உயிர் கொடுக்கும் கலை 10 - டிராட்ஸ்கி மருது

1990'களில் இருந்து அனிமேஷன் பெரு நிறுவனங்களை சார்ந்தே இருந்து வந்தது. விரைவில் பணம் ஈட்டும் எண்ணத்திலேயே இந்நிறுவனங்கள் இத்துறைக்குள் நுழைந்தவை என்றும் சொல்ல முடியும். நிறுவனத்தின் நிறுவனருக்கோ அல்லது தலைமை பொறுப்பிலுள்ளவர்க்கோ கலை/ஓவியம் குறித்து எந்த ஒரு தெளிவும் இல்லை. அவர்களுக்கு அனிமேஷன், போட்டோகிராபி போன்றவற்றில் ஈடுபாடோ அல்லது கலை வெளிப்பாடோ துளியுமில்லை. ஆசியாவில் ஒரு பெரிய தொழில் வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தினாலே இங்கு அவர்கள் கடை விரித்தனர். கலைஞர்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் அவர்கள் கொடுக்கவில்லை. கலைஞர்கள் பெரிதாக வளர வாய்ப்பில்லை. சுயாதீனமாக செயல்ப்பட்ட கலைஞர்களும் பெருநிறுவனங்களை சார்ந்தே இருக்க வேண்டியிருந்தது. அவர்களிடம் மட்டுமே விலை உயர்ந்த தொழில்நுட்ப கருவிகள் இருந்தது. ஃபிலிமிற்கு மாற்ற வேண்டுமென்றாலும் அவர்களை நாடியே செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அமெரிக்க முதலாளிகளுக்கு இவர்கள் ஒரு தரகர்களாகவே செயல்பட்டனர்.

ஒரு காலகட்டத்திற்குப்பின் தமிழகத்தில் பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லாததால், இத்துறையில் வளர்ந்து வந்த கலைஞர்கள் பெங்களூரூ, ஹைதராபாத், மும்பை என வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். டிஜிட்டல் புரட்சி இப்போது பல வாய்ப்புகளை எளிமையாக கொடுக்கிறது. பெருநிறுவனங்களை சார்ந்து இருக்க தேவையில்லை. சுயாதீனமாக நல்ல படைப்புகளை உருவாக்கலாம். சென்னையில் இருந்து படமெடுக்க வேண்டும் என்றில்லை, தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம். அதற்கான சாத்தியங்கள் இப்போது உண்டு. சிறிய டிஜிட்டல் கேமரா, சிறந்த மென்பொருள்கள் இப்போது எளிதாக கிடைக்கிறது. தமிழ் மெயின்ஸ்ட்ரீம் திரைப்படங்களிலும் அனிமேஷன் சார்ந்த காட்சிகள் இப்போது சிறிய அளவில் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. முழு படமென்றில்லாமல், சிறிய காட்சிகளை அனிமேஷன் மூலம் காட்சிப்படுத்த துவங்கியுள்ளனர்.

