உயிர் கொடுக்கும் கலை 9 - டிராட்ஸ்கி மருது

டிஜிட்டல் தொழில்நுட்பம் அனைத்து ஊடகங்களையும் ஒன்றிணைத்தது என்று பரவலாக சொல்லப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில், நான் பார்த்தவரை நிச்சயமாக அது உண்மை என்றே கூறுவேன். தொடு திரை, பேசும் பேச்சை(ஒலியை) பெற்றுக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் செயல்படுவதென ஒர் ஊடாட்டத்தை உண்டு பண்ணும் தொழில்நுட்ப கருவிகள் இப்போது உண்டு. வாழ்க்கையின் 48 மணி நேரத்தை, எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அதை உயர்ந்த தரத்தில் HD தொழில்நுட்பத்தில் பதிவு செய்யும் கருவி இப்போது உள்ளது. இதன் மூலம் வாழ்க்கையைப் பின்னோக்கி செலுத்தி பார்க்க இயலும். விளையாட்டு கன்சோலுக்கு (Game Console) இருக்கும் ஆற்றலை, பொதுவாக பயன்படுத்தும் பயன்பாட்டு மென்பொருள்களுக்கு (Application Software) அதே சாத்தியகூறுகளை அளிக்கும் வாய்ப்பு இப்போது உள்ளது. கணினியில் ஒரு சிற்பத்தை செதுக்க வேண்டுமென்றால், 3டி மென்பொருள் மூலம் கணினியைப் பார்த்துக்கொண்டே கைகளினாலே அதை செதுக்கிவிடலாம். அப்படியான தொழில்நுட்பம் இப்போது உண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக நான் பயன்படுத்திய வேக்கம் என்ற மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான சின்டக் என்ற மென்பொருளை இப்போது பயன்படுத்துகிறேன். அதன் வேறொரு பதிப்பும் இப்போது வந்துவிட்டது.

உலகம் உங்கள் கலைக்கூடம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். 13-16 அங்குலமுடைய ஒரு சிறந்த தொழில் சார்ந்த டேப்லெட்டை, மென்பொருள் பயன்படுத்தி தொடு திரை மூலம் ஓவியம் வரைவதற்கும் மற்றும் பலதுறைக்கும் பயன்படுத்தலாம். பயணத்தின் போது அதை உலகத்தின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். ஓவியம், படிமம், நிழற்படம், அனிமேஷன் அல்லது திரைப்படம் ஆகியவற்றில் பயணிக்கும் இடங்களிலிருந்தே பணிசெய்யலாம். எங்கு சென்றும் பணிசெய்து குறிப்பிட்ட ஸ்டுடியோவிற்கு அனுப்பி படத்தொகுப்பு செய்து அதை உலக முழுக்க கொண்டு செல்லும் வாய்ப்பும் வசதியும் உண்டு.

இதை இப்போது குறிப்பிட காரணம், தொடு திரையில் உங்கள் கை அல்லது பென் தொடும் அந்த ஒரே இடத்தில், வரைந்த ஓவியத்திலிருந்து ஒரு பிக்சல், படம்பிடிக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து ஒரு பிக்சல், திரை கலைஞரின் திரைப்படத்திலிருந்து ஒரு பிக்சல், காமிக் புத்தகம் அல்லது sequential images'லிருந்து ஒரு பிக்சல், அனிமேஷனிலிருந்து ஒரு பிக்சல், என எல்லாம் ஒர் இடத்தில் சந்திப்பதோடு; தொலைதொடர்பு சாதனம் எனும் இன்னொரு பெரிய சக்தி வாய்ந்த ஒன்றும் சேர்ந்து, அதே புள்ளியில் உலகெங்கும் பயன்படுத்தப்ப்டும் ஃபேஸ்புக் அல்லது பத்திரிக்கைகள் என எவையெல்லாம் தொடர்பு நிலையில் இருக்கிறதோ, அவையெல்லாமுமே ஒரே ஒரு புள்ளி, அதாவது ஓவியனுடைய பென்சிலின் புள்ளி கூவியும் இடமிருக்கும் இடத்திற்கு வந்து குவிந்துவிட்டது.

