ஊருக்கு நூறு பேர்: சினிமாவின் வலிமைக்கு ஒரு சான்று

தமிழ் சினிமாவில் அவ்வப்பொழுது நம்பிக்கையூட்டும் மின்னல் கீற்றுகள் தோன்றுவதுண்டு. அப்படியொரு பளிச்சிடுதல் தான் பி.லெனினின் ஊருக்கு நூறுபேர்.ஜெயகாந்தனின் அதே தலைப்பில்1979-ல் வெளிவந்த குறுநாவலை மிகச் செறிவான திரைப்படமாக தந்திருக்கிறார் அதனால்தான் ஒரு அங்கீகரிப்பு போல பெங்களூரில் நடைபெறவிருந்த பன்னாட்டு திரைப்பட விழாவில் இது முதல் படமாக திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவ்விழாவே நடைபெறவில்லை.என்றாலும்2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை இப்படம் பெற்றது. லெனின் சிறந்த திரைப்பட இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
ஒரு உன்னதமான திரைப்படம் உருவாகும் வாய்ப்பை இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்கும் இடையேயான பிணைப்புதருகின்றது. கான் வித் தி வின்ட்(Gone With The Wind ஆங்கிலம்,1938), ஜநூன் (Junoonஇந்தி, 1978) போன்ற பல சிறந்த படங்கள் இலக்கியத்தை முன்வைத்து எடுக்கப்பட்டவையே. மலையாள, கன்னட சினிமாக்களில் இருக்கும் அத்தகைய ஆழமான ஊடாட்டம் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம். தமிழில் மிகச்சில படங்கள் மட்டுமே இம்முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்(1964)’ படமும், புதுமைபித்தனின் சிறுகதை சிற்றன்னையை ஆதாரமாகக் கொண்ட மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள்(1979) படமும் சட்டென்று நினைவுக்கு வருகின்றன.
ஊருக்கு நூறுபேர்போன்று இலக்கியபடைப்பொன்றைத் தழுவி படம் எடுக்கும் பொழுது அந்த இயக்குனருக்கு சினிமாவிலும், இலக்கியத்திலும் நல்ல பரிச்சயம் இருக்கவேண்டும். இத்தகுதி மிகவும் இன்றியமையாதது. அதை லெனின் மிக நன்றாக நிரூபித்திருக்கிறார். சினிமா எனும் கட்புல ஊடகத்தின் வலிமையையும் இயல்பையும் உணர்ந்து இந்தப் படைப்பை உருவாக்கியுள்ளார்.
படத்தின் கதைக்கரு மரணதண்டனையை ஒழிப்பதே. ஆனந்தன், இடதுசாரி கொள்கைப் பிடிப்புள்ள, எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கொள்ளாத ஒரு எழுத்தாளன். அவன் தொழிற்சங்கத் தலைவர் கோவிந்தசாமி நடத்தும், மரணதண்டனைக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் பத்திரிகையில் சேருகிறான். இதற்கிடையில், புரட்சியை விரும்பும் இளைஞர்கள் சமூகச் சுரண்டல்களுக்கும் அநீதிகளுக்கும் எதிராக போராட ஒரு நூறு பேர் கொண்ட அணியை இணைந்து உருவாக்க முனைகிறார்கள். இதிலிருந்து யாரேனும் ஒருவர் ஏதேனும் காரணத்திற்காக விலக வேண்டுமெனில் அவருக்குப் பதிலாக வேறொருவரை முன்னிறுத்த வேண்டும். கோவில் நகையைத் திருட முயன்றபோது தடுக்க வந்த புரோகிதரைக் கொன்றதற்காக சாவின் விளிம்பில் நிற்கும் பாலன், தனக்குப் பதிலியாக ஆனந்தனை முன்மொழிகிறான். யார் தன் பெயரை ஏன் கொடுத்தார் என்றறிய ஆனந்தன் பாலனை சிறையில் சந்திக்கிறான். அங்கிருந்து அடுத்தடுத்த பின்னோக்கிய காட்சிகளால் கதை நகர்த்தப்படுகின்றது. மிக எளிமையான கதைதான். ஆனால் சொல்லப்படும் திறமையால், காட்சிப்படுத்தப்பட்ட முறையால் மிகுந்த அக்கறையுள்ள திரைப்படைப்பாக உருப்பெற்றுள்ளது.
