விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 4

சென்ற இதழின் தொடர்ச்சியாக:

எல்.வி.பிரசாத் ஆகியோரது நட்பு எனக்கு பரிச்சயமாகிய பின்பு, இன்னும் பல சினிமா பிரபலங்களுடன் எளிதாக பழகுகின்ற வாய்ப்பு இயல்பாகவே அமைந்தது. அத்தகைய சிலருள் என்னால் மறக்க இயலாதவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். சி.ஜெ.மோகன் மூலமாகத்தான் என்.எஸ்.கேயின் பார்வை என்மீது திரும்பியது எனலாம்.
முன்பே கூறியது போல, ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், என்.எஸ்.கேயின் உதவியாளர். அவர்தான், என்.எஸ்.கேயின் ”மணமகள்”, படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தவர். நானும் புதிய கேமராவுடன் சி.ஜெ.மோகனிடம் இருந்த காலம். சி.ஜெ.மோகனை அடிக்கடி பார்க்கச் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் என்.எஸ்.கேயும் உடன் இருப்பார்.

ஒருமுறை என்.எஸ்.கே. அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுப்பதற்காகச் சென்றிருந்தேன். புகைப்படம் எடுக்கையில் வெளிச்சம் போதாக்குறையாக தெரியக்கூடாது என்பதற்காக, தனியாக காமிராக்களுக்கான விளக்குகள் வாங்கி வைத்திருப்பேன். ஆனால், அன்றைக்கு நான் தயார் செய்து வைத்திருந்த விளக்குகள் திடீரென்று பழுதாகிவிட்டது. நான் புகைப்படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்தாமல், விளக்குகளை சீரமைப்பதிலேயே ஈடுபட்டிருந்தேன். அவையில் இருந்தோர்கள் எல்லோரும் என் செய்கைகளைப் பார்த்து சிரிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் நான் அங்கு கேலிக்குள்ளாக்கப்பட்டேன். எனக்கும் அந்நிலைமை சங்கடத்தையே உண்டுபண்ணியது. என்.எஸ்.கே என்ன சொல்வாரோ? என்ற பயம் ஒருபக்கம், பிறருடைய ஏளனத்திற்கு ஆளாகிவிட்டோமே என்ற எண்ணம் மறுபக்கம். என்.எஸ்.கேயின் அருகில்தான் மதுரம் அம்மையார் அமர்ந்திருக்கின்றார். அவரும் என்னைப்பார்த்து என்.எஸ்.கேயின் காதில் ஏதேதோ கிசுகிசுத்தபடியே இருந்தார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த கலைவாணரைக் காட்டிலும் நானும் என் கேமராவும் அவ்வரங்கில் அதிகமாகவே பேசப்பட்டுக்கொண்டிருந்தோம்.

பின்பு சிறிது நேரம் கழிந்தபிறகு என்னை அக்கூட்டத்தில் யாரும் பொருட்படுத்தவில்லை, விளக்கை சீர்செய்தபடியே புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கியிருந்தேன். பார்வையாளர்களுக்கெல்லாம் நிகழ்ச்சிகளின்மேல் தான் ஆர்வம் இருந்தது. இறுதியாக மேடையேறி பேச வந்த என்.எஸ்.கே “ இங்கு இருப்பவர்களெல்லாம், சின்னப்பையன் என்றும் பாராமல் அவனை (ஆனந்தனை)ப்பார்த்து சிரித்தீர்கள்., மதுரம் கூட சிரித்தாள், ஆனால் நாம் எல்லோருமே சிறுவயதிற்குண்டான அவன் உழைப்பைப் பாராட்ட வேண்டும்”,என்று அனைவரின் மத்தியிலும் அம்மேடையில் என்னைப் பற்றியும் பேசியது நான் ஒவ்வொரு முறையும் நினைவுகூறத்தக்க சம்பவம்.

என்.எஸ்.கே உடன் இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்பியவர். ஆனால், சி.ஜெ.மோகனை மட்டும் அடிக்கடி செல்லமாகச் சீண்டியபடியே இருப்பார். அப்பொழுதெல்லாம் சி.ஜெ.மோகனுடன், நானும் என்.எஸ்.கேயைப் பார்ப்பதற்காகச் செல்வேன்.

