இலங்கை திரைப்பட இயக்குநர் - பிரசன்ன விதானகே

சினிமா தொடர்பாக வெளிவந்த சில சிற்றிதழ்களில் இருந்து முக்கியமான கட்டுரைகளை பேசாமொழி அவ்வப்போது மறுபிரசுரம் செய்து வருகிறது. பெரும்பாலும், தொடர்புடைய ஆரிசியர்களிடம் அனுமதி பெற்றே மறு பிரசுரம் செய்யப்படுகிறது. ஆசிரியர் உள்ளிட்ட எந்த பொறுப்பாளர்களையும் தொடர்பு கொள்ள முடியாத சூழலில் அதன் பயன் கருதி, கட்டுரைகள் மறுபிரசுரம் செய்யப்படுகிறது. தொடர்புடைய யாராவது ஆட்சேபம் தெரிவித்தால், கட்டுரைகள் நீக்கப்படும்.

விஷ்வாமித்ரனை ஆசிரியாக கொண்டு வெளிவந்த செவ்வகம் பத்திரிகையில் வெளிவந்த சில கட்டுரைகள், அடுத்தடுத்து பேசாமொழியில் மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

நன்றி,
பேசாமொழி.

இருபடங்கள் : ஒளிரும் கலைமானுடம்

இருப்பில் (சற்றும் எதிர்பாராத) அகண்ட வெளிச்சம் பாய்வது போல ஒரு காலையில் எனது நண்பர் தொலைபேசியில் “இலங்கைத் திரைப்பட இயக்குநர் பிரசன்னா விதானகே சென்னை வந்திருக்கிறார் . சந்திக்கிறீர்களா? “ எனக்கேட்டார். சில வினாடிகள் நான் பேச்சற்று நின்றிருந்தேன். உணர்வடங்கி தூங்கின ஒரு கனவுப் பொழுதில் தொட்டுப் பார்த்து ரசித்த கல்சிற்பத்தை நேரில் காண்பதாயிருந்தது அந்த நிலை.

சினிமா சார்ந்த கலையுணர்வும் வாழ்வனுபவமும் ஆழப் பிளவுண்டிருக்கும் தமிழ்ச்சூழலை எண்ணி சோர்வடையும் படி, பல கணங்கள் என்னை நீள்மூச்சோடு கடந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் கண்கட்டும் இருளில் கால்பிசகி விழுந்து எழுந்த திடுக்கிடலுக்கு ஒப்பானது. அந்த திடுக்கிடலில் உழன்றுகொண்டிருந்த எனக்கு பிரசன்னா விதானகேயை சந்திக்கும் சந்தர்ப்பம் தமிழ் சாராத வேறொரு அர்ப்பணிப்பிலான உலகத்தை பரிட்சயப்படுத்தும் என்று தோன்றியது. மேலும், ஒரு புரட்சிக்குணம் மிக்க படைப்பாளரை எனது வாழ்வில் முதன்முதலாக சந்திக்கப் போகிறேன். என்கிற உணர்வு என்னை மன ஊனம் அகன்று மகிழ்ச்சி உறவாடும் நபராய் எண்ணவைத்தது.
பிரசன்னா விதானகேயினது திரைப்படங்களை எட்டு வருடங்களாக நான் அறிவேன். பார்க்க வாய்த்தவை இரண்டு படங்கள்தான் என்றாலும், அவற்றின் தீவிரத் தன்மையிலிருந்தும் பிரசன்னா குறித்து நான் தேடி வாசித்த பக்கங்களிலிருந்தும் தன்னியல்பாக என் மனதில் ஓர் உயரிக ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். அவர் ‘படைப்பென்பது சமூகத்திற்கானது’ என்பதிலும், ‘சமூக மாற்றத்திற்கானது’ என்பதிலும் பலத்த நம்பிக்கை உடையவர் பிரசன்னா. இலங்கையில் இருபது வருடங்களுக்கும் மேலாக தீவிரம் காட்டிவரும் இன உரிமைப் போர் சார்ந்த திரைப்படச் சித்தரிப்புக்களில், போர் குறித்த அவரது சார்புநிலை கொள்ளாத சமன்பார்வை, அச்சம் கொள்ளாத விமர்சனப் பாங்கு மற்றும் போரை எதிர்த்து மனிதநேயம் பிரவாகிக்கும் அவரது சிந்தனையோட்டம் என்னை அதிரவைக்கிறது. ஒரு கலைஞனாக தனது இருப்பை உணர்வை வாழ்வை முழுமையடையச் செய்து கொண்டிருப்பவர் பிரசன்னா.

