உயிர் கொடுக்கும் கலை 14 - டிராட்ஸ்கி மருது எஸ்.எஸ்.ஆர் - அரிதாரமற்ற கலைஞர்

எனது பெரியப்பாவின் மகன் திரு.எஸ்.எஸ்.ஆர். என் அண்ணன். பெரியப்பா முன்னின்றே எங்கள் குடும்ப நிகழ்வு அனைத்தையும் நடத்துவார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலத்திலேயே கல்வி அறிவு பெற்றவர். உசிலம்பட்டி மற்றும் தேனி பகுதியில் கல்வி அதிகாரியாக பணி புரிந்தவர் பெரியப்பா. ஒவ்வொரு கிராமமாக சென்று பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பணியைச் செய்தவர். அந்த காலத்தில் கார் கிடையாது, கூட்டு வண்டியிலே ஓவ்வொரு ஊராக செல்வார். மதுரை, தேனி, உசிலம்பட்டி சுற்று வட்டாரம் அனைத்திலும் இருக்கும் அனைவரையும் தெரிந்துவைத்திருந்தார். இன்னாரின் மகன் இன்னார், இன்ன வகுப்பு படிக்கிறான் என்பது வரை நன்கு தெரிந்து வைத்திருந்தார். முத்தராமலிங்க தேவர் பெரியப்பாவின் பள்ளி தோழர்.

கல்வி அதிகாரியாக இருந்த பெரியப்பா, பின்பு தேனி நகர சபை தலைவரனார். படித்து முடித்தவுடனே முதல் பெரியம்மாவை திருமணம் செய்துக்கொண்டார். இரண்டாவது பெரியம்மா வந்தார். பெரியப்பாவிற்கும் மூன்று துணைவியார்கள். முதல் பெரியம்மா ஆதி லட்சுமி அவர்களின் மகனே எஸ்.எஸ்.ஆர் அண்ணன். அவருக்கு சகோதரர்கள் இருவர். அவருடன் பிறந்தவர் ஒரு சகோதரி. அவரின் கணவர் டி.வி.நாராயண சாமி. நாடக வாழ்கையின் அனுபவத்தின் பேரிலும், அண்ணா அவர்களிடம் ஏற்ப்பட்ட ஈர்ப்பின் பேரிலும் இருவரும் கலந்த நிலையில், நண்பருக்கு சகோதிரியை திருமணம் செய்து வைத்தார்.
எஸ்.எஸ்.ஆரின் தம்பிகள் கதிர் வேல் மற்றும் பாஸ்கரன். அண்ணன் முதல் மனைவி மகன் என்பதால் பெரியப்பா குடிபோகும் இடத்திற்கெல்லாம் அவரையும் அழைத்துச் சென்றுவிடுவார். தம்பிகளைப் பார்பதற்காக 15 கிலோமீட்டர் நடந்தே எஸ்.எஸ்.ஆர் அண்ணன் வருவாராம். கதிர் வேல் மற்றும் பாஸ்கரன் அண்ணன்கள் இது குறித்து நெகிழுந்து குறிப்பிட்டதுண்டு. சின்ன வயதிலேயே அவருக்கு ஏற்ப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக நாடக வாழ்கையில் சேர வேண்டிய இடம் வந்தது. அவருடைய விருப்பத்தின் பேரில் பெரியப்பாவே அண்ணனை டி.கே.எஸ் பிரதர்ஸின் நாடக கம்பெணியில் சேர்த்து விட்டார். அதன் பிறகு நடந்தது அனைத்தையும் தமிழ் நாடே அறிந்த வரலாறு.