கண்காட்சிகளுக்கு என்று ஓவியம் வரைவது, சுயாதீனமாக ஓவியம் வரைவது, பத்திரிக்கைகளுக்கு ஓவியம் வரைவது என நான் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பவன். பத்திரிக்கைக்கு ஓவியம் வரையும் முழு நேர ஓவியனாகவும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை, அப்படி செயல்படவுமில்லை. கணினி வந்தபின் ஒரு பகுதி ஓவியர்கள் அனிமேஷன் தொழிநுட்பத்திற்க்குள் வந்தனர். அவர்கள் குறித்து பொதுவெளியில் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. கதை/கட்டுரை'களுக்கு இதழ்களில் ஓவியம் வரைவது (Illustrator) தரக்குறைவானதென நவீன ஓவியம் வரையும் ஒரு பகுதி ஓவியர்கள் ஒரு காலத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர். சில ஆண்டுகளுக்கு பிறகு, இப்படி வரைவதால் பிரபலமாக முடிகிறது என்ற காரணத்தினால் அவர்களும் இதை செய்ய ஆரம்பித்தனர். ஈடுபாட்டோடோ அல்லது பிரியத்தோடோ அவர்கள் அதில் செயலாற்றவில்லை. இப்படியான பொது தளத்தில் எப்படி இயங்குவது என நினைக்காமல், என்ன மாதிரியான சோதனைகளை செய்யலாம் என்கிற ரீதியில் சிந்திக்காமல், பிரபலமாகலாம் என்ற ஒரே எண்ணத்துடனே அவர்கள் செயல்பட்டனர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இயங்கிய அப்படிப்பட்ட சிலர், தங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் அதை தொடராமல் விட்டுவிட்டார்கள். நவீன ஓவியம் என்ற போர்வையில் திறமையே இல்லாத ஒரு கூட்டம் தாயாராகியது. அரூபமாக வரைகிறேன் என்று சொல்லிக்கொண்டு, கடும் பயிற்சியற்ற தகுதியே இல்லாத ஒரு கூட்டம் உருவாகியது.

எப்போதும் போல அனிமேஷன் துறையில் இயங்கும் கலைஞர்கள், கடந்த பதினைந்து, பதினெட்டு வருடங்களில் இத்துறையில் வேலை செய்யும் ஒருவன் சுறுசுறுப்பாக காலையிலிருந்து மாலை வரை கடுமையாக பணி செய்ய வேண்டும். அதற்கான ஊதியமும் அவருக்கு கிடைத்துவிடும். கடுமையாக வேலை செய்யும் பட்சத்தில் தானாகவே திறமை வந்துவிடும். ஏனோ தானோ என்று வேலை செய்ய முடியாது, இத்துறையில் மிகச் சரியாகத்தான் வேலை செய்ய வேண்டும். தவறு செய்தால், அதை சரி செய்துவிட வேண்டும். தவறாக செய்து இத்துறையில் தப்பிக்க இயலாது. இப்படியாக கடும் பயிற்சி அனிமேட்டர்களுக்கு கிடைத்தது. அனிமேஷன் துறையில் பின்நாட்களில் ஏற்பட்ட சூழ்நிலையால், தமிழகத்திலிருந்து வெளியே சென்றவர்களுக்கு நல்ல வேலை கிடைத்தது. எட்டு முதல் பத்து மணிவரை தொடர்ந்து கவனத்துடன் இயங்குவதற்கான வெளி அவர்களுக்கு இருந்தது. அந்த உழைப்பிற்கான சம்பளமும் கிடைக்க ஆரம்பித்த பிறகு, ஒரு பத்தாண்டுகளில் தமிழ் நாட்டில் தரமான அனிமேஷன் துறை கலைஞர்கள் வந்துவிட்டார்கள். திறமையில்லாத நவீன ஓவிய கூட்டத்திற்கு இவர்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே கருதுகிறேன்.

