உயிர் கொடுக்கும் கலை 12 - டிராட்ஸ்கி மருது

தமிழர் கலை பண்டைய காலத்திலிருந்து மிக உயர்ந்து நிற்கும் ஒன்று. தமிழக சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் படிமங்கள் மூலமாக உறைந்திருக்கும் எல்லாமுமே தமிழருடைய வாழ்வையும் பண்பாட்டையும் சொல்லுவதாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கிற குகை ஓவியங்களிலிருந்து வளர்ச்சிப்பெற்று பல்லவ/சோழர் மற்றும் பண்டைய கால சிற்பங்கள், சித்தன்ன வாசல், நாயக்கர் கால ஓவியங்கள் அனைத்தும் தமிழருடைய வாழ்வு நிலையையும் கலையினுடைய சிறப்பையும் உலகெல்லாம் சொல்லியிருப்பதைப் பற்றி மீண்டும் புதிதாகப் பேச ஒன்றுமில்லைதான். அவ்வளவு தொலைவுக்கு அது எடுத்து சொல்லியாயிற்று. இவை அனைத்தையும் கடந்து, காலனிய காலத்திலிருந்து, குறிப்பாக கடந்த 200 ஆண்டுகளாக, இந்திய வரலாறு, இந்திய வாழ்வு, இந்தியாவில் தென்னிந்திய, திராவிட, தமிழகத்தின் மிக முக்கிய பங்களிப்பு குறித்து கண்டுக் கொள்ளபடாத ஒரு பகுதி உண்டு.
கடந்த 200 வருட, கலை வரலாற்றை ஊடாடி ஆழமாக பார்த்தால், காண்பியியல் மரபில் மிக பெரிய பங்களிப்பை தென்னிந்தியா அளித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இந்த நீண்ட வளர்ச்சி, தமிழகத்திலிருந்து ஆரம்பித்தது என்று நான் கருதுகிறேன். காலனிய காலத்தில் இந்திய அரசாங்கத்திலிருந்த மேல் மட்ட அதிகாரிகளுக்கும் அரச குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் கிடைத்த ஒரு வெளிப்பாடு (exposure), தென்னிந்திய ஓவியத்தில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதில் முன்னுதாரணமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது, ரவி வர்மா. 130 ஆண்டுகளில் அவர் ஒரு முக்கிய மாற்றாக தெரிகிறார். தன்னுடைய ஓவிய வாழ்க்கையை இன்னும் விரிவுபடுத்தி பெரிதாக்கி கொள்வதற்காக, அன்றைய மாறுபட்ட ஊடகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தெரிந்துக்கொள்வதற்காக, பம்பாய்க்கு ஓலியோ க்ராப்பை தெரிந்துக்கொள்வதற்காகவும், அங்கு அச்சு பிரிவை நிர்வகிப்பதற்காகவும் சென்றார்.
ஓலியோ க்ராப் கலை வளர தொடங்கியதால், அவரது கடவுள் பட ஓவியங்கள் அனைவரது வீடுகளுக்கும் சென்று சேர்ந்தது. அவருக்கு ஓவியம் கற்றுக்கொடுத்தவர்கள் வந்த வழியின் மூலமாக இன்னும் சிலருக்கு அந்த வெளிச்சம் தென்பகுதி இந்தியாவில் கிடைத்தது. ரவி வர்மாவின் சமகாலத்தவர், மற்றுமொரு ஓவியர், பம்பாய் ஓவிய கல்லூரியில் படித்து வந்தவர், மராத்தி ஓவியர்களில் முக்கியமானவர்கள் வழியில் வந்தவர் தான் தாதா சாஹேப் பால்கே. தென்னாட்டு புரட்சி நடந்து 40-50 ஆண்டுகளுக்கு பிறகு, வெள்ளையர்களுடன் இருந்த உறவை பேணிக்காக்க, வெள்ளையர்களை சந்தோஷபடுத்துவதற்காக கோடை வாசசத்தளத்தில் பார்ஸி சமூகத்தினரின் நாடகத்தை (பார்ஸி திரையரங்கம்) வட மாநில அரசர்கள் நடத்தினார்கள். பார்ஸி திரையரங்கின் பழைய உடைகளையே தன்னுடைய மாடல்களுக்கு (model) அணிவித்து ஓவியம் வரைந்தார் ரவி வர்மா. அந்த ஓவியத்தை அடிப்படையாக வைத்து தாதா சாஹேப் பால்கே முதல் திரைப்படம் எடுத்தார். தாதா சாஹேப் பால்கேயின் திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. பம்பாய் பெரிய துறைமுகமாக வளர்ந்து, அடுத்த 30 ஆண்டுகளில் மராத்திய திரைப்படம் மிக பெரிய வளர்ச்சியடைந்தது. கல்கத்தாவிலிருந்து திரைப்படத்துறையில் சேர்வதற்கு பலர் பம்பாய் வந்தனர்.
அது மேலும் விரிவடைந்தது. மொழி வழி மாநிலம் பிரிப்பதற்கு முன் தென் பகுதியின் மேலிருந்து பிழைக்க பம்பாய் சென்றனர். இங்கிருந்தும் திரைப்படம் எடுப்பதற்க்காகவும், பாட்டை பதிவு செய்வதற்கு அல்லது மற்ற தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்வதற்காகவும், பம்பாய்,கல்கத்தா என்று தென்பகுதியிலிருந்து சென்றார்கள். இவர்கள் மூலம் மராத்திய வழி கூறுகள் இங்கு வந்தது. இவர்களை தாண்டி, ஆந்திராவின் மேல் பகுதியிலிருந்து சென்று கலையை கற்றுக்கொண்டவர்கள், வியாபார வாய்ப்புகள் வளர்ந்து வருவது கருதி, இங்கு தமிழகத்தில் அடியெடுத்து வைக்கும் போது, மராட்டிய கலை வடிவங்கள் சினிமா மூலமாக இங்கே உள்நுழைந்து. இறுதியில் திரைப்படத்தின் மூலமாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நிலையில், நமது வாழ்வினுடைய மராட்டிய தோற்ற நிலை தமிழக சினிமா வழியாக வந்து, தமிழர்களுடைய வாழ்வு முறையை சித்தரிக்கும் படிமமாக நம்மிடம் வந்து சேர்ந்து உறைந்து விட்டது.