உறுவினர்கள், நண்பர்கள், கட்சி சார்பான தோழர்கள், அரசியல் தலைவர்களுடன் அவருக்கு இருந்த நட்பு, காலம் முழுவதும் திரைப்படத்துறையில் அவருக்கு இருந்த தொடர்பு, நடிகர் சங்கத்திற்கு இடம் வாங்கி, அந்த இடத்தை நடிகர் சங்கத்திற்கு தக்கவைக்க அவர்பட்ட பாடு, இப்படி பல்வேறு நிலைகள் குறித்து அவர் பேச நான் கேட்டிருக்கிறேன். அண்ணாவுடன் ஆரமத்திலிருந்து தி.மு.க'ஆக இருக்கட்டும் அல்லது பின்பு எம்.ஜி.ஆருடனான அ.தி.மு.க'ஆக இருக்கட்டும், கட்சியின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மிக பெரியது. அவரின் பங்களிப்பு குறித்து பாதி தெரிந்ததும் பாதி தெரியாததுமாக தமிழ் நாடு இருக்கிறது. ஒளிவு மறைவற்று எப்போதும் நேர்பட பேசுபவர். தி.மு.க ஆட்சியில் இருந்த நேரம், ஒரு காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக வருமானம் அவருக்கு குறைந்த போதும், அவரை தேடி வந்த நாடக கலைஞர்களுக்கு, உதவாமல் இருந்ததே கிடையாது. நான் பக்கத்திலிருந்தே இதை பார்த்திருக்கிறேன். அவருக்கு கஷ்டங்கள் இருந்தாலும் உதவாமல் இருந்ததில்லை. அப்படி உயர்வானவர்.

எஸ்.எஸ்.ஆர் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வைத்து இருந்த காலக்கட்டத்தில், படம் வெளியாகி முதல் 2-5 நாட்கள் படம் எப்படி செல்கிறது என்பதைப் பார்பதற்கு பெரும்பாலும் மதுரையே வருவார். படம் வெளியானவுடன் அன்றிரவே மற்ற அண்ணன்கள் அவர்களின் குடும்பம் மற்றும் எங்கள் குடும்பத்தினர் என அனைவரும் திரையரங்கிற்கு செல்வோம். அப்படி நான் பார்த்த படங்கள் முத்து மண்டபம், அல்லி மற்றும் அவருடைய தயாரிப்பில் வந்த மற்ற அனைத்து படங்கள்.

மிக அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர். கிண்டலும் கேலியுமாக பேசக்கூடியவர். எப்போதும் விழிப்புடனே இருப்பார். எனக்கு தெரிந்து மனதளவில் இறுதிவரை விழிப்புடனே இருந்தார். ஏதாவதொரு வார்த்தை சொன்னால், அதை வைத்து கிண்டல் கேலியென நகைச்சுவை வெளிப்படுத்துவார். உடல்நிலை சரியில்லாத போதும் அப்படியாகவே இருந்தார். அவருடைய அசைவுகள் சைகைகள் அருமையாக இருக்கும். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர். எந்த குறையுமில்லாமல், எல்லாம் வசதியும் பெற்று, செல்வத்தையும் பெற்று, புகழையும் பெற்று நேர்மையானவராக வாழ்ந்தார். எங்கள் குடும்பதார் அனைவருக்கும் அவர் ஒர் முன்மாதிரியாக இருந்தார்.

பெரியப்பா சென்னை வரும் போது ஓவியக்கல்லூரிக்கு வந்து என்னையும் சந்திப்பார். ஒரு சுவையான விஷயம் என்னவெனில், பெரியகுளத்தில் இருக்கும் பெரியப்பாவின் வீட்டின் பின்பக்க வீடு தான் என்னுடைய ஓவிய கல்லூரி ஆசிரியர் தனபாலின் துணைவியார் இல்லம். நாடகங்களை எங்கள் குடும்பத்தார் நடத்தினார்கள். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, பாஸ்கர் தாஸ், என்னுடைய இன்னொரு தாத்தா பூசாரி என சொல்லக்கூடிய கார்மேகம் போன்றோருடனும், என்.எஸ்.கே'வை வைத்தும் நாடகம் நடத்தினார்கள். தாத்தா எம்.எஸ்.சோலைமலை நாடகத்தை என்.எஸ்.கே பார்த்து, அந்த நாடகத்தை அவரது தம்பி என்.எஸ்.திரவியத்தை வைத்து தயாரிக்க வைத்தார். பிற்காலத்தில் என்.எஸ்.திரவியம், தனபால் வாத்தியாருக்கு சம்மந்தியானார். சோலைமலை அந்த காலத்தில் நடத்திய நாடகங்களில் ஆரம்பகால நடிகர்களாக நடித்தவர்களே முத்து ராமனும் மனோரமாவுமாகும்.