1997-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவின் போதுதான் பிரசன்னா விதானகே என்கிற படைப்பாளரின் பெயரை முதன்முதலாக அறிந்துகொள்ள நேர்ந்தது. அப்பொழுது திரையிடப்பட்ட அவரது படம் ஒரு முழுநிலவு நாளின் போதான மரணம். (Death on a full Monday) படத்தின் புதியதன்மையின் நுண்ணுணர்வால் வெகுவாக ஆகர்ஷிக்கப்பட்டிருந்தேன். அப்படத்தில் தோன்றும் கண்பார்வையிழந்த முதியவரான வன்னிஹாமினது (போருக்குச் சென்றிருக்கும் தனது மகனைப் பிரிந்திருக்கும்) துயரம் எனக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. ஒரு போர், அதில் இரு சாரார் உரிமை மேற்கொள்வதன் பின்னணியில் இயல்பை அணிந்துகொண்ட வன்முறை , அதன் ரத்தம் சொட்டும் வெற்றி தோல்விகளில் தனிமனித பலியீடு, அந்த பலியீட்டைப் பிந்தொடர்ந்து ஏங்கி நடக்கும் அன்பும் வாழ்வுநேயமும் அப்படத்தில், பெரும்பாலைவனத்தில் அடர்ந்து திரளும் காற்றின் ஓய்வற்ற ஓலமாக அலைந்த வண்ணமிருந்தது. ஒரு திரைப்படத்தின் மனோவீர்யத்தை கண்டு நானதிர்ந்த சில அரசியல் படங்களில் இப்படமும் முதன்மையான ஒன்று.

படத்தின் ஒரு குறிப்பிட்ட, முதியவர் வன்னிஹாமீன் மகன் ‘போரில் இறந்துவிட்டான்’ என்கிற ராணுவச் செய்தியோடு மகனது ‘உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி’ அவரை வந்தடையும், ஆனால் வன்னிஹாமிஅதை நம்புவதாக இல்லை, மகன் ‘விரைவில் வீடு திரும்புகிறேன்’ என்று எழுதியிருக்கும். கடிதம் அவருக்கு அவன் உயிருடந்தான் இருக்கின்றான் என்கிற நம்பிக்கையளித்துக் கொண்டிருக்கிறது. ராணுவத்தினர் அவனது ‘உடல்’ இருக்கும்க் சவப்பெட்டியை சீல் வைத்துப் பூட்டியிருக்கிறார்கள். திறந்து பார்க்கும் உரிமையும் மறுக்கப்பட்டிருக்கிறது. பின்பு தகனம் நடைபெறுகிறது. அவனது உயிரிழப்பிற்கான நஷ்ட ஈட்டுத் தொகையும் வன்னிஹாமியிடம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் வன்னிஹாமி அந்தப் பணத்தை வாங்க மறுக்கிறார். மகன் உயிரோடுதான் உள்ளான் என்கிற நம்பிக்கை இன்னும் அவருள்ளத்தில் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. தனது சந்தேகத்தால் உந்தப்படும் மனவெழுச்சியால் புதைக்கப்பட்டுவிடும் சவப்பெட்டியை வன்னிஹாமி தோண்டியெடுக்கப்பட்டு திறக்கப்படுகிறது. உள்ளே சடலத்திற்கு பதிலாக இருப்பது ஒரு வெட்டுண்ட மரத்தக்கையும் ஒரு பெரும் கல்லும் இக்காட்சியில் ஆதிக்க அரசியலின் நேர்மைகளும், உரிமைகோரும் குரலின் பின்னணியில் மக்களுக்கு பரிசளிக்கும் துரோகங்களும் திரைமுழுக்க பல்லிளிக்கின்றன. –அப்பொழுது அந்த மயானச் சூழலில் நிலவும் சில கணங்களுக்கான, அமைதி இக்காட்சி தந்த மனவலி இந்நாள்வரை என்னுள் நீடித்துக்கொண்டிருக்கிறது. அரசியலும், சமூகமும் தனிமனித வாழ்வும் பெரும் விரிசல் கண்டு கண்காணாத துருவங்களாகிவிட்டதை இத்தனை அறிந்துணர்வோடும், ஆழ்ந்த பார்வையோடும் வெளிப்படுத்த சமூக அன்பில் பிறப்பெடுத்த ஒரு கலைஞனுக்கு மாத்திரமே வாய்க்கும், அப்பிறப்பின் ஒற்றைவழியில் பிரசன்னா நேயம் ததும்ப பயணித்துக் கொண்டிருக்கிறார்.

