லெனின் எனும் கலைஞன்: தேவபாரதி

எவரும் தொட்டுவிட அஞ்சுகின்ற உச்சிகளை தன் இலக்காக நிர்ணயித்துக்கொண்டு, வாழ்வின் பகட்டுகளையும், பணத்தையும் துச்சமென மிதித்து எட்டிநடைபோடும் மனிதர்களை அத்தனை சுலபமாக நாம் சந்தித்து அவர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது, அவர்களின் விருப்பு வெறுப்புகள் என்னென்ன?, கடந்து வந்த பாதையில் குத்திய நெருஞ்சிகள் எத்தனை?, தழுவிய மலர்கள் எத்தனை?, என்பதனையெல்லாம் எளிதாக உணர்ந்துகொள்ள இயலாது.

ஆனால், அத்தகைய மனிதர்களுடன் இளமைக் காலம் முதலே நட்பாக பழகிவந்தவர்கள் அவர்களது பசுமை தோய்ந்த பழைய காலக்கதையை, நட்பை, பகிர்தலை, நெகிழ்ச்சியை நமக்கும் கொஞ்சம் பிய்த்து தரும்பொழுது, நம்மாலும் அவர்களது அனுபவத்தை சிறிதேனும் ருசிக்க முடியும்.

அப்படியாக தமிழ்ச்சினிமாவிற்கு தான் செய்த மாற்றங்களுக்கு கிடைத்த பாராட்டுக்களையும், பெற்ற விருதுகளையும் கவனத்தில்கொள்ளாது, அணியில் காத்து நிற்கும் மாற்றத்தை நோக்கிய பயணத்தைச் செதுக்கி அவ்வேலையில் முழு மனதோடு உழைத்து வருகின்ற படத்தொகுப்பாளர் லெனின் அவர்களுடனான தன் நட்பினை எழுத்தாளர் தேவபாரதி பகிர்ந்துகொள்ளும் காணொளியானது உரைநடை வடிவில் இங்கே ஒலிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

தேவபாரதி:

1964லிலிருந்து நான் சினிமாவில் இருக்கின்றேன். முதல் படம் ஜெயகாந்தனின் ”உன்னைப்போல் ஒருவன்”. ஆனால், 1976ல் தான் லெனினோட அப்பா இயக்குனர் பீம்சிங், ”சில நேரங்களில் சில மனிதர்கள்”, என்றவொரு படத்தை எடுத்தார். அப்படமும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடைய கதையை மையமாக வைத்தது. அப்பொழுதுதான் அவரை நான் முதன் முதலாக சந்தித்தேன்.

அப்பொழுதிலிருந்து எங்கள் இருவருக்குமிடையேயான நட்பு பல காலங்களுக்கு தொடர்ந்து வருகின்றது. அவர் என்மீது கொண்ட நட்பினாலும், நான் அவர்மீது கொண்ட அன்பினாலும் அவர் எடுத்த எல்லா படங்களிலும் எனக்கு வாய்ப்பளித்தார்.

அவரது முதல் குறும்படம் ”நாக் அவுட்”, பின்னர் அடுத்தடுத்து கல்ப்ரிட், தாவரம் நீரும், செடியும் சிறுமியும், முத்துக்கா, அதனைத்தொடர்ந்து ஜெயகாந்தனுடைய ”ஊருக்கு நூறு பேர்”,போன்ற படங்களை சிறப்பாக எடுத்து அதற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

ஆனால் எனக்குத் தெரிந்த வரையிலும் ஒருபோதும் இவ்வகையான விருதுகளை பெரிதாக மதிக்க மாட்டார். உதாரணமாக, ஒரு சம்பவம் சொல்கின்றேன். லெனினை ஒரு மனிதர் தேடிவந்து தன் தேவைக்காக பணம் கேட்டார். ஆனால் அப்போது லெனினிடம் பணம் கையில் இல்லை. எனவே லெனின் தயங்காமல் வீட்டினுள் சென்று தங்கப்பதக்கத்தை எடுத்து வந்து கேட்டவரிடம் கொடுத்துவிட்டார். மிக அற்புதமான மனிதர், இம்மாதிரியான மனிதர்களையெல்லாம் இனிமேல் காண்பதரிது.
தான் மேற்கொண்ட தொழிலில்தான் முழுக்கவனமும் வைத்திருப்பாரே தவிர, பொதுவாகவே பணத்தின் மீது ஈடுபாடு அற்றவர். வெகுநேரங்களில் அவர் சம்பாத்யங்களில் பாதியை பிறருக்குத்தான் செலவழிக்கின்றார்.

