பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல்

வீடு – ஒவ்வொரு நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழும் குடும்பத்திற்கும் ஒரு லட்சியம். நாம் போகும் பாதையில் கற்களாய் எழுப்ப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வீட்டின் பின்னும் பல வலிகளும் கண்ணீரும் கலவையாகவே கலக்கப்படுகின்றன.

சினிமா – நாயகனின் அதிரடி அறிமுகம், ஹீரோயினின் கவர்ச்சியாட்டம், நகைச்சுவைக்குத் தனி ட்ராக், சண்டை, பாடல்கள் என பிம்பம் எழுப்ப்ப்ட்டிருக்கும் சினிமாவின் உண்மையான இயல்பும், வீச்சும் தாக்கமும் மிக பிரம்மாண்டமானது. நம் மனதில் கண்ணறியாமல் நுழைந்து பல நாட்கள், மாதங்கள், ஏன் வருடங்கள் கூட நம்மை அலைக்கழிக்க வைக்க ஒரு சிறந்த திரைப்படத்தால் முடியும். அது ஒரு அனுபவம். ஒரு மொழி. மொழி அறிந்தவர்கள் அக்கலையை கையாளும் போது நம்மால் அந்த மொழியின் தனித்தன்மையை உணர முடியும்.

மேலே உள்ள இரண்டும் நம் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒரு அங்கமாகவே மாறிப்போய்விட்ட ஒன்று. நம் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டு பார்ப்பவனின் மனதை அசுத்தப்படுத்தாத, அம்மாவின் சாப்பாடுதான் நல்ல சினிமா என்று பாலுமகேந்திரா அடிக்கடி குறிப்பிடுவார். 25 வருடங்களுக்கு முன் அவர் படைத்த அம்மாவின் முழு சாப்பாட்டை இன்று வரை வயிறு நிறைய நம்மால் உண்ண முடியும். வீடு திரைப்படம். வணிக சினிமாவின் கோரவாய் உள்ளே இழுத்து அபகரிக்க முயன்றபோதும், அதனிடம் சிக்காமல் பலர் நடக்க மறுக்கும் பாதையில் நடக்கும் கலைஞர்கள் சினிமா என்பது ஒரு வியாபாரம் அல்ல, கலை என்பதை நிரூபித்துகொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட கலைஞர்களால் படைக்கப்பட்ட படைப்புகளுக்கு காலமும் வியாபாரமும் தடைகள் போட்டுவிட முடியாது. அப்படியான ஒரு படைப்பை பற்றி, அப்படியான ஒரு கலைஞனிடம் நடத்திய நீண்ட உரையாடலில் இருந்து....
வீடு படத்திற்கான உந்துதல் எது?

நான் பலதடவை இது குறித்து சொல்லியிருக்கிறேன். எனது தாய் ஒரு வீடு கட்ட பட்ட வேதனைகளையும் அனுபவங்களையும் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அப்போது மனதில் பதிந்துவிட்ட விஷயங்கள்தான் வீடு படத்திற்கான உந்துதல்.

2.நீங்கள் செய்த படங்களிலேயே உங்களுக்கு மிகவும் மனதிருப்தி தந்த படம் வீடு என்று பல முறை கூறியிருக்கிறீர்கள். அதற்கு குறிப்பிட்டு ஏதேனும் காரணம் இருக்கிறதா?

நான் செய்த படங்களிலேயே எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட முதல் படம் வீடு தான். எந்தவிதமான சமரசமும் இல்லாமல். இப்படித்தான் சினிமா எடுக்க வேண்டும் என்று நான் எப்படி நினைத்திருந்தேனோ, அதே போன்று நான் எடுத்த சினிமா வீடு. முழுக்க முழுக்க நான் விரும்பிய சினிமாவை என்னால் எடுக்க முடிந்தது வீடு படத்தின் மூலம் தான். அதனால்தான் எந்த சமரசமும் இல்லாமல் செய்த அந்த படம் இன்று வரை எனக்கு மிகுந்த மனதிருப்தியை அளிக்கிறது.

3.முழுக்க முழுக்க மசாலா சினிமாக்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வீடு போன்ற ஒரு ரியலிச சினிமாவை எடுத்த அனுபவம் எப்படி இருந்தது?

நான் முன்பே சொன்னேன் இல்லையா? நான் இந்த படம் எடுக்கும்போது, இந்த படம் ஓடுமா ஓடாதா, பணம் வருமா வராதா, வியாபாரம் ஆகுமா ஆகாதா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட படங்கள் வர வேண்டும் என்று நான் ஆசைப்பட்டு எடுத்த படம் வீடு. அதனால் தான் எந்த சமரசங்களும் பண்ணவில்லை. முக்கியமாக வணிக சமரசங்கள் செய்யவேயில்லை. அதனால், அந்த காலத்தில் எந்த படம் எப்படி வந்தால் எனக்கென்ன? I am not bothered.

4. பொதுவாக, ஒரு கதாப்பாத்திரத்தின் முன்கதையை சொல்லிவிட்டு, களத்தை விளக்கிவிட்டு பின்தான் கதைக்குள்ளேயே செல்வார்கள். ஆனால் வீடு படத்தில் முதல் காட்சியில் இருந்தே கதை ஆரம்பித்து விடுகிறதே...

ஐயா, மற்றவர்கள் படம் எப்படி எடுப்பார்கள், எடுக்கிறார்கள் என்பதை பார்த்து நான் சினிமா எடுக்க மாட்டேன். இது என் படம், நான் இங்கேதான் ஆரம்பிப்பேன். இங்கேதான் முடிப்பேன்.
5. இந்த படத்தின் திரைக்கதையை எழுதும்போது உங்களுக்கு ஏற்பட்ட சவால்கள் என்னென்ன?
ஒரு சவாலும் இல்லை. சந்தோஷமா எழுதினேன். ரொம்ப சந்தோஷமா எழுதினேன். இந்த படத்துக்காக ஒரு வீடு கட்ட வேண்டியிருந்தது. அதற்கான பணமும் இடமும் அப்போது இருந்தது. கட்டினேன். அது கூட சவாலாக இல்லை. மகிழ்ச்சியாகவே அனைத்தையும் செய்தேன்.

6. வீடு படத்தின் களம் மிகச்சிறியது. ஒரு வீடு, ஒரு அலுவலகம் இவற்றை சுற்றித்தான் திரைக்கதை சுழலும். அத்தகைய சிறிய களத்தில் ஒரு முழுநீள படத்தை எடுத்துச்செல்வதில் ஏதாவது சிரமங்கள் உள்ளதா?

சிரமம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு படத்தின் கதைதானே அதன் களத்தையும் கதையின் பயணத்தையும் முடிவு செய்கிறது. ஜீலி கணபதி படத்தை எடுத்துக்கொண்டால் ஒரு பெட்ரூமை சுற்றித்தான் மொத்த படமும் நகரும். அதுபோல், இந்த படம் வீடு, அலுவலகம் என்ற சிறிய களத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள்தான் இது நகர வேண்டும்.

7. வீடு படத்தில் ஒரு அழகான காதலும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படத்தில் கையாளப்பட்டுள்ள காதலைப் பற்றி சொல்லுங்கள்.

வீடு படத்தில் சொல்லப்பட்ட காதல் மாதிரி என்னுடைய எந்த படத்திலும் காதல் அழுத்தமாக சொல்லப்படவில்லை. அல்லது, வேறு எந்த சோ கால்ட் வணிக சினிமாவில் காதல் இவ்வளவு அழுத்தமாக சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இங்க காதலர்கள் வாயில் இருந்து காதல் என்ற வார்த்தையே இல்லை. மரத்தை சுற்றி பாட்டு பாடவில்லை. அவர்களின் செய்கைகளின் மூலம் அவர்கள் செயல்பாடுகளின் மூலம் அவர்கள் இருவரும் ஆழமாக காதலிக்கிறார்கள் என்று நமக்கு புரியும். அப்படித்தான் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். சொன்னேன்.
8. இந்த படத்திற்கென ஒரு வீடு கட்டினீர்கள். வீடும் ஒரு கதாப்பாத்திரமாக படத்தோடு பயணமாகும். வீடு கட்டி இந்த படத்தையும் முடிக்க எத்தனை நாட்களானது?

இப்போது எனக்கு அது சுத்தமாக நினைவில் இல்லை. சரியாக சொல்லமுடியவில்லை. ஆனால் படத்திற்கென ஒரு வீட்டை கட்டியதால் அதற்கேற்ப படிப்பிடிப்பை நடத்த வேண்டி இருந்தது. மழை வந்து வீட்டு வேலைகள் பாதிக்கப்பட்டால் படப்பிடிப்பும் தள்ளிப்போகும். அது கொஞ்சம் சிரமமாக இருந்தது.
9. ஒரு திரைக்கதை உங்களுக்கு எந்நவிதமான பாதிப்பை ஏற்படுத்தினால் இதை படமாக்கலாம் என்று அடுத்த கட்டத்தற்கு செல்வீர்கள்?

வீடு படத்தின் தாக்கம் என்றால், நான் 7 அல்லது 8 வயதிருக்கும் போதே எனக்கு ஏற்பட்ட தாக்கம் அது. அது என்னுள் விதையாக இருந்து வளர்ந்து வெளியில் வந்ததுதான் வீடு. எனவே குறிப்பாக இதன் திரைக்கதையின் தாக்கத்தை பற்றி என்னால் சொல்லமுடியவில்லை.

10. முழுக்க முழுக்க உங்கள் திருப்திக்காக எடுக்கப்பட்ட படமா வீடு?

என்னோட திருப்திக்கு என்பதை விட, தமிழுக்கு இப்படியொரு படம் கண்டிப்பாக வேண்டும். I have my own way. எனக்கு சுதந்திரம் இருந்தால் இப்படியான திரைப்படங்களைத்தான் நான் எடுக்க விரும்புவேன். இப்படியான படங்களை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் சினிமாவைத் தாண்டி எனக்கும் குடும்பம் இருக்கிறது. சினிமா என்பது என் கலாரீதியான வழிபாடு மட்டுமல்ல. என் தொழிலும் கூட. தொழில் என்கையில் அதில் வரும் வருவாயை வைத்துதான் நான் சாப்பிட வேண்டும். அதனால மத்த படங்கள சமரசங்களோடு பண்ண வேண்டிய வேலைக்கு நான் தள்ளப்படுறேன்.
11. வசனங்கள் மிகக்குறைவாக கையாளப்பட்ட படம் வீடு. ஒரு படத்தில் வசனம் வகிக்கும் இடம் என்ன? வீடு படத்தை பொறுத்தவரையில்...

எந்தப்படத்தை பொறுத்தவரையிலும், சினிமா என்கிற அந்த ஊடகத்துக்கு, காட்சிப்பூர்வமாக ஒரு விஷயத்தை கூற முடியவில்லை என்ற நிலை வரும்போதுதான் வசனத்தோட உதவியை நாட வேண்டும். எல்லா படங்களுக்கும் இது பொருந்தும்.

12. திரைக்கதையில் இடம்பெற்று படமெடுக்க முடியாமல் போன, எடிட்டிங்கில் தூக்கப்பட்ட முக்கியமான காட்சிகள் ஏதாவது இருக்கின்றதா?

சரியாக ஞாபகமில்லை. 25 வருசத்துக்கு முன்னாடி நடந்த விஷயம். ஞாபகமில்லை. எடுக்கமுடியாமல் போன, திரையில் வராமல் போன காட்சிகள் என்று எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

13. இந்த படத்துல இடைவேளை எங்கே வருகிறது?

