உலக சினிமா சாதனையாளர்கள் - 3 இங்மர் பெர்க்மன்

சினிமா ரசிகர்கள் ஐரோப்பாவின் தலை சிறந்த டைரக்டர்கள் மூவரை Three 'B's என்று செல்லமாக அழைப்பதுண்டு. அவர்கள் ராபர்ட் பிரஸ்ஸோன் (Robert Bresson) இங்மர் பெர்க்மன் (Ingmar Bergman) லூயி புனுவல் (Luis Bunuel) ஆகியோர்.

இங்மர் பெர்க்மன் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். (இவரது பெயரை நெருக்கமாக உரசிக்கொண்டு செல்லும் இங்கிரிட் பெர்க்மனும் ஸ்வீடிஷ் நடிகைதான்).
ஸ்வீடன் சிறிய நாடு. அதன் மொத்த பரப்பளவு 173666 சதுரமைல்கள். ஜனத்தொகையும் அதற்கொப்ப 1 கோடிக்கும் குறைவானது. இந்த அம்சங்கள் ஸ்வீடிஷ் திரைப்படத்தின் குணாதிசயங்களைத் தீர்மானிக்க பெரிதும் உதவியுள்ளன. குறுகிய ஜனத்தொகை கொண்ட ஸ்வீடனை தங்களது ஆளுகைக்குட்படுத்த முயல்வது அப்படியொன்றும் லாபகரமான செயல் அல்ல என பிற நாட்டுத் திரைப்பட கம்பெனிகள் கருதின. எனவே பிற நாட்டு படங்கள் ஸ்வீடனில் ‘டப்’ செய்யப்படாது. பற்றும் பற்றாமல் சப் – டைட்டில்களுடன் திரையிடப்பட்டன. அவை ஸ்வீடிஷ் நாட்டு மக்களை கவராததில் ஆச்சர்யமில்லை. எனவே ஸ்வீடிஷ் மக்களை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்நாட்டுப் படங்களே அங்கு வெற்றிபெற்றன.

இதன் காரணமாக ஸ்வீடிஷ் படங்களுக்கு வேறு நாட்டு படங்களால் – முக்கியமாக அமெரிக்கப் படங்களால் – பாதிக்கப்பெறாத ஒரு தனித்துவம் வாய்க்கப் பெற்றது. ஆனால் வேறு வகைகளில் இத்தனித்த குணம் ஸ்வீடிஷ் திரைப்படத்தொழிலின் பொருளாதார காரணிகளை அவதிக்குட்படுத்திற்று. ஸ்வீடிஷ் படங்களும் வெளிநாடுகளில் திரையிடப்படமுடியாமல் போயின. அமெரிக்க, ஐரோப்பிய படங்களுக்குரிய உலகத்தினை ஒட்டுமொத்தமாகக் கவரும் தன்மைகள் ஸ்வீடிஷ் படங்களில் இல்லை.
இந்நெருக்கடியை ஸ்வீடன் சமாளித்தவிதம் போற்றற்குரியது. உலகத்தரத்து படங்களைத் தயாரிக்க ஸ்வீடன் முனைந்தது. ஸ்வீடிஷ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் 1963ஆம் ஆண்டு துவக்கப்பட்டு பல நல்ல சினிமா கலைஞர்களை உருவாக்கியது. ஸ்வீடிஷ் பார்லிமெண்ட் தமாஷா வரியை ரத்து செய்ததோடு பட வசூலிலிருந்து பத்து சதவிகித வருமானத்தை இன்ஸ்டிட்யூட்டிற்கு வழங்கி நல்ல படங்களை எடுக்குமாறு ஊக்குவித்தது. சற்றேறக்குறைய இதே காலகட்டத்தில் பல நல்ல டைரக்டர்களும் தோன்றி ஸ்வீடனை உலகத்திரைப்பட வரைபடத்தில் இடம் பெற செய்தனர்.

இங்மர் பெர்க்மன் அவர்களில் முக்கியமானவர்.