தென் பகுதியில் ரவி வர்மாவிற்கு கிடைத்த வெளிப்பாடு மூலமாக, இங்கு கிடைத்த மற்ற சில ஓவியர்களின் வழிதோன்றலாக வந்தவர்கள் மூலமாக, தென் பகுதியிலிருந்து, நாகர் கோவில் பகுதியிலிருந்து கே. மாதவன் போன்ற ஓவியர்கள் வந்தார்கள். நாடகம், சினிமா வழியாக சென்னைக்கு வந்தார்கள். இந்தியாவின் முதல் ஓவிய கல்லூரியான சென்னை ஓவிய கல்லூரியின் பங்களிப்பும் வளர்ந்து, இங்கிருந்து கல்கத்தாவரை தாக்கம் செல்லுதியது. 1920-30'களில் நாடக கலைக்கு திரைச்சீலை வரைவதும், உடை வடிவம், பின்புலங்களை வரைபவராக சிலர் இருந்தார்கள். 1930-40'களில் பத்திரிக்கைகள் பெருக ஆரம்பித்தது, பிறகு கல்கி, ஆனந்த விகடன் போன்ற வார இதழ்கள் சித்திர மரபை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றது. ரவி வர்மா வழியாக சென்று சென்னைக்கு திரும்புகிற மராட்டிய வழி சித்திர மரபும், சினிமாவும் எல்லாரிடத்திலும் தாக்கம் ஏற்படுத்தியது. பத்திரிக்கைகள், கோபுலு, சில்பி போன்ற ஓவியர்கள் மூலமாக கிடைக்கிற ஒரு பகுதி, ஓவிய கல்லூரியின் சிற்ப ஆசிரியராக இருந்த ராய் சவுத்ரி மூலமாக கிடைக்கிற ஒரு பகுதி, நாடகம் வழியாக கே.மாதவன், சினிமாவுக்கு வந்து அனைத்து வேலைகளையும் செய்து, திராவிட கட்சி, என்.எஸ்.கேவுடன் சேர்ந்து ஒரு பகுதியை சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்தவருமாகவும் இருந்தார்.