இடைவேளை இல்லை இந்த படத்துக்கு. இடைவேளையே இல்லை.

14. தமிழ் சினிமாவை பொறுத்தவரை இடைவேளை என்ற ஒரு அமைப்பு எப்படி உருவாகியிருக்கும்?

இடைவேளை என்பது வியாபாரியின் கண்டுபிடிப்பு. தியேட்டர்ல போண்டா, சமோசா, டீ விக்கனும். அதுக்கு தியேட்டர்க்கு உள்ளேயே ஒரு இடம். அதுக்கு தியேட்டர் ஓனர்க்கு வாடகை வேணுமில்லையா. அதுக்காக உருவாக்கப்பட்டதுதான் இடைவேளை. இது முழுக்க முழுக்க வியாபாரிகளின் கண்டுபிடிப்பு.

15. இப்போது பார்க்கும் போதும், உங்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைக்கும், இந்த படத்தில் உங்களுக்கே மிகவும் பிடித்த காட்சி எது?

தங்கைக்கு தெரியாமல் அக்கா அவளுக்கு பட்டு பாவாடை வாங்கி வைத்திருக்கிறாள். அதை தங்கச்சி பார்த்ததும் ஆச்சர்யத்தில் சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறாள். அவளுக்கு தெரியாமல் பின்னால் நிற்கும் அக்கா, பிடித்திருக்கா என்று கேட்கிறாள். தங்கை திரும்புகிறாள். அப்போது அவள் கண் நனைந்திருக்கிறது. பிறகு அக்கா தங்கையை கட்டிக்கொள்கிறாள். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், என்னை உணர்ச்சிவசப்பட வைக்கும் எனக்கு மிகவும் பிடித்த காட்சி இது.

16. சினிமா என்பது willing suspension of disbelief என்பார்கள். இது நடக்காது என்று தெரிந்தும் இது சினிமாதானே என்று மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலை அது. இப்படி சினிமாவை வாழ்க்கையில் இருந்து வேறாக பார்க்கும் மக்களிடத்தில் அவர்களின் வாழ்க்கையை அப்படியே கொண்டுசென்று சேர்த்த படம் வீடு. இந்த வேறுபாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

எந்த மாதிரியான சினிமா என்பதை பொறுத்தும், எந்த வகையான மக்கள் அதைப் பார்க்கிறார்கள் என்பதை பொறுத்தும் இது வரையறுக்கப்படும். பைசைக்கிள் தீவ்ஸ், சில்ட்ரன் ஆஃப் ஹெவன், பதேர் பாஞ்சாலி போன்ற படங்களை பார்க்கும்போது இந்த சந்தேகம் வந்ததா? இல்லையே...எனவே எந்த மாதிரியான படங்களை நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து இது மாறுபடும்.

17. ஒவ்வொரு படமுமே பார்வையாளனிடம் ஒரு உணர்வை விதைக்க வேண்டும் என்று ஒரு படைப்பாளி விரும்புவதுண்டு. இந்த படம் பார்க்கும் ரசிகனிடம் எந்தமாதிரியான உணர்வை விதைத்க வேண்டும் என்று விரும்பினீர்கள்?

அப்போது எந்தமாதிரியான எண்ணம் இருந்தது என்று இப்போது என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் வீடு படம் இரண்டு தளங்களில் பயணிக்கிறது. ஒன்று அந்த கல் வீடு எப்படி படிப்படியாக முழுமையடைகிறது. இரண்டு அந்த வீடு கட்டுபவர்களின் மனநிலை வீடு கட்டுகையில் எப்படி படிப்படியாக மாறுகிறது. வீடு கட்ட ஆரம்பிக்கும் போது இருந்த அதே மனநிலையில்தான் வீடு கட்டி முடிக்கும்போது இருக்கிறார்களா, அவர்களின் சுயம் மாறுகிறதா என்ற இரண்டு தளங்களில் இயங்குகிறது வீடு.

ஒன்று, பிசிக்கலா இந்த வீடு கட்டப்படுவது. இரண்டு அந்த வீடு கட்டுபவர்களின் மென்ட்டல் நிலையை எப்படி பாதிக்கிறது.

18. இந்த படத்தின் மையக் கதாப்பாத்திரம் ஒரு பெண். வீடு கட்டும் அனைத்து கஷ்டங்களையும் தாங்கி முன்னேறுவது ஒரு பெண். இதில் மையமாக ஒரு பெண்ணை படைத்தது கதையின் போக்கிற்கு எவ்வாறு உதவுகிறது?

இது என் அம்மாவுடைய அனுபவம். அந்த நினைவுகளின் வெளிப்பாடுதான் வீடு என்று சொன்னேன். ஆனால் இப்ப திரும்பிப் பாக்குறப்ப அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு படுகிறது. ஏனெனில் இவள் பெண்ணாக இல்லாத பட்சத்திலே, ஆணாதிக்கத்தையும் ஆண் வக்கிரத்தையும் நான் அங்கே காண்பிக்க முடியாது. கான்ட்ராக்டர் பெண்ணை அவமதித்து கேட்பது போன்ற விஷயங்கள் இடம்பெற்றிருக்க முடியாது. அடுத்து, வீடு என்பது அழுத்தமான பெண்ணியம் சார்ந்த விஷயம். வீடு படத்தில் மட்டுமல்ல. என் எல்லா படத்திலும் இது இருக்கும்.

19. இந்த படத்தின் திரைக்கதை அமைப்பை பற்றி சொல்லுங்கள். பரபர திருப்பங்கள் போன்று எதுவும் இல்லாமல் வெறும் உணர்வை மட்டுமே வைத்த நகர்கிறது திரைக்கதை. உணர்வுகளினூடே பயணிக்கும் இந்த திரைக்கதை அமைப்பை பற்றி...

அது என்னுடைய சொந்த அனுபவமாக இருக்கும். நான் இந்த பர பர டிவிஸ்டுகளுக்கு ஆளாகிறவன் இல்லை. என் வாழ்க்கையில் அந்த மாதிரியான சமாசாரங்கள் இல்லை. இரண்டாவது, எனக்கு அதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கையும் இல்லை. அதிரடி டிவிஸ்ட்டுகள் போன்ற விஷயங்கள் செய்ய வேண்டும் என்ற அவசியமே எனக்கு கிடையாது. நீ ஒரு கதை சொல்ற. அந்த கதைக்கு தேவையான ஒரு போக்குல போ. அந்த கதை சொல்லிட்டு இருக்கும்போது, இத வியாபாரி வாங்கனுமே, அங்க ரெண்டு நாள் ஓடனுமே என்றெல்லாம் யோசிக்காதே. அந்த கதையோட போக்குலயே அந்த கதையை சொல்லிவிடு.

20. இந்த படத்தோட மிகப்பெரிய பலம் இசை. இதில் வசனக்காட்சிகளில் இசை இல்லாமலும், குறைவாகவும், மௌனக் காட்சிகளில், மாண்டேஸ்களில் இசை அதிகமாகவும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன?

என்னைக் கேட்டால் ஒரு படத்திற்கு இசை என்பதே திணிப்புதான். வேண்டியது இல்லை. சில சமயங்களில் இசை என்பது படத்தில் சொல்லப்பட்டிருக்கும் உணர்வுகளை அடிக்கோடிட்டு காட்டும். ஆனால் நிச்சயமாக இசை இடம்பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இசை இல்லாமல் எடுக்கப்பட்ட பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். இசை இல்லையென்றாலும் வாழ்க்கையில் இதர சத்தங்கள் அதில் இருக்கும்.

21. ஒரு காட்சிக்கு இசை எங்கே வர வேண்டும் என்பதை எப்படி தீர்மானம் செய்வீர்கள்? அப்படி தீர்மானம் செய்வதில் இசையமைப்பாளரின் பங்கு என்ன?

மூன்றாம் பிறை என்று என்னுடைய வலைப்பூ ஒன்று இருக்கிறது. நீங்கள் தயவுசெய்து அதை படித்துப்பாருங்கள். அதில் இளையராஜாவை பற்றி இரண்டு பதிவுகளை எழுதியிருக்கிறேன். நீங்கள் கேட்ட இந்த கேள்விக்கான பதில் அதில் முழுமையாக இருக்கும்.

22. How to Name it என்ற ஆல்பத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கோர்வையை இந்த படத்திற்கு பயன்படுத்தியிருக்கிறீர்கள். அதைப்பற்றி...

இளையராஜா அப்போது ரொம்ப பிசியாக இருந்த காலம். அதே நேரம், இது 12 லட்சம் செலவில் பண்ணப்பட்ட படம், அந்த வீடு கட்டப்பட்டதையும் சேர்த்து. அப்போது இளையராஜாவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளமும் அதிகம். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. இளையராஜாவிடம் கேட்டிருந்தால் இலவசமாகக் கூட செய்து கொடுத்திருப்பார். ஆனால் என் நட்பை அப்படி தவறாக பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை. அதனால் நான் ராஜாவிடம் நான் உன்னுடைய இசையைத்தான் பயன்படுத்துவேன் என்று சொல்லி அந்த ஆல்பத்திலிருந்த இசையை பயன்படுத்தினேன். அதற்காக அவருக்கு ஒரு தொகையும் கொடுத்தேன். அதில் எனக்கொரு திருப்தி. அந்த இசைக்கோர்வை படத்துக்கு மிகப் பொருத்தமாகவும் இருந்தது. அந்த ஆல்பத்தின் பெயர் How to Name it. நான் படம் முடித்தவுடன் ராஜாவிடம் சொன்னேன். It has a name now. Its veedu film music.
23. ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒரு இசை. அதை மனதில் வைத்துதான் காட்சிகளை அமைத்தீர்களா?

இல்லை நிச்சயமாக இல்லை. நிச்சயமாக இல்லை. இந்த படம் முடிக்கும் வரை எனக்கு அப்படியொரு ஆல்பம் வெளிவந்திருப்பேதே தெரியாது. படம் முடித்து இசை சேர்க்க வேண்டும் என்று எண்ணும்போதுதான் அதைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதைக் கேட்டுப்பார்த்து பிடித்தவுடன், இளையராஜாவிடம் அதை பயன்படுத்தப் போகிறேன் என்று சொன்னேன்.

24. காட்சியமைப்பு, இசை, மௌனம் எல்லாம் சேர்ந்து ஒரு படம் ஒரு பார்வையாளனுக்கு ஒரு முழு திரையனுபவம் கொடுக்கப்படுகிறது. ஒரு படத்தின் திரை அனுபவம் என்பது எந்த கட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. திரைக்கதை எழுதப்படும் போதா, படப்பிடிப்பின் போதா, போஸ்ட் ப்ரொடக்சன் போதா ?

திரைக்கதை எழுதும்போதுதான் அதன் முழு வடிவமும் தீர்மானிக்கப்படுகின்றது. ஸ்கிரிப்ட் எழுதப்படும்போதே அதன் திரை அனுபவம் தீர்மானிக்கப்படுகிறது. என்னைக் கேட்டால் ஒரு படத்தின் ஸ்கிரிப்ட்தான் அதன் ப்ளூ பிரிண்ட். ஒரு கட்டடக் கலைஞன் ஒரு கட்டடத்தின் வரைபடத்தை வரையும் போதே அவனளவில் அந்த கட்டடம் கட்டப்பட்டு விடுகின்றது. திரைக்கதையில் தான் எல்லாமே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. ஷீட்டிங் நேரத்தில் அது செயல்படுத்தப்படுகின்றது. எடிட்டிங் நேரத்தில் அது இன்னொரு கட்டத்திற்கு செல்கிறது. ஆனால் திரைக்கதைதான் அடிப்படை.