இன்றைய சூழலில் எடுக்கப்படுகின்ற சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தவும், சிறந்த பண்பாட்டை உருவாக்குவதற்காகவும், மக்களுடைய ரசனையை நல்லதை நோக்கி மாற்றுவதற்காகவும் பெருமுயற்சி எடுத்துவருகின்றார். அம்முயற்சியில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

அவருடன் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். படங்களில் எனது பெயரைப் பதிவுசெய்தாலும்கூட லெனின் அவருடைய சொந்த யோசனையில் தான் படத்தை அமைப்பார். படத்தின் தரத்தை உயர்த்துவதாக இருப்பின் மாற்ற வேண்டியதை கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் காட்டாமல் மாற்றிவிடுவார். அந்த நேர்மைதான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கின்றது. மிகச்சிறந்த கவிஞர், மனிதாபிமானி, பணம் பணம் என்று அலைகின்ற உலகத்தில் அதன்மீது பற்று வைக்காமல், பணம் வாழ்வின் பிரதானம் இல்லையென்று உணர்ந்து தாமரையிலை மீது தண்ணீர் இருப்பதுபோல பணத்தை கையாளத்தெரிந்தவர்.

லெனினின் விருப்பத்திற்கேற்ப “பாரதியார் பண்பாட்டு மையம்”, என்று வைத்திருந்தோம். முழுவதும் அவருடைய காரியம் தான். நிறைய குழந்தைகளுக்கு கல்வி, ஏழைகளுக்குப் பண உதவி போன்ற செயல்கள் அங்கு நடந்தேறியது. அவர் மிகச்சிறந்த ரசிகரும் ஆதலால் அவரது தயவால் சில உலகத்தரமான படங்களைக் கூட நான் பார்த்திருக்கின்றேன். அதேபோல மிகச்சிறந்த சீர்சிருத்தவாதி. அவர் நினைத்தால் இன்றுகூட காரில் போகலாம். படாடோபமாக வாழ முடியும், நிறைய பணம் பரம்பரைக்கே சேர்த்துவைக்கலாம். ஆனால் அதில் நாட்டமில்லாமல் தன்னோடு இருக்கின்ற நண்பர்களை மேம்படுத்த வேண்டுமென்று எப்போதும் முயல்வார். கிட்டத்தட்ட 35 ஆண்டு காலமான நட்பு அவருடையது. அவர் எனக்குச்செய்த உதவியைக் கூட பொருட்படுத்த மாட்டார். பெரும்பாலான உதவிகளை எனக்குச்செய்திருக்கின்றார். ஆனால் நான் நன்றி கெட்டவனாக இருக்க கூடாதல்லவா. இதனாலெல்லாம் லெனின் என்று சொன்னாலே அவர்மீதான மரியாதை மேலிடும். மிக்க அன்புடையவர். எனக்குத்தெரிந்து நிறையபேருக்கு உதவி செய்திருக்கின்றார்.