எர்னஸ்ட் இங்மர் பெர்க்மன் ஸ்வீடனில் உப்சாலாவில் 1918ஆம் ஆண்டு ஜீலை மாதம் 14ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை எரிக் ஒரு லூதரன் மத போதகர். இப்பின்புலம் சிறு வயது முதலே மதச் சார்புடைய ஒழுக்கக் கண்ணோட்டம் அவரைப் பற்றிக் கொள்ள முக்கிய காரணமாயிருந்தது. பள்ளிப் படிப்பிற்கு பின்னர் சிறிது காலம் இராணுவத்தில் சேவை. அதன் பின்னர் நாடக உலகத்தினுள் நுழைவு.
நாடகங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த அதே சமயத்தில் திரைப்படங்களுக்கும் ஸ்கிரிப்ட் எழுதத் துவங்கினார். அல்ஸ் ஜோபர்க் எனும் டைரக்டருக்கு எழுதிக் கொடுத்த இவரது முதல் ஸ்கிரிப்ட் Frenzy என்ற பெயரில் 1944ஆம் வருடம் திரையிடப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து அவரது முதல் படம் Crisis வெளிவந்தது. ஆனால் உடனடியாக அவர் ஒரு மபெரும் டைரக்டர் என்று உணரப்படவில்லை. இதற்குக் காரணம் அவர் தனக்கான ஒரு உயரிய பாணியை நாளடைவில்தான் ஏற்படுத்திக்கொண்டார். 1955ல் தனது பதினாறாவது படமான Smiles of a summer Night வெளியிடலுக்குப் பிறகுதான் அவர் விசேஷ கவனத்திற்குரியவரகாக மதிக்கப்பட்டார். அப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் அதன் ‘கவித்வ நகைச்சுவை’க்காக விசேஷ பரிசினைப் பெற்றது. 1956ல் அவரது The seventh Seal வெளியாயிற்று. இடைக்காலத்தில் களம் பல கண்டு வீடு திரும்புகிற வீரன் ப்ளாக் காலனுடன் இறுதி முடிவை நோக்கி சதுரங்கம் விளையாடுகிறான். தோற்றால் அவனது உயிரை ஆலன் எடுத்துக் கொள்வான். ஜெயித்தால் காலன் வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். மிகத்திறமையாக ஆட்டத்தை ஆடியும் காலனிடம் வீரன் தோற்றுப் போகிறான். விதியை வெல்ல முடியாது என்பதல்ல இதன் பொருள். வாழ்க்கையின் பொருளை – ரகசியத்தை – அது எதுவாக இருப்பினும் மற்றொருவன் மூலமாகப் பெற முடியாது. போரில் வெற்றி தோல்வி என்பதைப் போன்றல்ல வாழ்வில் அர்த்தம் காண முயல்வது. ஆனால் படத்தில் இதற்கு இணையாக வேறோரு கதையும் சொல்கிறார்.

ஒரு நடிகன் தனது மனைவி குழந்தையுடன் வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். நடிகன் கனவு காண்பவனாக இருக்கிறான். அவன் மனைவி யதார்த்தமான பண்புகள் கொண்டிருக்கிறாள். யதார்த்தமும் கனவும் (அல்லது லட்சியமும்) ஒன்றாக இணைந்த அவர்கள் குடும்பம் பேரழிவிலிருந்து காப்பாற்றப்படுகிறது. ஆனால் வாழ்க்கையைப் பெரும் போராகப் பார்த்து தன்னைவிடப் பெரும் சக்தியுடன் மோதி தோல்வியுறும் ப்ளாக்கிடம் யதார்த்தம் மட்டுமே வறட்சியாக எஞ்சியுள்ளது. உலகம் என்பது மனிதன் கொள்ளும் உலகப்பார்வையை மீறியதாக உள்ளது. உலகத்தைப் புரிந்து வெற்றி கொள்வதற்கு எவ்வளவு தூரம் அறிவு துணை செய்யும் எவ்வளவு தூரம் கற்பனை உபயோகப்படும் என்பது பற்றி எவராலும் கூறமுடியாது. தனிப்பட்ட வாழ்வின் முரண்கள் போலன்றி உலகின் தோற்றம் – அழிவு ஆகியன தீவிரத்துடன் தொடர்வதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். இதை பெர்க்மன் சிறப்பாக ஒரு சிறு காட்சியில் விளக்குகிறார். காலன் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க வேண்டி அவன் ஏறி அமர்ந்துள்ள மரம் முறிந்து விழுமாறு செய்ய அவன் இறந்து போகிறான் . உடனேயே சற்றும் தாமதியாது அந்த வெட்டுப்பட்ட அடிமரத்தின் மீது ஒரு அணில் ஏறி நிற்பது காட்டப்படுகிறது. இந்தப்படம் சாமுவேல் பெக்கட்டின் Waiting for Godot நாடகத்துடன் ஒப்பிடப்பட்டு பெரும் விவாதத்திற்கும் பாராட்டிற்கும் இலக்கானது.

