் மீதோ, நூல் சுருள்கள் மீதோ படங்கள் வரையப்பட்டிருக்கும்,. சூத்ரகாரி கதை சொல்லிய வண்ணம் படங்களை சுட்டிக்காட்டியபடி வருவான். தேவர்கள், தெய்வங்கள் பற்றிய வழக்கமான கதைகளும், மரபு வழி இதிகாசங்களும், ஆடல் இசையுடன் மலரும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இக்கலைஞர்களில் பலர் பிழைப்பைத்தேடி நகரங்களை வந்தடைந்தனர். இதற்கு முன் அவர்கள் செய்து வந்த பாட் பெயிண்டிங்க் முறையில், கதை சொல்லும் பாணியை சற்று வேறுபடுத்தி பெரும்பான்மையோரை வந்தடையச் செய்தனர். உயிர்ப்புத் திறமற்ற இந்த முறையிலும் பல பாதிப்புக்கள் ஏற்பட்டன. முன்பு மனித ஆற்றலை நம்பி இருந்தபோது இந்த ஓவியங்களில் இருந்த தங்குதடையற்ற இயக்கம் இப்பொழுது காணாமல் போயிற்று.

1840லிருந்தே இந்தியர்களிடையே நிழற்படக் கலை பழக்கத்திலிருந்தது. இதற்கு ஒரு வருடம் முன்புதான் பாரிஸில் இக்கலை அறிமுகப்படுத்தப்பட்டது. பாட் பெயிண்டிங்க் முறைக்கும், கம்பெனி ஸ்கூல் பெயிண்டிங் முறைக்கும் (Company school painting) இக்கலையினால் மாறுபட்ட வடிவம் தரப்பட்டது. முந்தைய பாணியில் ஆழத்தைவிட மேற்பரப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள் அரசு தர்பார்களில் உள்ளன. அதை கவனிக்கையில் வரையப்பட்ட பொருள் மேல் எழுந்தவாரியாக நம்மை சிறைப்படுத்தும். அவற்றில் எந்தவிதமான சலனமோ, ஆழமோ இருக்காது. தூரப் பரிமாணக் கோடுகளின் செயல்பாடு (perspectival force) அமுக்கப்பட்டு அல்லது முற்றிலும் விலக்கப்பட்டு இருக்கும். கம்பெனி முறை ஓவியமோ- பிரதானமாக ஒரு நுகர்பொருள் சில வித்தியாசங்கள் இருப்பினும், ஆங்கிலேயரின் கண்ணோட்டத்தில் அது ஒன்றை மட்டுமே குறித்தது.- ஆங்கிலேய தேவைக்கேற்ப தங்களை ஒன்றைச் செய்ய துடிக்கும் இந்திய ஓவியர்கள், இதனாலயே ஓவியத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் பொருள், உடை, அலங்காரம், வாகனம், கோயில், சம்பிரதாயம் எல்லாமே ஆங்கிலேயரை கவரக் கூடிய வகையிலேயே அமைக்கப்பெற்றிருக்கும். இவர்கள் தீட்டிய இந்திய இயற்கைக் காட்சி ஓவியங்களுக்கு பிரிட்டிஷ்காரர்களிடையே ஏகமான வரவேற்பு இருந்தது. ஆங்கிலேயர் விரும்பிய அந்த “இந்தியத் தனத்தை” அழிவில்லாமல் பாதுகாக்கும் முறையில் நம்முடைய ஓவியர்கள் அவர்கள் தீட்டிய படங்களிலோ, அல்லது அவை தீட்டப்பட்ட முறையிலோ எந்த வித தனித்தன்மையையும் தலைதூக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் அச்சு வார்த்தார் போல் ஒரே மாதிரியான பல ஓவியங்களின் களஞ்சியமே உருவாகியது. வெளிநாட்டு மானியத்தினால் ஏற்பட்ட இக்களஞ்சியத்தினால் பின்னால் பல விதமான உபயோகங்கள் இருந்தன. ஆங்கிலேயர்களையும் இந்திய குடிமக்களையும் நையாண்டி செய்ய, உள்நாட்டு நாண்மரபு வழக்கங்களை உருவாக்க, மற்றும் சில முற்கால புராண- இலக்கிய பாணி படைப்புகளைமுன் வைக்க.