25. இப்படத்திற்கும் நீங்கள்தான் ஒளிப்பதிவு. திரைக்கதை எழுதும்போதே காட்சிபூர்வமாக எழுத உங்களுக்கு இது நிச்சயம் உதவியிருக்கும். படமெடுக்கும்போது நீங்களே ஒளிப்பதிவு என்பது எந்தளவிற்கு உங்களுக்கு உதவியது ?

நானே ஒளிப்பதிவாளன், நானே இயக்குனன் என்பதில் எனக்கு இருக்கும் பெரிய உதவி என்பது, கம்யூனிக்கேஷன். ஒரு இயக்குநர் என்ன நினைக்கிறார் என்பதை ஒளிப்பதிவாளரிடம் முழுமையாக புரிய வைக்க வேண்டும். சில நேரங்களில் இயக்குனர் சொல்வது ஒளிப்பதிவாளருக்கு முழுமையாக சென்றடையாமல் இருக்கலாம். இருதரப்பிலும் உள்ள கம்யூனிக்கேஷன் பிரச்சினையினால் இது வரலாம். அப்போது ஒரு காட்சி முழுமையாக இயக்குநர் நினைத்தவாறு வராமல் போகலாம். அந்த பிரச்சினை இல்லையே எனக்கு. நான் நினைப்பதை நானே தான் செய்யப் போகிறேன். இந்த கம்யூனிக்கேஷன் கேப் எனக்கு இருக்காது. அதனால்தான் என் எல்லா படத்துக்கும் நானே ஒளிப்பதிவு செய்கிறேன்.

26. அதில் ஏதாவது சவால் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

கஷ்டமான வேலை. ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை. மனதாலும் உடலாலும் கஷ்டப்படவேண்டியிருக்கும். களைச்சுப் போயிடுவேன் சில நேரங்களில். ஆனால் அதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. என் மகன் நல்ல ஒளிப்பதிவாளர்தான். ஆனால் அவனையும் நான் என் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அனுமதித்ததில்லை. ஏனென்றால் எனக்கு ஒளிப்பதிவு வேறு, இயக்கம் வேறு அல்ல. நான் கேமிரா மூலமாகத்தான் கதை சொல்கிறேன். அதனால் என்னால் பிரிச்சுப் பார்க்க முடியாது. இன்னொருவரை எடுக்கச் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்து பார்க்கவும் முடியாது.

27. நீங்கள்தான் உங்கள் படங்களுக்கு படத்தொகுப்பும் செய்கிறீர்கள். மிகவும் விரும்பி எழுதிய, விரும்பி படமாக்கப்பட்ட ஒரு காட்சியை எடிட்டிங் டேபிளில் நீக்கும் நிலை வரும்போது, அதன் மேல் உங்களுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் நிச்சயம் இருக்கும் தானே ?

என்னுடைய கதைக்கு தேவையில்லாத ஒரு ப்ரேம் அங்கே இருக்காது. என்னுடைய உதவியாளர்கள் சொல்வார்கள். சார், அற்புதமான காட்சி, ஷாட் என்பார்கள். அப்படியென்றால் அதை வீட்டுக்கு கொண்டுபோய் வைத்துக்கொள்ளலாம் என்பேன். இது கதைக்கு தேவையில்லை, இது வேண்டாம் என்பேன். ஐயாம் ரூத்லெஸ். போட்டாகிராஃபி பண்ணும்போது கூட அப்படித்தான். நான் ஒளிப்பதிவு செய்யும்போதும் இயக்குநராகத்தான் சிந்தித்து அந்த காட்சியை எடுக்கிறேன். நான் எவ்வளவு விரும்பி எழுதிய காட்சியாக இருந்தாலும், சிலாகிச்சு எடுத்த காட்சியாக இருந்தாலும், எடிட்டிங் டேபிளுக்கு வரும்போது அது படத்திற்கு தேவையில்லை என்றால் தேவையில்லை தான். எந்த சமரசங்களும் இருக்காது.

28. ப்லிம்மேக்கிங்கின் முக்கியமான மூன்று துறைகளையும் நீங்களே கையாளுகிறீர்கள். இதனால் நீங்கள் எழுதும் படத்தை அப்படியே திரைக்கு கொண்டுவர முடிகிறது என்று நம்புகிறீர்களா ?

மூன்றையுமே நான் செய்வதால் தான் நான் நினைத்த படத்தை திரைக்கு கொண்டுவர முடிகிறது என்று நான் நம்புகிறேன். கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று ஒவ்வொன்றிற்கும் ஒருவர் என்று செயல்பட்டால், இந்த டோட்டல் கமாண்ட், முழு குவிப்பு இருக்குமா என்பது எனக்கு சந்தேகம் தான். அப்போது மற்ற இயக்குநர்களுக்கு அந்த கமாண்ட் இல்லையா என்றால் அது எனக்குத் தெரியாது. எனக்கு இப்படித்தான் இயங்கத் தெரியும். இப்படி இயங்குவதன் மூலமாகத்தான் ஒவ்வொரு ப்ரேமிலும் என் ஆளுமை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

29. இப்படியொரு ரியலிஸ்ட்டிக்கான படத்தை எடுத்தபின், அதை வெளியிடும்போது அத்தகைய சூழலில் ஏதாவது தடைகள் இருந்ததா?

ஒரு தடையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 12 லட்சம். அந்த வீடு கட்டும் செலவையும் சேர்த்து. படம் மொத்தமாக வசூலித்த தொகை 72 லட்சம். இதற்குக் காரணம் சொந்த வீடு என்பது அனைவருடைய கனவாகவும் இருப்பதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் பாட்டில்லாத ஒரு படம் அந்த காலத்தில் எடுபட்டது என்றால், அதற்கு காரணம் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எல்லாருக்கும் பொதுவான விஷயமாக இருப்பதால் தான். நமக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது நம் எல்லாருடைய விருப்பமும்தானே.

30. அப்படியென்றால் வீடு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படம்தான் இல்லையா?

இந்த வெற்றி தோல்வி என்ற பதமே எனக்கு கோபமூட்டுகிறது. நாம் என்ன போரா செய்கிறோம். வெற்றி தோல்வி என்று சொல்வதற்கு. வெற்றிப்படம் என்பதற்கு நீங்கள் வணிக ரீதியான வெற்றியை மட்டும்தான் அளவுகோலாக வைத்திருக்கிறீர்கள். அதன் வியாபார வெற்றியை மட்டும்தான் சொல்கிறீர்கள். அது அபத்தமான விஷயம் இல்லையா? பணம் சம்பாதிக்கிற படம் வெற்றிப்படம் என்பது தவறான கருத்து இல்லையா? நாம் என்ன பாலியல் தொழிலா செய்கிறோம் ?

31. வணிக ரீதியாகவும் செலவு செய்த பணத்தை விட அதிக பணத்தை எடுத்த படம் வீடு, அதன்பிறகு அது போன்ற படங்களை நீங்களே கூட எடுக்காதது ஏன்?

அது போன்ற படங்கள் பண்றதுக்கான அடிப்படை செலவுகள் செய்ய பணம் என்னிடம் இல்லை. அதற்காக நான் இன்னொருவரிடம் செல்ல வேண்டியிருக்கிறது. அவர் வேறு மாதிரியான படங்களை எடுக்க சொல்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. சரி. நல்ல படம் என்றும் சொல்லப்பட வேண்டும், எனக்கும் திருப்தி தர வேண்டும், வியாபார ரீதியாகவும் பணம் போட்டவனுக்கு பணமும் வரவேண்டும் என்ற ஒரு கயிற்றில் நடக்கும் நிலையில்தான் நான் இருந்தேன். என் எல்லா படங்களும் அதை பூர்த்தி செய்தன. Commercially Successful, Aesthetically pleasing, satisfying and Meaningful.

32. இந்த படத்தில் எனக்கு உறுத்தலாக பட்ட ஒரு விஷயம். நடிகர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் படத்தில் வரும் பேக்ரவுண்ட் ஆர்ட்டிஸ்ட்களின் நடிப்பு மிகவும் செயற்கையாக இருந்ததாக பட்டது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அது உங்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். எனக்கு அதுபோன்று எந்த இடத்திலும் படவில்லை.

33. திரைமொழி என்றால் என்ன? அது ஒவ்வொரு படத்திற்கும் மாறும் என்று நினைக்கிறீர்களா?

தமிழ் ஒவ்வொரு வடிவத்திலும் மாறுகிறதா? இல்லையே. அதுபோல்தான் திரைமொழியும். தமிழ் சிறுகதை, நாவல், என்று ஒவ்வொரு வடிவத்திலும் மாறவில்லை இல்லையா? அதுபோல்தான திரைமொழியும். அது தெரிந்தால் சரியாக கையாளலாம். இல்லையென்றால் முடியாது.
34. படம் முழுக்க ஒரு காட்சிரீதியான ஒரு படமாக சென்றுகொண்டிருக்கிறது. வசனங்கள் குறைச்சலாக, காட்சிரீதியான ஒரு படமாக சென்று கொண்டிருக்கும் படத்தின் இறுதிக்காட்சியில், நாயகனும் நாயகியும் ஃப்ரீஸ் செய்யப்பட்டு ஒரு வாய்ஸ் ஓவரில் படம் முடிவதுபோல் அமைத்தது ஏன்? காட்சிரீதியாகவே படத்திற்கு ஒரு முடிவு கொடுத்திருக்கலாமே?

ஏனென்றால் எனக்கு அந்த முடிவு தெரியாது. அதற்கு பிறகு அந்தக் கதையில் என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை எப்படி நான் உங்களுக்கு சொல்லுவேன். அதனால்தான் இப்படியொரு பிரச்சினை நடக்கிறது, வழக்கு நடக்கிறது, இவள் காத்திருக்கிறாள் என்று முடித்தேன். அது ஒரு ஓப்பன் என்ட். விபச்சாரத்தை பற்றியோ, லஞ்சத்தை பற்றியோ நான் ஒரு படம் எடுத்தால் அதற்கான தீர்வு எனக்குத் தெரியாது. பிறகு எப்படி நான் ஒரு முடிவைச் சொல்ல முடியும்.

35. வீடு படம் 25 வருடத்திற்கு முன் எடுத்த படம். அதில் சொல்லப்பட்டிருந்த சமூக நிலைமை இப்போது எந்தளவிற்கு மாறியிருக்கிறது. வீடு படம் இன்றைக்கும் பொருந்திப்போவதற்குக் காரணம், அதன் உட்கருத்தா, இல்லை மாறாத சமூக நிலைமையா?

மாறாத சமூக அமைப்பு என்றுதான் நான் சொல்லுவேன். வீடு படத்தில் சொல்லப்பட்ட சமூக நிலைமை இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. அதனால்தான் வீடு படத்தை இப்போது பார்ப்பவர்கள் கூட, இது ஏதோ போன வாரம் எடுத்த படம் போல் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

36. இந்த படத்தை இன்று பார்க்கும்போது, ஒரு இயக்குநராக உங்கள் மனதில என்னென்ன எண்ண ஓட்டங்கள் ஓடுகிறது?