தமிழகத்தில், புத்தகத்தை அச்சடித்து கையில் பிடித்தால் தான் அங்கீகாரம் என சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படியெல்லாம் கிடையாது, இன்னும் பத்தாண்டுகளில் அனைத்தும் டிஜிட்டலாக மாறிவிடும். பத்தாண்டுகள் அதிகமாக கூட இருக்கலாம். அதற்கு முன்பே இந்த மாற்றம் நிகழலாம். இது குறித்து யோசித்துப் பார்க்கையில் நிச்சயம் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார்கள். புத்தகங்களை சேகரித்து வைப்பதென்பது பொதுவாக நூலகர் செய்யும் வேலை. டிஜிட்டல் மையமாக மாற போகும் இந்த சூழ்நிலையில், கிடைக்காத அறிய புத்தகங்கள் சின்ன நூல்கங்களில் இருக்கிறதென்றால் அவற்றையும் மெதுவாக டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்ற வேண்டும். நூலகர் எப்படி இயங்க வேண்டும் என்பதையே மாற்றி அமைக்க வேண்டிய சூழல் வந்துவிடும். இதை இப்போதே செய்தால் பிற்காலத்தில் பாதுகாக்க முடியாத புத்தகங்களையெல்லாம் சேகரிக்க இயலும். அனைத்தையும் ஒரு இடத்தில் இருந்து எடுத்துக்கொள்ள முடியும் என்ற போது, நானும் ஏன் அதை செய்ய வேண்டும். எனக்கு தேவையானது மட்டும் போதும். அதுவும் வாழ்நாள் தேவைக்காக சேர்த்து வைத்துக்கொண்டிருந்தேன், அதுவும் தேவையில்லை. எனக்கு தேவையானதை அவ்வப்போது ஒன்று அல்ல இரண்டு என அந்த காலகட்டத்துக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். சமகாலத்துக்கு தேவையானவை என்னவோ, அதை தேடி எடுக்கும் சாத்திய கூறுகள் இருக்கும் போது எதற்கு அனைத்தும் வைத்துக்கொள்ள வேண்டும். வரும் காலங்களில் பத்திரிக்கைகளிலேயே புகைப்படங்களை அசையும் பிம்பமாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பார்க்கலாம். டிஜிட்டல் தொழில்டநுட்பத்தை தவிர்க்கவே முடியாது என்ற இடம் இப்போது வந்துவிட்டது.