தொடர்ந்து வெளிவந்த அவரது மூன்றன் தொகுதியான Through a Glass Darkly, ஆகியவை அவரது கிறிஸ்துவ எக்ஸிஸ்டென்ஷியல் பார்வையை உறுதிப்படுத்திற்று. விமர்சகர்கள் இப்படங்களை அவ்வளவாக வரவேற்கவில்லை. அவர் சொன்னதையே திரும்ப சொல்வதாக அவர்கள் குறைகூறினர். அவர்களுக்கு பதில் கூறுமுகமாக All These Women எனும் படத்தை அவர் 1963ல் எடுத்தார். இதில் விமர்சகர்கள் தடித்த தோலுடையவர்கள் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் சித்தரிக்கப்பட்டனர்.

பின்னர் வெளிவந்த Persona, Hour of the wolf, The Shame ஆகியவை அவரை சந்தேகத்திற்கிடமின்றி அற்புதங்களைப் படைக்கும் ஒரு சினிமாக் கலைஞர் என்று அடித்துக் கூறின. இவற்றில் கலைஞனின் துயரம் பகுத்துப் பார்க்கப்பட்டதுடனில்லாது பிற மனிதத் துயரங்களுடன் ஒப்பு நோக்கப்பட்டு அதன் அவசியம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

பெர்க்மன் பலவித பாணிப் படங்களை எடுத்திருக்கிறார். கனத்த நகைச்சுவை, மெடபிஸி கல் துயரம், துளைத்தெடுக்கும் உளவியல் என்று அவர் தொடாத பாணிகள் இல்லை. வழக்கமான யதார்த்தவாதமும் அவரிடம் இல்லை. ஆவிகளை கதாபாத்திரங்களாக உலவவிடுகிறார். சொந்த வாழ்க்கையிலேயே ஆவித் தோற்றங்களைப் பார்த்ததாக அவர் கூறுவார். வரி ஏய்ப்பு செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி பின்னர் முதல் விசாரணை முடிந்து வீடு திரும்புகையில் ஒரு கட்டிடம் தீ பிடித்து எரிவதை அவர் கண்டார். ஆனால் அது நிஜமா கற்பனையா என்பதை பின்னால் அவரால் உறுதியாகக் கூறமுடியவில்லை. அவரது கடவுள் பற்றிய விவாதங்களும் இத்தகையது. ஆஸ்திகனாயும் நாஸ்திகனாயும் அவர் தொடர்ந்து இருந்து வந்திருப்பது அவரது படங்களை தொடர்ச்சியாகப் பார்ப்பவர்களுக்கு தெளிவாக விளங்கும். உளவியலை மனித மனத்தின் திறவுகோலாகக் காட்டும் அவர் (Wild Strawberries) அமானுஷ்ய சக்திகள் (Virgin Spring) பிரபஞ்சத்தினை புரிந்து கொள்ள உதவும் என்று நம்புபவர்.

சத்யஜித்ராய் நாவலினால் பாதிக்கப்பட்டதைப் போல் பெர்க்மனிடம் தொடர்ந்த பாதிப்பினை நாடகம் ஏற்படுத்தியுள்ளது. அவரது சுயசரிதையான The Magic Lantern ல் நாடகம் பற்றித்தான் அவர் அடிக்கடி பேசுகிறாரேயோழிய சினிமாவைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றூமாகத் தான் குறிப்புகள் தருகிறார். சினிமாவைக் கட்டாயமாக நினைவு கூறவேண்டிய தருணங்களில் கூட நாடகத்தையே முன்னுக்கு கொண்டுவருகிறார். தனது இளமைக் காலத்தையொட்டி அவர் எடுத்த Fanny and Alexander படத்தில் சினிமா பற்றிய குறிப்புகள் இல்லை. மாறாக, ஸ்டிரின் பர்கின் Dream Play பற்றி நிறைய வசனங்கள் வருகின்றன.

ஸ்டிரின் பர்க்கின் மீதுள்ள ஈடுபாட்டினை அப்பட்டமான வார்த்தைகளால் பல முறை தெரிவித்திருக்கிறார். ஆனால் ஸ்டிரின்பர்க்கினைப் போல் பார்வையுடன் பெண்களை பெர்க்மென் படைப்பதில்லை. ஆண்களை விடவும் பெண்களை விசேஷமானவர்களாக பார்க்கிறார். பெண் பாத்திரங்களை படைப்பதில் மட்டுமின்றி நடிகைகளை இயக்குவதிலும் அவர் இணையற்றவர் என்ற பெயர் எடுத்துள்ளார்.