மாய விளக்கு – ஸம்பரிக் கரோலிகா
(Sambharik kharolika)

ஒரு காட்சி வில்லையின் மூலம் திரையின் மீது ஒளியை ஏவச் செய்யும் கருவியே மாய விளக்கு (Magic Lantern). 1700ல் மேற்கத்திய நாடுகளில் மேசை மீது வைக்கக்கூடிய மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டது. வட்டமான தகடின் மீது காட்சிவில்லைகள் பதிக்கப்பட்டிருக்கும். அது சுழலும் பொழுது ஒரு எண்ணை விளக்கின் மூலம் ஒளி ஏவப்படும். 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தக் கருவி மிக பிரபலமாக இருந்தது. அதுவரையில் இருந்ததிலிருந்து உலகம் ஒரு பெறும் மாறுதலுக்கு தயாராகிக் கொண்டிருந்ததையே இது சுட்டிக்காட்டுகின்றது. புனிதத்தன்மை பெற்ற முறையிலிருந்து சமய கட்பாடற்ற முறைக்கு நிகழ்ந்த அகற்சி – இன்னமும் தெய்வீகக் காப்புடன் படைக்கப்படும் கலைப்பொருளில் கூட வெளியுலகத்தின் நோக்கு இருக்கவேண்டும் என்ற கருத்தை ஐரோப்பிய நாடுகளில் கலை – இலக்கிய மறுமலர்ச்சி (Renaissance) அறிமுகப்படுத்தியது. அதற்கான வழிமுறைகளும், மரபுகளும் இந்த இயலுருத் தோற்றத்தை (perspective) மனதில் கொண்டே வகுக்கப்பட்டன.

மாய விளக்கை இந்திய நாட்டிற்கு கொண்டுவந்த முன்னோடிகள் கல்யாணைச் சேர்ந்த பட்வர்தன் சகோதரர்கள் (Patwardhan) பம்பாய், பூனா, கோலாபூர் சுற்றுப்புறங்களில் கடந்த நூற்றாண்டின் இறுதியில் இவர்கள் மாய விளக்கு காட்சிகள் காட்டினார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவர்கள் கருவியிலும் ஒரு மரவட்ட சட்டத்தில் கண்ணாடி காட்சி வில்லைகள் பொறுத்தப்பட்டிருந்தன. இவ்வில்லைகளில் அழகாக வரையப்பட்ட கையோவியங்கள் இருந்தன. ஒளியை ஏவ நடுவில் ஒரு பழங்கால எண்ணை விளக்கு இருந்தது. ராமாயண, மஹாபாரதத்திலிருந்து உட்கதை, காட்சிகள் சுழல அதற்கு ஏற்ப அக்குடும்ப பெண்கள் பின்னணிப் பாடல் இசைப்பார்கள். காட்சிகளின் இடையே சர்க்கஸ் கோமாளிகள் வேடிக்கை காட்டுவார்கள். மேற்கு, மத்திய இந்தியாவில் நெடுந்தூரம் பயணித்து ராஜகுடும்பங்களுக்கும், பிரிட்டிஷ்காரர்களுக்கும் மாய விளக்கு காட்சிகளை இச்சகோதரர்கள் காட்டியதாக, இக்குடும்பத்தின் இன்றைய தலைமுறையினர் சொல்கின்றனர். 1910 வரையில் அவர் ஊரின் சுற்றுப்புறங்களில் கூட இக்காட்சிகளை காட்டினார்களாம்.