நான் அதிஅதிர்வுற்ற இந்தக் காட்சியை முன்வைத்துதான் இப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்டது. ராணுவத்தின் ‘மதிப்பை’ குலைப்பதாகவும், அவதூறு செய்வதாகவும் கூறி தேசியத் திரைப்படக் கழகமும், அவ்வமைப்பிற்கு அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவரும் சேர்ந்து தடையை வலியுறுத்தினர். தான் வாழும் சமூகத்தின் மீதான விமர்சனத்தை இருட்டடிப்பு செய்யமுயலும் இந்தக் காரணிகளுக்கு எதிராக பிரசன்னாவும் ‘மனித உரிமைக்கு எதிரான வன்முறை’ சார்ந்த வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக தனது படைப்பு வாழ்வின் அரிதான ஒரு வருடத்தை நீதிமன்றத்திற்கு அலைவதில் செலவிட்டார்.

இறுதியில் ஆகஸ்ட் 2ஆம் தேதி பிரசன்னா வழக்கில் வெற்றி பெற்றார். படத்தை தடைசெய்ததன் காரணமாக தேசியத் திரைப்படக் கழகம் நஷ்ட ஈட்டுத்தொகையாக ரூபாய் ஐந்து லட்சமும், அமைச்சர் ரூபாய் ஐம்பதாயிரமும் அபராதமாக செலுத்தவேண்டுமென நீதிமன்றம் ஆணையிட்டது. அவ்வருடத்தின் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் படத்தை இலங்கையில் வெளியிட தேசியத் திரைப்படக் கழகம் தாமதம் செய்தால், தாமதிக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் நஷ்ட தொகை ரூபாய் ஒரு லட்சம் செலுத்த வேண்டும், எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இதனிடையில் முழுநிலவு நாளின்போதான மரணம் உலகளாவிய வரவேற்பை எட்டியிருந்தது. அமீன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதைப் பெற்றிருந்தது. வழக்குப் பிரச்சினைகளின் மத்தியில், இலங்கையில் நடைபெற்ற ‘சரசவியா’ திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. கடந்த ஐம்பது வருட இலங்கை சினிமா வரலாற்றில் ஏகோபித்த வரவேற்பையும் வெற்றியையும் ஈட்டித்தந்த படமாக விமர்சகர்களால் பேசப்பட்டது.

2
2003-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் (IFFI) காத்திரமும் சுவாரசியமும் அற்ற படங்களே அதிகம் திரையிடப்பட்டன. பொதுவாக அரசியல் ரீதியான படங்கள் இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்பதில்லை. அமெரிக்க, ஐரோப்பிய அழுக்குகளே நிறைய இடம்பெறும். அரசியல் படங்களில் ஈடுபாடுமிக்க பார்வையாளன் என்கிற ரீதியிலும் மிகவும் சோர்வடைந்திருந்தேன். இருப்பினும் பிரசன்னாவின் ஆகஸ்ட்மாத சூரியன் படம் திரையிடப் படவிருந்தது. விழாவிற்காக டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட போதே அப்படம் காணவேண்டிய முக்கியத்துவம் போதே அப்படம் காணவேண்டிய முக்கியத்துவம் என்னை வளையமிட்டருந்தது. உடன் வந்த நண்பர்களிடமும் அப்படத்தை தவறாமல் காணும்படி கவனப்படுத்திக்கொண்டிருந்தேன். ஒரு முழுநிலவு நாளின் போதான மரணம் படத்தின் தேர்ந்த சொல்களனும் காட்சியாடலின் யதார்த்தப் பாங்கும் தந்த வெகுண்ட தாக்கமே ஆகஸ்ட் மாத சூரியன் படம் குறித்த எனது திடமான நம்பிக்கைக்கு விதையிட்டிருந்தது.