மனோரமா நாடகங்களின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முக்கிய பங்காற்றினவர் எஸ்.எஸ்.ஆர். இறுதிவரை சகோதர உறவை பாராட்டினார் மனோரமா. 1970'களில் நான் ஓவிய கல்லூரி படித்த காலத்தில், சோலைமலை நடத்திய நாடகத்தில் அப்போதும் மனோரமா நடித்தார். கோல்டன் சிட்டி, கிள்ளியூர் கனகம் போன்ற சில நாடகங்களில் நடித்தார். எஸ்.எஸ்.ஆர் மதுரையில் நாடகம் போட்டால், எனது தந்தையார் பெயரையே தயாரிப்பாளராக குறிப்பிடுவார். பெயருக்காகவாது என் அப்பாவின் பெயரைக் குறிப்பிடுவார். நாடகத்தை ஒழுங்கு செய்வதற்கு அப்பாவே உதவுவார்.

எங்களுடைய சிறு வயது வாழ்க்கையில் அவருடைய இருப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னுடைய சின்னம்மா, தாத்தா சோலைமலை அவர்களின் இரண்டாவது மகளின் திருமணத்திற்காக சென்னை வந்தோம். அதுவே சென்னைக்கு எனது முதல் பயணம். 1964-65'வாக்கில், நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்த நேரம். எக்மோர் இரயில் நிலையத்தில் எங்களை அழைத்து செல்வதற்காக எஸ்.எஸ்.ஆர் பிக்ச்சர்ஸின் வேன் (வண்டி) வந்தது. அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு 14 கார்கள் இருந்தது, பெரிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருந்தார். தனது மாமா (எனது தாத்தா) வீட்டு திருமணத்திற்காக தனது நிறுவன வண்டியை வேலைக்காக அனுப்பியிருந்தார். அது ஒரு நீளமான ப்ரவுன் நிற "ஸ்டுடிபெக்கர்" (studebaker) வேன். இப்போது இருக்கும் க்வாலிஸ் வண்டி போல் இருக்கும். எக்மோரிலிருந்து இறங்கி அப்பா, அம்மா, நான் மற்றும் குடும்பத்தார் அந்த வேனில் அம்ர்ந்தோம். திருமணத்திற்கான காய்கறிகள் எல்லாம் அந்த வேனில் இருந்தது. ஓட்டுநர் பக்கத்தில் இருந்த நீண்ட இருக்கையில் நான் அமர்ந்தேன். ஸ்டேரிங்கில் எஸ்.எஸ்.ஆர் என்ற வார்த்தையையும் கண்ணாடி வழியாய் நகரைப் பார்த்ததுமே நான் முதலில் பார்த்த சென்னை நகரம்.

அவருடைய சினிமா தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பு ஆகியவற்றை பார்ப்போம். அதன் பின் ஓவியக்கல்லூரியில் சேர நான் சென்னை வந்துவிட்டேன். எனது பெரியப்பா சுறுசுறுப்பானவர், மாதத்தில் 25 நாட்கள் பயணித்திலே இருப்பார். சென்னைக்கு அண்ணனை பார்க்க வரும் போது, எப்போதாவது என்னையும் பார்க்க வருவார். நான் தங்கியிருந்த கல்லூரி விடுதிக்கு வந்து என்னை சந்திப்பார். தனபால் வாத்தியாரின் மனைவி வீடு பெரியப்பாவின் வீட்டருகில் இருந்ததால் என்னை வந்து பார்க்கும் போது வாத்தியாரையும் நிச்சயம் பார்ப்பார். எக்மோரில் ஆசிரியை பயிற்சி படிக்க வந்தவருடன் தனபால் வாத்தியருக்கு காதல் ஏற்பட்டு திருமணம் நடந்தது. இதற்கு முன் 1950'களில் என் அப்பா அவருடைய நண்பர்களுடன் தனபால் வாத்தியாரை பார்த்தார், பத்தாண்டுகளில் நான் அவரிடம் படிப்பதாக அமைந்தது. இவையெல்லாம் தற்செயலாக பொருந்தி வந்தது என்றே சொல்லவேண்டும். தனபால் வாத்தியாரின் வீடு சோலமலை தாத்தாவின் வீட்டுக்கு இரண்டு தெரு பக்கத்திலேயே இருந்தது.