மிக திறமையுடனும், திடமான பார்வையுடனும், நவீன கலை வடிமான அனிமேஷன் துறையில் தங்களை சேர்த்துக் கொண்டவர்கள் ஒரு பகுதி இருந்தனர். நான் நேரடியாகவே இதுவரை 50 நபர்களுக்கு மேல் பயிற்சி அளித்திருக்கிறேன். என்னை தேடி வந்த சில இளைஞர்களை குறிப்பிட்டு சொல்ல முடியும். இருபது வருடங்களுக்கு முன்னரே, அனிமேஷன் மீது ஆர்வம் கொண்ட ஓவிய கல்லூரி மாணவர்கள், அனிமேஷன் குறித்து எனக்கிருந்த ஈடுப்பாடு குறித்தும் என்னைப் பற்றியும் கேள்விப்பட்டு என்னை தேடி வந்து என்னுடன் தொடர்பில் இருந்தனர். இப்போது நடு வயதில் இருக்க கூடிய, தொடர்ந்து இயங்கிய சிறந்த அனிமேட்டர்ஸ் அதில் அடங்குவர். ஓவிய கல்லூரியில் படிக்கும் போதே என்ன்னுடன் இருந்தவர் வெங்கி. அவரை தவிர்த்து நேரடியாக என்னிடம் பயிற்சி பெற்றவர், என் சகோதரர் போஸ் மருது. இவர்கள் இருவர் அல்லாமல் கண்ணன், ஜானகிராமன், அமர்நாத், வேந்தன், கருணாநிதி, கோட்டீஸ்வரன், விவேகானந்தன், தினேஷ் போன்றவர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளேன். சென்னை மற்றும் கும்பகோணம் ஓவிய கல்லூரியிலிருந்து மாணவர்கள் நேரடியாக ப்ராஜக்ட்டுக்காக என்னிடம் ஒவ்வொரு வருடமும் வந்தவர்கள், கடந்த பதினைந்து ஆண்டுகளாக என்னுடன் மூன்று அல்லது நான்கு மாதம் இருந்து பயிற்சி பெற்றவர்களும் இதில் அடங்குவர். சில நேரம் நான் பணியாற்றிய திரைப்படங்களில் என்னோடு சேர்ந்து இயங்கும் படி வைத்துக் கொள்வேன். பின்பு அவர்கள் திரைத்துறையில் க்ராபிக்ஸ், அனிமேஷன் துறையில் ஈடுபடும் நிலைக்கு வந்தனர். பெயர் சொல்லும் படியான முப்பது சிறந்த அனுமேஷன் கலைஞர்கள் இப்போது தமிழகத்தில் இருக்கின்றனர்.

பொதுவெளியில் அறியப்பட்ட இளைஞர்கள் சிலரின் திறமை பாராட்டதக்க அளவில் இருக்கிறது. அவர்களுக்கு எப்படி வரைவது என்று தெரிகிறது, ஓவியம்/கலை சார்ந்த கல்வி பின்புலத்துடன் அனிமேஷன் மூலம் ஒரு விஷயத்தை சொல்வதற்கும் தெரிந்திருக்கிறது. சினிமா, டிஜிட்டல் ஊடகம், வரையும் திறன் என இவை முழுவதும் அறிந்த சில சிறந்த கலைஞர்களை பார்க்கிறேன். பத்திரிக்கைகளில் பங்கெடுப்பதன் மூலம் பொதுவெளியிலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். சமீபத்தில் அப்படி பார்த்த இளம் ஓவியர்கள், பால முருகன், செந்தில், பாலா என சிலர் பெயர் சொல்லும் அளவில் பொதுவெளியில் தெரிய ஆரம்பித்துவிட்டனர். பொதுவெளியில் தெரியாமல், அதே திறமையுடன் அனிமேஷன் சார்ந்த நிறுவனங்களிலும் சிலர் பணிபுரிகின்றனர். அனிமேஷன் துறையை தாண்டியும் மக்கள் முன் வரவேண்டும் என ஒரு பகுதி கலைஞர்கள் இருக்கின்றனர். இவர்கள் மூவர், பெயர் சொல்லும் அளவிற்கு தெரிகிறது. இளம் ஓவியக் கலைஞர்களிடம் நான் தொடர்ந்து சுய பதிப்பு குறித்து சொல்லி வருகிறேன், கதையை எழுதுவதற்கான சக்தி ஒன்று, கதையை காண்பிப்பதற்கான சக்தி ஒன்று, கதையை நடத்தி காண்பிபதற்கான சக்தி இன்னொன்று, எழுத்தை நம்ப வேண்டிய நிலையல்லாமல் கதையை காட்சிகள் மூலம் புத்தகங்களாக பதிப்பிக்கலாம். உலக சினிமா, விளையாட்டு மென்பொருள், காமிக் புத்தகங்கள் என அனைத்தும் புரிந்த மாதிரியான கலைஞர்கள் இப்போது உள்ளனர். எனக்கிருந்த தனிமையை போக்கும் படியாக, கிட்டத்தட்ட இருபது கலைஞர்கள் தமிழ்நாட்டில் வந்துவிட்டார்கள். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான ஒரு செய்தி.