1930-40களில் எல்லாருக்கும் சினிமாவில் வேலை இல்லை என்பதால், நாடகத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தவர்கள் நாடகம் அருகி சினிமா பெருகும் காலகட்டத்தில், சிவகாசியில் துணை தொழிலாக அச்சு தொழில் உருவெடுக்க, பல ஓவியர்கள் அங்கு சென்றுவிட்டனர். எந்திரத்திற்கு தக்கப்படியான ஒரு கலையை வடிவமைப்பது என அங்கு "காலண்டர் ART" உதயமானது. இந்த ஊடாட்டங்கள் இந்திய வெகுஜன கலை (popular art) வடிவத்தை நிர்ணயித்தது என்றும் சொல்ல வேண்டும். சரியாக சொல்லவேண்டுமென்றால், காண்பியல் மரபு நிலையில் தென்னிந்தியாவின் செயல்பாடும், குறிப்பாக தமிழ் நாட்டின் செயல்பாடும், தென்னிந்திய கலை வடிவத்தை உள்ளடக்கி கொண்டு தமிழ் நாடு ஒரு மாபெரும் மாற்றத்தை கடந்த 150 ஆண்டுகளில் செய்திருப்பதை நீங்கள் ஆழமாக பார்த்தால் தெரியும். இது குறித்து விரிவாக பேச படவில்லை. பத்திரிக்கை ஒரு பகுதி, நாடக வெளி, ரவி வர்மா மூலமாக பம்பாய் சென்று திரும்பி வந்தவர்கள் மூலமாக கிடைத்த ஒரு நிலை, அவரது ஓவியங்கள் மூலமாக சினிமாவிற்க்குள் நுழைந்த வந்த நிலை. கிட்டத்தட்ட 120-150 ஆண்டுகள் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்று. தமிழகத்தின் பங்களிப்பை இந்தியளவில் யாரும் எடுத்து சொல்வதும் பேசுவதுமான நிலை நம்மிடமில்லை.

கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்னால் சுதந்திரத்திற்காக இந்திய மண்ணில், தமிழகத்தில் முதல் புரட்சி செய்து, திப்புவிலிருந்து மிக முக்கியமானவர்களின் பங்களிப்பு எப்படி இன்றுவரை இந்தியாவிற்கான ஆரம்பக்கட்ட தியாகம் என கருதபடவில்லையோ, அது போலவே கலை வடிவத்தில் தென்னிந்தியா/தமிழகத்தின் பங்கு இந்தியளவில் பெரிதான ஒரு பகுதியாக கருதபடவில்லை. அரசு, ஆட்சி, மத்திய நிலை, இந்திய சுதந்திரத்திற்கு பிறகான அதிகாரகட்டு எல்லாம் வட மாநிலத்தில் இருக்கும் பட்சத்தில், இது ஒரு பெரிதான பகுதியாக எடுத்து சொல்லவில்லை. நாமும் பழக்கப்படுத்தப்பட்ட செய்திகளின் ஊடே வாழ்வதால், இதன் முக்கியத்துவம் கருதி இயங்கவில்லை. எனவே இதை ஆழமாக பார்ப்பவர்கள், இது ஒரு முக்கியமான காரியமென இந்தியாவிற்கு எடுத்து சொல்வதற்கான செயலை செய்ய வேண்டும்.