எஸ்.எஸ்.ஆர் அண்ணனின் பேச்சை கேட்பது மிகவும் ஊக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும். மதுரை வந்தால் அவர் சர்க்யுட் இல்லத்தில் தங்குவார். சின்ன வயதில் நானும் தம்பியுமே அவருக்கு வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போவோம். பல்வேறுப்பட்ட மனிதர்களிடம் பேசுவார், அதை நாங்கள் அமைதியாக கவனிப்போம். புத்தகம் என்று சொன்னால் அது சார்ந்து வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் சொல்லுவார்.
ஒரு முறை பெரியார் முன் அமர்ந்திருக்கிறார் அண்ணன், தனது முழு-கை சட்டையின் கை பகுதியை ஒவ்வொன்றாக மடித்துக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த பெரியார், "ஏம்பா ராஜேந்திரா, அதையேன் இவ்வளவு நீளத்துக்கு தைக்கனும், தச்ச பிறகு எதுக்கு மடிக்கனும், அதுக்கு தைக்கும் போதே தேவையான நீளத்துக்கு தச்சாயென்ன" என்று சொன்னதாகவும், என்னமாறி யோசிக்கிறார்யா, நாம என்னமோ நினச்சிட்டு இருக்கோம், ஒரு விஷயத்தை எப்படி யோசிக்கிறாரு என அவரைப் பற்றி சொல்லும் போது இதையும் சொன்னார் அண்ணன். ஒரு நிகழ்ச்சியை சொல்லுகிறாரென்றால், அது சார்ந்து தொடர்ந்து பலவற்றைக் குறிப்பிடுவார்.

திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.பிராகசம் அண்ணணை பார்க்க ஒரு முறை வந்தார். நானும் தம்பியும் அதே அறையில் தான் இருந்தோம். அவர் ஒரு பழைய நாடகம் மற்றும் அதன் நடிகர் குறித்தும் அதிலுள்ள காட்சிகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். அண்ணன் தம்பி இருவருக்கான உறவு சார்ந்த ஒரு காட்சியை விளக்கி சொல்லி, அண்ணன் தம்பியை பார்த்து "இது இப்படி கிடையாது, நீ இல்லைனு சொல்லு, அப்படி சொல்லவில்லை என்றால், உன்னை சுட்டு விடுவேன். நான் ஒன்னிலிருந்து பத்து எண்ணுவேன். பத்துக்குள்ள நீ இல்லனு சொல்லனும்" என்ற வசனத்துடனான காட்சியை குறிப்பிட்டார். துப்பாக்கியை காண்பித்துக்கொண்டு ஆனால் அன்பின் பிடியில் இப்படி ஒரு வசனத்தை கூறுவதான காட்சி. ஒன்று இரண்டு மூன்று என சொல்ல ஆரம்பிக்கிறார், சொல்லிடு டா, சொல்றா எனவும் சொல்லுவார். இந்த காரியத்தை செய்வதற்கு நடுவில் பிரியத்தில் மாட்டிக்கொண்ட ஒருவன், சுட்டு விட வேண்டியிருக்குமே என ஒவ்வொரு படியாக, கோபத்திற்கு நடுவே கோபபட்டவன் இறங்கி வருவதை எங்கள் முன்பு நடித்து காண்பித்தார் எஸ்.எஸ்.ஆர். ஏ.எஸ்.பிராகசமும் நானும் எனது தம்பியும் அதை பார்த்து அழுதோம். ஒன்பது வரும் போது அவரும் தன் நடிப்பில் கண்களில் தண்ணீருடன் சிறப்பாக நடித்தார். ஒரு காட்சியை எங்களுக்கு இப்படி விவரித்து காட்டினார். அந்த நிகழ்வு எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்போது எட்டாவதோ பத்தாவதோ படித்துக் கொண்டிருந்த நேரம் என நினைக்கிறேன். இன்று வரை ஆரம்ப காலத்தில் பார்த்த அந்த நிகழ்வு என் மனதில் உறைந்து இருக்கிறது.

