நண்பரும் தோழருமான மணிவண்ணன்

எழுபதுகளின் மத்திய ஆண்டுகள். கோயமுத்தூர் மாவட்டத்தின் சிங்காநல்லார் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சிற்றூரான உப்பிலிபாளையத்தில் இருந்த ஸ்டீல் பர்னிச்சர் உற்பத்திப் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வதற்காகச் சூலூரிலிருந்து மணிவண்ணன் சைக்கிளில் வருவார். தொழிற்சாலைக்கு எதிரில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கிளை அலுவலகமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மன்றம் இருந்தது. மதிய உணவருந்திவிட்டு கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் வைத்திருந்த பெட்டிக் கடையில் பீடியோ, சிகரெட்டோ பற்றவைத்துக் கொண்ட மணிவண்ணன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மன்றத்தின் சிமென்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி தினமணியும், ஜனசக்தியும் தாமரையும் படிக்க அங்கே வருவார். அப்படித்தான் மணிவண்ணனோடு எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.
அவரோடு எனது முதல்காதல் உள்பட நான் பேசியிருக்கிறேன். அப்போது நான் வேலையில்லாமல் கொஞ்சம் விரக்தியிலும் இருந்தேன். கனிவான இயல்பு கொண்ட அவர் வாசிப்பு சார்ந்த ஞானத்துடன் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவார். என்னைவிடவும் அவருக்கு நெருக்கமானவர்களாக பஞ்சாலைத் தொழிலாளியான சுப்பிரமணியமும் நண்பர் ரவியும் இருந்தார்கள். சுப்பிரமணியத்துடன்தான் மணிவண்ணனுக்கு ஒட்டுதல் கூடுதலாக இருந்தது. அதற்கான காரணம் இருவரையும் இணைக்கும் புள்ளியாக அவர்களது உடலுழைப்பும் அதுசார்ந்த தொழிலாளிவர்க்க உணர்வும் இருந்தது என்றுதான் நான் இப்போது நினைக்கிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிகழ்வுகள், புத்தக விற்பனை இடங்கள் என சூலூரிலும் கோவையிலும் உப்பிலிபாளையத்திலும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரோடு கனிவுடனும் கோபத்துடனும் விவாதித்;த பல சம்பவங்கள் இன்று ஞாபகம் வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது உறவுக்கான ஒரு சாட்சிபோலவே அவரது தோழர்.பாண்டியன் படம் வெளியானது. பிற்பாடு அவர் சென்னை போகிறார். நான் எண்பதுகளின் மத்தியில் மேற்குலகிற்கு நகர்ந்து விடுகிறேன். அவரது படங்களைப் பார்க்கிறபோது பழைய ஞாபகங்கள் வந்ததுண்டு. அநேகமாக எங்களுக்கு இடையிலான நேரடி உரையாடல்கள் அற்றுப்போயின. கோவை நண்பர்கனோடு பேசும்போது மணிவண்ணன் அவ்வப்போது என்னை விசாரித்ததைச் சொல்வார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து நாட்களில் ஈழநிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மணிவண்ணன் இலண்டன் வந்து சென்றதையும் அறிந்திருக்கிறேன். தொடர்ந்து வந்த ஒரு நாளில் நள்ளிரவு தாண்டி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நள்ளிரவுத் தொலைபேசி அழைப்புகள் எப்பொதுமே எனக்கும் துணைவியாருக்கும் கலக்கத்தைத் தருபவை. நள்ளிரவு கடந்த நிலையில் எமக்குவரும் தொலைபேசி அழைப்புகள் பெரும்பாலும் எமக்கு எமது இரத்த சொந்தங்கள், தோழர்கள், நண்பர்கள் என இவர்களின் மரணச் செய்தியோடுதான் வந்திருக்கின்றன. மிகுந்த பதட்டத்துடன் தொலைபேசியை எடுக்க ‘இது ராஜேந்திரன் வீடுதானா?’ என மறுமுனைக் குரல் கேட்டது. ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என இயல்பான தொனியில் அடுத்த கேள்வியும் வந்தது. அரைத்தூக்க நிலை, பதட்டத்தில் நானிருக்க மறுமுனைக்குரல் சாவதானமாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு மிகுந்த கோபம் வந்தது. கொஞ்சம் கோபத்துடன் ‘யார் நீங்கள்? இந்த நேரத்தில் இப்படிக்; கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?’என்றேன். ‘மன்னிக்கவும், நான் மணிவண்ணன்’ என்றது எதிர்முனைக் குரல். கோபம் தணிந்துவிட்டது. எனது பதட்டத்தை நான் மணிவண்ணனிடம் விளக்கிச் சொன்னேன். ‘நாளைக்கு எடுக்கவா?’ என்றார். ‘பேசுவோம்’ என்றேன்.
தான் இலண்டன் வந்திருந்தபோது என்னைச் சந்திக்கவிரும்பியதாகவும் தொலைபேசி எண் தருகிறேன் என்ற எழுத்தாளரொருவர் தரவில்லை எனவும் சொன்னார். தான் ஈழப் பிரச்சினை தொடர்பாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டுவரவிருக்கிற தொகுப்புகளுக்கு நான் கட்டுரை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் கட்டுரைகளை அவருக்கு அனுப்பிவைத்தேன். அன்று துவங்கி அமைதிப்படை வெளிவருவதற்கு மூன்று மாதம் முன்பு வரை சில நாட்களில் நாளைக்குப் பலதடவைகளும், பலசமயங்களில் வாரம் இருமுறையும் நாங்கள் தொடர்ந்து உரையாடியபடி இருந்திருக்கிறோம். உரையாடல் பெரும்பாலும் ஈழ அரசியல், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் இலக்கியம் என்பது குறித்ததாகவே இருக்கும். அவருடன் நான் அதிகம் திரைப்படம் குறித்துப் பேசியில்லை.