25 வருடங்களுக்கு முன், நான் இளமையாக இருந்தபோது இப்படியொரு படம் சாத்தியப்பட்டதே என்று சந்தோஷமாக இருக்கிறது. நிறைவாக இருக்கிறது. இப்படியொரு படத்தை தமிழில் என்னால் கொடுக்க முடிந்திருக்கிறது என்று கர்வமாக இருக்கிறது. இப்படியொரு படத்தை தமிழுக்கு கொடுத்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழுக்கு, தமிழ் சினிமாவிற்கு நான் என்ன செய்தேன் என்ற கேள்வி ஒவ்வொரு இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் வர வேண்டும். அந்த கேள்வியை என்னை நான் கேட்டுக்கொண்டதற்கான பதில்தான் வீடு. பணம் சம்பாதிப்பது மட்டும் இங்கே வேலையில்லை. அதுவும் தேவைதான். அதனூடே தமிழ் சினிமாவிற்கும் ஏதாவது செய்ய வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் தமிழ் சினிமாவிற்கு நான் இப்படியொரு படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற என் அழுத்தமான ஆசைதான், விருப்பம்தான், இந்தப்படம். தமிழ் சினிமாவிற்கு என்னுடைய பங்களிப்புதான் வீடு, சந்தியா ராகம், கதைநேரத்தில் வந்த படங்கள்.

37. சொக்கலிங்க பாகவதர். படத்தின் முக்கியமான ஒரு தூண். அவர் இந்த படத்திற்குள் எப்படி வந்தார்?

வீடு படத்திற்கு சொக்கலிங்க பாகவதர் இடையில்தான் வந்தார். முதலில் அவர் இல்லை. ஸ்கிரிப்ட் முடிஞ்சதும், ஷீட்டிங் நெருங்க நெருங்க, ஒரு வயதானவரை வைத்து நான் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டேன். ஒரு 4, 5 நாட்கள் சென்றவுடன் எனக்குத் தெரிந்தது, இது அல்ல நான் நினைத்த கதாப்பாத்திரம் என்பது. 12 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் அந்த 4 நாட்கள் எடுத்த அனைத்து காட்சிகளையும் தூக்கிப்போட்டு வேறு ஒருவரைத் தேடினேன். பிறகுதான் சொக்கலிங்க பாகவதரை பிடித்தேன். அது மிகவும் பொருத்தமாக இருந்தது.

38. அர்ச்சனா ?

அர்ச்சனாவைத் தவிர வேறு யாரையும் என்னால அந்த கதாப்பாத்திரத்துக்கு நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எழுதும்போதே அர்ச்சனா மனதில் இருந்தார், பானுசந்தர் மனதில் இருந்தார். வெறுமனே கற்பனையில் ஒரு கதாப்பாத்திரத்தை நான் படைக்கவில்லை. எனக்கு தேவையான அந்த கதாப்பாத்திரம் இப்படித்தான் இருக்கவேண்டும். ஒரு திராவிடப் பெண்ணாக இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம் எனக்கு. ஒரு பஞ்சாபி பொண்ணையோ, மராத்தி பொண்ணையோ கொண்டு வந்து இது தமிழ்ப்பெண் என்று சொல்ல நான் அன்றும் தயாராக இல்லை, இன்றும் தயாராக இல்லை, என்றும் தயாராக இல்லை. அந்த மாதிரி ஒரு வெள்ளைத்தோலைக் கொண்டு வந்து இதுதான் தமிழ்ப்பெண் என்று என்னால் சொல்ல முடியாது. எனக்கு கருத்த நிறம் பிடிக்கும். ஏனென்றால் அது என்னுடைய நிறம். என் மண்ணின் நிறம். என்னுடைய கதாநாயகிகள் எல்லாருமே நம்முடைய திராவிட நிறம் கொண்டவர்கள்தான். அதுல நான் ரொம்ப பிடிவாதமா இருக்கேன்.

39. எழுதும்போதே ஒரு நடிகரை மனதில் வைத்துக்கொண்டே எழுதியதால்தான் அவர் அந்த பாத்திரத்தோடு அவ்வளவு பொருந்திப் போயிருக்கிறார் என்று நினைக்கிறீர்களா?

அர்ச்சனாவை பொறுத்தவரையில் அவளது ஒவ்வொரு அசைவும் அந்த காலத்தில் எனக்கு தெரிந்த விஷயமாக இருந்தது. அதனால் பல இடங்களில் அவளது சொந்த அசைவுகளையே என்னால் அந்த கதாப்பாத்திரத்துக்கு வைக்க முடிந்தது. அவளது கண்ணை என்னால் மிக அழுத்தமாக பயன்படுத்த முடிந்தது. அவளுக்கு அற்புதமான பெரிய கண்கள். அந்த கண்கள் மூலமான வெளிப்பாடு இருக்கு இல்லையா, வார்த்தைகள் இல்லாமல் கண்கள் மூலமாக வெளிப்படுத்துவது, அதை என்னால் ஆழமாக பயன்படுத்த முடிந்தது. அவள் வாய் திறந்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அவள் கண் மூலமாகவே எல்லாவற்றையும் சொல்லிவிட முடியும். அதுக்கு பொருத்தமான நடிகையா அர்ச்சனா இருந்தாங்க. அசாத்தியமான ஒரு நடிகை. குறிப்பாக அந்த மௌமான நேரங்களில், மனதில் இருக்கக்கூடிய உணர்வுகளை கண்களின் மூலமாக, உடல்மொழி மூலமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான நடிகையா அர்ச்சனா இருந்தாங்க.

40. அர்ச்சனாவுடைய காட்சிகளில் உங்களை மிகவும் வியக்க வைத்த, மிகவும் திருப்தியளித்த காட்சி எது?

கேண்டீனில் ஒரு காட்சி வரும். பானுசந்தர் எல்லோர் முன்னும் கத்திவிட்டு எழுந்துபோய் விடுவான். அப்போது அவமானத்தால் கூனிக்குறுகி அமர்ந்திருக்கும்போது, வெயிட்டர் வந்து காபி என்பான். அவளால் நிமிர்ந்து பார்க்க முடியாமல் குனிந்தபடியே அங்கே வச்சிடுங்க என்று சொல்லி, விட்டு வெளியே பார்ப்பாள். அப்போது நான் அதற்கு பொருத்தமான ஒரு ஷாட் வைத்திருந்தேன். அந்த தவிப்பு, அவமானம், நிராகரிப்பு, கோபம் எல்லாம் கண்ணின் மூலம், முகத்திலேயே ஒரு வசனம் இன்றி வெளிப்படுத்துவாள். அதைத் தொடர்ந்து லிஃப்டில் வசனமே இல்லாமல் அமைதியாக நகரும் ஒரு காட்சி, பின் சாலையில் என நீண்டு பேருந்தில் அந்த காட்சி முடியும். அந்த கேன்டீன் காட்சி எனக்கு மிகவும் திருப்தியளித்த காட்சி.

41. வீடு படத்திலும் உங்கள் மற்ற படங்களை போன்று நிறைய இடங்களில் மௌனங்கள் பேசும். அதன் காரணம் என்ன?

இந்த மௌனங்கள் மிக அர்த்தமுள்ள மௌனங்கள். மௌனங்கள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அது மிகவும் வலிமையான மௌனங்கள். சில நேரங்கள் சில மௌனங்களை எதிர்கொள்ளும்போது நமக்கே தெரியும், இறுக்கமான இந்த மௌனத்த விட கத்தி சண்ட போட்டுட்டு போலாமே என்று நமக்கு தோன்றுகிறது இல்லையா? பல நேரங்களில் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நம்மிடம் இருந்து மௌனமாக போகும்போது, அது நமக்குள் ஒரு சகிக்க முடியாத தவிப்பை ஏற்படுத்துமில்லையா, இதற்கு பதில் பெரிதாக சண்டை போட்டு போயிருக்கலாமே என்று தோன்றும். இந்த மௌனங்கள் எனக்கு மிக மிக முக்கியமானது.

42. அர்ச்சனாவின் இயல்பான செய்கைகளை சேர்த்ததால் அந்த கதாப்பாத்திரம் முழுமையாக அமைந்ததாக கூறினீர்கள். மற்ற கதாப்பாத்திரங்களையும் நடிகர்களையும் பற்றியும் சொல்லுங்களேன்…

அர்ச்சனாவின் அங்க அசைவுககள் தெரிந்ததால் அதை நான் என் படத்துக்கு உபயோகப்படுத்திக் கொண்டேன். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. எனவே, அந்தந்த கதாப்பாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்குள் நானே ஒரு கற்பனையாக ஒரு முடிவு செய்துகொண்டேன். அதை எவ்வளவு இயல்பாக உபயோகப்படுத்த முடியுமோ அப்படி உபயோகப்படுத்திக்கிட்டேன்.
43. வீடு, சந்தியா ராகம் இரண்டு படங்களும் பெண்மையை மையப்படுத்தின படம் என்பதைத் தாண்டி முதுமையையும் மையப்படுத்திய படங்கள். யாரும் அதிகம் தொட முன்வராத இந்த இரண்டு கருக்களையும் மையமாக வைத்து படமெடுப்பது ஏன்?

ஏனென்றால் முதுமை என்றொரு பருவத்தை குடும்பங்கள் சரியாக புரிந்துகொள்வதில்லை வயசாகுது, கிழத்துக்கு ஒரு எழவும் தெரிய மாட்டங்குதுன்னு தான் திட்டறாங்களே தவிர, வயது ரீதியாக அவர்கள் முதுமையாக இருந்தாலும், மனது ரீதியாக அவர்கள் இரண்டாவது குழந்தைப் பருவத்தில் இருக்கிறார்கள் என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை. அதை புரிந்துகொண்டால்தான் அவர்களை சரியாக கையாள முடியும்.

44. வீடு படத்தில் வருகிற தாத்தா பாத்திரமும் நீங்கள் உங்கள் சிறுவயதிலோ வாழ்விலோ பார்த்த கதாபாத்திரத்தின் வெளிப்பாடா அல்லது கற்பனையான கதாப்பாத்திரம்தானா?

அது கற்பனையான கதாப்பாத்திரம்தான்.ஆனால் கற்பனை என்றால், முழுதாக கற்பனையாகவே உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம் இல்லை. என் வாழ்வில் நான் பார்த்த பல முதியவர்களின் சாயலை கொண்டவர்தான் என்னுடைய தாத்தா.

சில படங்களில் போடுவார்கள். இந்த படத்தில் வரும் பாத்திரங்கள் கற்பனையோ. இறந்தவர்களுக்கு இருப்பவர்களுக்கோ அதனோடு எந்த சம்பந்தமும் இல்லை என்று. படத்தோட குறையே அதுதான். அது நிஜ வாழ்க்கையில் இருப்பவற்றை இருந்தவற்றை எதையுமே பிரதிபலிப்பதில்லை. அதனால் யதார்த்தமாகவும் இருப்பதில்லை.

45. தாத்தா பாத்திரத்தை பாட்டு வாத்தியாராக படைத்த்து ஏன்?

சொக்கலிங்க பாகவதர் நிஜமாகவே ஒரு பாகவதர். அவரை ஏன் நான் உபயோகப்படுத்தக் கூடாது என்று எனக்கு பட்டது. அவர் தியாகராஜ பாகவதர் காலத்து நடிகர். அவர் ஒரு பாட்டு வாத்தியார். அதையே உபயோகப்படுத்திக் கொண்டேன்.