உங்களுடைய இருப்பு மற்றும் கலாச்சார பின்புலத்தை வைத்துக்கொண்டு, இனி வரும் நாட்களில் மற்ற தரவுகள் மட்டுமில்லாமல், எங்கிருக்கிறேனோ அதற்கான தரவுகளையும் சேர்த்து, என்னோடு சேர்த்து என்னை சுற்றி என்னோடும் வாழ்வோடும் சம்பந்தப்பட்ட அசலானதாக கருதப்படும் ஒரு இடம் படைப்பில் உண்டு. இவையெல்லாம் சேராமல் ஒன்றுபடாமல் இருப்பதையும் பார்த்துள்ளேன். இருப்பிலே ஒன்ற முடியாமல் இருந்ததை சமீபத்தில் நடந்த ஆர்ட் சென்னை நிகழ்வை சொல்லுவேன். சென்னை ஆர்ட் சூழலில் டைனாமிஸம் இல்லை என சமீபத்தில் ஓவியர் விவான் சுந்திரம் ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார். என் மனதில் இருப்பதை அவர் அப்படியே சொன்னது போல்தான் உணர்ந்தேன். கடந்த 35 வருடங்களாக, அரைத்த மாவையே அரைத்து ஒரு தேங்கிய குட்டை போன்றே இருக்கிறது. திரும்ப திரும்ப அதே இடத்திற்க்குள்ளே இருந்துக்கொண்டு உலகளவில் நடக்கும் மாற்றங்களை உள்வாங்காமல் இருக்கிறது. இங்கிருப்பர்வர்கள் தேங்கியே இருக்கிறார்கள் என உணர்கிறேன். ஆர்ட் சென்னை, பெயர்தான் சென்னை என்று இருக்கிறது. சென்னைக்கும் அதற்கும் தொடர்பில்லை. இதில் உள்ள படைப்புகள் அனைத்தும் சென்னையல்லாமல் எந்த இடத்திலும் படைக்க முடியும். அல்லது சென்னை என்ற அடை மொழி இல்லாமலே சொல்லக்கூடிய கலைப்படைப்பு தான். சென்னைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. வடக்கிலிருந்து இங்கு வந்து கலை வியாபாரத்தை விரிவுபடுத்த மட்டுமே இது உதவியாக இருக்கிறது. காட்சியகங்கள் (Gallery) தன் வசத்தோடு நடத்தும் அரசியலுக்கே இவை வழிவகுக்கும். கச்சேரிகளில் பாடிக்கொண்டிருக்கும் இசை கலைஞர்களை வைத்து சபா ஒரு அரசியல் நடத்துகிறது, கிட்டத்தட்ட அந்த இடத்திற்கு இதுவும் சென்றுவிடும் என்று தான் தோன்றுகிறது. ஆர்டிஸ்ட்களுக்கான ஒரு சபாவாக ஆர்ட் சென்னை மாறிவிடக்கூடிய நிலை வந்துவிடும். நவீன வயப்பட்ட இடம், உலகளவில் இருக்கும் துணைக்கலைகள், அதாவது விஷ்வல் ஆர்ட்டிலேயே இருக்கு பேரலல் ஆர்ட், அதுவெல்லாம் ஒன்று சேராமல், வெறுமென தொடக்க நிலையின் பணிபுரிபவருக்கான வடிகாலாகவும் உள்ளது. இது தொடர்ந்தால் நீர்த்து போய் சரியான போஷாக்கு இல்லாத குழந்தை போன்று ஒரு இடத்திற்கு ஆர்ட் சென்னை வந்துவிடும். நவீனவயப்பட்ட நிலை அங்கில்லை. குறிப்பிட்ட ஒரு பத்து பேர், 30 வருடமாக அவர்களே கலையை நிர்னயிப்பது போன்ற ஒரு நிலை சென்னையில் உள்ளது, டெல்லியில் உள்ள தெரிந்த தொடர்பு ஆட்களை வைத்து கலை சூழலை பொய்யாக கட்டியமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

1980'களில், வீவர்ஸ் செர்விஸ் சென்டரில் ஆடை வடிவமைப்பு செய்துக்கொண்டிருந்தேன். அங்கு பூ போன்ற வடிவங்கள் செய்துக்கொண்டிருந்தேன். அதைவிட மனித உருவத்தை வரைவது இன்னும் சவாலானது. அதை நோக்கி நான் சென்றேன். எழுத்தாளர்களுக்கு ஓவியம் வரையும் போது, என்னுடைய பழைய ஓவியங்களையே பல முறை இணைத்திருக்கிறேன். எழுத்தோடு இணைந்து பணி செய்வதென்பது குறைவான வேலை ஒன்றுமில்லை. அதையே தொடர்ந்தும் செய்யவில்லை, அதிலிருந்து மீளத்தான் தொடர்ந்து பணியாற்றிவருகிறேன். மக்களை விட்டு விலகாமல் ஒரு கலை உலகத்தை உருவாக்கி, அதற்குள்ளாகவே நெருக்கி இருக்கும் இடமல்லாமல் நேரிடையாக மக்களிடத்தில் தொடர்பு கொள்ளும் இடத்தையும் ஏற்படுத்திக்கொண்டு அதனுடனும் தொடர்ந்து பணி செய்து வருகிறேன். உணர்வு பூர்வமாகாவும் பொறுப்புடனும் பணி புரிந்த ஒரு கலைஞனின் படைப்பு மக்களிடமிருந்து விலகியிருப்பது போலவும், ஆர்ட் சென்னை அதை முதல் முதலாக மக்களுக்கு காட்சிபடுத்துவது போலவும் ஒரு பாவனை ஏற்படுத்துகிறார்கள். ஒட்டுமொத்தமாக அதை நிராகரித்து சொல்லவில்லை, அதில் ஓரிருவர் நம்பகத்தன்மைமிக்க சிறந்த கலைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் சமகால சூழலை நிதர்சனமாக பார்த்துவிட்டு அதற்கு தக்கபடியான தன்னுடைய எதிர்வினையை சொல்வதற்கு பயப்படுவராகவும் இருக்கிறார்கள் பலர். தன்னை நிராகரித்துவிடுவார்களோ என்ற பயத்தில் பேசுவதில்லை. அதே நேரத்தில் எனக்கு தெரிந்தவர்களில் மிக சிலரே சரியான பயிற்சி படிப்பு பெற்று வந்தவர்கள். மற்றவர்கள் முடிந்த வரை வரையலாம், வரைய வராத இடத்திலெல்லாம் நவீன ஓவியம் வரைபவர்களாக இருக்கிறார்கள். இங்கு ஏற்கனவே பத்திரிக்கையில் ஓவியம் வரையும் பத்திரிக்கை ஓவியர்களிடம், நவீன ஓவியத்தைப் புரியாமலேவும், ஆராயாமலும் முட்டாளத்தனமாக நிராகரிக்கும் ஒரு பழைமையான போக்கு இருக்கிறது. நவீனம் என்று சொல்லிவிட்டு 30 வருடமாக மாறுதல் விரும்பாதவர்களாகவே இவர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டு குழுக்களையும் நான் நிராகரிக்கிறேன். காலத்துடன் சேர்ந்துசென்று ஒர் இணைப்பை ஏற்படுத்துபவனாக யாரும் இல்லை.