தமிழகத்தின் தனி தமிழ் காண்பியல் வடிவ நிலையை காலனிய ஆட்சி காலத்தில் மற்ற மாநிலத்திலிருந்தும் இங்கு வந்தது. மொழிவாரி மாநில பிரிப்பதற்கு முன்னிருந்த வேற்று மாநில கலை வடிவங்கள், சென்னையிலிருந்து தென்னிந்திய கலை வடிவமாக மத்திய அரசு கலை நிறுவனங்களுக்கும், கலை போஷகர்களுக்கும் காண்பித்த போது, தனித்த தமிழகத்தின் அடையாளத்தை சொல்ல முடியாத நிலை இருந்தது. தமிழகத்திற்கு அருகில் இருக்கும் மற்ற தென்னிந்திய மாநிலங்களின் வடிவங்களையே சென்னையிலிருந்து சென்ற கலை வடிவங்களாக தில்லி போன்ற இடங்களுக்கு கொண்டு சென்று சொல்லுகிறவர்கள் அல்லது காண்பிப்பவர்கள், இதுவே தமிழ் வடிவமாகவும் அடையாளப் படுத்தும் நிலையுமாக இருந்தது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பின்பு, இதில் பெரும் பாதிப்பு தனித்த அடையாளத்தையும் கலை வடிவத்தை காப்பதிலும், குறிப்பாக கிராமிய கலை வடிவங்கள் காப்பதற்கான நிலை தவறி, ஒரு தாமதமான வளர்ச்சிக்கான நிலைதான் இது ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இந்த தனித்த அடையாளத்தை கண்டுணர்ந்து வளர்க்க இயலாத ஒரு நிலை தான் நமக்கு ஏற்பட்டிருக்கிறது என நான் உணர்கிறேன்.

பார்ஸி திரையரங்கிலிருந்து மராத்திய வடிவம் இங்கு வந்து தமிழ் வடிவத்திலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாக நீக்கமற நிறைந்திருக்கிறது. 100 ஆண்டு காலகட்டத்தில் திரைப்படம் மூலமாக பாதிப்பு ஏற்படுத்தி அதன் மூலமாக அடுத்த கட்டத்துக்கு வந்த பத்திரிக்கை ஓவியங்களில் கூட, காட்சி படுத்துவதில் மராத்திய தன்மை கொண்ட முறை முற்றிலுமாக இதிலிருந்து விடுபடாமல் அதுவே நமது மரபாகவும் வழியாகவும் பார்க்கிற நிலை இருக்கிறது. 100 ஆண்டுகளாக நமக்கு கிடைத்த ஆவணங்களிலிருந்து, நாம் அதிலிருந்து விடுபட வேண்டுமென தெள்ள தெளிவாக காட்டுகிறது. இன்று அந்த ஆவணமே நமக்கு உணர்த்துக்கிறது.