நினைத்தபடியே ஆகஸ்ட் மாத சூரியன் படம்பார்த்த திரைப்பட விழாவின் இறுதி நாட்களைத் தொடப்போகும் ஒரு மாலை வேளையில் செயலற்றுப் போன நிலைக்கு உள்ளானேன். படத்தின் அனைத்து எண்ண சக்திகளும் என்னை தாக்கியிருந்தன. இந்தத் திரைப்பட விழாவிற்கு ‘இந்த ஒரு படம் போதுமானது.’ என்ற அவதானிப்பும் துணைக்கு வந்து அமர்ந்துகொண்டது. படம் மூன்று கதைத் தொடர்களை உள்ளடக்கியது. ஒன்று: சமேரி என்கிற பெண் தனது காதலன் போராளிகளால் கடத்தப்பட்டு விட்டதாக எண்ணி அவனை உயிருடன் மீட்கப் பயணிப்பது.

இரண்டாவது : விடுமுறைக்கு ஊர் திரும்பும் ராணுவ இளைஞனொருவன் தனது தங்கையை விபச்சார விடுதியில் சந்திப்பது.

மூன்றாவது : முஸ்லீம் மக்கள் போராளிகளால் வெளியேற்றப்படும் குறிப்பிட்ட நாளொன்றில் அராஃபத் என்கிற இஸ்லாமியரின் கிராம வெளியேற்றத்தை அடியொற்றியது. இம்மூன்றும் இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களில் நடைபெறுகின்றது. சமீபகால இலங்கை குறித்த துல்லியமான வரைபடம் நம்முன் விரிகிறது. சமேரியும், இராணுவ இளைஞனும் யதார்த்தத்தை அடியொற்றிய புனைவுகள் அராஃபத்தின் வாழ்வியல் சித்தரிப்பு உண்மைச் சம்பவத்தின் மறு பிரதிபலிப்பு. இந்த அராஃபத் கதாபாத்திர நடிகரை மக்கள் மத்தியில் தேடி இரண்டு வருடங்களை செலவிட்டிருக்கிறார் பிரசன்னா. அதன்பொருட்டு, சோவியத் சினிமாவின் தந்தையருள் ஒருவராக மதிக்கப்படும் லேவ் குலேஷோவினுடைய பாணியில், திரைப்பயிற்சிப் பட்டறைகளை போரால் பாதிப்படைந்த மக்களிடம் அகதிகளிடமும் நட்த்தியிருக்கிறார். இம்மாதிரியாக ஒரு திரைப்பட உருவாக்கத்திற்கான முன் பணிகள் ஆகஸ்ட் மாத சூரியன் படத்திற்கு கடைபிடிக்கப்பட்டது.- இலங்கைத் திரைப்பட வரலாற்றில் இதுவே முதல்முறை.

பின்பு, முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட கிராமத்திற்கே சென்று அவ்வேதனையில் ஆட்பட்ட மக்களையே தாம் அனுபவித்த துயரை நடிக்கச் செய்திருக்கிறார். இந்த அணுகுமுறையே அவருக்கு குற்ற உணர்வை கூட அளித்திருக்கிறது. தனிமனித துயர கலை தனது சிந்தனை செழிப்பிற்காக பயன்படுத்திக்கொள்கிறதோ என்ற மனவிசாரணையும். அவருள் எழுந்திருக்கிறது. இவ்வெண்ணத்தை பிரசன்னாவின் ‘எனது சுய முரண்கள்’ (my own contradictions) எனது கட்டுரையில் வாசித்திருக்கிறேன். படைப்பாளனை போலவே பார்வையாளனுக்கும் இது ஒரு முக்கியமான பிரச்சனை . ஒரு பார்வையாளனது நிலையிலேயே எனக்கும் இவ்வெண்ணம் எழுந்திருக்கிறது. அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தனிமனிதன் மீது அடரும் துயரம் ஒரு கலைப்படைப்பாக மாறுவது அதைக் காணும் பார்வையாளன். அத்துக்கத்தினை உணர்வதும். வருந்துவதும் மாத்திரமே போதுமானதா எனும் கேள்வி – அப்படியென்றால் படைப்பு என்பது மக்களது துயரத்தை, வலியை விற்கும் ஒரு சாதனமா என்பது சார்ந்த மன அவசம் தலைப்பட்டிருக்கின்றன.