வசனங்களால் கதை சொல்லும் பாணியே தமிழ் சினிமாவில் பெரும்பாலும் உள்ளது. நான் குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், அவர்கள் பணிபுரியும் இயக்குனர்கள், இந்த பகுதியில் உள்ளவர்களை தெரிந்தவர்களாக இருக்கும் இளம் கலைஞர்கள் சேர்ந்து ஸ்டோரி போர்ட் செய்து ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும். முக்கியமான காட்சிகளுக்கு ஸ்டோரி போர்ட் இருந்தால் காட்சி ரீதியாக அதை நன்றாக படமாக்க முடியும். ஸ்டோரி போர்டின் முக்கியத்துவத்தை உணர்ந்த கலைஞர்களின் நட்பில் அவர்களுடன் சேர்ந்து வளர்ந்த இயக்குநர்களுக்கும் இப்போது ஸ்டோரி போர்ட்டின் முக்கியத்துவம் புரிந்துள்ளது. முழு திரைப்படத்திற்கும் ஸ்டோரி போர்ட் செய்யவில்லையென்றாலும், முக்கியமான காட்சிகளுக்கு ஸ்டோரி போர்ட் இருந்தால் சிறப்பாக காட்சிப்படுத்தலாம். சமீபத்தில் பார்த்த சில படங்களில் சிறு பகுதிகளாக இது இருக்கின்றது. தமிழ் சினிமாவில் இது ஒரு நல்ல அறிகுறி. "INFINITE ANIMATION STUDIO" என்ற பெயரில் திறமையான இளம் அனிமேட்டர்ஸ் ஆறு பேர் என்னுடனே சேர்ந்து இயங்குகிறார்கள். ஓரளவு தற்போது இருக்கிற சில பெரிய நிறுவனங்களும் இப்படியான சில கலைஞர்களை நம்பியே பிழைத்திருக்கிறது. வெறும் மில் கூலி போல் அல்லாமல் தனக்கான தனித்த திறமையுடன் வளர்ந்திருக்கிறார்கள். இவர்களின் பணியை பார்க்கும் போது, தமிழ் சார்ந்து உலக பார்வையாளர்களை சென்றடைய வேண்டிய வெளி தற்போது ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன். இருபது ஆண்டுகளாக வளருவது போல் இருந்த பட்டுப்போன அனிமேஷன் துறை இப்போது மீண்டும் புத்துணர்ச்சி அடைகிறது. சினிமா, கிராபிக்ஸை மட்டும் நம்பாமல் டிஜிட்டல் சினிமாவாகவும் மாறிவிட்டதாலே, 5டி போன்ற சிறிய கேமராக்களில் திரைப்படம் உருவாக்கலாம் என்ற நிலை வந்தவுடனே சுயாதீன அனிமேட்டர்ஸ், படத்தொகுப்பளர்கள் என அடுத்த தலைமுறை பலமான காட்சியறிவுடன் வந்துவிட்டனர். தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு போவதற்கு பிரமாதமான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இளம் அனிமேட்டர்ஸின் வெற்றி, அவர்களுக்கு கிடைத்த பயிற்சி, அவர்களின் திறமை, அவர்கள் இப்போது கொண்டு வந்து காட்டும் படிமங்கள் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. என்னை பெரிதும் உற்சாகப்படுத்துகிறது. அந்த மாணவர்களின் வேலையையும், அடுத்தடுத்து என்னெவெல்லாம் செய்வார்கள் என்று பார்ப்பதற்கும் மிக ஆவலாக இருக்கிறேன்.