46. ஒரு கலைக்காக கட்டப்பட்ட ஒரு வீடு. அந்த வீடு இப்போது ஒரு சினிமா பள்ளியாக மாறியிருக்கிறது. இதை எப்படி உணர்கிறீர்கள்?

அது எனக்கு ஒரு பேராச்சரியம். அதை என்னால் விவரிக்க முடியவில்லை. வீடு படம் எடுக்கும்போது நான் நினைத்தேன், இந்த வீடு, வீடு படத்திற்காக கட்டப்படுகிற வீடு என்று. ஆனால் இப்போது எனக்கு தெரிகிறது, இந்த வீடு என் சினிமா பள்ளிக்காக விதிக்கப்பட்டது என்று. ஒரு வீட்டை நான் கட்டுகிறேன். அதை நான் வீடு படத்திற்கு உபயோகப்படுத்தலாம். ஆனால் இது சினிமா பள்ளிக்கென விதிக்கப்பட்ட வீடு என்று இப்போது புரிகிறது.

47. வீடு படம் முழுமையாக பார்த்தபின், அதிலிருந்து நீங்கள் ஒரு உணரும் விஷயம் ஏதாவது இருக்கிறதா?

இது போன்று இன்னும் சில படங்களை உருவாக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு. தமிழ் சூழல் இது போன்ற படங்களை உருவாக்க என்னை அனுமதிக்கவில்லையே என்ற வலி ஒரு படைப்பாளியாக எனக்கு இன்றும் உண்டு. இதுபோன்று தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு என்னால் ஏதும் பங்களிப்பை தர முடியாமல் போயிற்றே. ஏனென்றால், அந்த படங்களுக்கான முதலீடு. அது சிறிய படங்களாக இருந்தாலும் கூட, அதற்கான முதலீடு என்னிடம் இல்லை. காரணம், நான் சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரணன். அந்த முதலீட்டுக்காக நான் இன்னொருவரிடம் போகும்போது, அவர் தான் போட்ட பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதற்காக சமரசங்கள் செய்துகொள்ள நான் தயாராக இல்லை. அதனால்தான் சொன்னேன். இது கயிற்றில் நடப்பது போல என்று. கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை.

48. வீடு படத்தை மக்கள் தங்களோடு எந்தளவிற்கு பொருத்திப் பார்க்கிறார்கள்?

அவர்கள் இந்த படத்தை தங்கள் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட படமாகவே பார்க்கிறார்கள். பார்த்தவர்கள் எல்லாம் எங்கள் கதை எப்படி உங்களுக்குத் தெரியும் என்றுதான் கேட்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு நான் ஆட்டோவில் வந்துகொண்டிருந்தபோது, அந்த ஆட்டோ டிரைவர் கேட்கிறார். ‘சார், நீங்க மறுபடியும் ஏன் வீடு மாதிரியான படங்களை எடுப்பதில்லை’ என்று. இப்படி மக்கள் தங்கள் வாழ்வோடு படத்தை பொருத்திக்கொண்டதால்தான் அப்படம் வியாபார ரீதியாகவும் சம்பாதித்தது. அந்த படம் அப்படியே இருக்கு. அழியவில்லை.

49. 12 லட்சம் போட்டு 72 லட்சம் எடுத்த படம் வீடு. அதன்பிறகும் அதுபோன்ற ஒரு படத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை எனில், தமிழ் சினிமா வியாபாரிகளின் கைகளுக்கு போய்விட்டதா?

முழுக்க முழுக்க. நூறு சதவிகிதம். முழுக்க வியாபாரிகளின் கைகளுக்கு போய்விட்டது. பணம் போடறவனும் வியாபாரி. படம் பண்றவனும் வியாபாரி. படம் பாக்கப் போறவனும் ஒரு கேளிக்கைக்காகத்தானே போறானே தவிர, ஒரு சீரியஸான அனுபவத்திற்காக போவதில்லை. ஒரு திருவிழாவிற்கு போய் சிறிது நேரம் ஜாலியாக சிரிக்கலாம், ரிலாக்ஸ் பண்ணலாம் என்ற மனநிலையில் தான் செல்கிறான். ஆக இவர்கள் மூவரும் ஒரே மாதிரியான அலைவரிசையில் தான் இருக்கிறார்கள். இதை மீறி ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டுமென்றால், எனக்கு பூர்வீக சொத்தோ வேறு பெருந்தொகையோ இருக்க வேண்டும்.

50. இப்படி ஒரு கலை முழுக்க முழுக்க வியாபாரிகள் கைகளில் போய்விட்ட பிறகும், வீடு போன்ற ஒரு படத்தை இப்போது எடுப்பது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமா முடியும். அதற்கு ஒரே வழி. உங்கள் தயாரிப்பு செலவை குறையுங்கள். என்னென்ன செலவுகளால் தயாரிப்பு செலவு கோடிகளைத் தொடுகிறது என்று எண்ணிப்பார்த்து, அதையெல்லாம் தவிர்த்து, கதைக்கு தேவையான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 25 முதல் 30 லட்ச ரூபாய்க்குள் தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான, உலகத்தரத்திலான படத்தை எடுத்துவிட முடியும். அடித்துசொல்கிறேன் நான். நிச்சயமாக முடியும்.

அப்படியொரு முயற்சியில்தான் நான் இருக்கிறேன். மிகக்குறைந்த பட்ஜெட்டில் அற்புதமான படத்தை செய்ய முடியும். அது ஓடுது இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் அவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இப்போதுள்ள வியாபார சந்தையில் நிச்சயம் நஷ்டம் ஏற்படுத்தாது. இப்போது தொலைக்காட்சிகள், வெளிநாட்டு சந்தை போன்றவற்றின் தேவை அசுரத்தனமா இருக்கு. எனவே கதைக்கு தேவையான விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு நல்ல படத்தை எடுக்க முடியும். லட்சங்களில் இருந்து கோடிகளில் படத்தை எடுத்து செல்லும் வேலைகளை விட்டுவிடுங்கள். அப்படி செல்வதற்கு நீ வியாபாரியல்ல. கதையை மட்டும் நம்பி அதற்கு தேவையான செலவை மட்டும் செய்து படம் எடுத்தால் இப்போதுள்ள சந்தையில் அது தோற்காது.

51. இடைவேளை என்பது முழுக்க முழுக்க வியாபாரிகள் உருவாக்கிய விஷயம் என்று சொன்னீர்கள். இயக்குநர்கள் திரைக்கதை எழுதும்போதே இடைவேளை வைத்து எழுதுகிறார்கள். அதன் அடிப்படையா தவறா?

இடைவேளை என்பதே நிச்சயம் தேவையற்ற விஷயம்தான். ஒரு 90 நிமிட படத்திற்கு எதற்கு இடைவேளை என்று சொல்லுங்கள். நாம் பார்க்கும் பல வேற்று மொழி படங்களில் இடைவேளை இருக்கிறதா? இல்லையே. ஒரு வியாபாரி தன் போண்டா, சமோசாவை விற்க உருவாக்கியதுதான் இடைவேளை. அதை இயக்குநர்கள் திரைக்கதையில் சேர்ப்பது தவறா என்று கேட்டால் எனக்கு தெரியாது. என்னை பற்றி மட்டும்தான் என்னால் பேச முடியும். மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி கிடையாது.

52. நீங்கள் எழுதும் திரைக்கதைகளுக்கு இடைவேளைகள் வைத்து எழுதுவதில்லையா?

எழுதுவதில்லை. சில சமயங்களில் கட்டாயம் காரணமாக இடைவேளை வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். பார்ப்பவன் சிறுநீர் கழித்துவிட்டு வரவும், கேண்டீனில் டீ காபி வடை சாப்பிட்டு வரவும் இடைவேளை என்ற ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதை தியேட்டர்காரனே தீர்மானிப்பதை விட, இயக்குநரே தீர்மானிப்பது நல்லது இல்லையா? இடைவேளை விட்டே ஆக வேண்டும் என்றால் அதை படைப்பாளியே முடிவு செய்யட்டும். வியாபாரி ஏன் முடிவு செய்யவேண்டும்.

53. இந்த படத்தோட இறுதிக்காட்சிகளின் போது, சொக்கலிங்க பாகவதர் கிட்டதட்ட கட்டி முடிக்கப்பட்ட இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலையும் தொட்டுப் பார்த்து மிகப்பெரிய திருப்தி அடைவார். இந்த வயதில் அதே வீட்டில் வாழும்போது, ஒவ்வொரு செங்கலையும் தொடுகையில் உங்களுக்கும் அதே திருப்தி வருகிறதா?

இதை நீங்கள் நம்புவீர்களா இல்லையா என்று தெரியாது. அந்த படத்தின் காட்சிகளின் அதிர்வு இன்றும் இந்த வீட்டில் இருக்கிறது. இதை பல பேர் என்னிடம் பகிர்ந்திருக்கிறார்கள். சொக்கலிங்க பாகவதர் தொட்டுப்பார்த்த அதே சுவற்றில் சாய்ந்துகொண்டுதான் இன்றும் என் மாணவர்கள் என் வகுப்பை கவனிக்கிறார்கள். இதை நான் நம்புகிறேன். நிச்சயமா இருக்கு.

54. திரைக்கதை எடிட்டர் டேபிளில் முழுமையான வடிவிற்கு வரும் என்று சொல்வார்கள். திரைக்கதை எழுதிய நீங்களேதான் படத்தொகுப்பாளர். இந்த இணைப்பை நீங்கள் எப்படி பார்த்தீர்கள்?

திரைக்கதை எடிட்டிங் டேபிளில் முழுமை அடைகிறது என்று சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் அங்கேதான் முழுமையாக வேண்டும் என்று ஒன்றுமில்லை. மிக சரியாக ப்ளான் செய்து எழுதப்பட்ட திரைக்கதையே முழுமையடைந்த ஒரு படம்தான். அதே போன்று திரைக்கதையில் எழுதப்பட்ட விஷயங்களை மட்டும்தான் நாம் ஷீட் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. திரைக்கதையை ஒரு ஏ.சி ரூமில் அமர்ந்து எழுதுவது வேறு. படமாக்க கிளம்புகையில் அங்கு நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் வேறு. அந்த அனுபவங்கள் திரைக்கதைக்கு உதவுமானால் அதையும் நம் திரைக்கதையில் சேர்ந்துக்கொள்ளலாம். தவறில்லை. அதில் நான் எந்த தயக்கமும் கொள்வதில்லை.

55. அதுபோன்று வீடு படத்தின் திரைக்கதையில் இல்லாமல் படப்பிடிப்பின் போது சேர்க்கப்பட்ட காட்சிகள் ஏதாவது உள்ளதா?

உண்டு. வீடு படத்தின் திரைக்கதை எழுதும்போது அதில் மழை வருவது போன்ற காட்சிகளை எழுதவில்லை. ஆனால் படப்பிடிப்பிற்கு செல்லும்போது வங்க கடலில் புயல் காரணமாக 6 நாட்கள் கடும் மழை பெய்தது. அதை நான் உடனடியாக என் படத்தில் சேர்த்துக் கொண்டேன். வீடு படத்தில் நீங்கள் பார்க்கும் மழை திரைக்கதையில் இல்லை. படப்பிடிப்பின் போது சேர்க்கப்பட்டது. அது இயற்கையின் சீற்றம். அஸ்திவாரம் கட்டும்போது மழை வருகிறது என்பது ஒரு இயல்பான விஷயம்தானே. எனவே அதை நான் என் படத்தில் சேர்த்துக்கொண்டேன். அதைத் தாண்டி, எனக்கு மழை மிகவும் பிடிக்கும். இப்போதும் என் படப்பிடிப்புகளில் நான் மழைக்காக, மேக மூட்டத்திற்காக காத்திருப்பேன். வெயிலுக்காக காத்திருப்பதில்லை.