இப்பிரச்சினையின் உள்சென்று நாம் பார்க்கக் கூடுமாயின், கலைஞன் தனது காலத்தினை பதுவுசெய்யும் கடப்பாடு உள்ளவன் என்கிற தன்னிலை விளக்கத்தோடே இயங்குகிறான். ஒடு விதத்தில் அவனால் சொல்லமுடிகிறதெல்லாம் அவற்றை பதிவு செய்வது மாத்திரமே, காலகாலமாக நிகழும் வன்முறை குறித்த பதிவுகள் அனைத்துமே தனது ஆத்மாவின் கதியில் எதிர்காலத்தில் நிகழ சாத்தியமான வன்முறையை எதிர்ப்பதாகவே மறைமுகமாக செயல்படுகின்றன. ஒருவேளை இவ்வுலகின் அனத்துக் காலத்திலும் வன்முறையற்ற வாழ்வும் மனிதன் கற்றுக்கொள்ளவேண்டிய பேரன்பும் நினைவு பாழடைந்த கனவாகவே மாறக்கூடினும் ஒரு கலைஞன் அப்பொழுதும் மனித மேன்மையை வேண்டி நிற்பதும் அது குறித்தான நம்பிக்கையளிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். புதிய மலருக்கான விதை தூவப்படும். இதற்கும் அப்பாற்பட்டு, ஒரு படைப்பு தனிமனித தன்மாற்றத்தினையும் கோருகிறது., தனிமனிதர்களின் கூட்டு அறிந்துணர்வே சமூகமாகிறது. அந்த அறிந்துணர்வு தூய்மையடைய வேண்டிய தேவையினை படைப்பு எப்பொழுதும் குரலெழுப்பி வந்த வண்ணமிருக்கின்றன. ஒரு படைப்பின் இருப்பை இதன் அடிப்படையில்தான் நாம் அடையாளப்படுத்த இயலும்.

3

பிரசன்னாவின் இரு படங்களிலிருந்தும் நான் கவனித்ததிலிருந்து அவைகளின் சில தனித்த அம்சங்கள் என் ஞாபகத்தில் நிழலாடுகின்றன. இந்த இரு படங்களுமே போர் சார்ந்த காட்சிகள் சித்தரிக்கப்படவில்லை. போர்ச்சூழலை மாத்திரமே விரவியிருக்கிறது. போர்ச்சூழலின் மத்தியில் கோரப்பல் காட்டி மிரட்டும் அபாய உணர்வு மாத்திரமே விரவியிருக்கிறது. ஒரு காட்சி சம்பவம் நிகழும் அதேசமயம் அக்காட்சியின் ஏதோ ஒரு கணத்தில் தோன்றக்கூடுமான வன்முறைக்கான சாத்தியத்தையும் நாம் இனம்காண நேர்கிறது. இவ்வித அணுகுமுறை – ஒரு திரைப்படம் என்பதாக அல்லாமல் பார்வையாளர் அந்த சம்பவத்தின் உண்மைச் சூழலுள் உலவும்படியான நேரடி யதார்த்தத்தை அளித்து விடுகிறது.