எல்லோரும் பேசிக்கொண்டிருக்கையில், என்னைப் பார்த்து என்.எஸ்.கே விளையாட்டாக ஒரு கேள்வி கேட்பார். “ஆனந்தா! நீ மோகனையே நம்பி இருக்கிறாயே, அவனே அடுத்த படம் இல்லாம சும்மாத்தான இருக்கான். நான் படம் ஆரம்பிச்சாத்தான, அவனுக்கே வேலை...! அவன் எப்படி உனக்கு தொழில் கத்துத் தரப்போறான்,” என்று என்.எஸ்.கே சொல்லிக்கொண்டிருக்கின்ற பொழுதெல்லாம் சி.ஜெ. மோகனும் கூடவே தான் இருப்பார். அவரை நகைப்புள்ளாக்கவே, என்.எஸ்.கே இதுமாதிரியான கேள்விகளை என்னிடம் கேட்பார். மேலும், “அதற்காக பயப்படாத எனக்கும் சில சினிமாக்காரங்களைத் தெரியும், அவர்கள்ல ஒருத்தர்கிட்ட உன்னைச் சேர்த்து விடறேன்” என்றார் என்.எஸ்.கே.
ஆனால், என்.எஸ்.கேயினால் ”மணமகன்”, என்ற பெயரில் அடுத்த படம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் கலைவாணர் போட்டோகிராபர் வேடத்தில் நடிப்பதாக ஏற்பாடு. அதாவது, சினிமாவின் மீதான மோகத்தில் நடிகையாக வரவேண்டும் என்று போட்டோக்கள் எடுக்கவருகின்ற பெண்கள் போட்டோகிராபரிடம் மாட்டிக்கொண்டு எப்படிப்பட்ட துன்பங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை நகைச்சுவையாகச் சொல்லக்கூடிய படம்தான் ’மணமகன்’. ஆனால், படம் தொடங்கியதிலிருந்து இரண்டாம் நாளிலேயே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. காரணம், கவிஞர் உடுமலை நாராயண கவியின் காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், அவரைக்காணச் சென்றுவிட்டார், .என்.எஸ்.கே.

கலைவாணரின் படங்களுக்கு உடுமலை நாராயணகவிதான் பாடல் எழுதுவார். பாபநாசம் சிவனுக்கு ஈடான கவிஞரும் கூட. பின்னர் அதற்கடுத்து படப்பிடிப்பு தொடங்கவேயில்லை. ஒருவேளை அந்தப்படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றிருந்தால், என்னையும் ஒரு பெரியகேமராமேனிடம் உதவியாளனாகச் சேர்த்துவிட்டிருப்பார் . அவ்வாறே நடந்திருக்குமாயின் இப்படி நான் திரைப்படப் பட்டியலை தயார் செய்துகொண்டிருக்கின்ற வேலைகிடைக்காமல் போயிருக்கும்.

இது மட்டுமல்ல, இன்னொரு விஷயமும் என்.எஸ்.கேயைப் பற்றி குறிப்பிடவேண்டியது அவசியம். அது என்.எஸ்.கே என் காரில் பயணித்த கதை.

அப்பொழுதே என்.எஸ்.கிருஷ்ணன் பிளைமோத் கார் வைத்திருப்பார். நானும் ஒரு கார் வைத்திருப்பேன், ஆனால் அது பிளைமோத்கார் அளவிற்கு வசதியானது அல்ல., ஆனால் ஒருமுறை நான் கார் கொண்டுவந்திருந்ததைப் பார்த்த என்.எஸ்.கே பரவசமாகி என் காரில் ஏறிக்கொண்டார். எனக்கோ பயம். நான் சரியாகத்தான் கார் ஓட்டுவேன் என்றாலும், என்.எஸ்.கேயை வைத்துக்கொண்டு கார் ஓட்டுவதில்தான் அச்சம். அதனால் மறுத்தேன். எனினும் என்.எஸ்.கே காரிலிருந்து இறங்குவதாகயில்லை. மதுரமும் என்.எஸ்.கேயிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். ஆனால், அவரோ விடாப்பிடியாக காரிலே அமர்ந்துகொண்டு எழுந்திருக்க மறுத்தார். பின்பு அவரையும் என் காரில் ஏற்றிக்கொண்டு அவரது ராயப்பேட்டை வீட்டில் இறக்கிவிட்ட பின்பு தான் என் வீடுநோக்கி பயணமானேன். அன்று நான் காரை ஓட்டியிருக்காவிட்டால் என்.எஸ்.கேயே காரை வாங்கி ஓட்டியிருப்பார்.

இம்மாதிரியான நாட்களின் மத்தியில் ஒருநாள் நான் காரில் சென்றுகொண்டிருந்த பொழுது, ”செளத் இண்டியன் பிலிம் சேம்பர்”, என்ற பெயர் பலகையைப் பார்த்து, என்ன இது புதிதாக இருக்கின்றதே என்று நினைத்துக்கொண்டே சேம்பருக்குள் நுழைந்தேன். அப்பொழுது அதன் மேனேஜராக ’ராமாரவ்’, என்பவர்தான் இருந்தார். இந்த அலுவலகம் ராயப்பேட்டையில் இருந்தது. நான் அந்தச்சேம்பரில் 1954ல் சேர்ந்தேன். நான் இந்தச் சேம்பரில் சேர்ந்தது கூட சுவாரஸ்யமான தகவல்தான். அப்பொழுது இந்த சேம்பரில் இணைய 15 ரூபாய் தரவேண்டும். அப்பொழுது அஞ்சல் தலை ஒன்று அனுப்புவதற்கு 15 ரூபாய் வேண்டும் என்பதால், என்னையும் உறுப்பினராக இணைத்துக்கொண்டு என்னிடம் இருந்து 15 ரூபாய் வாங்கி அந்த அஞ்சல்தலையை அனுப்பியுள்ளனர். நான் தான் பிலிம் சேம்பரின் 78 ஆவது உறுப்பினர். அப்போதிருந்த நபர்களில் என் பெயர் 78ஆவது இடத்தில் இருக்கும்.
இந்த பிலிம் சேம்பரில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில்,