நடிகர் சங்கத்திற்காக அர்பணிப்போடு அவர் வேலை செய்தது, இன்றைக்கு பலருக்கு தெரியாது. அவருக்கும் தி.மு.க'வில் இருந்த கலைஞர்களிலிருந்து அனைத்து முக்கியமானவர்களுக்கும் இடையே இருந்த நீண்ட அரிய உறவை பல்வேறு நிலையில் எனக்கு சொல்லியிருக்கிறார். ஆரம்ப காலத்திலிருந்த அவரது நட்பை பற்றி சொல்லியிருக்கிறார். அண்ணாவை முதல் முறை சந்தித்த விஷயம் என பல விஷயங்களை நகைச்சுவையுணர்வோடும் சொன்னார். பெரியார் மேல் இருந்த பற்று, பிடிவாதமாக இறுதி வரை கடவுள் சார்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என தீர்க்கமாக இருந்தார். பெரியாரிஸ்டாகவே இறுதி வரை இருந்தார்.

இன்னொரு நிகழ்வு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. 70'களில் வேஷ்ட்டி கட்டியவர்களை கிண்டலாக பேசும் ஒரு தொனி வட இந்தியாவில் இருந்தது. தில்லியில் ஒரு முறை "தோத்திவாலா" என ஒருவர் அவரைப்பார்த்து சொன்னவுடனே, அவரை அறைந்து விட்டார் அண்ணன். இதை கேட்ட போது எங்களுக்கு அதிரிச்சியாகவே இருந்தது. "அதன் பிறகு நான் எப்போது சென்றாலும் அவன் எனக்கு முழு சல்யூட்டு அடிப்பான்" என்றார். "தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மேல் ஒரு அபிபிராயம் வைத்திருக்கிறார்கள், நானும் அதை கவனித்திருக்கிறேன். இவனுக்கு உறைக்கு மாதிரி செய்ய வேண்டும் என்பதாலே அடித்தேன்" என சொன்னார்.

1980'களுக்கு பிறகு சபா நாடகங்கள் நடத்தியவர்களில் பலர், நாடகத்தின் தரம் எப்படி, அது எந்த நிலையில் உள்ளது என நிர்ணயம் செய்யபட வேண்டும் என்றனர். "இந்த சபா நடத்தும் நாடகங்கள் தாம்பரத்தை தாண்டி செல்லாது" என தடாலடியாக அண்ணன் சொன்னார். "அவன் எப்படி என் நாடகத்தை பற்றி பேச முடியும், நான் தமிழகம் முழுக்க சுற்றுபவன்" என்றார். அதன் பிறகு அவர்கள் சற்று ஒடுங்கி பேசினர். இவற்றைப் பற்றி அந்த காலத்தில் நான் கேட்டுள்ளேன்.

நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார் என்றே நான் நினைக்கிறேன். அரசியல்வாதியாகவும், கலைஞனாகவும் எதிலும் சமரசம் செய்துக்கொள்ளவில்லை. பிள்ளைகளுடன், உறவினர்களுடன், நண்பர்களுடன், சக கலைஞர்களுடன் என அனைவருடனும் நேச மிக்க ஒருவராகவே நடந்துக்கொண்டார். ஆரம்பத்தில் தமிழகத்தில் மிகை நடிப்பு இருந்தது. நாடகங்களில் ஆடை அணிகலன் அனிந்து சத்தமாக, காட்டிக்கொள்ளும் விதமாக நடிக்க வேண்டி இருந்தது. மிக இயல்பாக அந்த காலத்துலேயே எஸ்.எஸ்.ஆர் நடித்தார். இன்று அந்த கட்டத்திற்கு தான் சினிமாவில் அனைவரும் வந்துவிட்டனர். அளவுக்கு அதிகமான இயல்பு நிலையுடன் சினிமா சட்டகத்துக்குள்ளேயே இயல்பாக அமைந்திருக்கும். ஒரு சில அரிய கலைஞர்களிடம் அப்படியான சிறந்த நடிப்பை பார்த்துள்ளேன். மனோரமா, முத்துலட்சுமி, என்.எஸ்.கே, எஸ்.எஸ்.ஆர், ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா போன்றவர்கள் இதில் அடங்குவர்.