விமர்சகர்களின் கவனிப்பை ஈர்த்த நாக் அவுட் (Knock out) என்ற குறும்படத்தை இயக்கிய இயக்குனர் லெனின், பல விருதுகளைப் பெற்றவர். தன்னுடன் திறமைமிக்க கலைஞர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். வாசிப்பதற்காக எழுதப்பட்ட நாவலை காட்சிப்படிமங்களாக மாற்றும் பொழுது லெனின் கதையில் பாத்திரங்கள் பேசுவதாக வரும் வசனங்களை வெகுவாக குறைத்திருக்கிறார். அவர் காட்சிபிம்பங்கள் மூலம் கதைசொல்லலை நகர்த்திச் செல்கிறார். இது ஜெயகாந்தனின் மற்றொரு நாவலான சில நேரங்களில் சில மனிதர்களை தழுவி இவரது தந்தை பீம்சிங் இயக்கிய, திரைப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. பீம்சிங் படத்தில் வரும் கதாபாத்திரங்களை நாவலில் அவர்கள் பேசிய வசனங்களை ஒன்றுவிடாமல் பேசவைத்திருந்தார்.
அல்போன்ஸ் ராயின் ஒளிப்பதிவு ஒரு மந்திரத்தைப் போல நம்மை கட்டிப்போடுகின்றது. குறிப்பாக வண்ணங்களைக் கையாண்ட விதத்தில் இதன் ஒளிப்பதிவு இதுவரையிலான தமிழ் சினிமாவில் தலைசிறந்ததென்பேன். வழக்கமான வண்ணங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, மென்மையான நிறங்களால் திரையை நிறைத்திருக்கிறார். எதுவும் துருத்தி நின்று தனிக் கவனத்தை ஈர்க்கவில்லை. பரந்து விரிந்த மணல் குவாரியும், குற்றம்சாற்றப்பட்டவனின் மாமனாரும் மகனும் அந்திப் பொழுதில் வீடு திரும்பும் காட்சியும், மந்திரம் ஓதும் அர்ச்சகரின் வெகு அண்மைக்காட்சியும் பார்வையாளர்களை வசீகரிக்கின்றன. தூக்கு தண்டனையை நிறைவேற்ற தயாராகும் தருணத்தில் காட்சிப்படிமங்கள் மீயதார்த்தவாத (surrealistic) தளத்திற்கு செல்கின்றன. அதிகாரிகள் செய்யப்போகும் காரியத்தின் கொடுமையை உணர்த்துவது போல, இருண்ட பின்புலத்தில் மெளனமாக நிகழ்வுகள் நடக்கின்றன.ராயின் காட்சிப்படிமங்கள் சடுதியில் மாறாமல், வெகு நேரம் நிலைத்திருக்கும் இயல்புடையன. அத்தனை அசைவுகளும் சட்டத்திற்கு (Frame) உள்ளேயே இயங்குகின்றன.. இந்த உத்தி பார்வையாளரை கதை நடக்கும் களத்தில் இருப்பதுபோல் உணரச்செய்கிறது.
சென்னையில் வாழும் அல்போன்ஸ் ராய் காட்டுயிர் படக்கலையில் (wildflife films) ஒரு முக்கியமான ஆளுமை. அதிலும் இமையத்தில் பனிமுகடுகளில் வாழும் பனிச் சிறுத்தையைப் பற்றி இவர் எடுத்த படம் நேஷனல் ஜியாக்ராஃபிக் சேனலில் காட்டப்பட்டு இவருக்குபன்னாட்டு புகழ் ஈட்டியது. சினிமாபற்றியும் இவருக்கு நல்ல நுண்ணுணர்வு இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
நூறுபேர் இயக்கத்தின் சிந்தாந்தத்தை சூசகமாக பார்வையாளர்களுக்கு உணர்த்த சே குவரா, அம்பேத்கார், பகத்சிங் ஆகியோரின் உருவப்படங்களும், மார்க்ஸ், லெனின் சிலைகளும் குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சமூக அநீதிகள் பற்றிய விவாதங்களும், அவசரநிலைப் பிரகடனம் பற்றிய குறிப்பும் கூட உண்டு. தாகூரின் கதைகளை படமாக்கும் பொழுது சத்யஜித்ரே செய்ததைப் போல மூலக்கதையில் சிறு சிறு மாறுதல்களை இவரும் செய்திருந்தாலும் திரைப்படம் கதையிலிருந்து விலகிச் செல்லவில்லை. இந்த நாவல் வெளிவந்த 1979–ல் பெரும்பாலான நாடுகள் தூக்கு தண்டனையை தடை செய்திருக்கவில்லை. ஆனால் இப்போது 97 நாடுகள் இதை நீக்கியிருக்கின்றன. இதைப் படத்தில் ஒரு கதாபாத்திரமே சொல்லிச் செல்கிறார்.
ஆழமாக, அழுத்தமாக கட்டமைக்கப் பட்டிருக்கும்இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் எடுத்துக் கொண்ட கருத்தை வலுப்படுத்துகிறது. நுட்பமான காட்சிக் கோர்வைகள் அமைப்பதில் லெனின் தன் திறமையை காட்டியிருக்கின்றார். காட்சியமைப்பை அடக்கி வாசிக்கின்றார். குறிப்பாக கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளைத் தவிர்த்திருக்கிறார்.