தமிழ் சார்ந்து பேசும் பெருவாரியானவர்கள் காண்பியல் மொழி குறித்தோ, அதன் முக்கியத்துவம் குறித்தோ எப்போதும் பேசுவதே இல்லை. மாறாக தமிழரின் பெருமையை தமிழிலேயே தமிழர் மத்தியில் மட்டும் பேசுபவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, உலக திரைப்பட விழாக்களில் திரைப்பட தேர்வு செய்யும் போது ஒரு விசேஷ உத்தியை பயன்படுத்துவார்கள். ஒலியை நிறுத்திவிட்டு திரைப்படத்தை பார்க்கும் போது திரைப்பட படிமங்கள் மூலமாகவே காண்பியல் மொழியில் அந்த திரைப்படத்தின் பெருவாரியான பகுதிகள் பார்வையாளனுக்கு புரியுமாயின், அதை தேர்வு செய்வார்கள். அப்படியான திரைப்படங்களுக்கு பரிசு அளிப்பதில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தமிழ் கலைகளைப் பாதுகாப்பது பற்றிய தீவிரம் மிகவும் அவசியம். திருப்பணி என்ற பெயரில் பண்டைய கலையை பூசி வெள்ளையடிக்கப்படுகிறது அல்லது மாற்றியமைக்கப்படுகிறது. சில முக்கியமான கோவில்களில், தஞ்சை கோவில் உட்பட, பண்டைய சுதை வேலைகள், கோபுரங்களிலிருந்த சுதை வேலைகள், ஓவ்வொரு 50 ஆண்டுகளுக்கு 100 ஆண்டுகளுக்கும் அன்றைய காலகட்டத்து கலைஞர்களின் வடிவத்தை உரையவைத்திருக்கிறது. கோவிலுக்கு திருப்பணி செய்கிறோம் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மாற்றி அமைக்கப்படுகிறது. இன்னும் சிதலமாக இருக்கும் பகுதிகள், ரவி வர்மாவினுடைய பாதிப்பு வந்தபிறகு செய்தவர்கள், 50-60க்கு பின் மாற்றி அமைத்தனர், 100 வருடங்களுக்கு முன்பு இருக்கிற கோவில்களின் சுதை, இவற்றினுடைய மாற்றான அமைப்பை கண்டுணர்ந்து, மூன்றிலும் இருக்கும் பிரிவுகளில் நமக்குப் படிக்கக் கிடைக்கும் பகுதி அதிகம். ஆனால் திருப்பணி என்று மாற்றியமைப்பதால், எல்லாமும் ஒன்று போல் ஒரே அளவாக மொக்கையாக செய்வதோடு, பழைய விஷயங்களை பாதுகாக்கும் மனநிலை நம்மிடம் இல்லாமல் போய்விட்டது.

வெளிநாட்டின் பயணத்தின் போதும், இணையதளங்கள் மூலமாகவும் தெரிந்துக்கொண்டது. அந்தந்த பகுதிகளின் பள்ளி அல்லது நூலகம் ஒரு சில நல்ல முன்னெடுப்புகள் செய்கிறார்கள் என்று அறிந்தேன். அந்த பகுதியிலிருக்கும் வீடுகளில் இருக்கும் அறிய படங்கள், 50-100 வருட படங்கள், அல்லது அவர்களின் முன்னோரின் படங்கள், அல்லது பழைய ஏடுகளில் இருக்கும் படங்கள், மூதாதையர் சேர்த்து வைத்த பொருள்கள், வீட்டில் உள்ள ஓவியம், பழைய ஒளிப்படம் இவையனைத்தையும் புகைப்படம் எடுத்து பள்ளி குழந்தைகளுக்கு ஆவணப்படுத்தும் பயிற்சி அந்த பகுதி பள்ளி அல்லது நூலகம் செய்கிறது. சேர்த்தவற்றை ஒரு பொது வலைதளத்தில் பதிவு செய்கிறார்க்ள். இது ஒரு அருமையான பழக்கம். இதை நாம் உடனே எவ்வளவு வேகமாக செய்ய முடியுமோ அவ்வளவு வேகமா நாம் செய்ய வேண்டும் என நம்புகிறேன். அதன் மூலம் எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறோம். மூலப்பிரதி எந்த மூளையில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் உலகத்திற்கு தெரிந்த ஒன்றாக இவையனைத்தும் மாறி விடும்.