அவரது படங்களிலும் நாடகத்தின் சலித்தெடுக்கப்பட்ட அம்சங்கள் விரவியுள்ளன.

ஆனால் சினிமா படம் பிடிக்கப்பட்ட நாடகமாக ஒருபோதும் அவரிடம் மாற்றம் கண்டதில்லை. Cries and whispers இதற்கு நல்ல உதாரணம்.

நாடகத்தின் கட்டமைப்பினை இப்படம் கொண்டிருப்பினும் சினிமாவிற்குரிய க்ளோஸ் – அப் காட்சிகள், கேமரா கோணங்கள் ஆகியனவற்றால் மட்டுமின்றி ப்ரேமிற்குள் உலவும் நடிகர்களின் பெளதிக அருகாமை/ அருகாமையின்மை நாடகத்தின் வீச்சிற்கு அப்பாற்பட்டது என்பதை உணர்த்திற்று. சலனிக்கும் பிம்பங்கள் ஃபிரேமுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஆகர்ஷணம் சினிமாவிகேயுரித்தானது என்பதுஅவரது பல படங்கள் தரும் செய்தியாகும்.

நாடகத்தின் மற்றொரு பாதிப்பும் பெர்க்மனிடம் உள்ளது. அது நடிப்பு. பெர்க்மனின் நடிகர்கள் குழு, உலகின் பல டைரக்டர்களை பொறாமையால் பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

Fanny and Alexander (1983) க்குப் பிறகு டெலிவிஷன் படங்களையும் நாடகங்களையும் மட்டுமே டைரக்ட் செய்துள்ள பெர்க்மன் சினிமா என்கிற மீடியத்தின் மீது கொண்டிருந்த முற்றான ஆளுகை, சினிமாவை ஒரு கலைஞனின் வித்தியாசமான நோக்கின் வெளிப்பாடாக பயன்படுத்திய வியத்தகு ஆற்றல் ஆகியவை அவரது சினிமாவின் மிகச்சிறந்த கலைஞர்கள் வரிசையில் நிறுத்தியுள்ளன. வரி ஏய்ப்பு குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட பொழுது (பின்னர் இந்த வழக்கு தள்ளுபடியாயிற்று) அவர் பின் வருமாறு கூறினார். “நான் ஒரு கலைஞன் எனக்கு பணத்தைப் பற்றி எதுவும் தெரியாது” நாம் வாழும் இக்கால கட்டத்தில் ஒரு மாபெரும் கலைஞனால்தான் இவ்வாறு அந்தரங்கமாக தன்நிலை பற்றி கூற முடியும்.

திரைப்பட பணி வரலாறு

கிரைசிஸ் (1945)
தி லாண்ட் ஆப் டிசைர் (1947)
திஸ் காண்ட் ஹாப்பன் ஹியர் (1950)
சம்மர் இண்டர்லூட் (1951)
வெய்டிங் விமன் (1952)
சம்மர் வித் மோனிகா (1953)
சாடஸ்ட் அண்ட் டின்சல் (1953)
ஸ்மைல்ஸ் ஆப் சம்மர் நைட் (1955)
செவன்த் சீல் (1957)
வைல்ட் ஸ்ட்ராபெரிஸ் (1957)
சோ க்ளோஸ் டு லைப்(1958)
த ஃபேஸ் (1958)
த வெர்ஜன்ஸ் ஸ்பிரிங்க்(1960)
த டெவில்ஸ் ஐ (1960)
த்ரூ எ கிளாஸ் டார்க்லி (1961)
விண்டர் லைட் (1963)
சைலன்ஸ் (1963)
ஆல் தீஸ் விமன் (1964)
பர்சோனா (1966)
அவர் ஆப் த உல்ப் (1968)
ஷேம் (1968)
த டச்(1971)
கிரைஸ் அண்ட் விஸ்பர்ஸ் (1972)
சீன்ஸ் ஃப்ரம் எ மாரேஜ் (1973)
மாஜிக் ப்லூட் (1974)
பேஸ் டு பேஸ் (1976)
த சர்பென்ஸ் எக் (1978)
ஆட்டம்ஸ் சோனாட்டா (1978)
பேனி அண்ட் அலெக்சாண்டர் (1983)

- தொடரும் -

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, உலக சினிமா சாதனையாளர்கள் தொடரை இங்கே வாசகர்களுக்காக படிக்க கொடுக்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.