56. வீடு படத்தின் வசனங்களில் நிறைய ஆங்கிலக் கலப்பு இருக்கிறதே. என்ன காரணம்?

அந்த கதாபாத்திரங்கள் எல்லாரும் படித்தவர்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். அவர்கள் பேச்சினூடே ஆங்கிலம் வந்து போகத்தான் செய்யும். அதில் எந்த தவறும் இல்லை. நான் ஒன்றும் தமிழ் வெறியன் அல்ல. தமிழ் என் உயிர் மூச்சு. அதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் அல்ல. ஆனால் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய வார்த்தைக்கு தமிழில் புரியாத வார்த்தைகளை சொல்லி பார்ப்பவர்களை நான் குழப்ப விரும்பவில்லை. அன்று ஒரு கடையில் குலம்பி என்றொரு வார்த்தையை பார்த்தேன். ஒன்றும் புரியாமல் யாரை சொல்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, குலம்பி என்றால் காஃபி என்றார் ஒருவர். ட்ரெயினுக்கு பதில் ரயில் வண்டி என்று சொல்லிவிடலாம். ஆனால் தொடர் வண்டி என்று என்னால் சொல்ல முடியாது. மொழி என்பதே, என் மனதில் இருப்பதை உனக்கு தெரியப்படுத்தத் தானே. அதில் நடுவே சில ஆங்கில வார்த்தைகள் இருந்தால் தவறில்லை என்பது என் வாதம். முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகள்தான் இருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தமிழ் பேசு தங்க காசு என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

57. மழைக்காட்சிகளை படப்பிடிப்பின் போதுதான் சேர்த்த்தாய் சொன்னீர்கள். அப்படி திடீரென உள்ளே புகுத்தப்படும் ஒன்று, அந்த திரைக்கதையின் பேலன்ஸை கெடுக்காது?

இல்லை. எது தேவையோ அது மட்டுமே சேர்க்கப்படவேண்டும். எனக்கு அப்படி ஒன்றும் இம்பேலன்ஸ் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த மழை வீடு படத்திற்கு ஒரு கூடுதல் பரிமாணத்தைதான் கொடுத்த்து.

58. படத்தின் ஆரம்பத்தில் இருந்து, தண்ணீர் பஞ்சத்தைப் பற்றிய அழுத்தமான பதிவுகள் வந்துகொண்டே இருக்கும். குறிப்பாக அந்த வீடு இருக்கும் பகுதிகளில். க்ளைமேக்சில் தண்ணீரினால் தான் கதையில் ஒரு தடங்கலும் திருப்பமும் வருகிறது. அதனால் பார்வையாளனை ஆரம்பத்தில் இருந்தே பார்வையாளனை தயார்படுத்தும் ஒரு திரைக்கதை அமைப்பா அது?

ஆரம்பத்தில் இருந்தே காட்டப்பட்டு வந்த தண்ணீர் பஞ்சத்தை பற்றிய பதிவுகள் படத்தின் இறுதியில் அழகாக வந்து சேர்ந்துவிடுகிறது. மிக அழகாக இணைகிறது. மேலும் அது பார்வையாளனை தயார்படுத்தும் உத்தி என்பது அல்ல. அன்றிருந்த நிலைமை அதுதான். குழாயடி சண்டைகள், தண்ணீர் லாரியின் பின் பெண்கள் ஓடுவது என்று அன்று அத்தகைய தண்ணீர் பஞ்சம் இருந்தது. அது இன்றும் மாறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

59. அதே போல் ஒரு காட்சியில் நிலத்தை வாங்குவதைப் பற்றிய பேச்சின் போது, இப்போதெல்லாம் தண்ணிக்கும் காசு என்ற ஒரு வசனம் வரும். அது பிரக்ஞைபூர்வமாக பதிவு செய்யப்பட்டதா?

ஆம். மிகுந்த பிரக்ஞைபூர்வமாக செய்யப்பட்டதுதான். தண்ணீர் பிற்காலத்தில் விற்கப்படும் என்பதை நான் நம்பினேன். அதனால்தான் அப்படி ஒரு வசனம் வைத்தேன். அதே வீடு படத்தில் ஒரு வசனம் வரும், வருங்காலத்துல காத்தயும் கூட விப்பாங்க என்று. இதையும் நான் ஆழமாக நம்புகிறேன். வருங்காலத்தில் காற்றும் நிச்சயம் விற்கப்படும். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பல வருடங்களுக்கு முன் உலக சுகாதார நிறுவனம், ஜெமினி சிக்னலில் 10 நிமிடங்கள் நின்றால் தலைவலி வரும் என்று சொல்லியது. அதைப் போன்று சிக்னலில் நிற்கும் சமயங்களில், ஒரு சிறிய புட்டியில் காற்றை அடைத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து வாயில், மூக்கில் வைத்து உறிஞ்சிக்கொள்ள வேண்டியதுதானே. இந்த நிலைமை வரும். கட்டாயம் வரும். தண்ணீர் விற்பார்கள் என்று சிறுவயதில் நாம் கற்பனை செய்து பார்த்திருப்போமே. ஒரு லிட்டர் தூய தண்ணீர் ஒரு லிட்டர் தூய பாலை விட விலை அதிகம். தண்ணீரைப் போன்றே காற்றும் ஒருநாள் விற்கப்படும்.

60. ஒரு படம் இதுபோன்ற பிரச்சினைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கலை கலைக்காக மட்டுமா?

இல்லை. கலை கலைக்காக மட்டுமே என்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. என்னுடைய கொள்கைப்படி கலை என்பது மக்களுக்காக. எனவே கலை என்பது அவர்கள் வாழ்விலிருந்து எடுக்கப்பட வேண்டும், அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டும், அவர்களைப் பற்றியதாய் இருக்க வேண்டும்.

கலை கலைக்காக என்னும் கருத்து சுய இன்பம் போல. உனக்கு அதை செய்ய வேண்டுமென்றால் தனியாக செய்துகொள். மற்றவர்கள் அதைப் பார்க்க வேண்டுமென்று ஏன் ஆசைப்படுகிறாய். அனைவரும் பார்க்கிறார்கள் என்றால் அனைவருக்குமானதாய் அந்த கலை இருந்தாக வேண்டும். ஒரு படைப்பாளி என்பவன் மக்களுக்காக தன் பங்களிப்பை செய்தே ஆகவேண்டும்.

61. இது போன்ற மக்கள் வாழ்வை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்கப்பட வேண்டுமென்றால், மக்களின் ரசனையும் அதற்கேற்றாற்போல் மாற வேண்டும் அல்லவா?

நிச்சயம். இதையும் நான் 25 ஆண்டுகளாய் சொல்லி வருகிறேன். நல்ல படங்களை எடுத்தால் மட்டும் பத்தாது. அதற்கான பார்வையாளர்களையும் உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் சினிமா ரசனையை பள்ளி பாடப்புத்தகத்தில் வைக்க வேண்டும் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். சினிமா என்பது தமிழனின் வாழ்வோடு, அரசியலோடு இரண்டற கலந்து போயிருக்கிறது. அந்த சினிமாவை நீங்கள் பள்ளிகளில் ஒதுக்குகிறீர்கள். அந்த சினிமாவை கெட்ட வார்த்தையாக பார்க்கிறீர்கள். உங்கள் அனுமதி இல்லாமலே ஒரு நாளில் வீட்டுக்குள் 15க்கும் மேற்பட்ட படங்கள் வீட்டிற்குள் வருகிறது. அதை நம் பிள்ளைகள் பார்க்கிறார்கள். அதை பகுத்துப் பார்த்து, இது நல்ல படம், இது கெட்ட படம் என்று பிரித்துப்பார்க்கவாவது அவர்களுக்கு அடிப்படை சினிமா அறிவு வேண்டாமா? கண்டிப்பாக வேண்டும். அதற்காக நிச்சயம் சினிமா ரசனை பற்றி பள்ளிகளில் வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்.

62. வீடு படத்தில் லைட்டிங், குடை போன்று பல விஷயங்கள் ஒரு விதமான குறியீடாக பயன்படுத்துகிறது. இது படத்தின் போக்கிற்கு எவ்வாறு உதவியது?

அந்த விஷயங்களை எல்லாம் நான் குறியீடாக நினைத்து பயன்படுத்தவில்லை. அந்த காட்சிக்கு தேவைப்பட்டது என்றுதான் பயன்படுத்தினேன். ஒரு முதியவர் பேருந்தில் குடையை மறந்துவிட்டு வருவதோ, நடுரோட்டில் விழுந்து இறப்பதோ, அடிக்கடி நாம் பார்க்கும் கேள்விப்படும் விஷயம்தானே. அதன் அடிப்படையில்தான் அந்த காட்சிகளை வைத்தேன்.

63. ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு கதாப்பாத்திரத்தில் இயக்குநரின் ரிசம்பளன்ஸ் இருந்துவிடும். அப்படி, வீடு படத்தில் எந்த கதாப்பாத்திரத்தில் உங்கள் பிரதிபலிப்பு இருந்தது?

எல்லா கதாப்பாத்திரங்களிலும் என் பிரதிபலிப்பு இருந்தது. எல்லா பாத்திரங்களிலும் என் வலியும் என் தாக்கமும் இருந்த்து. குறிப்பாக ஒரு கதாப்பாத்திரம் என்று சொல்ல முடியாது. எல்லா கதாப்பாத்திரங்களிலும் நான் இருக்கிறேன்.

64. பானுசந்தர் பாத்திரப் படைப்பையும் அவர் பங்களிப்பையும் சொல்லுங்களேன்.

நான் அறிமுகப்படுத்திய ஒரு நடிகன் பானுசந்தர். எனக்கு மிகவும் பிடித்த நடிகன். நான் இந்த பாத்திரத்தை எழுதும்போதே, பானுசந்தரை மனதில் வைத்துதான் எழுதினேன். எழுதி முடித்தவுடன் அவரிடம் தாடி வைக்குமாறு சொல்லிவிட்டேன். காரணமாக வைக்கப்பட்டதுதான் அந்த தாடி. தாடியில்லாமல் பானுசந்தரிடம் ஆந்திர சாயல் அதிகமாக இருக்கும்.

65. 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வீட்டை சுற்றி எல்லாமே மாறிக்கொண்டே இருக்கிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?

எல்லாமே மாறியாச்சு. எல்லாமே. அதையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த வீடும் கூட மாறியாயிற்றே. நான் வீடு படத்துக்காக கட்டிய இந்த வீட்டிலும் எத்தனையோ மாறுதல்கள் வந்தாகி விட்டது. அந்த செங்கல் கட்டிட்ம் கூட இப்போது ஒரு திரைப்பட பள்ளிக்கூடமாக மாறியாகி விட்டது.

66. ஒரு படம், அது எடுக்கப்படும் காலத்தின் பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா, வீடு படத்தில் அப்போதைய பஞ்சம், வாழ்க்கை சூழல், லஞ்சம் போன்றவை பதிவு செய்யப்பட்டதைப் போல...