பிறருக்கு உதவி செய்வதிலேயே தலை சிறந்த மனிதர் இவர்தான். எனது ”செடியும் சிறுமியும்”, கதையை லெனின் குறும்படமாக எடுத்தார். ஏதேனும் மாற்றங்கள் செய்துள்ளாரா? என்பதனைத் தெரிந்துகொள்ள நான் அவர் பக்கத்தில் இருந்தால் நான் ஏதாவது இடைஞ்சல் செய்வேனென்று நினைந்து என்னை படத்தொகுப்பு அறைக்குள்ளேயே விடவேயில்லை. நான் ஒருநாள் போனேன் என்னை வெளியில் இருக்கும்படி சொல்லிவிட்டார்.
இவ்விஷயத்தை ஏன் இங்கு சொல்கின்றேனென்றால், அவருடைய படைப்புலகத்தினுள் யாரையும் தலையிட அனுமதிக்க மாட்டார். இதைத்தான் எடுக்கவேண்டுமென்று தீர்மானித்துவிட்டால் எவரையும் தன் கற்பனைக்கு குறுக்கே வரும்படியாக நிறுத்தமாட்டார்.
ஆனால் படம் முழுவதும் முடிந்த பின்பு ஒருநாள் எனக்கு படம் போட்டுக் காண்பித்த பின்னரே வெளியிட்டார்கள்..
ஆனால் நானும் வெறுமனே லெனினிடம் முகஸ்துதி செய்யும் ஆளாக நிற்கவில்லை, படத்தில் ஏதேனும் தவறுகள் தெரிந்தால் சுட்டிக்காட்டுவேன். சில படங்களில் எனது யோசனைகளை நிராகரித்திருக்கின்றார். அப்பொழுதெல்லாம் எனக்கு கவலையாக இருக்கும். ஆனால் அதனைப் படமாக பார்க்கும்சமயத்தில் அவரது எண்ணமே சரியென்ற முடிவிற்கு வருவேன். படம் நன்றாகயிருந்தும் அது வெற்றிபெறவில்லையெனில், அது வெற்றி பெறாததைக் காரணமாக வைத்து அதனை நல்ல படமில்லை என்று குற்றம் சுமத்த முடியாது. நல்ல படங்கள் தோல்வியடைவதும், மோசமான படங்கள் ஜெயிப்பதும் கூட இன்றைய நிலைமைதான். வருங்காலத்தில் இளைஞர்கள் சினிமாவிற்கு வருகின்றவர்கள் எளிதாக காசு பணம் சம்பாதித்து விடலாம் என்கின்ற நினைப்பில்தான் வருகின்றார்கள். அவர்கள் படித்த பின்னரே வந்தாலும், படிக்காமல் வந்தாலும் அவர்களுடைய நோக்கம் பணமாகத்தான் உள்ளது. நம்முடைய நேரத்தை மேம்படுத்த, பண்பாட்டை உயர்த்த, உலகத் தரத்தில் சினிமாவைக் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். அதுவே லெனினும் எதிர்பார்ப்பும்.
அவருடைய படங்கள் மிகுந்த யதார்த்தமாக இருப்பதற்குக் காரணம் லெனின் யாரையும் நிர்பந்திக்க மாட்டார். பிறரிடம் அன்பாகப் பேசி வேலை வாங்கும் இயல்பு கொண்டவர். அவருடன் பல படங்களில் வேலை செய்யும்பொழுது ஒன்று புலப்படும். எப்படி கடினமான வேலைகளை மிகுந்த எளிதாக முடிப்பது என்று. உதாரணமாக ஊருக்கு நூறு பேரில் வன்முறையை எந்தக் காட்சியிலும் அனுமதிக்கவில்லை. வன்முறை இடம்பெறக்கூடிய கட்டத்தில் கூட அதனை படத்தில் இடம்பெறாமல் செய்துவிடும் நுணுக்கம் தெரிந்தவர். 
செடியும் சிறுமியும் படத்தில் குழந்தைகளுடன் பணிபுரியும் பொழுது அவரும் ஒரு குழந்தையாக மாறி வேலை செய்வார். அவரே ஒரு குழந்தை மனோபாவத்துடன் இருப்பதால் அவருக்கு காட்சிப்படுத்த மிக இயல்பாக அமைந்துவிடும். முன்பு குறிப்பிட்டதுபோல அவர் இயக்கிய படத்திற்கு விருதுகள் கிடைத்தனவா?, இல்லையா? என்பதையெல்லாம் எண்ணி கவலைப்படமாட்டார். அப்படியே விருதுகள் கிடைத்தாலும் அதனை மிகவும் சாதரணமாக எடுத்துக்கொள்வார். பெரிய சாதனை புரிந்தமாதிரியாக நினைக்க மாட்டார். ”நாக் அவுட்”, எடுத்த காலக்கட்டத்தில் கூட சொல்லியிருக்கின்றார், இதுவெறும் சாதாரணம்தான், இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கின்றது.