உதாரணத்திற்கு ஒரு முழுநிலவு நாளின்போதான மரணம் படத்தில் ஒரு இளைய பெண் மாலை நேரம் பணிமுடிந்து வீடு திரும்பும் காட்சி , அவளது வருகைக்காக அவளது உறவினர் சாலையில் காத்திருப்பான். அவள் அவனை நோக்கி வருகிறபோது ஒரு ராணுவ வாகனம் அங்கு வரும் அந்த உறவினர் வாகனத்தைக் கண்டதும் பதட்டமடைவான். நாமும் அவனுக்கு இணையான பதட்டத்தை அடைந்துவிடுகிறோம். அந்தப் பெண்ணுக்கு ராணுவத்தினரால் எதேனும் தீங்கு நேர்ந்துவிடக்கூடும் அபாயம் அக்காட்சியில் நிலவும். பிந்தொடரும் வாகனம் அவர்களை கடந்து செல்லும்பொழுது அந்த உறவினனைப் போலவே நாமும் விடுவிப்படைந்த மன ஆயாசத்தினைப் பெறுகிறோம். இங்கு திரைப்படம்க் தனது கலைத் தோற்றத்தை கலைத்து வாழ்வின் உயிரிருப்பை அடைந்துவிடுகிறது. ஒரு படைப்பால் நிகழப்போதுமான உச்சபச்ச உணர்ச்சிப் பரிமாற்றத்தை இம்மாதிரியான படைப்புகள் தன்னியல்பாக வழங்கிவிடுகின்றன.

ஆகஸ்ட்மாத சூரியன் படத்திலும் இவ்விதக் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, இரு காட்சிகள் எனது பார்வையிருப்பை ஆட்டம் காணச்செய்து விட்டன. ஒன்று: அராஃபத்தும் அவரது மகனும் வீட்டுப் பொருட்களை எடுத்துச்செல்ல வாகனம் பிடிக்க பக்கத்து கிராமத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருப்பார்கள். இரவு துவங்கியிருக்கும், ஆள் அரவம் தலைப்படாத அவ்வழியில் ஒரு குடிசை எரிந்துகொண்டிருக்க , ஒரு நடுத்தர வயதைக் கடந்த பெண்மணி தலையில் ரத்தம் வழிய அக்குடிசையின் புறமிருந்த இவர்களை நோக்கி நடந்து அனுபவித்த பீதி உறைந்திருக்கும் அராஃபத் அவளை சில வினாடிகள் நின்று பார்த்துவிட்டு வாகனத்தை நள்ளிரவிற்குள் பிடித்து ஊரைவிட்டு வெளியேறிவிட வேண்டிய நிர்பந்தத்தில் தனது மகனோடு அவளைக் கடந்து சென்றுவிடுவார். உரையாடலற்ற சப்தம் மரத்துப்போன அந்தக் காட்சி போரினது உன்மத்த நிலையை அதன் குரூரத்தோடு வெகு பட்டவர்த்தனமாக பிரதி செய்கிறது. பெயரிடப்படாத அப்பெண்ணின் இழப்பும் வேதனையும் அக்காட்சியின் மெளனத்தோடு நிரந்தரமாக கேட்பாரற்ற தனிமையில் கலந்துவிடுகிறது.

மற்றொரு காட்சி: சமேரி தனது காதலனை சந்திக்கவேண்டி படகிற்காக காத்திருக்கும்போது அந்த மணல்வெளியில் நடமாடுவள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் யாரோ ஒரு மனிதனை உயிரோடு எரித்த தடயம் மணலில் கருப்படைந்த சாட்சியாக பரவியிருக்கும் அக்காட்சியில் சமேரிக்கு ஏற்படும் பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. காதாபாத்திரத்திற்கும் பார்வையாளனுக்கும் இடையே நூலிடும் இந்த உணர்ச்சிப் பரிமாற்றமே பிரசன்னாவின் படங்களின் மையத்தில் இழையோடும் பிரதான அம்சமாக நான் கருதுகிறேன்.