எஸ்.எஸ்.ஆர் மீது எம்.ஆர்.ராதா பெரும் மதிப்புக் கொண்டிருந்தார். அண்ணன் என்றே எம்.ஆர்.ராதவை அழைப்பார். எஸ்.எஸ்.ஆர் அண்ணனின் முதல் மகன் இளங்கோவனின் திருமணம் 1974'இல் கே.கே.ஷா தலைமையில் கலைஞர் முன்னிலையில் நடந்தது. கீழே முன் வரிசையில் அமர்ந்திருந்த ராதாவை, மேடையில் அமர்ந்திருந்த எஸ்.எஸ்.ஆர் அண்ணன் கீழே இறங்கி சென்று அவரை அழைத்து மேடையேற்றி பேச வைத்தார். அவரும் இவரைப் போலவே உண்மை பேசுபவர். "எல்லாரும் எல்லாம் பேசுவாங்க. எதுக்காக இங்க வந்தோம், ராஜுக்காக தான் இங்க வந்தோம்" என்றார் ராதா. அதற்கு முன் ஒரு நடிகர் உலக மக்களின் நிலையை எடுத்துக்காட்டி, கென்னடி அப்படி சொன்னார் இப்படி சொன்னாரு என பேசிவிட்டு சென்றார். "அவர் என்னய்யா இவர் என்னய்யா, நம்மூரு திருவள்ளுவரே சொல்லியிருக்காருயா" என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டார் ராதா. பெண்-மாப்பிளைக்கு அறிவுரை கூறி ஒரு சிலர் பேசினர். "என்னய்யா எல்லாரும் அறிவுரை சொல்லுறீங்க. பெண்-மாப்பிளை என்ன முட்டாளா?. எல்லாரும் அறிவுரை சொல்லுறீங்க. அதெல்லாம் அவங்களுக்கு தெரியும்யா" என்றும் ராதா தனது பேச்சில் குறிப்பிட்டார். "ராஜூ உண்மையான ஒரு மனிதனாக இருப்பதாலே, ராஜூக்காகத்தான் நான் வந்திருக்கிறேன். ராஜேந்திரன் அப்படியான் ஆள்" என்று மேடையிலே அவ்வளவு சிறப்பாக ராதா பேசினார்.

சென்னைக்கு முதன் முதலில் ஸ்டுடி பேக்கர் வேனில் நுழைந்தேன் என குறிப்பிட்டு இருந்தேனல்லவா, இதை அண்ணனிடம் ஒரு முறை சொன்னேன். உனக்கு ஒரு கதை சொல்லுறேன்யா என சொல்ல ஆரம்பித்தார். "ஒரு முறை படப்பிடிப்பில் இருந்த போது நான் கண்டிப்பாக வந்தாக வேண்டும் என அழைத்தார்கள். படப்பிடிப்பு இருக்கு நான் எப்படி வருவது என்றேன். இல்லனே நீங்க வந்தே ஆகனும் என்றனர். இராயப்பேட்டை மருத்துவமனையில் உரிமைக்கோரப்படாத ஒரு பிணம் இருக்கு. அது தியாகராஜ பாகவதர் மாதிரி இருக்கு, நீங்க வந்து பார்க்கனும் என்றனர். சென்று பார்த்தால் அது தியாகராஜா பாகவதிரின் உடல். நான் தான் கையெழுத்திட்டு உடலை வாங்கினேன். எம்.ஜி.ஆர்க்கு போன் செய்தேன், அவர் செஞ்சிக் கோட்டையில் தேசிங் ராஜா படப்பிடிப்பில் இருந்தார். ராஜூ நீ உடலை வாங்கிட்டு வா, நான் திண்டிவனத்தில் காத்திருக்கிறேன், நீ வந்துவிடு, ரெண்டு பேரும் அங்கிருந்து திருச்சிக்கு சேர்ந்து போகலாம் என எம்.ஜி.ஆர் சொன்னார்."

எம்.ஜி.ஆர் மற்றும் எஸ்.எஸ்.ஆர் முன்னின்றே அவரது கடைசி காரியங்களை செய்தனர். அவருடைய உடலை எடுத்து சென்றது இந்த ஸ்டுடி பேக்கர் வண்டி தான் யா என்று சொன்னார். நான் சென்னைக்கு முதலில் வந்தேன் என்று சொன்ன அதே வண்டியில் தான் அவரை எடுத்து சென்றனர். இதை கேட்டு நான் மிகவும் நெகிழுந்து விட்டேன். பழைய தலைமுறைக்கும் என்னை போல் சென்னைக்கு ஒரு கலைஞனாக வேண்டும் என வருபவர்க்கும் நீங்க தான் அண்ணன் தொடர்பு போல் இருக்கிறீர் என நான் நெகிழ்ந்து சொன்னேன்.