”நாக் அவுட்”, படமே குன்றத்தூரில் தான் எடுத்தது. பெரும்பாலும் அவர் இங்குதான் வருவார், போவார், இவ்விடத்தில் என்ன செய்ய முடியும் என்று அவரது நினைப்பின்படி, மிக கூர்மையான பார்வையுடைவராதலால் இங்குதான் ”நாக் அவுட்”, எடுத்தார். இங்குதான் முட்டுக்கா எடுத்தார். 
மனித சுபாவத்தோடு நடந்துக்கொள்வார்,
இன்றைக்கு இருக்கின்ற சினிமா உலகினருக்கு முன்னோடியாக லெனின் இருக்கின்றார். இன்னும் அவருக்கு கிடைக்க வேண்டிய பெயர் நிறைய இருக்கின்றது. அவர் இன்னும் சாதிப்பார், தமிழ் திரைப்படத்தை மேம்படுத்துவார், என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். தனிப்பட்ட முறையில் அவருடைய சிறப்பை கூறுவதென்றாலும் நிறைய குணங்களைச் சொல்லலாம்.
சினிமா உலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. மோசமான படம் எடுப்பவர்களைத்தான் அவர் கண்டுகொள்வதில்லை, அது புறக்கணிப்பு, வெறுப்பு.
லெனின் குறும்படங்களிலும், படங்களிலும் படத்தொகுப்பில் மும்மரமாக இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் தனக்கென்று ஏதாவதொன்று பண்ண வேண்டும் என்ற நினைப்பில் நாக் அவுட் படம் எடுத்தார். பெரும்பாலும் அவர் எழுதியவைகளைத்தான் நான் சரிசெய்துகொடுத்தான். ஏன் அவர் முதலில் இந்தக் கதையை தேர்ந்தெடுத்தாரென்றால், முதலில் அவர் எழுதியதும் அதுதான். ஏன் இந்தக்கதையை எழுதிவைத்திருக்கின்றார்? அப்படியெல்லாம் துல்லியமாக சொல்லமுடியாது. எண்ணத்தில் தோன்றியதை, காகிதத்தில் எழுதி வைத்திருக்கின்றார்.
அப்பொழுதே ஆனந்தவிகடமில் இந்தக்கதை வெளிவந்து கதையின் சிறப்பிற்காக ரூபாய் 100 கொடுத்திருந்தினர். இந்தக் கதை திரைக்கு தோதான கதை என்று லெனின் எப்பொழுது திட்டமிட்டாரென்று தெரியவில்லை. ஒரு நாள் ராத்திரி 2 மணிக்கு எழுத ஆரம்பித்து, காலை 5 அல்லது 5:30க்கெல்லாம் முடித்துவிட்டார். எதற்காக இதனை எழுதினாரென்றால் தெரியவில்லை. ஒருவேளை இந்தச் சம்பவங்களாக கூடயிருக்கலாம். அந்தக் காலத்தில் ஒரு செய்தி வந்தது. ஒலிம்பிக்கில் ஜெயிப்பவன் திரும்பி இங்கு தரையிறங்கிய பின்பு நிறைய விருதுகள் பெறுகின்றசன். பின்னர் சிறிது நாட்களில் அவனே வாழ்க்கையில் சிரமப் படுகின்றவனாகவும் இருக்கின்றான். அந்த செய்திதான் அவரை இந்தக்கதையை எடுக்க உந்துதலா இருந்திருக்கும். அதேபோல் பரவலாக உலகம் முழுக்க பேசப்படுகின்ற விஷயம் தான் இந்த தூக்குதண்டனை. ஆனால் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை வைத்தும் இவர் “ஊருக்கு நூறு பேர்”, என்ற படம் எடுத்திருக்கின்றார்.