****

பாலு மகேந்திரா சமீபத்தில் இறந்துவிட்டார். எனக்கு நெருங்கிய நண்பர் அவர். இந்த யோசனையெல்லாம் வரும் போது தான் அவருடைய இழப்பும் சமகாலத்தில் வருகிறது. 100 ஆண்டு சினிமா வரலாற்றை பார்த்தோமெனில், முதலில் ஒருவரே சினிமாவை கண்டறிந்து, இயக்கி, தயாரித்து, விநியோகிஸ்தராகவும் இருந்து, முன்னிருந்து அனைத்து வேலையும் ஒருவரே செய்து அவரே மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் நிலை இருந்தது. அந்த காலக்கட்டத்தில் எல்லிஸ்.ஆர்.டங்கன் போன்றவர்கள் வந்து உதவ வேண்டிய நிலை இருந்தது. பிறகு எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.எம்.செட்டியார் போன்றவர்கள் எல்லாம் வருகிறார்கள். படத்தயாரிப்பு நிறுவனத்தை இவர்கள் ஆரம்பித்தனர். கதை-வசனம் எழுதுவதற்காக சிலரை வைத்துக்கொள்வார்கள். இதற்கு முன்பும் இது குறித்து குறிப்பிட்டுள்ளேன். சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இங்கு இல்லை. ஒளிப்பதிவாளர், ஒளி பதிவு செய்வார். அதை படத்தொகுப்பாளர், அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்த்து வெட்டி சேர்த்து திரைப்படமாக தொகுத்து உருவாக்குவார். ஒரு சினிமாவை முழுமையாக கட்டமைப்பதற்கான சக்தி ஒரு படத்தொகுப்பாளர்களுக்கு வந்தது. எழுதுபவர்க்கு தொழிநுட்ப அறிவு இல்லை, அந்த பகுதியை அவர்கள் தொடுவதே இல்லை. சினிமாவிற்க்குள் வரும் இப்போதைய நவீன எழுத்தாளர்கள் வரை இது தொடர்கிறது. பழைய எழுத்தாளர்கள் எழுதினார்கள், தொழில்நுட்பம் சார்ந்தவற்றை கற்றுக்கொள்ளவில்லை. படத்தொகுப்பாளராக இருந்து இயக்குநராக மாறியவர்கள் பின்பு வருகிறார்கள். அதன் பின்பு ஶ்ரீதர் வருகிறார். கேமரா கோணங்களையும் தெரிந்து, கதை எழுதவும் தெரிந்து, ஒரு முழுமையான இயக்குநராக இருந்து, அனைத்தும் தெரிந்த ஒருவராக வருகிறார். அவருக்கு அடுத்த பாலசந்தர் போன்றவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கும் இதே முகம் தான் கிட்டதட்ட கிடைக்கிறது. பரணி தான் போஸ்டர் வடிவமைப்பவராக இருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் அனைத்தும் ஒருவரே செய்வது போல் இருந்தது, பிறகு ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனங்கள், அதன் பின்பு தொழில்நுட்ப கலைஞர்களாக இருந்து இயக்குநரானவர்கள் அதன் பின்பு தொழில் நுட்பம் & எழுத்து தெரிந்த ஒருவர் வருகிறார். இப்படியாக படம் எடுக்கும் முறை மாறியது போல், தொழில்நுட்ப முறைகளும் மாறிக்கொண்டே வந்தது. ஸ்டுடியோவின் மிட்ச்சல் கேமராவில் இல்லாத சாத்தியங்களை ஆரிஃப்ளெக்ஸ் கொடுத்தது. லென்ஸ்களின் கண்டுபிடிப்புகள் மேலும் பல சாத்தியங்களை உண்டு பண்ணியது. இந்த சாத்தியங்கள் 40 ஆண்டுகள் உதவியது. அதன் பிறகு கடந்த 15-20 ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி வந்தது. சினிமா டிஜிட்டல் மையமாக தான் மாறும். கணினியின் பிக்சலுக்கும் ஃப்லிம் லேப்புக்கும் பெரும் சண்டை ஏற்படும். எனக்கு தெரிந்து கணினி தான் வெல்லும், டிஜிட்டல் தான் வெல்லும் என்ற என் அனுமானம் சரியாகி விட்டது. அது ஜனநாயகத்தை ஏற்படுத்துகிறது. கலைஞர்களுடைய நிலையை சமம் படுத்தி, எல்லாருக்கும் வாய்ப்புகளும் சாத்தியங்களும் கிடைக்கிறது.