ஒரு படைப்பாளியோட கதை வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டால் நிச்சயம் அது அந்த காலத்தினுடைய அப்போதைய வாழ்க்கை முறையின் பதிவாகத்தான் இருக்கும். இயல்பாகவே கதையோடு அது வந்துவிடும்.

67. இதில் சில காட்சிகளில், நடந்த சம்பவங்கள் சில பாவனைகள் மூலம், சில ஷாட்களில் முடிந்துவிடுகிறது. உதாரணமாக, தாத்தா வீட்டு வாடகை கேட்டு அர்ச்சனாவிற்கு போன் செய்யும் இடத்தில் அவள் போனில் பேசுவது எதுவும் காட்டப்படாமல், பானுசந்தரிடம் அவள் உதடு பிதுக்குவதோடு அந்த காட்சி முடிந்துவிடுகிறது. இப்படி விரைவாக வேகமாக முடிந்துவிடுகிறது அந்தக் காட்சி. ஆனால் மழை பெய்யும் நாளில், வீடு தேடும் காட்சிகளும், வீடு கட்டப்படும் இடத்தில் இருந்து நாயகனும் நாயகியும் அவர்களின் வீட்டிற்கு வந்து சேரும் காட்சி, மிக நீளமாக, முழுமையாக, காட்டப்பட்டுள்ளது. எந்தவித வேகமான படத்தொகுப்பும் இன்றி, அந்த தேடலின், அந்த அலைச்சலின் முழு நீளமும் காட்டப்பட்டுள்ளது. இது எந்த காரணத்திற்காக செய்யப்பட்டது?

குறிப்பாக எந்த காரணமும் இல்லை. அர்ச்சனா போன் பேசும் காட்சியில் அந்த இரண்டு ஷாட்களில், இரண்டு பாவங்களில் அந்த அர்த்தம் புரிந்துவிடுகிறது. வாடகை குறைப்புக்கான பேச்சுவார்த்தை சரிவரவில்லை என்பது அந்த உதடுபிதுக்கலின் மூலமே உணர்த்தப்பட்டு விடுகிறது. அதைத் தாண்டி வேறு ஷாட்களோ நீளமோ அந்த காட்சிக்குத் தேவைப்படவில்லை. ஆனால் அந்த வீடு தேடும் காட்சியில், ஒரு வீட்டை வாடகைக்கு பிடிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது எனக்கு அனுபவப்பூர்வமாக தெரியும். இந்த சென்னையில் எத்தனை நாட்களாக ஒரு வீட்டைத் தேடி அலைந்திருக்கிறேன். அதுவும் சினிமாக்காரனுக்கென்றால் வீடு தரவே மாட்டார்கள். இரட்டிப்பு அலைச்சல். அதுதான் அந்த காட்சியில் நீளத்திற்கும் முழுமைக்கும் காரணமாக இருக்கும்.
68. சினிமா என்பது ஒரு அற்புதமான ஒரு கலை. மீடியம். ஆனால் இன்று வரை அது ஒரு ஒதுக்கத்தக்க சீப்பான கலையாகத்தானே பார்க்கப்படுகிறது. வீடு தேடும்போது, பாடசாலைகளில்...

ஆம். அது போன்ற படங்கள்தானே இங்கு வந்துகொண்டிக்கிறது. சீப் என்டர்டெயின்மென்ட் வகை படங்கள் வந்துகொண்டிருக்கும் வரையில், மக்களும் நம்மை சீப் என்டர்டெயினராகத்தான் பார்ப்பார்கள். இது ஒரு கேளிக்கை. இது ஒரு திருவிழா. சும்மா போய் தமாஷ் பண்ணிட்டு வர வேண்டிய கேளிக்கை என்ற எண்ணம் இருக்கற வரையில், சீரியஸான ஒரு கலை என்ற எண்ணம் படைப்பாளர்களுக்கு வராத வரை மக்கள் மத்தியில் இந்த எண்ணம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். மாறாது.

69. அப்போது முதலில் சினிமா மாற வேண்டும் இல்லையா?

நிச்சயம். சினிமாதான் முதலில் மாற வேண்டும். ஆரோக்கியமான படங்கள் வர வேண்டும். பொழுதுபோக்கு படங்களாக இருந்தாலும் ஆரோக்கியமான பொழுதுபோக்காக இருக்கிறதா, டர்ட்டி பொழுதுபோக்குகளாக இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

70. 25 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை நீங்கள் பார்க்கும் இதில் ஒரு காட்சியை மாற்றியமைத்திருக்கலாமோ என்று உங்களை நினைக்க வைக்கும் காட்சி?

வாட்ச்மேன் சிமெண்ட் பைகளை எண்ணும் காட்சியும், கான்ட்ராக்டர் அர்ச்சனாவைப் பற்றி தவறாக பேசியதும், மங்கா என்ற அந்த சித்தாள் பொங்கியெழுந்து அவரை கேள்வி கேட்கிற காட்சி. இப்போது பார்க்கும்போது, அந்த காட்சியை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு உரத்து சொல்லப் படாமல் இன்னும் கொஞ்சும் அன்டர்ப்ளே செய்திருக்கலாமோ என்று நினைக்கிறேன். ஆனால், அது நிகழும் களமானது தொழிலாளர்களின் களம். அதில் சம்பந்தபட்டவர் ஒரு சித்தாள். எனவே அந்த கதாப்பாத்திரம் மூலமாகத்தான் அந்த காட்சியை நான் சொல்லவேண்டியிருந்தது. எனவே அந்த காட்சி கதாப்பாத்திரத்தின் மனநிலைப்படியே உரத்து எடுக்கப்பட்டிருந்த்து. ஒரு படைப்பாளியாக எனக்கு அதை கொஞ்சம் மென்மையாக சொல்லியிருக்கலாமோ என்று இப்பவும் தோன்றுகிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பு படம் திரையிடப்பட்டபோது, நான் மிகவும் மதிக்கும் ஒரு சினிமா படைப்பாளி, சினிமா விமர்சகர், தனக்கு மிகவும் காட்சி அதுதான் என்று கூறி, ‘தட் வாஸ் எ பிரில்லியண்ட்லி டேக்கன் சீன் பாலு’ என்று கூறினார்.

71. மக்கள் வாழ்க்கையைப் பற்றி பேசிய இந்த படத்தோடு மக்களுடைய உறவாடல் எப்படி இருந்த்து?

அதற்கு நீங்களே சாட்சி. 25 வருடங்களுக்கு பிறகு இப்போது எதற்காக, எது குறித்து என்னோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, என்னோடு அமர்நது, அந்த படத்தை பற்றி சீரியசாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அதுதான் அந்த படத்தினுடைய பலம்.

72. மங்கா மற்றும் அர்ச்சனா பாத்திரங்கள் பெண் பாத்திரங்கள். அதுவும் சுதந்திரமாக, சுயமாக இயங்க்க்கூடிய ஒரு பெண். இதுபோன்று சுயமாக நிற்க்க்கூடிய பாத்திரங்களாக அவர்களை படைத்த்து ஏன்? அது கதையின் போக்கிற்கு எவ்வாறு உதவுகிறது?

பெண்ணியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் இந்த சுயமான பாத்திரங்கள் மிகவும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துகின்றது. மங்கா பாத்திரம் ஒரு கடுமையான உழைப்பாளி. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த வைரம் பாய்ந்த கட்டை அவள். அப்படியான அவள் பாத்திரப்படைப்புதான் நியாயமாக இருந்த்து.

73. அப்போதைய மசாலா சினிமாக்கள் குழந்தைகள் மனத்தை எந்தளவிற்கு பாதித்திருந்த்து, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருநத்து என அதனைச் சாடும் ஒரு காட்சியும் வீடு படத்தில் உண்டு. அது அந்த மசாலா படங்களின் மேல் உங்களுக்கு இருந்த கோபம் என்று சொல்ல்லாமா?

அது என்னுடைய பிற படங்களின் மேல் இருந்த கோபமாக இருக்கலாம். மூன்றாம் பிறை படத்தில் நான் அந்த பொன்மேனி பாடலை வைக்கவில்லை என்றால், அந்த படம் இன்னும் சிறந்தபடமாக இருந்திருக்கும். பிரக்ஞையாக நான் வைத்த வணிக சமரசம் அது. அதனால் அதை நானே கிண்டலடித்துக்கொண்டேன்.

74. ஆரம்பத்தில் இருந்து நல்லவனாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டுவந்த ஆபிஸ் மேனேஜர் இறுதியில் தன் வக்கிரத்தை வெளிப்படுத்துவதைப் போல் அமைக்கப்பட்டிருப்பதும் பெண்களுக்கு எதிரான இன்னொரு கோர முகத்தின் வெளிப்பாடா?

ஆம். அது பொதுவான ஒரு சராசரி ஆணின் மனநிலை. அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒரு ஆண், தன் தயவை நோக்கிக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் உடலை அனுபவித்துக்கொள்ள நினைப்பது இப்போதும், அப்போதும் சர்வ சாதாரணம். பள்ளிகளில், கல்லூரிகளில், ஆசிரமங்களில், அலுவலகங்களில் என எல்லா இடங்களிலும் இது நடக்கிறது.

75. மங்காவின் காதல் கதை, அந்த பாத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்கு எவ்வாறு உதவியது?

அவள் ஒருவனை காதலிக்கிறாள். அவன் மேல்மாடியில் வேலை செய்கையில் இவளைப் பார்த்தபடியே கீழே விழுந்து இறந்துவிடுகிறான். ஆனால் அவன் நினைப்பை இவளால் மறக்க முடியவில்லை. அவனையே நினைத்தபடி வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அது ஒரு ஐடியலிஸ்டிக் விஷயம்தான். மனதில் ஒருவனை நினைத்துக்கொண்டு இன்னொருவனுக்கு எப்படி கண்ணு முந்தானை விரிக்கிறது என்று கேட்கும் மங்கா போன்ற பெண்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களா என்று கேட்டால், ஆம், இன்னும் அப்படியும் சிலர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

76. இந்த படத்தில் அடித்தட்டு மக்களின் நேர்மையும், மேல்தட்டு மக்களின் போலித்தனமும் ஒருசேர காட்டப்பட்டுள்ளது. இதுவும் உணர்ந்தே கதைப்போக்கோடு இணைக்கப்பட்டதா?

ஆம். இன்றும் அதுதானே உண்மை. கிராமப்புறங்களில் இருக்கும் மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஈரமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்த நேர்மை படித்த மனிதர்களிடையே குறைவு. இதை சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும், இதுதான் உண்மை.

77. கதைப்படி வீடும் வளர்ந்துகொண்டே வருகிறது. இறுதிக்காட்சியில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை சொக்கலிங்க பாகவதர் தன் கைகளால் ஆசை தீர தடவிப் பார்க்கிறார். அந்த காட்சியை எடுக்கும்போது, ஒரு படைப்பாளியாக உங்கள் மனநிலை எப்படி இருந்தது? அதே போல் ஒரு வீட்டை கட்டி முடித்தவராய் உங்கள் மனநிலை எப்படி இருந்த்து?