அவருடைய பொருட்படுத்தத்தக்க படங்கள் என நான் கருதுவது அவருடைய நூறாவது நாள், அமைதிப்படை, இன்னொரு சுதந்திரம் அதனோடு அவர் முதன்முதலாகத் திரைக்கதை எழுதிய நிழல்கள் போன்றவைதான். நிழல்கள் தமிழ் சினிமாவில் ஒரு டிரென்ட செட்டர் என்பது எனது அனுமானம். பாரதிராஜா பள்ளியிருந்து வந்த பாக்யராஜிம் மணிவண்ணனும் திரைக்கதைகளை நேர்த்தியாக அமைப்பவர்கள். மணிவண்ணனது நூறாவது நாள் மற்றும் அமைதிப்படை சத்தியராஜ் என்கிற உத்தமவில்லனை அல்லது ஆன்டி ஹீரோவை தமிழுக்குக் கொடுத்தது. மணிவண்ணன் பாரதிராஜா பள்ளியின் உணர்ச்சவச சினிமாவை விழைந்தவர். அவரிடமிருந்து சோதனைபூர்வமான சினிமா எதுவும் வரமுடியும் என நான் நம்பவில்லை. மணிவண்ணன் இயக்குனராக வென்றதை விட நடிகராகவே வென்றார். கலைவாணரதும் நடிகவேள் எம்.ஆர்.ராதாவினதும் கலவை அவர். அவரது மாடுலேசனும் வசனஉச்சரிப்பிலான நேர உணர்வும் ராதாவிடமிருந்து அவர் ஸ்வீகரித்துக்; கொண்டவை. வெற்றி என்பதை இங்கு பொருளாதார ஸ்திரநிலை என்றே இங்கு அர்த்தம் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு மத்தியில் நான் பணியாற்றி வந்த இலண்டன் குளோபல் தமிழ் நியூஸ் வானொலி நிறுவனத்திற்காக மணிவண்ணனது மிக நீண்ட உரையாடல் ஒன்றினை நான் இணைப்பாளராக இருந்து நெறிப்படுத்தியிருந்தேன். இயக்குனர், திரைக் கலைஞன், வாசகன், அரசியல் செயல்பாட்டாளன் என மணிவண்ணன் எனும் ஆளுமையின் பல்வேறு முகங்களையும் வெளிக்கொணரும் மிக நீண்ட உரையாடலாக அது இருந்தது. தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது, மின்வெட்டு வீட்டுத் தொலைபேசியை இடைய+று செய்த நிலையிலும் அவர் கைத்தொலைபேசியைக் காதருகில் வைத்தபடி, நள்ளிரவு தாண்டிய நேரத்திலும் அவர் நிகழ்ச்சியின்; நேயர்களது கேள்விகளுக்குப் பொறுமையாகவும் ஆர்வத்துடனும் பதில்சொல்லிக் கொண்டிருந்தார்.

மணிவண்ணனை மார்க்சிய அரசியல் தேர்வும் விடுதலைத்தேட்டமும் கொணடிருக்கச் செய்தது அவரது அடித்தட்டுநிலை வாழ்வுதான். ஆவரது விடுதலை அரசியல் அவரை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. வெகுஜன தமிழ்சினிமாவில் மிகவெளிப்படையான கச்சாவான அரசியல் விமர்சனப் படங்கள் என்றால் அது அவரது அமைதிப்படை திரைப்படம்தான். ஈழத்தமிழர்களால் நேசிக்கப்பட்ட, ஈழவிடுதலையில் அக்கறை கொண்ட மனிதராக அவர் இருந்தார். அதனாலேயே தமிழக அரசியல்வாதிகள் குறித்த மிகக் கசப்பான விமர்சனங்களை அவர் கொண்டிருந்தார்.

எனது கோவை நண்பர்கள் போலவே மணிவண்ணனின் மரணம் என்பது எனக்கும் அதிர்ச்சி தருவதாகவும் துயரார்ந்ததாகவும் இருக்கிறது. ஐம்பத்து எட்டு வயது என்பது மரணம் வரும் வயது இல்லை. மரணம் எம்மையும் அண்மி;த்துக் கொண்டிருப்பதான பீதி எம்மைச் சூழ்கிறது. மரணத்தின் முன்பு செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து நிறைய யோசிக்கச் செய்திருக்கிறது. மணிவண்ணனின் அகால மரணம் பெரும் துக்கத்தையும் நெருங்கிவரும் பயங்கரம் குறித்த பயத்தையும் எமக்குள் எழுப்புகிறது.

இதயநோய் கொண்டவரான மணிவண்ணன் குறித்த பாரதிராஜாவின் மனிதநாகரிகமற்ற, காட்டுமிராண்டித்தனமான வசைச் சொற்கள் மணிவண்ணனுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்திருக்கும் என்பதில் சந்கேமில்லை. இதயநோய் கொண்டவர்களை உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்குபவர்கள் அவர்களுக்கு மிக நெருஙகிய மனிதர்கள்தான் என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மையாக இருக்கிறது. மணிவண்ணனின் மரணம் ஞாபகம் வருகிறதுபோது எவருக்கும் இனி பாரதிராஜாசின் அரக்ககுணமும் ஞாபகத்தில் வந்தபடிதான் இருக்கும். மணிவண்ணனின் மரணம் இயற்கை பாரதிராஜாவுக்கு அளித்திருக்கும் ஆயுள்தண்டனை என்றுகூட நாம் சொல்ல முடியும்.

நண்பரும் தோழரும் கலைஞனுமான மணிவண்ணனுக்கு எனதும் எனது கோவை நண்பர்களதும் நெஞ்சார்ந்த அஞ்சலி.