எண்பதுகளில் அறிவுமதி மூலமே பாலு மகேந்திரா எனக்கு அறிமுகமானார். இளையராஜாவுடன் இருந்த சவுந்தரை பார்க்க செல்லும் போது ஸ்டுடியோவின் வேறு தளத்தில் பாலு மகேந்திரா இருந்தால் அவரையும் சந்தித்ததுண்டு. பத்திரிக்கைகள் மூலமாக என்னுடைய ஓவியங்களை பார்த்திருந்ததால் அதன் சிறப்பை குறித்து பாராட்டினார். அதை தொடர்ந்து ஒரு நீண்ட நட்பு அவருடன் எனக்கு கிடைத்தது. பல நேரங்களில் ஓவியங்கள், ஒளியமைப்பு, ரெம்ப்ரான்ட் குறித்து என்னிடம் பேசுவார். நான் பார்த்த சில படங்களைப் பற்றி அவரிடம் தெரிவித்ததுண்டு, ஒரு முறை க்வெஸ்ட் ஃபார் ஃபையர் (Quest for Fire) திரைப்படத்தைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். அந்த நேரம் டெஸ்மன்ட் மோரிஸின் புத்தகங்களை அதிகமாக படித்துக்கொண்டிருந்தேன், அவரின் பங்களிப்பு இந்த படத்தில் இருக்கிறது என அவரிடம் சொன்னவுடன் உணர்ச்சிவசப்பட்டு, நணபர்களிடம் இந்த படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டுள்ளேன். நீங்களும் அதையே சொல்லுகிறீர் என கட்டிப்பிடித்துக்கொண்டார்.

"மறுபடியும்" படத்திற்கு டிஸைன் செய்ய அழைத்தார். அதை நான் செய்துக்கொடுத்தேன். சந்தியா ராகம் படத்தில் ஓவியனாக என்னை நடிக்கவைக்க விரும்பி ஆனால் என்னிடம் சொல்லாமல் என்னை வரசொல்லி பேசிக்கொண்டிருந்தார். பேச்சுக்கு இடையில் என்னை பார்த்துக்கொண்டே இருந்தார், எனக்கு என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறார் என தெரிந்தது. முத்தின தோற்றத்தோடு தாடியுடன் நீண்ட முடியுடன் ஓவியர் கதாபாத்திரத்திற்கு ஒருவர் தேவை, நீங்கள் சின்ன பையன் மாதிரி இருக்கீங்க என பிற்காலத்தில் சொன்னார். மத்திய வயதில் தாடியுடன் பொதுவான ஓவியர் தோற்றத்தோடு தேவை என்பதால் சந்தானத்தை நடிக்க வைத்தேன் என பின்னர் சொன்னார். பொதுவான பத்திரிக்கை நண்பர் ஒருவர் மூலம் சந்தியா ராகம் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போதே என்னை அங்கு வரவைத்தார், அப்போது இவை எதுவும் தெரியாது, பிறகுதான் என்னை இந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க வைக்க நினைத்தார் என அவர் கூறி தெரிந்தது.