4
இலங்கையிலிருந்து வரும் Cinesith எனும் சினிமா இதழின் தொகுப்பாசிரியரும் விமர்சகருமான ராபர்ட் க்ரூஸ் ஆகஸ்ட் மாத சூரியன் படத்திற்கான தனது கட்டுரையில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டிருந்தார். லண்டன் திரைப்பட விழாவில் அப்படம் திரையிடப்பட்டபோது விவாத அரங்கும் இடம்பெற்றிருக்கிறது. அப்பொழுது அந்த விவாத அரங்கின் ஒருங்கிணைப்பாளர் ஆகஸ்ட் மாத சூரியன் சிலருக்கு சுவாரசியமற்ற படமாக தோன்றினதாக கூறினார். இத்தனைக்கும் அவர் படத்தை பார்த்திருக்கவில்லை. அந்த ‘சிலர்’ யாரென்றும் அவர் அடையாளம் காட்டவில்லை. படத்தில் சமேரி பாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நிம்மி ஹரஸ்கமா அவ்விழாவிற்கு வந்திருந்தார். எனவே இந்தக் குற்றச்சாட்டுக்கான பதிலை அவர் முன்வைத்தார்; ‘படம் சாமான்ய மக்களைப் பற்றியது. அம்மக்களின் வாழ்வில் என்ன சுவாரசியம் இருந்துவிடக் கூடும் எனவே படம் அவர்களைப் பிரதிபலிக்கும் காரணத்தில் சுவாரசியமற்றதாக தோற்றமளிக்கலாம். ‘ தொடர்ந்து க்ரூஸ் எழுதுகிறார். “இன்றைய உலக மயமாக்க சூழலில், சினிமாக் கலாச்சாரம் என்பது விரைந்து செல்கிற புதிய கதையுத்திகளும் தொழில்நுட்ப அதிகரிப்பும் கொண்டதாக மாறி வருகிறது. இப்போக்குகளை விரும்புகிறவர்களுக்கு ஆகஸ்ட் மாத சூரியன் போன்ற படங்கள் ”சுவாரசியமற்றதாக பார்வைக்குத் தென்படக்கூடும்”

திரைப்பட விழாக்களில்கூட சுவாரசியம் குறித்த ஜனரஞ்சகமான கேள்விகள் எழுப்ப படுவது வியப்பளிக்க கூடிய விஷயம்தான். ( சென்ற வருடம் கான் படவிழாவில் அப்பாஸ் கியாரஸ்தமியின் ஐந்து படம் இதே மதிப்பீட்டிற்கு உள்ளானது. நினைவுகூறத்தக்கது.). என் அபிப்ராயத்தில் சுவாரசியம் என்பது தனிமனித ரசனை மனப்பான்மையை சார்ந்த ஒரு விஷயமே. திரைப்படத்தை சுவாரசியம் சுரக்கும் ஒரு பண்டமாக நாம் கணித்தால் , தார்கோவிஸ்கியின் படங்கள் தனது அடிப்படை தகுதியைக் கூட இழக்கவேண்டிவரும். அரசியலையும் தத்துவத்தையும் தனிமனித உள்ளுணர்விலிருந்து உற்று நோக்குபவர்களுக்கு தார்கோவிஸ்கியின் படங்கள் மகத்தான படைப்புக்களாகத் தோன்றக்கூடும். அளவிடமுடியாத சுவாரசியத்தை வழங்க கூடும்.