நகரும் படிவங்கள்- மாயத்தோற்றம்

அசையும் புகைப்பட பிம்பங்களை செல்லுலாய்ட் ஃபிலிமில் பதிவு செய்யும் முறைக்கு பெயர் தான் ஒளிப்பதிவு: (Cinemotography). 1839ல் தாகெர்ரினாலும், நீப்ஸ்ஸேவினாலும் (Daguerre & Niepee) கண்டுபிடிக்கப்பட்டதே நிழற்படக்கலை. இதற்கு முன்பே, ரோஜே, ப்லேதொ (Roget, Plateu)போன்றவர்களால் காட்சி காக்கும் திறன் (persistence of vision) என்ற கருத்து அறிமுகப்படுத்தப் பட்டது. தொடர்நிலை சித்திரங்களின் திரையிடல் 1870லிருந்து 1880வரையிலான சலனப் புகைப்பட முயற்சிகளுக்கு இட்டுச் சென்றன. 1889ல் எடிஸனும், டிக்ஸனும் திரைப்பட காமராவை கண்டுபிடித்தனர். சிறு துவாரத்தின் மூலம் பார்க்கக்கூடிய பிலிம் சுருள்களும் எடிஸனுக்கு சொந்தமான ‘ப்ளாக் மரியா’ (Black maria) படப்பிடிப்பு கூடத்தில் தயாரிக்கப்பட்டது. டிஸம்பர் மாதம் 1895ல், பாரிஸில் முதல் திரைப்படம் காட்டப்பட்டது. லூமியர் சகோதரர்களால் (Lumiere Brothers).

இந்த நூற்றாண்டின் அற்புதம்:

உலகமெங்கும் திரைப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட அதே வேளையில் இந்தியாவிலும் சினிமா அடியெடுத்து வைத்தது. 1896ல், ஜீலை 7ஆம் தேதி லூமியர் சகோதரர்களின் பிரதிநிதிகள் பம்பாயிலுள்ள வாட்ஸன் ஹோட்டலில் முதல் திரைப்படக் காட்சியை காட்டினார்கள். (இப்பொழுது அங்கு கப்பல் படைக்கான கட்டிடம் உள்ளது) “டைம்ஸ் ஆப் இந்தியா” என்ற பத்திரிக்கையில் இதற்கான விளம்பரம் கூறியது.-
நூற்றாண்டின் அற்புதம்,
உலகின் அதிசயம்
இயற்கை வடிவளவில்,
உயிருள்ள நிழற்படக் காட்சி-

லூமியர் சகோதரர்களின் ஒளிப்பதிவில் அறிவிக்கப்பட்ட படத்தலைப்புகளில் பின்வருவன இடம்பெற்றிருந்தன.
1. ஒளிப்பதிவின் வரவு (Entry of cinematography)
2. புகைவண்டியின் வருகை (Arrival of a Train)
3. கடலில் குளியல் (The sea Bath)
4. தகர்ப்பு (The Demolition)
5. தொழிற்சாலை விட்டு வருதல் (Leaving the Factory)
6. சக்கரங்களில் பெண்களும் படைவீரர்களும் (Ladies & Soldiers on Wheels)