ஸ்டுடியோ முறை விலகியப்பின் கேமிராவோடு கிராமத்துக்கு செல்வதென்பதில் ஆரிஃப்ளெக்ஸ் அதிக சாத்தியங்களை ஏற்படுத்தியது. கல்லூரியில் படித்து, கலை ஆர்வத்துடன், ராமு கரியத் மற்றும் கேரள படங்களில் பணிபுரிந்த அனுபவத்துடன், இயக்கம் மற்றும் சினிமா சார்ந்தவற்றை ஒழுங்குடன் கற்றும், தனக்கான ஒரு வெளியை வைத்துக்கொண்டும், நாடகத்தன்மையற்று படங்களை ஒழுக்கத்துடன் சினிமாவிற்கான சமகால சாத்தியங்களடன், சின்ன கதைகளங்கள் வைத்துக்கொண்டு, அதற்குள் படடோபம் இல்லாமல், ஒரு ஒழுங்குடன் கடந்த நாற்பது வருடம் பாலு மகிந்திரா இயங்கினார். அவரது முதல் படம் கோகிலா, 20 வருடங்கள் கழித்து இந்தியில் அவுர் ஏக் ப்ரேம் கஹானி என கோகிலாவை எடுக்கும் போது எனக்கு அதை காண்பித்தார். ஒரே கதையாக இருந்தாலும், அது வேறு இது வேறாக இருந்தது. அவரை முதலில் அடையாளம் கண்டுகொண்டது நெல்லு திரைப்படத்தில் தான், அதன் பின் பிராயணம். மலையாள பட இயக்குனர்களுடன் தொடர்ந்து வேலை செய்கிறார், பிறகு தனியாக அவரே படம் இயக்குகிறார். கதை முக்கியம் தான், ஆனால் என்னை பொருத்தளவில் வடிவம் தான் முதல் அதன் பின் கதை. பார்வையாளரின் கவனத்தை சரியாக ஈர்க்க வேண்டுமென்றால் வடிவத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். இங்கு வடிவத்தை சரியாக பயன்படுத்துபவர்கள் இல்லை. நான் அறிந்து அந்த வெற்றிடத்தை இருவர் இங்கு நிரப்பினார்கள். ஒருவர் பாலு மகேந்திரா, இன்னொருவர் பரதன். பரதன் தமிழ் சினிமாவில் பாலு மகேந்திராவை போல் அதிகம் இயங்கவில்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் அவர் அறிந்தவராகவே இருந்திருக்கிறார். ஒரு பத்திரிக்கைக்கு நான் ஆலோசராக இருந்தேன். உங்கள் பத்திரிக்கையில் ஒரு மாற்றம் வரப்போகிறது என தொலைப்பேசியில் அழைத்துக் கேட்டார், எனக்கு தெரியாது என்றேன். உங்க எடிட்டருக்கு தெரியுமா என்று கேட்டார், அவருக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லியிருப்பாரே என்றேன். என்ன நீங்க ரெண்டு பேரும் பேசிகிறீங்க, பாருங்க ஒரு மாற்றம் வரப்போகிறது என்றார். அவர் சொன்ன மாற்றமும் நடந்தது. முன்னறிந்தும் சில விஷயங்களை எனக்கு சொல்லியிருக்கிறார். என்னுடைய மாணவன் அமர்நாத், அனிமேஷனில் பணிபுரிந்தவன், திரைப்படங்களில் வேலை செய்ய விரும்பியதால் அவனை பாலு மகேந்திராவிடம் அழைத்து சென்றேன். அவனுடைய ஸ்டோரி போர்டெல்லாம் பாருங்க, உங்களுக்கு அவன் உதவியாக இருப்பான் என நம்புகிறேன், அவனும் உங்களிடம் கற்றுக்கொள்வான். ஆனால் நீங்கள் முழுவதாக பாருங்க, பார்த்துவிட்டு வைத்துக்கொள்வதா என முடிவெடுங்க என்றேன். நான் இருக்கும்போதே அவனை அழைத்து, அவனுடைய படைப்புகளை பார்த்துவிட்டு, இது என்னிடம் இருக்கட்டும் நீ நாளை வா என்றார். நான் உங்களுக்கு கஷ்டம் கொடுத்துட்டேனோ என்றேன், இல்ல மருது நீங்க சொல்லிட்டீங்கல எடுத்துக்கலாம் என்றார். அப்படியெல்லாம் இல்லீங்க சார் உங்களுக்கு உதவியாக இருக்கனும் அவனுக்கும் பயனுள்ளதாக இருக்கனும், நீங்க பார்த்துவிட்டு முடிவெடுங்க என்றேன். அவனது படைப்புகளைப் பார்த்து சேர்த்துக்கொண்டார். தேவையானவற்றை சரியாக பார்த்து தேர்ந்தெடுப்பவர்.

நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்துக் கொண்டோம். மேடையில் அமர்ந்துக்கொண்டு பலவற்றைக் குறித்துப் பேசினோம். ஈழம் சார்ந்தும் சிலவற்றைப் பேசினோம். ஈழம் குறித்து எழுத்தாளர்கள் சரியான முறையில் எதிர்வினையாற்றவில்லை என்று சமீபத்திலும் தெரிவித்திருந்தேன். உலகளவில் மக்களின் போராட்டங்களுடன் எழுத்தாளர்கள்/அறிவுஜீவிகளின் பங்களிப்பு இருப்பதை பார்க்க முடிகிறது. பல ஓவியங்களின் மூலம் மக்கள் போராட்டத்தில் எழுத்தாளர்கள்/கலைஞர்கள்/அறிவுஜீவிகள் கலந்துக் கொண்டதை உலகம் முழுவதும் பார்த்திருக்கிறேன். சரித்தரித்தை படிக்கும் போது எழுத்தாளர்களும் ஓவியர்களும் மக்களுடனே அவர்களின் போராட்டத்திற்கு துணை நின்றுள்ளனர். அந்த வகையில் மிகப் பெரிய ஏமாற்றமே இங்கு. இது குறித்து அவரிடமும் பேசினேன். உங்களை போன்றவர்கள் இது குறித்து வாய்ப்பு கிடைக்கும் போது பேச வேண்டும் என்றேன். அதே மேடையில் இது குறித்து பேசினார். எனக்கும் அவருக்குமான ஒத்த கருத்தான ஒன்றை அதே மேடையில் பேசினார்.

நான் அவரிடம் டிஜிட்டல் ஃபிலிம், க்ராபிக்ஸ் குறித்தெல்லாம் பேசுவேன். எனக்கு டிஜிட்டல் தெரியாது மருது என கூறுவார். காலத்திற்க்கேற்றார் போல் இணைந்து புதியவற்றை புரிந்து, கற்றுக்கொண்டு அதை பயன்படுத்த ஆரம்பித்தார், வீடியோவை கற்றுக்கொண்டு அதை உபயோகித்து அதன்பின் சிறிய 5டி கேமராவில் தனது இறுதி படத்தை எடுத்தார். வெறும் பணம் பண்ணும் நோக்கமில்லாமல், இளைஞர்களுடன் பகிர்தல், ஆசிரியராக செயல்பட்டது இவை எனக்கு அவர் மீது பெரிய மதிப்பை ஏற்படுத்தியது. பலபேருடன் சேர்ந்து பயணிப்பதில் சிறந்து விளங்கினார். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குனர் என மூன்றையும் ஒழுங்குடன் செய்வதில் சிறந்து விளங்கினார்.