அவருடைய வாழ்க்கை வரலாறு இன்னும் எழுதபடவில்லை என்ற ஆதங்கத்தில், அவரை எழுதுமாறு நான் தூண்டினேன். தமிழ்நாட்டினுடைய நாடகம், திரைப்படம், அரசியல் என இந்த மூன்றினுடைய வரலாற்றை அவரது வாழ்க்கை வரலாறு கொண்டுள்ளது. தமிழ்நாடு இதை அறியாமல் சென்றுவிடக்கூடாது என்று நினைத்தேன். அதற்கு முன்பே மாமா டி.வி.நாராயண சாமி அதற்கான முயற்சிகளை எடுத்தார், ஆனால் அவரால் முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. எனக்கு இன்னொரு வருத்தமும் உண்டு. 1940'களில் வாழ்ந்த தமிழ் நாட்டின் மிக முக்கியமான நாடக கலைஞர்களின் ஓவியத்தை நான் வரைந்துக் கொடுக்க வேண்டுமென மாமா ஆசைப்பட்டார். அது என்னால் செய்ய இயலாமல் போய்விட்டது. அவர் மறைவின் போதும் நான் சென்னையில் இல்லை. 2000'இல் அண்ணனின் உடல்நலம் சரியில்லாமல் போனது. அப்போது மருத்துவமனையில் இருக்கும் போது அவரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்தாக வேண்டும் என் சொன்னேன். அவரும் செய்துவிடுவோம் என்றார்.

மலேசியாவில் இருந்த ஒரு பத்திரிக்கை அவருடைய வாழ்க்கை வரலாற்றின் ஒரு சில பகுதிகளை எழுதி கொடுங்கள் என்று கேட்டது. அண்ணன் எழுதிக்கொடுத்தார், சில வாரங்கள் தொடராக வந்தது. அதையும் என்னிடம் பின்பு காண்பித்தார். அச்சாகி வந்ததைப் பார்ததும் அவருக்கு பெரிய ஆர்வம் வந்தது. நான் அவரிடம் நீங்க பேசுங்க நாம பதிவு செய்து எழுதிவிடலாம் என்றேன். அதெல்லாம் வேணாம் நானே எழுதுகிறேன் என்று கூறி அவரே எழுதிவிட்டார். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக எழுதினார். அண்ணா எழுதிய கடிதங்கள் மற்றும் ஆவணப்படுத்த வேண்டியதின் பெரும்பகுதியை ஆவணப்படுத்திவிட்டார். அவருடைய வாழ்வின் சில பகுதிகளை தன்னகத்தே வைத்துக்கொண்டிருந்தார்.
எந்த காலக்கட்டத்திலும், வாழ்க்கையில் கடுமையான மேடு பள்ளங்கள் வந்த போதும், தன் மனசாட்சிக்கு தெரிந்த சரியான வழிகளிலேயே செயலாற்றி, எப்போதும் அவர் உண்மையாகவே இருந்ததை பல நேரங்களில் நான் பார்த்திருக்கிறேன். இப்படியான ஒரு பின்புலத்துடன், தமிழ் மக்களுடைய வாழ்வுடன் நேரிடையாக சம்பந்தப்பட்டு வாழ்ந்த மனிதர் எனக்கு தெரிந்து அவரே இறுதி என நினைக்கிறேன்.

பொது வெளியில், வாழ்வில், அரிதாரமற்ற முகம் கொண்டவர். பொது வெளியில், அவர் பயன்படுத்தாத அரிதாரம் இன்றும் பலருக்கும் பயன்படுக்கிறது என்பதை சமீபத்திய என் அனுபவங்களும் உறுதி செய்கிறது. அவர் உண்மை வாழ்வை சொல்ல வரும் போதும், அது குறுக்கே நம் முன் வருகிறது. தான் கஷ்டப்பட்ட காலத்திலும் உதவி புரிந்தவர் எஸ்.எஸ்.ஆர். என்.எஸ்.கே'வை தொடர்ந்து தமிழ் நாட்டில் இயங்கிய நீண்ட கலை மரபின் அரிய மனிதர் அவர்.