ஆறு, ஏழு, ஒன்பது, பத்து மணிக்காட்சிகள் இருந்தன. நுழைவுக்கட்டணம் ரூபாய் ஒன்று. இதனால் ஈர்க்கப்பட்டு வந்த பார்வையாளர்களில் ஹரிஸ்சந்திரா சாகாரம் பட்வடேகரும் (Harischandra Sakharam Bhatvadekar) ஒருவர். அவர் கென்னடி பாலம் அருகில் நிழற்படம் சம்பந்தப்பட்ட கடை வைத்திருந்தார். அவர் லூமியரின் ஒளிப்பதிவுக் கருவியால் கவரப்பட்டார். அது காமிராவில் பதிவு செய்தல், படச்சுருளை புத்துருவாக்குதல், ஒளிபரப்புதல் ஆகிய மூன்று வேலைகளையும் செய்யக்கூடியக் கருவி. இக்கருவியை இந்தியாவில் விற்பனை செய்ய கூடிய உரிமையை அவர் வாங்கினார். இக் கருவியை பழகிக் கொள்வதற்காக பட்வடேகர் சில காட்சிகளை ஒளிப்பதிவுச் செய்து சரித்தரம் படைத்தார். பட்வடேகர் (பரவலாக இவர் ஸாவே தாதா என அழைக்கப்பட்டார்) தான் இதனால் இந்திய சரித்திரத்தின் முதல் திரைப்பட்த்தை உருவாக்கினார். இத்திரைப்படம் திட்டமிட்டு இயற்றப்பட்டது அல்ல. தற்செயலாகவே நடந்தது. இருந்தும் பிற்காலத்தில் திறமை வாய்ந்த திரைப்பட இயக்குனராக ஆனார் என்பதில் ஐயமில்லை. அவர் இயற்றிய பல படங்கள் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. அதில் மிக முக்கியமானது 1901ஆம் ஆண்டு டிஸம்பரில் அவர் தொகுத்தளித்த ‘சண்டைக்கார்ர் பரன்ஜ்பேயின் திரும்புகை’ (Return of wrangler paranjpe). இதுவே இந்தியாவின் முதல் செய்திப்படம். இதற்குள் அவர் ஒரு ப்ரொஜக்டர் வாங்கியதால் திறந்த வெளியில் நிறைய திரைப்படக் காட்சிகளை காட்டி வந்தார். 1903ல் ஏழாம் எட்வர்டின் முடிசூட்டு விழாவை கொண்டாடிய இந்திய தர்பாரை ஏக கோலாகலத்துடன் படம் பிடித்து காட்டினார். அவர் முன்னோடியாக இருந்ததினால் சினிமா சம்பந்தப்பட்ட பிலிம் சுருள்கள், ப்ரொஜக்டர் போன்ற பொருட்கள் ஐரோப்பிய, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி ஆகின. அன்றைக்கு இருந்த உலக திரைப்பட கலைஞர்களைப் போல் பட்வடேகர் உலக திறமைவாய்ந்த ஒளிப்பதிவாளர்.- வெளியிட்டாளராக இருந்தார்.

உயிருள்ள பொழுது போக்கும் டப்பாவில் வரும் பொழுதுபோக்கும்

அன்றைய அளவில் பொழுதுபோக்கு என்பதற்கு கூத்து, நாடகம் போன்ற பொதுக் காட்சிகளே இருந்தன. ஒருவகையில் பார்வையாளர்களிடையே இதற்கு இந்த நேரடி வரவேற்பு அலாதிதான். டெண்ட் கொட்டகையோ, திறந்த வெளியோ, சபாவோ, மிகப்பெரிய அரங்கமோ,...... எதுவாக இருப்பினும் நடிப்பவனுக்கும், பார்ப்பவனுக்கும் நேரடியான தொடர்பு ஒன்று இருக்கும். கம்பனி நாடகங்கள் ஆக்கிரமித்து கொண்டிருந்த அந்த இடங்களுக்கு இப்பொழுது ஒரு புது எதிரி வந்திருக்கான். தகரடப்பாவில் அடைக்கப்பட்ட பொழுதுபோக்கான அவன் இப்பொழுது பூரணமாக ஜெயித்துவிட்டான். சினிமா, நாடகம், நடனம், மாயாஜாலம், கூத்து என்று எல்லா நாட்டுப்புறக் கலைகளும் சினிமாவால் ஓரம் தள்ளப்பட்டன. கல்கத்தாவில் கிளாஸிக் நாடக குழுவினரின் நாடகங்களை ஹீராலால் சென் (Hiralal Sen) என்பவர் படம் பிடித்தார். இதைபோன்ற பல படங்கள் நாடகங்களில் இடையேயும், அவை கொண்டு செல்ல முடியாத குக்கிராமங்களிலும் திரையிடப்பட்டன. ஏராளமான பேருக்கு, எவ்வளவு முறை வேண்டுமானாலும் திரையிட்டுக் காட்டக்கூடிய இந்த புது பொழுது போக்கு சாதனம், கலைவிற்பன்னர்களை வெகுவாக ஈர்த்தது. இருப்பினும், இதற்காக தனிப்பட்ட அரங்கங்கள் அமைக்க அவர்கள் தயங்கினர். அந்த மாற்றம் மிக ஜாக்கிரதையாக மெதுவாகவே நடந்தது. அதனாலயே இந்த நூற்றாண்டின் முதல்பகுதியில் கூத்தின் இடையே தான் சினிமா திரையிடப்பட்டது. எதற்கு அதிக வரவேற்பு இருந்ததோ, அதற்கேற்ப காட்சிகள் மாற்றப்படும். உதாரணத்திற்கு சினிமாவை மக்கள் காண விரும்பவில்லையெனில், புகழ்பெற்ற, நடனமணியோ, பாடகியோ அந்த நேரத்தில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இது சமயத்திற்கு ஏற்ப மாறலாம். அந்த காலத்தில் வெளியிடப்பட்ட பல விளம்பரங்களில் நாம் இந்த கலப்படமான பொழுதுபோக்கை காணலாம். நாட்கள் உருண்டோட, சினிமா அதிக பிரபலமானது. மற்ற கலைகள் எல்லாம் பின்தங்கின. இதனால் சினிமாவின் பலம் மேலும் அதிகமாயிற்று.