நான் படத்திற்காகத்தான் வீடு கட்டினேன். மற்றபடி ஒரு வீட்டை கட்டி விட்டேன் என்று எந்த எண்ணமும் எனக்கு வரவில்லை. படத்திற்காக ஒரு செட் போட்டிருந்தால் என்ன நினைப்பு இருந்திருக்குமோ அதே நினைப்புதான் அப்போதும் இருந்த்து. நத்திங் பெர்சனல். சொல்லப்போனால் வீடு முடிந்தவுடன் இந்த வீடும் அப்போது இருந்த நிலையில் தான் பல காலமாக இருந்த்து. அடுத்த படம் செய்யும்போது தான் மேல்தளம் போட்டேன். எனவே கட்டி முடிக்கப்படும்போது, ஒரு வீட்டை கட்டிய எந்த உணர்வும் எனக்கு இல்லை. முழுக்க முழுக்க வீடு படம்தான் மனதில் இருந்த்து.

78. ஆனால் இப்போது அந்த வீடுதான் உங்களுக்கு எல்லாமாகவும் ஆகிவிட்டது. இன்று திரும்பிப் பார்க்கையில் ஒரு சினிமா என்பதை தாண்டி வீடு உங்களுக்கு எவ்வளவு நெருக்கமாய் உள்ளது?

இன்றுபார்க்கும்போது எனக்கு பிரம்மிப்பாக இருக்கு. 25 வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் நேற்று எடுத்த படம் போன்று இருப்பதாக மற்றவர்கள் கூறும்போது, நான் உணரும்போது, பெருமையாக இருக்கிறது. நிறைவாக இருக்கிறது.

79. இதை நீங்கள் உருவாக்கும்போது, படத்தை பார்க்கும் அனைத்து மக்களுக்கும் வீடு குறித்து உங்களுக்கு ஏற்பட்ட அதே உணர்வு ஏற்படும் என்று நினைத்துப் பார்த்தீர்களா?

நான் இந்த படத்தை என் அம்மாவின் தாக்கத்தில் எடுத்தேன். சிரித்துக்கொண்டே இருந்த உதடுகள் சிரிப்பதை நிறுத்தியது என்னுள் பெரும் வலியாக பதிவாகியது. ஓடிக்கொண்டே இருந்த கால்கள் திடீரென நின்றதை என்னால் எளிதில் மறக்க முடியவில்லை. அதைத்தான் அந்த வலியைத்தான், அந்த வீடு கட்டிய அனுபவத்தைதான் நான் பதிவு செய்தேன்.

இந்த படம் எல்லாருக்கும் அதே உணர்வை கொடுத்திருந்தால், அதுதான் உண்மையின் சக்தி. உண்மையின் பலம். உண்மையை நீங்கள் சொல்லும்போது, அது உங்களுடைய உணர்வு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது பலருடைய வாழ்க்கை என்று பின்னர் உங்களுக்கு தெரிய வரும். ஏனென்றால் அது உண்மை. அழியாத கோலங்கள் நான் எடுக்கும்போது நான் அதை என்னுடைய பால்யமாக நினைத்தேன். ஆனால் அது எல்லாருடைய பால்யமாக இருந்த்தாக எல்லோரும் சொன்னார்கள். அதுதான் உண்மையின் வெற்றி.

80. பொதுவாக மரணக்காட்சிகளில், உடனடி துக்கம் காட்டப்படும். மரணித்த உடன் அழுவது, விழுந்து புரள்வது போன்று. ஆனால் இதில் அந்த உடனடியான துக்கம் காட்டப்படாமல் சில நாட்களுக்குப் பிறகு அந்த துக்கம் தாக்குவதாக காட்டப்பட்டிருப்பது ஏன்?

மரணம், இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அடிக்கும். மரணம் நடந்த உடனேயே மனம் மரத்துப்போய்விடுகிறது. இயற்கையின் அற்புதமான ஏற்பாடு அது. மரத்துப் போகவில்லையென்றால் மூளை சிதறிவிடும். நம் தாய் மரணிக்கும்போது மனம் மரத்துப்போகவில்லையென்றால் அழுது அழுது துக்கத்தில் மூளை ஸ்தம்பித்துவிடும். இரண்டாவது மூன்றாவது நாள்தான் இழப்பின் தாக்கம் ஏற்படும். அந்நேரத்தில் தான் மனம் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வரும். அந்த சமயத்தில்தான் மரணத்தின் துக்கம் தாக்கும். அதைத் தான் நான் வீடு படத்திலும் காட்டினேன். அதே போன்ற ஒரு மரணக்காட்சியை அது ஒரு கனா காலத்திலும் காட்டியிருப்பேன்.

81. அடித்தட்டு மக்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதிகாரவர்க்கத்தினரின் சுயநலத்தின் ஊடே அவர்களால் முன்னேற முடியவில்லை. எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும் இடையே ஒரு போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. இதுதான் இப்படத்தின் இறுதிக்காட்சி சொல்கிறதா?

நீண்ட போராட்டம். மிக நீண்ட முடிவு தெரியாத போராட்டம்அது. முடிவு தெரியவில்லை என்பதற்காக போராடாமலும் இருக்க முடியாது. போராடிக்கொண்டேதான் வாழ வேண்டும். தங்கள் இருப்பிற்காக அதிகாரவர்க்கத்தினை எதிர்த்து அடித்தட்டு மக்கள் போராடிக்கொண்டே தான் இருக்கவேண்டும். அதற்கு முடிவு கிடையாது. இதுதான் உண்மை. எல்லோருக்கும் எல்லாம் உண்டு என்ற நிலைமை வருவது அவ்வளவு சுலபம் கிடையாது. அதுதான் இறுதிக்காட்சியின் வெளிப்பாடு.

82. 1987. உலகெங்கிலும் உள்ள வீடற்றவர்களுக்கான வருடம். அந்த வருடத்தில் இந்த படம் எடுக்க அதுதான் காரணமா?

இல்லை. இந்த விஷயம் எனக்கு படம் முடித்தபின்தான் தெரியும். அப்படியென்றால் ‘உலகெங்கிலும் உள்ள வீடற்ற மக்களுக்கு இப்படம் சமர்ப்பணம்’ என்று போடலாமே என்று நினைத்து போட்டேன். அந்த சமயத்தில் எனக்கும் சொந்த வீடில்லை. எனக்கும் என்னைப் போன்றோருக்கும் நான் சமர்ப்பித்த படம்தான் வீடு.

83. உணர்வுகளால் கட்டப்பட்டது இந்த வீடு என்றுதான் இந்த படத்தை என்னால் வரையறுக்க முடிகிறது. இந்த படத்தை நீங்கள் எப்படி வரையறுப்பீர்கள்? இந்த உணர்வுகளின் கோர்வையை எப்படி நிர்ணயிப்பீர்கள்?

மனிதர்கள் என்று வந்தாலே அவர்களின் உணர்வுகள் முக்கியம். அவனை உணர்வற்ற ஐடமாக என்னால் காட்ட முடியாது. ஆனால் இந்த உணர்வுகளை விவரிக்கும்போது அது எல்லை மீறாமல் பிடித்துவைத்துக் கொள்வேன். அதுதான் நான் செய்வது. மெலோடிராமாவாக விடமாட்டேன். அந்த உணர்வுகளை முழுவதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதை பார்ப்பவனின் மூக்கில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதை தொட்டு மட்டும் காட்டினால் போதும். மீதி உணர்வுகளை அவன் முடித்துக்கொள்ளட்டுமே. இது இருபுற கம்யூனிக்கேஷன்தானே. நீ அவனுக்கான தளத்தையும் காரணத்தையும் மட்டும் முழுமையாகக் குடு. அதில் நீ நேர்மையாக செயல்பட்டிருந்தால், மீதியை அவன் முடித்துக்கொள்வான். அந்த மொத்த சினிமா அனுபவத்தில் அவனையும் ஒரு அங்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

இலக்கியத்தில் இன்னும் சிறப்பாக இது செயல்படும். படித்து முடித்தவுடன் முடிந்து விடுகிறதா ஒரு சிறுகதை. நம்மோடே வருவதில்லையா? யாமறிந்த மொழிகளிலே இம்மொழி போல் எதுவும் இனிது இல்லை என்று நாம் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ் மொழி மூலமும் கூட சொல்ல இயலாத பல விஷயங்கள் இருக்கு. அதை வெளிப்படுத்த முடியாது. அதற்கான முழு களத்தையும் தான் ஏற்படுத்தித் தர முடியும். சொல்ல இயலாத மற்ற விஷயங்களை வாசகன் தான் நிரப்பிக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் அவனும் ஒரு இணை ஆசிரியன் ஆகிறான்.

ஆனால் சினிமாவில் இந்த கற்பனை சுதந்திரம் பார்வையாளனுக்கு இல்லை. இலக்கியத்தில் அவன் கற்பனையாக யோசிக்கும் அத்தனை விஷயங்களும் சினிமாவில் காட்டப்பட்டுவிடும். அவன் கற்பனை சுதந்திரம் பறிக்கப்பட்டு விடும். முழு விபரங்களோடு நுணுக்கமாக அந்த காட்சி படமாக்கப்பட்டாலும் அது அவனை ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிடுகிறது. அவன் கற்பனை கட்டுப்படுத்தப்பட்டு விடுகிறது. இதை மிக்க் கவனமாக கையாளவேண்டும். ஆனால் உணர்வு ரீதியாக மிக வலிமையாக சினிமா இயங்க முடியும். படிப்பது கொடுக்கும் வலியை விட காட்டுதல் அதிகமாக கொடுக்கும். நான் ஆரம்பித்து வைப்பேன். நீங்கள் முடித்துக் கொள்ளுங்கள்.

84. உங்களைப் பொறுத்தவரையில் ‘வீடு’?

தமிழ் சினிமாவிற்கு என் பங்களிப்பு.

85. இது போன்ற பங்களிப்பை அளிக்க முயன்று கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கு உங்கள் வார்த்தைகள் என்ன?

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் தகுதி எனக்கு இல்லை. நான் யாருக்கும் அட்வைஸ் செய்யவும் விருப்பப்படவில்லை. உலகில் எளிதில் கிடைக்கும் ஒரே விஷயம் அட்வைஸ்தான். அவரவர் வாழ்க்கையை அவர்களே முடிவு செய்வார்கள். எனக்குத் தெரிந்ததை நான் செய்தேன். அவர்களுக்குத் தெரிந்ததை நிச்சயம் அவர்கள் செய்வார்கள்.

தனது படைப்பை பற்றி பேசும்போது இன்னும் அவருள் வீரியம் இழக்காமல் இருக்கும் அந்த சினிமா காதலனும் அடுத்தடுத்து படமெடுக்க துடித்துக்கொண்டிருக்கும் படைப்பாளியும் போட்டி போட்டு பதிலளித்தது ஒரு கலைஞனுக்கே உரித்தான தருணங்கள். எனக்கு தெரிந்து ஒவ்வொரு படைப்பாளியும் எப்படியாவது பாலுமகேந்திராவை சந்தித்து ஒரு அரை மணி நேரமாவது சினிமா பற்றி பேச வேண்டும். நிச்சயம் சினிமா மேல் நீங்கள் வைத்திருக்கும் பல பல போலி பிம்பங்கள் உடைபட்டு, சினிமா பற்றிய உங்கள் கண்ணோட்டம் மாறி உண்மையான சினிமாவை நோக்கி உந்தித்தள்ளப்படுவீர்கள். இன்னொரு முக்கியமான விஷயம், படைப்பாளிகளை சந்திக்க, ஊக்குவிக்க பாலுமகேந்திராவும் ஆர்வமாகத்தான் இருக்கிறார்.