கணினி மென்பொருள் மூலம் ஆவணப்படுத்தவதற்கான சாத்தியங்கள் பல. தட்டச்சு செய்வது மட்டுமல்ல, புகைப்படமாக எடுப்பது, குறிப்பாக 3டி ஸ்கேன். சில அரிய பொருள்களை சேகரிப்பதன் மூலமாக அது ஒரு நீண்ட பயன்பாட்டிற்கும், அனைவருடைய பார்வைக்கும் செல்லும் வாய்ப்பு உண்டு. பண்டைய பொருள்களை சொல்லாலே தொடர்பு படுத்தி புரிந்துக்கொள்கிறோம். ஆனால் அந்த சொல் இப்போது பயன்பாட்டில் இல்லாத பட்சத்தில், இப்போது பயன்பாட்டில் இருக்கின்ற பொருளுக்கு பண்டைய சொல் இப்போது பயன்படாத நிலையில், இரண்டையும் பொருத்தி புரிந்துக்கொள்ள படிமம் பெருமளவில் பயன்படும். வார்த்தைகளால் மட்டும் தொடர்பு நிலையில் இருப்பனவற்றை, படிமமாக மாற்றுகிற வழியை மேற்கொள்வதன் மூலமாகதான் மொழியை இன்னொரு நிலைக்கு எடுத்து செல்வதாக அர்த்தம். தமிழில் தினப்படி வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு பல்வேறு பண்டைய சொற்களும் வார்த்தைகளும் புழகத்தில் இருக்கின்றது. அழிந்த போன பொருட்களும் இருக்கின்றது. இவற்றை காட்சிப்படுத்தாமல் அந்த சொல்லை நீங்கள் உயிரோடு இருக்க வைக்க முடியாது. அந்த சொல்லை காட்சிப்படுத்த வேண்டும். தமிழ் ஆராய்ச்சியில் உள்ளவர்கள் படிமமாக மாற்றுகிற பணியும் முக்கியம் என்று கருத வேண்டும்.

இன்றைய நவீன தொடர்பு நிலை வளர்ச்சியில் தொடு திரை தான் முக்கியமான வாசலாகக் கருதப்படுகிறது. எந்த மொழியையும் வேறு மொழியாக மாற்றி தரும் மென்பொருள்கள் உச்சத்தை அடைந்திருக்கின்ற இந்த காலக்கட்டதில், மொழி அறிவு காண்பியல் அறிவில் தான் முற்று பெருகின்றது. ஒரு மொழியை நான் பேசினால், ஒரு சாதனம் உலகிலுள்ள அனைத்து மொழியிலும் அதனை மாற்றி தருவதற்கான ஒரு சூழலை வரப்போகும் மென்பொருள்கள் அந்த சாத்தியத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றது. அந்த இடத்தை வெகு விரைவிலேயே நாம் அடைந்துவிடுவோம். அந்த வகையில் ஒரு மொழியை முழுமையாக அறிந்து செயல்படுவது ஒன்று. ஆனால் எந்த மொழியிலும் சொல்லுகிற செய்தி இனி எனக்குக் உடனடி கிடைக்காது என்பதே இனி இல்லவே இல்லை. தமிழ் சார்ந்த தமிழ் சம்பந்தப்பட்ட விஷயங்களை நீங்கள் காட்சி படுத்துவதன் மூலமாகத்தான், இன்னும் ஒரு பெரும் பகுதியை தொட முடியும். தமிழின் வாழ்வை பேசுவதால் மட்டுமல்ல, படிமத்தோடு அதை இணைக்கும் போது தான் இன்னொரு இடத்திற்கு செல்கிறது. எந்த மொழியிலும் ஒரு சொல், கேட்கிறவன் மனதில் ஒரு படிமத்தை சமைக்க முற்படுகிறது. அப்படிமம் உங்கள் கையிலேயே இருந்தால், காட்சிப்பட்டிருந்தால் மொழி அறியாதவனோடும் தொடர்புகொள்ள முடிகிறது. படிம வழியை அதன் முக்கியத்தை அறிந்து, தமிழை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழி என்றும் நாம் உணர வேண்டும். மொழியற்ற ஒரு மொழியின் மூலமாகத்தான் நீங்கள் மொழியை இன்றைய நிலையிலிருந்து நீண்ட காலத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.

தினமணி தமிழ் இலக்கியத் திருவிழாவில் பேசியதிலிருந்து சில துளிகள்.