பயணக்கூத்தாடி (Travelling Showman)

ஒளிப்பதிவாளர் – வெளியீட்டாளர், போதுமான அளவு பிலிம் சுருள்களுடன் ஊர் ஊராகச் சென்று தன் படங்களை திரையிட்டார். தோட்டங்கள், புறம்போக்கு நிலங்கள், கிராமங்கள், நகரங்கள் என்று பயணித்தால் டூரிங்க் டாக்கீஸ் (Touring Talkies) என்ற புது பொழுதுபோக்கு சாதனம் உருவாகி இன்று வரையில் நிலைத்துள்ளது.

கல்கத்தா மைதானத்தில் ஒரு கூடாரம் அமைத்து “பயாஸ்கோப்”திரையரங்கம் அமைத்தார் ஜம்ஷெட்ஜீ ப்ரம்ஜீ மதன் என்பவர் (Jamshetji Framji Madan). இது அவரின் துவக்கம். பின்னால் இதுவே மிக பெரிய பிலிம் தயாரிக்கும், வெளியிடும் கம்பனியாக வளர்ந்தது. இந்தியா, பர்மா, சிலோன், ஆகிய மூன்று நாடுகளின் சினிமாத் தொழில் முப்பது வருடங்களுக்கு இக்கம்பெனியின் கையில் இருந்தது. மகனுக்கு அடுத்தபடியாக இத்துறையில் இருந்த பெரும்புள்ளி அப்துலாலி இஸீபெலி (Abdulally Essofally) (1884- 1957) என்பவர். இவரும் பயாஸ்கோபில் துவங்கியவரே. பிற்காலத்தில் அவர் பம்பாயில் வாழ்ந்தார். அங்கு அவருக்கு அலெக்ஸாண்டரா திரையரங்கம் இருந்தது. அதைத் தவிர இந்தியாவின் முதல் பேசும் படத்தை திரையிட்ட மெஜெஸ்டிக் திரையரங்கமும் அவருடையதே.

இந்த நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களில் சினிமா சந்தை உலகமெங்கும் இருந்ததுபோல் தான் இங்கும் இருந்தது. பிரான்சின் பதே (Pathe) என்ற சினிமா கம்பெனியும்; அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகளின் கம்பெனிகளும் இந்தியாவில் இடம்பிடிக்கப் போட்டி போட்டனர். அப்பொழுது இந்தியாவிற்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அந்த அதிசயத்தை தந்த மனிதர் குலவழக்கப்படி ஒரு புரோகிதராக ஆகியிருக்கவேண்டியவர் இந்திய சினிமாவின் தலைவிதியை நிர்ணயித்த அவர் – தாதா ஸாஹேப் பால்கே.
- தொடரும் -

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, பி.கே. நாயர் அவர்களின் கட்டுரைகளை பேசாமொழி இதழில் மறுபிரசுரம் செய்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.