லெளகீக வாழ்க்கையில் இவர் சந்திக்கின்ற விஷயங்களெல்லாமே இவருக்கு காட்சி பிம்பங்களாகத்தான் தெரிகின்றது. உதாரணமாக நாம் பேசுகின்ற செய்திகளில் கதையிருக்கா? இல்லையா?ன்னு நம்மளுக்குத்தெரியாது. ஆனால் அவருக்குத்தான் தெரியும். அவருக்கு அது படமாகவே தோன்றுகிறது. கலைஞனுக்கு இருக்க கூடிய பண்பாடு, மனசு அவருக்கு இருக்கின்றது.
லெனின் பெரிய படங்களிலிருந்து வெளியே வரக்காரணம், மோசமான காட்சி வர்ணனைகள் இருக்கின்றன. ஆபாசக்காட்சிகள், மற்றும் முக்கியமாக வன்முறைகள் இருக்கின்றன. நிறைய மனிதர்களும், தொழில்நுட்பங்களும் புதிது, புதிதாக வந்தாலும் அவர்களும் கூட இதனையே பின்பற்றுகின்றார்கள். நாம் அதற்கான காரணம் கேட்டால், அவர்கள் சொல்கின்ற பதில்கள் வியாபாரம், படம் ஓடணும். ஆனால் லெனின் அந்த வியாபார இடத்திற்கே போகமாட்டார். ஓடணுமா? என்கின்ற கேள்விக்கே லெனின் இடம் கொடுக்க மாட்டார். படம் நல்ல படமா? என்றுதான் பார்ப்பார்.
”நாக் அவுட்”, படத்தினை தமிழ் நாடு முழுவதும் பேசியது. ஊர் ஊராக படத்தை திரையிட்டார்கள். முதலில் திருவண்ணாமலையில் பெருங்கூட்டம். இரவு பன்னிரண்டு மணிக்கு லெனினை பேச வைத்திருக்கின்றார்கள். லெனினும் அதனை பெரிது படுத்தாமல் பேசினார். இதெல்லாம் மிகவும் பெரிய விஷயம். இப்படியாக சினிமாவில் இருக்க கூடிய ஒருவர், வெகுஜன மக்களிடையே சகோதரத்துவத்துடன் பேசுவது என்பதனைப் பார்த்தால் மிகவும் ஆச்சர்யமானதாக இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பின் இன்றைக்கு கூட நீங்கள் அவரை சாதாரணமாக பேருந்துகளில் பார்க்கலாம். ஆனால் அவருக்கு இருக்கின்ற புகழ் கூட்டம், வரவேற்பு இவற்றையெல்லாம் அவர் யோசித்திருப்பாரா? என்பது கூட தெரியாது. சிலபேர் இருக்கின்றார்கள் கொஞ்சம் வாழ்க்கையில் உயர்வு வந்தால் கூட ’நான் உங்களைப் போல் அல்ல’, என்று காண்பித்துக்கொள்வார்கள். ஆனால் லெனின் நம்முடன் பழகும் காலங்களில் நம்மைவிட தாழ்ந்தவராக காட்டிக்கொள்ளத்தான் முற்படுவார்.
குடும்பத்திற்கு கூட பணம் அதிகமாக செலவழிக்க மாட்டார், ஆனால் பிற குடும்பம் கஷ்டப்படும் நிலையிலிருந்தால் அதற்கு அள்ளித்தருவார்.
அதேபோல அவரால் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கின்ற இயக்குனர்கள் பலர் இருக்கின்றார்கள். நீங்கள் நல்ல படம் எடுத்து பணமில்லையானால் உங்களுக்காக அவர் இலவசமாக படத்தொகுப்பு முதலான எண்ணற்ற விஷயங்களைச் செய்துதருவார்.
அக்காலத்தில் ஒரு குறிப்பு உள்ளது, முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி என்று. அது வரலாற்றில் கவித்துவமான வரிகளாக கூட இருக்கலாம்., ஆனால் அவரைப்பற்றி நேரில் காண வேண்டுமானால் எனக்கு லெனினை தவிர சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.