இப்படத்தில் ஒலியைப் பிரதானப் படுத்தப்படவில்லை.அதே போல படத்தில் பாடல்களும் இல்லை. அவை இறுக்கமாக பின்னப்பட்டத் திரைக்கதையில் குறுக்கீடாக தோன்றி, தொய்வைஏற்படுத்தி, இயக்குனர் சொல்ல வந்ததை நீர்த்துப் போகவும் செய்திருக்கும். தான் சொல்ல வந்த கருத்திலேயே இயக்குனரின் கண் இருக்கின்றது. எந்த இடத்திலும் பின்னணி இசை காட்சியை மீறி ஆதிக்கம் செலுத்தவில்லை. இது இசை போன்ற விடயங்களில் இயக்குனருக்கு இருக்கும் புரிதலை பறைசாற்றுகிறது. அர்விந்த்-ஷங்கரின் இசை தனியாகத் துருத்திக் கொண்டு நிற்காமல் ஒரு புத்தகத்தில் ஒரு வரியை அடிக்கோடிடுவதைப் போல காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன படத்தில் பெரும்பாலான இடங்களில் பின்னணி இசை மௌனித்து சுற்றுப்புற ஒலிகளான அணில், சில்வண்டுகள் எழுப்பும் சத்தங்கள் மட்டுமே நிறைந்திருக்கின்றது. சிறையின் கற்றரையில் போலீசின் பூட்ஸ் பட்டு எழும்பும் ஒலி இடர் வரவின் முன்னறிவிப்பு போல்அமைகின்றது. தூக்கிலிடும் காட்சியில் உறையும் அமைதி பெரும் துக்கத்தை பிரதிபலிக்கின்றது.
அனைத்து நடிகர்களும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.. கிட்டத்தட்ட அனைவரும் திரைக்குப் புதியவர்களே. அதனாலேயே வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் வழக்கமான பாணி தென்படுவதில்லை.பாலனாக தோன்றும் ஹன்ஸ் கௌசிக், சென்னையின் நாடக உலகில் உச்சரிக்கப்படும் ஒரு முக்கிய பெயர். மேடைக்கும் திரைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர் அவர்.தமிழ் சினிமாவின் புதுமுகமான அர்ச்சனா, சாந்தமாக, அழுத்தமாக நடிக்கிறார். (இவர் இப்போது லண்டனின் ஒரு ஷேக்ஸ்பியர் நாடக்க் குழுவில் நடிகராக செயல்படுகின்றார்.) பாரதி மணி தனித்துவிடப்பட்ட மாமனாராக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அந்தப்பாத்திரம் தோற்றத்தில் தமிழ் எழுத்தாளர் மௌனியைப் நினைவூட்டுகிறது. கொலையுண்ட புரோகிதரின் மனைவியாக வருபவர் கொஞ்ச நேரமே வந்தாலும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். தனது கடைசி விருப்பமாக பாலன் அவரைச் சந்திக்க விரும்புகிறான். மிக முக்கியமான அந்தக் காட்சியில் வருத்தத்திலிருக்கும் பாலனை உற்று நோக்கி, “ ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது “ என்றுதீர்க்கமாக சொல்லி பாலனை மன்னிக்கின்றாள். இதுதான் தூக்கு தண்டனைக்கு எதிரான ஒட்டுமொத்த படத்தின் பார்வையும்.
இத்தனையிருந்தும், சப்-டைட்டிலில் மொழிப்பெயர்ப்பு வசனத்திற்கு ஏற்ப இல்லை. நுண்ணிய அர்த்தம் பொதிந்த ஜெயகாந்தனின் வரிகள் வீணடிக்கப்பட்டுள்ளன. சந்தோஷ் சிவன் இயக்கி டெரரிஸ்ட் திரைப்படம் அமெரிக்காவில் வெளியானபோது நியூயார்க் டைம்ஸ் நாளிதழினால் வெகுவாக பாராட்டப்பட்டும் போதுமான வரவேற்பை அங்கு பெறாததற்கு அதன் சப்டைட்டிலின் மோசமான மொழிபெயர்ப்பும் ஒரு காரணம். நாம் உலகச் சந்தையைக் கருத்தில் கொண்டால் மொழிப்பெயர்ப்பிலும் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டியதவசியம். மலையாளத் படங்களில் சப் டைட்டிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மொழிபெயப்பாளரின் பெயரும் திரையில் காட்டப்படுகின்றது. இந்தக் குறை மட்டும்ஊருக்கு நூறு பேர் திரைப்படத்தில் சரிசெய்யப்பட்டால் இப்படம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.