எப்போதும் விழிப்புடன் இருப்பவர், செய்வதை சிறப்பாகவும் நிறைவாகவும் செய்பவர். வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தவர். இலங்கையிலிருந்து வந்தவுடன், மாணவ பருவத்தில் அவருக்கிருந்த நிலையற்ற நிலமையினால் ஏற்ப்பட்ட ஒரு வித பயத்தை தனது கலை சார்ந்த பணியின் மகிழ்ச்சியினாலே வென்றார் என்றே கருதுகிறேன். எந்த நேரத்திலும் கலை சார்ந்த ஒழுக்கத்தை விட்டு கொடுக்கவில்லை. பெரும்பாலானவர்கள் மூன்றாம் பிறையை பாராட்டுவார்கள். வீட்டுக்குள் நடக்கும் காட்சி முடிந்தவுடன், விடியற் காலை பரந்த நிலத் தோற்றத்தில் ஒரு சிறிய ஸ்லோப் பேன் வரும், அதில் அவரை வியந்து பார்த்தேன். கதை, மற்றவர்கள் புகழ்ந்து சொல்லும் நடிப்பு, இவை எதுவும் என்னை தொடவில்லை, இந்த காட்சியே என்னை ஈர்த்தது. மலைப்பிரதேசத்தில், குளிரில் ஒரு அறைக்குள் நடக்கும் ஆழமான காட்சி பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தும், அது தணியும் போது இசையுடன் மலைப்பிரதேசத்தை பேன் ஷாட்டில் காட்டுதல். பிரமாதமான ஒரு உணர்வு. இது தான் எழுத்தப்படாத பிரதி. அவரை மிகவும் கொண்டாட தோன்றியது. நாடகத்தனமான சினிமாவை அவர் உருவாக்கவில்லை. அறுபதுகளில் ஃபிலிம் இன்ஸ்ட்யுட்டில் பார்த்த ரே மற்றும் அந்த காலக்கட்டத்து சிறந்த படங்களில் தாக்கமே அவரிடத்திலும் இருந்தது. நியோ ரியலிஸ்ட்களிடமிருந்து ரே மூலம் இந்தியா பெற்றவையின் நீட்சியே பாலுமகேந்திரா.

அவரின் கல்வி சார்ந்த ஒழுங்கு எனக்கு மிக பிடிக்கும். உண்மையில் அதுவே இளைஞர்களை அவர் பின் வர ஊக்கம் அளித்திருக்கிறது. பாலு மகேந்திராவின் காட்சிகளின் தாக்கத்தை அன்று அவரது இறுதி ஊர்வளத்தில் வந்த கூட்டத்தில் என்னால் பார்க்க முடிந்தது. அந்த கூட்டத்தில் இருந்த பலருக்கு அது தான் காரணம் என்று தெரிந்திருக்காது. அழியாத கோலங்களில் இருக்கும் காட்சியை சிலர் சொல்லிக்கொண்டு இருக்கலாம், ஆனால் அவனும் அறியாதது இது தான். அவர் இறுதி ஊர்வளத்தில் உடன் வந்த இளைஞர்கள் குறித்து இரண்டு நாட்கள் சிந்தித்துக்கொண்டிருந்தேன். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் பல மேடுப்பள்ளங்களை கடந்து வந்தவர். அவரது படத்தின் கதை எனக்கு தெரிந்து மிக பெரியதல்ல. வாழ்வுமுறைக்காக சினிமாவை பயண்படுத்தி ஒரு கதை சொல்ல வரும்போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு, பார்ப்பவர்கள் அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும். இது தான் இந்த துறைக்கு அர்த்தம். இதன் மூலமாகத்தான் பார்வையாளனை அடைய முடியும். வெறும் தமிழ் பேசும் சினிமாவால் முடியாது. இதுவே அந்த இளைஞர்களை பார்க்கும் போது தோன்றியது. அதுவே அவர் விட்டு செல்லும் பாடம். உள்ளடக்கம் மட்டும் முக்கியமல்ல, வடிவத்திற்கான முக்கியத்துவத்தை இளைஞர்கள் புரிந்துக்கொண்டு அதை முன்னெடுத்து சென்றால் தான் சாதிக்க முடியும். அடுத்து வரும் தலைமுறை இதை தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.