அரசியல்வாதிகள் இருந்தால்தான் சினிமாவிற்கு சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பினால் அந்தச்சேம்பரின் முதல் தலைவர் சத்யமூர்த்திதான். சினிமாவே வேண்டாம் என்று சொன்ன காங்கிராஸார் மத்தியில் அவர்களில் ஒருவரே இதற்குத் தலைவராக சிலமாதங்கள் பணியாற்றியிருக்கின்றார். அப்பொழுது ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான ஸ்டுடியோக்கள் கிடையாது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைவரும் மெட்ராஸ் மாகாணத்திற்குத்தான் வரவேண்டும். ஆதலால் அனைத்து மொழிகளுக்கும் சேர்ந்தாற்போல புத்தகம் போடுவது என்று சேம்பரில் முடிவுசெய்யப்பட்டது. அந்த சேம்பரிலிருந்து புத்தகம் போடுவது என்று முடிவானவுடன், அவர்கள் என்னையழைத்து புத்தகத்தின் தேவைக்காக புதியதான சினிமா செய்திகளும், புகைப்படங்களும் வேண்டும் என்று கேட்டனர். காரணம் எனக்குத்தான் அனைத்து ஸ்டுடியோக்களும் தெரியும், என்னிடம் தான் எங்கும் எளிதில் செல்வதற்கான காரும், புகைப்படம் எடுக்க கேமராவும் உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற பிரதான மொழிகளுக்கெல்லாம் சேர்த்துவருகின்ற இதழ் என்பதால் அனைத்து திரைத்துறையினரையும் உள்ளிழுக்கும்படியாகவும் புத்தகம் வேண்டும். மாறாக இந்த வேலை, எனக்குள் புத்துணர்ச்சியையும் தரக்கூடியதாக இருந்தது. நான் சேம்பருக்குள் சேருவதற்கு முன்பே, ஒவ்வொரு ஸ்டுடியோவினுள்ளும் சென்று, அங்கு பிரதானமானவற்றை புகைப்படம் எடுப்பதே எனக்கிருந்த முக்கியமான பொழுதுபோக்கு. பின்னர் இதனையே ஒரு வேலையாகச் சேம்பரிலிருந்து என்னிடத்தில் சொல்கின்றபொழுது, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்டுடியோவிலேயும் என்னென்ன படத்தின் படப்பிடிப்புகள் நடக்கின்றன. யார்? யாரெல்லாம் நடிக்கின்றார்கள்? என்பதையெல்லாம் குறித்துவைத்துக்கொண்டு சேம்பருக்கு புகைப்படங்களுடன் கொடுப்பேன். அதேபோல ஒவ்வொருவாரமும், மேலேசொன்ன பிரதானமொழிகளிலிருந்து எந்தெந்த மொழிகளில் என்னென்ன படங்கள் ரிலீசாகின்றன, வெளியான தேதி, அதில் நடித்தவர்கள் விவரம், இயக்குனர் என்பதையெல்லாமும் குறித்து வைத்துக் கொள்வேன். இந்தமாதிரியாக ஒருவருடம் முழுவதும் சேகரிக்கப்பட்டத் தொகுப்புகளையும் அவர்களிடம் கொடுப்பேன். பின்னர் சில மாதங்கள் கழிந்து எனக்கொரு காசோலை வந்தது. சேம்பருக்காக நீங்கள் உழைத்ததன் காரணமாக உங்களுக்கு ஒரு வருட சம்பளமாக 120 ரூபாய் அனுப்புகின்றோம் என்று அதில் எழுதியிருந்தது. எல்லோரும் வார சம்பளம், மாத சம்பளம், தின சம்பளம் என்றெல்லாம் வாங்குபவர்கள் இருப்பார்கள், ஆனால் நான் மட்டும்தான் வருட சம்பளம் வாங்கியிருக்கின்றேன். 1954லிருந்து சேம்பருக்காக வேலை செய்திருக்கின்றேன். இப்பொழுது அந்தச்சேம்பரில் அப்போது வேலைபார்த்தவர்களில் உயிரோடு இருக்கின்ற ஒரேஆள்நான் மட்டும்தான். இப்பொழுது (2014) அந்தச்சேம்பரிலிருந்து எனக்கு 5000 ரூபாய் அனுப்பிவைக்கின்றார்கள்.

எனக்கும், என் செயலுக்கும் தனிப்பெரும் முகவரியைத் தந்துகொண்டிருக்கின்ற ‘பிலிம்நியூஸ்’ என்கிற அடையாளம் இதுவரையில் எந்தன் பெயருக்கு முன்னால், இணையவில்லை. இந்த ஆனந்தனும், ‘பிலிம்நியூஸ்’ என்ற அடைமொழியை இனங்கண்டுகொள்ள வாய்ப்பாக அமைந்த சந்தர்ப்பங்களும், சம்பவங்களும் அடுத்த இதழில்...
தொடரும்...