இத்தனைக்கும் பிரசன்னாவின் திரைப்பாணி மெதுவாக நகரும் தன்மையுடையதல்ல. அவரது படங்களின் காலமு வெளியும் வாழ்வு யதார்த்தத்தோடு மிகவும் அண்மைப்படுவது. அவரது கதாபாத்திரங்கள் சமூகத்தின் நிஜ மாதிரிகளே. ஒரு விதமாக ரத்தமும் சதையுமான ஒரு வாழ்க்கை திரைப்படத்தில் “மேற்கொள்ளப்படுகிறது” என்கிற வரைக்குமான யதார்த்தம் கொண்டது. நான் முன்பே கூறின மாதிரி, பதட்டமும் அபாயமும் சூழ நகர்ந்துசெல்லும் அவரது திரைப்பட வாழ்வும் துயரவயப்பட்ட கதாபாத்திர்சங்களும் எந்த மாதிரியான ‘சுவாரசியத்தை’ பார்வையாளருக்கு வழங்க விழைவுகொள்ள முடியும்? போரின் அகண்ட வன்முறை இருப்பின்மேல் பாய்ந்து திகைப்பு தந்திருக்கும் வேளை. அந்நிலையை பிரதிசெய்யும் படைப்பின் மீது பார்வையாளர் சுவாரசியம் தேடுவது அப்படைப்பின் மீதான வன்முறையாகவே நான் பாவிக்கிறேன். அப்பார்வையாளர் அமெரிக்க, ஐரோப்பிய வீணடிப்பு சினிமாவில் தலைமூழ்க வேண்டியவர். எனவே பார்வையாளனின் ரசனையுணர்வைப் பொறுத்தே ஒரு படைப்பின் சுவாரசியம் தீர்மானிக்கப் படுகிறது என்பது கண்கூடு.
5
நிகழும் போரின் பின்விளைவுகளால் மனிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை பிரசன்னாவின் படங்கள் பார்வைப் படுத்துகின்றன. மேலும், இத்தனை சிதைவுகளைத் தாண்டியும் மானுடம் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டிய மாண்பையும் கோருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் வன்னிஹாமி தனது மகனின் வருகையை எதிர்பார்த்து மடிந்துபோகாத நம்பகவிழைவுடன் காத்திருப்பதும், அனைத்து துயரங்களையும் கடந்து அரஃபத் வாழ்வின், விருப்புறுதியோடு பயணிப்பதும் தொடர்கிறது. ஆசிய, மூன்றாமுலக சினிமாவின் காத்திரமான தன்னம்பிக்கை இத்தகைய படங்களால்தான் உருவாகின்றன. போராடுவதும் மீண்டெழுவதுமான வாழ்வு உரக்கப் பேசப்படும் இந்தப் படங்கள், அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் தமது உரிமைக்குரலை வீர்யத்துடன் எழுப்புகின்றன. போரை முற்றுமுழுதாக எதிர்த்து அமைதியையும் வன்முறையற்ற வாழ்வையும் வியாபகப்படுத்தும் பிரசன்னாவின் படைப்புணர்வு மூன்றாமுலக சினிமாவில் உயரிய மதிப்பை பெறத்தக்கது. அவரது படைப்பில் ஒளிரும் கலைமானுடம் அகம்நேசிக்கத் தக்கது. இறந்தகால வேதனையும் எதிர்கால அமைதிக்குமான காலநீட்சியில் சிறகசைத்துச் செல்லும் அவரது படைப்புப் பயணம் காலூன்றும் நிலப்பரப்பில் திசைமுழுக்க விரவியிருக்கிறது.

பிரசன்னா ஒரு நேர்காணலிக் கூறுகிறார். “கலையை நதியென உருவகித்துக் கொண்டால், மேற்பரப்பில் நீந்துகின்ற கலைஞர்களும் உள்ளனர். அதேவேளை அடியாழத்தில் சுழித்தோடும் கலைஞர்களும் உள்ளனர்.. இந்த ஆழ சுழித்தோடும் கலைஞர்களின் வரிசையில் இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனெனில் மனிதாபிமானம் உண்மை மற்றூ நீதி என்பனவற்றில் எப்போதுமே நான் பற்றுறுதி கொண்டுள்ளேன். “பிரசன்னாவின் இந்த பிரகடனம் அனைத்துக் கலைஞர்களாலும் பின்பற்றப்படவேண்டிய ஒரு கூற்று. அதுவும் தமிழில் நல்ல சினிமா இயக்கம் உருவாக இந்தப் பண்புகள் அத்தியாவசிப்படுகின்றன. படைப்புலகம் வாழ்வுலகமும் ஓருயிராய் பிணைந்திருக்கும் பிரசன்னா போன்ற கலைஞர்கள்தான் இத்தகைய தூய்மையான பண்புகளை நமக்குப் பரிசளிக்க முடியும்.

வாய்ப்பின் உவகை மனம்நெகிழத் தந்திருக்கும் பிரசன்னாவுடனான இந்த சந்திப்பு நான் இதுவரை காணாத உயர்ந்த மனிதரின் உலகத்தில் சில மணித்துளிகள் சஞ்சரிக்கும் கணங்களை அளிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நண்பரின் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து என்னை சூழத்துவங்கியிருந்தது. மறுநாள் சந்திக்க என்னை அழைத்து வயோதிகத் தனிமையை கைபிடித்து தடுமாறிச்செல்லும் கலைநெடி நோயுற்ற தமிழ்ப்பொழுதுகளை சலிப்புற்று கழித்துக்கொண்டிருக்கும் எனக்கு அந்த மறுநாள் ஒரு அதியற்புதமான கவிதை எழுதப்பட ஆயத்தமாகும் நாளாக தோற்றமளித்தது.